Dec 28, 2004

திகில் நிமிடங்கள்

நம் பயாலாஜிகல் க்ளாக்கிற்கு எப்படித்தான் தெரிகிறதோ தெரியவில்லை,ஞாயிற்றுக்கிழமை சோம்பேறித்தனம் உடம்பில் வழிகிறது.

தூக்கத்தின் நடுவிலேயே ஒடிக்கொன்டிருந்த டிவியில் ஏதொ இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சென்னையில் மக்கள் பீதி என பயமுறுத்திக்கொண்டிருந்தது அரைகுறையாக காதில் விழுந்தது. இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா? மக்கள் எதற்கு பயந்தாலும் இவர்களுக்குத் தான் ஓட்டுப்போடுவார்கள் என்ற எண்ணமா?

சரி எழுந்தாகிவிட்டது, முதல் கடமையை முடிப்போம்.

"காபி எங்கேடி?"

"அதோ டிவிமேலே இருக்கு" - சமையல் அறையிலிருந்து மனையாளின் குரல். இவளுக்கு சண்டே மண்டே எல்லாம் ஒரே மாதிரிதான். குழந்தைக்கு தோசை வார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

காபியையும் நியூஸ்பேப்பரையும் எடுத்துக்கொண்டு, வாசல் ஈஸிசேரில் கடலைப் பார்த்து அமர்ந்தேன்.

தினமும் பார்க்கிற கடல்தான், இன்று ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே- கொஞம் ரஃப் -ஆக இருக்கிறதோ? கடலின் நீலநிறம் இல்லாமல் அழுக்குப் படர்ந்த பழுப்பாக இருக்கிறதே? இன்று அமாவாசை பவுர்ணமியும் இல்லையே? அலைகளின் சீற்றமும் மிக அருகில் இருப்பது போல் தோன்றுகிறதே!

திடீரென்று உறைத்தது - நிச்சயமாக கடல் இவ்வளவு அருகில் இருந்ததில்லை. கடல் தடுப்புச்சுவரைத் தாண்டிவிட்டது - இன்னும் ரோட்டை நோகி நகர்ந்து கொன்டிருக்கிறது. உடம்பில் உள்ள அத்தனை செல்களும் சோம்பேறித்தனத்தை உதறி "அய்யோ கடல் டௌன்ஷிப்புக்குள்ளே வருது - எல்லாரும் ஓடுங்க" என்ரு ஒரு சத்தம் போட்டு வீட்டுக்குள் ஓடினேன்.

"க்ரைஸிஸ்" - இந்த நேரத்தில் பதற்றமற்ற ஆனால் விரைவான வழியைத்தேட வேண்டும். அலைகள் வரும் வேகத்தை தாண்டி, ரோட்டில் ஓடுவது- அதுவும் தூங்கும் குழந்தையை தோளில் தாங்கி - முட்டாள்தனமாகும்.

"நித்யா குழந்தையை தூக்கிக்கோ!" யோசி கண்ணா யோசி! திங்க் ஃபாஸ்ட்!

கடல் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுகிறது. வீட்டின் கதவுகள் தெற்கு வடக்காக இருக்கிறது. கதவை மூடினால், அலையின் வேகம் இல்லாமல் பக்கவாட்டு வேகம்தான் தாக்கும். கதவுகளை இருக்க மூடினேன். ஜன்னல்களை மூட அவகாசம் இல்லை. டைனிங் டேபிளில் இருந்த அனைத்தையும்கீழே தள்ளி அதன் மேல் முதலில் மனைவியையும் குழந்தையையும் ஏற்றினேன்.

எனக்கு கிடைத்த நேரம் 5 வினாடிகள்தான். ஆனால் 5 வினாடிகள் என்பது எவ்வளவு அதிக நேரம் என்பது அப்போதுதான் தெரிந்தது.

ஜன்னல் வழியாக சீறியது கடல் - விட்டுக்குள் டேபிள் மேல் நிற்கும் என் முழங்கால் வரை நீர் - டிவி ஸ்டேண்ட் நிலை தடுமாறி டேபிள் மேல் விழுகிறது- டேபிள் ஆட, அவளையும், குழந்தையும் ஸீலிங் ஃபேனை பிடித்து ஆடுகிறேன். இது ரொம்ப நேரம் தாங்காது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்து ஃப்ரிட்ஜ் ஆடி கீழே விழ - சரி முடிந்தது கதை. "வாழிய செந்தமிழ் - வாழ்க நற்றமிழர்! வந்தே மாதரம்" மனசுக்குள் ஓடியது. வாசல் வழியாக தெரிந்த காட்சிகள் - பக்கத்து வீட்டு ஸ்கூட்டர் அலை மேலே டேன்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறது. அது என்ன புடவையா? பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டதற்கு இன்னொரு காரணம் - குழந்தை கலவரத்தை எப்படியோ உணர்ந்துஇதுநாள்வரை நான் பார்த்திராத் ஒரு வீரியத்தோடு அழுதுகொண்டிருந்தான் - feeling absolutely helpless!

கண்ணைத்திறக்கும் போதெல்லாம் ஒரு ஆச்சரியம் - எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறோம்!

எப்படியாவது கூறைக்கு மேல் ஏற முடிந்தால் பரவாயில்லை. கூறை எப்படியும் 15 - 20 அடி உயரம் இருக்கும் - இன்னும் கொஞ்ச நேரம் தாங்கும்.

15 நிமிடங்கள்! குறைந்தது ஒரு நூறு முறையேனும் மரணத்துக்கு மிக மிக அருகில் சென்று வந்த 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரின் அளவு சற்றே வடியத் தொடங்கியது.

உடனே குதித்து, ஏணியை எடுத்து கதவைத்திறந்தேன் - மேலும் தண்ணீர் உள்வர, இப்போது இடுப்பளவு ஆழம் - ஆனால் வேகம் குறைவே. இப்போது கூரை மேல் ஏற முடியாவிட்டால் எப்போதுமே ஏற முடியாது. ஏணியை கூரை மேல் சாய்த்து, குழந்தையை வாங்கிமேலே ஏறினோம்.

ஏறியபின் தான் தெரிந்தது, இது அவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு அல்ல என்பது.
பத்து அடிக்கு குறைவில்லாத அலைகள், ஒவ்வொன்றும் கூரையின் தளத்தை தொட்டு, எங்கள் கால்கலுக்கு மிக அருகில்! ஆடும் அலைகளின் குழிப்பகுதியில் கடல் தடுப்புச்சுவர் தெளிவாக தெரிகிறது.
இன்னும் ஒரு முப்பது நிமிடங்கள் - இப்பொது அலைகளின் சீற்றத்தை நேரடியாக காண முடிகிறது. ஏற்கனவே கூரை மேலுள்ள நண்பர்கள் - அலை இரைச்சலையும் மீறி கத்தியதில் என் அதிர்ஷ்டம் தெரிகிறது. ஆனால் இன்னும் எவ்வளவு நேரம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்? இந்த அலையோ- அடுத்த அலையோ என்பதுதானே நிதர்சனம்? குழந்தை அழுகை சற்றும் குறையவே இல்லை. என் முகத்தை பார்த்து இவளுக்கும் நிலைமையின் விபரீதம் புரிந்திருக்கிறது. அவள் வாய் எதையொ முணுமுணுக்கிறது - கவசமாக இருக்கலாம். தேவையில்லாமல் ஒரு சிந்தனை - கீழே இருந்திருந்தால் டிவி பார்த்து அப்டேட் ஆகியிருக்கலாமே?

நரகத்தின் வாசலில் முப்பது நிமிடங்கள் கழிந்தபிறகு என் வீட்டு வாசல் தரை தெரிந்தது. அடுத்த அலைகள் வீசும் முன்னெ இறங்கி தெருவில் ஓடினோம். நண்பன் வீடு மூன்று மாடித்தளத்தில்.

அங்கே சென்று அமர்ந்த பிறகுதான் நிலைமையின் முழு வீரியமும் புரிந்தது. நான் பார்த்தது பல காலமாக படித்த ட்சுனாமி, கல்பாக்கத்தில் சர்ச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது - பலபேர் பலி- இங்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரையையே சூறையாடி இருக்கிறது என்பதெல்லாம்!

இப்போது சொன்னால் போலியாகத் தெரியலாம்- எங்களைக் காப்பாற்றியது அந்தக் கவசம் தான்!

பின்குறிப்பு - 1:
இந்த அனுபவம் கல்பாக்கத்தில் பணியாற்றும் என் என் அண்ணனுடையது. 2 நாள் கழித்து சென்னை வந்து தொலை பேசினான்.

பின்குறிப்பு - 2:
கல்பாக்கத்தில் கடல் சீற்றம் வெளியே ஓடிய மனித உயிர்களையும் உடமைகளையும் பாதித்த அளவிற்கு கட்டடங்களை பாதித்ததாகத் தெரியவில்லை- அந்த சர்ச் தவிர.

பின்குறிப்பு - 3:
என் அண்ணனின் ஆப்டிமிஸம் இந்த நிகழ்வால் பாதிக்கப்படவில்லை - கல்பாக்கத்தில் கடலில் இருந்து முதல் கட்டிடம் பள்ளிக்கூடம். ஞாயிரன்று இது நிகழ்ந்ததால் பெரும் அளவு குழந்தைகள் சேதம் நிகழாமல் தப்பித்திருக்கிறது. மேலும் அதிகாலை வேளையிலோ இரவிலோ நடந்திருந்தால் பலர் பிழைத்திருக்க முடியாது என்றும் அவன் கூறுகிறான்.

5 பின்னூட்டங்கள்:

Mookku Sundar said...

Thank God Suresh...

kavasam nijamaakavE kavasamthaan...

துளசி கோபால் said...

அன்புள்ள சுரேஷ்,

உண்மையாவே கடவுளுக்குத்தான் நன்றியைச் சொல்லணும். பலருக்கு இந்த வாய்ப்பு இல்லாமல் போச்சேன்னு நினைக்கறப்ப வருத்தமா இருக்கு!

Venkat said...

சுரேஷ் - உங்கள் அண்ணிடம் அணுவுலைக்குச் சேதம் பற்றி கல்பாக்கத்தில் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு எழுதுங்களேன்.

இது மிக, மிக முக்கியம். இதுபோன்ற நேரங்களில் நாம் அணு உலைபற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். - வெங்கட்

meenamuthu said...

பிரமிப்பாய் இருக்கிறது சுரேஷ்!
தர்மம் தலைகாக்கும் என்பது
இது தானோ

பினாத்தல் சுரேஷ் said...

Dear Venkat

So far as he knows, the damage was not for Standing buildings or permanent constructions. The damage was only to the hutments and vehicles. When I asked him on this, he told only sea water entered, nothing to worry on the safety of the reactor.

 

blogger templates | Make Money Online