Mar 6, 2005

மொழி Bore!

தற்போதைய சூடான பேசுபொருளான மொழி விவகாரத்தில், என் அனுபவங்களும் கருத்துக்களும்:

என் முதல் வேலையில், நான் ஹிந்தி கல்லாமல் பீஹாரின் உட்புற நிலக்கரி சுரங்கங்களில் ஏழாண்டு சிறைவாசம் அனுபவித்தேன்.

ஆனால், முதல் இரு மாதங்களிலேயே , கடைக்காரர்களிடம் 'பைஸா பாத் மே!" (பணக்கஷ்டம் வேறு!) என்னும் அளவிற்கும், சக தொழிலாளிகளிடம் "இஸ்கோ கோலோ - உஸ்கோ லகாவ்" என்னும் அளவிற்கும் பாண்டித்தியம் பெற்று விட்டேன். மேலும் ஆறு மாதங்களில் எந்த ப்ரவீனுக்கும், விஷாரத்துக்கும் சவால் விடும் அளவிற்கு மொழிப்புலமை பெற்றுவிட்டேன். (பேசுவதில், புரிந்துகொள்வதில்)

எனவே, என் சொந்த அனுபவப்படி, ஹிந்தி கற்காததால், நான் எந்த பாதிப்பிற்கும் உள்ளாக வில்லை என்பது நிஜம்.

நான் மட்டுமல்ல, இப்போது வட இந்தியாவில் இருக்கும், பல தமிழர்கள்,ஒரு ஹிந்தி வார்த்தையுமே தெரியாமல் ஜி.டி எக்ஸ்பிரஸ் ஏறியவர்கள் என்பதும் நிஜமே.

பள்ளியில் நான் படித்த ஆங்கிலம் எந்த அளவிற்கு எனக்கு ஆங்கிலத்தில் உரையாட உதவி செய்தது? பேசிப் பேசி அனுபவத்தால் மட்டுமே தடையற்ற ஆங்கிலம் சாத்தியமாயிற்று.

பள்ளியில் பயிற்றுவிப்பதால் மட்டுமே ஆங்கிலம் எனக்கு வந்துவிடவில்லை, பள்ளியில் பயிலாததால் மட்டுமே ஹிந்தி என்னை கை விட்டுவிடவும் இல்லை.


வேறு வழியே இல்லை எனும்போது, மொழி சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. (வளைகுடாவிற்கு வந்து மூன்று ஆண்டு ஆகியும் அரபி மொழியில் சில வார்த்தைகள் கூடத் தெரியாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஆங்கிலத்தையும், ஹிந்தியையும் வைத்துக்கொண்டு குப்பை கொட்ட முடிவதுதான்)

இதனாலேயே, தமிழகப் பள்ளிகளில் மூன்றாம் மொழியாக ஹிந்தி என்பதற்கு என்னிடம் ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்கள் இல்லை.

ஆனால், அரசியல் வாதிகள் இந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு ஆடும் கும்மிகள் தாங்க முடிவதில்லை. ஒருவர் ஹிந்தி அரக்கியை வதம் செய்த மாவீரர்! இன்னொருவர் வழலைக்கட்டிப் பேரறிஞர்!

தமிழ்வளர்ச்சிக்கு இந்த அரசியலார் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - விட்டு விடுங்கள் - தமிழ் பிழைத்துப் போகட்டும்!

15 பின்னூட்டங்கள்:

ROSAVASANTH said...

ஹிந்தி பள்ளியில் பயிலாமலேயே பின்னர் கற்பதில் உங்களுக்கு பிரச்சனை வரவில்லை. ஆனால் இங்கே அதை பயிற்று மொழியாக்குவதன் மூலம் இங்கே வரும் வடயிந்தியர்க்கு மட்டும் அது உதவும். மற்ற மானிலங்களை போல் இங்கேயும், தமிழ் கற்காமல் ஹிந்தியிலேயே ஓட்டமுடியும். கடையில் நீங்கள் ஹிந்தியில் கேட்டு பேச கற்றது போல் அல்லாமல், இங்கே நேரடியாய் ஹிந்தியில் பேசுவார்கள். (இப்போதய நிலமையிலேயே கூட வட இந்தியர்கள் சென்னையில் ஹிந்தியில்தான் நங்கநல்லூரில் காய்கறி காரியிடம் கேட்கிறார்கள். ) இன்னும் இது போன்ற பாதிப்புகளை மற்ற மாநில சங்கதிகளுடன் ஒப்பிட்டு பேசமுடியும். நீங்கள் அதையும் சொல்லியிருக்கலாம்.

Voice on Wings said...

சுரேஷின் கூற்றில் எனக்கும் உடன்பாடுதான்.

ரோசாவசந்த், நங்கநல்லூரில் இந்தி பேசப்பட்டால் என்ன தவறு? மற்ற மாநிலத்தார் இங்கு வந்தால் தமிழில்தான் பேச வேண்டுமென்று அடம் பிடிப்பது நமக்குத்தான் நஷ்டத்தை விளைவிக்கும். பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்கள் வெளியோரை வரவேற்று cosmopolitan city என்ற நற்பெயரும் பெற்று, இன்று IT revolutionஇல் முன்னிடம் வகிக்கின்றன. மும்பை நகரமோ, காலகாலமாக பற்பல மானிலத்தவர்களின் திறமையும், முதலும் (investments) பெற்று இன்று commercial capitalஆக திகழ்கிறது. IT boom நம் பக்கமும் இப்போது தலைதூக்குவதன் அறிகுறியே நீங்கள் கேட்ட நங்கநல்லூர் வசனங்கள். இந்நிலையில் நமக்கு வேண்டியது பொருளாதார முன்னேற்றமா அல்லது தூசி படிந்த மொழிவெறிச் சிந்தனைகளாவென நாம் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும்.

சத்யராஜ்குமார் said...

கோவை பொள்ளாச்சி பகுதிகளில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மலையாளத்திலும் பெயர்ப்பலகைகளைப் பார்க்கலாம். வந்து போகும் கேரள வியாபாரிகளின் வசதிக்காகத்தான் மேற்படி விஷயம். மலையாளம் திணிக்கப்படவில்லை. தேவை கருதி தானாக நிகழ்ந்துள்ள விஷயம். யாரும் எதிர்ப்புக் கொடி தூக்கவும் இல்லை. மொழி எதிர்ப்பு மட்டுமல்ல; ஆதரவும் இங்கே செயற்கையாகவே தெரிகிறது.

இரண்டுமே அரசியல்வாதிகளுக்கான பொழுதுபோக்கு.

திராவிட கட்சிகளால ஹிந்தி கத்துக்காம என் வாழ்க்கையே பாழாயிடுச்சு என்ற நண்பரிடம் மேலும் விபரம் கேட்ட போது - அவருடைய வடக்கத்திய பாஸ் ஹிந்தி பேசுபவர்களைத்தான் அரவணைத்துக் கொள்வாராம் :D

dondu(#11168674346665545885) said...

"திராவிட கட்சிகளால ஹிந்தி கத்துக்காம என் வாழ்க்கையே பாழாயிடுச்சு என்ற நண்பரிடம் மேலும் விபரம் கேட்ட போது - அவருடைய வடக்கத்திய பாஸ் ஹிந்தி பேசுபவர்களைத்தான் அரவணைத்துக் கொள்வாராம்"
அப்படி அணைக்கப்பட்டுத்தான் தலைவரின் பேரன் பயன்பெற்றுக் கொண்டார்!
"ரோசாவசந்த், நங்கநல்லூரில் இந்தி பேசப்பட்டால் என்ன தவறு?"
தவறு இல்லைதான். ஆனால் அப்படி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை என்பதை நங்கநல்லூரில் வசிக்கும் நான் கூறிக் கொள்கிறேன். ஹிந்திக்காரர்கள்தான் மழலையாகத் தமிழ் பேசுகிறார்கள். பல தடவை நான் அவர்களுக்கு உதவியுள்ளேன்.
அது இருக்கட்டும் ரோசா வசந் அவர்களே, நங்கநல்லூர் உங்கள் மாமனார் ஊர் என்று நினைக்கிறேன். சரியா? இங்கு வந்தால் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளவும். தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன். இரண்டு நாள் முன்னால் ரவியா அவர்களும் அல்வாசிடி விஜய் அவர்களும் வீட்டுக்கு வந்திருந்தனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

ROSAVASANTH said...

எனக்கு இங்கே விரிவாய் கருத்து சொல்ல ஆர்வமும், நேரமும் எனக்கு இல்லை. சுரேஷ் கொஞ்சம் உருப்படியாய் எழுதியதாக பட்டதால் என் கருத்தை சொன்னேன்.

" நங்கநல்லூரில் இந்தி பேசப்பட்டால் என்ன தவறு? " என்று கேட்பவருக்கு என்னத்தை சொலவது? என்ன தவறு என்பதைத்தானே என்ன பாதகம் என்று கோடிட்டு காட்டியிருக்கிறேனே! மதுரையிலிருந்து சென்னைக்கு போகும் தமிழர் சாலையில் ஒருவருடன் ஜாக்கிரத்தை உணர்வுடன் ஹிந்தியில் முதலில் கேட்டுவிட்டு தமிழுக்கு தாவலாம். இதிலும் என்ன தவறு என்று கேட்கலாமே! ஒவ்வொரு பதிலுக்கும்' என்ன தவறு?' என்று கேட்பவருக்கு என்னத்தை பதில் சொல்லமுடியும்? எதில்தான் என்ன தவறூ? என்ன எழவிற்கு இங்கே தமிழில் நாம் பேசவேண்டும்? இன்னும் என்ன எழவிற்கு பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிகொடுக்கவேண்டும்? ஆங்கிலத்தில் பேசினால்தான் என்ன தவறு?

ஆனால் *இவர் சொல்லும் வகையில்* (கவனிக்கவும் பொதுவாய் அல்ல) நிகழக்கூடிய IT புரட்சியால் தங்களுக்கு நன்மையைவிட தீமையே இருப்பதாகவே கர்நாடகத்தவர்கள் நினைக்கிறார்கள். கன்னடியர்கள் அடைந்த பலனைவிட மற்றவ்ர்களே சுரண்ட முடிந்தது என்பது அவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு தெரியும்.

(ஆனாலும் சென்னையில் அனைவரும் ஹிந்தி பேசி வட இந்தியர்களை வரவேற்றால்தான், IT புரட்சி வரும் என்ற லாஜிக் என் சிற்றறிவிற்கு எந்த விதத்திலும் விளங்கவில்லை என்பது இருக்கட்டும். வட இந்தியாவை முன்னேற்றத்திற்கான இடமாக கருதாமல் தெற்கை நோக்கி படையெடுப்பவர்களை, இங்கே உள்ள மொழியை கற்பதற்கான சின்ன தூண்டுதலை கூட தராமல், அவர்கள் மொழியில் பேசி வரவேற்றால் நாம் முன்னேற்றமடைவோம் என்றும், அப்படி செய்வதில் பிழை கண்டால் அது மொழிவெறி என்றும் போகும் அறிவு பூர்வமான வாதததை விளங்கி கொள்ளும் அளவிற்கு முதிர்ச்சி அடையாத நான் இங்கே என்ன கருத்து சொல்லிவிட முடியும்?)

டோண்டு ஸார், உங்கள் அழைப்புக்கு நன்றி! நிச்சயம் சென்னை வரும்போது பார்கிறேன்.

நங்கநல்லூர் மட்டுமல்ல, பொதுவாக பல இடங்களில் பேசபடுகிறது. நானே பார்த்திருக்கிறேன். "ஹிந்திக்காரர்கள்தான் மழலையாகத் தமிழ் பேசுகிறார்கள். " என்று நீங்கள் சொல்வது போல் சிலர் இருக்க காரணம் சென்னை பெங்களூர் ஹைத்ராபாத் போல் இல்லாததால்தான். ஹைதராபாத்தில், பெங்களூரில் பிறந்து வளர்ந்த வட இந்தியர்க்குக்கூட மழலையில் பேச தேவையிருக்காது. சென்னையிலும் இது போன்றவைகளும் இன்னும் அதிக நாட்களுக்கு நீடிக்க வாய்பில்லை.

Voice on Wings said...

ரோசாவசந்த், பரவாயில்லை ஆர்வமின்றியே வெகு விரிவாக கருத்து தெரிவித்து விட்டீர். தமிழனும் தமிழனும் இந்தியில் உரையாட வேன்டுமென யாரும் கோரவில்லை. பிள்ளைகளுக்கு தமிழ் பாடம் குறித்தும் நான் எந்த மறுப்பு கருத்தையும் கூறவில்லை. எனது கேள்வியெல்லாம், ஒரு இந்தி தெரிந்த தமிழனும், இந்தி தெரிந்த வேற்று மாநிலத்தவனும் நங்கநல்லூரிலோ அல்லது மதுரையிலோ அல்லது அரக்கோணத்திலோ நின்று கொண்டு இந்தியில் உரையாடினால், அது எவ்வகையில் தமிழக நலனுக்கு பாதகம் விளைவிக்கும்?

IT புரட்சிக்கு பிறகு வருவோம். முதலில் நீவிர் சுட்டிக் காட்டிய காய்கறி விற்பனை சூழ்நிலை. அந்த பெண்மணிக்குத் தேவை வாடிக்கையாளர்கள். அவரிடம் இருப்பது ஒரிரு வார்த்தையாவது இந்தி பேசும் திறமை. அத்திறமையை கொண்டு ஒரு விற்பனையை சாதிக்கிறார், சற்று அதிக விலையில் கூட இருக்கலாம். இந்த market பொருளதார நிகழ்வு உங்களையோ, அல்லது மற்றவரையோ எவ்வாறு பாதிக்கிறது?

இப்போது IT புரட்சி. நான் சொல்லும் வகையிலோ, அல்லது வேறு வகையிலோ எவ்வாறாயினும் இது ஒரு people-centric industry. "தமிழர்களுக்கு மட்டுமே வேலை" என்ற கொள்கையை கடைபிடித்துக் கொண்டு எந்த நிறுவனமும் பிழைப்பு நடத்த இயலாது. வல்லுனர்கள் யராயிருந்தாலும் அவர்க்ளை கவர்ந்தே தம் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். இந்நிலையில், அவர்களுக்கு கட்டாய பாடங்கள் விதிக்கப் பட்டால், அதை அவர்கள் சுமுகமான சூழ்நிலையாக கருதமாட்டார்கள். நாம் அனைவரும் இந்தி பேசி வரவேற்க வேண்டும் எனக் கோரவில்லை. ஆர்வமுள்ளவர்கள் பேசினால் அதற்கு மொழித் தடை போடாதீர் என்றே கோருகிறேன். வல்லுனர்களென உதாரண்ம் கூறினேன். இது முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். பொருளாதாரத்துக்கு வேண்டிய capital மற்றும் human resource இவையிரண்டுமே சுமுகமான சூழல்களையே தேடிச் சென்றடையும். தமிழகம் அத்தகையவொரு சுதந்திரப் பூங்காவாக திகழ வேண்டுமா, வேண்டாமா என்பது கேள்வி.

ROSAVASANTH said...

இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்தே ஆர்வமில்லை என்றேன். இருப்பினும் பழைய விவாதங்களில் பார்த்தைவிட மிகவும் உருப்படியான பதிலை நீங்கள் தந்துள்ளதாக படுகிறது. இன்னும் ஒரு வாரம் என்னால் இணைய பக்கமே வர முடியாது. அடுத்த வாரம் என் பதிவில் இதற்கு பதில் எழுதுகிறேன். http://www.rozavasanth.blogspot.com/

ROSAVASANTH said...

1. நான் எழுதியது விரிவான கருத்து அல்ல. விரிவாய் கருத்து தருவது என்பது விங்க்ஸ் தரப்போகும் பதிலையும் எதிர்பார்த்து அல்லது பதில் வந்தபின் அதற்கு பதிலளித்து விரிவாய் ஒரு விவாதத்தில் ஈடுபடுவது. அதற்கு எனக்கு நேரமும் ஆர்வமும் இல்லை.இப்போது இதுவும் கிடைத்த சந்தர்பத்தில் அளிக்கும் ஒரு சின்ன இடையீடு மட்டுமே!

2. வாய்ஸ் விங்க்ஸ் 'தமிழர்கள் ஹிந்தியில் பேசிகொள்வது, பிள்ளைகள் தமிழ் படிக்காமலிருப்பது' இது குறித்தெல்லாம் என்ன கருத்து வைத்திருக்கிறார் என்பது அல்ல என் கேள்வி. அவற்றில் என்ன தவறு எனபதுதான் (ஒரு எதிர்வாதமாய்) என் கேள்வி.

நான் "தமிழனும் தமிழனும் இந்தியில் உரையாட வேன்டுமென யாரும் கோரி"யதாக சொல்லவில்லை. மகராஷ்டிராவில் நாக்பூரிலிருந்து போகும் ஒரு மராட்டியனுக்கு மும்பையில் இறங்கியவுடன் மராட்டியில் யாரிடமும் பேசும் தைரியம் இருக்காது. முதலில் ஹிந்தியில் தொடங்கி, பின் மராட்டியன் என்று அறிய நேர்ந்தால் மராட்டிக்கு தாவமுடியும். மும்பை ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணம் மட்டுமே. நாக்பூரிலேயே ரோட்டில் பார்க்கும் ஒருவருடன் மராட்டியில் பேசுவது கிடையாது. இன்னும் சிறிய ஊரான வார்தாவில் முன் அறிமுகம் இல்லாத இருவர் ஹிந்தியில்தான் உரையாடலை தொடங்குவார்கள். வார்தா போன்ற ஒரு ஊருக்கு மராட்டி படங்களே வருவது கிடையாது. ஒரிசா, மகராஷ்டிரா எல்லா இடத்திலும் இதேதான் நிலமை. இந்த அளவிற்கு மோசம் இல்லாவிட்டாலும், ஹைதாராபாத்திலும் இதே போன்ற ஒரு நிலமைதான் பல இடங்களில் உண்டு. பெங்களூரில் கொஞ்சம் மூஞ்சி தூய கன்னடியனாய் இல்லாவிட்டாலோ, கொஞ்சம் வட இந்திய சாயல், அல்லது நிறம் இன்னும் எத்தனையோ காரணக்களுக்காக ஒரு கன்னடியனிடம் ஹிந்தியிலேயே ஒருவர் உரையாடலை தொடங்க கூடும். இதைத்தான் "மதுரையிலிருந்து சென்னைக்கு போகும் தமிழர் சாலையில் ஒருவருடன் ஜாக்கிரத்தை உணர்வுடன் ஹிந்தியில் முதலில் கேட்டுவிட்டு தமிழுக்கு தாவலாம். இதிலும் என்ன தவறு என்று கேட்கலாமே!" என்று எழுதினேன்.

அதை வாய்ஸ் எப்படி எதிர்கொள்கிறது என்றால் "தமிழனும் தமிழனும் இந்தியில் உரையாட வேன்டுமென யாரும் கோரவில்லை..... எனது கேள்வியெல்லாம், ஒரு இந்தி தெரிந்த தமிழனும், இந்தி தெரிந்த வேற்று மாநிலத்தவனும் நங்கநல்லூரிலோ அல்லது மதுரையிலோ அல்லது அரக்கோணத்திலோ நின்று கொண்டு இந்தியில் உரையாடினால், அது எவ்வகையில் தமிழக நலனுக்கு பாதகம் விளைவிக்கும்? "

வாய்ஸ் சொல்வது போல் யார் இங்கே யாருக்கு எந்த மொழியை பேச தடை விதித்தார்கள்?

வாய்ஸ் எதை கோருகிறார், எதை சரி/தப்பு என்கிறார் என்பதை பற்றி யாருகென்ன வந்தது? ஒரு குறிப்பிட்ட phenomenon எங்கே இட்டு செல்லும் என்பதை பற்றித்தான் பேச்சு! இதிலும் என்ன பாதகம், என்ன தவறு, இதனால் தமிழுக்கு என்ன கேடு என்றெல்லாம் வாய்ஸ் கேட்க கூடும். பதில் சொல்லத்தான் நமக்கு வக்கு இருக்காது.

3. காய்கறி விற்பனை குறித்து நான் சொன்னதை அவர் சரியாய் புரிந்து கொள்ளவில்லை. நான் குறிப்பிட்ட காய்கறி விற்கும் பெண்மணிக்கு ஹிந்தி தெரியாது. அவர் ஹிந்தியில் எந்த வார்த்தையும் பேசவும் இல்லை. பேசும் வட இந்தியர்களுக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை. அவர்களை பொறுத்தவரை ஹிந்தி தெரிந்திருப்பது இயலபானது.தெரியாதவர் அதை கற்றுகொள்வது இயல்பானது.

சுரேஷ் எழுதியதை கவனிக்க வேண்டும். அவர் வட இந்தியா போனபோது கடைகாரரிடம் ஒரிரு ஹிந்தி வார்த்தகளால் தொடங்குகிறார். அது அங்கே இயல்பானது. யோசித்தால் இங்கேயும் இந்த ஊரில் வாழ வருபவர் கடைக்கு போய் ஓரிரு தமிழ் வார்த்தைகளால் தொடங்குவதே இயலபாய் இருக்க வேண்டும். ஹைதாரபாத்தை, பெங்களூரை போல 'புரட்சி' வந்தால், இந்த இயல்பு தலை கீழாக்கப்படும். நங்கநல்லூரில் வாழ்ந்துகொண்டு ஹிந்தி தெரியாததை காய்கறி விற்கும் பெண் தன் தன்னுடய தவறாய் உணர வைக்கும் உளவியல் உருவாகும். ஏற்கனவே சென்னையிலேயே பல இடங்களில் இது உருவாகியிருக்கிறது. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

அதை வாய்ஸ் தனது புத்திசாலித்தனத்தை கொண்டு எப்படி எதிர்க்கொள்கிறார் என்றால் "அந்த பெண்மணிக்குத் தேவை வாடிக்கையாளர்கள். அவரிடம் இருப்பது ஒரிரு வார்த்தையாவது இந்தி பேசும் திறமை. அத்திறமையை கொண்டு ஒரு விற்பனையை சாதிக்கிறார், சற்று அதிக விலையில் கூட இருக்கலாம். இந்த market பொருளதார நிகழ்வு உங்களையோ, அல்லது மற்றவரையோ எவ்வாறு பாதிக்கிறது?"

நான் குறிப்பிடுவது ஒரு சமூக சூழல், இயல்பாய் ஒன்றை கருதக்கூடிய உளவியல் எப்படி மாறும் என்பது குறித்தது. இதில் 'என்னை மற்றவரை' பாதிப்பது குறித்த கேள்வி எங்கிருந்த்து வருகிறது? இது வெறும் அசட்டுத்தனமான புத்திசாலித்தனம் அன்றி வேறென்ன?

4. கடைசி பாரவில் மீண்டும் வாய்ஸின் புத்திசாலித்தனம் மட்டுமே வெளிப்படுகிறது.

முதலில் IT புரட்சி வந்து பாலும் தேனும் ஓடப்போகிறதா என்ற கேள்விக்குள் போகவேண்டாம். ஆந்திராவில் புரட்சி நடந்ததாக சொல்லிகொண்டிருந்த போதுதான் பட்டினியாலும், வட்டி கட்டமுடியாமலும் விவசாயிகள் தற்கொலை செய்வது உச்ச எண்ணிக்கையில் இருந்தது. இதையும் அதையும் இணைக்கும் பொருளாதார காரணிகள் எதுவும் உண்டா என்பது குறித்து (எனக்கே தெளிவில்லாத காரணத்தால்)பேசாமல், ஒரு பேச்சுக்கு IT புரட்சி வந்துதான் நம் சமுதாயம் உய்யக்கூடும் என்றே வைத்துகொள்வோம்!

அதற்கும் இங்கே எல்லோரும் ஹிந்தி பயின்று, பேச தொடங்குவதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் எனது கேள்வி. இங்கே முதலில் இருந்தே அந்த கேள்வியில்தான் விவாதமே தொடங்குகிறது. லாஜிக் தனக்கே ஒத்து வராமலோ என்னவோ அவரே பதிலை மாற்றிக் கொண்டு விட்டார். ஆனால் அதிலும் பிரச்சனை.

"நாம் அனைவரும் இந்தி பேசி வரவேற்க வேண்டும் எனக் கோரவில்லை. ஆர்வமுள்ளவர்கள் பேசினால் அதற்கு மொழித் தடை போடாதீர் என்றே கோருகிறேன். " என்கிறார். தடை போடவேண்டும் என்று யார் சொன்னது? தடை போடுவது என்பதற்கு என்ன பொருள்? அதை எப்படி யாரால் நடைமுறைப் படுத்த முடியும்? அது குறித்து இங்கே யார் பேசினார்கள்? "தமிழர்களுக்கு மட்டுமே வேலை" என்ற கொள்கையை கடைபிடிக்க' வேண்டும் என்று யார் சொன்னார்கள்.

வாய்ஸ் நினைப்பது போல் இங்கே பெரிய அளவில் ஹிந்தி பேசப்பட்டால்தான் வல்லுனர்களும், முதலீட்டாளர்களும் வருவார்கள் என்பது உண்மையல்ல. இவை எல்லாம் வேறு காரணிகளாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. தேவையெனில் தூத்துகுடியிலிருந்து டோக்கியோ வரை எங்கு வேண்டுமானாலும் போக தயாராயிருப்பார்கள். நங்கநல்லூரில் காய்கறிகாரியை ஹிந்தி பேச *வற்புறுத்துவதை* இதை முன்வைத்து நியாயபடுத்த முடியாது. காய்கறி விற்பவரும், கண்டக்டரும் ஹிந்தி பேசாவிடில் "தமிழகம் அத்தகையவொரு சுதந்திரப் பூங்காவாக திகழ"வில்லை என்றாகிவிடாது.

இது வரை ஏதோ தமிழர்கள் எல்லாம் ஹிந்தி படிக்காமல் எதை எதையோ இழந்ததாக பீலா விட்டார்கள். ஆனால் யதார்தத்தில் மற்ற மொழியினரை (ஒப்பீடுரீதியில் மலையாளிகள் தவிர்த்து) விட தமிழர்கள் உலகில் மூலை முடுக்கில் எல்லாம் வாழ்ந்து வருகின்றனர். ஹிந்தி என்ன ஜுஜுபி, என்னென்னவோ மொழிகள் தமிழர்களால் பேசப்ப்டுகிறது. ஹிந்தி படித்த ஒரிசா, மராட்டி, கன்னடியர்களைவிட பரவலாய் உலகம் முழுவதும், வட இந்தியா உட்பட வாழ்ந்து வருகின்றனர். மைலாப்பூரில் பிரவீண் வரை படித்த அம்பியிடம் ஹிந்தி பேசினால் திகைத்து போகக்கூடும். அரிச்சுவடி தொடாத திருநெல்வேலி தமிழர் ஹிந்தியில் போட்டு தாக்கக்கூடும்.

தேவையின் நிர்பந்தத்தால் மட்டும் மார்வாடிகளும், இன்னும் எத்தனையோ வட இந்தியரும் 'திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டும் அள்விற்கு தமிழ் புலமை பெறக்கூடும். வேறு எந்த மானிலத்திலும் அவர்களுக்கு அந்த நிர்பந்தம் இருக்காது. (எல்லாம் பொத்தாம் பொதுவான கருத்துக்கள், விதி விலக்குகள் பல இருக்கலாம்.) ஹிந்தி தெரியாததால் எந்த முதலீட்டையும் இழந்ததாய் ஆதாரம் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை.

ஜப்பானிய மொழியை தவிர்த்து, ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரியாமல்தான் ஜப்பானில் புரட்சி நடந்திருக்கிறது. உடனே நிச்சயமாய் டோக்கியோவிற்கும் சென்னைக்கும் ஆயிரம் வித்தியாசங்களை காட்டமுடியும். அதனால்தான் நம்மால் ஆங்கிலத்தை தவிர்க்க முடியாது. ஆங்கிலத்தால் எவ்வளவோ நன்மை! ஹிந்தி அதில் எதையும் நமக்கு தரபோவதில்லை- பாதகத்தை தவிர. அதுவும் இந்த IT புரட்சி எந்தவித நம்பகதன்மையும் இல்லாதது. ஸாஃப்ட்வேர் போன்ற ஒரு போலியான புலமை வேறு ஒன்று இருக்க முடியாது. பெரிதாய் எந்த பயிற்சியும், அறிவும் புலமையும் (மற்ற துறைகளை போல) தேவையில்லாத துறை அது. அந்த புரட்சியும் ஹிந்தியும் சேர்ந்த கலவையால் நாம் பயன் பெறுவோமா மற்றவர்களா என்பது சிக்கலான கேள்வி அல்ல. பெங்களூர் புரட்சியில் கர்நாடகத்தவரை விட தமிழர்களுக்குதான் லாபம் அதிகம். ஆகையால் IT புரட்சிக்கு சென்னையை பலி கொடுக்காமல் பெங்களூரை புணர்ந்தே தமிழர்கள் தங்களை வளமாக்கி கொள்ளமுடியும். இது சரியா தப்ப எனப்து அல்ல கேள்வி. இங்கே வாய்ஸ் பேசுவதும் அது அல்ல. லாபமா/நஷ்டமா, புத்திசாலித்தனமா/அசட்டுத்தனமா என்பதுதான் கேள்வி.

ஹிந்தி பேசும் எந்த மானிலத்தைவிடவும் நாம் எவ்வாளவோ முன்னேறி இருக்கிறோம். இத்தனை வருட ஒரு மத்திய ஆட்சியின் வெளிப்படியான பாரபட்சத்திற்கு பின்னும். அங்கே எல்லாம் போனால் ஏதோ நானுறு வருடங்கள் முந்தய நகரத்திற்கு போனது போல் இருக்கிறது. அது முன்னேற்றத்திற்கான இடம் அல்ல என்று கருதும் வட இந்தியர்கள் இங்கே படையெடுக்கிறார்கள். இங்கே யாரும் அவர்களை தடை செய்யவில்லை. அவர்கள் தங்களின் வழக்கமானா திமிரில் இங்கிருக்கும் மொழியை கற்க சின்ன முயற்சி கூட செய்யாமல், இங்குள்ளவ்ர்களை ஹிந்தி பேச நிர்பந்திப்பதை விமர்சித்தால் அதை மொழி வெறி என்று திரிக்கப்படூகிறது. ஒரு வட இந்திய வெறியன் அதைத்தான் செய்வான். ஆனால் தமிழ் சூழலில் ஒருவர் அதை சொல்வதை வெறும் அவலம் என்று மட்டும் எடுத்து கொள்ளமுடியுமா?

மிகவும் அவசரமாய் அடித்ததில் ஒரு திட்டமில்லாமல் எழுதப்பட்டுள்ளது. விரும்பிய வண்ணம் வாசித்து தேவையானதை எடுஇத்துகொளவ்து அவரவர் விருப்பம்.

Voice on Wings said...

ரோசாவசந்த், உங்கள் பதிலின் உட்கருத்து: "தமிழகத்துக்கு வருகை தரும் அயலார், முன்பின் தெரியாதவர்களிடம் பேச்செடுக்க வேண்டுமென்றால் முதலில் தமிழில் ஆரம்பித்துவிட்டு பிறகுதான் வேறு மொழிகளுக்கு தாவலாம். இந்த அளவுக்கேனும் அவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய நிலை உறுதி செய்யப் படாவிடின் நம் கதி அதோகதிதான்." என் வாசிப்பில் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.

அயலார் - இவர்களில் பலவகை. வெளி மாநிலத்தவர் / நாட்டவர்; சில நாட்களே வந்து போகும் சுற்றுலா பயணி / சில மாதங்கள் வசித்தவர் / சில வருடங்கள் வசித்தவர். கடைசி வகையைச் சேர்ந்தவர் வேண்டுமானால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம். மற்றவர்கள் கதி? உங்கள் கண்டனத்துக்கு ஆளாக வேண்டியவர்கள் தானா?

நீங்கள் பரிந்துரை செய்யும் 'தூண்டுதல்' கொள்கையில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. அதுவும் ஒருவகைத் திணிப்பு என்றே கூறுவேன். இந்தி திணிப்பை எதிர்த்த அதே மனதுடன் நீங்கள் பரிந்துரைக்கும் தூண்டுதலையும் எதிர்க்கிறேன்.

தனி மனித சுதந்திரம் என்ற ஒரே வழிகாட்டும் கொள்கையை நினைவில் கொன்டு பார்த்தால் - ஒருவன் என்னிடம் வந்து French அல்லது German, ஏன் Japanese இல் பேச்செடுத்தால் கூட அது அவனது தனி மனித உரிமையே அன்றி வேறேதுவுமில்லை. அதற்கு விடை கூறும் அல்லது கூறாமலிருக்கும் உரிமை, என்னுடையது. இவ்வளவு எளிய தீர்வு இருக்கையில் எதற்காக செய்யவேண்டும் தூண்டுதல்கள்?

PS - இது நான் உங்கள் உட்கருத்துக்கு மட்டும் கூறிய விடை (விவாதத்தின் பயன் கருதி)

ROSAVASANTH said...

// "தமிழகத்துக்கு வருகை தரும் அயலார், முன்பின் தெரியாதவர்களிடம் பேச்செடுக்க வேண்டுமென்றால் முதலில் தமிழில் ஆரம்பித்துவிட்டு பிறகுதான் வேறு மொழிகளுக்கு தாவலாம். இந்த அளவுக்கேனும் அவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய நிலை உறுதி செய்யப் படாவிடின் நம் கதி அதோகதிதான்." என் வாசிப்பில் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.
//

அப்படி சொல்லவில்லை, சொல்லவரவில்லை. நன்றி!

ROSAVASANTH said...

// "தமிழகத்துக்கு வருகை தரும் அயலார், முன்பின் தெரியாதவர்களிடம் பேச்செடுக்க வேண்டுமென்றால் முதலில் தமிழில் ஆரம்பித்துவிட்டு பிறகுதான் வேறு மொழிகளுக்கு தாவலாம். இந்த அளவுக்கேனும் அவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய நிலை உறுதி செய்யப் படாவிடின் நம் கதி அதோகதிதான்." என் வாசிப்பில் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.
//

அப்படி சொல்லவில்லை, சொல்லவரவில்லை. நன்றி!

ROSAVASANTH said...

// "தமிழகத்துக்கு வருகை தரும் அயலார், முன்பின் தெரியாதவர்களிடம் பேச்செடுக்க வேண்டுமென்றால் முதலில் தமிழில் ஆரம்பித்துவிட்டு பிறகுதான் வேறு மொழிகளுக்கு தாவலாம். இந்த அளவுக்கேனும் அவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய நிலை உறுதி செய்யப் படாவிடின் நம் கதி அதோகதிதான்." என் வாசிப்பில் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.
//

அப்படி சொல்லவில்லை, சொல்லவரவில்லை. நன்றி!

Anonymous said...

வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற இந்தி திணிப்பு ஆதரவாளர்களின் நகைச்சுவைகளுக்குப் பஞ்சமேயில்லை. எல்லாரும் தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று கூறும் இந்த அதிபுத்திசாலிகள் என்னவோ இவர்களை இந்தி படிக்கக்கூடாது என்று கழுத்தைப் பிடித்த மாதிரியும், அல்லது தமிழ்நாட்டில் எங்கும் இந்தியில் பேசக்கூடாது என்று இவர்கள் குரல்வளையை நெரித்து வருகிற மாதிரியும் கூச்சலிட்டுக் கொண்டேயிருப்பது நல்ல நகைச்சுவைதான் போங்கள். அதுதானே சோ இராமசாமிகளின் சுய எள்ளல் என்பது!.

ஆனால் உண்மையென்னவென்றால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய்மொழி கூட கட்டாயப்படுத்தப்படவுமில்லை, தமிழில் பேசவேண்டும் என்று சங்கைப் பிடிக்கவுமில்லை. இதையும் (இந்த மாதிரி அதிபுத்திசாலிகளையும்) மீறி தமிழ் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் வாழுகிறது என்றால் ஆச்சரியம்தான். நீங்கள் என்ன மொழியையும் படியுங்கள், பேசுங்கள் - தயவு செய்து பள்ளிக்கூடத்தில் திணித்து எல்லாரையும் கற்கவேண்டுமென்று கூறி மட்டும் நீங்கள் மற்றவர்களின் குரல்வளையை நெரிக்காமல் இருந்தால் போதும். தமிழர்கள் உங்கள் கூற்றுப்படி "கிணற்றுத்தவளைகளாகவும், தேசவிரோதிகளாகவும் (இன்னும் என்ன வேண்டுமோ சேர்த்துக்கொள்ளுங்கள்)" இருந்துவிட்டுப் போகட்டும். ரோசா வசந்த் நீங்கள் என்னை முன்பு எச்சரித்தது போல உங்களை எச்சரிக்கிறேன், உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாமென்று!

சொ.சங்கரபாண்டி

Voice on Wings said...

ரோசாவசந்த், உங்கள் கருத்துகளுக்கும் விவாதத்தை முடித்துக் கொண்டமைக்கும் மிக்க நன்றி.

சங்கரபாண்டி,

"வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற இந்தி திணிப்பு ஆதரவாளர்களின் நகைச்சுவைகளுக்குப் பஞ்சமேயில்லை."

நான் கூறுவது உங்களுக்கு நகைச்சுவை, நீங்கள் கூறுவதோ எனக்கு நகைச்சுவை :) எத்தகைய ஒரு win-win situation பார்த்தீர்களா? :)

"எல்லாரும் தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று கூறும் இந்த அதிபுத்திசாலிகள்......"

இதிலிருந்து நீங்கள் என் விடைகளை சரிவர படிக்கவில்லையென தெரிகிறது. நீங்கள் கூறும் அறிவுரையை நானும் பின்பற்றுகிறேன், மேலும் நேரத்தை வீணாக்காது.

சுரேஷ், இந்த அற்புதமான விவாதத்தை தொடங்கி வைத்ததற்கு உங்களுக்கும் நன்றி. :) பெரும்பாலான தமிழர்கள் சகிப்புத்தன்மை உடையவர்களே என உறுதியாக நம்புகிறேன். Let's hope for the best!

பினாத்தல் சுரேஷ் said...

அனைவருக்கும் நன்றிகள், என் கருத்துக்களை அடுத்த பதிவாக இட்டுவிட்டேன். அங்கும் உங்கள் வரவையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

 

blogger templates | Make Money Online