Jun 15, 2005

பா ம க - என் பார்வை

மு.கு: இது என் முதல் அரசியல் பதிவு. என் அரசியல் அறிவு செய்திகளையும் பத்திரிக்கைகளையும் மட்டுமே பார்த்து வளர்ந்தது. சில பிழைகள் இருக்கலாம், சொன்னால் திருத்திக்கொள்கிறேன்.

பா.ம.கவின் அரசியல் செயல்பாடுகளின் நன்மை- தீமைகளை ஒவ்வொன்றாக என் அறிவுக்கு எட்டியவரை அலசுகிறேன்.

1. இட ஒதுக்கீடு போராட்டம் - மரங்கள் வெட்டி சாலை மறியல்

ஒடுக்கப்பட்டிருந்த, அதே நேரத்தில் வெளியே வராத ஒரு சமூகத்தின் குரல் முதல் முறையாக வெளிவந்தது, வன்னிய சமூகத்தின் பலம் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது, போராட்டத்தின் முடிவில் இட ஒதுக்கீட்டுக்கும் வழி செய்யப்பட்டது (கருத்து நன்றி: குழலி)

ஆனால் முடிவு வழிமுறைகளை நியாயப்படுத்தாது (சாலைகள் துண்டிக்கப் பட்டதால் அல்லலுக்கு ஆளான பல பொதுமக்களில் நானும் ஒருவன், ஒரு நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டேன்.) மேலும் ஜாதி அடிப்படை இட ஒதுக்கீடு கேட்க எல்லா ஜாதியினருக்கும் ஊக்கம் கொடுத்தது இந்த வெற்றி.

2. பா.ம.க வின் உள் கட்சி செயல்பாடுகள்.

ஆட்சியில் இருந்த கழகங்களின் முயற்சியினால் பல முறை கட்சி பிளக்கப்பட்டாலும், பெரிய பங்கு எப்போதும் மருத்துவர் கையிலேயே உள்ளது. அடிமட்டக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப் படாது. எனினும், பா.ம.க வும் ஒரு "ஓனர்ஷிப்" கட்சி ஆகும் அபாயம் இந்த பிளவுகளால் ஏற்பட்டது, இன்னும் அப்படியே தொடர்கிறது. - இதன் நீட்சியாகவே "நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவரோ பதவி ஏற்க மாட்டோம்" என்ற உறுதிமொழியை பகிரங்கமாக மீறியும், கட்சிக்குள்ளே சலசலப்போ எதிர்ப்புக் குரல்களோ தோன்றவில்லை.

3. அணி மாற்றங்கள்:

தேர்தலுக்கு ஒரு முறை பெரிய அண்ணனிடமும், உடன் பிறவா சகோதரியிடமும் மாறி மாறிக் கூட்டணி - எந்த அணி மத்தியில் பதவிக்கு வந்தாலும் மந்திரி பதவி - இதை ஒரு பெரிய குற்றமாகக் கூற முடியாத அரசியல் சூழல் நம்முடையது. இதில் இரு விஷயங்கள் கவனிக்கத் தக்கது -பா.ம.க ஒருபோதும் தேர்தலுக்குப் பின்னால் கூட்டணி மாறவில்லை, அணி மாற்றம் தவறு என்றால் அந்தத் தவற்றில் மு.க விற்கும், ஜெவிற்கும் கூட சம பங்கு உள்ளது.

4. பா.ம.க வும் ஊடகங்களும்

சினிமா பின்புலம் கிடையாது, தலைவர் "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்" பேசக்கூடியவர் அல்ல, சொந்தப் பத்திரிக்கையோ, தொலைக்காட்சியோ கிடையாது, ஜாதிக்கட்சி என்ற தீட்டு வேறு - இப்படிப்பட்ட ஒரு கட்சியை எப்படி நமது ஊடகங்கள் கொண்டாடும்?

பரபரப்பு என்ற மந்திரச் சொல்லுக்காக, எதிர்மறை நிகழ்வுகளையே பிரதானப்படுத்தி வருபவையே மக்களின் பேராதரவைப் பெறும் ஊடகமாக உள்ள நிலையில்,அவற்றைக் குறை சொல்லியும் பயனில்லை.

மற்ற கட்சிகளில் மாவட்டச் செயலாளர் மாற்றம் கூட பத்திரிக்கை செய்தி ஆகும் போது, பா ம கவின் முக்கிய கொள்கை விளக்கங்கள் கூட சீந்தப்படாமல் இருந்த காலமும் உண்டு.

வெறுத்துப் போன தலைமை எடுத்தது அடுத்த ஆயுதத்தை - சினிமா எதிர்ப்பு - குறிப்பாக ரஜினி எதிர்ப்பு.

எந்த மாதிரி நேரத்தில் பா ம க ரஜினி எதிர்ப்பை கைக்கொண்டது?

விகடனுக்கும் குமுதத்துக்கும் கவர் மேட்டர் கிடைக்காவிட்டால் "ரஜினி அரசியல் பிரவேசம் - ஒரு எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட்" என்று நிரப்பிக் கொண்டிருந்த காலத்தில். "பாபா" இமாலய வெற்றி பெறும் என்று கணித்துக் கொண்டிருந்த காலத்தில்.

மறுபடியும், அதீத வழிமுறைகள் - பாபாவை திரையிடக் கூடாது என மிரட்டல்கள் - படப்பெட்டி கடத்தல் - ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல், பொது மக்களுக்கும் வெறுப்பூட்டின.

பாபா ஊத்தி மூடியது, வாய்ஸ் பிசுபிசுத்தது என்பது போன்ற பிற்கால நிகழ்வுகளால் அந்த வழிமுறைகளை நியாயப் படுத்த முடியாது.

5. தற்போதைய தமிழ் பாதுகாப்பு:

ஊடங்களின், மக்களின் கவனத்தைப் பெற அடுத்த முயற்சி - சற்று புத்திசாலித்தனமான முயற்சி - ஏன் எனில், இதை யாரும் எதிர்த்துவிட முடியாது - தமிழ் எதிரி என முத்திரை குத்தப் படும் அபாயம்! மேலும், இம்முறை களத்தில் தனியாக இறங்காமல், தலித் அமைப்புகள், வெறு தமிழ் அமைப்புகளின் துணையோடு இறங்குகிறது பா ம க. திரைப்பட பெயர் பிரச்சினையில் முதலில் மிரட்டினாலும், பின் தணிந்து போனது அணுகுமுறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம்.

ஆனால், தார் பூசக் கிளம்பிய தொண்டர்கள் இந்த அணுகுமுறை மாற்றத்தை புரிந்து கொண்டார்களா இல்லை என் "அணுகுமுறை மாற்றம்" பற்றிய பார்வைதான் தவறா எனத் தெரியவில்லை.

மொத்தமாக பார்க்கப்போனால், பா ம க செய்த நன்மைகள் எல்லாம் அவர்கள் சமூகத்துக்குள்ளே அடங்கிவிட்டது - அவர்களில் வழிமுறைகளின் தீய பலன்கள் - எல்லப் பொதுமக்களுக்கும் சொந்தம் ஆகிவிட்டது!

பி.கு 1: தயவு செய்து யாரும் "நீ என்ன ஜாதி" என்று பின்னூட்டத்தில் கேட்காதீர்கள் - அது அனாவசியம்.

பி.கு 2: மற்ற தமிழகக் கட்சிகளைப்பற்றியும் முடிந்தால் அலசுவேன் - விரைவிலேயே.

8 பின்னூட்டங்கள்:

வீ. எம் said...

சுரேஷ்,

நல்லதொரு பதிவு ! குழலி அண்ணே சீக்கிரம் வாங்க !!

ஆனால் எதற்காக ஒரு சங்கமாக ஆரம்பிக்கப்பட்டதோ... அதை எல்லாம் மறந்து பல ஆயிரம் அடி தூரத்தில் சென்று, ஜெயிக்கிற கூட்டனியில் அங்கம்.. 2 , 3 மந்திரி பதிவி.. மகனுக்கு ஒரு பதவி..என்கிற அளவில் மாறிவிட்டது தான் வேதனை !

// பா ம க செய்த நன்மைகள் எல்லாம் அவர்கள் சமூகத்துக்குள்ளே அடங்கிவிட்டது -////

ஏற்க்கும் படி இல்லை... அந்த சமூகத்தை கேட்டு பாருங்கள் .. நன்மைகள் எல்லாம் ஒரு சிறு வட்டத்திற்குள் சுருங்கி விட்டதென்றே சொல்வார்கள்

//சொந்தப் பத்திரிக்கையோ, தொலைக்காட்சியோ கிடையாது, //
தமிழன் தொலைக்காட்சி ?????
வீ எம்

குழலி / Kuzhali said...

இந்த வார இறுதியில் போடலாம் என இருந்த மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் பற்றிய பதிவு அதற்கு முன்பாகவே வெளிவரும் என எண்ணுகின்றேன்...


//என் அரசியல் அறிவு செய்திகளையும் பத்திரிக்கைகளையும் மட்டுமே பார்த்து வளர்ந்தது. //

நல்ல வேளை இந்த பதிவை பதிந்தவர் முதலிலேயே ஒரு உண்மையை ஒத்துக்கொண்டார், இது தான் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் பா.ம.க. வின் மீதான் வன்முறைதான் பல தவறான புரிதலுக்கு காரணம்...

//தமிழன் தொலைக்காட்சி ?????//
இது அய்யாவினுடையது இல்லை... நானும் முதலில் அப்படித்தான் நினைத்து ஒரு பாமக பிரமுகரிடம் கேட்டபோது அது அய்யாவினுடையது இல்லை என்றார்(முழுவிவரம் தமிழகம் சென்று வரும்போது அறிந்து வரும்போது சொல்கின்றேன்...)

அவருடைய 4 வது கேள்வியில் ரஜினியைப்பற்றிய கேள்வியையும் 5 வது கேள்வியையும் தவிர மற்ற அனைத்து கேள்விகளுக்கும் எனது பதிவுகளில் பதில் கூறிவிட்டேன்... எனவே மீண்டும் அதைப்பற்றி சொல்லும் நிலையில் நான் இல்லை...
பதிவின் சுட்டி இதோ மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - 1

இன்னும் சில விடயங்கள் சொல்ல வேண்டும் பிறகு பின்னூட்டமிடுகின்றேன்

குழலி / Kuzhali said...

எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து நான் இது வரை மறியல்களினாலும் போராட்டத்தினாலும் நடந்து வந்த நாட்களில் சில

1984 - இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு நடந்து வந்ததுபோது எனக்கு வயது ஏழரை

1986-87 - இந்தி எதிர்ப்பு போராட்டம் - இப்படி சொல்லித்தான் கலைக்கல்லூரி மாணவர்கள் என் பள்ளியின் மீது கல்விட்டபோது விடுமுறை கொடுத்து அனுப்பியபோது மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் நடந்த கலவரத்தில் நடந்து போனது

1987 - வன்னியர் சங்க போராட்டத்தினால் நடந்து போனது

1987 - எம்.ஜி.ஆர் அவர்கள் மரணத்தின்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடந்து போனது

1987 - கடலூரில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இராஜீவ் காந்தி அவர்களின் பாதுகாப்புக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்ட போது நடந்து போனது

1989 - தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டபோது போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடந்து போனது (முதன் முதலில் இராணுவ வண்டியையும் இலகு ரக இயந்திரத்துப்பாக்கியையும் கண்ணால் பார்த்தது)

1991 - இராஜீவ் காந்தி மரணத்தின் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு நடந்து போனது

1999 - சென்னையில் வாழப்பாடி இராமமூர்த்தியின் த.ரா.கா. கட்சியின் ஊர்வலம் மற்றும் மாநாட்டினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நடந்து போனது

கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நடந்து போனது

கடலூரில் பலமுறை நடந்த சாதிக்கலவரத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நடந்து போனது.

அடிப்படை வசதி கோரி எனது பகுதி வாசிகளால் சாலை மறியல் நடத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நடந்து போனது...

இன்னும் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் உதாரணத்திற்கு உள்ளன...

பாமகவின் கொடிக்கம்பத்தை கூட நேரில் பார்த்திராத பெரு நகரங்களிலே மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய படித்த புத்திசாலிகளான பலர் உண்மையை ஆராய்ந்து பார்க்காமல்(மனமில்லாமல்) வெறும் பத்திரிக்கை செய்திகளை வைத்து, பாமகவின் மீது கடும் தாக்குதல் தொடுக்கும் மனநிலையிலிருந்து ஓரளவு வேறு பட்டு இரண்டு பக்கங்களிலும் பார்த்து அலசிய இந்தப்பதிவு நிச்சயம் பாமக வை தாக்குகின்ற பதிவாக நிச்சயம் கருதமாட்டேன்... தமிழ்மணத்திலே(மட்டுமா?!) இதுவரை மருத்துவரையும் பா.ம.க. வையும் எந்த நோக்கமுமில்லாமல் தாக்குவதையே குறிக்கோளாக கொண்டு பதியப்படும் பதிவுகளின் மத்தியில் இரண்டு பக்கங்களையும் ஓரளவு அலசியிருக்கும் உங்களுடைய பதிவு மக்களின் பார்வையிலே (குறைந்த பட்சம் ஒரு பக்க பார்வையின்றி நடுநிலையாளர்களிடம் உண்டான இந்த மாற்றம் நிச்சயம் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடியதே)மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை காண்கின்றேன்

மாயவரத்தான் said...

குழலி... மேலே சொன்ன போராட்டங்களும், மரம் வெட்டி(ய) போராட்டமும் ஒன்று என்றா நினைக்கிறீர்கள்?! அவையெல்லாம் ஓரிரெண்டு நாட்கள் நடைபெற்றவை. ஆனால் வன்னியர் சங்க போராட்டம்?!

அப்புறம் ஜெயா தொலைக்காட்சி ஜெயலலிதாவுக்கு சொந்தமானது கிடையாது. சன் தொலைக்காட்சி கருணாநிதிக்கு சொந்தமானது கிடையாது. அதே போல தான் தமிழன் தொலைகாட்சியும்!!

குழலி / Kuzhali said...

//அதே போல தான் தமிழன் தொலைகாட்சியும்!!//
சரியாகத்தெரியவில்லை... நான் விசாரித்துக்கொண்டு வந்து சொல்கின்றேன்....

நான் கூட முதலில் தமிழன் தொ.கா. மருத்துவருடையது என நினைத்துதான் கேட்டேன் அந்த பா.ம.க. பிரமுகரிடம், அவர் இல்லை எனத்தான் கூறினார், அதே சமயம் பா.ம.க. சார்பாக ஸ்லாட் வாங்கியிருப்பதாக கூறினார்...

நன்கு விசாரித்து சொல்கிறேன்...

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,

நல்லதொரு பதிவு ! 100 pinnUttangkaL peRa vAyppu uLLathu :)

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி - வீ.எம், குழலி, மாயவரத்தான் மற்றும் என்றென்றும் அன்புடன் பாலா.

குழலி - நடுநிலையான பதிவு என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி.

பா ம கவை தாக்க வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. ஆனால் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் பலவும் தலைவர் மு க வின் வழியிலேயே செல்கிறது.

மு க ஆட்சியில் இருக்கும்போது பெரிய பிரச்சினை ஏதும் வந்துவிட்டால் அதை சுலபமாக திசை திருப்பிவிடுவார்.

உதாரணமாக, சாதிக்கலவரத்தில் தென் மாவட்டங்கள் பற்றி எரிந்து கொன்டிருக்கும்போது ஒரு பத்து பைசா பெறாத 'குங்குமம் வைப்பது காட்டுமிராண்டித்தனம்" என்று கிளப்பி விட்டு விடுவார். பத்திரிக்கைகளும் அதைப் பிடித்துக்கொள்ள, முக்கியமான பிரச்சினைகளை அனைவரும் மறந்து விடுவர்.

ஒரு சமீப உதாரணம் - ஆட்சியில் பங்கேற்க மாட்டொம் என்ற அறிக்கைக்குப் பிறகு, தயானிதி மாறன் உட்பட மந்திரிசபையில் பங்கேற்றீர்களே என்னும் எதிர்பார்க்கப்பட்ட கேள்வியை திசை திருப்ப "மந்திரிசபை போர்ட்ஃபோலியோ" பிரச்சினையை பெரிதாக்கினாரே - ஞாபகம் இருக்கிறதா?

இவரும் அதே வழியில் செல்கிறாரோ என்னும் ஐயத்தை ஏற்படுத்துகிறது - அன்புமணி பற்றிய கேள்விகளையும், பழைய சத்தியம் பற்றிய கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாமல் சினிமாவையும், ஆங்கில பெயர்ப்பலகைகளையும் பிடித்துக்கொண்டு தொங்குவது!

இதிலும், நான் பா ம க வையும், தி மு க வையும் சமமாகத்தான் பார்க்கிறேனே அன்றி, யாரும் செய்யாத புது அநியாயத்தை பா ம க செய்கிறது என பார்க்கவில்லை.

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

Anonymous said...

PMK has become 'Chinna Marunthu Periya Marunthu' according to Thirumalai, Marathadi.com

 

blogger templates | Make Money Online