Aug 4, 2005

இளையராஜா அஞ்ச வேண்டிய ஆறு 04 Aug 05

முன் குறிப்பு: இளையராஜாவின் திருவாசகம், குறிப்பாக "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" பாடல் கேட்காதவர்களுக்கு இந்தப்பதிவு புரியாமல் போகக்கூடிய சாத்தியம் உள்ளது. ஒரு நடை கேட்டுவிட்டு, வலைப்பதிவுகளில் அதை பற்றிய விமர்சனங்களையும் படித்துவிட்டு வந்து விடுங்கள்.


அடே இது என்ன?

இதுதான் சிம்பனியில் திருவாசகமா?

அடேங்கப்பா - நல்லா இருக்கே?

அதுக்கு என்ன விமர்சனம் வந்திருக்கு?

ஒஹோ இவ்வளவு விமர்சனமா?

இதுக்கு நம்ம இளையராஜா பதில் சொன்னா எப்படி இருக்கும்?

"நல்ல தமிழினில் நான் பாட்டிசைத்து .."

சரியா வரலையே - மெட்டுக்கு பொருந்தலையே!

ஆங் - இது சரியா வரும்.. தான்னன்னா தனனா நானா..


ஏறிய செலவுக்கு அஞ்சேன் - இறங்கிடும் விற்பனைக்கஞ்சேன்
ஏச ஓர் காரணம் தேடி - எழுத்துக்குள் அர்த்தமும் தேடி
எம்பிரானைப் பாடும் பாட்டு ஏசுவை ஏசுதென்ற
எஜுகேட்டட் பேச்சைக் கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (1)


பேச்சுப்போல் கவிதைக்கஞ்சேன் - பெயர்த்திடும் உழைப்பிற்கஞ்சேன்
பேச்சையும் பாட்டுப்போலாக்கி பிடித்து அதை மெட்டில் வைத்தால்
பிசிறுதான் தட்டுதென்று - பெரியவர் சிறியோரெல்லாம்
பேசிடும் பேச்சைக் கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (2)


பைரசி திருடர்க்கஞ்சேன் - பரவிடும் MP3க்கஞ்சேன்
"இருட்டிலே பாட்டைக் கேளு - ஈரமாகும் கண்கள்" என்று
பாட்டினைக் கேட்கத்தானே பலநூறு விதிகள் போடும்
பண்டிதர் தனையே கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (3)


விமர்சனம் வரினும் அஞ்சேன் - அவர் வீசிடும் புழுதிக்கஞ்சேன்
விண்ணவர் பாடும் பாட்டை வீட்டிலே ஒலிக்கச் செய்தும்
வீதியில் செல்வோர் கூட விளங்கிட இலக்கியம் தந்தும்
விளம்பரம் அதிகம் என்றால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (4)


இசைத்திட்ட அன்னியர்க்கஞ்சேன் - இறைமறுக்கும் மக்கட் கஞ்சேன்
"ஈழத்துக் காசை நோக்கி ஈசன்மேல் பாடல் இசைத்தேன்
இசையிலே பின் தங்கிவிட்டேன் - ஈகோவால் இசைத்தேன்"
இதுபோன்ற பேச்செலாம் கேட்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (5)


ஆயிரம் தோல்விக்கஞ்சேன் - ஆபாசப் போட்டிக்கஞ்சேன்
அருள்தரும் பாட்டுப்போட்டு -ஆதரவு தேடி நின்றால்
"அரசுதான் அள்ளித்தருது - ஆரவாரம் அதிகம்" என்ற
அவதூறு அனைத்தும் கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (6)


பின் குறிப்பு:

இளையராஜாவின் "திருவாசகம்" விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என நான் நினைக்கவில்லை - (எதையுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என நான் நினைப்பதில்லை). ஆனால் விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட இசை வடிவத்தைப் பற்றியதாய் இருக்க வேண்டும், இளையராஜாவின் பின்புலத்தையும், நோக்கங்களையும் விமர்சிப்பதாய் இருக்கக் கூடாது என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம்.

16 பின்னூட்டங்கள்:

பிச்சைப்பாத்திரம் said...

:-)))))))

- Suresh Kannan

துளசி கோபால் said...

அது என்னங்க 'அம்ம நான் '

விளக்குங்களேன்...

பினாத்தல் சுரேஷ் said...

சுரேஷ் கண்ணன், முதல் முறையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க, ஒரு நாலு வார்த்தை பேசினால்தான் என்ன? சும்மா சிரிச்சுட்டு போயிருக்கீங்களே? இது சாதா சிரிப்பா, நக்கல் சிரிப்பான்னு கூடப் புரியலையே?

துளசி அக்கா, மேலே நான் எழுதியிருக்கிற ஆறு கவிதை(?!?!?!)களும், திருவாசகப் பாட்டு "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" ஃபார்மட்லே எழுதி இருக்கேன், அதனால், அதன் கடைசி சீர்கள் "அம்ம நாம் அஞ்சும் ஆறே" அப்படியே எடுத்து போட்டுகிட்டேன் அவ்வளவுதான்.

Jayaprakash Sampath said...

//இளையராஜாவின் "திருவாசகம்" விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என நான் நினைக்கவில்லை - (எதையுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என நான் நினைப்பதில்லை). ஆனால் விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட இசை வடிவத்தைப் பற்றியதாய் இருக்க வேண்டும், இளையராஜாவின் பின்புலத்தையும், நோக்கங்களையும் விமர்சிப்பதாய் இருக்கக் கூடாது என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம். //

ஒத்துக்கிறேன்

தகடூர் கோபி(Gopi) said...

////விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட இசை வடிவத்தைப் பற்றியதாய் இருக்க வேண்டும், இளையராஜாவின் பின்புலத்தையும், நோக்கங்களையும் விமர்சிப்பதாய் இருக்கக் கூடாது என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம். //

உண்மை!

படைப்பின் தரத்தை விட்டு விட்டு, படைத்தவன் பெயர் என்ன, யார் யாருக்கு அவன் நண்பன், யார் யாரெல்லாம் ஒரு குரூப், அவன் சாதியென்ன, மதம் என்ன என்று சிந்திப்பவர்கள் இதை உணர்ந்தால் சரி

பினாத்தல் சுரேஷ் said...

ஐகாரஸ் மற்றும் கோபிக்கு ஒரு ஓ!

தென்றல்,

திருவாசகத்துக்கு வரும் விமர்சனங்கள் பலதரப் பட்டதாயும் இருக்கின்றன. அது சிம்பனியா அல்லது ஆரட்டாரியா என்று தொடங்கி, பாப் பாடகர்கள் மனிதநேயக் கச்சேரி செய்யும்போது இளையராஜா மட்டும் ஏன் செய்யவில்லை எனப் பல கேள்விகள்- இந்த CDஇன் நோக்கத்தையும் கேவலப்படுத்தும் முயற்சிகள்--

நான் இசை சம்பந்தப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முனையவும் இல்லை - விமர்சிப்பது அவர்களின் சுதந்திரம் (மேலும் எனக்கும் அப்படிபோடு விற்கும் சிம்பனிக்கும் வித்தியாசம் தெரியாததும் மற்றொரு காரணம்:-))

இளையராஜா இசை பற்றிய பல விமர்சனங்களைக் கடந்தும் வந்தவர்தான் - எனவே இசை தவிர்த்த விமர்சனங்களைப் பற்றித் தான் அவர் அஞ்ச வேண்டும் என்பதே நான் கூற வந்தது.

வேண்டுமென்றால் உங்களுக்காக: எனக்கு இதை எழுத பார்மட் கொடுத்து உதவிய மாணிக்கவாசகருக்கும் ஒரு ஓ!

ஏஜண்ட் NJ said...

(

G.Ragavan said...

குறையில்லாத முயற்சியில்லை. அதற்காக இதுபோன்ற நிகழ்வுகளை நாம் ஊக்குவிக்காமல் இருக்கக் கூடாது. இளையராஜா தமிழில் இன்னமும் நிறைய செய்ய வேண்டும். அதைத் தமிழுலகம் போற்ற வேண்டும். இதைத்தான் ஏ.ஆர்.ரகுமானும் சொன்னார்.

முகமூடி said...

அதாவது நீங்க என்ன பண்ணனும்னா, இந்த மாதிரி "விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட இசை வடிவத்தைப் பற்றியதாய் இருக்க வேண்டும், இளையராஜாவின் பின்புலத்தையும், நோக்கங்களையும் விமர்சிப்பதாய் இருக்கக் கூடாது என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம்" அப்படீன்னு *&$*வாசகம் எல்லாம் ஓரட்டேரியா பண்ணாம திருவாசகத்த இசைவடிவம் பண்ண இப்ப என்ன அவசியம்னு கேக்குற இந்து கடவுள் ம்றுப்பாளர்கள் (நாத்திகர்கள்) மற்றும் இளையராஜாவை தலித்தாக பார்க்கும் ஞாநி போன்ற அறிவு ஜீவிகளுக்கு ஒரு கடிதம் எழுதுங்க.... அப்படியே உங்க பின்புலம் ஜாதி உங்க செக்கூலரிஸ கோட்பாடு எல்லாத்தையும் சொல்லுங்க... அல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சி உங்க கருத்து நாட்டுக்கு முக்கியமான்னு அவங்க சொல்வாங்க... அதுவரைக்கும் உங்க கருத்துல நாங்க எல்லாம் உடன்பட முடியாது...

அப்புறம் உங்க குரல கேட்டேன் நேத்தி... உங்க கவிதைகளை பார்த்தேன் இன்று... உங்க திறமைகளுக்கு ஒரு சபாஷ்... அந்த பமக மாதிரி இல்லாம இந்த ப.ம.க தொண்டர்கள் எல்லாம் பல துறைகளிலும் சிறப்பாக இருப்பதை நினைத்தால் நம் அரசியல் எதிர்காலம் இருட்டாக ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது...

ஏஜண்ட் NJ said...

//இந்த ப.ம.க தொண்டர்கள் எல்லாம் பல துறைகளிலும் சிறப்பாக இருப்பதை நினைத்தால் நம் அரசியல் எதிர்காலம் இருட்டாக ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது... //-தலைவர் ப.ம.க (இப்போதைய நிலவரப்படி)

தொண்டனுக்கு உள்ள விஷய ஞானம் பற்றி, ஒரு உண்மையான, வழிகாட்டியான தலைவன், சந்தோஷப்பட வேண்டுமே தவிர பயங்கொள்ளலாகாது.

வருங்கால தலைவர் 'பெனாத்தல்' வாழ்க என்று விஷய ஞானம் உள்ள தொண்டர்கள் தூரத்தில் கூவும் ஒலி என் காதில் தேனாக வந்து பாய்கிறது.

"காதுள்ளவன் கேட்கக்கடவன்; அவர்கள் பாக்கியவான்கள்" என்று இயேசு அப்பொழுதே இதைப்பற்றி சொல்லிவிட்டார்.

quote

கையில் என்ன... கொண்டு வந்தோம்...
கொண்டு செல்ல.....

unquote

=============
comment posted by
ஞானபீடம்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்ல கற்பனை உங்களுக்கு.

//பைரசி திருடர்க்கஞ்சேன் - பரவிடும் MP3க்கஞ்சேன்//

:oD

Suresh said...

சுரேஷ்.

கலக்கிட்டு இருக்கீங்க !!! ஒவ்வொரு பதிவும் வித்தியாசமா இருக்கு. உங்களை இந்த மாத நட்சத்திரமாக தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு ஒரே feast தான்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராகவன், முகமூடி, ஞானபீடம், மழை ஷ்ரேயா மற்றும் சுரேஷ்.

முகமூடி, தலையை மிஞ்சி வால் ஆடக்கூடாதுன்னு சொல்ல வரீங்களா?

ஞானபீடம் - அரசியலே வாழ்வுன்னு வாழ்ந்து, எங்கள் தலைவருக்கும் எனக்கும் இடையில் (நான் தனிக்கட்சி ஆரம்பிக்க இன்னும் தயாராகாத நிலையில்) பிளவு உண்டு பண்ணாதீங்க!

தாணு said...

கோவிலில் தெய்வீகமாக கேட்கப்பட்டது தெருவோரப் பாடலாகிவிட்டதாக சலித்துக் கொள்பவர்கள், முழு ஒலி நாடாவும் கேட்டிருப்பார்களா?`சிந்து பைரவி' concept மாதிரி எந்த ஒரு முயற்சியும் பாமரர்களை அடைய வேண்டியது முக்கியமில்லையா? சிவன் கோவிலில் பாடப்பட்டது திருவாசகம் என்று நிறைய பேருக்குத் தெரிந்ததே இளையராஜாவால்தான். மாணிக்கவாசகர் இருந்திருந்தால் அவரே மனமுருகி கேட்டிருக்கலாம்!!!!!

aathirai said...

penathalukku o.ttu poda anjen

Anonymous said...

a r rahman malayalee from kasargod, north kerala sucks big time.

a r rahman is a knucklehead.

 

blogger templates | Make Money Online