Oct 20, 2005

பெட்டிக்கடை

"என்ன கடைக்காரரே, பாத்து ரொம்ப நாளாகுது?"

"அது ஒண்ணும் இல்லே சார், வீடு மாத்தினேனா அதுலே கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சி"

"புதுசு புதுசா நெறய புத்தகம் தொங்க விட்டிருக்கியே - முன்னே எல்லாம் ஒரு நாலோ அஞ்சோதான இருக்கும்?"

"அதை ஏன் கேக்குறீங்க சார், ஏஜென்ட்டுங்க வரானுங்க, புது பொஸ்தவத்த குடுத்து இங்கே தொங்கவிடு, நாலு பேரு பாக்கட்டும்னு சொல்லிட்டு போயிர்ரானுங்க! பொஸ்தவம் வித்தா காசு அவனுக்கு, விக்காட்டி ரிட்டன்! எனக்கு இதிலே லாபமும் இல்லே நஷ்டமும் இல்லே. அதான் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டிருக்கேன்."

"அது சரிதான்பா, இதெயெல்லாம் தொங்க விட்டா பழைய புத்தகம் எல்லாம் தெரியாம மறைக்குது பார்."

"அதுக்கென்ன பண்ணறது சார். ஒவ்வொரு வாரமும் ஒரு நாலஞ்சு புது பொஸ்தவம் வருது, பழசப் படிக்கரவன் தேடியாவது படிப்பான் இல்ல? புதுசத்தான் தெரியறாப்பல வைக்கணும்."

"நீ பாட்டுக்கு புதுசு புதுசா தொங்கவிடு. நேத்திக்கு நம்ம வாத்தியார் வந்திருந்தார் - அவர் என்னா சொல்றாரு தெரியுமா?"

"நம்ம வாத்தியாரா? நல்ல மனுசனாச்சே - என்ன ஆச்சு சார்?"

"இங்கே தொங்கற புத்தகத்திலே எதோ அசிங்க அசிங்கமா எழுதி இருக்காம் - படிக்கர சின்னப் பசங்க கெட்டுப் போயிடுவாங்களாம்."

"அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்? அவன் பொழப்புக்கு ஏதொ எழுதி காசு பாக்கறான்."

"இருந்தாலும் விக்கிறது நீதான? அதுனாலதான் வாத்தியாருக்கு உன்மேல கோவம்!"

"நாந்தான் சொல்லிட்டேனே சார், இதுனால எனக்கு காலணா வருமானம் கெடையாதுன்னு.."

"அப்படி சொல்லி நீ தப்பிக்க முடியுமா? உன்னாலேதான் ஊர் கெட்டுப்போச்சுன்றாங்க எல்லாரும்!"

"அய்யய்யோ எனக்கு எதுக்கு சார் ஊர் பொல்லாப்பு. அந்த ஏஜென்டு கிட்டெ சொல்லிடறேன் - எல்லா பொஸ்தவத்தையும் ரிட்டன் எடுத்துகிட்டு போன்னு.."

"அப்படி சொன்னா எப்படி? எல்லா புக்குமா மோசம்? சிலதுதான் மோசம்."

"சரி சார். இதுவரிக்கும் என்ன பொஸ்தவம்னே பாக்கலே. இப்போ பாக்கறேன், எது எனக்கு பிடிக்கலையோ அத ரிட்டன் பண்ணிடறேன். சரியா?"

"அந்த ஏஜெண்டு கோவிச்சுக்கிட்டான்னா?"

"கடை என்னுது சார். என் கடையிலே நான் எனக்கு பிடிச்சதுதான் வைப்பேன். வேணும்னா அவன் வேற கடை தொறக்கட்டுமே, யாரு வேணாமுன்னாங்க?"

"சரி, படிச்சு பழகிப்போன மக்கள், நீ வேணாம்னு சொன்ன புக்கே வேணும்னு கேட்டாங்கன்னா?"

"இல்லேன்னு சொல்ல வேண்டியதுதான் - இருக்கறதப் படிங்கன்னு சொல்ல வேண்டியதுதான்.."

" ஆக, ஊர் மக்கள் எதப் படிக்கலாம், எதப் படிக்கக் கூடாதுன்னு நீ மட்டும் முடிவெடுக்கப் போறே!"

"இதுக்கு நான் வேற யாரை சார் கேக்க முடியும்? யாரையும்தான் எதுக்கு கேக்கணும்?"

"சரியான அராஜகப் பேர்வழிப்பா நீ!"

"என்ன சார், நீங்களே பிரச்சினய ஆரம்பிச்சுட்டு நீங்களே எனக்கு பட்டம் கட்டறீங்க ! ஹூம், நான் வாங்கி வந்த வரம் அது!"

7 பின்னூட்டங்கள்:

Muthu said...

குறும்புக்கார ஆளுய்யா நீ....

நான் என்ன சொல்லறன்னா பெட்டிக்கடைக்காரர் தனியா ஒரு பெட்டில போட்டு அந்த
புஸ்தகங்களை வைச்சுக்கிட்டு கேக்கற ஆளுங்களுக்கு மட்டும் கொடுக்கலாம். என்ன சொல்றீங்க?

Voice on Wings said...

நல்லாத்தான் சொல்லிருக்கீங்க :)

பினாத்தல் சுரேஷ் said...

முத்து, உங்கள் கருத்துக்கு நன்றி - ஆனால், எந்த புத்தகங்களை பெடீக்குள் வைப்பது என யார் முடிவெடுப்பது?:-))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாய்ஸ் ஆன் விங்க்ஸ்

Muthu said...

எல்லா புத்தகங்களையும் விக்கறாரு.அல்லது அறிமுகப்படுத்தறாரு. சில புத்தகங்கள்
பொதுவில வேண்டாம், மக்களை பாழ் படுத்துதின்னு நினைச்சா தனி பெட்டில போட்டு வைங்க. இப்ப விக்கறதில்லைங்கற புகார் இருக்காதில்லை.

enRenRum-anbudan.BALA said...

Good one, suresh !

My book is still upfront :)

பினாத்தல் சுரேஷ் said...

உங்கள் கருத்துக்கு நன்றி (மீண்டும்) முத்து. எது எப்படிப்பட்ட புத்தகம் என்று தரம் பிரித்துத் தொங்கவிடச் சொல்கிறீர்கள், - எனக்கு இக்கருத்து ஏற்புடையதே.

பாலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அர்விந்த் க்ரிஷ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kasi Arumugam said...

சுரேஷ்,

அப்பல்லாம் தெளிவாத்தான் இருந்திருகீங்க :-)

 

blogger templates | Make Money Online