Nov 8, 2005

திரைக்கு வந்த புத்தகங்கள் 08 Nov 05

என்னுடைய முந்தைய பதிவில், ராமச்சந்திரன் உஷாவின் பின்னூட்டத்தில் கூறியிருந்தார் - விரும்பி படிச்ச கதைய படமா பார்க்கிற தைரியம் எனக்கு எப்போதும் கிடையாது - என்று.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிந்தனைச் சிதறல்களில் இதுவரை படமாக்கப்பட்ட புத்தகங்களைப்பற்றி யோசித்தேன்.

எனக்கு புத்தகங்களில் இருந்து வந்த ஆங்கிலப்படங்கள் பற்றி அதிகம் பரிச்சயம் கிடையாது, எனவே தமிழ் பற்றி மட்டும்.

பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார் - "ஒரு பாட்டி வடை சுட்ட கதையைக்கூட படித்தவர்கள் பாராட்டும் விதமாக திரையில் கொடுக்க முடியாது. பாட்டி என்றால் சுமங்கலிப்பாட்டியா அல்லது விதவைப்பாட்டியா, வடை என்றால் மெதுவடையா அல்லது மசால்வடையா என்று படித்தவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிம்பத்தை மனதில் கொண்டிருப்பார்கள், அதை நான் எந்த வகையில் எடுத்தாலும், படித்தவர்களில் சிலரின் பிம்பத்தையாவது அது உடைத்துவிடும்" இதுதான் முக்கியக் காரணம் என்று நம்புகிறேன்.

"பார்த்திபன் கனவு" புத்தகத்தின் கடைசியில் அவிழும் மர்ம முடிச்சு, திரைப்படத்தின் மூன்றாவது காட்சியிலேயே எஸ்.வி.ரங்காராவ் வரும்போது தூள் தூளானதும் இதற்கு உதாரணமே

பத்திரிக்கைகளில் தொடராக வரும்போது, மணியம் செல்வனோ, மாருதியோ வரையும் கதாபாத்திரங்களின் ஓவியம், படிப்பவர்க்கு ஏறத்தாழவேனும் கொடுக்கும் ஒரு அடையாளத்தை, படத்தில் வரும் பாத்திரங்கள் உடைத்துவிடும் என்பது நிச்சயம். யாராவது, சுஜாதாவின் வஸந்தாக வெண்ணிற ஆடை மூர்த்தியையோ, ப்ரியாவில் வரும் பெயர் தெரியாத நடிகராகவோ கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? "குறிஞ்சி மலர்" அரவிந்தனாக மு க ஸ்டாலினைப் பார்த்த தீவிர தி மு க வினரே வெறுத்துப்போனது மறந்திருக்காது. அப்புசாமியாகவும் துப்பறியும் சாம்புவாகவும் காத்தாடி ராமமூர்த்தி நடித்தது பற்றி எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது.

வாசகர் பெரும்பாலானோர் மனதில், பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை ஏதெனும் ஒரு நடிகர் / நடிகையாக கற்பனை செய்து பார்த்திருப்பார்கள்.. டோண்டு, தருமி போன்றோர் (அவர்கள் மன்னிக்க) வைஜயந்தி மாலாவையும், ஜெமினி கணேசனையும் பாலையாவையும் நினைத்திருக்க, இடைப்பட்ட காலத்தோர் கமலஹாசனையும், குஷ்பூவையும் நினைத்திருக்கலாம். என்போன்ற சிறுவர்கள் அஸினையும் நினைக்கலாம்:-) எப்போது எடுக்கப்பட்டாலும், ஏதெனும் ஒரு சாராரிடம் இருந்தாவது திட்டு வாங்காமல் தப்பிக்கவே முடியாது. மாஜிக் லாண்டர்ன் குழுவினர் இதை நாடகமாக நடித்தபோது பசுபதி வந்தியத்தேவனாக நடித்ததாக அறிகிறேன் - பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு இத்தேர்வு சரிதான் எனப்பட்டாலும் எத்தனை பேர் என்னுடன் ஒத்துப்போவர் என்று நினைக்கிறீர்கள்?

இந்தப்பிரச்சினை வேன்டாம் என்று தியாக பூமி, விக்ரம் ஆகிய தொடர்கதைகள் வரும்போதே, நடிகர்களையே புத்தகத்திலும் போட்டு ஒருவாறு தயார் செய்து இருந்தார்கள். இது திரைப்படம் எடுக்கப்படும் எனும் முன்முடிவுடன் (ஸ்டோரி டிஸ்கஷன் குழு ஆசீர்வாதத்துடன்) எழுதப்படும் மிகச்சில கதைகளுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

விதிவிலக்குகளும் இருக்கலாம் - ஆனால் அவற்றை நான் பார்த்ததில்லை அல்லது படித்ததில்லை. மோகமுள் கதை படித்திருக்கிறேன், திரைப்படம் பார்க்கவில்லை. அழகி, சொல்ல மறந்த கதை திரைப்படங்களாக எனக்குப் பிடித்திருந்தன - ஆனால் கதைகளை படித்திருக்கவில்லை (படிக்கவில்லை என்பதுதான் படம் பிடித்ததுக்கு காரணமோ என்றும் சந்தேகிக்கிறேன்).

மணிரத்னம் படங்களில் சில காட்சிகள் அல்லது பாத்திரங்கள் கதைகளில் இருந்து தழுவப்பட்டபோதும், திரைக்கேற்றவண்ணம் செப்பனிட்டிருப்பார். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் இரு காட்சிகள் கதையாகவும், படமாகவும் நன்றே செய்யப்பட்டிருந்தன. "அஞ்சலி"யில் பிரபு பாத்திரம், Mockingbird பூ ராட்லீயைத் தழுவியது, நாயகன் - காட்ஃபாதர் திரைப்படத்தைவிட, புத்தகத்தையே அதிகம் தழுவியதாக நான் நினைக்கிறேன்.

மொத்தத்தில், படித்த புத்தகத்தை திரையில் பார்க்கும் தைரியம் எனக்கும் வராது, இதுவரை வந்த படங்கள் அந்த நம்பிக்கையை தூண்டும் விதமாகவும் இல்லை.

பி கு - புத்தகங்களில் இருந்து வந்த ஆங்கிலப்படங்கள் பற்றிப் பேச விரும்புவோர், இந்தப் பின்னூட்டப்பெட்டியிலேயே பேசலாம். (காத்துத்தான் வாங்குது:-))

16 பின்னூட்டங்கள்:

Muthu said...

பின்குறிப்பு நல்லா இருக்கு சாமியோவ்

dondu(#11168674346665545885) said...

"டோண்டு, தருமி போன்றோர் (அவர்கள் மன்னிக்க) வைஜயந்தி மாலாவையும், ஜெமினி கணேசனையும் பாலையாவையும் நினைத்திருக்க,"
அகிலனில் வந்த வேங்கையின் மைந்தன் கதாநாயகனாக ஜெமினி கணேஷையே கற்பனை செய்திருந்தேன். இரண்டு கதாநாயகிகளில் வைஜயந்திமாலா மற்றும் பத்மினியை நினைத்திருந்தேன். பார்த்திபன் கனவுக்கு நான் நினைத்த ஜோடியே திரைப்படத்தில் வந்தது.

படித்த கதை திரைப்படமாக வரும்போது வெற்றி பெறுவது கடினமே. என் அனுபவத்தில் இரண்டு உதாரணம் கூறுவேன்.

முதல் புத்தகம் "Pot bouille" என்றத் தலைப்பில் பிரெஞ்சு எழுத்தாளர் எமில் ஜோலா எழுதியது. அதன் திரைப்படம் புத்தகத்தை விட சிறப்பானதாக வந்திருந்தது. Gerard Philippe நடித்த இப்படத்தின் திரைக்கதையை Jean Pierre Armand
சிக்கென்று அமைத்திருந்தார்.

இரண்டாவது புத்தகம் தில்லானா மோகனாம்பாள். புத்தகம் மிகப் பெரியது. அதை சுவைபட திரைக்கதையாக்கி வெளியிட்டனர். சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன் என்று ஒரு பெரிய கோஷ்டியே வேலை செய்தது. கொத்தமங்கலம் சுப்புவின் கற்பனை திரையில் மிகக் கச்சிதமாக வந்தது.

ஆனால் புத்தகத்திலிருந்து பல பகுதிகள் மற்றும் பாத்திரங்கள் படத்தில் இடம் பெற இயலவில்லை. நாவலைப் படித்தால்தான் திரைப்படத்தை எவ்வளவு கச்சிதமாகக் கூறினார்கள் என்பது புரியும்.

தில்லானா மோகனாம்பாளை அப்படியே எடுக்க வேண்டுமானால் ஒரு மெகா சீரியல் ரேஞ்சில் யாராவது எடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganesh Gopalasubramanian said...

நான் a beautiful mind படித்துவிட்டு திரையில் பார்க்கும் பொழுது சில நிகழ்வுகள் இல்லாமல் போனதாக உணர்ந்தாலும் படித்ததைக் காட்டிலும் பார்த்ததில்தான் அதிகம் பரவசப்பட்டேன்

ramachandranusha(உஷா) said...

சிந்தனையை தூண்டி "ஆழமான" பதிவு எல்லாம் போடுகிறா மாதிரி தெரியுது! அப்படியே "சுட்ட" படங்களின் லிஸ்டு போடலாமா?

பினாத்தல் சுரேஷ் said...

முத்து - நகைச்சுவைக்காக எழுதினது - அதை உண்மை ஆகிவிடாமல் நீங்க எல்லாரும்தான் ரட்சிக்கணும்.

டோண்டு - உங்கள் கற்பனையை ஏறத்தாழ சரியாக ஊகித்ததில் மகிழ்ச்சி! தில்லானா மோகனாம்பாள் கதை நான் படிக்கவில்லை - வீட்டிலே இருக்கு - இனிமேதான் ஆரம்பிக்கணும்.

கணேஷ் - நமக்கு இங்கிலிபீஸு படம்னாலே ஆவறதில்ல!

உஷா - உங்க கமெண்ட்டினாலேதான் இந்தப்பதிவே.. எனவே ஆழத்தின் காரணம் நீரே! சுட்டபடங்களையும் என் அறிவுக்கு சுட்டிக்காட்டுங்களேன்!

G.Ragavan said...

டோண்டு சொன்னது மிகச்சரி. தில்லானா மோகனாம்பாள் புத்தகம் படித்தவர்களுக்குத்தான் அதன் திரைவடிவம் எப்படி சீராக இருக்கிறது என்ற ஆழம் புரியும். புத்தகமாக இருந்து படமாக வந்து வெற்றி பெற்ற படங்களில் அதுவும் ஒன்று.

மலைக்கள்ளனை விட்டு விட்டீர்களே. நாமக்கல் கவிஞரின் கதை. அதைத் திரைப்படமாக எடுத்து வெற்றி காட்டினார்களே.

கள்வனின் காதலியும் படமாக வந்தது. ஆனால் வெற்றி பெற்றதா என்று தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

சிறையும் மிகச்சிறந்த உதாரணமே. பொதுவில் சொன்னால் நாவலை அப்படியே படமாக்க முடியாது. மாற்றங்கள் தேவை.

பார்த்திபன் கனவில் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா? நாவலின் போக்கை அப்படியே படமாக்கியிருக்கக் கூடாது.

ரங்காராவ்தான் சாமியார் என்று படம் பார்ப்பவர்களுக்குச் சொல்லி விட்டு, அவரை மற்றவர்கள் கண்டு பிடிக்கின்றார்களா என்ற வகையில் கொண்டு சென்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கும். இந்த உத்தியை சத்யஜித்ரே தன்னுடைய ஷோனோர் கெல்லா படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

புத்தகத்தில் யார் அவர் என்று இறுதியில்தான் தெரியும். ஆனால் படத்தில் முதலிலேயே பார்ப்பவர்களுக்குத் தெரிந்து விடும். மற்றவர்கள் கண்டுபிடிக்கின்றார்களா என்ற விறுவிறுப்பில் படம் வேகமாக ஓடும். நான் படித்தும் பார்த்தும் ரசித்த கதை அது.

rajkumar said...

இதைக் குறித்த ஒரு பதிவை நான் வலைப்பூ ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது எழுதியிருந்தேன்.

புவனா ஒரு கேள்விக்குறி படம், மகரிஷி எழுதிய மாலைமதி நாவலை வைத்து எடுக்கப்பட்டது. அதில் வரும் சம்பத் கதாபாத்திரத்திற்கான படமும், ரஜினியின் மேக்கப்பும் ஒன்றாக இருந்தது.

அன்புடன்

ராஜ்குமார்

பினாத்தல் சுரேஷ் said...

உங்கள் கருத்துக்கு நன்றி ராகவன்.

கள்வனின் காதலி - சிவாஜி, பானுமதி நடித்ததுதானே? கதையும் படமும் தனித்தனியாக பார்த்ததால், ஒப்புநோக்க முடியவில்லை.

பார்த்திபன் கனவு பற்றி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால், கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்குமே?

நன்றி ராஜ்குமார். அந்த வலைப்பூ சுட்டி தர முடியுமா? புவனா ஒரு கேள்விக்குறி புத்தகத்தை மையமாகக் கொண்டது என்பது எனக்கு புதுத்தகவல். அதற்கும் நன்றி.

முகமூடி said...

அடேங்கப்பா... இதுவரக்கும் 6,7 தமிழ்ப்படம் எடுத்திருக்காங்களா பொஸ்தகத்த வச்சி... நான் இதுவரைக்கும் கதையோட ஒரு படமும் வந்ததில்லைன்னு இல்ல நினைச்சிகிட்டு இருந்தேன்.

Jayakumar said...

படத்தைப் பார்த்துவிட்டு புத்தகத்தைப் படித்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா.
"The Mosquito Coast" என்ற படத்தைப் பார்த்துவிட்டு மிக உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக அதன் மூலப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தில் பாத்திரப் படைப்பு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சில பக்கங்களுக்கு மேல் என்னால் அதைப் படிக்கமுடியவில்லை. :-(

rv said...

என்ன அநியாயமா இருக்குது!

பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன் ஒருத்தர் கூட "LOTR" பத்தியும் எங்கள் அண்ணன் ஜாக்ஸனைப் பத்தியும் வாயே திறக்க மாட்டேங்கறீங்க.

அப்படியே ஹாரி பாட்டரையும் சேத்துக்குங்க. முக்கியமா மூணாவது படம்.

---
சரி, ஆங்கிலம் வேணாம். இந்த இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் பொஸ்தகத்திலேர்ந்து வரலியா??

அப்புறம், ரீசண்டா பொன்னியின் செல்வன்னு சொல்லிட்டு ஒரு படம் வந்துச்சே, அது கல்கின்னு ஒருத்தர் எழுதுன பொஸ்தகம் இல்லியா?

பினாத்தல் சுரேஷ் said...

முகமூடி,

புத்தகத்தை மையமாகக்கொண்ட திரைப்படங்கள்னுதானே பேசறோம், கதையைப்பத்தியே இல்லையே:-))

ஜேகே

னீங்கள் சொன்ன அனுபவம் (கொடுமை!) எனக்கு "the Lost World" பார்த்துவிட்டு, பின் படித்தபோது ஏற்பட்டது! இரண்டுக்கும் சம்பந்தம் மைசூருக்கும், மைசூர் போண்டாவுக்கும் உள்ள சம்பந்தம்தான்.

ராமனாத(ர்)ன், (என்ன அடிக்கடி மாத்திக்கறீங்க?)

இந்த பீட்டர் சமசாரம் எல்லாம் எனக்குத் தெஇயாதுன்னுதான் முதல்லெயே போட்டிருக்கெனே!

நான் உங்கள் விரோதியாக இருந்தால் சொல்லக்கூடிய அட்வைஸ் - //அப்புறம், ரீசண்டா பொன்னியின் செல்வன்னு சொல்லிட்டு ஒரு படம் வந்துச்சே, அது கல்கின்னு ஒருத்தர் எழுதுன பொஸ்தகம் இல்லியா?// இதை பொன்னியின் செல்வன்னு யாஹூ க்ரூப் ஒன்னு இருக்கு - அங்கே போய் சொல்லுங்க! விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!

முரளிகண்ணன் said...

இப்போ எடுத்தா யார் யார் ந்டிக்கலாம்னு ஒரு லிஸ்ட் குடுங்க தலைவா

Bruno_புருனோ said...

//புத்தகத்தை மையமாகக்கொண்ட திரைப்படங்கள்னுதானே பேசறோம்,//

எனக்கு திரிந்து புத்தகத்தை போலவே விறுவிறுப்பாக இருந்த படம் ஏர்போர்ட்.

புத்தகத்தை(சுஜாதாவின் ஒரு நாவல்) வைத்து எடுத்த படம் என்பதை கூறாததாலா என்று தெரியவில்லை :) :) :)

பினாத்தல் சுரேஷ் said...

முரளி, நன்றி. பொன்னியின் செல்வன் பத்தி மட்டும் கேக்காதீங்க! அழுதுடுவேன்.

ப்ரூனோ, ஏர்போர்ட் படம் முதல் பாதி மட்டும்தான் ஜேகேயின் உருவல் (ரொம்பநாள் ஆச்சு பாத்து) அதுவும் வெளிப்படையாக சொல்லப்படாதது.

மலையாள டைரக்டர் என நினைக்கிறேன். அந்தப்படம் வந்த காலத்தில் இந்த மாதிரி பேர் சொல்லாமல் சுட்ட படங்கள் நிறைய.. ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ் மக்கள் என் பக்கமாக ஆனது (மூல மலையாளம் பெயர் தெரியாது), டே ஆப் த ஜேக்கல் சில பகுதிகள் சுடப்பட்டு ஆகஸ்ட்1 ஆனது.. அவர்கள் கலாச்சாரமே அதுதான் போல -- அரைகுறையாகத் திருடினால் திருடனல்ல என்றுநினைக்கிறார்கள் போலும் -- இந்தக்காரணங்களினாலேயே ஜேகே விட்டுப்போய்விட்டது!

Anonymous said...

//ப்ரூனோ, ஏர்போர்ட் படம் முதல் பாதி மட்டும்தான் ஜேகேயின் உருவல் (ரொம்பநாள் ஆச்சு பாத்து) அதுவும் வெளிப்படையாக சொல்லப்படாதது.//

ஆமாம். சொல்லாமலேயே "சுட்டு"விட்டார்கள் (சுட்டு = shooting the movie !!!)

//ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ் மக்கள் என் பக்கமாக ஆனது (மூல மலையாளம் பெயர் தெரியாது),//

கதையில் சில மாறுதல்கள்
1. இறுதி காட்சி வேறு
2. சிட்னி சில்டனில் கதையில் நாயகிக்கும் மொரட்டிக்கும் உள்ள உறவு வேறு. மக்கள் என் பக்கத்தில் அம்பிகாவுக்கும் சத்யராஜிற்கும் உள்ள உறவு வேறு (தமிழ் பண்பாடு !!!)

// டே ஆப் த ஜேக்கல் சில பகுதிகள் சுடப்பட்டு ஆகஸ்ட்1 ஆனது.. //

ஆகஸ்ட்1 என்ன படம் என்று தெரியவில்லை. ஆனால் டே ஆஃப் த ஜேக்கலில் உள்ள படி காலை மடக்கி கட்டி, ஊன்றுகோலை தூப்பாக்கியாக மாற்றிய ஒரு முரளி படம் பார்த்தேன் (பெயர் மறந்து விட்டது)

 

blogger templates | Make Money Online