Nov 16, 2005

அலுவலகக்கூட்டத்தில் பேசப்போகிறீர்களா? Tips (15 Nov 05)

ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை - அட்வைஸ்! எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலோனாருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும், இப்படி ஒரு பதிவு எழுதத் துணிந்தேன்.

முக்கியமான பணியில் இருக்கும் அனைவருக்கும் குறைந்தது ஒருமுறையேனும் தங்கள் பணியைப்பற்றியோ, நிறுவனத்தயாரிப்புகளைப்பற்றியோ விளக்கம் அளிக்கும் சூழ்நிலை அமையக்கூடும். எனக்கு எல்லா நாளும் இதே தொழில் என்பதாலும், எந்த முன் அனுபவமோ, கற்றுக்கொடுப்பவர்களோ இல்லாததால் அடிபட்டு அடிபட்டுதான் ஓரளவாவது கற்றுக்கொள்ள முடிந்தது.

முறையான பள்ளி கல்லூரி வகுப்புக்களில், ஆசிரியர் என்பவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு உயர்ந்த ஸ்தானம் அளிக்கப்பட்டுவிடுகிறது. வயது, அனுபவம், அறிவு ஆகியவை சமமாகவே இருக்கக்கூடிய பயிற்சி வகுப்புகளிலும் விளக்க உரைகளிலும் அந்த ஸ்தானத்தையும், எதிரிலுப்போர் கவனத்தையும் ஈர்த்து, சொல்ல வந்த விஷயங்களை தெளிவாகச் சொல்வது, அதுவும் மிகக்குறைந்த நேரத்துக்குள் என்பது அவ்வளவு சுலபமில்லை.

எனவே, நான் கற்ற, கேட்ட, பார்த்த மற்றும் படித்த அனுபவங்களை பொதுவில் வைப்பதால் யாரேனும் பயன்பெறக்கூடும் என்ற எண்ணத்தினால் விளைந்ததே இந்தத் துணிச்சல்!
ஆலாபனை போதும், விஷயத்துக்கு வருகிறேன்.

1. தயார் செய்துகொள்ளுங்கள் - இரண்டு நிமிடமோ, இரண்டு மணிநேரமோ.. சொல்லப்போகும் விஷயத்தை மனதில் ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான குறிப்புகளை தனியாக எழுதிவைத்துக்கொள்வது உதவும். ஒத்திகை பார்க்க வேண்டாம். நடுவில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் பேச்சு திசை திரும்பிவிடும் சாத்தியம் உள்ளது. எதை முதலில், எதை நடுவில், எதைக் கடைசியில் சொல்ல வேண்டும் என்ற agenda மட்டும் போதும்.

2. எடுத்த எடுப்பில் திடுதிப்பென ஆரம்பிக்காதீர்கள். சுருக்கமாக ஒரு சுய அறிமுகத்துடன் ஆரம்பியுங்கள் - பிறப்பும் வளர்ப்பும், இளமையும் கல்வியும் போன்ற கட்டுரைகள் இல்லை - உங்கள் பெயர், பணி நிலை, சொல்லப்போகும் கருத்துடன் உங்கள் அனுபவம் - இது போதும்.

உங்கள் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என எதிர்பார்க்காதீர்கள் - ஒருமுறை ஒரு நபருடன் அரை மணி நிறுவனத்தின் நிலை பற்றி கதை அடித்து முடித்த பிறகு நான் "உங்கள் பெயர் என்ன" எனக்கேட்டேன் - அவர் புருவம் சுருங்கி, பெயர் கூறி, நான் இங்கே வைஸ் ப்ரெஸிடென்ட்டாக வேலை பார்க்கிறேன் என்றார்!

சொல்லப்போகும் கருத்துடன் உங்கள் அனுபவம் - இது மிகவும் அவசியம். சொல்பவரின் தகுதியே சொல்லப்படுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

3. எந்த நிமிடத்திலும் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். நீங்கள் உணர்ந்தால் மட்டும் போதாது, உங்கள் சபைக்கும் கதை அடிக்கிறான்(ள்) என்ற எண்ணம் தோன்றிவிடக்கூடாது.

கதை அடிப்பதில் தப்பு இல்லை - ஆனால், கதை உங்கள் பேசுபொருளுடன் சம்மந்தம் உள்ளதாக இருக்கட்டும். எப்படியாவது ஒரு ஜோக்கை ஒட்டவேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைத்தும் ஆண்களே உள்ள கூட்டமாக இருந்தாலும், அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்குகள் வேண்டவே வேண்டாம். அவற்றுக்குதான் சாயங்கால பார்ட்டிகள் இருக்கிறதே! சில குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் எல்லாக்கூட்டத்திலும் இருப்பார்கள். கதை அடித்து அவர்களின் வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீர்கள்.

இன்றைக்கு ரொம்ப நீளமாகப் போய்விட்டது, மீண்டும் தொடர்கிறேன் - உங்கள் விருப்பம் இருந்தால்.

பி கு: துறவறம் கொண்டு விட்டதாகக் கூறினேர்களே என்று புரட்சிப்பினாத்தலாரைக் கேட்டதற்கு - "அவங்களை நிறுத்தச் சொல் - நான் நிறுத்தறேன்"றாரு!

6 பின்னூட்டங்கள்:

அன்பு said...

பயனுள்ள பதிவு, கண்டிப்பாக தொடருங்கள். நன்றி.

ilavanji said...

தொடருங்கப்பு... நல்லாத்தான் இருக்கு..

2. அதுக்கப்பறம் VP கிட்ட கிடைச்ச ஆப்பைப்பற்றி ஒன்னும் சொல்லலியே! :)

Unknown said...

//எந்த நிமிடத்திலும் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும்//

உணரமக்கூட பேசுவாங்களா என்ன?

பினாத்தல் சுரேஷ் said...

அன்பு, இளவஞ்சி, நன்றி.

பழைய ஜோக் டைப்லே சொல்லறதுன்னா, அந்த VP கிட்டே நான் கேட்டேன், "என்னை யாருன்னு தெரியுமா?".. அவர் தெரியாதுன்னு சொல்ல, "அப்பா தப்பிச்சேன்"னு ஜூட்..

உண்மையிலே ஒண்ணுமே நடக்கலே.. அதை ஒரு மேட்டராவே அவர் எடுத்துக்கலே.

நன்றி அப்டிப்போடு. நான் சொல்ல வந்தது என்னன்னா, சொல்ல வந்த விஷயத்தை விட்டு ரொம்ப தூரம் போயி கதை அடிக்கறதுனாலே எதைப்பத்தி பேசறோம்னே மறந்து போயிட வாய்ப்பு இருக்குன்னு!

ramachandranusha(உஷா) said...

பி.கு பார்த்துவிட்டு நிம்மதியடைந்தேன் :-)

வடுவூர் குமார் said...

இப்படிப்பட்ட ஆலோசனைக்கெல்லாம் 5 பேர் தான் கமெண்டா? நல்ல விஷயத்துக்கு மதிப்பு இல்லையோ! 10 வருடம் கழித்து கண்ணில் படுகிறது!

 

blogger templates | Make Money Online