Nov 17, 2005

அலுவலகக்கூட்டத்தில் பேசப்போகிறீர்களா? Tips - 2 (16 Nov 05)

ஏகோபித்த ஆதரவு இருப்பதால் (?!) சரி சரி எதிர்ப்பு இல்லாததால்..தொடர்கிறேன்.

4.கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள் - கற்பிக்கக்கூடிய தருணங்கள் (Teachable Moments) எல்லா நேரங்களிலும் அமைந்து விடாது

புதிதாக செல் தொலைபேசி வாங்கியவருக்கு அதன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தல் சுலபம், அவர் கற்கத்தயாராக இருப்பார். மாறாக பால்-பாயிண்ட் பேனா உபயோகப்படுத்துபவரிடம் அதன் நுனி ஏன் வளைந்து இருக்கிறது, அதில் எத்தனை பாகைகள் இருக்கின்றன என்று விளக்க ஆரம்பித்தால் அவருக்கு ஆர்வம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. .

Teachable Moments-ஐ உருவாக்குவது எப்படி? உங்கள் விளக்கத்தால் எதிரில் இருப்போருக்கு ஏற்படக்கூடிய நேரடிப்பலன்களை முதலில் சொல்லுங்கள். விளம்பரங்கள் போல ஒரு பயமுறுத்தலைஅடிநாதமாகக் கொள்வது ஒரு உத்தி.(க்ளோஸ்-அப் பயன்படுத்தாவிட்டால் எந்தப்பெண்ணும் பேசமாட்டாள், அழகு க்ரீம் இல்லையென்றால் கல்யாணம் ஆகாது..இத்தியாதி..) . (முன்பெல்லாம் ஒரு பழுதைச் சரிபார்ப்பதற்கு மாதங்கள் கூட ஆகலாம் - இப்போது, நான் சொல்லப்போகும் தொழில்நுட்ப வளர்ச்சியால், நிமிடங்களில் பழுதை நீக்கிவிடலாம் - என்பது என் பழகிய ஆரம்ப வரிகள்.)

இந்த உரை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கானது - உங்கள் வளர்ச்சியும் அதன் பக்க விளைவாய் இருக்கலாம் - ஆனால் முதல் முன்னுரிமை அவர்கள் தெவையே என்பதை உணருங்கள் - மேலும் முக்கியமாக நீங்கள் உணர்ந்துள்ளீர் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.

5. நீங்கள் மட்டுமே பேசாதீர்கள் - பெரும்பாலானவர்களுக்கு, அதிலும் உயர்பதவிகளில் இருப்பவர்க்கு, கேட்டு பழக்கம் கிடையாது! சின்னச் சின்ன கேள்விகள் கேட்பதன் மூலம், அனைவரையும் ஒருமுறையாவது பேச வையுங்கள்.

பலவிதமான கேள்விகள் கேட்கலாம் - திறந்த கேள்விகள் (பல பதில்கள் இருக்கலாம்), மூடிய கேள்விகள் (ஒரே சரியான பதில்தான்), அடிநிலைக்கேள்விகள் (பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த பதில்கள்), உயர் நிலைக்கேள்விகள் (பயிற்சிக்குப்பின்னரே விடை அளிக்க முடியும்)..
உரையின் ஆரம்பத்தில், மூடிய, அடிநிலைக்கேள்விகளாகக் கேட்டு பங்குபெறும் உற்சாகத்தை அனைவருக்கும் ஏற்படுத்துங்கள். உரையில் தொய்வு விழுவது போலவோ, யாரும் தூங்குவது போலவோ (நிச்சயம் நடக்கும்!) உணர்ந்தால் திறந்த கேள்விகள் மூலம் அனைவரையும் அதிகம் பேசவைக்க முடியும். பொதுவான கேள்விகளாய் இருந்தாலும், சொல்லப்படும் விஷயத்துடன் தொடர்பு உள்ளதாகவே இருக்க வேண்டும். (இல்லாவிட்டால் கதை அடிப்பதாகத்தான் கொள்வார்கள்).

கேள்விக்கான பதிலைப் பெற்றதும் ஒருமுறை அந்தப்பதிலை அவர்கள் வார்த்தைகளிலேயே திருப்பிச்சொல்லுங்கள் - அவர்கள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டனர் என்பதை உணர்த்த.அதிகம் பேசாத, பங்கு பெறாதவர் கூட உற்சாகம் பெறுவர். அதற்குப்பின்னர் பொருத்தமான பதிலை உங்கள் வார்த்தையில் கூறுங்கள்.

6. செயற்கை வேண்டாம் - மாண்புமிகு பொது மேலாளரே, அவையில் அமர்ந்திருக்கும் சான்றோரே ஆன்றோரே.. இதெல்லாம் பொது மேடைப்பேச்சுக்கு உதவலாம் - இங்கு (பெரும்பாலும்) இல்லை. அதற்காக அனைவரையும் சிறுவர்களாக நினைத்து மரியாதை இன்றியும் நடத்த வேண்டாம் (பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - இங்கும் 100% பொருந்தும்) - எல்லோரின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள் - எங்கே இருந்து நீங்கள் ஒரு புது விஷயம் கற்க முடியும் என்பதை ஒரு போதும் சொல்ல முடியாது. இங்கே என் ஒரு அனுபவம், இன்றும் என் பெரும்பாலான வகுப்புகளில் நான் விவரிக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூருவது பொருத்தமாக இருக்கும்..

ஒரு பெரிய இயந்திரத்தின் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாமல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்க, நான் எல்லா சாத்தியங்களையும் பரிசொதித்து தோல்வி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், டீ கொண்டுவரச்சொல்லி ஒரு சிறு பையனை அனுப்பினேன். திரும்பி வரும்போது அவன் கோபமாக வந்தான் - "இனிமே நான் டீ வாங்கப் போக மாட்டேன் - அங்கே வழியிலே டீஸல் டேங்கிலிருந்து எண்ணெய் வழிகிறது - என் மேலெல்லாம் கொட்டிப்போச்சு" என்றான் - அடுத்த இரு நிமிடங்களில் லீக்கேஜை நிறுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்து விட்டோம்!

இன்னிக்கு அவ்வளவுதான் - இன்னும் ஒன்றிரண்டு பகுதிகளுடன் முடித்து விடுவேன்!

9 பின்னூட்டங்கள்:

மாதங்கி said...

பயனுள்ள குறிப்புக்களை தருகிறீர்கள் சுரேஷ்.

Muthu said...

முக்கியமான அறிவுரை என்னவென்றால் கூட்டத்தில போய் பினாத்த கூடாது.(இதை நீங்க சொல்லமுடியாது என்பதால் நான் சொல்லிவிட்டேன்).ச்சும்மா சொன்னேன். நல்லா இருக்கு.கன்டினியூ பண்ணுங்க.

ஜெ. ராம்கி said...

Suresh,

Good effort. Keep it up please!

அன்பு said...

என்ன இன்னும் ஒண்ணு ரெண்டுண்ணு பினாத்தறீங்க...
(இதுக்கெல்லாம் எங்கள கேள்வியே கேக்கமுடியாது:)

இவ்ளோ கால அனுபவத்தை அப்படி முடிச்சுறாதீங்க... தொடரவும். நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மாதங்கி, முத்து, ரஜினிராம்கி, அன்பு.

முத்து, பெனாத்த்க்கூட பெனாத்தலாம் - If that is the Subject:-))

Boston Bala said...

நன்றாக இருக்கிறது!

வெளிகண்ட நாதர் said...

நல்லா சொல்லிருக்கீங்க, கல்லூரியில மேடை பேச்சு, நாடகம்னு ஏதும் நிறைய பண்ணிருக்கீங்களா!

Boston Bala said...

I liked these tips too: The Craig Web Experience: Presentation Tips

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி Boston Bala, வெளிகண்டநாதர்.

Thanks for the link Bala, found it more useful and concise too.

 

blogger templates | Make Money Online