Nov 7, 2005

To Kill a Mockingbird -புத்தகப்பார்வை

மு கு or Disclaimer : இது ஒரு வழக்கமான பினாத்தல் பதிவு அல்ல.

எப்போது நாம் ஒரு புத்தகத்தையோ அல்லது வேறெந்த புனைவையுமோ பாராட்டுகிறோம்?
கதையில் உள்ள மாந்தர்களுடன் நம்மை அடையாளம் காண முடியும்போது, அவர்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள முடியும்போது, அவர்களின் செயல்களின் நியாய அநியாயங்களைப் பற்றி தர்க்கிக்கும்போது தான் நம்முள் எந்த ஒரு புனைவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தன்னைக் காண்பது என்பது சில நேரங்களில் மிக எளிதாக அமைந்துவிடும். தமிழ்நாட்டின் தாய்க்குலம் கஷ்டம் மட்டுமே அனுபவிக்கும் மெகா சீரியல் நாயகிகளிடமும், தங்களைக் கொடுமைப்படுத்திய கணவர்களையும், மாமியார்களையும் தொடரிலும் பார்க்கும்போது மிக எளிதாக அதில் ஒன்றிவிடுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் கல்லூரி / காதல் திரைப்படங்களில் மாணவர்கள் எளிதாக ஒன்ற முடிவதால்தான் பல படங்கள் அப்போது வெளியிடப்படுகின்றன. வேலை நிமித்தமாக பல ஊர்கள் / நாடுகள் சுற்றியதால், இரா முருகனின் அதே போன்ற கதாபாத்திரங்களுடன் என்னால் முழுமையாக ஒன்ற முடிந்தது.

சில நேரங்களில், கதை மாந்தர்களுடன் முழுமையாக தம்மை அடையாளம் காண முடியாவிடினும், ஒரு பகுதியில் மட்டுமே ஒத்துப்போனாலும், நம் தொல்லைகளுக்கு எளிய/ வலிய தீர்வு சொல்லும் பாத்திரங்கள் வெல்கின்றன. தெருவில் தினம் சந்திக்கும் லஞ்சப்பேய்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பேராசிரியரும், சுதந்திரப் போராட்டத் தாத்தாவும் எம்.எல்.ஏவின் வீட்டில் மாடுகளைக்கட்டிய பால்காரனும் நம்மை ஈர்த்தது இதனால்தான்.

வெகு சில கதைகள் மட்டுமே, நம்முடைய தினக் குணாதிசயங்கள் எதுவுமே இல்லாத பாத்திரங்களுடன் இருக்கும்போதும், ஏதோ ஒருவகையில் நம்மை அப்பாத்திரங்களுக்காக சிரிக்க வைத்து, கண்ணீர் விட வைத்து கோபிக்கவைத்து -- எல்லாம் செய்யும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நான் பார்த்திராத ஊர்களில் பயனம் செய்து, கற்பனைக்கும் எட்டாத பாத்திரங்களுடன் பழகினாலும், வந்தியத்தேவன் கடலில் விழுந்து எழும்போது என் உடலிலும் உப்புத்தண்ணீர் பட்ட உணர்வு ஏற்படுவது எப்படி?

எங்கேயோ அமெரிக்காவில் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்த ஸிந்தியா, என் வேலையை ராஜினாமா செய்யும் எண்ணத்தை மாற்றியது எப்படி? (Strong Medicine - Arthur Hailey)

காட்டையே பார்த்திராத நான் அடர்காடுகளில், அதிரடிப்படைக்கு பயந்த சோளகனாகவும் கொஞ்சம் வாழ முடிந்தது எப்படி?

ஆபிரஹாம் லிங்கன் என்ன சொன்னால் என்ன? போர் வந்தால் என்ன? எனக்குத் தேவை என்னுடைய ரசிகர் கூட்டம், அதற்காக என்ன வேன்டுமென்றாலும் செய்வேன் என்னும் ஸ்கார்லெட் ஓ ஹாரா வாக எப்படி என்னை நினைத்துக்கொள்ள முடிந்தது? (Gone with the Wind - Margeret Mitchell)

யோசித்துப்பார்த்தால், இப்படி கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத கதாபத்திரங்கள் உள்ள புனைவுகள்தான் என்னை நீண்ட நாட்கள் பாதிக்கின்றன.

அப்படி ஒரு கதைதான் to Kill a Mockingbird (Harper Lee)

கதையை சுருக்கமாகக் கூறிவிடுகிடுகிறேன்.

1935 வாக்கில், அட்லாண்டாவிற்கு அருகில் இருந்த மேகோம்ப் கிராமத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். வழக்கறிஞர் அட்டிகஸுக்கு கோர்ட்டால் தரப்பட்ட ஒரு வழக்கில், வெள்ளை இனத்துப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு கறுப்பின இளைஞன் குற்றம் சாட்டப் படுகின்றான். ஊர் மக்கள் இதை ஒரு சாதாரண வழக்காகப் பார்க்காமல், வெள்ளையர் VS கறுப்பர் என்று பார்ப்பதால், நீதிக்கு வேலை இல்லாமல் உணர்வுகளுக்கே முதலிடம் தரப்படுகின்றது. வழக்கை நடத்தும் அட்டிகஸ்ஸை கறுப்பர் தோழர் என்று வீட்டுக்குள்ளே பேசிக்கொண்டாலும், வீட்டில் கவனிக்கும் ஊர்ச்சிறுவர்கள் அட்டிகஸ்ஸின் குழந்தைகளை கிண்டல் செய்யத் தலைப்படுகின்றனர். வாதங்களால் பலாத்காரம் நிகழவே இல்லை என்று அட்டிகஸ் நிரூபித்து விட்டாலும், வெள்ளையர் மட்டுமே அடங்கிய ஜூரி கறுப்பு இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. வழக்கில் வென்ற போதிலும், அவமானப்படுத்தப்பட்டதாய் உணரும் (பலாத்கரப் படுத்தப்பட்டதாய் கூறப்பட்ட)பெண்ணின் தந்தை, அட்டிகஸ்ஸின் குழந்தைகளை பயமுறுத்த முயலும்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்துவிடுகிறான். கதை என்று பார்த்தால் இவ்வளவுதான்.

ஆனால், கதை முழுக்க முழுக்க அட்டிகஸ்ஸின் ஆறு வயதுப் பெண் குழந்தை வாயிலாகவே கூறப்படுகிறது. ஆரம்பப் பக்கங்களிலேயே, நானும் ஜீன் லூயிஸ் ஃபிஞ்ச் (ஸ்கவுட்) ஆக மாறிவிடுகிறேன்.

  • பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கிறேன்.
  • அண்ணனுடன் சண்டை போடுகிறேன் - பெரியவர்கள் ஏன் அவன் பக்கமே இருக்கிறார்கள் என கோபிக்கிறேன்.
  • பக்கத்தில் இருக்கும் மர்ம வீட்டில் உள்ளேயே அடைந்து கிடக்கும் பூ ராட்லீ(Boo Radley) யை வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் அண்ணனுக்கும், தோழன் டில் (Dill)லிற்கும் துணை நிற்கிறேன்.
  • என் இயல்பை மாற்றி ஒரு சிறந்த பெண்மணியாக என்னை மாற்றிவிட முயற்சிக்கும் அத்தைமேல் வெறுப்பு கொள்கிறேன்.
  • வெள்ளையரின் சர்ச்சுக்கும், கறுப்பர்களின் சர்ச்சுக்கும் வழிமுறைகளில் உள்ள வித்தியாசங்களைக் கண்டு வியக்கிறேன்.
  • "Nigger Lover" என்று கத்தி என்னை வெறுப்பேற்றும் பள்ளி சகாக்களிடம் மல்லுக்கு நிற்கிறேன்.
  • அதிசயமாக வந்த பனிமழையில் நனைகிறேன்.
  • அப்பாவின் அலுவலகத்திற்கு அழையாமல் சென்று, அவரைக் கொல்ல வந்தவர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்றுகின்றேன்.
  • அப்பாவின் அசைக்க முடியாத வாதத்தைக் கேட்டும் அதற்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் ஜூரிகளைக்கண்டு குழம்புகிறேன்.
  • எப்போதும் வீட்டை விட்டு வெளிவராத பூ (Boo) என்னைக்காப்பாற்ற மட்டும் வெளியே வந்ததற்காக நன்றி செலுத்துகிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என் அறியாமையை இழக்கிறேன். "வயதான பிறகு கற்றுக்கொள்ள என்ன இருக்கப்போகிறது - அல்ஜீப்ராவைத்தவிர?"

கதையின் இடை இடையே வரும் தத்துவ விசாரங்கள் மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சிறுமியின் அறிவுக்கு ஏற்ப ஆராய்வது நிச்சயமாக பெரியவர்களை யோசிக்கச் செய்யும்.

உங்களை ஒருமுறை படிக்கப் பரிந்துரைக்கிறேன், நிச்சயமாக, நீங்கள் பலமுறை படிப்பீர்கள்.

9 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் said...

அட,

இந்தப் புத்தகத்தைத்தான் மகள் ஸ்கூலில் படிக்கறப்ப அசைன்மெண்ட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருந்தா. கூடவே படமும் வாங்கிவந்து பார்த்தா. எங்கியாவது அவளோட ரூம்லே இந்தப் புத்தகம் இருக்கும். கிடைச்சால் படிக்கறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கு நன்றி துளசி அக்கா.

பாத்தீங்களா, உங்க கிட்டே இருக்கிற புக்கைப் பத்தி விமர்சனம் போட்டிருக்கேன். சீக்கிரம் படிங்க.

dondu(#11168674346665545885) said...

பதிவைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டேன். சமீபத்தில் 1963-ல் படித்த புத்தகம், அதற்கு அடுத்த ஆண்டு திரைப்படமும் பார்த்தேன். கிரகரி பெக் மிக அருமையாக அட்டிகஸாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த நடிகரே, எனக்கு மிகவும் பிடித்த பாத்திரத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

மனதை தொட்ட இடங்கள் பல. அவற்றில் சில இங்கே.

1. கோர்ட்டில் ஒரு செஷன் முடிந்து எல்லோரும் வெளியே செல்வர். மாடியில் உள்ள சீட்டில் அமர்ந்து ஸ்கௌட் தூங்கி விடுவாள். திடீரெனா அவள் தட்டி எழுப்பப்படுவாள். "Wake up and stand up, your father is passing" என்று அவளிடம் கூறப்படும். கீழே அட்டிகஸ் வெளியே செல்ல, எல்லா கருப்பர்களும் எழுந்து நிற்பார்கள்.
2. ஜிம்மையும் ஸ்கௌட்டையும் பூ ராட்லி காப்பாற்றும் நிகழ்ச்சி.
3. வெறி நாயை அட்டிகஸ் ஒரே தோட்டாவில் சுட்டு வீழ்த்தும் காட்சி.
4. கொலை வழக்கிற்கான மற்ற காட்சிகள்.

கூறிக்கொண்டே போகலாம். நான் மேலே சொன்ன காட்சிகள் புத்தகத்திலும் சரி, திரைப்படத்திலும் சரி பிரமாதமாக வந்திருந்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

நீண்ட நாட்களுக்குப் பின் என் பதிவில் கருத்திடும் டோண்டுவுக்கு நன்றி. நான் கதை மட்டுமே படித்தேன், சமீபத்தில் 1993ல்:-) படம் பார்க்கவில்லை.

ramachandranusha(உஷா) said...

பத்திரமா வெச்சிருங்க வந்து வாங்கிக்கிறேன். விரும்பி படிச்ச கதைய படமா பார்க்கிற தைரியம் எனக்கு எப்போதும் கிடையாது :-)

பினாத்தல் சுரேஷ் said...

உஷா,

குழந்தைகள் திருவிளையாடலில் முதல் 15 பக்கங்கள் போயே போச்சு.. எங்கேயாவது தெடிகிட்டு இருக்கேன்.

உங்களுக்கு இல்லாமயா?

Ganesh Gopalasubramanian said...

படித்துவிட்டு பதிலளிக்கிறேன். நண்பன் ஒருவன் ஏற்கனவே சொல்லியிருந்தான்.
கூடவே (Strong Medicine - Arthur Hailey) இதையும் படிக்க வேண்டும்

பினாத்தல் சுரேஷ் said...

படிங்க கணேஷ், படிச்சுட்டு சொல்லுங்க

உஷா, //விரும்பி படிச்ச கதைய படமா பார்க்கிற தைரியம் எனக்கு எப்போதும் கிடையாது// இதுக்கு பதிலா ஒரு பதிவே போட்டுட்டேன்.

Anonymous said...

சுரேஷ்,

புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள். அடுத்த முறை புத்தகக் கடையில், நூலகத்தில் இந்தப் புத்தகம் நிச்சயம் என்னை அழைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

 

blogger templates | Make Money Online