Dec 5, 2005

சுந்தர ராமசாமி - சில கேள்விகள் (வி ப) - 05 Dec 05

சுந்தர ராமசாமி மறைந்து ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே, இப்போது இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களில் பலருக்கும் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரையின் சுவாரஸ்யமே, எனக்கு சு.ரா வைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது என்பது தான். சு.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுந்தர ராமசாமியை எனக்கு மிகக் கொஞ்சமே தெரியும். அவரின் எந்தப் படைப்புகளையும் நான் இதுவரை முழுமையாக வாசித்திருக்கவில்லை.

எண்பதுகளில் அவருடைய "ஜே.ஜே சில குறிப்புகள்" உச்சத்தில் பேசப்பட்டபோது நான் ப்ளஸ் டூ மாணவன். ஆனாலும், அப்போது அந்த நாவலின் தலைப்பும், அதை எழுதியவரின் பெயரும், அது புதுமையான நாவல் (அப்போதெல்லாம் நவீனத்துவம் என்ற வார்த்தை அவ்வளவு பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன்) என்று நான் அந்தக் காலத்தில் மதித்த பல பெரிய எழுத்தாளர்கள் கொண்டாடியதும் மனதில் பதிந்து விட்டது. புதுமைகளோடு பரிச்சயம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேனும், சில ஒத்த சிந்தனை உடைய நண்பர்களுடன் அந்த நாவலை படிக்கத் தலைப்பட்டேன். எதுவும் புரியவில்லை. எனவே, அங்கங்கே சில பத்திகளைப் படித்ததோடு அந்த முயற்சி நின்று போய்விட்டது. எனினும், சுந்தர ராமசாமி என்ற பெயரும் அதனுடன் ஸ்லாகிக்கப்பட்ட புதுமையும் மனதில் தங்கிவிட்டன. அதன் விளைவாலேயே "ஒரு புளியமரத்தின் கதை"யும், பசுவய்யா என்பது அவர் தான் என்பதும் கூடத் தெரிந்து இருந்தது.

சு.ரா இறந்து போய்விட்டார் என்ற செய்தியும் அதைத் தொடர்ந்து பல கட்டுரைகளும், அஞ்சலிக் குறிப்புகளும் வந்த நேரத்தில் திடுமென சு.ரா வைப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. நவீனத்துவம் என்ற சொற்பிரயோகமும், "தமிழ் நவீனத்துவத்தின் லட்சிய உருவகம்" அவர் என்றும், அவருடையது " நவீனத்துவ சிந்தனைகளின் இறுக்கங்களில் கட்டுண்டு அலைக்கழிந்த ஆன்மா" என்றும் படிக்கப் படிக்க ஒரு ஆசை என்னை உந்தியது. இந்தத் தருணத்தில் அவரின் நாவல்களைப் படித்து அவரை உள்வாங்கிக் கொள்வதை விட, அவரின் கட்டுரைகளைப் படித்தால் அவரை இன்னும் தெளிவாகவும் விரைவாகவும் இனம் கண்டு கொள்ளலாம் என்று பட்டது. அதற்கு வாகாய், மதுரையில், தீபாவளி ரம்ஜான் விடுமுறைகள் மற்றும் மழை போன்ற தடைகளையும் மீறி, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திறந்திருந்த ஒரே புத்தகக் கடையில் அவரின் "ஆளுமைகள் மதிப்பீடுகள்" என்னும் முழுக் கட்டுரைத் தொகுப்பு 'சட்'டெனக் கிடைத்தது. எனக்கு மிகுந்த சந்தோஷம். கிட்டத்தட்ட எழு நூறு பக்கங்கள் கொண்ட முழுத் தொகுப்பு. எல்லாம் படிக்க முடியவில்லை ( நமக்கு அலுவலகம் என்று ஒன்று உள்ளதே??). பின்னர், நவம்பர் மாத உயிர்மை இதழின் அட்டையில் சு.ரா வின் புகைப்படத்தைப் பார்த்ததும் அதையும் வாங்கிப் படித்தேன். 'குமுதம் தீரா நதி'யில் அஞ்சலிக் கட்டுரைகள் வந்திருந்தன. இவற்றைப் படிக்கப் படிக்க சு.ரா என்றொரு பிம்பம் மனதில் துலங்கியது. இப்படிப்பட்ட கட்டுரைகளின், அஞ்சலிக் குறிப்புகளின் நோக்கமே அதுதான், இல்லையா??

அதிலும், உயிர்மையில் ஜெயமோகன் எழுதி இருக்கும் கட்டுரை நாற்பது பக்கத்திற்கும் மேலே (சு.ரா ஜீவாவைப் பற்றி எழுதிய கட்டுரை சுமார் பத்துப் பக்கம் தான்). ஒரு படைப்பாளியின் ஆளுமையை நிச்சயம் பக்கக் கணக்கை வைத்து எடை போட முடியாது தானே? ஜெயமோகனின் அந்தக் கட்டுரை சு.ரா வின் பல முகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருந்தது என்னவோ மிக மிக உண்மை. ஜெயமோகன் தவிர, மனுஷ்ய புத்திரன், சுகுமாரன், கோகுலக் கண்ணன், சி.மோகன், பெருமாள் முருகன், சங்கர ராமசுப்ரமணியன் என்று பலரின் அஞ்சலிகளைப் படித்ததும் சு.ரா பற்றி தோன்றிய சித்திரம் மிக விசித்திரமானது. புதிரானதும் கூட. மனுஷ்ய புத்திரன் குறிப்பிடுவது போல, அது ஒரு புனிதரின், ஒரு பிசாசின், பேரன்பு கொண்ட ஒரு தந்தையின் மற்றும் ஒரு சதிகாரனின் குணங்கள் கொண்ட ஒரு கலவையான சித்திரம். இவை எதுவும் சு.ரா உருவாக்கிய சித்திரங்கள் அல்ல என்று மனுஷ்ய புத்திரன் தெளிவாகச் சொன்னாலும், இந்த மொத்தக் கட்டுரைகளையும் படித்த பின்னர் ஏனோ அது மரியாதையின் பாற்பட்ட ஒரு அனுசரணை வாக்கியம் மட்டுமே என்றே தோன்றுகிறது.

சு.ரா வின் பல கருத்துக்கள் மற்றும் செய்திகள் படிக்கவும் கேட்கவும் மிக உவப்பாக இருக்கின்றன. அவர் எவ்வளவு பெரிய படைப்பாளி என்பதை அனுமானிக்க அவரின் படைப்புகளை படித்திருக்காவிட்டாலும், இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் இருந்து அவர் பெரிய படிப்பாளி என்பதை மிக எளிதாக்வும் விரைவாகவும் புரிந்து கொண்டு விட முடிகிறது. எமர்சன், ரஸ்ஸல், எலியட், தல்ஸ்தோய் (டால்ஸ்டாயைதான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்), தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ் மன், கசந்த் ஸக்கீஸ், செகாவ், துர்கனேவ், ரோமெய்ன் ரோலந்த், நிகொலாய் கோகல் என்று இன்னும் பலர். இந்தக் கட்டுரைகள் எதிலும் சு.ரா படித்த அல்லது அவரைப் பாதித்த தமிழ்ப் படைப்பாளிகள் பற்றி பெரிதாய் குறிப்புகள் இல்லை (மேல் நாட்டவர்களுக்கு இருப்பது போல). வியாசர் பற்றி பேசியதாய், மலையாள எழுத்தாளர்கள் பற்றி விவாதித்ததாய் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். மற்றபடி, சு.ரா வின் காலத்திற்கு முந்தைய படைப்பாளிகள் பற்றி இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால், சு.ரா, தன் ஆளுமைகள் பற்றி எழுதும் போது சிலரைக் குறிப்பிட்டிருக்கிறார். திருவள்ளுவர், பாரதி, டி.கே.சி, புதுமைப்பித்தன், ரகுநாதன் என்று சிலரை. சம கால எழுத்தாளர்கள் பற்றி பெரிய பாராட்டு எதுவும் இல்லாதபோதும் விமர்சனங்களுக்குக் குறைவில்லை.

பாரதியைக் கூட மற்றவர்களைப் போல 'ஆகா'வென்றெல்லாம் கொண்டாடுவதில்லை. கலை வடிவில் பாரதி தோற்றுவிட்டதாகவும் ஆனால் அவரின் கருத்து தன்னை கவர்ந்திருப்பதாகவும், இருபது கதைகளும் ஐந்து கவிதைகளும் எழுதி இருந்த காலக்கட்டத்தில் சு.ரா விமர்சிக்கிறார். பின்னர், பெரிய படைப்புகளை செய்து முடித்திருந்தபோது பாரதியை பற்றி அவரின் எண்ணத்தில் ஏதேனும் மாற்றம் உண்டானதா என்பது தெரியவில்லை. பாரதி தன்னிடமிருந்த கவிதா சக்தியை முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்திற்கு பயன்படுத்தியிருக்கக்கூடாதா என்ற விசனம் சு.ரா விற்கு இருந்திருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே பாரதியின் வசன நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தபோதும், தமிழில் வசனத்தின் முதல் கலைப் படைப்புகள் காலமும் இயக்கமும் கூடித் தோன்றியது 1930 க்குப் பிறகே என்று தீர்மானமாகச் சொல்கிறார் சு.ரா. அப்படிச் சொல்வதோடு மட்டுமின்றி, இந்த வகை இலக்கியப் பிரக்ஞை கொண்ட முதல் கோஷ்டியில் கூட முக்கியமானவராக புதுமைப்பித்தனையே சுட்டுகிறார் (பாரதி இல்லை). புதுமைப்பித்தனை பல காரணங்களுக்காக அவருக்குப் பிடித்திருந்தாலும், அவரிடமும் 'மிதமிஞ்சியிருந்த சுதந்திரம்' ஒரு குறையே என்று விமர்சிக்கிறார்.

ஒரு புனிதர் என்ற நோக்கில், மனிதனை மனிதனாய் மட்டுமே, எந்தவிதப் புனிதப் பூச்சும் இன்றிப் பார்ப்பது என்ற வகையில் புதுமைப்பித்தன் பற்றிய அவரின் கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடிந்தாலும், தமிழின் இலக்கியப் பிரக்ஞை உள்ள முன்னோடிகளின் பட்டியலில் பாரதியை அவர் மறந்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சு.ரா வின் மாணவர்கள் இதை 'சத்தியத்தின் வாள் வீச்சு' என்று கொண்டாடினாலும் கூட.

சம காலத்தில், அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததை விமர்சித்திருக்கிறார். சுகுமாரனுக்கு தி.ஜா.ரா மீது இருந்த ஒரு பரவச மனோபாவத்தை அசைத்திருக்கிறார். ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று வாதிட்டிருக்கிறார், பிரமிளின் கவிதை அறிவுப்பூர்வமாய் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ந. பிச்சமூர்த்தியும், கு.ப.ரா வும் 'சிந்திக்கப் பயப்பட்டவங்க' என்று சொல்லியிருக்கிறார். வெங்கட் சாமி நாதனின் 'யாத்ரா' இதழை 'அட்டை டு அட்டை அவரே எழுதும் இதழ்' என்று கிண்டலடித்திருக்கிறார். தேவதேவனை ஏற்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு தீவிரமானவை இல்லை என்றாலும், சினிமா பற்றிய அவரது கருத்துக்களும் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை. மலையாளத்தின் ஜான் ஆபிரகாம் படங்களில் சு.ரா வை எதுவுமே கவரவில்லை. தமிழில் மகேந்திரனின் உதிரிப்பூக்களில் "லைப் இல்லை". சினிமா நடிப்பை சிவாஜி கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. எம்.எஸ்.வி யின் இசையில் ஒரு அக ஒழுங்கே இல்லை.

"உன் படைப்புகள் மீதான விமர்சனத்திற்கு எதிர்வினை செய்ய மெனக்கெடாதே" என்று சுகுமாரனுக்கு கற்றுக் கொடுத்த சு.ரா எப்படி அடுத்தவர் மீதான படைப்புகளை இவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழில் சுத்தமான படைப்புகளே இல்லையா? நல்ல சினிமா வந்ததே இல்லையா? அனைவரையும் விமர்சித்த சு.ரா வின் சுய விமர்சனம் யாது? அது பற்றி எங்கேயும் குறிப்புகள் இருக்கின்றனவா? ஜே.ஜே சில குறிப்புகள் அது வெளி வந்த காலக்கட்டத்தில் இதைத் தானே செய்திருக்கிறது? அனைத்தின் மீதும் ஒரு எதிர்வினையையும் விழிப்புணர்வையும்??

ஒரு பெரிய சீடர் குழாமை அரவனைத்துக் கொள்பவராகவும் ஆனால் விலகியே இருப்பவராகவும் கடைசி வரை சு.ரா வாழ்ந்து முடிந்ததைப் படிக்கும் போது அவரின் எதிர்வினை சுட்டுகிற இயல்பு தான் இதன் காரணமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அவரின் இறுதிக் காலம் வருத்தம் தருவதாக இருந்ததற்கும், பெரும்பாலான நண்பர்களிடமிருந்து அவருக்கு ஒரு தெளிவான தூரம் உண்டாகி இருந்ததற்கும் வேரு விஷேசக் காரணங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

சு.ரா வின் கருத்துக்கள் ஆனால் உவப்பானவை. தெளிவானவையும் கூட. ''நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய நடுத்தரமான படைப்புகளின் ஆயுளைக்க் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துக்களை என் வாசகன் சரி வரப் புரிந்து கொள்கிறபோது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துக்களை அறியாத நிலையில் மிகச் சிறப்பான நாவல்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துக்களை தெரிந்து கொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ, சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை உங்களால் ஏன் படைக்க இயலவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து, நான் எழுதவிருக்கும் படைப்புகள் மூலம் அவனால் என்னை நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால்" என்று சு.ரா ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். என்னுடைய முந்தைய கேள்விகளுக்கெல்லாம் கூட சு.ரா வின் பதில் இது தானோ? இந்த சவால் தான் அவரை மூன்று நாவல்கள் மட்டுமே எழுத வைத்ததா? இந்த ஆரோக்கியமான ஒரு போட்டியை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் சு.ரா ஏற்படுத்திவிட்டாரா? அதை அவரின் சீடர்கள் பின்பற்றுகிறார்களா? என்னுள் நிறையக் கேள்விகள்!!

"எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்கு புரியறதில்லை. அந்தத் தத்தளிப்பு தான் துக்கமே. அப்பதான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு...ஏன் ஏன்னு தானே நம்ம மனசு தவிக்குது. எழுத்திலே அதெல்லாம் வரும் போது நமக்கு ஏன்னு தெரியறது..அதான்" என்று எழுதுவதன் பயனை அவர் சொல்கிறபோது என்னால் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது நல்ல சிந்தனை என்று நிச்சயமாய் படுகிறது.

புனிதம், மாறா நெறி என்றெல்லாம் சு.ரா குழப்பிக் கொள்ளவில்லை என்று படிக்கும் போது அவரின் மீதான மதிப்பு கூடுகிறது. "எந்த அறிவையும் புனிதப் படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும், நடை முறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றினால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்". ஒரு வேளை, இது தான் அவர் பாரதியையோ அல்லது புதுமைப்பித்தனையோ கூடத் தலையில் வைத்துக் கொண்டாடாததன் காரணம் என்று படுகிறது. ஆனால், இந்த நெறிகளை, இந்தக் கொள்கைகளை சு.ரா எந்த அளவிற்கு கடைப் பிடித்திருக்கிறார்? பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் தராத இந்த புனிதப் பூச்சு தல்ஸ்தோய்க்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும் கிடைக்கிறதே அது ஏன்? அவர்களுக்குப் பின் தமிழ் கண்ட ஒரே நவீனத்துவப் படைப்பாளி சு.ரா தான் என்ற பெருங்கூச்சலை அவரே ஏற்றுக்கொள்வாரா?

ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் எழுத்தாளர்கள் தம் கருத்தை தெரிவிக்க வேன்டும் என்று சு.ரா வலியுறுத்தி வந்திருக்கிறார். ஜெயேந்திரர் கைது தொடர்பான கட்டுரையில் "எழுத்தாளர்கள் செயல்படத் தடையாக இருப்பது சமூகம் சார்ந்த முட்டுக்கட்டை மட்டுமல்ல; சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து ஒதுங்கிப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும் மனோபாவம் தான் முக்கியமான தடை" என்றும் தீர்மானமாய் சொல்லியிருக்கிறார். தமிழக அரசியலில் சு.ரா மனமாற வெறுத்த கருனாநிதியும், ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி ஆட்சி செய்த காலங்களில் அவர் விமர்சிக்கத் தகுந்த அளவு எந்த முக்கிய நிகழ்வுகளும் நடக்க வில்லையா என்று கேள்வி வருகிறது? ஒரு படைப்பாளி சமூகத்தில் நடக்கும் எந்த நிகழ்வை முக்கியம் என்று கொள்ள வேண்டும்? கேரளத்தில் எழுத்தாளர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுகிறர்கள், வங்காள எழுத்தாளர்கள் மலைவாசிப் பெண்களின் தற்கொலை பற்றிப் போராட்டம் நடத்துகிறார்கள், சுற்றுச் சூழல் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள். மடாதிபதியின் சிறை வாசம் விளைவிக்கும் சமூக மாற்றங்கள் பெரிதா அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்பே இல்லாத மாணவிகளை எரித்தது விளைவித்த சமூக மாற்றங்கள் பெரிதா என்று நான் என்னையே இப்போது கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய மரபு மீது சு.ரா விற்கு பெரிய அபிமானமோ மதிப்போ இல்லை என்றும் ஒரு வகையான உதாசீனமே இருந்தது என்றும், ஆனால் மேற்கத்திய நாடுகளின் நடைமுறைகள் மீது அவருக்கு ஒரு விதமான வழிபாடு இருந்தது என்றும் படிக்கும் போதும் அவரின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. இதுவே, இந்தியச் சூழலில் அமெரிக்கா மீதான கடும் கண்டனம் இருந்து வருவதாலேயே சு.ரா தன் மேலை வழிபாடு பற்றி எழுதுவதில்லை என்று படிக்கும் போது, அவரின் நெறிகள் பற்றிப் பெருத்த சந்தேகம் உருவாகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், "தர்க்கப்பூர்வமாய்ப் பார்த்தால் தேசப்பற்றும், மொழிப்பற்றும் அசட்டு உணர்ச்சிகள்" என்று சொல்லியபடி அமெரிக்கக் குடியுரிமைக்கு முயன்று அவர் அரைக் குடியுரிமை பெற்றார் என்று உணரும் போது அவரே சொல்லிய மாதிரி 'எல்லா லட்சியவாதங்களும் நாடகத்தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது'. கதர் ஆடை அணிந்து வந்த சு.ரா சட்டென்று ஒரு நாளிலிருந்து ஜீன்ஸும், டி ஷர்ட்டும் அணிந்ததோ, அல்லது இந்தியக் கோயில்களை முற்றாக விரும்பாத ஆனால் பாரீஸின் அருகே நாஸ்டர்டம் சர்ச்சில் கண்ணீர் விட்டு அழுததோ கூட வியப்பாகவோ அதிர்ச்சியாகவோ தோன்றவில்லை. ஆனால், இந்திய மரபு மீது அபிமானம் கூட இல்லாமல் ஆனால் இந்தியா தொடர்பான எல்லா விஷயங்களிலும் ஒரு எதிர்வினையாடிக்கொண்டிருப்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை. இது, பிடிவாதமாய் தன்னை சாதரணங்களிலிருந்து விலக்கிக் கொள்கிற முயற்சியா?

எந்த ஒரு விஷயத்தையும் முற்றிலும் அறிவுப்பூர்வமான ஆய்வு நோக்குடன் மட்டுமே அணுகுபவராகவே சு.ரா இருந்தார் என்று ஜெயமோகன் எழுதுகிறார். 'துயரங்களின், தேடலின், அலைதலின் உச்சியில் தர்க்க மனம் அறியாத வாயில்கள் திறக்கக் கூடுவதை', அத்தகைய அறிவுப்பூர்வ அய்வுக்கு உட்படாத உணர்வுகள் மனித வாழ்க்கையில் எஞ்சியிருப்பதை சு.ரா கடைசி வரை அறிந்து கொண்டாரா தெரியவில்லை. தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் ஒப்பிட்டுப் பேசும் போது சு.ரா இப்படிக் குறிப்பிடுகிறார்: "துன்பப்படுபவர்களின் மனம், அவமதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர்களின் துக்கம் தஸ்தயேவ்ஸ்கிக்குதான் நன்றாகத் தெரியும். ஏனென்றால் தல்ஸ்தோய் மேலிருந்து அவர்களை நோக்குகிறார். கிறிஸ்துவிற்கு இணையானதாக கருணை கொண்டதாக இருந்தாலும் அவருடையது மேலே இருக்கும் நோக்கு. துன்பப்படுபவன் தல்ஸ்தோய் தன் தோளில் விம்மியழுதபடி வைக்கும் கையைக் கசப்புடன் உதறி விடுவான். ஆனால், தஸ்தயேவ்ஸ்கி அவனிடம் வந்து சுருட்டுக்கு நெருப்புக் கேட்டால் தோழமையுடன் கொடுப்பான். ஏனென்றால் தஸ்தயேவ்ஸ்கி அவர்களுள் ஒருவன்"

நான் எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்: சு.ரா வந்து இன்று விம்மியபடி தோளில் கை வைத்தால் இலக்கியப் பரிச்சயமுள்ள தமிழ் வாசகர்களில் எத்தனை பேர் அவரின் சுருட்டுக்கு நெருப்புக் கொடுப்போம்?
_______________________________________________________________________________________

வி ப என்றால் விருந்தினர் பதிவு என்று அர்த்தம்.

என்னுடைய நீண்ட நாள் வாசகர்கள், மேலே உள்ளதை படித்ததுமே இதற்கும் பினாத்தலாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கண்டுபிடித்திருப்பார்கள்.

இதை எழுதியது லக்ஷ்மணன், குளம் வலைப்பதிவின் ஆறு எழுத்தாளர்களுள் ஒருவர்.

90களில் கையெழுத்துப்பத்திரிக்கையாக இருந்து, இயற்கை மரணம் எய்தி, பின்னாளில் விஞ்ஞான நீட்சியாக இன்று வலைப்பதிவுலகில் தடம் பதிக்க வருகிறது குளம்.

சாதாரண வலைப்பதிவைப்போல் அல்லாமல், யார் என்ன விஷயம் எழுத வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டு, நேரத்துக்குள் அதைப்பெற்று, சக உறுப்பினர்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பின்பே வலையேற்றுவது எனத் தெளிவான திட்டத்தோடு வெளிவர உள்ள குளம் வலைப்பதிவைப் படிக்க நானும் ஆவலாய் உள்ளேன்.

3 பின்னூட்டங்கள்:

Badri Seshadri said...

அப்பா, பலமான கேள்விகள்தான். குளம் - நிறைய கல்லடிகள் படும். ஆனால் அதிலிருந்து கிளம்பும் வட்ட நீரலைகள் குளத்துக்குள்ளேயே அழிந்துவிடாமல், குளத்துக்கு வெளியேயும் பரவி சுற்றியுள்ள நிலத்தையும் அதிரச் செய்யும் என்று தோன்றுகிறது.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சுரேஷ், நல்ல கட்டுரை எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டே வந்தால் கடைசியில் விருந்தினர் பதிவு என்று சொல்லி விட்டீர்கள். இருப்பினும் நல்ல அலசல்; கேள்விகள்.

ramachandranusha(உஷா) said...

சுரேஷ்க்கு என்ன ஆயிற்று என்று ஆடிப் போயிட்டேன் :-)

பதில் கிடைக்காத கேள்விகள் அனைத்தும் நியாயமாய் உள்ளன. நல்ல எழுத்து வரும் என்ற முன்னோட்டம் "குளத்தில்" தெரிகிறது. சீக்கிரம் தமிழ் மணத்துக்கு வாங்க, வாங்க என்று ஆவலுடன் வரவேற்கிறேன்.

 

blogger templates | Make Money Online