May 8, 2006

என்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்? (08 May 06)

தேர்தல் முடிவுகளைத் தீர்ப்புகள் (verdict) என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போல எடுத்துக்கொண்டால், தமிழக சட்டசபைத் தேர்தல்களின் முடிவை வைத்து எதற்கான தீர்ப்பு என்று முடிவுக்கு வர இயலுமா?
 
சமீப காலத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால் 1996ல் ஊழலுக்கு எதிரான தீர்ப்பு என்றும் 2001ல் மாற்றத்துக்கு ஆதரவான தீர்ப்பு என்றும் சுலபமாகவே சொல்ல முடிந்தது.
 
இன்றைய தேர்தல் முடிவை வைத்து என்ன சொல்ல முடியும்?
 
ஒன்றும் சொல்ல முடியாது என்பதுதான் நிஜம்.
 
1.வெற்றி வாய்ப்புள்ள இரு அணிகளுமே ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவை. - எது குறைவு என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதையே முடிவுகள் உணர்த்துமே அன்றி, ஜெயித்தவருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது.
 
2.எல்லாப்பக்கங்களிலும் நிறைவேற்றமுடியாது என மக்களாலேயே உணரப்பட்ட வாக்குறுதிகள், ஒன்றை ஒன்று மிஞ்சும் இலவசங்கள் இருப்பதால் ஒரு அணியின் வெற்றி இலவசத்திட்டங்களின் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பில்லை.
 
3. மாற்றத்துக்கு மக்கள் ஆதரவளித்ததாகக் கூறிவிட முடியாது. பாராளுமன்றத்தேர்தல்களில் மாற்றத்தை விரும்பியவர்கள், வாக்குறுதிகளை நம்பியவர்கள் இரண்டு ஆண்டுகளில் செய்தது / செய்யத்தவறியதைப் பார்க்கையில், மாற்றத்தை விரும்பும் வாக்குகள் இரண்டு பக்கமும் விழலாம் - விஜயகாந்துக்கும் விழலாம்.
 
4. ஜாதி ரீதியிலான பிரசாரத்துக்கு ஆதரவு / எதிர்ப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. இரு பக்கங்களிலும் ஜாதிக்கட்சிகளின் ஆதரவு இருப்பதால், எதிர்ப்பவர்கள் எந்தப்பக்கம் போக முடியும்?
 
5. அணிமாறிய கட்சிகள் - இரண்டு அணியிலும் ஏராளம். வைகோ அணி மாறியது கோடிக்காக, டி ஆர் அணி மாறியது கொள்கைக்காக என்று யாரும் நம்பத்தயாரில்லை. இதற்கான தீர்ப்பும் இந்தத் தேர்தலில் கிடைக்கப்போவதில்லை.
 
6, சினிமாக்கவர்ச்சிக்கு ஆதரவு / எதிர்ப்பு - எல்லா அணிகளிலுமே இருக்கும் சினிமாக்கவர்ச்சி, இந்தத் தேர்தல் முடிவின் மூலம், எதையும் அறியவிடாமல் செய்து விடுகிறது,
 
ஆனால், சில விஷயங்களை இத்தேர்தல் மூலம் அறிய முடியும்:
 
குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு / எதிர்ப்பின்மை - வாரிசு அரசியலில் குற்றம் சாட்டப்படும் அனைத்துக்கட்சிகளும் தி மு க அணியில் குவிந்திருப்பதால், இந்த அம்சத்தைப்பற்றிய மக்கள் கருத்து தெரியப்படலாம். தயாநிதி மாறனை அமைச்சராக்கிய போதே ஒலித்திருக்க வேண்டிய குரல்கள், கலைஞரின் திசை திருப்பும் சாமர்த்தியத்தால் அடக்கப்பட்டு விட்டிருந்தாலும், பெரும்பாலும் எதிர்க்கட்சியினர் எதிர்க்கும் முக்கிய நபராக அவரை ஆக்கியிருக்கிறார்கள். மு க ஸ்டாலின் பல் வருஷம் கஷ்டப்பட்டும் அடைய முடிந்திராத ஒளிவட்டத்தை மாறன் குடும்பம் சுலபமாக அடைந்திருப்பது, மக்கள் மனத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை தெரிவிக்கலாம்.
 
தொலைக்காட்சி தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து பலகாலம் ஆனாலும், தொலைக்காட்சியை முன்வைத்து ஆதரவு எதிர்ப்பு வாதங்கள் இந்தத் தேர்தலில் அதிகம். இலவசத் தொலைக்காட்சியில் தொடங்கி, கேபிள் கட்டணங்கள், டி டி எச் முறைகேடுகள் என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதால் கலைஞரா - ஜெயலலிதாவா என்றிருந்த கேள்வி, சன் டிவியா ஜெயாடிவியா என்று மாறி இருக்கிறது.  இன்னும் சொல்லப்போனால், சன் டிவியை மக்கள் நம்புகிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம். சன் டிவி கூட்டணிக்கு பலமா பலவீனமா என்று ஒரு பதிவு முன்பு எழுதியிருந்தேன்.
 
விஜயகாந்த் - இந்தத் தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் - எவ்வளவாக இருந்தாலும் கவனிக்கத் தக்கது. அவருக்குக் கிடைக்கும் வாக்குகளில் ஒரு பகுதி சினிமாக்கவர்ச்சியாக இருந்தாலும், பெரும்பகுதி மாற்றத்தை விரும்புவர்களாக இருக்க சாத்தியம் உண்டு. ஜெயிக்கும் கட்சிக்குப் போடாத ஓட்டு வீண் என்ற எண்ணம் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு, ஜெயிக்கும் சாத்தியம் உள்ள மாற்றமாக விஜயகாந்த் தென்பட வாய்ப்பிருப்பதால், அவருக்கு விழும் வாக்குகள் கழக ஆட்சிகளில் இருந்து  மாற்றம் தேடுபவரின் வாக்குகளாக இருக்கக்கூடும்.  (அவரால் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கேள்விக்குறி)
 
49ஓ வுக்கு விழும் வாக்குகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஞாநியின் ஓ போடு இயக்கத்தின் பிரசாரத்தின் வாயிலாக, இந்தத் தேர்தலில் 49ஓவிற்கு சில அதிக வாக்குகள் விழக்கூடும். ஆனால் அவை அரசியல் கட்சிகளின் சிந்தனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற அவருடைய வாதத்தில் எனக்கு ஏற்பு இல்லை. ஒருவேளை யாரெல்லாம் 49ஓ போடுகிறார்களோ அவர்கள் ஓட்டை அடுத்த தேர்தலில் காலையிலேயே போட்டுவிடவேண்டும் என்று எல்லாக்கட்சிகளும் சிந்திக்கலாம்:-) 49ஓ ஒரு பட்டனாக இருந்திருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
 
கட்சி சாராத எல்லா மக்களும், குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்; அவர்கள்தான் கூட்டணி பலங்களையும் மீறி பெரும்பான்மையாகவும் இருப்பதால், அந்தக்குழப்பம் தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும். ஆனால், தொங்கு சட்டசபையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி பலத்தைப்போலவே, குழப்பமும் சமமாக எல்லாத் தொகுதிகளிலும் விரவிக்கிடப்பதால், குழப்பத்தின் பலனை ஒரு அணியே கூட அறுவடை செய்ய முடியக்கூடும்.
 
எது எப்படி இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்ப்பாக எதையும் தந்துவிடப்போவதில்லை என்றே நான் நினைக்கிறேன். 

16 பின்னூட்டங்கள்:

Muthu said...

2001 மாற்றத்திற்கான தீர்ப்பு என்றால் இப்போது ஒருவேளை ஆட்சி மாறினால் இதுவும் கண்டிப்பாக மாற்றத்திற்கான தீர்ப்பே...
(ஆனால் உண்மை என்ன ஆட்சி மாறினால் கூட்டணி பலம்தான் காரணம்)
வைகோவையும் டி.ஆரையும் ஒரே தட்டில் வைத்து எடைபோடமுடியுமா?
திமுக அணியில் இந்த முறை சினிமா கவர்ச்சி கம்மியோ...பா.ம.க வேறு இருக்கிறது கூட்டணியில்....
வாரிசு அரசியல் விஜயகாந்தும் நடத்துகிறார்.நல்லவேளை ஜெயலலிதாவுக்கு கல்யாணம் , குழந்தைகள் என்று இல்லை.மன்னார்குடி குடும்பம், ஓ,பன்னீர்செல்வம் எலிவேசன் எல்லாம் இங்கு உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும்.
தயாநிதி மாறனும் சன்டிவியும் திமுகவிற்கு பலமும் பலவீனமும்.இது சரிதான்.
பலம்: பிரச்சாரம்
பலவீனம்: அதே..( ஜெயாடிவியின் கேடு கெட்ட கேவலமான பிரச்சாரத்தினால் தான் சன் டிவி கேடு கெட்ட கேவலமான பிரச்சாரம் செய்ய நேர்கிறது.இது சப்பைக்கட்டு மட்டும் அல்ல.நடைமுறையும் கூட)

விஜயகாந்த வளர்வது நல்லதுதான். ஆனால் அவர் அரசியல் ஸ்டைலை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்..

Geetha Sambasivam said...

தொங்கு சட்ட சபை வரும் சாத்தியக்கூறு இருப்பதாகத் தோன்றுகிறதா? நம் தமிழ் மக்கள் அப்படி எல்லாம் இல்லை. நிச்சயம் யாராவது ஒருத்தர் தான். ஏன் நீங்கள் விரும்பும் மனிதராகக் கூட இருக்கக்கூடும்.

மணியன் said...

கதை முடிவில்தான் கருத்து சொல்வார்கள், தேர்தல் முடிவிலுமா ?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ட்ரீமர்.

பணம் கொடுப்பதில் கலைஞரைப்பற்றி ரொம்ப நாளாகவே கூறப்படுவதுதான் இது. ஆனால், இப்போதும் அப்படியே என நம்பமுடியவில்லை:-)

பினாத்தல் சுரேஷ் said...

முத்து,

டி ஆர் பெயர்தான் உடனடியாக நினைவு வந்தது. அணி மாறியவர் என்பதற்கான குறியீடுதானே.. ஜெயா டிவி கேவலமான பிரசாரம்தான் ஆனால் 96-ல் சன் டிவி பிரச்சாரத்தைத் தான் காபி அடிக்கிறது என்பது எ தா அ.

பினாத்தல் சுரேஷ் said...

தொங்கு சட்டசபை வராமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றுதானே சொல்லி இருக்கிறேன் கீதா?

பினாத்தல் சுரேஷ் said...

நாம கருத்து கந்தசாமிங்கதானே மணியன், கருத்து சொல்லாட்டி வெறுத்துப்போயிடுவோம்

Sami said...

லொக் பரித்ரன் கட்சியை பற்றி நீங்கள் குறிப்பிட மறந்து வீட்டீர்கள்,உண்மையில் அவர்கள் ஒரு கணிசமான வாக்கை பெற்றால் பலர் அவர்கள் பக்கத்தில் இணைய கூடும்(என்னையும் சேர்த்துதான்).

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் சாமி (ஆமாஞ்சாமி இல்லை:-))

லோக் பரித்திரனையும் நான் மறந்துவிட்டேன்.

Geetha Sambasivam said...

கடைசிக்கு முந்தின பாராவை இப்போதுதான் சரியாகப் படித்தேன். நிச்சயம் யாராவது ஒருத்தர்தான். அந்த ஒருத்தர் யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

பினாத்தல் சுரேஷ் said...

//மில்லியன் டாலர் கேள்வி. //

மில்லியன் டாலர்ன்றது அல்ப நாலரைக் கோடி ரூபாய் கீதா - இன்பத்தமிழனுக்குக்கூட அதை விட அதிக ரேட்.

Anonymous said...

Dear Suresh

I agree with you. This election verdict is not going to prove anything. A victory for DMK can not be considered as a vote against dictatorship or bad governance or anti incumbency or anything for that matter. A verdict for DMK can not be taken as a vote for change, but oppositely if ADMK wins that will be considered as an approval of its rule because it overcame a mighty alliance.


The verdict is going to prove only one thing. In Tamil Nadu there is a solid vote bank for DMK and ADMK, whoever alligns with Congress that has another lesser solid vote bank that combo wins. Irrespective of a good Govt or bad govt, the party that alligns with Cong always wins (1980 was an exception due to some other reason). Unless the people's hardcore affection/loyalty with parties dont change, this pattern is going to repeat every five years. That bondage between people and party should be severed off or the remaining 35% who dont vote should vote for a viable alternative. I dont think any such positive changes will happen in our life time.

My sympathies with the neutral vote bank of TN.

Regards
Sa.Thirumalai

Unknown said...

//எது எப்படி இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்ப்பாக எதையும் தந்துவிடப்போவதில்லை என்றே நான் நினைக்கிறேன். //

Suresh, I differ from your statement above

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி திருமலை. என் பதிவில் இது உங்கள் முதல் வருகையோ?

மௌனப்பெரும்பான்மையினரின் குரல் என்றுமே மதிக்கப்படாமல் போய்விடாது என்றே நான் நம்புகிறேன். - ஒரு காலம் வரும்!

தேவ், எங்கே ஒத்துப்போகவில்லை, ஏன் ஒத்துப்போகவில்லை? விளக்கினால் தெரிந்துகொள்வேன் இல்லையா?

பிரதீப் said...

பெரும்பான்மையினரின் குரல் இந்த முறை கண்டிப்பாக ஒலித்திருக்கும். வரலாறு காணாத அளவு 70+ சதவிகிதம் வாக்குப் பதிவு நடந்திருப்பதே அதைச் சொல்லும்.

ஆனால், நீங்கள் சொல்வது போல் ஒரு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் ஒழிய ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் ஒரேயடியாக வாக்களித்ததாக நான் நம்பத் தயாரில்லை.

இன்று கூட ஜெயா டிவியில் மிகுந்த நம்பிக்கையாக சந்திரனும், ராதாரவியும் ரபி பெர்னாட்டிடம் “மக்கள் யார் பக்கம்?” என்று விவாதித்தார்கள். யார் பக்கம் என்று சொல்லத் தேவையில்லை. பார்ப்போம் – இந்த முறையாவது எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் உண்மையா என்று!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பிரதீப்;

வாக்குப்பதிவு சதவீதம், மக்கள் தெளிவான வாக்களித்திருக்கிறார்கள் என்பதைக்காட்டுகிறது. ஆனால் எந்தப்பக்கம் என்றோ, எல்லாரும் ஒரே பக்கமா என்பதும் நாளைதான் தெரியும்:-)

 

blogger templates | Make Money Online