May 22, 2006

மே 21, 1991 - 1

மு கு 1: இது கதைபோல இருந்தாலும் முழுக்க முழுக்க நிஜம். என் சொந்த அனுபவம்.
 
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் ஆனாலும், அன்றைய தினமும், தொடர்ந்த நிகழ்வுகளும் என் மனதை விட்டு என்றும் அகலாமல் செய்துவிட்டன சில சம்பவங்கள்.
 
நேற்று ராஜீவ் நினைவுநாள் என்பதால் இந்த நினைவுகள் மீண்டும் வந்தன.
 
மூன்று பாகங்களாக எழுத உத்தேசித்துள்ளேன்.
____________________________________________________________________
 
அலாரம் அடித்தபோதே எழுந்திருந்திருக்க வேண்டும். தூக்கத்தின் சுகத்துக்காக அதை அலட்சியப்படுத்தியதால் இப்போது அவசரப்பட்டிருக்க வேண்டாம்.
 
குழந்தைகள் போல தூக்கத்தில் இரண்டே நிலை இருந்தால் நன்றாக இருக்கும். ஆழ்ந்த தூக்கம் அல்லது முழு விழிப்பு. நேற்றைய கிரிக்கெட்டும் ராத்திரி ஒரு மணிவரை சகாக்களுடன் தொடர்ந்த அரசியல் பேச்சுக்களும் ஆறரை மணிக்கும் முழு விழிப்பு வர விடவில்லை.
 
இன்று ராஞ்சி செல்ல வேண்டும். எல்லா ரிப்போர்டுகளும் தயார் என்றாலும் அங்கே ஏஸி அறையில் இருக்கும் மேனேஜருக்கு எப்போதும் எழுதாத ஒரு ரிப்போர்ட்டே தேவைப்படுவது வழக்கம். எவ்வளவு தயாராகச் சென்றாலும் அவரைத் திருப்தி செய்ய முடியாது.
 
ராஞ்சிக்குச் செல்வது என்பதே ஒரு நீண்ட யாத்திரை.. இங்கிருந்து ஆட்டோவில் ஐந்து கிலோமீட்டர், பிறகு ரயிலில் 50 கிலோமீட்டர், பிறகு ட்ரெக்கர் வண்டியில் 45 கிலோமீட்டர் என்று எல்லா வகை வாகனங்களையும் உபயோகப்படுத்தி,  தடங்கல்களுக்கான ஆயிரம் சாத்தியங்களுக்கிடையே (ஆட்டோக்கள் ஸ்ட்ரைக், ரயில் காலதாமதம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சாலை மறியல்கள், ராஞ்சியில் ஊரடங்கு - எது வேண்டுமானாலும், என்று வேண்டுமானாலும் நடக்கலாம்) சென்று மேனேஜரைப்பார்த்தால் அவர் அலட்சியமாக புதிய ரிப்போர்ட் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நேற்றே நான் எழுதியிருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்.
 
என் அவசர சத்தங்களில் அருண் விழித்துக்கொண்டுவிட்டான்.
 
"சார், குட் மார்னிங், டீ வாங்கி வரட்டுமா?"
 
"எத்தனை முறை சொல்ல, சாரெல்லாம் வேண்டாம், சுரேஷ் போதும்னு.., சரி வாங்கி வா"
 
"தோ சாயா டாலியேன்னு சொல்லலாமா?" இவன் இன்னமும் புதிது, இந்தி கைவரவில்லை.
 
"டாலியேன்னு கொட்டறதுக்கும் ஊத்தறதுக்கும்தான் சொல்லணும். இங்கே தோ சாய் தீஜியேன்னு சொல்லு இல்லாட்டி தோ சாய் தோன்னு சொல்லு.. "
 
"தோ சாய் தோவா? ரெண்டு முறை தோ வருதே"
 
"எப்பா.. காலங்காலைலே என்னைப்படுத்தாதே.. நான் இந்தி மொழியைக் கண்டுபிடிக்கலை.. அந்த ஆள் மாட்டுனான்னா கேக்குறேன்."
 
"சரி நானும் கிளம்பிட்டேன், ரெண்டு பேருமே போய் டீ குடிச்சுட்டு வரலாம்"
 
டீக்கடையில் சுபர்ணோ இருந்தான். அவன் எங்கள் எதிரி இயந்திர நிறுவனத்தின் பிரதிநிதி.
 
 "என்ன சுரேஷ் ராஞ்சியா?"
 
"என்ன பண்ண? இது வாராவார தண்டனையாச்சே!"
 
"எங்க கம்பெனில பரவாயில்லைப்பா, மாசம் ஒரு முறைதான் ரிப்போர்டிங்"
 
"மாசம் ஒரு முறை கூடை ரிப்போர்ட் எடுத்துகிட்டு போவே.."
 
"ஹல்லோ அருண், ஹவ்டிட் யூ டூ?"
 
"இங்க்லீஷ் வரலேன்னா விட்டுடேன்.. பாவம், உங்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுது"
 
"ஹிந்தி அருண்கிட்டே மாட்டிகிட்டு கஷ்டப்படறத விடவா?"
 
"அருண் இன்னும் ரெண்டு மாசத்துல ஹிந்தி நல்லா பேசக்கத்துக்குவான், நீ, வாழ்க்கை புல்லா இந்தி.. இங்க்லீஷ் ரெண்டையும் கொலைதான் பண்ணுவ. நெஜமாவே கேக்குறேன், பெங்காலிங்களுக்கு வேறெந்த பாஷையும் சுட்டுப்போட்டாலும் வராதா?"
 
"நாங்க பரவாயில்லப்பா, ஹிந்திய ஸ்கூல்ல கத்துக்குறோம்.. உங்க தமிழ்நாட்டுல எல்லாரும் வளர்ந்து கடாவான பிறகுதான் இங்க வந்து ஹிந்தி கத்துக்கறாங்க"
 
"நீ ஸ்கூல்ல கத்துகிட்ட எதையும் ஞாபகம் வெச்சுக்கப்போறதில்ல.. பித்த்கோரஸ் தியரெம் தெரியுமா சொல்லு? எங்களுக்கு எல்லாம் வாழ்க்கைப்பாடம்பா!"
 
"முட்டாள் மாதிரி பேசாதே.. தமிழ்நாட்டுக்கு நான் போனா, ஹிந்தி பேசி பொழைக்க முடியுமா?"
 
"ஆமாண்டா, சுபர்ணோ வருவான்னு, எல்லாத் தமிழனும் ஹிந்தி கத்துக்கணுமா?"
 
"நாங்க பெங்காலிங்க இந்தி கத்துக்கல? மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹிந்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா? இந்தியால தானே இருக்கீங்க?"
 
"எங்களுக்குத் தேவைப்பட்டா, உன்னைவிட சீக்கிரமாவே கத்துப்போம்"
 
"உங்களையெல்லாம் ஒழிக்கணும்டா" அவன் குரலில் இப்போது கோபமே இருந்தது. எத்தனியோ முறை இதே தகராறு எங்களுக்குள் நடந்திருக்கிறது. இன்றைக்கு கொஞ்சம் அதிகமாக அவனைக் கிண்டிவிட்டேன் போலிருக்கிறது. சரி, அப்புறம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.
 
"சரி நான் நாளைக்கு சாயங்காலம் வரேன்" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைப்பிடித்தேன்.
 
நாளை அடுத்த பாகம்.
 

2 பின்னூட்டங்கள்:

மணியன் said...

என்ன தேர்தலுக்குப் பிறகு ஆளைக் காணோமே என்று பார்த்தேன். ராஞ்சி ஆரம்பம் வருபவைக்கு கட்டியம் கூறுகிறது. அடுத்த பாகத்தை எதிர்நோக்குகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நட்சத்திரமே..

அடுத்து வருபவை கலவரங்கள் -- அதன் ஆழத்தை அறிய இந்த முன்னூட்டம் நிச்சயம் தேவை என்றே நினைத்தேன்.

 

blogger templates | Make Money Online