Jun 21, 2006

வளர் சிதை மாற்றம் - ஆக்கங்கள் அறிமுகம் -Thenkoodu June Contest

ஜூன் மாதப் போட்டி சூடு பிடித்துவிட்டது என்றெல்லாம் சொன்னால் அது நிச்சயம் Understatementதான். 34 படைப்புகள், பழகிய, புதிய எழுத்தாளர்கள், கதைகள், கவிதைகள்,அனுபவங்கள், கட்டுரைகள் என படைப்பிலக்கியத்தின் எல்லாக்கூறுகளில் இருந்தும் ஆக்கங்கள் கொட்டியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பற்பல உணர்ச்சிகள்!

போட்டியில் பங்குகொள்ளவேண்டாம் என்று எடுத்திருந்த முடிவை பல முறை மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்தது. The temptation was irresistable. அதே நேரத்தில், இப்படிப்பட்ட படைப்புகளுக்கு நடுவில் உன் பினாத்தலுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடும் என்ற பயமும். போட்டியின் தலைப்பைக் கொடுத்தவன் என்ற முறையில் அனைத்துப் படைப்புகளும் ஏதோ ஒருவகையில் எனக்குச் சொந்தமானவை என்ற ஒரு உணர்வும் அடித்தளத்தில்..

போட்டி பலம்தான். என் கணிப்பில் முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் படைப்புகளுக்கு இடையே 5% இடைவெளி கூட இருக்காது என்றே நம்புகிறேன். என் தேர்வுகளைக் கண்டுபிடிக்க எனக்கு மூன்று நாள் பிடித்தது.

எல்லாப்படைப்புகளையும் பற்றி ஒரு சிறு அறிமுகம் மற்றும் எனக்குப் பிடித்த வரிகளை இந்த இடுகையில் இடுகிறேன், முடிவெடுத்தலில் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.


1.ஓ போட்டு ஆரம்பித்து வைத்தார்
சுதர்சன்.கோபால்.



அடிப்பம்பில் தண்ணியடிக்கக் கஷ்டப்படும் போது "ஐயோ..பாவம்" என்று ஒரு குடம் அடித்துக் கொடுத்தவனும்,வழக்கமாய்ச் செல்லும் பேருந்தில் சில்லறையின்றித் தவிக்கும் போது "உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கிட்டேன்" என்று உதவிக்குரல் கொடுத்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுவதுண்டு..


காமம் என்பதன் இடக்கரடக்கல்தான் காதல் என்பதை அவர் உணர்ந்த அனுபவங்களைக் கதை போல சொல்லி இருக்கிறார். வாதத்திறத்தோடு அடலசண்ட் காதல்கள் அம்பேல் ஆவதின் ரகசியங்களைப் புட்டுப்புட்டு வைக்கிறார். ஆமாம், யாரு சார் அந்த அனிதா?

படிக்க வாக்களிக்க

2.
வவ்வால் கவிதை எழுதறார்..



முகம் தேவை இல்லை உணர
மூச்சுக் காற்றே போதும்
உன் வரவை எனக்கு சொல்ல!

கவிஞனானதையே வளர் சிதை மாற்றமாக கவிதையாய் வடித்திருக்கிறார் வவ்வால். வார்த்தைப் பிரயோகங்கள் வலிமையாகவும் அதே நேரத்தில் எளிமையாகவும்.


படிக்க வாக்களிக்க

3.
குலவுசனப்பிரியன் தன் அனுபவங்களை எழுதறார்..

ஆனால் பிராயச்சித்தம் செய்யமுடியாத சில விசயங்கள் இன்னும் உருத்திக்கிட்டே இருக்கு

பின்னாடி ஒரு பைசா சம்பாதிக்க பாடாதபாடுபடுறப்ப உரெச்சி என்ன பிரயோசனம்.

செய்த தவறுகளைப் பட்டியலிட்டு, பிராயச்சித்தத்துக்கு ஆன தாமதம் நம்மையும் உறுத்தும் அளவிற்கு வட்டார நடையில் இயல்பாக..

படிக்க வாக்களிக்க

4. வளர் இளமைக்காலம் - சிதைவு என்ற எதிர்மறை வார்த்தையை ஒதுக்கி மாற்றம் ஏற்படுத்தும் மாற்றங்களை அலசி இருக்கிறார்
பச்சோந்தி.



ஆக்ரோஷம், வன்முறை அதிகம் கொண்டவர்களா அல்லது அஹிம்சை, மெளனம் அதிகம் கொண்டவர்களா என்று தம்மை உலகிற்கு அறிவிக்கவும் இம்மாற்றம் மனிதர்களுக்கு உதவுகிறது.


விடலைப்பருவம் விடைபெறும் தருணத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் எப்படி வாழ்க்கையையே புரட்டிவிடக்கூடியவை, எதிர்மறை நிகழ்வுகளைத் தவிர்க்கச் செய்ய வேண்டியவை பற்றிய ஆலோசனைகள் - முதிர்ந்த சிந்தனையுடன்..


படிக்க வாக்களிக்க


5.
மோகன் தாஸ் முற்றுப்புள்ளியில் தொடங்கிக் கதை எழுதியிருக்கிறார். முதலிரவன்று யோக்கியமான கணவனும், விடலைத் தவறுகள் செய்த மனைவியும் சந்தித்தால்



இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா, அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு


எளிமையான நடையில் கதை சொல்கிறார், அளவான பாத்திரங்கள், இயல்பான உரையாடல்கள்.


படிக்க வாக்களிக்க


6. பதின்ம வயதின் ஆரம்பங்களில் இருந்த சிக்கலில்லாத வாழ்க்கையையும், விடலைப்பருவத்தின் வலி உண்டாக்கும் முடிவெடுக்கவேண்டிய தருணங்களையும் அலசி இருக்கிறார்
ஐகாரஸ் பிரகாஷ் - தன் வழக்கமான
நகைச்சுவையோடு.



பதின்ம வயதில் தோன்றும் எதிர்பாலர் மீதான இனம்புரியா கவர்ச்சியை, கவிஞர்கள், தேனில் குளிப்பாட்டிய, மலர்கள் தூவிய வார்த்தைகளால், காதல் என்றும், அறிவியல் படித்தவர்கள், ஹார்மோன்களின் சிலுமிஷம் என்றும், அறிவியல் படித்திருந்தாலும், பெற்றோராக வாய்க்கப்பட்டவர்கள், 'தொடப்பக்கட்டை' என்றும் வர்ணிப்பார்கள்.


போட்டித் தலைப்பு யாருக்கு செலவு வைத்ததோ தெரியாது, ஐகாரஸ் பிரகாஷுக்கு இரண்டு போத்தல் பியர் நிச்சயம் செலவு:-)

படிக்க வாக்களிக்க

7. பெரிய ஆள் ஆயிட்டோம்னு அப்பப்ப தோணினாலும், அது என்ன நிஜமாவே அவசியம்தானான்னு கேக்குறாரு
கொங்கு ராசா.



'அது ஒரு அழகிய நிலாக்காலம்' னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence .. i dont want to cross it.. :).


பகலிலே பிகர்கள் பாராமல், இருட்டிலே கண்ணடித்து என்ன பயன்னு கேக்குறாரு, நகைச்சுவையா, தனக்கே உரிய வட்டார வழக்கிலே!

படிக்க வாக்களிக்க

8. குஜால் புஸ்தகத்தை மறைக்க வழி தெரியாம மாட்டிக்கிட்டவன் கதையைச் சொல்றாரு
நெல்லை சிவா .



அதெல்லாம் கூடாதுன்னு சொல்ல வரலை, ஆனா, உன்னுடைய எதிர்காலக் கனவ நினைச்சி, இதயெல்லாம் தள்ளிப்போடு. 'உத்தியோகம்தான் புருஷ லட்
சணம்', அது நல்ல அமைஞ்சாதான், மற்ற உன் கனவெல்லாம் நனவாகும்.

நியூக்கிளியர் வேஸ்ட் போல புஸ்தகத்தை எங்கே வைக்கிறது, எப்படி வைக்கிறதுன்னு தெரியாம கஷ்டப்பட்டவங்க அத்தனை பேருக்கும் கொசுவத்திய சுழல விட்டிருக்காரு.

படிக்க வாக்களிக்க


9. இரண்டு ஸ்க்ரோலுக்குள் நூறு ஆண்டுக் கதை சொல்லியிருக்கார்
ராமச்சந்திரன் உஷா . பெண்ணின் மாற்றத்தைப்பற்றி அதிக பயம் அந்தப்பெண்ணைவிட தாய்க்குதான் அதிகம் என்பதால் தாயின் பார்வையில் சொல்லி இருக்கிறார்.


1."காலம் மாறிண்டு இருக்குன்னு சொல்லத்தான் சொல்லரா. ஆனா, கல்யாணம் ஆறதுக்குள்ள பொண்ணு தெரண்டுட்டா?"
2. "நாளைக்கு கட்டிக் கொடுக்க வேண்டிய பொண்ணு, கண்ட பொஸ்தகத்த வாசிக்கிறதும்"
3."ஒரு வயசுக்கு மேலே ஆம்பளைங்களும். பொட்ட பசங்களும் சேர்ந்து படிச்சா நல்லாவா இருக்கும்?"
4. "நான் கூட அந்த காலத்துல கோ எட்ல படிச்சேன். பாய்ஸ்கூட பேசவே மாட்டோம்."
5."எக்கேடோ கெட்டுப் போகட்டும். ஆனால் படிப்பைவிடாதே"

கவலைப்படும் விஷய்ங்கள் மாறினாலும் தாயின் கவலை மட்டும் மாறுவதில்லை என்கிறார். பேச்சு, எண்ணங்கள் எல்லாவற்றிலும் காலத்துக்கேற்ற வித்தியாசத்தை திறம்பட காட்டியிருக்கிறார்.

படிக்க வாக்களிக்க


10. நிலா நிழல் வாசனையுடன், கிரிக்கெட், பேச்சுப்போட்டி என்று தமிழ் வாத்தியார் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய விரும்பும் விடலையின் பழைய டயரியை எடுக்கிறார்
டுபுக்கு.


அவ மட்டும் என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். உனக்கு கல்யாணம் ஆகலங்கிற வருத்ததில என்னோட மேட்டர கவுத்திராத பிள்ளையாரப்பா!

விடலைக்காதல் வளர்ச்சியை நாட்குறிப்பில் அழகாக வடித்திருக்கிறார். கதை கவிதை என்று இன்று எழுதிக்கொண்டிருப்பதற்கு தமிழ் வாத்தியாரா காரணம்??

படிக்க வாக்களிக்க


11. என்று இந்த விடலைப்பருவம் என்னை விட்டு விலகியது என சந்தக்கவிதை படைத்திருக்கிறார்
SK.


எதுவென்று எண்ணி எண்ணி புரியாமல் நிற்கையிலே
பட்டென்று பொறியில் தட்டியது ஒரு நினைவு!
பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!


என்று ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார். சந்தங்கள் அழகாக அமைந்த இனிமையான கவிதை.

படிக்க வாக்களிக்க

12. விடலைப்பருவத்து நிகழ்வுகளை மீண்டும் யோசித்துப் பதிந்திருக்கிறார்
லக்கிலுக்.


வாழ்க்கையைப் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியிருந்தது... எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிந்தித்தே கொஞ்சம் முடி கொட்டியது....


இமேஜ் பற்றிக்கவலைப்படாத நேரமையான நோஸ்டால்ஜியா.



படிக்க வாக்களிக்க



13. எதுகைகளும் மோனையும் கைகொடுக்க, ரசாயன மாற்றம் நடந்த நாளைப்பற்றி யோசித்திருக்கிறார் கோவிகண்ணன், எஸ்கேவுக்கு பின்னூட்டமாகத் தொடங்கி, போட்டிக்கு ஆக்கம் அனுப்பியிருக்கிறார்.



கிளர்ந்துவிட்ட என் குறும்பால், பொறுக்காமல்,
வளர்ந்துவிட்ட என்னை ஒருநாள் கைநீட்டியதற்கு,
தளர்ந்துவிட்ட என்தந்தை மனம்நொந்த வேளையில்
உளர்ந்துவிட்ட என்னுள் நிகழ்ந்தது மாற்றம்.




மாற்றம் ஏற்படுத்திய சம்பவங்களை, காதுக்கு இனிய சந்தங்களால் விவரித்திருக்கிறார்.



படிக்க வாக்களிக்க



14. "போலீஸ் புள்ள பொறுக்கி"ன்னு கதை சொல்லி இருக்காரு இளவஞ்சி.

அடி வாங்கறது பெரிசில்லை! வாங்கற ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கனும். அப்பத்தான் அதை நாளைக்கு நீங்க நல்ல நெலமைக்கு வந்தா நெனைச்சுப் பெருமைப்பட்டுக்க முடியும்... இல்லைன்னா அது என்னைக்கும் உறுத்திக்கிட்டே இருக்கும்.



விடலைப்பருவக் குற்றங்களையும், அவற்றைத் திருத்த Bigger Picture-ஐக்காட்டும் தந்தையின் சக ஊழியரின் அறிவுரை மட்டுமில்லாமல் இளவஞ்சி டச் உள்ள டயலாக்குகளுடன்..



படிக்க வாக்களிக்க

15. மாறுதல்களைத் தடுத்துவிடவா முடியும்? அசை போடத்தான் முடியும் என்கிறார் நாமக்கல் சிபி

மனதில்
அசை போட்டபடியே
நிகழ் காலம்
அனுபவிப்போம்!

வாழ்க்கை
கொஞ்சங் கொஞ்சமாய்
நகரத்தான்
வேண்டும்!


நகரத்தான் வேண்டும் - நினைவுகளை மட்டும் சுமப்போம் என எளிய கவிதையில் சொல்கிறார்.

படிக்க வாக்களிக்க

16. காதலின் ஆரம்ப அம்சங்கள் தென்படத் தொடங்கிவிட்டவனை எல்லாரும் "பொடிப்பையா" என்று அழைத்தால்?
ஆசாத் அவன் உணர்வுகளைக் கதையாக வடித்திருக்கிறார்.


ஏதாவது பாட்டுப்போட்டிக்காக பட்டறையின் ஓரத்தில் நஃபீஸாவை உட்காரவைத்து, 'சாவன் கா மஹீனா, பவனு கரே சோரு' என்றல்லாம் பாடவே முடியாதா? ஏதாவது ஒரு ஃபரிஷ்தா (தேவதை) வந்து தன்னைப் பெரியவனாக்கி விடாதா?

பொடிப்பையன் பட்டத்தை அவளே சொன்னபோது ஏற்படுகிறது அவன் வளர்சிதை மாற்றம் என்பதை எளிமையான அழகான நடையில் கதை சொல்கிறார்.

படிக்க வாக்களிக்க

17. நாவல் படித்தால் மட்டும் அறிவு வந்துவிடுமா என்று கதையாகக் கேட்கிறார்
நிலா .


'பாவம் அம்மா, எனக்கு ஒரு கஷ்டம்னா எப்படி தவிச்சுப்போறாங்க! அவங்க எனக்கு நல்லதைத்தானே நினைப்பாங்க! அவங்க சொல்றபடி கேட்டா என்ன தப்பு?'

என்று மனம் மாறுவதற்கான காரணங்களை எளிய சம்பவங்கள் மூலம் கூறுகிறார். பின்னூட்டத்துல சண்டையும் மறக்காம படிங்க:-)

படிக்க வாக்களிக்க

18. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே வளர் சிதை மாற்றத்தால் ஏற்படும் உறவு மாறுபாடுகளை எழுதியிருக்கிறார்
பொன்ஸ்.


"உனக்கு ஒண்ணும் ஆகாதாம்.. சித்ரா சொல்றா எல்லாம் கேர்ல்ஸுக்குத் தான்னு.. உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம்"

என்று பேசிக்கொண்டிருந்த தங்கை



"போடா, என்னதான் அண்ணனா இருந்தாலும் நீ ஆம்பிளை தானே.. எப்படி சொல்றது.. வெட்கமா இருக்காது?"

என்று மாறிய மாற்றத்தை எழுத்தில் வடித்திருக்கிறார் - இயல்பான உரையாடல்களோடு.

படிக்க வாக்களிக்க

19. கூடப்பழகிய, நட்பு, பாசம் எல்லாம் காட்டிய ஒருவரைத் தீவைத்ததாகக் கருதப்படும் கணவரிடம் நேசத்துடன் பழக முடியுமா? விடலையைத் தொலைத்தால் முடியும் என்கிறார்
வெளிகண்டநாதர்.


'சரி விடுங்க பாவா, அக்காதான் பைத்தியக்காரத்தனமா செஞ்சுக்கிச்சு' என்று அவரிடம் சொல்லாமல் சொல்லுவதை போல நினைத்து, "பாவா, இந்த காப்பியாவது சாப்பிடுங்க, ரெண்டு நாளா நீங்க வாயே நனைக்கலே"

சம்பவங்களின் தொகுப்பாக வேகமாகக் கதையை நகர்த்திச் செல்கிறார்.

படிக்க வாக்களிக்க

20. சாங்கோ பாங்கமாக தன் தற்கொலை முயற்சியை முழுப்பின்னணியுடன் விளக்குகிறார்
சுரேஷ் கண்ணன்.


எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உன்னை வளர்த்தவர்களை ஒரு கணமேனும் சிரிக்கச் செய்; நிம்மதி அடையச் செய். காதல் என்பதெல்லாம் அந்த நேர அபத்தம்தான்.


என்பது போன்ற உபதேசங்களும் உண்டு

அவள் இயல்பாக கேட்ட சில நிமிட உரையாடலைக்கூட "மச்சி! ஒரு மணி நேரம் பேசினதுல டைம் போனதே தெரியலைடா" என்று நண்பர்களிடம் அளக்க ஆரம்பித்தேன்

என்பது போன்ற நகைச்சுவையும் உண்டு.

படிக்க வாக்களிக்க

21. ஆண்களுக்கு மட்டும்தான் விடலைக்காதல் இருக்கலாமா? பெண்களுக்கு இருக்கக்கூடாதான்னு கேக்கறாங்க
பொன்.சிதம்பரகுமாரி.


அது வரைக்கும் லூசா தெரிஞ்ச பையன், ஒரு புது வெளிச்சதுல,சகலகலா வல்லவன் கமல் மாதிரி மோட்டர் பைக்கை அனாயசமா என் மனசுக்குள்ள ஓட்டிட்டு வந்துட்டான்.

குமரி பிரமோஷன் கிடைச்சபிறகு அழகுச்சாதனங்கள் உபயோகப்படுத்தறதுல இவ்வளோ அவஸ்தை இருக்கா?

படிக்க வாக்களிக்க

22. தன் இரண்டாவது கதையில் ஆண்களின் குழப்பம் விலகுவதை விவரிக்கிறார்
நிலா.


அவளின் ஸ்பரிஸம், இறுக்கம், முத்தம் எல்லாமாய் சில விநாடிகளே நிலைத்திருந்தாலும் யுகயுகமாய் நீடித்ததான பரிச்சயம். வெறும் உடம்பின் கிளர்ச்சியாய் இருந்தால் இது எப்படி சாத்தியமாகும்?

அப்பா அம்மாவையே வெறுக்கும் அளவுக்குப்போன சாமியார் எப்படி திருந்தி நல்வழிப்படுகிறார் என்று கதை சொல்கிறார்.

படிக்க வாக்களிக்க

23. கல்லூரி நண்பர்களோடு சேர்ந்திருந்த நாட்களையும் புரட்டிப்போட்ட காலத்தின் கோலத்தையும் எண்ணி இதற்குள் எங்கோதான் நான் விடலைப்பருவத்தைத் தொலைத்திருப்பேன் என்கிறார்
தேவ்.



என் விடலைப் பருவம் என்கிட்டே இருந்துப் போயிடுச்சா இல்ல இன்னும் இருக்கான்னு தெரியல்ல ஆனா..பாலாஜியை அந்த அழுக்கு டவுசர்ல்லப் பார்த்தப்போவும் சிவா செத்தப் போவும்.. எனக்குள்ளே எனக்கே தெரியாம என்னவெல்லாமோ நடந்துப் போனது உண்மை.

அவர்கள் நண்பர்களுடன் நாமும் இருப்பது போன்ற நடை.

படிக்க வாக்களிக்க

24. ரயில் பயணங்கள் தோற்றுவிக்கும் பிம்பங்களையும் எண்ணங்களையும் நிரந்தரமாக சுமக்க முடியாது. ஆனால் ஒரு சரித்திர சம்பவத்துக்குப் பின் நடைபெறும் பயணத்தை?
ஹரன் பிரசன்னாவின் இரவு ரயில் அனுபவம் சுவாரஸ்யம்.

நானாக ஏற்படுத்திக்கொள்ளும் லயிப்பிலிருந்து என்னை நான் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நம்பி வாசித்தேன். இதுபோன்ற குழப்பமான நிலையில் புத்தகம் வாசித்தல் நல்லதொரு பழக்கம் என நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் புரிந்தது, இப்படியே நினைத்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய, இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை என்று.

தேர்ந்த கவனித்தலுடன் நுட்பமான நினைவுகளை வடித்திருக்கிறார், நம் ரயில் பயணங்களோடு ஒப்பிட வைக்கிறார்.

படிக்க வாக்களிக்க


25. வெளிவாழ்வைப் பார்க்கையில் நம் அனுபவம் கூடுகிறது, அறிவு விசாலமடைகிறது, விடலை விடைபெறுகிறது என்று கதையாய்ச் சொல்கிறார்
உமா கதிர்.


அறுபது வயசுக்கிழவன் இவ்வளவு தூரம் வந்து உழைக்கவேண்டிய அவசியம் இல்லாதிருந்தபோதிலும் உழைக்கிறார். இருபது வயசுப்பையன் பந்தாவுக்காக வண்டியில பறக்கிறோமே என்ற எண்ணம் ஓடியது. அதேநேரம் நம் அப்பா இந்த வெய்யிலில் அலுவலகத்திற்கு சென்று வர மறுபடி சைக்கிளுக்கே திரும்ப வைத்ததை நினைத்து வேதனைப்பட்டேன்.



பார்வை மாற்றத்தை பதிவு செய்திருக்கிறார்.

படிக்க வாக்களிக்க

26. அப்பாபோல ஆக ஆசைப்படும் விடலையின் நினைவுகளைப் பதிந்திருக்கிறார்
மணியன்.


சீச்சீ, நான் ரொம்பக் கெட்ட பையன். கடவுளே, எனக்கு இந்த கெட்ட புத்தியை மாத்திக் கொடு, நான் நல்ல 'அப்பா'வாக இருக்க வேண்டும். இராத்திரி வேட்டியெல்லாம் கறையாகி விடுகிறதே, அம்மா கவனித்திருப்பாளோ


குழப்பமான இளைஞனின் எண்ண ஓட்ட்ங்களை இயல்பாக எழுதியிருக்கிறார்.


படிக்க வாக்களிக்க



27. தலைமுறைகள் மாறினாலும் தாய் கவலை மாறாது என்று உஷா சொல்லியிருந்தார். அதே போலத்தான் தகப்பன் கவலையும் என்கிறார் பாலா.

எனக்கு வளர்சிதை மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் வளர்ந்து, சிதைந்து (மாறிப் ) போய் தான் இருக்கிறேன். எனக்கு வேண்டியதை என் அப்பா தீர்மானித்தார். தனக்கு வேண்டியதை என் மகன் தீர்மானிக்கிறான். என் வளர்ச்சியில் என் பங்கு என்ன?

பேங்க் உத்தியோகம், யூ எஸ் மேல்படிப்பு என்று குறிக்கோள்கள் மட்டுமே மாறுகிறது, ஆதார உணர்ச்சிகளில் மாற்றமில்லை என்கிறார்.
28. சேர்ந்திருந்தால் எப்போதும் சண்டை என் இருந்தாலும், பிரிவில் ஏற்படும் மாறுதல், பெரிய மனுஷனாக்கிவிடும் என்கிறார் அருள் குமார்.
நானே எதிர்பார்க்காமல் என் கால் கட்டைவிரல் லேசாக அவள் மீது பட்டுவிட்டது. அதை உறுதிசெய்யும் வகையில் அவளைப்பார்த்து பழிப்பு காட்டினேன். 'ட்ரெஸ்லதான் பட்டுச்சு. போடா...' என்று அவசரமாய் அழுகையை நிறுத்திச் சொன்னாள்


சண்டை, பாசம் எல்லாவற்றையுமே இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.
29. வேலை கிடைத்து, கல்யாணம் ஆகிவிட்டது போன்ற அற்பக்காரணங்களுக்காக விடலைப்பருவத்துக்கு பை பை சொல்லவே முடியாது என்று அடம் பிடிக்கிறார் Pranni.
He : அட ஆண்டவா. என்ன தான் வளர்ந்தாலும், சில விசயங்களுக்கு bye-bye சொல்ல முடியாதுன்னு இந்த பொண்ணுகளுக்கு புரிய வைக்க மாட்டியா? அதான் சொன்னனே புள்ள. அவங்கள நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : நான் எதுக்கு அவங்கள நிறுத்தச்சொல்லனும்? நான் நிறுத்த வேண்டியத நிறுத்திக்குறேன். அப்பறம் பார்போம்.
" பெண்கள் கணவன் மாறிவிடுவான் என எதிர்பார்த்து திருமணம் செய்கிறார்கள், மாறுவதில்லை என்பதுதான் சோகம்" என்று ஒரு ஜோக் உண்டு, அதைக் கதைபோல சொல்லியிருக்கிறார்.
30. மாற்றங்கள்தான் வளர்ச்சிக்கு வகை செய்கின்றன என்கிறார் கலை அரசன்.
பயணத்தில் பாதை மாறலாம்
பயணிக்கும் வாகனமும் மாறலாம்
இலக்குகள் ஒன்றே.
பருகும் பானங்கள் மாறலாம்
பாத்திறமும் மாறலாம்
தாகம் ஒன்றே.



எளிய வார்த்தைகளில் எழுதிய கவிதை.


படிக்க வாக்களிக்க


31. அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் - அவன் நண்பனை - அவன் உணர்ச்சிகளை கதையாகச் சொல்லியிருக்கிறார் செல்வராஜ் - அழகான பொருத்தமான புகைப்படத்தோடு.


மனமுருகிக் கதவில் சாய்ந்து கொள்ளலாம். வெறும் அறையில் தனியாகச் சிரித்துக் கொள்ளலாம். பக்கம் பக்கமாய்க் கவிதை எழுதிக் கிழித்துப் போடலாம். வேறு எந்தத் தளைகளும் இல்லை. ஆனால், இந்த நிலை மாறி அவளும் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டால்? அது பிறகு ஒருவழிப் பாதையாகி விடுமே. திரும்ப இயலாத அந்தப் பயணத்திற்கு நான் தயாரா?


கோட்டொழுக்கான அழகிய நடை,இயல்பான யதார்த்தமான நிலைமாற்றம் - இதக்கதைக்கு வலுசேர்க்கின்றன.


படிக்க வாக்களிக்க


32. இணைக்குறள் ஆசிரியப்பா எழுதியிருக்கிறார் ஓகை நடராஜன், அவர் சொன்னதால்தான் தெரிகிறது - மரபுக்காக வார்த்தைகளை உடைத்துப்போட்டு கஷ்டப்படுத்தாததால்.


சிந்தை வளர்ந்தும் சிதைந்தும் மாறிய
விந்தைப் பருவமிதும் விடையும் பெறுகிறது.
முழுதாய் இன்றி மிச்சங்கள் வைத்தே
செழித்த இப்பருவம் செல்வது நடக்கிறது.


மொழியாளுமை மிகவும் இருந்தால்தான் இவ்வளவு எளிமையாக ஒரு மரபுக்கவிதை எழுத முடியும்.


படிக்க வாக்களிக்க


33. விடலைப்பருவத்துக்கு வெற்றிகரமாக விடை கொடுத்துவிட்டால்? சந்தக்கவிதையில் சிந்தித்திருக்கிறார் இப்னு ஹம்துன்.


போற்றிடும் இலக்கை நோக்கும்
பொறுமையால் வெற்றி சேர்க்கும்
ஆற்றலுயர் இளையர் கூட்டம்
அவனியிலே ஒளியைக் கூட்டும்.





Positive-ஆக வளர்சிதை மாற்றத்தை அணுகியிருக்கிறார்.

படிக்க வாக்களிக்க

34. பெண்களின் விடலை மாறுதல்கள் வீட்டில் ஏற்படுத்தும் தளைகளை எதிர்த்துக் கவி பாடுகிறார் தாணு.

அப்பா பக்கத்தில் படுத்துக் கதை பேசத் தடை

அண்ணா தம்பிகளைத் தொட்டுப் பேசத் தடை

அடுத்த வீட்டு ஆண்களையோ பார்க்கவே தடை!

அடக்குமுறைகளும் எதிர்ப்பு இயக்கங்களும்

அடுக்களை தொடங்கி தெருப்படி வரை தொடர்ந்தது

அம்மா பிள்ளை சண்டைகள் தினமும் ஆர்ப்பரித்தன

இவையெல்லாம் சீக்கிரம் ஒழிய bye-bye adolocense என்கிறார்.

படிக்க வாக்களிக்க

அனைத்தையும் படித்து மறக்காமல் வாக்களியுங்கள்.

19 பின்னூட்டங்கள்:

தாணு said...

கடைசி நிமிடங்களில் அரங்கேற்றியே தீருவதுங்கிற பிடிவாதத்தில் எழுதினேன், எழுத்துப் பிழைகள் கூட சரி பண்ண நேரமில்லாமல். வாசித்து, அதற்கொரு அறிமுகமும் வழங்கியதற்கு நன்றி

erode soms said...

ஐயா
எனது கதையை கடைசி நிமிடங்களில் அச்சேற்றினேன். தேன்கூட்டில் பதிவு செய்தும், ஏன் பிரசுரிக்கப் படவில்லை?

Unknown said...

''சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்''

எனற எனது படைப்பிற்கு அருமையான முன்னுரைக் கொடுத்திருக்கும் பெனத்தாலருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://sethukal.blogspot.com/2006/06/blog-post.html

லக்கிலுக் said...

படைப்புகளை விட அவற்றுக்கு நீங்கள் கொடுக்கும் விமர்சன பஞ்ச் லைன் சுவாரஸ்யமாக இருக்கிறது.... நன்றி!!!

Unknown said...

போட்டியிலே வாக்களிக்க வசதியா இருக்கும் சுரேஷ், நன்றி

Sud Gopal said...

//காதல் என்பதன் இடக்கரடக்கல்தான் காமம்//

தல.இப்படி உல்டாவாப் போட்டுத் தாக்கீட்டிங்களே???

கதிர் said...

தலைப்பை தேர்ந்தெடுத்தவர் என்ற வகையில உங்க வேலைய சிறப்பா செஞ்சிட்டிங்க பெனாத்தலாரே.
யாருமே மறக்க முடியாத, மறுக்க முடியாத ஒரு தலைப்பை கொடுத்து அசத்திட்டிங்க.
வளரட்டும் உங்கள் பெனாத்தல்ஸ்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தாணு.

சித்தன், எனக்குத் தெரியவில்லையே. தேன்கூடு போட்டியாளர் பட்டியலில் இருந்த அத்தனைக்கும் நான் அறிமுகம் எழுதினேன்.

நன்றி தேவ்.

நன்றி லக்கிலுக்.

நன்றி கேவிஆர்.

நன்றி தம்பி.

நன்றி சுதர்சன்.கோபால் - மன்னிச்சுக்கோ வாத்யார்.. இப்போ சரி பண்ணிட்டேன்.

ஓகை said...

//போட்டியின் தலைப்பைக் கொடுத்தவன் என்ற முறையில் அனைத்துப் படைப்புகளும் ஏதோ ஒருவகையில் எனக்குச் சொந்தமானவை என்ற ஒரு உணர்வும் அடித்தளத்தில்..//

நியாயமான உணர்வுதான். நல்ல ஒரு தலைப்பைக் கொடுத்து மிகப் பெரிய போட்டியை உருவாக்கிவிட்டீர்கள்.

பதிவுகளின் எண்ணிக்கையும் தரமும் உற்சாகமளிக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஓகை.

வவ்வால் said...

வணக்கம் சுரேஷ்!

சுய விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக பட்டியல் இட்டு சுருக்கமாக விமர்சனம் செய்துள்ளீர்கள்.நன்றி!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வவ்வால்.

Ram.K said...

நான் போட்டியில் பங்கெடுத்தாலும், என்னால் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை. அந்தக் குறையை உங்கள் பதிவு தீர்த்துவைத்து விட்டது.

நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பச்சோந்தி.

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..


அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தமிழாதமிழா..

நன்றி யாத்திரீகன். ஒரு நாள் முன்னே போட்டிருக்கக்கூடாது? நல்லாவே இருந்துது, சான்ஸ் இருந்துது..

பினாத்தல் சுரேஷ் said...

தமிழ்மணத்தில் மேலே கொண்டு வர இந்தப்பின்னூட்டம், மேலும் சிலர் படித்து போட்டியில் ஓட்டுப்போடவேண்டும் என்ற காரணத்தால்.

பி கு: இந்த டெக்னிக்கை என் எந்தப்பதிவுக்கும் உபயோகப்படுத்தியதில்லை:-)

பொன்ஸ்~~Poorna said...

தாங்க்ஸ் சுரேஷ்.. நானும் என் பங்குக்கு ஒரு பின்னூட்டம் போடறேன்.. மேல வரட்டுமே :)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க பொன்ஸ். உங்க மேலே ரொம்பக்கோவமா இருக்கேன். தனிமடல்லே போட்டிருக்கேன்:-(

 

blogger templates | Make Money Online