Jul 3, 2006

திறமைக்குப் பல முகம்

நல்ல ஸ்பீடு போடறே - நம்மகிட்டே மீட்டர் இல்லை - எப்படியும் 90 மைலுக்கு குறையாது"

"நாளைக்கு பிராக்டிஸ் போது பழைய பால்லே ரிவர்ஸ் ஸ்விங் பிராக்டிஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்."

"சார் நாளைக்கும் மேட்லேதான் பிராக்டிஸா? மேட்லேயிருந்து பிட்ச்க்கு மாறும்போது லெங்த் சரியா வர மாட்டேங்குது!"

"அது சரி! ச்ரீனாத்தும் பாலாஜியும் எந்நேரமும் ஸ்டேடியத்துலேதான் பிராக்டிஸ் பண்ணாங்களா என்ன? எதுக்கும் தயாரா இருக்கறவனுக்குத்தான் சான்ஸு!"

'திங்கக்கிழமை காலையிலேயே எனக்கு சான்ஸ் கிடச்சா நல்ல இருக்கும் சார்"

"அது நம்ம கையிலேயா இருக்கு? நாளைக்கு ஃபுல் டே நீ நல்லா பிராக்டிஸ் பண்ணு. ஆஃப் அன்ட் மிடில்லேயே கன்ஸிச்டண்டா போடு.. கன்ட்ரோல் யுவர் நெர்வ்ஸ். நீ நிச்சயமா செலக்ட் ஆயிடுவே. நாளன்னிக்கு செலக்ஷ்ன் மேட்ச் நிச்சயமா உன் வாழ்க்கையிலே மறக்க மாட்டே பாரு!"

" சரி சார் நாளைக்கு காலையிலே கரெக்டா எட்டு மணிக்கு வந்துடறேன். வண்டிய எங்கே பார்க் பண்ணட்டும்?"

"கண்ணகி சிலை எதிருலே பண்ணிடு. என் வண்டி இல்லைன்னா ஒரு மிஸ்டு கால் கொடு"
____________________________________________________________
"எதுக்காக கூப்பிட்டு அனுப்பிச்சாராம்?"

"நானே மறந்து போன விஷயம். ஆபரேஷன் லிட்டில் ட்ராப்னு ஒரு ப்ராஜெக்ட் செஞ்சேனே ஞாபகம் இருக்கா?"

"வாட்டர் மேனேஜ்மென்ட் பத்தித்தானே?"

"ஆமாம். அப்பவே செக்ரடரிக்கு ரொம்ப பிடிச்சிருந்துது. இவ்வளோ சிம்பிளான சொல்யூஷனா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டார். நான் சொன்னேன், சிம்பிளா இருக்கற பிளான் தான் சார் ஃபீஸிபிளா இருக்கும்னு சிரிச்சார்"

"ஆமாம் - அது நடந்து ஆச்சு அஞ்சு வருஷம்"

"எங்கே இருக்கே நீ? நான் ரிட்டயர் ஆயே ஆறு வருஷம் ஆச்சு! சரி -இப்போ அதுக்கு மறுபடியும் உயிர் வந்திருக்கு!"

"நாளைக்கு வாக்கிங் போய் திரும்பி வந்த வுடனே அந்த பேப்பரையெல்லாம் எடுத்து தூசி தட்டணும்"

"ஒம்பதரைக்குள்ளே வந்துருவேளோல்லியோ?"
_________________________________________________________________
"என்னடா சூசை - மறுபடியும் வலை அறுந்தா போச்சு?"

"அதை ஏன் கேக்குறே.. எனக்கு நேரமே சரியில்லை.. தொடர்ந்து மூணு முறை மகசூல் ஒன்னும் சரியில்லேன்னு இன்னும் கொஞ்சம் கடலுக்கு உள்ளாற போயி வலை அடிச்சோம்.. ரெண்டு நாள் கழிச்சுப்பாத்தா வலையிலே ஓட்டை.. சுறா ஏரியா பக்கம் அடிக்கடி போனதில்லையா.. வகையா மாட்டிகிட்டோம்."

"கிட்டானுக்கு நேத்து சரியான அறுவடையாமே.."

"அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு துரை. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை கூட அவனுக்கு வலை அறுந்ததே இல்லை."

"அது மச்சம் இல்லடா மாக்கான் -- அவன் கடல்ல இறங்கறதுக்கு முன்னாடி ஆபீஸரைப்பாத்து பேசாம போறதில்லே. எங்கே என்ன மீன் கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டு வலை வீசுறான், குத்து மதிப்பா வீசுற உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லையா?"

"நீ சொல்றதும் சரிதான். அடுத்த முறை நானும் அவனைக்கேட்டுகிட்டே நானும் போறேன். எங்க இருப்பான் இப்போ?"

"இப்போ தெரியாது.. நாளைக்கு காலையிலே படகுத்துறை பக்கமாத்தான் இருப்பான்."
________________________________________________________________
"வீரமணி நம்ம சுதந்திர தினம் என்ன கிழமைடா?"

"வெள்ளிக்கிழமை சார்"

"சரி 2010 ஆம் வருஷம் சுதந்திர தினம் என்ன கிழமையிலே வரும்டா?"

"ஞாயித்துக்கிழமை சார்"

"சரி பொலிவியா நாட்டுத் தலைனகரம் என்ன சொல்லு பாக்கலாம்?"

"லா பாஸ் சார்"

"வீட்டுலே கம்ப்யூட்டர் இருக்காடா?"

"இல்ல சார் இவன் மண்டையிலேதான் இருக்கு"

"சும்மா இருங்கடா..வீரமணி, உங்க அப்பாவை நாளைக்குஎன் வீட்டுக்கு வரச்சொல்லு"

"எனக்கு அப்பா இல்லை சார்"

"அடடா! சரி நாளைக்கு காலையிலே என் வீட்டுக்கு வறயா? நான் புது கம்ப்யூட்டர் வாங்கப்போறேன். பழைசு சும்மாத்தான் கிடக்கும், நீ எடுத்து உபயோகப்படுத்து."

"காலையிலே அம்மா கூட மீன் இறக்கப் போவோணும் சார். பத்து பத்தரைக்கு மேலே வரட்டா?"
_______________________________________________________________

அலைகள் அறிந்திருக்குமா அன்று இன்னும் எத்தனை திறமைகள் கடற்கரைக்கு வந்திருக்குமென?


இந்தக்கதையை டிசம்பர் 26, 2005 அன்று எழுதினேன். தேன்கூட்டின் இந்தமாதப்போட்டிக்கு சரியான கதை என்று கருதினாலும், போட்டி விதிமுறைகளின் படி போட்டிக்காக சமர்ப்பிக்க முடியாது என்றாலும், பல புதிய பதிவர்கள் மேற்படி நாளுக்குப்பிறகு வந்துள்ளதால் அவர்கள் படிக்கவும், கருத்துக்கூறவும் மீள்பதிகிறேன், நன்றி.

9 பின்னூட்டங்கள்:

நாமக்கல் சிபி said...

நன்றாக இருக்கிறது பினாத்தலாரே!

//அலைகள் அறிந்திருக்குமா அன்று இன்னும் எத்தனை திறமைகள் கடற்கரைக்கு வந்திருக்குமென?
//

:(

Prabu Raja said...

நல்லாதான் இருக்கு.

ஆனால் தேன் கூடு போட்டிக்கு எப்படி? இந்த மாதம்தான் 'மரணம்' தலைப்பு கொடுத்திருக்காங்களே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிபி.

நன்றி பிரபு ராஜா. நிஜமாவேவா புரியலை - இந்தக்கதைக்கும் போட்டித் தலைப்பு "மரணம்"க்கும் உள்ள தொடர்பு:

Anonymous said...

ஏற்கனவே படித்துவிட்டேன். இருந்தாலும் மீண்டும் அதே சுவாரஸ்யத்தோடு படித்து, கடைசி வரித் திருப்பத்தில் அதிர முடிந்தது.

மிக அழகாக வெறும் உரையாடல்கள் மூலம் மட்டுமே வெவ்வேறு சூழல்களையும் வெவ்வேறு மக்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் நடை - ஹேட்ஸ் ஆஃப்!

கப்பி | Kappi said...

அருமையான புனைவு...நன்றாக இருக்கிறது பினாத்தலார்.

//அலைகள் அறிந்திருக்குமா அன்று இன்னும் எத்தனை திறமைகள் கடற்கரைக்கு வந்திருக்குமென? //

நெகிழவைக்கும் வரிகள்..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானிமஸ் - வரிவரியா ஆராய்ஞ்சு புகழறீங்க - பேர் போடப்படாதா?

நன்றி கப்பி பய.

Prabu Raja said...

ஓ இது சுனாமி மேட்டரா!

சாரி பினாத்தலாரே! அவசரத்துல படிச்சதுல மிஸ்ஸாயிடிச்சி.

பினாத்தல் சுரேஷ் said...

போயிட்டுப்போகுது பிரபு ராஜா!

Anonymous said...

Nalla thiramai ungallukku, continue
_cmhoneyf

 

blogger templates | Make Money Online