Aug 9, 2006

கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - Thenkoodu Contest August

ஊர் மாறிவிட்டிருக்கிறது. விளையாடிய மைதானங்களில் கட்டடங்கள் முளைத்து தெருக்களின் அளவு சிறுத்துவிட்டது போலத் தோன்றுகிறது.

ஆறு மாதங்கள் கிராமத்தின் முகத்தை மாற்றிவிடுகின்றது. ஜாப் டைப்பிங் இருந்த இடங்களில் பிரவுஸிங் சென்டர்கள். டீக்கடையின் நீட்சியாக "சிம் கார்டு கிடைக்கும்". அரை மணிநேரமாக நடந்துகொண்டிருக்கிறேன். தெரிந்த முகம் ஒன்றுமே கண்ணில் படவில்லை.

பிழைக்கச் சென்ற இடத்தில் மதராஸியாகவும், ஊருக்கு வந்தால் வடக்கத்தியானாகவுமே பார்க்கப்படுகிறேன். எனக்கு எந்த ஊர்?

"அண்ணே, நீங்க குரு இல்ல?" குரலும் உருவமும் பரிச்சயமானதாக இருந்தாலும் பெயர் நினைவுக்கு வர மறுத்தது. ஒருவனாவது என்னை அடையாளம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவனை எனக்குத் தெரியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும்.

"ஆமாம்பா. நேத்துதான் ஊர்லே இருந்து வந்தேன்." கொஞ்ச நேரம் இப்படியே நூல் விட்டுப்பார்ப்போம். கண்டுபிடித்து விடலாம்.

"கான்பூர்லேதானே இருக்கே? எப்படி இருக்குது ஊரெல்லாம்?" இவனுக்கு என்னைப்பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.

"நல்லாத்தான் இருக்கு.. ஆமா, அண்ணன் சௌக்கியமா?"

"அண்ணனா? அவன் இப்போ உங்க ஊர் பக்கத்துலே பம்பாய்லே இல்ல இருக்கான்?" பம்பாயும் கான்பூரும் பக்கத்திலேயா? சரிதான். வட இந்தியன் விந்திய மலைக்கு தெற்கே உள்ள அனைவரையும் மதறாஸி என்றால் மட்டும் குறை சொல்வோம்!

"அம்மா நல்லா இருக்காங்களா?"

"அம்மா நீ போன முறை வந்தப்பவே போயிட்டாங்களே? நினைப்பு இல்லையா?" ஞாபகம் வந்துவிட்டது!

மறந்ததிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. விளையாடும்போது, மிகச்சிறிய உருவம் இருந்த இவனைக் கொசு என்றுதான் கூப்பிடுவோம். இப்போதோ, ரெண்டு பசு மாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறான்!

"என் பேராச்சும் ஞாபகம் இருக்கா" ஒரு நொடி முன் கேட்டிருந்தால் மாட்டியிருப்பேன்.

"என்ன உதயா? உன்னைப்போய் மறப்பேனா?"

"பரவாயில்லையே! மறந்திருப்பையோன்னு நெனச்சேன்"

"எங்க அத்தை வீட்டுக்குப் போகலாமுன்னு வந்தேன். ரோட்டு வாசல்லே புதுசா ஒரு காம்பவுண்டு போட்டுட்டாங்க, எப்படிப்போகணும்?"

"அப்படி புளியந்தோப்புக்கா சுத்திகிட்டுப் போகணும். இரு நானும் வரேன். அந்த ரோடு அப்ரூவ்டு இல்லையாம், செட்டியார் நிலமாம். அதான் அவர் காம்பவுண்டு கட்டிட்டாரு"

அத்தை வீட்டு வாசலில் எந்த மாற்றமும் இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே நான் குனிந்தே செல்லவேண்டியிருந்த நிலைப்படி. ஊதினால் பொடியாகிவிடுமோ என்று பயமுறுத்தும் துருப்பிடித்த கீல்.

"அத்தை எப்படி இருக்கீங்க?"

"யாரு குருவா? உங்க அப்பா சொன்னாரு நீ இந்த வாரம் வருவேன்னு. எப்படி இருக்கு கான்பூரெல்லாம்?" எண்பதைத் தாண்டிவிட்டிருந்தாலும் நல்ல ஞாபக சக்தி அத்தைக்கு.

"எதோ போயிக்கிட்டிருக்கு. ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன். இன்னும் ஆறு மாசத்திலே கிடைச்சிடுமுன்னு சொல்றாங்க. இல்லாட்டி வேலைய விட்டுட வேண்டியதுதான். ஆமாம், மாமா எப்படி இருக்காரு?"

"அதை ஏன் கேக்கிறே போ! வயசுதான் ஆகுது. வரவேண்டியதைத் தவிர மத்த எல்லாம் வருது. ஒரு மாசமா உடம்பு ரொம்பப் படுத்துது. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி. திரவம் திடம்னு எந்த ஆகாரமும் தங்கறதில்லை. நடமாட்டமே நிந்து போச்சு"

அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. போனமுறை வந்த போது கூட சுறுசுறுப்பாக இருந்தாரே.. ரெண்டு கிலோமீட்டரில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு நடந்தே வருவாரே!

"டாக்டர் என்ன சொல்றாரு?"

"அவன் என்னத்த சொல்வான்? வயசு ஆயிடுச்சின்னு சொல்றான். ஒரு ஆபரேசன் பண்ணனுமாம். லட்ச ரூபாய் செலவாகும். நான் பெத்ததுங்க எல்லாம் கைய விரிச்சுட்டாங்க"

அடுத்த அதிர்ச்சி. அத்தையிடம் பெரிதாக சேமிப்பு என்று இல்லாவிட்டாலும் பையன்கள் மூவரும் நல்ல வேலையில் இருந்தார்கள். ஒரு லட்சம் என்பது ஒன்றும் அவர்களுக்கு பெரிய விஷயம் கிடையாது.

"என்ன அத்தை சொல்றீங்க? மாமா எங்கே இருக்காரு?"

"இதோ கூடத்துலேதான் இருக்காரு. கூப்பிட்டுப் பாரு. முழிச்சுகிட்டிருந்தா பேசுவாரு. "

மாமாவை எனக்கு அடையாளம் தெரியவில்லை. எலும்புகள் எல்லாம் ஒட்டிப்போய், ஈசிசேரின் குழிவில் அமிழ்ந்து கண்ணைமூடி இருந்தார். அவர் உருவத்தில் இளைக்காமல் இருந்தது அந்தக் கண்ணாடி மட்டும்தான்.

"மாமா. குரு வந்திருக்கேன்"

கண்கள் லேசாக அசைந்தன. திறக்கவே பிரயத்தனப் படுகிறார் என்று தெரிந்தது. கைகளை கஷ்டப்பட்டு சேரின் பிடியில் அழுத்தி எழ முயற்சித்தார்.

"இருக்கட்டும் மாமா. எப்படி இருக்கீங்க?"

"யாரு, குருவா?"

"ஆமாம் மாமா, எப்படி இருக்கீங்க?"

"தெரியலே? வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன். அவன் வந்தாலாவது எல்லாக்கஷ்டமும் முடிதான்னு பாக்கலாம்."

"யாரைச் சொல்றீங்க மாமா?" வாயிலிருந்து வார்த்தை வரும் முன்பே எனக்கே தெரிந்துவிட்டது.

"வேற யாரு? எமன் தான்."

"என்ன மாமா இப்படிச் சொல்றீங்க? நாம நல்லதையே நெனைக்கலாமில்லையா?"

"சரி ஊர் எப்படி இருக்கு. வேலையெல்லாம் எப்படி இருக்கு?" பேச்சை மாற்ற விரும்புகிறார். யார் வந்தாலும் இதையே பேசி அலுத்துவிட்டிருக்கும்.

"எல்லாம் நல்லாதான் இருக்கு மாமா. இன்னும் ஆறு மாசத்துக்குள்ளே சென்னைக்கு ட்ரான்ஸ்பர் ஆக வாய்ப்பிருக்கு."

"எங்கே இருந்தாலும் நல்லா இரு. காசை செலவழிக்காதே. நல்லா சிக்கனமா சேத்து வையி. அப்போதான் நாளைக்கு என் நிலைமை வராது. புள்ளைங்கள நம்பாம இருக்கலாம்" ரொம்பப் பாதிக்கப்பட்டுவிட்டிருக்கிறார்.

கதவு கலகலக்கும் சப்தம் கேட்டது. அத்தையின் மூன்றாவது மகன் பசுபதி உள்ளே வந்தான்.

"அடே, குருவா, எப்படிறா இருக்கே. வருஷம் ஆயிருக்குமா பாத்து?"

"இருக்கும். போன முறை நான் வந்தப்போ நீங்க பையன் வீடு மாத்தறான்னு பொள்ளாச்சி போயிருந்தீங்க"

"அதுக்கப்புறம் அவனுக்கு போடி ட்ரான்ஸ்பர் ஆயிட்டுது. இப்போதான் போன மாசம்!"

"எனக்கு ஒரு ட்ரான்ஸ்பர் கிடைக்க மாட்டேங்குது. உங்க பிள்ளைக்கு மாசத்துலே மூணு ட்ரான்ஸ்பர். ஹூம்!"

"அது ஒரு கொடுமையான பொழைப்புடா!" என்றவன் அவன் அப்பாவிடம் திரும்பி
"அப்பா காசு வெணும்னு கேட்டிருந்தேனே.. அவசரமா வேணும்பா. கடங்காரன் நெறுக்கறான்"

"உங்க அம்மாகிட்டே கேட்டு வாங்கிகிட்டுப் போ. இப்போதைக்கு இரநூறோ முந்நூறோதான் முடியும். டாக்டருக்குத் தரணும்"

"டாக்டர்கிட்டே சொல்லிக்கலாம். எனக்கு ஒரு ஐந்நூறாச்சும் அவசரமா வேணும். வரேண்டா, பாக்கலாம்" கடைசி வரிகள் என்னைப்பார்த்து.

அவன் போய்விட்டான் என்று உறுதி படுத்திக்கொண்ட பின் தலையில் அடித்துக்கொண்டார் மாமா. "என் விதி! எனக்குன்னு வந்து பொறந்துருக்குதுங்களே!"

நான் மௌனம் காத்தேன். என்ன விஷயம் என்று சரிவரத் தெரியாத வெளியாள் வேறென்ன செய்ய முடியும்?

"பெத்த அப்பன் கிட்டேயே வாடகை வாங்கறான்."

"வாடகையா? இது உங்க வீடுதானே மாமா?"

"போன வருஷம் பாகப்பிரிவினை செஞ்சுவச்சேன். அதிலே இவனுக்கு இந்த வீடு. நீ ஏன் இன்னும் இருக்கேன்னு வாடகை வாங்கறான் கடங்காரன்"

வெளியே வந்து தெருமுனைமருந்துக் கடையில் மீண்டும் பசுபதியைச் சந்தித்தேன். பேரனுடன் நின்று கொண்டிருந்தான்.

"என்ன சொல்றது கிழம்" என்றான்.

"பாவமா இருக்கு அவரைப் பார்த்தா. அவர் இருந்த இருப்பு என்ன? இப்போ இப்படி ஆயிட்டாரு"

"அவர் ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டரா இருந்திருக்கலாம். ஆனா வீட்டுலயும் அதே பந்தாவைக் காட்டி, மருமகளுங்களும் பென்ச் மேலே நிக்கணும்னு எதிர்பாத்தா?"

"ஆபரேஷன் தவிர டெம்பரரியா நிவாரணத்துக்கு எதுவும் வழியில்லையாமா?"

"என்னவோ சொன்னாரு டாக்டர்! தர்மாஸ்பத்திரியாவே இருந்தாலும், ஒரு நாளிக்கு போய் வரவே 50 ரூபாய் செலவாகும். விரலுக்குத் தகுந்த வீக்கம்தானே வேணும்? மேலும், யாரு கூட்டிட்டுப் போறது?"

"என்ன மருந்து வாங்கறீங்க?" பேச்சை மாற்ற விரும்பினேன்.

"ஆமா.. நீயும் மெடிகல் லைன்லேதானே இருக்கே.. இந்த புரோட்டீன் மிக்ஸ் என்ன விலை இருக்கும்? இவன் 1500 ரூபாய்ன்னு சொல்லறான்!"

"அந்த விலைதான்..யாருக்கு? இவனுக்கா?" என்றேன்.

"ஆமாம். விஷமம்தான் அதிகம். சோறு தண்ணின்னா வெறுப்பு. இதை பாலில மிக்ஸ் பண்ணிக்கொடுத்தா ஓரளவுக்குக் குடிக்கிறான். நோஞ்சானா இருக்கான் பாரு!"

"தாத்தா அங்கே பாரு தண்ணி மேலே போவுது" விளக்கு ஜாலம் காட்டும் அலங்காரப்படத்தில் ஏதோ தவறு!

"பாத்தியா குரு, எவ்ளோ ஷார்ப்பா இருக்கான். கண்ணா, லைட்லே எதோ தப்பு இருக்கு. நீர்வீழ்ச்சியிலே தண்ணி எப்பவும் மேலே இருந்து கீழே மட்டும்தான் போகும். கீழேயிருந்து மேலே ஏறாது"

____________________________________
விடுமுறை நாட்களில் தேடி பிரவுஸிங் சென்டருக்குச் சென்று படிப்பதிலும் ஏன் மின்னஞ்சல்களைப் பார்ப்பதிலேயுமேகூட சிரமங்கள் இருப்பினும், நிலாவின் "உறவுகள்" தலைப்பும், நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது உருவான கருவும் தாமதிப்பதை அனுமதிக்கவில்லை.
வழக்கமான பதிவுகள் - சென்னையின் தட்பவெப்பம், முதல்முறை சந்திக்கும் பதிவர்கள், மின்னஞ்சல்களுக்கு அனுப்பவேண்டிய பதில்கள் என எழுத வேண்டியவை நிறைய- அடுத்த மாதம் தொடர்கிறேன்.இது தேன்கூடு போட்டிக்கானது.
படியுங்கள், மறவாமல், வாக்களியுங்கள்.

20 பின்னூட்டங்கள்:

Prabu Raja said...

renDu vottu ungalukkuthan thalaivaa.
onnu thamizmanaththula +,
innonnu thenkoodula.

பழூர் கார்த்தி said...

ரொம்ப நன்றாக இருக்கிறது கதை, சுரேஷ், வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

****

மிக இயல்பாக அப்பா - மகன் உறவை மூன்று தலைமுறைகளில் சொல்லியிருக்கிறீர்கள்..

****

ஊருக்கு போகும் முன் பாம்பே/புனே வந்தால் சந்திக்க விருப்பம்
எனது மெயில் ஐடி swami.plr@gmail.com

சிறில் அலெக்ஸ் said...

கத நல்லாருக்கு சுரேஷ்.. வாழ்த்துக்கள்

ராசுக்குட்டி said...

//அவர் உருவத்தில் இளைக்காமல் இருந்தது அந்தக் கண்ணாடி மட்டும்தான்.//

வழக்கம்போல கலக்கிட்டீங்க!

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Praburaja

Thanks Somberi paiyan

Thanks Cyril Alex

Thanks rasukutti.

Dont forget to vote!

துபாய் ராஜா said...

நல்ல கதை.வாழ்த்துக்கள் சுரேஷ்.

Unknown said...

சுரேஷ் பொருள் பதிந்த தலைப்பு... என்னய்யா தலைப்புன்னு யோசிச்சுகிட்டே வாசிக்க ஆரம்பிச்சேன்... முடிக்கும் போது பொளேர்ன்னு கன்னத்துல்ல அறைய மாதிரி தலைப்பு மனசுல்ல பதிய வச்சுட்டீங்க... வெற்றி பெற வாழ்த்துக்கள்

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Dubai Raja (oru mail podunga, uurukku Sep 1 varuven, appo pesalame!)

Thanks dev. (unga number maille anuppungalen.)

sudamini at gmail dot com

Boston Bala said...

பாந்தமான உரையாடல்கள். போட்டியென்று வந்துவிட்டால் பெனாத்தலார் சிங்கம். அழகாய் இருக்கிறது. பயமாய் உள்ளது.

கதிர் said...

நல்லா இருக்கு

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Thambi

Thanks Boston Bala for your Comment & 3.25/4 rating:-)

பத்மா அர்விந்த் said...

நல்லா எழுதி இருக்கீங்க. படிக்க சற்று வருத்தமாய் இருந்தாலும், நடைமுறையில் இந்த நிகழ்வுகளை காண்பது எளிது. வெற்றி பெற வாழ்த்துகள்

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Then Thuli

Jazeela said...

ஊருக்குப் போயும் நேரமெடுத்துக் கொண்டு எழுதி இருக்கிறீர்கள், உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். நல்ல கதை, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

enRenRum-anbudan.BALA said...

அன்பின் சுரேஷ்,

//"தெரியலே? வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன். அவன் வந்தாலாவது எல்லாக்கஷ்டமும் முடிதான்னு பாக்கலாம்."

//
மனதைத் தொட்டது ! In one word "EXCEPTIONAL" !
என்றென்றும அன்புடன்
பாலா

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Jessila; ingeyum vettithane:-)

Thanks Bala.

கார்த்திக் பிரபு said...

thalaiva ungal kadhai arumai..ungalu blgum..ungal blgirku en pakkthil irundhu link kdukirane.ungal anumadhiyodu..appdiye numma pkkam vandhu parunga..padicitu ungal karuthkali sollunga

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Karthik Prabhu (agni natchathiram full cast- a irukke:-))

avasiyam vandhu pakkiren.

யோசிப்பவர் said...

என்னடா, தலைப்புக்கும், கான்டெக்ஸ்டுக்கும் சம்பந்திமில்லாம ஓடிட்டிருக்கேன்னு நினைச்சேன். கடைசி வரியில், மனதில் ஒர் அடி!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி யோசிப்பவர்.. ஒவ்வொண்ண்ணா தேடிப்படிக்கிறீங்களோ?

 

blogger templates | Make Money Online