Oct 8, 2007

ஹாரி பாட்டரின் ஏழு வருடங்கள்

4 ஆவது புத்தகம் வெளிவரும் வரையில் எனக்கும் ஹாரி பாட்டர் ஒரு கூத்தாகத் தான் தெரிந்தது. கும்பல் மனப்பான்மையுடன் எல்லாரும் போய்விழும் அளவிற்கு அந்தக்கதைகளில் பெரிய உள்ளடக்கம் இருக்கும் என நான் நம்பவில்லை. என்னவோ பிலிம் காட்டறாங்கடா என்ற அளவில் ஒதுக்கியே இருந்தேன்.
 
ஆனால், நண்பர் வீட்டில் புத்தகத்தைப் பார்த்ததும் என்னதான் இருக்கு இதிலே என்று முதல் இரு பாகங்களை வீட்டுக்குக் கொண்டுவந்து, பலநாள் மறந்து, பிறகு திடீரென ஒரு உந்தம் கிடைத்துப் படித்தேன். பிறகு அடுத்தடுத்தவை, ஏழாம் பாகம் வெளிவந்த சில நாட்களிலேயே என்று மேக் அப் பண்ணிவிட்டேன்.
 
இப்போதும் ஹாரி பாட்டர் கதைகளை நான் படித்ததிலேயே பிடித்தது என்றோ, என் சிந்தனா முறைகளைப் புரட்டிப் போட்ட புத்தகம் என்றோ சொல்ல மாட்டேன். இப்போதும் ஹாரி பாட்டர் கதை / படம் வெளிவரும் நேரங்களில் நடக்கும் பில்ட் அப் ஓவராகத்தான் படுகிறது. ஆனால், சுவாரஸ்யமான கதைகளில் ஹாரி பாட்டருக்கு ஒரு தனியிடம் கொடுத்திருப்பதையும் மறைக்க மாட்டேன்.
 
தெரியாதவர்களுக்காக கதைகளின் அநியாயச் சுருக்கம்.
 
மந்திர உலகில் பிறந்தவன் ஹாரி. சிறுவயதில் அவன் தாயும் தந்தையும் மந்திர உலகின் ஆஸ்தான வில்லன் "உங்களுக்குத் தெரியும்" (you know who - பெயரைச்சொல்லக்கூட அனைவரும் பயப்படுவார்களாம்) வால்டமார்ட்டினால் கொல்லப்பட, அனாதையாகி, அம்மாவின் சாதா உலக அக்காவின் பராமரிப்பில் வளர்கிறான். சரியான வயது வந்ததும், மந்திரம் சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளிக்கு அழைக்கப்படுகிறான், ஏழு ஆண்டுகள் படிக்கிறான், நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதிக்கிறான், இறுதியாக மெயின் வில்லனைக் கொல்கிறான்.
 
ஏழு பாகத்துக்கும் இதான் சுருக்கம். இந்தக்கதையைத்தான் உலகம் கொண்டாடுகிறது! ஆனால் படிக்கத் தொடங்கினால் போதைக்கு உள்ளானது போல மொத்தத்தையும் படிக்கவைக்கும் ஆற்றல், ரௌலிங்கின் எழுத்துக்கு நிச்சயமாக இருக்கிறது.
 
படிக்காத சிலர், பொத்தாம்பொதுவாக, என்ன, மாயாஜாலக்கதைதானே.. அம்புலிமாமாவில் வராததா, பஞ்சதந்திரக்கதைகளில் இல்லாததா என்று ஸ்வீப்பிங்காகப் பேசும்போது, ஆமாம், நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன், படிக்க ஆரம்பிக்கும் வரை என்றுதான் பதில் சொல்கிறேன்.
 
கற்பனையான ஒரு உலகத்தை ஸ்தாபித்ததோடு, அந்த உலகத்தின் நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்வதிலும், கதாபாத்திரங்களை உயிருடன் செதுக்குவதிலும் கவனத்தோடு செயல்பட்டிருக்கிறார் ரௌலிங். அதுவே நம்மைக் கட்டிப்போட்டு வைக்கின்றன.
 
மாயாஜால உலகிற்கும், நம்மைப்போன்ற மக்கிள்ஸ் மக்கள்ஸ் வாழும் சாதா உலகத்திற்கும் அடிக்கடி செய்யும் தொடர்பும் (மாயாஜால மந்திரி கேபினட்டில் ஒருவராம்:-) கதையை விட்டு வெகுதூரம் விலகிவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.
 
முழுக்கவே கற்பனையான மாயாஜால உலகாக இருந்தாலும், தர்க்கரீதி (அவரே உருவாக்கிய தர்க்கங்கள்)யாக சற்றும் பிறழாமல் ஏழு பாகங்கள் எழுதுவது அசாத்தியமான சாதனைதான். மந்திரங்கள் எப்படி சொல்லப்படவேண்டும், கஷாயங்கள் எப்படி காய்ச்சப்படவேண்டும், எந்த வயதுவரை மந்திரங்கள் சொல்லக்கூடாது, எந்த மந்திரங்கள் உயிர்க்கொல்லி, மந்திர உலகில் பலசாலி எப்படி நிர்ணயிக்கப்படுகிறான் போன்ற தர்க்கங்களை முதல் பாகத்தில் இருந்து ஏழாம் பாகம் வரை மாற்றவே இல்லை.
 
ஏழு வருடங்களில் சிறுவர்களின் எண்ணங்களில் ஏற்படும் மாற்றத்தை சித்தரிப்பதிலும் ரௌலிங் அபார வெற்றி பெற்றிருக்கிறார். 10 வயதில் புத்திசாலிப் பெண் ஹெர்மாய்னியைப் பார்த்து வெறுத்து ஒதுக்கும் ஹாரியும் அவன் நண்பன் ரானும், 16 வயதில் காதல்வசப்படுகிறார்கள். குவிட்டிட்ச் என்ற மாயர்விளையாட்டின் ஹீரோக்களின் படங்கள் அடங்கிய அட்டைகளைச் சேகரிப்பதை 13 - 14 வயதில் விட்டுவிடுகிறார்கள். முதல் இரு பாகங்களில் மெயின் வில்லனாக கூடப்படிப்பவன் சித்தரிக்கப்பட, 14 வயதில் வகுப்பின் ஆசிரியர் வில்லனாகிறார். 17 வயதாகும் ஹாரிக்கு வெளியுலகத்தில் பலவானாக இருக்கும் வில்லன் தேவைப்படுகிறான்.
 
கதாபாத்திரங்களுக்கு ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். டம்பிள்டோர், ஸ்நேப், ஹாக்ரிட், வீஸ்லி குடும்பம், மால்பாய் குடும்பம் என்று ஏழு பாகங்களிலும் தொடரும் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, பெட்டிக்ரூ, சிரியஸ் ப்ளாக், ப்ளோரா போன்ற சில பாகங்களில் மட்டும் வருபவையாக இருந்தாலும் சரி, முதல் பாகங்களில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட குணாதிசயங்களை கடைசிவரை முரண் இல்லாமல் Consistency யோடு எழுதுவது பயங்கர சிரமம். முதல் காட்சியில் கோகுல் என்று வரும் இன்ஸ்பெக்டர், கடைசிக்காட்சியில் ரமேஷ் ஆவதெல்லாம் தமிழ்த் தொடர்கதைகளில் சகஜம். (நான் எழுதிய ஒரு சிறுகதையிலேயே தருமி இப்படி ஒரு பிழையைச் சுட்டிக்காட்டியிருந்தார்:-)
 
கதையாக மட்டுமே எழுதப்பட்ட முதல் பாகங்கள் வெற்றிகரமான திரைப்படங்கள் ஆகிவிட, கடைசிப்பாகங்கள் திரைக்கென்றே எழுதப்பட்டவை போல (முதல் காட்சி விறுவிறுப்பான மாயாஜாலம், பிறகு கொஞ்சம் அமைதியடைந்து மெதுவாக க்ளைமாக்ஸின் மெகா விறுவிறுப்புக்குத் தயார் செய்தல்) தெளிவாகவே தெரிகிறது. அதுவும் அந்த ஏழாம் பாகம் -  ஆரம்பத்தில் ஒரு பைட், பிறகு நண்பனின் வீட்டுத் திருமணம், பாதுககப்பான வீட்டை விட்டு வெளியே வந்து தேடல்கள், கடைசியில் பள்ளிக்கூடத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் பெரும் போர், செத்துப் பிழைக்கும் ஹீரோ -- கதை படிக்கிறேனா, பார்க்கிறேனா என்றே சொல்ல முடியவில்லை.
 
நட்பு, அண்ணன் தங்கை, காதலன் காதலி, அம்மா அப்பாவைக் கொன்றவனைப் பழிதீர்த்தல் என்று எந்த செண்டிமெண்டுக்கும் குறை வைக்காமல் நகர்கின்றன கதைகள்.
 
சிறுவர்களுக்கும் புரிதலில் கஷ்டம் இல்லாமல் செல்லும் எளிய நடை. (டிமெண்டார், அப்பாரிஷன், ட்ரேன்ஸ்பிகரேஷன் போன்ற வார்த்தைகள் புதியவருக்குக் கஷ்டமாக இருக்கலாம் - முதலில் இருந்து படிப்பவர்களுக்கு அவை மிக எளிய வார்த்தைகளே.)
 
எது எப்படி இருப்பினும், ப்ளே ஸ்டேஷன்களிலும், முட்டாள் பெட்டியின் முன்னும் செலவழிந்துகொண்டிருந்த பல சிறுவர்களை மீண்டும் படிக்கும் பழக்கத்தில் ஆழ்த்தியமைக்காகவே ரௌலிங்குக்கு ஒரு பெரிய ஓ போடலாம்.
 

11 பின்னூட்டங்கள்:

Unknown said...

முன்ன ஒரு முறை ஜி.ரா கிட்டப் பேசிகிட்டு இருந்தப்போ அவர் மூலமா ஹாரி பாட்டர் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன்..அதுவே ஆர்வத்தைத் தூண்டுவதா இருந்துச்சு.. இப்போ நீங்க வேற ஏத்தி விட்டுட்டீங்க ஆர்வத்தை... படிச்சுர வேண்டியது தான்

rv said...

பெனாத்தலார்,
இது பி.க.

கடைசியா காரி பாட்டரும் பீனிக்ஸ் கட்டளையும் படத்தை கொடுந்தமிழ்ல (unintentional double entendre க்களளுக்கு கணக்கு வழக்கில்லப்பா... அதுக்கே ஒரு பதிவு தேவைப்படும்) பாத்துட்டு இன்னும் தெளியாம அலைஞ்சுகிட்டிருக்கேன்.

அதனால் பதிவப் பத்தி எதுவும் சொல்லலை.

பினாத்தல் சுரேஷ் said...

தேவ்,

படிச்சே ஆகணும்னு சொல்லமாட்டேன், படிச்சா தப்பில்லேன்னுதான் சொல்வேன் ;)

ராம்ஸு.. தமிழ்லே பாத்தீங்களோ..

|அந்த மிருகங்கள்லாம் வருது.. ஓடுங்க| டைப்பா?

எதையாச்சும் வாழ்த்தினா கமெண்டு வரமாட்டேங்குதப்பா.. எதையாச்சும் திட்டிகிட்டே இருக்கணும் போல!

இலவசக்கொத்தனார் said...

அது என்னமோ தெரியலை இந்த ஏழாவது பாகம் படிக்க மட்டும் நேரம் கூடி வரலை.

Radha Sriram said...

நானெல்லாம் செம ஹாரி பாட்டெர் freak. ராத்ரி லைன்ல நின்னு புக்க வாங்கினோம்.நெத்தில lightining scar எல்லாம் வரைஞ்சு விட்டாங்க. onething is, iam amazed at the amount of work Rowling has put in chosing her characters' names- be it human, animal. werewolf or whatever.
இங்க போய் பாருங்களேன்...

http://www.angelfire.com/mi3/cookarama/namemean.html

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு.. ஏழாவது பாகம், பொழுதுபோக்கு மதிப்பீட்டுல ரொம்பவே சூப்பர்! சீக்கிரம் படிச்சிடுங்க. (பெஸ்டுன்னு ஒண்ணைச் சொன்னா திராபைன்னும் ஒண்ணைச் சொல்லணும் இல்லையா - 5 ஆவது பாகம் கடிதான் என் பார்வையில)

ராதா ஸ்ரீராம், ஆமாம். எல்லா விஷயத்துலயுமே அசாத்திய உழைப்பு, கற்பனைதானேன்னு சும்மா விடாத கமிட்மெண்ட் -- இதுதான் இந்தக்கதைய தூக்கி வச்சிருக்கு

G.Ragavan said...

ஹாரி பாட்டர். எப்படிப் படிச்ச கதை அது. அப்பப்பா...ஹாரி பாட்டர் புத்தக வெளியீடு வருதுன்னாலே அது திருவிழா வர்ராப்புலதான்.

இங்ஙன இருக்கு நான் எழுதுன மதிப்பீடு.
http://gragavan.blogspot.com/2007/07/blog-post_22.html

பினாத்தல் சுரேஷ் said...

ராகவன்,

படிச்சாச்சு.. ஏழாம் பாகம் படிச்சுட்டீங்களா?

Bee'morgan said...

நல்ல பதிவு.. :-) வழக்கமான விமர்சனங்கள் போல், நாலு பக்கத்திற்கு கதைச்சுருக்கம் தராமல், நறுக்கென்று எழுதியிருக்கிறீர்கள்.. :-) நன்று..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி bee'morgan. தமிழில் எப்படி எழுதுவது??

Anonymous said...

கிட்டத்தட்ட இதேமாதிரி ஓர் அனுபவம் ... சத்தியமா நான் காப்பியடிக்கலைப்பா :)

http://nchokkan.wordpress.com/2008/12/27/hp/

 

blogger templates | Make Money Online