Dec 25, 2007

தரைவாழ் விண்மீன்கள் - 1 & 2

Taare Zamin Par

பாத்திரங்கள்:

"ஹலோ, என் பெயர் யோஹன். வீட்டில் என்னை தாதா என்று கூப்பிடுவார்கள். எல்லாப் பாடங்களிலும் நான் தான் முதல் மார்க் வாங்குவேன். என்ன, போன முறை ஹிந்தியில் மட்டும் 2 மார்க்கில் முதலிடத்தைத் தவறவிட்டேன். என் தம்பி (சேம்ப் என்று அழைப்போம்) என்னவோ தெரியவில்லை, அவ்வளவு நன்றாகப் படிப்பதில்லை. எந்நேரமும் யார்கூடவாவது சண்டை இழுத்துக்கொண்டே இருப்பான். டீச்சர்களுக்கு, ஏன் அப்பா அம்மாவுக்கும்கூட என்னளவு அவன் படிப்பதில்லையே என்று வருத்தம். ஆனால் பிந்தாஸ் பையன். படம் நன்றாக வரைவான். I miss him. என்னுடைய டென்னிஸ் அரையிறுதியின்போது அவனும் கூட இருந்திருக்கலாம்.. என்ன செய்ய? அவன் தான் போர்டிங் ஸ்கூல் போய்விட்டானே?"

"ஹலோ, நான் மாயா. என் மூத்த மகன் யோஹன் எனக்குத் தொந்தரவே வைத்ததில்லை. நன்றாகப் படிப்பான், டென்னிஸ் க்ரிக்கெட் என்று எல்லாருடனும் சேர்ந்து விளையாடுவான். அவன் பிறந்தும்கூட நான் வேலைக்கு தொடர்ந்து போய்க்கொண்டுதான் இருந்தேன். ஆனால், என்னை நெளிவெடுப்பதற்கென்றே பிறந்தவன் இரண்டாமவன். காலையில் எழுப்புவதே ஒரு அவஸ்தை. நேரம் தெரியாமல் ஷவரில் வரும் தண்ணீருடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பான். எந்நேரமும் யார்கூடவாவது சண்டை. ஹோம்வர்க் - அது ஒரு மெகா யுத்தம். Table என்று எழுதச்சொன்னால் tabl, tabel என்று ஸ்பெல்லிங்குகளை உற்பத்தி செய்துகொண்டிருப்பான். என்ன ஒரு கண்றாவி கையெழுத்து? மூன்றாம் வகுப்பில் - நம்புங்கள், மூன்றாம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டான். பிரின்ஸிபல் கூப்பிட்டுச் சொன்னபோது எனக்கும் கோபம்தான் வந்தது. ஆனால், அதற்காக குழந்தையை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புவதா? "

" நீ சொல்வது சரியில்லை மாயா. ஹலோ, நான் நந்தகிஷோர் - நந்தகிஷோர் அவஸ்தி. எனக்கென்ன என் மகன் மீது பாசம் இல்லையா? என் இளைய மகனுக்காக நான் என்னதான் செய்யவில்லை? அவன் உடைத்துவிட்டு வரும் செடிகளுக்கு மன்னிப்புக்கேட்கிறேன், அவன் அடித்துவிட்டு வரும் பையன்களுக்கு நான் மருந்துக்குச் செலவழிக்கிறேன். பெரியவனை வளர்த்ததுபோலவேதானே இவனையும் வளர்க்கிறேன்? இவன் புத்தி படிப்பில் செல்லவில்லை என்றால் அதற்குக் காரணம் கொழுப்புதான். ஒழுக்கம் இல்லை. சொல்பேச்சு கேட்பதில்லை. எத்தனை அடித்தாலும் பிறகு அரவணைக்கிறேனே, அதுதான் நான் செய்யும் தப்பு. இவனை போர்டிங் ஸ்கூலில் போட்டால் அங்கே அவர்கள் இவனைத் திருத்துவார்கள். செலவு அதிகம்தான் - இருந்தாலும் என் பையனுக்காக செலவழிக்காமல் என்ன பயன்? அப்படியாவது அவன் திருந்துவான் என்றால் செலவுக்கு, செண்டிமெண்டுக்கு கவலைப்படக்கூடாது"

"என்னைப்பற்றிதான் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் இஷான் அவஸ்தி. என் உலகம் சாக்கடையில் ஓடும் மீன்களுடனும், தெருநாய்களுடனும் நட்பானது. வெளியுலகத்தின் காணும் வண்ணங்கள் மட்டுமே என்னை ஈர்க்கின்றது. 38ஆம் பக்கத்தில் நாலாம் பத்தியின் முதல்வரியைப்படி என்று டீச்சர் சொல்லும்போது வரியைப்படிக்கிறேன், பக்கத்தை விடுகிறேன். படிக்க ஆரம்பிக்கும்போது எழுத்துக்கள் நடனமாட ஆரம்பிக்கின்றன. 3 x 9 என்பதற்கு, 3ஆம் கிரகமான பூமி, 9ஆம் கிரகமான ப்ளூட்டோவுடன் மோதுவதையும், ப்ளூட்டோ காணாமல் போவதையும் மனக்கண்ணால் பார்த்துத்தான் 3 என்று விடை எழுதினேன். அது தப்பா?

தப்பே இருந்தாலும்...

இருட்டைக்கண்டால் பயப்படும் எனக்கு..

கும்பலைக்கண்டால் மிரளும் எனக்கு..

எழுத்தைக்கண்டால் ஓடும் எனக்கு..

இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?

நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?

நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?"



"நான் ராம்ஷங்கர் நிகும்ப். நியூ எரா பள்ளிக்கு தற்காலிக ஓவிய ஆசிரியனாக வந்திருக்கிறேன். ட்யூலிப் எனும் சிறப்புச் சேவை சிறார் பள்ளியிலும் பணிபுரிகிறேன். 3ஆம் வகுப்புக்கு உள்ளே நுழைந்ததும் அத்தனை சிறுவர்களும் என்னை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள், என்னுடன் ஆடினார்கள், பாடினார்கள், வரைந்தார்கள் - ஒருவனைத் தவிர. இஷான் அவஸ்தி. எல்லா ஆசிரியர்களிடமும் கெட்டபெயர் மட்டுமே வாங்கியிருக்கும் இஷானின் பிரச்சனை அவனுடைய நோட்டுப்புத்தகங்களிலேயே தெரிந்தது. இஷான், ஒரு கவனம் தேவைப்படும் சிறுவன், அவனுக்கு அது கிடைக்கவில்லை. என்னையே கண்ணாடியில் பார்ப்பதுபோல் இருந்தது அவனைப்பார்க்கையில்.. ஏதேனும் செய்யவேண்டும் இந்தச் சிறுவனுக்கு"

இவ்வளவுதான் முக்கியமான கதாபாத்திரங்கள். இவற்றை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தமான பாடத்தைத் தந்திருக்கிறார் ஆமிர்கான்.

படம் தொடங்குகையில் SAW -- WAS-- WATCH--CAR எனப்படிப்படியாக உருவாகிறது ஒரு குறுக்கெழுத்து. பின்னணி இசை ஏதுமற்ற சூழலில், அருகில் உள்ல குழந்தைகள் முதல் வார்த்தைகளைச் சத்தம் போட்டுப் படிக்க, பெரியவர்கள் மனதுக்குள் படிக்க.. அடுத்தடுத்த வார்த்தைகள் வருகையில் வேகம் ஏறுகிறது.. அதே நேரத்தில் பின்னணி இசையும் படிப்படியாக அதிகரித்து.. குழந்தைகள் பெரியவர் யாரும் படிக்கமுடியாத எழுத்துக்களின் குழப்ப சங்கமமாகத் திரை நிறைய.. அங்கிருந்தே ஆரம்பிக்கிறது நான் குழந்தை வளர்க்கும் லட்சணத்துக்கு சாட்டையடி. (நான் என்பது என்னை மட்டும் குறிக்கவில்லை என்பதை அக்கம்பக்கம் உள்ள ரசிகர்களைப்பார்த்து அல்பசந்தோஷம் கொண்டேன்)

எந்த அளவுக்கு நம் உலகை நாம் எழுத்துக்களால் நிரப்பிவைத்திருக்கிறோம்! எண்கள் எழுத்துக்கள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனையாகவேணும் பார்க்கமுடியுமா?

விருப்பமில்லாத புத்தகத்தை இப்போது படிக்கும்போதும்கூட எழுத்துக்கள் நடனமாடுவதைப் பார்க்கமுடிகிறது. அப்படி இருக்கையில், எட்டு வயது குழந்தைக்கு பாடப்புத்தகத்தின் எழுத்துக்கள் நடனமாடுவதை எப்படி நம்மால் கூச்சமில்லாமல் கிண்டல் செய்யமுடிகிறது? ஏன் நாம் கொஞ்சம் கூட ஈவிரக்கமின்றி அத்தனை எழுத்துக்களையும் 5 வயது மூளைக்குள் திணித்து மூட்டை கட்ட முனைகிறோம்? BIRTHDAYவின் ஸ்பெல்லிங்கை என் 5 வயது மகள் தவறாகச் சொன்னாலோ எழுதினாலோ திட்ட எப்படி மனது வருகிறது? அபாகஸ்ஸின் மணிச்சட்டங்கள் வேறு தாளகதிக்கு ஆடுகிறது என்று சொல்லும்போது அதைக் கவனிக்காதே, கணக்கைப் போடு என்று கற்பனைக்குச் சாவுமணி அடிக்க ஏன் முனைகிறோம்? g ஐப் பார்க்கையில் அது தாடி வைத்த தாத்தாவை நினைவுபடுத்துவதாகக் கூறினால் அதை விட்டு ஏன் கையெழுத்தைச் சரிசெய்யத் துடிக்கிறோம்? ஏன் A1 வாங்காவிட்டால் கோபம் அடைகிறோம்? இடமிருந்து வலம் எழுத்துக்களில் பழகிய குழந்தை வலமிருந்து இடம் மாறும்போது தவறும் செய்யலாம் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்? "அவையத்து முந்தி இருக்கச் செயல்" மட்டும்தானே நம் கடமை? அதை மீறி ஏன் முதலிலேயே இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறோம்?

ஏன் அந்த பாழாப்போன ஐஐடி டாக்டர் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்கிறோம்? அதை விடுத்தவர்கள் முன்னுக்கு வந்ததில்லையா? படிப்பில் குறைவான குழந்தைகள் அனைவரும் ஒழுக்கம் குறைந்தவர்களா? ஏன் ஷூலேஸ் கட்டுவதையும் டை நாட் போடுவதையும் 10 வய்துக்குள்ளேயே கற்றுக்கொள்ளவேண்டும்? சேறு சகதியில் குதிக்கும்போது ஷூ அழுக்கானால் பள்ளி ஏன் விடமறுக்கிறது?

இத்தனை கேள்விகளும் இஷான் அவஸ்தி மூலமாகக் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி. டிஸ்லெக்சியா பற்றியே கதை பேசினாலும், அந்தக்குறை இல்லாத குழந்தைகளுக்கும் நாம் எவ்வளவு peer pressure தருகிறோம் என்பதை யோசிக்கவைக்கிறது.

நம்முடைய எத்தனையோ அழுத்தங்களுக்குக் குழந்தைகள் ஈடுகொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஈடுகொடுக்கமுடியாத குழந்தைகள்?

அப்படித்தான் நம் இஷானும் - முயற்சித்தான், முடியாதபோது கோபப்பட்டான், அந்தக்கோபத்தை பக்கத்து வீட்டு பூந்தொட்டி மேலும், 0 மதிப்பெண் காட்டும் தேர்வுத்தாள் மேலும் காட்டினான். டெஸ்ட் பேப்பர் கையெழுத்து வாங்காமல் ஆசிரியரைச் சந்திக்க முடியாத பயத்தில் பள்ளியைவிட்டு வெளியேறி வேடிக்கை பார்க்கச் சென்றான், அந்தத் தவறை மறைக்க அண்ணனை வைத்து பொய்க்கையெழுத்து போட்டான் -- அத்தனை வண்டவாளங்களும் வெளிவரும் நேரத்தில் அவனுக்கு குற்ற உணர்ச்சி என்பது மறைந்திருந்தது.

இஷானுடைய "குற்றங்களுக்கு" யார் காரணம்? இந்தக்கேள்விக்கு சரியான விடைதெரியாத - விடை அறிய முயலாத - இப்படி ஒரு கேள்வி இருப்பதையே அறியாத - தந்தை அவனை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புகிறார். இஷானுக்கு இருந்த ஒரே பற்றும் அறுந்து விழுகிறது. அவன் கண்களில் கண்ணீர் வற்றுகிறது.. வெறுமையின் உச்சத்துக்குச் செல்கிறான். உலகத்தின் வரையறைகளை முற்றாக நிராகரித்து தனக்குள் சுருள்கிறான். தன்னம்பிக்கையை முழுமையாக இழக்கிறான்.

ராம்ஷங்கர் வருகை இஷானுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ராம்ஷங்கருக்கு இஷானின் நிலை தெளிவாகத் தெரிகிறது. அன்பு, அரவணைப்பு, பொறுமை - மூலமாக இஷானுக்குள் தூங்கிக்கிடக்கும் தன்னம்பிக்கையை மீட்கிறான்..

கதை என்பது இவ்வளவுதான். ஆனால் படத்தைப் பற்றிய விமர்சனம் இன்னும் இருக்கிறது.

****

முதல் பதிவு தன்னளவில் முழுமை பெறாததால் அதையும் இங்கேயே இணைத்திருக்கிறேன். நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும்.

17 பின்னூட்டங்கள்:

கதிர் said...

பொறாமையா இருக்குங்க சுரேஷ்.
இந்த படத்தை ட்ரெய்லர்ல பாக்கும்போது முடிவு பண்ணேன் நாமதான் இதை முதல்ல பாக்கணும்னு. கம்பெனி யாரும் வராததால பாக்க முடியாம போச்சு. இந்த வாரம் கண்டிப்பா பாக்கணும்.

இலவசக்கொத்தனார் said...

என்னமோ ஹிந்தி படம் பார்த்துட்டு வந்திருக்கீரு போல. (வேண்டாம் வேண்டாமுன்னா கேட்கறீரா, அட்லீஸ்ட் விமர்சனம் போடாம இருக்கலாமுல்ல.) அதான் இந்தத் தமிழ் விமர்சனம் கூட நமக்குப் புரிய மாட்டேங்குது.

ஆனா ஒரு ஸ்பெல்லிங் மிஷ்டேக் இருக்கு பாருங்க. அவஸ்தை அப்படின்னு எழுத வந்தது எல்லாம் அவஸ்தி அப்படின்னு ஆயிருச்சு போல!

வர்ட்டா!

கோபிநாத் said...

\\கதை என்பது இவ்வளவுதான். ஆனால் படத்தைப் பற்றிய விமர்சனம் இன்னும் இருக்கிறது.\\

வெயிட்டிங் தல ;)

பத்மா அர்விந்த் said...

மிக அருமையான படம். இப்படி ஒரு கருத்தை எடுக்க வேண்டும் என்ரு எண்னியதற்கே அமீருக்கு வாழ்த்துகள். இதை ஒட்டிய அவருடைய செவ்வியயும் கேட்க நேரிட்டது. இதில் ஒரு காரணம் ஒட்டிய என் பழைய பதிவொன்று:http://reallogic.org/thenthuli/?p=132

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி.. இதுக்கு யாரையாச்சும் உதைக்கணும்னா, குசும்பன் ரெடியா இருக்காரு. இன்னிக்கு இன்னொருமுறை போறாரு போல :-))

கொத்தனார்,

இன்னொரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை கவனிக்கவே இல்லையே.. பாடம்னு போட்டிருக்கேன், படம்ன்றதுக்கு :-)

ஜோக்ஸ் அபார்ட், நல்ல சப்டைடிலோட பாருங்க, நிச்சயம் புரியும்.

பினாத்தல் சுரேஷ் said...

நாளைக்கு / மறுநாள் வந்துடும் கோபிநாத்.

பத்மா, நான் உங்களுடைய பதிவை ஏற்கனவே படித்திருக்கிறேன், எனவே உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன்.

இப்படி ஒரு கருத்தை எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அதை மிக அருமையாக டெலிவர் செய்ததற்கும் சேர்த்து ஆமிருக்கு ஒரு பெரிய ஓ!

திவாண்ணா said...

இந்த காலத்துக்கு மிகவும் தேவையான சமாசாரம். பெறோர் கற்பனையால் அவஸ்தை பட்ட நிறைய சிறுவர்களை பார்த்துவிட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி திவா.

உண்மை. நம் திணிப்பால் குழந்தைகளுக்கு என்ன கஷ்டங்கள் என்பதை யோசிக்கச் சந்தர்ப்பம் கொடுக்கவேனும் இதுபோன்ற படங்கள் தேவை.

Radha Sriram said...

நல்ல விமர்சனம்.....படத்த பாக்கணும்(சிவாஜியையே இப்பதான் பாத்தேன்!! அதுகூட peer pressure னால தான் பாத்தேன்.:):).....யாரும் தேர்ந்தெடுக்காத சப்ஜெக்ட்.அதுக்கே ஆமீர பாராட்டணும்.
//விருப்பமில்லாத புத்தகத்தை இப்போது படிக்கும்போதும்கூட எழுத்துக்கள்......//
இப்படி மட்டும் எல்லா பெற்றோர்களும் சிந்திக்க ஆரம்பிச்சா எவ்வளோ நல்ல இருக்கும்??!!!!

Anonymous said...

yeah, it was a greatttt movie...watched 2 days ago...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எந்த அளவுக்கு நம் உலகை நாம் எழுத்துக்களால் நிரப்பி வைத்திருக்கிறோம்!//

பதிவுலகத்தைச் சொல்லுறீங்களா பெனாத்தலாரே? :-) ச்ச்ச்சும்மா...

அந்த ஆரம்பக் காட்சி, நிசமாலுமே அட்டகாசம்! எழுத்துக்கள் தேனீக்கள் போல குபுகுபு என்று தோன்றிக் கொண்டே இருக்கும் காட்சி அமைப்பு...பலரின் மனசாட்சியையும் கேள்வி கேட்கும்!

//BIRTHDAYவின் ஸ்பெல்லிங்கை என் 5 வயது மகள் தவறாகச் சொன்னாலோ எழுதினாலோ திட்ட எப்படி மனது வருகிறது?//

ஹூம்...ஆபிசில் ஸ்பெல் செக்கர் (பிழை அறிவுறுப்பான்) இருந்தும் கூட நாம செய்யும் எழுத்துப் பிழைகளை எல்லாம் என்ன சொல்வது? மற்றவர் அதைக் கேலி செய்தாலேயே கோவம் வருது!

ஆனா பசங்க மட்டும் தப்பே செய்யக் கூடாது! நம்மள விட ஒரு படி மேல இருக்கணும்!
தம்மிற் தம் மக்கள் அறிவுடைமை - அது மட்டும் வேணும்!
அடுத்த வரி
மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது - அது வேணவே வேணாம்! :-)
நம்ம சுயநல வடிகால்கள் தான் எப்படி எல்லாம் வடிவெடுக்குது?

இரண்டு தலைமுறைக்கு முன்பு இப்படி ஒரு திணிப்பு இருந்துச்சா-ன்னு சந்தேகம் தான்!

திருத்துதல்-திணித்தல் ரெண்டுக்குமே வித்தியாசம் தெரியாம போறதால் வரும் அவஸ்தையை மிகவும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் தாரே ஜமீன் பர் படம்....ரொம்ப நாள் மனசில் இருக்கும்!

பசங்களையும் இந்தப் படத்துக்குக் கூட்டிப் போனவங்க, பசங்க ரெஸ்பான்ஸ் பத்தி ஒரு பதிவு போடலாமே? :-)

குசும்பன் said...

இது முறையாக இருக்கு. நல்ல விரிவாக நன்றாக இருக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ராதா ஸ்ரீராம். சிவாஜி மாதிரி லேட் பண்ணா தப்பில்லைன்னு இந்தப்படத்துக்கு சொல்ல மாட்டேன் :-)

ஆமாம் விஜி. கிரேட் தான்.

ரவி, (இப்படி சுருக்கிக்கறேனே உங்க பர்மிஷனோட:-))

ப்ளாக் மட்டும் இல்லை -- எல்லா இடமும் எழுத்து எழுத்து எழுத்துதான்.

நான் என் குழந்தைகளுடன் தான் போனேன். சின்ன குழந்தை எதையும் கவனிக்கும் வயசில்லை. பொதுவாக எங்களைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள். பெரிய பெண் ரொம்பவே ரசித்தாள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குசும்பன்.

ஹாரி said...

அடடா, அடுத்த வாரம் வரை தாங்காது போலிருக்கே!

சண்டே ட்ரை பண்றேன். (அதுவே அடுத்த வாரம்தானா?)

Sridhar V said...

படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் உங்கள் விமர்சனம் மிக அற்புதம்.

ஆமிர்கான் ஒரு ஆச்சர்யப்பட வைக்கும் கலைஞர். அவருடைய சொற்ப படங்கள்தான் பார்த்திருக்கிறேன். அவருடைய 'லகான்' என்னளவில் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கண்டிப்பாக பார்க்கிறேன்.

Boston Bala said...

---3 x 9 என்பதற்கு, 3ஆம் கிரகமான பூமி, 9ஆம் கிரகமான ப்ளூட்டோவுடன் மோதுவதையும், ப்ளூட்டோ காணாமல் போவதையும்---

நல்ல ரசனை அய்யா உமக்கு :)

 

blogger templates | Make Money Online