Dec 14, 2009

திருத்த வேண்டிய பதிவு

சரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது.

நம்பிக்கை

சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.

எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.

இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.

"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.

"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"

"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"

"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"

"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"

"சொல்லு. வேற என்ன விஷயம்?"

"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு"

"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே?"

"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"

"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"

ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.

"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"

"நான் தான் பேசறேன். கோபிதானே?"

"ஆமாம் சார்"

"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"

"ப்ராப்ளமா சார்?"

"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"

"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"

"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"

ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.

சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.

"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"

"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"

"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"

"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."

காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.

"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"

"என்ன சொல்றாங்களாம்?"

"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"

"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"

"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்!"

சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.

"சரி பாக்கறேன். வேற எதுவும்?"

"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"

"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"

"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"

சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.

ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.

"முத்து, கேண்டீன் வர்றயா?"

ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,

நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்

கேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம்.

”ஓக்கேதானே?” என்றேன்.

”பின்ன?”

பெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல்.

”நெருப்புப் பெட்டி இருக்கா?” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான்.

தீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி..

****

முன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.



21 பின்னூட்டங்கள்:

குழலி / Kuzhali said...

ஓ இது நீங்க அந்த பத்திரிக்கை அலுவலகத்துல மூன்று பேர் தற்கொலை செய்துக்கிட்டாங்களே அந்த மேட்டர் பற்றி எழுதியிருக்கிங்களா?

ஆயில்யன் said...

சம்பவம் சம்பவம்ன்னு சொல்லுறீங்களே அப்படி ஒரு சம்பவமும் நடக்கவே இல்லையே ! - திருத்திக்கிட்டே போகவேண்டியதுதான் எல்லாத்தையும் நீதிமன்றமேஏஏஏஏஎ சொல்லிடுச்சுல்ல !

இந்த சம்பவத்துல கூட முத்து பாவம்தான் !

சென்ஷி said...

:(

ப்ச்.

அகமது சுபைர் said...

MLA, MP எலக்‌ஷன் ஏதாவது சமீபமா வருதா??

Unknown said...

"தற்கொலை" செய்துகொண்ட அந்த மூன்று பேரின் ஆத்மா சாந்தியடையட்டும் :(

வேற என்ன சொல்றது?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:((

ஜீவன்பென்னி said...

:(

இதுதான் இந்திய நீதித்துறை. காசுக்காக ஒரு நாட்டின் குடியரசுத்தலைவருக்கே வாரண்ட் கொடுத்தவங்களாச்சே.

Jazeela said...

இதைப் பற்றியெல்லாம் கதை எழுதுபவர்களுக்கும் பெட்ரோம் கேன் தயாராவதாக கேள்வி. பத்திரமப்பாத்துக்கங்க. :-|)

M.S.Vasan said...

We have to CORRECT the 4 Pillars of the Democracy stucture, NOT your writting in the blog. No NOTE will be noted by the COURT but the voice of the VOTE.

seethag said...

வகை சிறுகதை, நையாண்டி, புனைவு....


நீங்க வகைப்படுத்தியது ...............ஆனா கண்டிப்பா நிஜம்னு மட்டும் சொல்லல.இல்லனா ஆட்டோ வந்திருக்கும்,நமக்கும் தமிழ்னாடு எவ்வளவு மோசம்னு ஆயிருக்கும்.இப்ப்போ மனசை தேத்திக்கலாம்.எல்லாம் புனைவு தானே?

PPattian said...

எங்கு தேடியும் எனக்கு இந்த தீர்ப்பு குறித்த செய்தி கிடைக்கவில்லை. TVயிலும் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஏதாவது லின்க் இருந்தால் தரமுடியுமா?

thiyaa said...

உலகில் சுகமான வேலைகள் இரண்டு.


ஒன்று :- பிழை கண்டு பிடிப்பது.

இரண்டு:- கேள்வி கேட்பது.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க குழலி. ஆமாம் அந்தத் தற்கொலை மேட்டர்தான். இவ்ளோ நாள் கொலைன்னு நினைச்சுட்டேனேன்னு குற்ற உணர்வா இருந்தது.

ஆயில்யன், சம்பவம் நடந்ததாம், முதல்ல டிவி சொன்னதுதான் பொய்யாம். எவ்ளோ க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க. இந்த வருஷம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் விருது அந்த நியூஸுக்குதான்.

ஆமாம் சென்ஷி.

பினாத்தல் சுரேஷ் said...

சுபைர்.. இதென்ன கேள்வி? எப்பவும்தானே எதாச்சும் எலக்‌ஷன் வந்துகிட்டேதான் இருக்கு.

தஞ்சாவூரான். ஆமாம், வேற என்ன சொல்றது?

உண்மைதான் செந்தில்வேலன்.

பினாத்தல் சுரேஷ் said...

ஜீவன்பென்னி, உண்மைதான்.

ஜெஸிலா, சரிதான். பெட்ரோல் நீங்களே ஸ்பான்சர் பண்ணுவீங்க போலிருக்கே!

ஆமாம் முரளிகண்ணன். எவ்ளோ கொழுப்பிருந்தா பொது இடத்துல தற்கொலை பண்ணிப்பாங்க?

பினாத்தல் சுரேஷ் said...

வாசன், இல்லீங்க, தீர்ப்புகளே திருத்தப்படலாம்னும்போது பதிவுகளும் திருத்தப்படலாம். என்ன, வருத்தப்பட்டு திருத்தப்படுது :-(

சீதா, இது ஒரு சிறுகதையா அப்ப எழுதினேன், அதனால புனைவு. இப்பவும்தான்;-) தீர்ப்புக்குக்கூட டிஸ்கி போட்டுடுவாங்க போல.

புபட்டியன், நான் டிவியிலே பார்த்தேன். லின்க் தேடினா கிடைக்கும் - ஆனா நான் ஒரு சோம்பேறி. மன்னிக்க :-)

தியாவின் பேனா, என்ன சொல்லவரீங்க?

Anonymous said...

Very best of you. New height of creativity.

பூங்கோதை said...

ultimate!

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கு கருத்துக்கும் நன்றி அனானிமஸ், பூங்கோதை.

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Welcome back with a brisk satire !

What happened .. your blogposts have reduced in the last three years.

PLease,post more.

Raja said...

vayatherichal... andha pillaigalai petravargalukku yeppadi vayaru yeriyum....

 

blogger templates | Make Money Online