Dec 26, 2009

நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!

அவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழுவதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-)

12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால் மற்றவர்களை அடிமையாகவும் தாழ்ந்தவர்களாக்கும் எண்ணங்களும் வரலாற்றுக்குப் புதிதல்ல.

நிறைந்த கோப்பை கொண்ட மனிதர்களின் மனத்தில் வேற்று மக்களின் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் புரியாமல் போவதும், அவற்றை காட்டுமிராண்டித்தனமாகப் பார்ப்பதும் நிச்சயமாகப் புதிய விஷயமல்ல. அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காலிக் கோப்பையாளர்களையும் கட்டம் கட்டி ஒழித்ததும் அதே நேரங்களில் நடந்தவைதான்.

இயற்கை கொடுத்த வளங்களைத் தங்கள் தனிப்பட்ட உரிமை என்று நம்பி,அதைப் பங்குபோட வரும் வேறெவரையும் எதிரியாக்கி, வில்-அம்புக்கு துப்பாக்கி, துப்பாக்கிக்கு வெடிகுண்டு என்று ஆயுதங்கள் வளர்த்த தொழில்நுட்பத்தால் எதிரிகளைப் பந்தாடி, இயற்கைக்கு நிரந்தர மாற்றங்களை - திரும்பமுடியாத மாற்றங்களை உண்டுசெய்து, வல்லான் வகுத்த வாய்க்காலில் யாரையுமே வாழவிடாமல் செய்வதும் மனிதர்களின் வழக்கம்தான்.

மனிதனின் இந்த இயற்கையான கேடுகெட்ட மனோபாவத்தை விண்வெளியில் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் கேமரூன்.

மனிதனுக்கும் நாவிகளுக்குமான போராட்டத்தில் ஆரம்பத்தில் மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம்.

பண்டோராவின் வினோத மிருகங்களையும் பூச்சிகளையும் தொங்கும் மலைகளையும் (அல்லேலூயா மவுண்டன் - ஆம். Chomolungma என்று Everest ஐ சொன்னால் நமக்குப் புரியாமல் போனதை குத்திக்காட்டிய ஜெஃப்ரீ ஆர்ச்சரின் Path of Glory நினைவுக்கு வந்தது) பறவைகள் தேர்ந்தெடுக்கும் நாவிக்களையும் தொட்டுவிடும் தூரத்தில் இயல்பாக உலவவிட்ட முப்பரிமாணத்தையும் மீறி..

மனிதர்களை ஒற்றுமையால் வென்று சிறைப்படுத்தி உங்கள் பச்சை இல்லாத கிரகத்துக்கே திருப்பிப் போங்கள் என்று அனுப்பும் இறுதிக்காட்சியையும் மீறி..

இன்னொரு பத்தாண்டுகளில் இன்னும் பெரிய ஆயுதங்களோடு மனிதர்கள் போகத்தான் போகிறார்கள் பண்டோராவுக்கு, ஜெயிக்கத்தான் போகிறார்கள் என்ற வரலாற்று யதார்த்தம் சக நாவியான எனக்குத் தோன்றி வருத்தம்தான் தந்தது.

படம் - நிச்சயம் பாருங்கள், எல்லாரும் பாருங்கள்!

Dec 14, 2009

திருத்த வேண்டிய பதிவு

சரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது.

நம்பிக்கை

சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.

எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.

இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.

"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.

"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"

"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"

"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"

"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"

"சொல்லு. வேற என்ன விஷயம்?"

"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு"

"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே?"

"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"

"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"

ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.

"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"

"நான் தான் பேசறேன். கோபிதானே?"

"ஆமாம் சார்"

"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"

"ப்ராப்ளமா சார்?"

"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"

"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"

"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"

ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.

சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.

"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"

"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"

"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"

"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."

காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.

"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"

"என்ன சொல்றாங்களாம்?"

"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"

"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"

"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்!"

சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.

"சரி பாக்கறேன். வேற எதுவும்?"

"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"

"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"

"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"

சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.

ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.

"முத்து, கேண்டீன் வர்றயா?"

ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,

நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்

கேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம்.

”ஓக்கேதானே?” என்றேன்.

”பின்ன?”

பெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல்.

”நெருப்புப் பெட்டி இருக்கா?” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான்.

தீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி..

****

முன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.



Nov 2, 2009

பினாத்தல் வரலாற்றில் முதல் முறையாக!

முதல் முறையாக அச்சில் ஒரு சிறுகதை.



என் கதை அச்சாகவேண்டும் என்று வெறியாய் நான் என்றும் செயல்பட்டதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதி, பலமைல்தூர அஞ்சலில் போட்டு மறந்து, ஆரம்ப ஆர்வங்கள் எல்லாம் காணாமல் போய், வரவில்லையா சரி என்று சமாதானப்படுத்திக்கொண்டதும் பலமுறை அல்ல - இரண்டோ மூன்றோதான் எழுதினேன்.

பின் வலைப்பதிவுக்கு வந்தபின் பதிவின் உடனடிப் பதிப்பும் அதைவிட உடனடி விமர்சனமும் அச்சிற்கான காத்திருத்தலை தேவையற்றதாக்கியது.

இருந்தாலும் உள்ளுக்குள் அந்த ஏக்கம் ஒரு மூலையில் தொக்கிக் கொண்டே இருந்தது.

அச்சுக்கு கதை அனுப்புவது என்பது வேறு ஒரு வகை. அதற்காகச் செய்யப்படவேண்டிய ஜிகினாக்கள் வேறு என்று சொல்லிக் கொடுத்து அதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.

குங்குமம் 02-11-2009 தேதியிட்ட இதழில் “கைவண்ணம்” என்ற பெயரில் அச்சாகியுள்ளது. அதன் நகலை இங்கே குங்குமத்துக்கு நன்றியுடன் கொடுத்துள்ளேன்.

Oct 29, 2009

படுக்கை - சிறுகதை

படுக்கையில் கிடந்தான் கிழவன். எவ்வளவு நாள் ஆசைப்பட்டிருப்பேன் இவனை இப்படிப்பார்க்க.

”தேவா”

கவனிக்கவில்லை. அவனை இந்தப்பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை.

“தேவா.. கண்ணைத் திறந்து பாரு”

புரண்டு படுக்க முயற்சித்தான். குத்தல் வலியில் முகம் அஷ்டகோணல் ஆனது. இந்த நிலையில் இருப்பவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறுதான். இருந்தாலும் என்னால் மகிழ்ச்சியை மறைக்கமுடியவில்லை.

“நீயா? இப்ப திருப்தியா இருக்கணுமே”

“திருப்தி? அதை நான் இழந்து பல ஜென்மம் ஆச்சு.”

“இன்னுமா உன் கோபம் அடங்கல?”

“அவ்வளவு சுலபமா? உன் வீரத்தை என்கிட்ட எத்தனை முறை காமிச்சிருக்கே? இப்பதானே நான் ஆட ஆரம்பிச்சிருக்கேன்!”

வலியிலும் கிழவனுக்கு சிரிப்பு வந்தது,

“நீயா? இப்ப ஆடறியா? நீ ஜெயிச்சிட்டதா நினைக்கிறயா?”

”தெரியும் தெரியும். இப்பவும் எதாச்சும் சொல்லுவே. இப்படி நீ படுக்கையா கிடக்கறதுக்கு நான் காரணம் இல்லன்னு சொல்லுவே”

”நீ நம்பமாட்டே. ஆனாலும் சொல்றேன். நீ இல்லை!”

அதே சிரிப்பு. பலவருடங்கள் முன்பு எரிச்சலை ஏற்படுத்திய அதே சிரிப்பு.

தேவா அப்போது மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அப்போதும் என்னைப்பார்க்கையில் கிழவன் தான்.

நான் பயணத்தில் களைத்துப் போயிருந்தேன். ஏமாற்றங்களில் அடிபட்டிருந்தேன்.

”திரும்ப வந்துட்டியா? போன வேலை?” உண்மையான கனிவோடு கேட்பவன் போலவே கேட்டான்.

தலையை ஆட்டினேன். கண்ணீர் அவனுக்கு கதை சொல்லியிருக்கும்.

”என்ன பண்ணப்போறே?”

எச்சிலை விழுங்கிக்கொண்டேன். இவனிடம் எப்படிச் சொல்வது?

“நீங்க..” வார்த்தை திக்கியது.

“நான்?” தேவாவின் முகம் குழப்பமானது.

“நான் உங்களை..”

“என்னை?” வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளி அவனைத் துன்புறுத்தியது போல.

“நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறீங்களா” சொல்லியே விட்டேன். இந்தக் கிழவனைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லும் அளவுக்கு விதி என்னைக் கொண்டு விட்டதை நினைத்து இலக்கில்லாத கோபம் வந்தது. விதியா? இவனா? இல்லை என் கோபத்தின் இலக்கு இவன் தான்.

உடனே பதில் வரவில்லை. என்னை ஏற இறங்கப் பார்த்தான். என் அழகு பருவத்தின் உச்சத்தில் இருந்த நேரம் அது. சம்மதித்து விடுவான். எங்கே போகிறான். கல்யாணம் மட்டும் ஆகட்டும். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம். வட்டியும் முதலுமாக.

இந்த வயதில் இவ்வளவு அழகான பெண் கிடைத்திருக்கிறாள். முதலில் அவன் கண்ணில் தெரிந்தது ஆசைதான். ஆனால் கொஞ்ச நேரம்தான். நடைமுறைச் சிக்கல்களை நினைத்திருப்பான் போல. ஆசை போய் ஏமாற்றம் வந்தது.

“என்ன பேத்தறே? உன் வயசென்ன என் வயசென்ன? இந்தக் கிழவனை ஆசையா படறே?” அவன் குரலில் அது உண்மையாக இருந்துவிடக்கூடாதா என்ற ஆசை இருந்தது.

“நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா எனக்கு வேற வழி இருக்கா?”

உண்மை சுட்டிருக்கவேண்டும். கோபமாக எழுந்தான்.

“உனக்கு வேற வழி இருக்கான்னு தெரியாது. எனக்கு வேற வழி இருக்கு. நீ எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?”

ஒருவேளை பொய் சொல்லியிருந்தால் கிழவன் அன்றே மசிந்திருப்பானோ என்று பலமுறை பிறகு யோசித்திருக்கிறேன். எவ்வளவு சுலபமாக முடிந்திருக்கவேண்டிய பழிவாங்கல். எத்தனை வருடங்கள் இழுத்துவிட்டது. ஆனால்.. இன்றாவது முடிந்ததே. கிழவனை திருப்தியாகப் பார்த்தேன். முனகிக்கொண்டுதான் இருந்தான்.

“நான் அன்னிக்கே உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டிருப்பேன். ஆனா ரொம்ப சீக்கிரமா படுக்கையில விழுந்திருப்பேன். உன்னோட ஆசையும் அதுதான்னு எனக்கும் தெரியும்” தேவா ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் வலி தெரிந்ததில் என் வெறி தணிந்தது.

“உன்னோட ஆசை மட்டும் இல்ல.. என்னோட ஆசையும் அதுதான். சொல்லப்போனா அன்னிக்கு உன்னை ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு என்னை நானே திட்டிக்காத நாளே கிடையாது.”

சாகும் நேரத்தில் பேசுகிறான். ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

“பாழாப்போன கௌரவர்கள், பாண்டவர்கள்.. அவங்க நல்லதை நினச்சு பிரம்மச்சரியம் பேசியே என் வாழ்க்கையை கெடுத்துகிட்டேன். உன் வாழ்க்கைய சர்வநாசம் செஞ்சிட்டேன். சால்வன் உன்னை திருப்பி அனுப்புவான்னு எதிர்பார்க்கவே இல்லை. அம்பா.. என்னை மன்னிச்சுடு..” அம்புகள் புரள ஆசைப்பட்டபோதெல்லாம் குத்தியதில் புதிதாக ரத்தம் பீரிட்டது.

“இப்ப என் பேர் அம்பா இல்லை. சிகண்டி” திரும்பினேன் நான்.
***

Aug 26, 2009

ஆகஸ்டு மாசமும் பதிவு போட்டாச்சு!

எதோ கும்பலோட நம்ம பதிலும் வரும், யாரும் ரொம்ப கண்டுக்காம விட்டுடுவாங்கன்னு பாத்தா உங்க பதிவுலேயே போட்டுக்கங்க, திட்டோ வாழ்த்தோ நீங்களே வாங்கிக்கங்கன்னு கழட்டி விட்டுட்டாரு காசி.. (எனக்கு அது திட்டோ திட்டோதான்னு நல்லாவே தெரியும்)

தொழில்நுட்ப மேட்டர்களைப்பற்றிய என் அறிவை பட்டவர்த்தனமாக திறந்து வைக்கிறேன், உள்ளே ஒன்றும் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் கிடையாது!

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்
இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?


இணையத்தில் தமிழ் தேவையான அளவுக்கு உள்ளன. யார் தேவைக்கு? என் தேவைக்கு!

ஆங்கிலம் மட்டுமே அறிந்தவன் கணினி உபயோகிக்க முடியும், ஜப்பானியமொழி மட்டுமே அறிந்தவனும் உபயோகிக்கமுடியும். என்று தமிழ் தவிர வேறெந்த மொழியும் அறியாதவன் தமிழ்க்கணினியை உபயோகிக்கின்றானோ, நிஜமான தேவையான அளவு வரும்.

தமிழ்மொழி மட்டுமே அறிந்த பிரகிருதிக்கள் மென்பொருள் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த அல்ல, பாதிக்கக்கூட செய்யாத நிலை தமிழ்க்கணிமையை பெருமளவு முன்னேறவிடாமல் செய்வது நிஜம்.

கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர், இன்றே தமிழில் புழங்குவது ஆவல் சார்ந்துதானே ஒழிய, ஜீவனோபாயமாக இல்லை. இன்னும் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமென்றால் இன்னும் ஆவல் அதிகரிக்கவேண்டும். தமிழ் தெரியாமலேயே வளர்ந்துவிட்ட ஒரு தலைமுறைதான் இன்று கணினியைக் கையாள்கிறது. அவர்களை தமிழில் புழங்கவைத்தல் முடியாத காரியம். ஓய்வாகக் கணினி பழகும் மூத்தோர் தமிழில் தட்டச்சமுடியும் என்று தெரியாமலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை எளிதாகச் செய்யும் மென்பொருள்கள் (ஒலி-எழுத்து மாற்றிகள்), தமிழில் படித்துக்காட்டும் மென்பொருள்கள் வந்தால் இன்னும் அவர்கள் ஜனத்தொகை கூட வாய்ப்புள்ளது.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்
போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இவற்றின் பயனாளி அல்ல என்பதால் இதைப்பற்றி அதிகம் சொல்லத் தெரியவில்லை. எனினும், தானியங்கி குரல் சேவைகளில் (வங்கி, ரயில்வே முன்பதிவு போன்ற) தமிழ் இருப்பதும், உபயோகப்படுவதும் நிச்சயமாக அதிகரித்தே இருக்கின்றது, குறுஞ்செய்திகளில் தமிழ் ஆங்கில லிபியின் ஊடாகவே பரப்பப்படுகிறது. தமிழ் லிபி உள்ளிடுவதற்காக செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் என்பதோடு அவை சுலபமாகவும் இல்லை. தமிழ் அச்சு ஊடகங்கள் இணையத்தை கவனிக்கத் தொடங்கி இருக்கின்றன, காலதாமதமாகவேனும். ஆனால் கவனம் இன்னும் மரியாதையாக மாறவில்லை. அரசாளுமையைப் பொறுத்தமட்டில் எல்லாம் இணையத்தில் இருக்கின்றது எனக்காண்பிக்கவேண்டிய அவசியத்தால் கொஞ்சம் செய்கிறார்கள். முழுப்பயனையும்? நிச்சயமாக இல்லை. செல்லவேண்டிய தூரம் பாக்கி நிறைய இருக்கின்றது!


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

இணையத்தில் தமிழ் என்பதே எத்தனையோ முகம் தெரியாத தன்னார்வலர்களால் வந்ததுதானே. தமிழின் பயன்பாடு அதிகரிக்க அல்ல, உருவாகவே அவர்கள் பங்களிப்புதானே காரணம். ஏராளமான நேரத்தையும் உழைப்பையும் கொட்டி அவர்கள் ஆர்வத்தால் எங்கள் ஆர்வத்தை வளர்த்த இவர்களுக்கு வந்தனம். முன்னெடுத்துச் செல்லவேண்டியது ஆர்வத்தை மட்டுமே. ரோட்மேப் போட்டு வந்ததல்ல இந்த வளர்ச்சி, காலம் சொல்லும் கட்டளைகள் :-)

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான
செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

தமிழில் செய்யவேண்டிய வேலைகள் பல உள்ளன. நல்ல எளிய தமிழ்க்கணிமை புத்தகங்கள், தொழில்நுட்ப ஆவணங்கள், மென்பொருட்கள்... தன்னார்வலர்களை மட்டுமே நம்பி இப்படிப்பட்ட முயற்சிகளை செய்வது பிரம்மப்பிரயத்தனம் மட்டுமல்ல, அவர்களுக்கு இழைக்கும் அநீதி என்றுகூடச் சொல்லலாம். இணையத் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க அரசு அமைப்பும் பணமும் தேவை. நல்ல தொழில்நுட்பம் தெரிந்த தமிழார்வலர் ஒருவரை காரியதரிசியாக நியமிப்பதில் துவங்குவேன் :-)

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

வலைப்பதிவுகள் பொதுவான நாட்குறிப்பாக இருந்த காலத்தை தாண்டி, உபயோகமான பொழுதுபோக்காக மாறின, அதே நீட்சியில் இந்நேரத்தில் கலைக்களஞ்சியமாக மாறியிருக்கவேண்டும். யார் கண் பட்டதோ, எண்ணிக்கையில் மறைவன அதிகமாய் இருக்கின்றன, தகுதியுள்ளன தக்கும்தான் - ஆனால் குப்பைக்குள் மறையும் மாணிக்கங்களும் இருக்கின்றனதான். புதிதாக வலைப்பதிவோர்களுக்கு என்னிடம் ஆலோசனைகள் ஏதுமில்லை - ஓரிரு ஆண்டுகள் கழித்துப்படித்தாலும் உங்கள் முகமே சுழித்துக்கொள்ளாதபடி எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்பதைத்தவிர!

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?


வாழ்த்துக்கள். தமிழ்மணமும் நானும் ஏறத்தாழ ஒரே நாளில் துவங்கி இருக்கிறோம். (வாழ்த்துக்கள் திருப்பித் தரப்படும் அல்லவா?)

தமிழ்மணம் வலைப்பதிவுகள் இரண்டையும் பிரித்துப்பார்க்கமுடியாதபடி இன்னமும் இருக்கிறது என்பதே அதன் இன்றியமையாமைக்கு சாட்சி. உள்ளடக்கத்துக்கு திரட்டி பொறுப்பேற்கவேண்டும் என இணையத்தில் பலநாட்கள் பழகியோரே சொன்ன காலங்களில் இருந்து, எனக்கு மட்டும் எதிரான நிரல்களைத் தயாரிக்கிறார்கள் என்று சொல்லும் இக்காலம் வரை திரட்டியின் பங்கு பற்றி முழுமையான புரிதல் இல்லாத பயனர்களோடு புரிந்துணர்வோடு கூடிய ஒத்துழைப்பு கொடுத்து வருவது செங்குத்தான மலையேற்றம்தான். இரண்டு பதிவு மாதம் போடுவதற்கே நேரப்பங்கீடு செய்ய கஷ்டப்படும் என்போன்றோர் மத்தியில், பைசா வரவின்றி நேரம் செலவழிக்க பெரிய அளவு ஆர்வம் வேண்டும். அந்த ஆர்வத்துக்கு வந்தனம்.

வரும் ஆண்டுகளில் என்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை, செய்யவேண்டியதை செய்யவேண்டிய நேரத்தில் சரியாகச் செய்யக்கூடியவர்கள் கையில்தான் நிர்வாகம் இருக்கிறது என்பதை சென்ற ஆண்டுகள் நிரூபித்திருக்கிறது தமிழ்மணம்.

Jul 9, 2009

சென்னை 2009

பத்து நாட்களாகிவிட்டன - வந்ததிலிருந்து உருப்படியாக ஒரு வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் இருப்பது போலவே இருக்கின்றது. சிலபல பதிவர்களையும் ட்விட்டர்களையும் சந்தித்ததை உருப்படியில் சேர்க்கலாமா என மனதுக்குள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.


நடேசன் பூங்காவில் சந்தித்த பதிவர்களில் பலர் பெயர் எனக்கு ஞாபகம் இல்லாதது நானும் மூத்த பதிவனாகிக்கொண்டிருக்கின்றேன் என உணர்த்தியது (கிழபோல்ட்டு என்று என்னை நானே விமர்சிக்க விரும்பாததன் இடக்கரடக்கலே இஃது என்றறிக!). பெரும்பாலும் இலக்கணம் மீறாத சந்திப்பு. வட்டத்தின் ஒருமூலை மக்கள் அடுத்த மூலைக்கு எஸ்டிடி போட வேண்டிய அளவுக்குப் பெருத்துவிட, காதில் விழுந்த மொக்கையுடன் திருப்தி அடையவேண்டியதாகிவிட்டது. தற்போதைக்கு ஞாபகம் உள்ள மொக்கைஸ்:
  • பைத்தியக்காரனையும் பாலபாரதியையும் எவ்வளவு நோண்டியும் உரையாடல் போட்டிக்கு நடுவர் யார் எனச் சொல்லவில்லை :-(
  • மாசிலாமணி படத்தை விமர்சிப்பவர்கள் அதிமுகக் காரர்கள் என லக்கிலுக், அதிஷா மற்றும் இலைக்காரன் ஏகமனதாகச் சொன்னதை அடுத்து அடங்கிவிட்டேன்.
  • கேபிள் சங்கர், தண்டோரா, நைஜீரியா ராகவன் போன்றோரோடு முதல் சந்திப்பிலேயே மெகா மொக்கை அளவுக்கு நட்பை வளர்த்துக்கொண்டேன் :-)
  • தளபதிக்கும் தல க்கும் பேனர் கட்டினால் மட்டம், இளையராஜாவுக்கு விசிலடிச்சான் குஞ்சாக இருப்பது மேன்மையா என்று டாக்டர் புருனோ ஒரு கேள்வி கேட்டார். (வேதம் புதிது எபக்ட்)
  • கவிமடம் மீண்டும் புத்துணர்வு பெறும் என்று ஆசீப் அண்ணாச்சி 256ஆவது முறையாக உறுதியளிக்க, நர்சிம்மும் கைகோப்பதாகச் சொல்லி இருக்கிறார். பார்ப்போம். நடந்த அன்றைக்குதான் நிச்சயம்.
கிழக்குக்கு சென்றும் ஒரு மணிநேரம் பாரா, பத்ரி, ராம்கி, ஹரன், முகில் ஆகியோருடன் மொக்கை போட்டேன். (தலா 5 நிமிடம்தான்) இட்லிவடையைச் சந்தித்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்!

சிறு ட்விட்டர் சந்திப்பு ஒன்றும். நாராயணன், விக்கி, ராம்கி - த்மிழ்ச்சினிமாவின் வரலாறு அலசி அடித்துத் தோய்த்துக் காயவிடப்பட்டது!

சிங்கங்களின் குகைக்குள் ஒரு சிறு சந்திப்பு. முழுக்க முழுக்க பெண்ணீயச் சந்திப்பு - துளசி அக்கா, வல்லி சிம்ஹன் அருணாஸ்ரீநிவாசன், நிர்மலா போன்ற மித- அதிதீவிரவாதிகள்: Wifeology புகழ் பினாத்தல் அங்கு தனியாகச் சென்றதற்கே பரம்வீர்சக்ராவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கவேண்டும்- நல்லவேளை அடி ஒன்றும் பலம் இல்லை :-)

குறுக்கெழுத்து வாஞ்சி, யோசிப்பவர் உடன் ஒரு மினி சந்திப்பு, ராமநாதனுடன் ஒரு மைக்ரோ சந்திப்பு - குறையொன்றுமில்லாத சந்திப்புகள்..

இன்னும் பலரைச் சந்திக்கவேண்டும். அவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்களா! யாரையும் விடக்கூடாது!

உருப்படியா எதாச்சும் செய்யணும் பாஸ்!
********

போனமுறை பட்ட அடியினால் இந்தமுறை இருசக்கரத்தைத் தொடுவதில்லை என அம்மா சத்தியம் வாங்கிவிட்டதால் பேருந்துகளிலேயே என்னேரமும் சவாரி. ஒரே தூரத்துக்கு ஒரு பஸ்ஸில் 3.50ம், இன்னொரு பஸ்ஸில் 9.00 ம் வாங்குவதன் தாத்பர்யம் இன்னும் புரியவில்லை. புரிந்தவுடன் துபாய் கிளம்பிவிடுவேன்.

ஆட்டோக்காரர்கள் அடாவடி குறைந்திருக்கிறது. முன்பெல்லாம் 100 ரூபாய் தூரத்துக்கு 250ல் ஆரம்பிப்பார்கள், இப்போது 220ல் ஆரம்பிக்கிறார்கள். காசு முக்கியம் அல்ல, ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருவிலை என்ற சமச்சீரின்மைதான் என்னைக் கடுப்பேற்றுகிறது என்பதை ஆட்டோக்காரர்கள் அறிய வாய்ப்பில்லை, அகத்துக்காரி?

சென்னையில் கார்கள் அதிகமாகிவிட்டன, பார்க்கிங்குகள் காணாமல் போய்விட்டன. கார் ஓட்டுவதை ஒரு வலியாக்காமல் ஓயமாட்டேன் என்னும் சக சாலை உபயோகிப்பாளர்கள் நடுவேயும் ஓட்டுபவர்கள் அனைவருக்கும் ஒரு வந்தனம்!

*******

நாடோடிகள் படம் பிடித்ததற்கு ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காரணம் இருக்கலாம். ஆனால் எனக்கு சின்னமணி என்று மூன்று சீனில் மட்டும் வரும் அரசியல்வாதிதான் காரணம். ஊருக்கு வரும்போதெல்லாம் அண்ணனே, ஆசானே என்று லோக்கல் பார்ட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் தரும் எரிச்சலை எப்படியாவது கிண்டல் அடிக்கவேண்டும் என்று யோசிப்பேன். சின்னமணி “அந்த வானத்தைப்போல மனம் படைத்த நல்லவர்” - என்னைத் தடுத்தாட்கொண்டுவிட்டார்!

********

குற்றாலம் காத்திருக்கிறது!

Jun 19, 2009

நேற்றைய சிறுகதையின் மறுபக்கம்

நேற்று சவசவ என்று ஒரு கதை மாதிரி எழுதி அதற்குள் ஒரு கதை இருப்பதாக பில்ட் அப் எல்லாம் விட்டிருந்தேன். ஆனால் பலர் போட்டவுடனேயே மேட்டரைக்கண்டுபிடித்துவிட்டார்கள். இப்போது எல்லாருக்குமாக விடைகளை அப்டேட் செய்துவிட்டேன், தயவுசெய்து பார்க்கவும்.


பின்னூட்டம் இந்தப்பதிவுக்கு வேண்டாம். இங்கேயே போடவும் :-)

Jun 17, 2009

நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு

ஆபீஸுக்குள் நுழைகையில் லேட் ஆகிவிட்டிருந்தது. கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

காலை வணக்கத்தை தொடர்ந்து இயல்பாகப் பார்ப்பதுபோல கடிகாரத்தைப் பார்த்தான் வெள்ளைக்காரன். ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறேன் - இந்தச் செயல் எவ்வளவு எரிச்சலூட்டுகிறது என்று. (27a)

“என்னாச்சு? லேட்டா?"

"ஆமாம்.. நாறப்பசங்க. என் கார்க்கு முன்னாலதான் டபுள் பார்க் பண்ணுவானுங்க”

“இன்னிக்குமா? சரி விடு”

“ஆற மாட்டேங்குது சார், மத்தவன் டைமை மதிக்காதவனை கொன்னா கூட குத்தம் இல்லை.” (27b)

“கோபத்தை விடு” அவன்மேலெல்லாம் இல்லைடா.. உன்மேலேதான் கோபம்!

“கோபம்ன்ற சாத்தான் மட்டும் இல்லாட்டி நான் மண்ணு!” (8b,28)

கணினி உள்ளே செல்ல நேரம் எடுத்தது.

”இது டைம் சாப்பிடும் அதுக்குள்ள பேனா சாம்பிள் பிரச்சினையை இன்னிக்கு தீத்துடலாம்” வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய பேனாக்கள். கோயில் ட்யூப்லைட் போல பேனாவைவிட பெரிசாக உபயம் என்று கம்பெனி பெயர் போட்ட விளம்பரம்.

“ரெண்டே மாடல்தானே.. ஒண்ணு ஒல்லி ஒண்ணு குண்டு..என்ன ரீபிள் போடலாம்?”

‘ப்ளாக்தான் சார்.. வேறெந்த கலர்லேயும் பேனா எனக்கு ஒத்துவராது!” (13)

”சரி இதை ட்ரை பண்ணு”

மஞ்சள் போஸ்ட்-இட் டில் வேகமாகக் கிறுக்கினேன்.

“என்னது இது? எதாச்சும் ட்ராயிங்கா?”

“என் பேர் சார்.. என் மொழிலே எழுதினேன்”

“அழகா இருக்கே”

“பேர் எல்லாம் அழகுதான்.. ஆனா இது எங்க மொழியில கோழிக்கிறுக்கல்!” (1,3)

கணினிக்கு உயிர் வந்துவிட்டிருந்தது.

“உன் சின்னப் பெண் தானே?”

“ஆயிரம் முறை பாத்தாலும் உங்களுக்கு ஞாபகம் வராது! இது மூத்த பெண்”

“போன வாரம் சின்னப்பெண் என்று சொன்னியே!”

“அப்புறம் மாத்திட்டேன்.. இதெல்லாமா பிரச்சினை?” (23)

வெள்ளைக்காரன் எல்லா ரிப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு கிளம்ப மணி 9 அடித்துவிட்டது. சக ஊழியன் “இன்னாபா? காபி சாப்பிடப் போலாமா?” என்றான்.

“சரி வரேன்.”

“வெள்ளைக்காரன்கிட்ட பொய்யா? மெய்யா?”

“பொய் சொல்லாம நல்லவனா இருக்க ஆசைதான். விடுதா இந்த சமுதாயம்?” (30) கேண்டீனில் வறட்டு வறட்டு என்று பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். “எப்பா.. நான் போற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?”(24)

”என்ன இன்னிக்கு யூனிபார்ம் போடல? பிறந்தநாளா?” வாடிக்கையாளரிடம் செல்லும் எல்லாநாட்களில் மட்டுமாவது யூனிபார்ம் அணிய வேண்டியது விதி. இன்றைக்கு அவனுக்கு ட்யூட்டி இல்லை என்பது கேட்டுவிட்ட பிறகுதான் நினைவுக்கு வந்தது.

“போரடிச்சுப்போச்சு.. என்ன கலர்லே கொடுத்திருக்காங்க.. சாயம்போனாப்பல க்ரீம் கலர்! பேண்டையாவது ப்ளாக்கா இல்லாம நான் சொன்ன ப்ளூ எடுத்திருக்கலாம்” (11)

“சரி என்ன போச்சு? அடுத்தவருஷம் மாத்திக்கலாமே.. மேட்ச் பாத்தியா?”

“ஏன் தான் பாத்தோமோன்னு இருக்கு.. சொல்லி சொல்லி எல்லார்கிட்டயும் தோக்குறானுங்க! கிரிக்கெட்(17) பாக்கறதையே நிறுத்திரபோறேன்.”

“என்னப்பா.. டைட் மேட்சு.. 3 ரன்லதானே விட்டானுங்க!”

பாலா(16a) போட்டானுங்க.. வெட்டிப்பசங்க(16b).. ஒருபக்கமா(16c) ஆளை நிறுத்திட்டு வேற பக்கம் போட்டுகிட்டு இருக்கானுங்க”

”அத்தை விடு.. பசங்க (20) படம் பாத்துட்டயா? நல்லா இருக்கு”

“தைரியமா பேமிலியோட பாக்கலாமா?”

”நான் தனியாத்தான் பார்த்தேன். குழந்தைக்கு எக்ஸாம்.. முடிஞ்சவுடனே அவங்களும் பாப்பாங்க..எங்க அப்பா கூட பாத்தா நல்லா இருந்திருக்கும்.. (10)ஊருக்குப் போய் அவர்கூட ஒருமுறை பாக்கப்போறேன்”

“தனியா எஞ்சமாய் ஆ?”

”யோவ்.. சினிமா பாக்கறதுல என்ன இருக்கு? இதே கோவா பீச்சுல தனியா போனா சுவாரஸ்யம் இருக்கும்!” (31)

”சரி படம் எப்படி?”

“ஆஹா ஓஹோன்னெல்லாம் சொல்ல முடியாது.. பாக்கற 3 மணிநேரம் சுவாரஸ்யமா போவுது.. வேறென்ன வேணும்?(19) அதுவும் இல்லாம

கேரக்டர்ங்களையும் கஷ்டப்படுத்தி பாக்கற நம்மளையும் அழவிட்டு படுத்தலை.”

”ஆமாம்.. உனக்குதான் சிரிப்புன்னாலும் சோகம்னாலும் கண்ணில தண்ணி கொட்டுமே!” (2)

ரகு காபி கப்களை கொண்டு வந்தான். “பழக்கமாயிடுச்சேன்னு இந்த டுபாக்கூரையெல்லாம் காபின்னு குடிக்க வேண்டியிருக்கு.. ஊர்லே எங்கம்மா போடுவாங்க பார் ஒரு காபி.. காலையிலே எழுந்துக்கும்போது அந்த வாசனை(14) ஆளைத்தூக்கும்”

“சரிதான். ரகு கேட்டுட்டா இதுக்கும் உலைதான். லீவு சாங்க்‌ஷன் ஆயிருச்சா?”

“ஆமாம்.. 26 மத்தியானம் ப்ளைட்டு”

“வெறும் ஊரா.. இல்லை வேறெங்கெயும் பிக்னிக்கா?”

“அம்மணிக்கு அந்தமான் போகணுமாம்.. புது ஊருக்கு போனாதான் பிக்னிக்காம்..நசநசன்னு.. கடைசிலே அங்கேதான் போவோம்னு வையி..(9) இருந்தாலும் எனக்கு என்னவோ பேசாம போன முறையாட்டம் பாணதீர்த்தம் போனா போதும்னு தோணுது (29,6).எங்கே போனாலும் ஒரே வெய்யில்.. குளிர்காலமா இருந்தாலும் பரவாயில்லை.” (21)

”சரி வெட்டி அரட்டை போதும்.. தொழிலை கவனிக்கலாமா?”

“நான் கான்பரன்ஸுக்கு போகணும்.. ஒரு ப்ரசண்டேஷன் - 10 மணிக்கு.. அதுவரைக்கும் ஆதவன் சிறுகதையே துணை!” (22)

கான்பரன்ஸில் பலர் பார்க்காத புது ஆட்கள். சில கண்களில் சினேகம் (7), சில கண்களில் “இவன்-என்ன-எனக்கு-சொல்லி-தருவது”.. வாங்கடா

வாங்க.. பத்து நிமிஷம் போதும்டா எனக்கு. சாயங்காலத்துக்குள்ள நீங்க அத்தனைபேரும் என் விசிறி.(8a) என்ன, நண்பன்னு வெளிய சொல்லிப்பீங்க..(5)

மதிய உணவு இடைவேளைக்குள்ளேயே நான் நினைத்தது நடந்துவிட்டது. “ரொம்ப நாளா இந்த கான்சப்ட் புரியாம இருந்துது.. நீங்க கொடுத்த எக்ஸாம்பிள்ஸ் எல்லாமே சிம்பிள்.. சுலபமா புரிய வச்சுட்டீங்க”(26)

“தொழிலே இதானேங்க.” பிஸிபேளாபாத்தை அப்பளம் சகிதம் நொறுக்கிக் கொண்டே சொன்னேன். “அருமையான சாப்பாடு!” (4)

“அந்த அனிமேட்டட் டயக்ராம் எல்லாம் நான் இதுக்கு முன்னாலே பாத்ததே இல்லை”

“ஸ்பெயின் ஆபீஸ்லே (25) யூஸ் பண்னிகிட்டிருந்தாங்க.. பாத்தவுடனே அமுக்கிட்டேன்!”

அவன் என்கூடவே ஆபீஸுக்கு வந்தான். சேரை பின்பக்கம் அபாயகரமாக சாய்த்துக் கொண்டு ஸ்பீக்கரின் மௌனம் கலைத்தேன்.

“எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்.. பி ற ந் தி ளை த் தே ன்..பி ற ந் தி ளை த் தே ன்” என்றார் ராஜா. (12)

”என்ன சார் இவ்ளோ கம்மி ரெசொல்யுஷன் வச்சிருக்கீங்க? எழுத்து எல்லாம் தெரியுதா?”

“என் கண்ணு ரொம்ப பவர்புல் சார்..அதோ அங்க தூரத்துல 10 பாயிண்ட்லே எழுதி இருக்கே கண்டிஷன்ஸ் அப்ளைன்னு.. அதுகூட தெரியுது.” (18)

ஏமாந்துவிட்டான்.. அதை ப்ரிண்ட் எடுத்ததே நான் தான்.

போன் அடித்தது. எடுத்தேன். “ஹலோ ஹூ இஸ் திஸ்?” என்றது எதிர்க்குரல்

“யோவ்.. கால் பண்ணது நீ.. என்னை கேக்கறியா?”

“இல்லை சார், இந்த நம்பர்லே இருந்து மிஸ்டு கால் வந்தது”

“இது ஆபீஸ் நம்பர்.. போர்டு நம்பர்.. நான் யாரையும் கூப்பிடலை!” (15)

போனை எரிச்சலாக வைத்துவிட்டு.. "Life is one Damn thing after another" என்றேன் எதிரிலிருந்தவனிடம். (32)

பி கு1: இந்தக் கதைக்குள் ஒரு கதை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வது அவசியம். புரிந்தவர்கள் புரியாதவர்கள் இருசாராரும் பின்னூட்டலாம் :-)

பிகு2: உரையாடலாகவே சென்றாலும் உரையாடல் போட்டிக்கு அல்ல.

பிகு3: நாளை இப்பதிவில் சில திருத்தங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகு4: திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. பாலா போடறானுங்க, வெட்டிப்பசங்க, ஒருபக்கமா போட்டானுங்க - இவர்கள்தான் என்னை அழைத்த பதிவர்கள், அவர்கள் பதிவில் பிடித்த பதிவை சுட்டியாகக் கொடுத்துவிட்டேன்.

பிகு5: ஆமாங்க, இது 32ஏதான். அ-புனைவுன்னு ஏன் சொன்னேன்னா, இது புனைவு இல்லை, என்னைப்பற்றின நிஜம்ன்றதால :-)

May 25, 2009

கால்குலேட்டர்

1985 
"எனக்கு ரிப்போர்ட்டர் மேலேதாண்டா சந்தேகம்"  கருப்பு மண்ணைக் கைநிறைய அள்ளி ட்ரேயில் கொட்டிக்கொண்டிருந்தான் ஆனந்த்.
 
"ரிப்போர்ட்டரா? அவன் அப்பாவிடா.. அதுவும் இல்லாம, அவன் ஃபவுண்டரிக்கு எங்கே வந்தான்? அவனுக்குதான் வெல்டிங் ஆச்சே" ஆனந்தின் ட்ரே மண்ணில் சின்ன திமிசுக்கட்டையை வைத்து சமன் செய்தேன். கவனம் இங்கே இல்லை. எங்கே போனது என் கால்குலேட்டர்? அப்பா கொன்று விடுவார்.
 
"என்னடா அங்கே பேச்சு? ஒரு கோர் உடைஞ்சதுன்னாலும் கொன்னுடுவேன்" ஃபவுண்டரி மாஸ்டர் குறட்டையை நிறுத்தி பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை கவனமாக இருப்பதைப் பறைசாற்றினார்.
 
"சரி அப்புறம் பேசலாம். கோர் சேண்ட் கொஞ்சம் கொடுடா.. ரொம்ப தண்ணி ஊத்திட்டேன் போல. கொளகொளன்னு ஆயிருச்சு" வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஃபவுண்டரியை முடித்துவிட்டு உடனே ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டீரியல்ஸ். கவுஸ் சார். கால்குலேட்டரைக் காணோம் என்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். வயிற்றுக்குள் கடமுடா சத்தம்.
 
"எலக்ட்ரிகல்லே யாரையாச்சும் கேக்கலாமா?"
 
"கேட்டுப்பாரு.. ஆனா டவுட்டுதான். அவங்களுக்கும் இன்னிக்கு தியரிதான்னு நினைக்கிறேன்"
 
காக்கிச் சட்டையின் மீது மழையின் துளிகள் பட்டு ஒரு மாதமாக துவைக்காத நாற்றத்தை வெளிக்கொண்டு வர, மரங்களின் ஊடே பதுங்கிப் பதுங்கி ஓடவேண்டி இருந்தது.எலக்ட்ரிகல் பக்கம் போக நேரம் இல்லை. கவுஸ் இன்னும் வகுப்புக்குள் வந்திருக்கக்கூடாதே ஆண்டவா!
 
"நடந்து வந்தா கூட இவ்வளவு நனைஞ்சிருக்க மாட்டோம்."
 
காலில் இருந்த சேற்றை மிதியடியில் வழித்துக்கொண்டிருந்த போதுதான் கவுஸ் முதுகில் ஓங்கித் தட்டினார். பெரிய கம் பூட்டுக்குள் பேண்டை ராபர்ட் க்ளைவ் மாதிரி உள்ளே விட்டிருந்தார். கண்ணில் கோபம்.
 
"வரானுங்க பாரு கனவுப் பாட்டு ஹீரோயின் மாதிரி. ஏண்டா லேட்டு?" 
 
"ஃபவுண்டரியில லேட் ஆயிடுச்சு சார்"
 
"மத்தவன் எல்லாம் வரல? ஒழுங்கா வேலை செஞ்சா நாராயணன் ஏன் உங்களை மட்டும் பிடிச்சு வைக்கப்போறான்?"
 
"..."
 
"ட்ரஸ் எல்லாம் மாத்த வேணாம். அப்படியே உக்காருங்க கவர்ச்சி காட்டிகிட்டு."
 
"அசைன்மெண்டை எல்லாரும் முடிச்சிட்டீங்களா?"
 
நல்லவேளை. முடித்திருந்தேன்.
 
"கவர்ச்சிக் கன்னி சுகுமார், முதல்ல நீ கொண்டுவா. உன்னோட க்ரூப்டான்ஸர் ஆனந்த் அடுத்தது."
 
ஆசிரியர் அடித்த மொக்கைக்கு மொத்த வகுப்பும் சிரித்தது. நிரூபன் தவிர்த்து.
 
"யங்ஸ் மாடுலஸ் கால்குலேட் பண்ணனும். சுகுமார், போர்டுல இருக்கிற கணக்கை சால்வ் பண்ணு"
 
"சார் கால்குலேட்டர் இல்லை" எனக்கே கேட்காமல் முணுமுணுத்தேன்.
 
"என்னது? இதை தைரியமா வேற சொல்றியா?"
 
"காலையில இருந்தது சார். இப்ப காணாம போயிடுச்சு"
 
"காக்கா தூக்கிட்டு போச்சா? பொய் சொல்லாதே.. கெட் அவுட் ஆப் மை க்ளாஸ்"
 
இவரிடம் பேசிப் பிரயோஜனமில்லை. வெளியேறி துறையின் ஸ்டாப் ரூமுக்கு வந்தேன். தேசிகன் மட்டும் குடையைக் மடக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். சரியான சமயம். இவர் நிச்சயம் எனக்கு உதவுவார்.
 
"என்ன சுகுமார்? க்ளாஸுக்குப் போகலை?"
 
"கவுஸ் சார் வெளியே அனுப்பிட்டார் சார். கால்குலேட்டர் இல்லாததால"
 
"ஏன் கொண்டு வரல?"
 
"கொண்டு வந்தேன் சார். இங்கேதான் யாரோ திருடி இருக்காங்க"
 
"இன்னிக்கு என் சப்ஜெக்ட் இருக்குதா?"
 
"ஆமாம் சார். அடுத்த ஹவர்"
 
"என்ன மாடல்?"
 
"FX110 சார்"
 
"அடையாளம் எதாச்சும் இருக்குதா?"
 
"என் பேர் ப்ளாஸ்டிக் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தேன் சார்"
 
"சரிதான். திருடறவன் அதை பத்திரமா வச்சிருப்பான் பாரு.." ஆனந்தும் உள்ளே நுழைந்தான்.
 
"எனக்கு நிரூபன் மேலேதான் சந்தேகம் சார். அவன் இவன் பைகிட்ட நிந்துகிட்டிருந்தான் ப்ராக்டிகல் போறதுக்கு முன்னாடி. என்னைப்பாத்ததும் அவசர அவசரமா கிளம்பிட்டான் சார்.. திருட்டு முழி"
 
"நிரூபன்? "
 
"லாஸ்டு பெஞ்ச் சார். கன்னங்கரேல்னு.. தமிழ் பேசத் தெரியாம இருப்பானே"
 
"ஓ.. அந்த கோட்டா பார்ட்டியா?"
 
மணியடித்தது. மூன்று பேரும் ஒன்றாகக் கிளம்பினோம்.
 
தேசிகன் உள்ளே நுழையும்போது கவுஸ் "இந்தப்பசங்க உன் கூட வந்திட்டானுங்களா? யூஸ்லெஸ் க்ரூப்.." என்றபடி வெளியே வந்தார். தேசிகன் அருகில் வந்தவுடன் குரலைத் தாழ்த்தி "உன்னையும் சேத்துதான்" என்றது எனக்குக் கேட்டுவிட்டது.
 
"சுகுமாரோட கால்குலேட்டரைக் காணோம். எடுத்தவன் உடனே கொடுத்திட்டா பிரச்சினை கிடையாது."
 
யாரும் எதுவும் பேசவில்லை.
 
"எல்லாரும் அவனவன் கால்குலேட்டரை எடுத்து டெஸ்க் மேலே வைங்க." மற்ற மாடல்கள் எல்லாம் உடனடியாக நிராகரித்துவிட்டேன். வகுப்பில் 4 பேர் மட்டும் FX110 வைத்திருந்தார்கள். நிரூபனும் சேர்த்து. ஆனந்த் உண்மையைத் தான் சொல்லி இருக்கிறான்.
 
"எப்படா காணாமப் போச்சு?"
 
"காலையில 12 மணிக்கு இருந்தது சார்"
 
"அப்ப கொஞ்சம் நேரம்தான். எங்க ஸ்டிக்கர் ஒட்டி இருந்தே?"
 
"பின்னாடி பக்கம் சார்"
 
"இந்த நாலுத்துலயும் விரலை வச்சுப்பாரு. ஒட்டுதா பாரு. ஸ்டிக்கர் பிச்சிருந்தாலும் கொஞ்ச நேரம் ஒட்டும் இல்ல?" துப்பறியும் தேசிகன்.
 
மற்ற மூன்றிலும் ஒட்டவில்லை. நிரூபனிடம் வந்த போது அவனுடைய வழக்கமான சினேகம் வேண்டும் சிரிப்பு இப்போது இல்லை. கண்ணில் கலக்கமா? ஒட்டுவது போல்தான் தெரிந்தது.
 
"இதான் சார்"
 
"நிரூபன்? இந்த வேலையெல்லாம் பண்ணவா உன்னை கோட்டா கொடுத்து சேர்த்திருக்கோம்?"
 
"நான் இல்லை சேர், இது என்ர கல்குலேற்றர்"
 
"அப்புறம் எப்படிடா அதே மாடல்? ஆனந்த் உன்னை எடுக்கும்போது பாத்தானாம்" எடுக்கும்போது பார்த்ததாகவா சொன்னான்?
 
" இது என்ர கல்குலேற்றர் சேர்"
 
அருகில் இருந்த லோகுவிடம் தேசிகன் கேட்டார். "இவன் இதைதான் டெய்லி வச்சிருக்கானாடா?"
 
"இல்லை சார்.. நான் இன்னிக்குதான் பாக்கறேன்"
 
" நேற்றைக்கு என்ர சினேகிதன் ஒருத்தன் தந்தவர்.. இண்டைக்குத் தான் இதைக் கொண்டு வந்திருக்கிறன்" குரல் உடைந்துவிட்டிருந்தது. கண்ணில் பயம் மற்றும் அழுகை.
 
"நம்பற மாதிரி பொய் கூட சொல்லத் தெரியலை உனக்கு. பிரின்ஸி கிட்ட சொல்லி உன்னை சஸ்பெண்ட் பண்றேன்.. இப்ப வெளியே போ.. சுகுமார் கிட்ட அதைக் கொடுத்திட்டு"
 
"சத்தியமா நான் கள்ளனில்லை, அதுவும் சுகுமாரிடம் போய் திருடுவனா?"
 
"வெளியே போ"
 
ஒரு வாரம் சஸ்பென்ஷன் என்று முடிவானது. ஒரு வாரம் .. இருவாரம்.. ஏன் மாதங்களும் கழிந்தும் நிரூபன் கல்லூரிக்கு வரவே இல்லை.
 
இரண்டு மாதம் கழித்து கால்குலேட்டரில் பாட்டரி தீர்ந்து மாற்ற வேண்டி வந்தது. சிவப்புக்கலர் பேட்டரிகள் என்னைப்பார்த்து சிரித்தபோதுதான் நிரூபன் பொய் சொல்லவில்லை என்பது புரிந்தது.
 
2009
 
"அப்புறம்" என்றார் நாதன்.
 
சுகுமார் தன் கிளாஸில் ஐஸ்கட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டான்.
 
"அப்புறம் என்ன.. அவனைப்பற்றி ஒரு  தகவலும் இல்லை. முகாமுக்குத் திரும்பிப்போனானா, நாட்டுக்கே திரும்பிப் போனானா ஒண்ணும் தெரியாது.  ஒரு வாரம் சஸ்பென்ஷனுக்கே அவன் ஏன் ஊரைவிட்டே போகணும்.. புரியலை. இது மட்டும்தான் காரணமான்னும் தெரியலை"
 
"எஞ்சினியரிங் படிப்பு அவனை எப்படி எப்படியோ மாத்தி இருக்கும். இப்ப என்ன பண்ணிகிட்டிருக்கானோ.. இல்ல இல்லையோ..இந்த வருத்தம் எனக்கு இன்னும் ஆறவே இல்லை நாதன்; அநியாயமா ஒருத்தன் படிப்பைத் தடுக்க நானும் காரணமா ஆயிட்டனோன்னு குற்ற உணர்ச்சி."  
 
"இதிலை வருத்தப்பட என்ன இருக்கு சுகுமார், உங்கட நாடு எங்களுக்குப் பண்ணினதை நீங்கள் தனியொரு ஆளுக்குச் செய்திருக்கிறியள் அவ்வளவு தான்" சிப்ஸ் பாக்கெட்டை பம்மென்று உடைத்தார்.
 
*********************
உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் ஆன சிறுகதை; உரையாடல் போட்டிக்கான ஆக்கம்.

May 21, 2009

பேருந்துகளுக்கு கலர் அடிக்கலாம் வாங்க! (Flash)

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாஷுடன் வந்திருக்கிறேன்.

பேருந்துகளுக்கு கலர் அடிக்க வேண்டும். இதான் விளையாட்டு. 7 பேருந்து, 7 கலர் காம்பினேஷன் கீழே கொடுத்திருக்கிறேன். எந்தப் பேருந்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம்? அதான் கன்ப்யூஷன்.



எந்தக் கலர் எந்த வண்டிக்கு சூட் ஆகும்? வண்டியோட ஓட்டுநர் என்ன நினைக்கிறார், நடத்துநர் என்ன நினைக்கிறார்? வண்டியில என்ன சினிமா ஓடுது, அந்த வண்டியில ஏறிட்ட பயணிங்க என்ன நினைக்கிறாங்க - இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு, தனித்தனியா கொடுத்திருக்கேன். அதை மறைக்க ஒரு பட்டை - ஒரு க்ளிக் பண்ணா எழுத்து தெரியும். இந்த க்ளூவெல்லாம் வச்சு, கீழே இருக்க ஏழு கலர் காம்பினேஷன்லே இருந்து இந்தப்பேருந்துக்கு கரெக்டா கலர் அடிக்கணும். அவ்வளவுதான் கேம்.



கலர் கரெக்டுதான்னு உறுதிப்படுத்திட்டீங்கன்னா, அடுத்த பேருந்து ரெடியா நிக்கும். அதுக்கும் க்ளூவைப்பாத்து கரெக்டா கலர் அடிங்க. எல்லா பஸ்ஸும் முடிச்சிட்டீங்கன்னா எத்தனைக்கு கரெக்டா கலர் அடிச்சீங்கன்னு மார்க்கும், எவ்வளவு க்ளூ உபயோகப்படுத்தினீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி போனஸ் கூட கிடைக்கும் - அதாவது இருக்கற 4 க்ளூவில் 2லேயே கண்டுபிடிச்சிட்டா அதிக போனஸ்!

அங்க இருக்கிற கோட் - ஐ பின்னூட்டமா போட்டீங்கன்னா நீங்க எவ்வளவு வாங்கினீங்கன்னு நானும் தெரிஞ்சுக்குவேன்.



யார்யார் சரியான விடை சொல்லி இருக்காங்கன்னு இங்கே உடனுக்குடனே பதிவாயிடும்.





இது சங்கமம் போட்டிக்காக உருவாக்கப்பட்ட ப்ளாஷ். நேரம் வரும்போது அங்கேயும் வந்து ஓட்டுப் போட்டுடுங்க!

Apr 1, 2009

துக்ளக் இணைய இதழ் - இலவசமாய் படிக்க:

இதற்கு முன் போட்ட பதிவில் படம் பெரிதாகாமையால் பலர் ஏப்ரல் 1 என நினைத்துவிட்டனர். இப்போது படங்களின் லின்க்கைத் தருகிறேன்.

தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை. ஆனால், விகடன் குமுதம் போன்ற விற்பனை உத்திகள் கைவராததால் வெளிநாடுகளில் இந்த ஏடு கிடைப்பது அபூர்வமே.

சென்ற சில வருடங்களாக துக்ளக் இணையத்தில் கிடைத்தாலும், இணையதள சந்தா அதிகமாக (20$ வருடத்திற்கு) இருப்பதால் படிப்பது கஷ்டமாகவே இருந்துவந்தது.

இந்நிலையில் தெரிந்தவர் ஒருவர் ஒரு சுட்டி கொடுத்தார். இலவச தளம்தான். ரெஜிஸ்ட்ரேஷன் கூட தேவையில்லை.. எல்லாவற்றையும்விட, இந்தத் தளத்தின் வேகம் ஆச்சரியப்படவைத்தது. சில வேளைகளில் அதிகாரபூர்வ வலைத்தளத்தைவிடவும் முன்னரே இங்கே அட்டைப்படங்கள் கிடைத்துவிடுகின்றன.

இந்த சுட்டியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன் தார்மீகரீதியாக இது சரிதானா என நிறையவே யோசித்தேன். கடைசியில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறாகாது என்பதால் வலைக்குடும்பத்துடன் சில அட்டைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியில் முட்டாள் ஆனது நான் தான் :-( படங்கள் பெரிதாகாத முதல் பதிவினால் சொதப்பிவிட்டது.
துக்ளக் வெவ்வேறு நிலைமாற்றங்களுக்கு எப்படி அட்டைப்படம் போடும் என்பதுதான் கான்செப்ட்!
படம் 1 - 15/05/09, ஜ மு கூ வென்றால்:


படம் 2 : மூன்றாம் அணி வென்றால்:

படம் 3 : தே ஜ கூ வென்றால்:




Mar 19, 2009

நாற்பது மாத்திரைகள் (சங்கமம் போட்டிக்கதை)

தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை. விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாப்பில் இறங்கி இவ்வளவு தூரமா நடக்கவேண்டும் ஹாஸ்டலுக்கு? வீட்டில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹாஸ்டலில் இருந்து அவசரமாக வரச்சொல்லி போன் வர கல்லூரியின் இரவுமுகம் தரிசனம்.

ஹாஸ்டல் வாசலிலேயே இருந்தார் வார்டன். என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.


“ஏண்டா இவ்ளோ நேரம்.. எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல?”

“பஸ் கிடைக்கல சார்”

”கிளம்பு திரும்ப.. ஹாஸ்பிடலுக்கு எடுத்துகிட்டு போயிட்டாங்க சுந்தரமூர்த்தியை”

“என்ன ஆச்சு சார் அவனுக்கு.. போன்லேயே ஒண்ணும் சொல்லல”

“எனக்கென்ன தெரியும். பவுண்டனுக்கு அடியில விழுந்து கிடந்தான். குடியா கஞ்சாவா தெரியல”

“அவன் அப்படிப்பட்ட பையன் இல்ல சார்”

“நானும் அப்படிதான் நினைச்சுகிட்டிருந்தேன். எவ்ளோ தட்டினாலும் சுரணையே இல்லாம சிரிச்சுகிட்டிருக்கான்.. நேரா பாக்கவே மாட்டேங்கறான். வாய்யா வேஸ்ட்வாட்டர்ன்றான் என்னைப்பாத்து”

வார்டன் பெயர் தண்டபாணி. மொழிபெயர்த்து வேஸ்ட்வாட்டராகத் தான் எல்லாராலும் அறியப்பட்டார். சூழல் புரியாமல் சிரிப்பு வந்தது.

”எந்த ஹாஸ்பிடல் சார்?”

“கவர்மெண்டு ஹாஸ்பிடல்தான். சரி இரு நானும் வரேன். சூசை.. பாத்துக்கடா இங்கே”

மாவு மெஷினை ஞாபகப்படுத்தும் சத்தத்தோடு கிளப்பினார் அவர் டிவிஎஸ்ஸை. ஸ்வெட்டர் போடாமல் வந்துவிட்டேன் அவசரத்தில். நள்ளிரவின் குளிர் உடம்புக்குள் ஊடுருவியது. மலைப்பகுதியின் இருள் குளிரை ஏற்றியதாகத் தோன்றியது. ஏன் இந்த ஆள் இவ்வளவு ஸ்லோவாக வண்டி ஓட்டுகிறார்? வண்டி ஓடும்போதே ஷேவிங் செய்துகொள்ளலாம் போல.

மருத்துவமனையின் கிராதிகள் இழுத்து பூட்டப்பட்டிருந்தன. தினத்தந்தி மேல் படுத்திருந்த ஆள் புரண்டு படுக்குமுன் “சத்தம் போடுங்க சார். வாட்ச்மேன் வருவான்”

“என்னா வேணும்? டாக்டரெல்லாம் காலைலேதான் வருவாங்க” தூக்கம் கலைந்த அதிருப்தி வாட்ச்மேன் குரலில் தெரிந்தது.

“சுந்தரமூர்த்தின்னு ஒரு பையன்.. காலேஜ்லே இருந்து கொண்டு வந்தாங்க”

“அந்த தற்கொலை கேஸா? காலைலதான் பாக்கமுடியும்”

தண்டபாணி அவனுக்கு கிட்டத்தில் சென்று குசுகுசுக்க, கதவு திறந்தது.

பொது வார்டில் காலையில் போட்ட டெட்டால் கரைந்துவிட்டிருந்தது. மருத்துவமனை நாற்றத்தைவிட சாக்கடை நாற்றம்தான் அதிகம் வீசியது. கட்டிலை மீறி நோய்க்கூட்டம் தாண்ட கீழே பாய்போட்டு சலைனுக்கு மட்டும் கம்பி வைத்திருந்தார்கள். பாட்டிலையும் லுங்கியையும் ஒரு சேரப்பிடித்து குந்தி இருந்த ஆள் நான் கடக்கையில் “பீடி இருக்கா தம்பி” என்றான்.

சுந்தரமூர்த்திக்கு எப்படியோ கட்டில் கிடைத்துவிட்டிருந்தது. அருகில் கோபியும் சேகரும் உட்கார்ந்திருந்தார்கள். பெரிய வாளியில் தண்ணீர், ஒரு குழாய், இன்னொரு வாளி. “குடிரா சுந்தர்” தண்ணீரை மக்கில் புகட்டிக்கொண்டிருந்தார்கள்.

“என்ன ஆச்சு கோபி?”

“தூக்க மாத்திரை போட்டுகிட்டானாம்டா”

தூக்க மாத்திரை? நேற்று சாயங்காலம் அவனுடன் மார்க்கெட்டில் அலைந்தது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு பார்மஸியாக உள்ளே போய் வெளியே கவருடன் வந்துகொண்டிருந்தான்.

“எதுக்குடா நாலஞ்சு கடைக்கு போறே?”

“என் தாத்தா ஊருக்கு போறாரு.. அவருக்கு நிறைய மாத்திரை தேவைப்படுது. பிரிஸ்கிருப்ஷன்லே 10 மாத்திரைதான் போட்டிருக்கான்”

”தாத்தா” வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.

”டாக்டர் பாத்தாரா?” சுற்றுவட்டாரத்தில் மருத்துவமனை சார்ந்த யாரையுமே காணவில்லை. தூங்கிக்கொண்டிருந்த எல்லாரையும் விழிக்க வைக்கும் அளவுக்கு லொக் லொக்கிக் கொண்டிருந்தார் மூன்றாம் பெட். அவருக்கு வாந்தி சத்தத்தில் சவால் விட்டுக்கொண்டிருந்தான் சுந்தர்.

வார்டின் முடிவில் நர்ஸின் வெள்ளுடையும் போன் பிடித்த கையும் தெரிந்தது.

“நர்ஸ்தான்.. டாக்டர்கிட்ட போன்லே பேசி ட்ரீட்மெண்ட் கொடுக்கறாங்க”

நர்ஸ் சேச்சி “வாந்தியிலே மாத்திரை வந்துச்சா? என்ன மருந்து போட்டான்ன்னு டாக்டர் கேக்குறார்” போனில் டாக்டர் பக்கத்தை கைவைத்து மூடியிருந்தாள்.

சுந்தரின் சட்டைப்பையில் இருந்த காகிதக்குப்பைகளில் மாலை பார்த்த மருந்துச்சீட்டை கண்டுபிடித்து எடுத்து நர்ஸிடம் கொடுத்தேன்.

“எத்தனை போட்டு?”

எனக்குத் தெரிந்து நாலு கடை.. “நாப்பது” என்றேன்.

”ஈ மருந்து ஒண்ணும் செய்யா.. சரியாப்போவாம்.. டாக்டர் பறஞ்சு”

நாப்பது மாத்திரையுமா ஒண்ணும் செய்யாது?

“ரெண்டு நாள் தூங்கும். சலைன் போட்டு. வாந்தி வேணாம்”

கோபி முகத்தில் மகிழ்ச்சி. அப்பாடா ஸ்கேவஞ்சர் வேலை பார்க்கவேண்டாம்.

“வெத்துக்கு டென்ஷன் ஏத்திட்டாண்டா”

“என்ன சொல்ற நீ? செத்தாதான் உனக்கு திருப்தியா?”

“அட.. தெரிஞ்சே பிலிம் காமிச்சானா தெரியாமயா?”

“இல்லடா. ஒரு வாரமாவே சீரியஸா யோசிச்சுகிட்டுதான் இருந்தான். அபூர்வ சகோதரர்கள் ரிலீஸன்னிக்கு கூப்டேன். அதுக்குக்கூட வரலை”

“என்ன மேட்டர்? இப்ப எதுவும் ரிஸல்டு கூட வரலையே?”

“வந்துச்சே போன வாரம் ஒரு ரிஸல்டு”

“யாருகிட்ட ஊத்தற? எனக்கும்தான் நாலு கப்பு இருக்கு. என்ன ரிஸல்டு வந்துச்சு?”

“அட எக்ஸாம் ரிஸல்டு இல்லப்பா.. லதா ரிஸல்டு”

“குள்ளி லதாவா? இந்த சொன்னையா? தேவையா இவனுக்கு இதெல்லாம்?”

“சும்மாவா? கவிதையா இல்ல பொழிஞ்சாரு அண்ணன்!”

“செருப்பால அடிச்சிருப்பாளே?”

“இல்லை.. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. தனியா கேண்டீன் பக்கம் போய் ரெண்டு மணிநேரம் அட்வைஸ். உனக்கு என்ன வயசு.. நாம படிக்க வந்திருக்கோம்.. உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.. ஆர் சுந்தரராஜன் பட ஹீரோயின் மாதிரி அட்வைஸ்! திருந்திடுவான்னு நினைச்சேன். இப்படி மாத்திரை வரைக்கும் போவான்னு நினைக்கலை”

சுந்தரமூர்த்தி சற்று அசைந்தான். கண் திறந்தது. “நான் எங்கே இருக்கேன்? சொர்க்கத்திலயா?”

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சொர்க்கமா தெரியுதாம்டா.. அந்த மாத்திரை இனிமே மார்க்கெட்லே செம பிக்கப் ஆயிடும்” சேகருக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி.

“ஏண்டா லூஸு இப்படி பண்ணே? அந்த மாத்திரை அவ்ளோ டேஞ்சரஸ் இல்லையாம் தெரியுமா?”

“என்ன சொல்ற கோபி? டேஞ்சரஸ் இல்லாத மாத்திரையைப் போட்டதையா லூஸுத்தனம்ன்றே?”

“நான் சாகறதுக்குள்ள .. அவளை.. ஒரு முறையாச்சும் .. பாக்கணும்..” குண்டடி பட்ட கதாநாயகன் போல திக்கித் திக்கிப் பேசினான்.

“என்னடா பண்ணலாம்? அவ வீடு பக்கத்துலதான். வேணா போய் மேட்டர் சொல்லி கூப்டிட்டு வரட்டுமா?”

“நடு ராத்திரியிலயா? அவங்க வீடுல அலவ் பண்ணமாட்டாங்களே.. அதுவும் இல்லாம இது என்ன மரணப்படுக்கையிலயா கிடக்குது?”

“இதாண்டா சான்ஸ். சேத்துவைக்க ஒரு ட்ரை பண்ணுவோமே? அனுதாபம் வொர்க் அவுட் ஆனா ஆவட்டுமே?வேஸ்ட்வாட்டர் வெளியதான் இருக்காரு- அவரைக்கூட்டிட்டு போனா அலவ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்”

“அவனைவிட நீ அதிகமா எக்ஸைட் ஆவறே!” கோபிக்கு ஏனோ என் ஐடியா பிடிக்கவில்லை.

”அட ஒழிஞ்சு போறாண்டா.. ஒரு ட்ரை அடிக்கலாமே” சேகர் ஓட்டும் என் பக்கம் சேர்ந்தது.

வார்டனுடன் கிளம்புகையில் “நான் வரேண்டா.. சேகர் இங்க இருக்கட்டும்” எனச் சேர்ந்துகொண்டான் கோபி.

ஐந்து நிமிடம் ஆனது லதா வீட்டுக் கதவு திறக்க. தெருவின் அத்தனை நாய்களும் எங்களை விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.லதாவின் அப்பா தூக்கம் நிரம்பிய கண்கள் சிவக்க கோபமாகத் தெரிந்தார். விஷயம் சொன்னவுடன் லதாவை எழுப்பினார்.

“அச்சச்சோ.. இப்ப எப்படி இருக்கார்?”

“எதுவும் சொல்றதுக்கில்லை.. உன் பேரையே சொல்லி புலம்பிகிட்டிருக்கான்” பில்ட் அப் தானே முக்கியம்.

”இதோ ஒரு பைவ் மினிட்ஸ்லே ரெடி ஆயிடறேன்.. உங்களுக்கு சில்வர் ப்ளஸ் ஓட்டத் தெரியுமா?” கியர் வண்டி. இரவில் முதல்முறை முயற்சிக்க வேண்டாமே என நான் தயங்க “நான் ஓட்டுவேன்” என்றான் கோபி.

”அப்ப நாங்க கிளம்பறோம். கோபி, நீ கூட்டிகிட்டு பத்திரமா வந்துரு. ரொம்ப தாங்க்ஸ் சார்” தண்டபாணி லதா அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டார்.

சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.

எங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் நேராக சுந்தரமூர்த்தியிடம் சென்று அவனை உலுக்கினாள்.

“எழுந்துருடா.. லூஸுப்பயலே! பொண்ணுங்கன்னா மட்டம்னு நினைச்சயாடா பொறுக்கி. உனக்கு உன் உயிருக்கு மரியாதை இல்லாம இருக்கலாம்.. எனக்கு அப்படி இல்லை”

“லதா.. அது வந்து”

“நிறுத்துடா இடியட். போன வாரம் கூட உன்னை புத்திசாலின்னுதான் நினைச்சேன்.. ஒருவேளை மனசுகூட மாறி இருக்கலாம். இப்ப சான்ஸே இல்லை. சாதாரண விஷயத்துக்கு மாத்திரை வரைக்கும் போற ஒரு அடிமுட்டாளோட எனக்கு எந்த ரிலேஷன்ஷிப்பும் எந்தக் காலத்துலேயும் வராது.”

“..” சுந்தருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வாயடைத்துதான் போய்விட்டது. மூன்றாம் நம்பர் பெட் இருமல்கூட நின்றுவிட்டது. ஆஸ்பத்திரியில் அதுவும் நள்ளிரவில் யாரும் இப்படி ஒரு சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கவில்லை. சுந்தர் கை நடுங்கியது முன்பிருந்தேவா இப்போதுதான் ஆரம்பித்ததா தெரியவில்லை.

“நான் பலமுறை சொல்லிட்டேன்.. உன்ன மாதிரி ஒரு ஃபூலோட என் லைபை கமிட் பண்ணிக்க நான் தயாரா இல்லை.. இதுக்கு மேலே செத்தா சாவு போ!”

“கோபி, என்னை ட்ராப் பண்ணிடறீங்களா?”

நல்லவேளையாக சுந்தரமூர்த்தி அதற்குப்பிறகு எந்த முயற்சியும் செய்யவில்லை.

லதா பத்ரகாளியாக மாறியது எனக்கென்னவோ குழப்பமாகவே இருந்தது. நிஜமாகவே கோபமா அல்லது சுந்தர் திருந்துவதற்காக கொடுத்த அதிர்ச்சி வைத்தியமா.. ரொம்ப நாட்களுக்கு இதற்கு விடை தெரியவே இல்லை.

போன முறை ஊருக்குப் போனபோது பொருட்காட்சியில் லதாவைப் பார்த்தேன். ஹாய் ஹல்லோ எல்லாம் முடிந்தபின்.. “கல்யாணம் ஆயிருச்சா? எத்தனை குழந்தைங்க?”

“சரிதான் போ.. உனக்கு விஷயமே தெரியாதா? காலேஜ் முடிச்ச அடுத்த வருஷமே நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோமே? ரெண்டு குழந்தைங்க.. அதோ வராரு பாரு உன் பிரண்டு.”

ரெண்டு குழந்தைகளுக்கும் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்து கைகொள்ளாமல் டெல்லி அப்பளங்களுடன் எங்கள் பக்கம் வந்துகொண்டிருந்தான் கோபி.
********************************************************************

பி கு: பெயர்கள் மாற்றப்பட்ட நிஜக்கதை. “சுந்தரமூர்த்தி” இன்று ஒரு தொழிற்சாலையில் ப்ரொடக்‌ஷன் ப்ளானிங் மேனேஜர். “கோபி” உள்ளூரிலேயே பொட்டிதட்டும் கடை வைத்திருக்கிறான். “லதா” அவனுக்கு ஆக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறாள்.

சங்கமம் போட்டிக்காக
எழுதியது.

Mar 2, 2009

அவன் அவள் கெமிஸ்ட்ரி

அலைகள் எட்டடி உயரத்துக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்றுக் கிடந்தது வெள்ளை மணல் கடற்கரை. பௌர்ணமி நிலா மஞ்சள் வெளிச்சம் கொட்டி சூழலை அழகாக்கிக் கொண்டிருந்தது. வித்தியாசமான கட்டடம் ஒன்று தன் பழைய பொலிவையெல்லாம் இழந்து பாழடைந்து கிடந்தது.

"ஜே இந்த இடம்தானா?"

"ஆம். என்றுதான் நினைக்கிறேன். சுற்றுவட்டாரத்தில் என்ன பார்க்கிறாய்?"

"கடல்-அலை-வெள்ளைமணல்-பௌர்ணமிநிலவு"

"போதாது. ஏதேனும் கட்டடம் தெரிகிறதா?"

"ஆம். வித்தியாசமாக இருக்கிறது. பிரமிட்டின் குழந்தை வடிவம் போல. கூம்பாக வானை நோக்கி"

"சரிதான். உன் ஜீன்கள் தமிழ்தானா? அது ஒரு கோயில். அலைவாய்க்கோயில் என்று சொல்வார்கள்"

"ஓ.. ஞாபகம் வருகிறது.. மாமல்லபுரம் என்பது பழைய பெயர் - சரியா?"

"சரியே! இன்னும் 24 விநாடிகள் அங்கே காத்திருக்க வேண்டி இருக்கும். அவள் இன்னும் 17இல்தான் இருக்கிறாள்"

24 விநாடிகள். என்ன செய்து பொழுதைப் போக்குவது? இந்த ஜேக்கு நேரத்தின் அருமையே தெரிவதில்லை. ஒரு புத்தகம் படிக்கலாமா? மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். விரல்கள் நடுங்குவது தெரிந்தது.

"கவிதை! கவிதைப் புத்தகம் படி. இப்போதைக்கு உனக்கு அதுதான் தேவை"

"ஜே. எத்தனை முறை சொல்வது? மனத்தையெல்லாம் படிக்காதே.. இது என் நேரம். கடமை நேரம் அல்ல!"

யதேச்சையான திருப்பலில் "விழிகள் விண்ணை வருடினாலும் விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான்" என்ன அர்த்தம் இதற்கு? ஜன்னல் கம்பி என்றால் என்ன?

"அதை விடு.. பக்கம் 48க்கு போ!" என்றான் ஜே காதோரம்.

"எதுவும் பிரச்சினை வராதே?

"நீ எதற்கும் தயாரானவன் சீ! உன்னால் முடியாததா?"

"உனக்கென்ன- பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய். நேரடியாக இறங்குபவன் நான் தானே"

"பயம் வேண்டாம். உனக்கு இது சுலபம்!"

"அவள் தயார்ப் படுத்தப்பட்டுவிட்டாளா?"

"ஆம். 5 சிசி"

"அவர்கள்?"

"காத்துக் கொண்டிருக்கிறார்கள்"

அவள் வண்டி வானில் தென்பட்டது. சிறிய வண்டி. அவள் அமரவும், ஒரு சிறு பெட்டி வைக்கவும் மட்டுமே இடம். மண்ணைச் சிதறடித்து இறங்கினாள்.

"திருவாளர் சீ"

"நானே!" என்றேன். அவள் மீதிருந்து கண்ணை எடுக்க முடியாமல். அளவான வடிவுகள், வளைவுகள்- சீருடையையும் மீறிய வசீகரம்.

"வசீகரம் என்றால் என்ன?" என்றான் ஜே.

சும்மா இருடா - மனத்துக்குள்ளேயே அவனுக்கு பதில் சொல்லிவிட்டு "உங்கள் பெயர்?" என்றேன் அவளிடம்.

"எனக்கு பெயர் கிடையாது. 44 என்பது என் பணி எண் - உங்கள் அடையாளம் காட்டுகிறீர்களா?" பெட்டியிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தாள்.

கிளம்புகிறாளே. எப்படி நிறுத்துவது? "நீங்கள் உணவருந்திவிட்டீர்களா?"

"ஒரு மணிக்குதான். இடை நேரங்களில் எதுவும் சாப்பிடக்கூடாது"

"தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு கேள்வி"

கேள்விக்குறியாய் புருவம் தூக்கினாள்.

"நீங்கள் மனிதப்பிறவிதானே? எந்திரள் அல்லவே?"

சிரிப்பு போலவே அவள் உதடு குவிந்தது. "மனிதள்தான்!"

"அமருங்களேன் உணவருந்தலாம்"

"இல்லை என்னை அடுத்த கடமை அழைக்கிறது"

அடுத்த கடமையா?

"இல்லை. அவற்றை கவ்னித்தாகி விட்டது" ஜே குசுகுசுத்தான்.

"இந்த அழகிய மாலை, ஆர்ப்பரிக்கும் கடலலை, மஞ்சள் நிலா - இதை விடுத்து அடுத்த கடமையா? எனக்காக சிறிது நேரம் அமரமாட்டீர்களா?"

வண்டியிலிருந்த திரையைப் பார்த்தாள்."ஆமாம்.. வேறு கடமைகள் இன்று இல்லை! என்ன ஆச்சரியம்!"

"இந்த உணவு எனக்கு மிக அதிகம். நீங்களும் பங்கு கொள்கிறீர்களா?"

"இல்லை வேண்டாம். நான் கிளம்புகிறேன். அறையில் வேலைகள் இருக்கின்றன; இந்த எதிர்பாராத விடுமுறையை உபயோகிக்க உத்தேசம்" கிளம்பிவிட்டாள்.

ஜே. திட்டத்தின் அடுத்த கட்டம்..

"இதோ"

அவள் வண்டி வேகமெடுத்து மேலேறுவதற்கு முன்னர் எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் நான்கு வண்டிகள் அவளைச் சூழ்ந்து அவளைத் தரையிறக்கின. நானும் அவள் வண்டி இருக்குமிடத்துக்கு ஓடினேன்.

"அழகிய பெண். மனிதள் போல!" என்றான் அவளைச் சூழ்ந்த நால்வரில் ஒருவன்.

"ஆம். மனிதளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது"

"பெண்ணே உன் உடைகளை அவிழ்"

44 ந் முகத்தில் கலக்கம். "எனக்கு அதற்கு ஆணையில்லை"

"ஆணையும் வேண்டாம் ஆனையும் வேண்டாம். நீயாக அவிழ்த்தால் வன்முறை தேவையில்லை"

என்ன ஜே இது பிராசமாகப் பேசுகிறார்கள்! நாடகத்தனமாக இருக்கிறார்களே.. அவள் புரிந்துகொண்டுவிடப்போகிறாள்!

"அவளுக்கு அவ்வளவு மூளை கிடையாது"

44க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. "யாரடா நீங்கள்? என்ன செய்கிறீர்கள் அந்தப் பெண்ணை"

"இதைக் கவனி.. அவளைக் காப்பாற்ற வந்த வீரனை முதலில் முடிக்கலாம்"

நால்வரும் என் மீது பாய, நான் அவர்களை அடிக்க, அவர்கள் என்னை அடிக்க.. மூன்று நிமிடங்களின் முடிவில் அவர்கள் தோற்று ஓடி வண்டியேறிப் பறந்தார்கள்.

"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?" நன்றி என்ற வார்த்தை பழகாவிட்டாலும் அவள் குரலில் நன்றி இருந்தது.

"நீங்கள் என்னுடன் அமர்ந்து உணவருந்தி இருந்தால் இது நிகழ்ந்திருக்காது"

அமைதியாகவே என்னுடன் வந்தாள். "அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்கள் அழகு அப்படி"

"கலக்கறே சீ!" என்றான் ஜே.

"அழகாகவா இருக்கிறேன்?"

"அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் இருக்கிறது என்று ஒரு பழைய பழமொழி. நீங்கள் எல்லார் கண்ணிலும் அதை ஏற்றக்கூடியவர்"

"நீங்கள் பேசுவது பெரும்பாலும் புரியவில்லை"

"ஞாயும் ஞாயும் யாராகியரோ"

"இது சுத்தமாகப் புரியவில்லை"

"இது சங்ககாலத் தமிழ்க் கவிதை. எங்கே பிறந்து எங்கே வளர்ந்தாலும் அன்புடை நெஞ்சம் கலந்துவிடும் என்று அர்த்தம்"

"நெஞ்சம் என்றால் இதயமா? அது எப்படிக் கலக்கும்?"

"செம்புலப் பெயல்நீர் போல"

"எங்கள் உணவகத்தில் அந்த நீர் கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டும்தான்" நகைச்சுவையாகப் பேசுகிறாளா இல்லை நிஜமாகவே அப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டாளா? எதையும் காட்டாத முகபாவம்.

"உங்களை இதற்கு முன்னால் எங்கேயாவது சந்தித்திருக்கிறேனா?"

"இருக்கலாம். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இதே உணவகத்தில் வேலை செய்கிறேன்"

"மூன்று அல்ல.. முன்னூறு ஆண்டுகளாகப் பார்த்த ஞாபகம். ஜன்ம ஜன்மமாய்த் தொடரும் பந்தம்"

"முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நான் பிறக்கவே இல்லை!" இப்போது நிஜமாகவே சிரித்தாள்.

"சிரிக்கிறாளா.. அற்புதம். இன்னும் கொஞ்சம் கஷ்டப்படு! மடிந்துவிடுவாள்"

"பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்ட பந்தமாகத்தான் நான் உணர்கிறேன். நீ?"

"எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஆனால் உங்களை முன்னமேயே பார்த்த உணர்வு எனக்கும் இருக்கிறது"

"முதல் பார்வையில் காதல் வருமா என நேற்று கேட்டிருந்தாலும் இல்லை என்றுதான் சொல்லி இருப்பேன்"

"இன்று?"

"இன்றுதான் உன்னைச் சந்தித்து விட்டேனே.. என் முன் அனுபவங்கள் அனைத்தும் மாறிப்போயின. இன்று - இக்கணம் புதிதாய்ப் பிறந்தவன் போல உணர்கிறேன்!"

"கவித கவித" ஜே சும்மாவே இருக்கமாட்டான்.

"நீங்கள் பேசுவது முழுவதும் புரியாவிட்டாலும் நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது" அவள் கண்ணில்.. இதுதான் காதலா?

"இன்னும் இல்லை. அவளை உன் முடிவுக்குக் கட்டுப்படவை" ஜே புத்தகப்புழு. அவனுக்கு முடிவுகளை நிரூபிக்கவேண்டும்.

"என் இல்லத்துக்குச் செல்லலாமா? 15 நிமிடம்தான் ஆகும். அங்கும் கடற்கரை, இதே நிலவு, மாலை இப்போதுதான் துவங்கி இருக்கும்.. என் கவிதைப் புத்தகத்தைக் காட்டுகிறேன்"

"கவிதையா? நீங்கள் எழுதுவீர்களா?"

"கவிதை மட்டுமா? காற்றிலேறி அந்த விண்ணையும் சாடுவோம் - காதல் பெண்டிர் கடைக்கண் பார்வையில்!"

"இது உன் கவிதையாடா? அவளுக்குத் தெரியாதுன்ன வுடனே பொளந்து கட்றான் பாரு"

"மிக அழகாகப் பேசுகிறீர்கள். உங்களுடனேயே இருந்துவிடலாம் போல் இருக்கிறது"

"கிளம்பிவிடு. உணவகத்தில் இரண்டுநாள் தேடுவார்கள் அப்புறம் கைவிட்டு விடுவார்கள்."

"பிறகு?"

"நமக்காக ஒரு புது உலகம் காத்திருக்கிறது. காதல் செய்வோம்! சம்போகம்! ஆணும் பெண்ணும் கலக்கும் அற்புத வினாடிகள்! இன்றைய நடைப்பிணங்கள் வாழ்நாளில் கண்டிராத இன்பத்தின் உச்சம் காண்போம். தொழிற்சாலை வேண்டாம். நம் இல்லத்தில் உருவாக்குவோம் நம் சந்ததிகளை! காதலினால் மனிதர்க்கு கலவி உண்டாம் - கவலைபோம் - ஆதலினால் காதல் செய்வோம்!"

அவளை லேசாக அணைத்து மேல் நெற்றியில் ஒரு முத்தமிட்டேன். சிலிர்த்தது இருவருக்கும்.

அவள் என் வலது காதை வருடினாள். பின்னர் இடது காதோரம் வந்து,

"ஜே.. உங்களுக்கும் கேட்கும் என நம்புகிறேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட காதல் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததற்காகவும், அரசு அனுமதியின்றி திருடப்பட்ட எஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை உபயோகித்து உணர்ச்சிகளை தூண்டியதற்காகவும், அரசின் ஜனத்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் 1208ன் கீழ் உங்கள் இருவரையும், 244, அமைதி காப்புப் படைக் காவலாளியாகிய நான் கைது செய்கிறேன். உங்கள் உணர்ச்சிநீக்குத் தண்டனை இன்னும் சில விநாடிகளில் நிறைவேறும்."
***********************
குறிப்பு: அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டிக்காக ஆக்கப்பட்டது. ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி. மேட்டர் இல்லாத நேரத்தில் போட்டி ஆக்கத்தை பதிவில் போடலாம் எனத் தூண்டி “நானும் ப்ளாக்கர்தான்” எனச் சொல்ல வைத்ததற்காக!

Jan 19, 2009

திருமங்கலம் Millionaire!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ. அவன் அறிவாளி
ஆ. அவன் புத்திசாலி
இ. அவன் ஏமாற்றினான்
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

போலீஸ் ஸ்டேஷன். லாடம் கட்டப்பட்ட நிலையில் சுடலைமுத்து..

"உனக்கு எப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரியும்?"

"எனக்குத் தெரியும்"

"பெரிய பெரிய ப்ரொபஸர்ங்க, ஐ ஏ எஸ் ஆபீஸருங்க எல்லாம் 4 கேள்வி தாண்டறதில்லை.. உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"

"தெரியும்"

"நீ யாரு? எந்த ஊர்லே இருந்து வந்தே?"

"மதுரைக்குப் பக்கத்துல திருமங்கலம்னு ஒரு கிராமம்.. அங்கேதான் நான் வளர்ந்தது.. டீக்கடை வச்சு பொழைச்சுக்கிட்டிருந்தேன்"

காட்சி மில்லியனேர் செட்டுக்கு மாறுகிறது.. நிகழ்ச்சி நடத்துபவர் ஆரம்பிக்கிறார்:

"வாருங்கள் நாம் மில்லியனர் நிகழ்ச்சி விளையாடலாம்... நம் எதிரே இருப்பது திருமங்கலத்தில் இருந்து வந்திருக்கும் சுடலைமுத்து.. சுடலைமுத்து என்ன செய்றீங்க?"

"டீக்கடை வச்சிருக்கேன்"............(தேவையான அளவு அவரைக் கிண்டல் செய்ததன் பின்)..

"இதோ உங்களுக்கான முதல் கேள்வி.. ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் போட்டிருக்கும்?

அ. இந்திரா காந்தி
ஆ. நேரு
இ. ரஜினிகாந்த்
ஈ.காந்தி

ப்ளாஷ் பேக்:

நானும் எல்லா எலக்‌ஷனிலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் தான் ஓட்டுப்போட்டு கிட்டிருந்தேன்.. திடீர்னு ஒரு நாள் டிவியில மட்டும் பாத்த பெரிய மனுஷங்க எல்லாம் ஊருக்கு வந்தாங்க..

வீட்டுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த ரேஷன் கார்டு .. வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துகிட்டு ஓடிப்போனேன்.. கும்பலையெல்லாம் விலக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன்.. அப்ப அதைப்பாத்துட்ட்உ ஒரு பெரிய மனுசன் எனக்கு ரூபாய் நோட்டு ஒண்ணு தந்தாரு.. அதில..

போலீஸ் ஸ்டேஷன்..

கான்ஸ்டபிள் சொல்கிறார்: ஆமாம் சார்.. எனக்கு கூட அப்பதான் 1000 ரூபாய்க்கு நோட்டு இருக்குனே தெரியும்..

மில்லியனர் செட்..

"வாழ்த்துக்கள்.. திருமங்கலம் டீக்கடைக்காரருக்கு 1000 ரூபாய் பரிசு.."

"3000 ரூபாய்க்கான இரண்டாம் கேள்வி.. தயாரா?"

"தயார்"

"மின்சார விளக்கு எரிய முக்கியமான தேவை எது?

அ. நெருப்பு பெட்டி
ஆ. தீப்பந்தம்
இ. மேண்டில்
ஈ.மின்சாரம் "

ப்ளாஷ்பேக்:

"என்னாய்யா டீ போட்டிருக்கே.. ஒரே உப்பா கரிக்குது"

"மன்னிச்சுக்கங்க.. சக்கரையும் உப்பும் பக்கத்துல இருந்துச்சு.. உப்பைப் போட்டுட்டேன் போல.."

"ஒரு மெழுகுவத்தி கொளுத்திக்க வேண்டியதுதானே.."

"எல்லாம் தீந்து போச்சுங்க.. நேத்து வரிக்கும் கரண்டே கட் ஆவலையா? அதனால தேவைப்படல. எலக்‌ஷன் தான் முடிஞ்சு போச்சே.. இதோ போய் வாங்கி வரேன்"

கரவொலி சத்தம் மில்லியனர் அரங்கை நிறைக்கிறது.

"20000 ரூபாய்க்கான பரிசை வாங்கிச் செல்கிறார் திருமங்கலம் சுடலைமுத்து"

"இவ்வளவு பெரிய அமவுண்டை பார்த்திருக்கிறீர்களா சுடலைமுத்து?"

"எங்கேங்க? எங்க வீட்லே மொத்தம் 2 வோட்டுதான். பக்கத்து வீட்டு பரமர் 10 வோட்டு மொத்தமா வச்சிருந்தான்.. அள்ளிட்டான்"

"கவலைப்படாதீங்க.. நீங்க இங்கேயும் அள்ளலாம்"

"ஆறாவது கேள்வி.. தயாரா?"

"கேளுங்க"

"உளியின் ஓசை படத்தின் கதை வசனகர்த்தா யார்?

அ.கலைஞர்
ஆ.ராம நாராயணன்
இ. அகிரா குரசோவா
ஈ.மணிரத்னம்"

ப்ளாஷ்பேக்:

"மச்சான் என்னை சினிமாக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி ஏமாத்திகிட்டே இருக்கே"

"இதோ.. இன்னிக்கு கூட்டிட்டு போறேன்.. வார்டு கவுன்சிலர் வந்தாரு.. எல்லாருக்கும் டிக்கட் தந்தாரு.."

"ப்ரீயாவா?"

"ஆமாம்.. எனக்கு மட்டுமே 10 டிக்கட் தந்தாரு.. முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"

படம் பார்க்கிறார்கள்.

"தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"

மில்லியனேர் செட்

"சரியான விடை சுடலை.. நீங்கள் 40000 ரூபாய் ஜெயித்துவிட்டீர்கள்"..

போலீஸ் ஸ்டேஷன்:

"தில்லானா மோகனாம்பாள் யார் வசனம் சொல்லு பாக்கலாம்?"

"எனக்குத் தெரியாது"

"அதுவே தெரியாது.. இது எப்படி தெரியும்?'

"அவங்க அந்தக் கேள்வி கேக்கலையே!"

மில்லியனர் செட்

"1,60,000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி:

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

அ.பாம்பே
ஆ.ஹாங்காங்
இ.டெல்லி
ஈ.சென்னை"

"இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது.. ஆடியன்ஸ் போல்"

போலீஸ் ஸ்டேஷன்..

"இந்தக் கேள்விக்கு உனக்கு விடை தெரியாதா? குழந்தை கூட சரியாகச் சொல்லுமே?"

"படித்த குழந்தை சரியாக்ச் சொல்லும்.. எனக்குத் தெரியாது"

மில்லியனர் செட்டில்
கரவொலி.

"ஆஹா.. நம்ம டீக்கடைக்காரர் எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி கலக்கிகிட்டிருக்கார்.. இன்னும் இரண்டு லைப் லைன் வேற வச்சிருக்கார். 320000 ரூபாய்க்கான ஒன்பதாவது கேள்வி.. தயாரா?"

"தயார்.."

"மதுரையில் டிவி பார்க்க எந்த கேபிள் கனெக்‌ஷன் வேண்டும்?

அ. அரசு கேபிள்
ஆ.சுமங்கலி கேபிள்
இ. ராயல்
ஈ. ஹாத்வே"

ப்ளாஷ்பேக்
விரிகிறது..

"வெட்றா அந்தக் கம்பத்தை.."

"அண்ணே பாத்து வெட்டுங்கன்னே.. டீக்கடை ஓலைச் சாரம் அதோட ஒட்டி இருக்கு"

"இவன் எவண்டா.. அண்ணன் கேபிள்லே தெரியாத சானல் எங்கயும் தெரியக்கூடாதுன்னு பாடுபட்டுகிட்டிருக்கோம்.."

வெட்டிய கம்பம் கீழே விழுகிறது..டீ பாய்லரும் சேர்த்து.

போலீஸ் ஸ்டேஷன்.

"பத்து நாள் ஆச்சு எனக்கு சூடுபட்ட கொப்பளம் ஆற"

மில்லியனர் செட்

"சரியான விடை.. கலக்கறீங்க சுடலை.."

"10 ஆவது கேள்வி..

"லட்டு தயாரிக்க என்ன தேவை?

அ. கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய்
ஆ.மைதாமாவு சர்க்கரை எண்ணெய்
இ. அரிசிமாவு, சர்க்கரை, எண்ணெய்
ஈ. இவற்றில் எதுவும் இல்லை"

"விடை தெரியுமா தெரியாதா?"

"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"

"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"

ப்ளாஷ்பேக்:

"சுடலை.. லட்டு கொடுக்கறாங்களாம்.. போய் வாங்கல?"

"அடப்போடா.. அவன் அவன் வாஷிங் மெஷினும் டிவியும் கொடுக்கறான்.. இவங்க போயும் போயும் லட்டுதான் தராங்களா?"

"அட.. இது சாதா லட்டு இல்லைடா..வாங்கிப் பிரிச்சுப் பாரு"

மில்லியனர் செட்

"விடை ஈ..இவற்றில் எதுவும் இல்லை"

"ஷ்யூர்? கான்பிடண்ட்?"

"ஆமாம்"

"எப்படி சொல்றீங்க?"

"தங்கத்தைப் பத்தி வேறெந்த விடையிலேயும் இல்லியே?"

"வாவ்.. சரியான விடை"

"13 ஆவது கேள்விக்கு வந்துட்டீங்க.. 50,00.000 ரூபாய் இந்தக்கேள்விக்கு சரியான விடை சொன்னா கிடைக்கும்"

"இவற்றுள் எது கலவரத்தை உடனடியாக உண்டாக்கும்?

அ. பங்காளிச் சண்டை
ஆ. கடன் பாக்கி
இ. ஆபாசமாகத் திட்டுதல்
ஈ. கருத்துக் கணிப்பு"

ப்ளாஷ் பேக்..

"எல்லாக் கடையையும் மூடச்சொல்லுங்கடா.. மேயர் அம்மா வராங்க.. "
"இவன் கடையை உடைச்சு போடுங்கடா"
"டே இருடா.. பத்திரிக்கை ஆபீஸுக்குதான் மொதல்ல போகணும்.. சூடா ஒரு டீ குடிச்சுட்டு போலாம்.. எங்களுக்கெலாம் டீ போடுறா சுடல.. க்ரிஷ்ணாயில் வச்சிருப்பியே? அந்த டின்னை எடுத்துக்கங்கடா கிளம்பலாம்"

போலீஸ் ஸ்டேஷன்..

"ஆச்சரியமா இருக்கு உன்னைப்பாத்தா.. கேள்விக்கு எப்படி பதில் சொல்லி ஏமாத்தினேன்ன்னு கேட்டா அதுல இருந்து தப்பிக்கறதுக்கு கலவரத்துக்கு க்ரிஷ்ணாயில் சப்ளை பண்ணேன்னு ஒத்துக்கற.. இதுக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?"

"என்ன ஒரு இருபதாயிரம் கிடைக்குமா?"

"ஷார்ப்பா இருக்காண்டா"

மில்லியனேர் செட்

"சுடலைமுத்து, நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஒரு கோடிக்கான கேள்வி இது. தயாரா?"

"தயார் சார்"

"இதோ உங்கள் கேள்வி"

"இவற்றுள் எது இலவசமாகக் கிடைக்காது?

அ. டிவி
ஆ. கேஸ் ஸ்டவ்
இ. மில்லி
ஈ. மல்லி"

"குழப்பமா இருக்கே சார்.. டிவி எங்க ஊருக்கு கிடைச்சிருச்சு.. மத்ததுல.."

"மில்லியா.. மல்லியா கேஸா?"

"குழப்பமா இருக்கு சார்.. 50/50 ஆப்ஷன் உபயோகப்படுத்தறேன்"

"சரி.. கம்ப்யூட்டர், ரெண்டு தவறான விடையை அழிச்சுடுங்க"

"இ. மில்லி, ஈ. மல்லி.. எது சரியான விடை?"

"இப்பவும் சரியாத் தெரியலையே சார்.. எலக்‌ஷன் டைம்ல மட்டுமா எல்லா டைம்லேயுமா சார்?"

"அது எனக்குத் தெரியாது.. விடை இ. மில்லியா ஈ. மல்லியா?"

"தெரியலையே சார்"

"அப்ப விடை இ. மில்லியாவும் இருக்கலாம், ஈ.மல்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"ஓக்கே சார்.. சரியான விடை ஈ. மல்லி"

"ஷ்யூர்? இ.மில்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"இருக்கலாம் சார். ஆனா என் விடை ஈ.மல்லிதான்"

"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"

"ஆ! ஈ மல்லி சரியான விடை.. நீங்கள் இப்ப ஒரு கோடீஸ்வரர்.. அடுத்த கேள்வி,.."

பாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

"ஆ! அடுத்த கேள்வி நாளை இதே நேர நிகழ்ச்சியில கேட்கப்படும்.. நன்றி"

செட்டை விட்டு வெளியே வந்த நடத்துநர் "போலீஸ் ஸ்டேஷன், சுடலை ஏமாத்துறான்.. அவனை அடிச்சு உண்மையைக் கண்டுபிடிங்க"

போலீஸ் ஸ்டேஷன்..
"எப்படிடா ஈ மல்லின்னு சரியா சொன்னே?"

"எலக்‌ஷன் டைம்லே நெறய மில்லி ப்ரீயா கிடைச்சுது சார்.. மல்லி எப்பவுமே கிடைச்சதில்ல.. அதான் சொன்னேன்.."

"சரி.. திருமங்கலத்துக்காரன் எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேள்விய செட் பண்ணி இருக்கானுங்க கேனப்பயலுங்க.. அவனுங்க கிட்ட பிரச்சினைய வச்சுகிட்டு உன்னை அடிக்கச் சொன்னான் பாரு.. அவனைத்தான் உதைக்கணும்.."

மறுநாள் செட்டில்:

"வாங்க சுடலைமுத்து.. உங்ககிட்ட கடைசிக் கேள்வி கேட்கணும்.. இதுக்கு சரியான விடை சொன்னா உங்களுக்கு ரெண்டு கோடி.. தப்பான விடை சொன்னா, அய்யா ஜாலி.. நாங்க எதுவுமே கொடுக்க வேணாம்"

"கேளுங்க சார் கேள்வி"

"இந்தியாவின் பிரதம மந்திரி யார்?

அ. கலைஞர் மு கருணாநிதி
ஆ.முலாயம் சிங் யாதவ்
இ. மன்மோகன் சிங்
ஈ.லாலு பிரசாத் யாதவ்."

"சுலபமான கேள்விதான்.... இல்ல?"

"எனக்கு இதுக்கு விடை தெரியாதே?"

"ஏமாத்தாதீங்க.. இதுக்கா விடை தெரியாது?"

"நெஜமாதான் சொல்றேன் சார்..போன் அ பிரண்ட் போடலாமா?"

"யாருக்கு?"

"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."

"யாரது?"

"சோனியா காந்தி!"

***************************************************************************

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?

அ.
ஆ.
இ.
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

இல்லை.. எல்லாம் நம் தலைவிதி!

Jan 11, 2009

Slumdog Millionaire விமர்சனம்

ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாத சேரிச்சிறுவனுக்கு 100 டாலர் நோட்டின் பெஞ்சமின் ப்ராங்க்ளின் எப்படித் தெரியும்? தர்ஷன் தோ கன்ஷ்யாம் என்ற பஜனை எழுதிய சூர்தாஸுக்கும் இந்தச் சேரிச்சிறுவனுக்கும் என்ன உறவு? துப்பாக்கியைக் கண்டுபிடித்த கோல்ட் இவன் சித்தப்பாவா? ராமனின் கையில் இருக்கும் வில்லைப்பற்றி சேரியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சிறுவனுக்கு எப்படித் தெரியும்?



இப்படி சம்மந்தமே இல்லாத, தெரிய வாய்ப்பே இல்லாத கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லி கோடீஸ்வரனாகும் ஜமால் மேல் மில்லியனர் நிகழ்ச்சி நடத்துபவருக்கு சந்தேகம் வருவது நியாயம்தானே? சேரிச்சிறுவன் தானே - கேட்க ஆளில்லை - கூப்பிடு போலீஸை - ரெண்டு அடி அடிச்சா எப்படி இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியும் -எப்படி ஏமாத்தினான்னு சொல்லிடுவான்..



சொல்கிறான். ஒவ்வொரு கேள்விக்கும் விடை தெரிந்த தன் வாழ்க்கைச் சரித்திரத்தை. மலத்தில் குதித்து ஆதர்ச நடிகனிடம் பெற்ற ஆட்டோகிராப்பை சில்லறைக்கு விற்கும் அண்ணன் துரோகத்தை. ராமன் குறுக்கே வந்து அம்மாவைத் தூக்கிச் சென்றதை. குழந்தைப் பிச்சைக்கும் கைக்குழந்தைப் பிச்சைக்கும் கண்ணில்லாப்பிச்சைக்கும் உண்டான பொருளாதார வித்தியாசங்களை. ரயிலின் மேலிருந்து கயிறுகட்டி உணவு திருடும் வித்தையை. இளவயதுக்காதலியை கொலை செய்து மீட்டு அண்ணன் அபகரித்த துரோகத்தை. கடைசி நிமிடத்திலும்கூட ஏமாற்றப்பார்க்கும் பெரிய மனிதர்களின் காருண்யத்தை.

இவ்வளவு வித்தியாசமான திரைக்கதைப் பின்னலை சமீபத்தில் பார்த்ததில்லை. சுவாரஸ்யம் துளிக்கூட குன்றாமல் அதே நேரத்தில் அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் குறையாமல் பேண்டஸித் தன்மையோடு நகரும் காட்சிகள். எழுதும்போதே தெரிகிறது யதார்த்தத்தோடு பேண்டஸி எப்படி ஒட்டும்? சேரியின் அப்பட்டமான நிஜமும் அறைகிற அதே வேகத்தோடு மாய யதார்த்தமாக கோடிகளை வென்று ரயிலடியில் சேரும் நிஜத்துக்கு ஒட்டாத காட்சிகளும் ஓடிவிடுகின்றன.

இயக்கம் கலை இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு எல்லாமாய்ச் சேர்ந்து படம் பார்க்கும் உணர்வை முதலில் நம்மிடமிருந்து அகற்றிவிடுகின்றன. ஜமாலுக்கு விழும் அடிகளை நாம் வாங்குகிறோம். டாய்லெட்டில் குதிக்கும்போது மூக்கை மூடுகிறோம். கலவரத்தில் எழுந்து ஓடும் எரிபிணத்தைப்பார்த்துப் பதைக்கிறோம். சூடாக்கப்படும் ஸ்பூனைப்பார்த்து வியர்க்கிறோம். ரயிலில் இருந்து மணலில் விழுந்து உருள்கிறோம். திருடுகிறோம், மாட்டுகிறோம்..

தனித்தனியாக பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒரே விஷயத்தை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன்:

ராமர் கிளப்பிய கலவரத்தில் தாயை இழந்து பிச்சையெடுக்கும்போது கன்ஷ்யாமைப் பாடிவிட்டு மற்றபடி கடவுளைப்பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கை ஓட, தாதா வாழ்க்கை வந்தவுடன் தொழுகை செய்யும் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்கும் ஜமாலின் பார்வை -- ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத நுட்பம்!

குறைகள் இல்லாமல் இல்லை - வழக்கம்போல நம் குறைகளை ஏற்றுமதி செய்யும் மனோபாவம், ஹிந்தியில் எழுதி இலக்கணம் மாறா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் - சேரிச்சிறுவர்கள் பேசும் ஒட்டாத மொழி, படம் முடிகையில் பாட்டு நடனம், வலிந்து திணிக்கப்பட்டதாய்த் தோன்றும் சில விடைகள்..

2008ல் பார்த்த சில ஹிந்திப்படங்கள் (ஆம் இது ஹிந்திப்படம்தான்! என்ன, எழுதப்பட்ட பேசப்பட்ட சப்டைட்டில்!) மிகுந்த நம்பிக்கையை வரவழைக்கின்றன. (தேர்ந்தெடுத்துப் பார்ப்பதால் இருக்கலாம்) - வெட்னஸ்டே, ஆமீர், மும்பை மேரி ஜான் - இப்போது இது.
.
நிச்சயம் பாருங்கள்!

Jan 8, 2009

சிறுகதை: ஓர் இரவு

ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட அருவருக்க வைக்கவில்லை. அனாதரவாக விட்டுவிட்டு வந்திருக்கும் லாப்டாப் நினைவும் பயமுறுத்தவில்லை.


இவ்வளவு மகிழ்ச்சியாய் எல்லா செல்களிலும் புத்துணர்வோடு எப்போது இருந்தேன் கடைசியாக? ம்ஹூம் – ஞாபகமே இல்லை.


திரும்பி இருக்கையில் அமரும்போதும் எதிர் சீட்டில் இன்னும்"என்னைக்-கற்பழிக்க-வந்த-காமாந்தகாரா" பார்வையுடன் முறைத்துக்கொண்டிருந்தாள் மூதாட்டி. சீட்டுக்கடியில் பெட்டி நுழைத்தபோது லேசாக இடித்த கோபம் இன்னும் குறையாமல் டெக்கான் ஹெரால்டுக்குள் மூழ்கி இருந்தார் அவள் மூக்குக்கண்ணாடிக் கணவர்.


ரயில் சினேகத்தின் பேட்டர்ன் தொடர்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் கோபம் மறையும், "நீங்கள் மேல்பர்த்துக்கு" வேண்டுகோள், புளிசாதப் பகிர்வு, நாட்டைக் கெடுக்கும் சக்திகள் பற்றிய கருத்துரையாடல், இறங்குகையில் தொலைபேசி எண் பரிமாற்றம், பின் அவரவர் வழி என்றும் மாறாத வரிசை.


இன்று அதைப் பற்றியெல்லாம் என் கவலை செல்லவில்லை. யாரிடமாவது என் சாதனையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன். இன்னும் கருணை காட்டவில்லை. ஊருக்குச் சென்றதும் முதல்வேலையாக இதை ரோமிங்காக மாற்றவேண்டும். லாப்டாப்பிலும் சக்தி இல்லை


ஏன் இப்படி ஊர்கிறது இந்த ரயில்? இந்த நேரத்தில் வாரங்கல் வந்திருக்கவேண்டாமா?


"நீங்களும் சென்னைக்கா?" டெக்கான் ஹெரால்ட் முடிந்துவிட்டது போல.


இதென்ன கேனத்தனமான கேள்வி. இந்த ரயில் என்ன ஆம்ஸ்டர்டாமா போகிறது?


நக்கலைத் தவிர்த்து சினேகமாகத் தலையாட்டினேன்.


வாய்யா வா! அடுத்த கேள்வி மேல் பர்த்தானே?


"ஹைதராபாத்தில் வேலையா?"


"இல்லை. சென்னைதான். ஹைதராபாத்தில் ஒரு சின்ன ட்ரபுள்ஷூட்டிங் வேலை"


"ஓ சாப்ட்வேரா?" இவர்களுக்கு என்ன புரியும்? டாடா எண்ட்ரியிலிருந்து ராக்கெட் நுட்பம் வரையில் எல்லாவற்றையும் ஒரே கோணிக்குள் அடக்கிய சாப்ட்வேர் தவிர்த்து.


"இப்ப சாப்ட்வேர் மார்க்கெட் டல் போலிருக்கே" டெக்கான் ஹெரால்டில் பிசினஸ் பக்கங்களும் உண்டு போல.


"கொஞ்சம் டல்தான். ஆனால் எங்கள் கம்பெனியில் பிரச்சினை இல்லை. இப்போதுகூட ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட் நடக்குது, இது மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா இந்தியாவோட எகானமியே மாறிடும்"


"ஓ! முடிஞ்சுடுச்சா?"


"ஏறத்தாழ! அதுல ஒரு சின்ன ப்ராப்ளம். அதைச் சரிசெய்யத்தான் நான் வந்தேன். ரெண்டு நாள் முன்னாடிதான் கிளம்பினேன்"


"சரி ஆயிடுச்சா?"


"ஆச்சு! ரெண்டு நாள்லே முடியும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! என் பாஸ்க்கு கூட இன்னும் தகவல் தெரியாது.. அவனுக்கு நிச்சயம் ஏமாத்தம்தான்" இதையெல்லாம் நான் ஏன் இவரிடம் சொல்கிறேன்? யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்துதல் என்னைப்போட்டு படுத்திக் கொண்டிருந்தது..


"பாஸை அவன் இவன்னு சொல்றீங்க?"


"அவன் என் வயசுதான் சார். ஒரு கிரேட் மேலே அவ்ளோதான்.. என்னைப் பழிவாங்கணும்னே ஹைதராபாத் அனுப்பினான்"


"ஒரு களிமண்ணைப் பிடிச்சு பாஸ்னு பேர்வச்சாலும் அப்படித்தான்.. என் மேலதிகாரி என் கல்யாணத்துக்குக் கூட அரைநாள்தான் லீவ் கொடுத்தான். வருவேனோ மாட்டேனோன்னு இவ கண்ணுல தாரைதாரையாக் கண்ணீர்.. மையெல்லாம் அழிஞ்சு பாக்கவே கோரமா இருந்தா.. ஞாபகம் இருக்காடி?"


'டி' இந்த சம்பாஷணையில் மகிழ்ச்சியுறவில்லை. குமுதத்தில் நிலைத்த பார்வையை மாற்ற் யத்தனிக்கவில்லை.


"எனக்கும் ஏறத்தாழ அதே நிலைமைதான். இன்னும் மூணுநாள்லே கல்யாணம். இந்த வேலை ஒரு வாரம் பிடிக்கும்னு எஸ்டிமேட். அப்பவும் என்னை அனுப்பினான்"


"ஓ.. வாழ்த்துக்கள்! நல்லா இருங்க.. இவ்ளோ டைட்டா ஏன் போகணும்?"


"வேலையில இருந்த ஒரு கவர்ச்சிதான் சார்! யாராலயும் முடியலைன்னு கைதூக்கிட்ட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணா வர சாடிஸ்பேக்‌ஷன் வேற எங்கேயுமே கிடையாது சார். அந்த ரிஸ்க் எனக்குப் பிடிக்கும்.."


"ஆமாம். வொர்க்லே டெடிகேஷன் இருக்கறத் இப்பல்லாம் பாக்கவே முடியறதில்லை!"


"அப்படி பொதுவா சொல்லிட முடியாது சார். எங்க டீம்லே உள்ள எல்லா மெம்பருங்களுமே ரொம்ப டெடிகேட்டட் தான் இன்னும் சொல்லப்போனா இந்தக் காலத்துலதான் டெடிகேஷன் அதிகமா இருக்கு"


"நான் பொதுவா பாக்கறதை சொன்னேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. இந்தக்காலத்துப் பசங்களுக்கு பொதுவாவே தகுதிக்கு மீறிய வருமானம். பொறுப்பில்லாம வர பணத்தையெல்லாம் தண்ணியடிச்சு கூத்தடிச்சு கரைக்கறது. இதையெல்லாம்தானே பாக்கறோம்.. அதை வச்சி சொன்னேன்"


"சில பேர் அப்படியும் இருக்கலாம்.. ஆனா என்னைப்போல ஆளுங்க எல்லாம் சம்பளத்தை புத்திசாலித்தனமா இன்வெஸ்ட் செய்யறோம்.. என் பணமெல்லாம் என் கம்பெனியிலேயே இருக்கு மொத்தம் ஷேரா"


"ஓஹோ.. நல்ல விஷயம்தான்" பெரிசு அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டதை உணர்ந்து அமைதியானார்.


மறுபடியும் போனை எடுத்துப் பார்த்தேன். ம்ஹூம்..


"சார் உங்ககிட்ட போன் இருக்கா? ஒரு மிஸ்டு கால் கொடுத்து விடறேன். அவங்க கால் பண்ணுவாங்க"


"அவங்க ன்னா? அவங்களோ?" பெரியவர் கண்ணடிப்பது போல முயற்சித்தார். நானும் அவர் ஆசைப்படி அசடு வழிந்தேன்.


செல்போனை இவ்வளவு பத்திரப்படுத்திப் பார்த்ததில்லை நான். கட்டைப்பைக்குள் ஒரு கஷ்கப்பை அதற்குள் பாலிதீன் உறையில் பவுச். அதற்குள் இருந்த அரதப் பழைய மாடல்.


இரண்டே நிமிடத்தில் போன் வந்துவிட்டது. காத்திருந்திருப்பாள்.


"தூங்கிட்ருப்பேன் தெரியுமா?"


"நீ தூங்கியிருக்கமாட்டே.. அதுதான் எனக்குத் தெரியும்"


"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது. ஒரு டுபாக்கூர் போனை எடுத்துகிட்டு ஹைதராபாத் போகலைன்னு யாரு அழுதா?"


"போன்லே என்ன பிரச்சினை? சர்வீஸ்தானே?"


"நேரு சொன்ன மாதிரி ஐ ஆம் நாட் இண்ட்ரஸ்டட் இன் எக்ஸ்க்யூஸஸ்"


"துரைசாணி இங்கிலீச் எல்லாம் பேசுது"


"போடா இடியட்.. யாரு உன்னை இந்த வேளையில ஊரைவிட்டு போகச்சொன்னது?"


"கடமைம்மா.. கடமை! சோறு போடற கம்பெனிக்கு விசுவாசம்!"


"ஓவர் சீன் ஒடம்புக்கு ஆவாது கண்ணா! என்ன ஆச்சு? வேலை முடிஞ்சுதா?"


"யாரைப்பாத்து என்ன கேள்வி? ராஜா கைய வச்சா.. அது ராங்கா போயிருக்கா?"


"சரி சரி! அளப்பறை தாங்கல! சிவாக்கு தெரியுமா?"


"எங்கே..கடைசி நேரத்துல ப்ளைட் டிக்கட் கிடைக்காம ட்ரெயின்ல வரேன்..

சிக்னலே கிடைக்கலை.. உனக்கே இவ்ளோ லேட்டா பண்றேன்"


"அவனை இந்த நம்பருக்கு கால் பண்ணச் சொல்லட்டுமா?"


"வேணாம் வேணாம்.. ஒரு பெரிசு கிட்ட வாங்கி போன் பண்றேன்..புதையல் காத்த பூதம் போல கற்பு கழியாம வச்சிருக்காரு போனை!"


"அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர்.. என் தம்பிக்கு 10 லட்சம் பேங்க் பேலன்ஸ் காட்டணுமாம். அப்பா வேறெங்கேயோ ட்ரை பண்ணாரு.. நான் தான் சொன்னேன்.. வேணாம்.. ஒரு இளிச்சவாயன் பணத்தை என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுகிட்டிருக்கான்னு"


"அட.. என் பணமெல்லாம் ஷேர்லே முடங்கி இருக்கே அதை மறந்துட்டியா?"


"முட்டாளே.. நீதான் ஒரு பேங்கர் கிட்டே பேசறோம்ன்றதை மறந்துட்டு பேசறே.. அதை ப்லெட்ஜ் பண்ணி ஷார்ட் டெர்ம் லோனா வாங்கித்தர கூட என்னால முடியாதா?"


"ஓக்கே.. அதை நீயே பாத்துக்க.. அப்புறம்?"


"அப்புறம் என்ன? எனக்காக என்ன வாங்கி வரே?"


"என்னையே வாங்கிவரேன்.."


"அதை வச்சு என்ன பண்றது? கால் காசுக்கு பிரயோஜனமா?"


"லைப் டைம் இன்வெஸ்ட்மெண்டும்மா!"


"இப்படியெல்லாம் பயமுறுத்தாதே.. ரீ கன்ஸிடர் பண்ணவேண்டி இருக்கும்"


"அவசர அவசரமா வந்து ட்ரெயின் ஏறறேன்.. கடைக்கெல்லாம் போகநேரமே இல்லடி கண்ணு!"


"கொஞ்ச ஆரம்பிச்சுடுவியே உங்கிட்ட ப்ராப்ளம் இருந்தா"


"அப்புறம்"


பெரிசு தூரமாக இருந்தாலும் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார்.. சில்மிஷ்மான சிரிப்போடு "ஸ்வீட் நத்திங்ஸா" என்றார்.


"ஆமாம்.. கொஞ்ச நாள் போனாதான் நத்திங் இஸ் ஸ்வீட்னு தெரிய வரும்"


புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பேன் வேகமாக சத்தம் மட்டும் போட்டது. ஒருவழியாக தூக்கம் வந்து கலைந்தபோது ரயில் நின்றுகொண்டிருந்தது.


"சென்னை வரலை?"


"சரியாப்போச்சு.. மூணு மணி நேரம் லேட்.. இப்போதான் நெல்லூர் உள்ளே எண்டர் ஆகுது"


பெரியவர் நெல்லூரிலும் இறங்கி எப்படியோ நியூஸ்பேப்பரை மட்டும் வாங்கி வந்துவிட்டார்.


அவர் மூன்றாம் பக்கம் படிக்கத் திருப்பும்போதுதான் பார்த்தேன் முதல்பக்கத்தில் நான் ஓட்டாண்டியான கதையை.

 

blogger templates | Make Money Online