Jan 27, 2010

காபரே கருத்துகள்

தாய்லாந்து சென்றிருந்தேன் குடும்பத்தோடு. வேண்டாம், அந்தக்கேள்வியைக் கேட்காதீர்கள், ஆயிரம் முறை பதில் சொல்லியாகிவிட்டது.

புன்னகை தேசம் என்று விமானநிலைய வரவேற்புப்பலகை சொல்கிறது. உண்மை. இருபது ரூபாய்க்கு மாங்காய் வாங்கினாலும் விற்பவர் சொல்லும் கணக்கில்லாத கபுன்கா (நன்றி :-))வுடன் புன்னகைகள் இலவசம்; 1000 கிலோமீட்டருக்குள் கடல் மலை அருவி காடு என எல்லா இயற்கையையும் பார்க்க நீந்த குளிக்க களிக்க - பதப்படுத்தி வைத்திருக்கும் சுற்றுலாத்துறை -- மிக நிறைவான பயணம். விரிவாக எழுதினாலும் எழுதுவேன். 1000 ஃபோட்டோக்கள், 5 மணிநேர வீடியோ இருப்பதால் எதை எழுத எதை விட என்று தெரியாமல் இருக்கிறேன் இப்போதைக்கு.


ஆனாலும், இந்த விஷயத்தைப் பற்றி உடனடியாக எழுதியே ஆகவேண்டும். ஒரு காபரே ஷோ பார்த்தேன்.


காபரே என்றதும் எனக்கும் கச்சடாவான எண்ணங்கள்தான் வந்துகொண்டிருந்தன, ஸ்பெயினில் ஒரு வருட ஆரம்ப காபரேவைப் பார்க்கும்வரை - பத்தாண்டுகளுக்கு ஒரு பாடலை எடுத்துக்கொண்டு நூறாண்டுகளின் இசை ரசனை மாற்றத்தை நடனத்தோடு சொன்ன காபரேதான் கண்ணைத்திறந்தது - சிஐடி சகுந்தலா ஆடுவது காபரே அல்ல என்று.

தாய்லாந்து காபரேவும் ஏறத்தாழ இதேபோலத்தான். பல பாடல்களுக்கான நடனங்களை லூஸாக ஒரு கதையை வைத்துத் தொகுத்தது. கடவுள் நவரத்தினங்களை அறிமுகப்படுத்துகிறார் - ஒன்பது மிக அழகிய பெண்கள், அவர் ரத்தினத்துக்கான நிறத்தில் ஆடை அணிந்து, க்ரூப் டான்ஸர் புடைசூழ ஆடி அறிமுகமாகிறார்கள். உடனே சாத்தானின் வேலையால் நவரத்தினங்களும் உலகின் பல்வேறு திசைகளிலும் பந்தாடப்பட, அடுத்த காட்சியில் இருந்து ஒவ்வொரு ரத்தினமும் தான் சேர்ந்த நாட்டின் கலாச்சார நடனம் ஆட (ஒரு ரத்தினம் தாய்லாந்து, அமெரிக்கா, ப்ரான்ஸு, இந்தியா, சீனா, ஜப்பான் - எல்லா நாட்டு நடனங்களும்) பின் சேர்கிறார்கள். வைரம்தான் நவரத்தினத்துக்கும் தலை, டிஃபானிதான் வைரத்தின் அத்தாரிட்டி என்று முடிக்கும்போதுதான் ஒன்றரை மணிநேரமும் விளம்பரம் என்று உரைக்கிறது.


ஒவ்வொரு காட்சியிலும் விஸ்தாரமான ஒப்பனைகளுடனும் அழகோ அழகான உடை அலங்காரங்களோடு மிக மிக அழகான பெண்கள் அந்தந்த நாட்டிற்கேற்ப பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளில் ஆடுகிறார்கள். ஆட்டம் என்றால் என்ன ஆட்டம்! கலா மாஸ்டர் சொல்வதுபோல எல்லாம் ஹெவி ஸ்டெப்புகள் :-) பத்துபேருக்குக் குறையாத க்ரூப் டேன்ஸிலும் ஒரு ஸ்டெப் கூட தவறவிடாத துல்லியம்; சொன்னேனா? இந்தக் காட்சிகளுக்கு இடையே ஒரு நொடிகூட இடைவெளி இல்லை. அரங்கமாற்றம், ஒப்பனை, கேண்டீன் விற்பனை - எதற்கும் ஒருநொடியும் இடைவெளி இல்லை - அரங்கின் முன்பகுதியில் நகைச்சுவைக்காரர்கள் ஒரு பாட்டுக்கு ஆடி முடிக்கும்போது பின்பாதியின் அமைப்பு தயாராகிவிடுகிறது. ஆடிக்கொண்டே இடதுபக்கம் போகும் நடனக்காரி 20 நொடியில் வேறு ஒப்பனையில் வலதுபக்கம் தோன்றுகிறாள். மிக மிகத் துல்லியமான நேர ஒருங்கிசைவு.


அழகோ அழகான பெண்கள் என்றா சொன்னேன்? அழித்துவிடுங்கள். ஆடியது அத்தனை பேரும் ட்ரேன்ஸ் செக்ஸுவல்சாம். (திருநங்கை பொருந்திவருமா தெரியவில்லை) - சொல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று காட்சி ஓட்டுகிறார்கள், ஒரு நடுத்தர நகரத்திலேயே (பட்டாயா) இரண்டு ஷோக்கள் (அல் கஸார் ஷோ, டிஃபானி ஷோ) - அத்தனையும் அரங்கு நிறைகின்றன என்பதில், அதன் தரத்தைப் பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படவில்லை.

சொல்லவந்த முக்கியமான விஷயங்கள் இவைதான்:

இது போன்ற ஷோக்கள் மட்டுமின்றி நாட்டிலேயே பொதுவாக பல தொழில்களிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள், மிக சகஜமாக என்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். நம் ஊரில் மட்டும் இன்னும் இப்படிப் பிறப்பதையும் இருப்பதையும் குற்றமாக்கி, சக உயிரினமாகக் கூட மதிக்காமல் இருப்பதன் அசிங்கம் முழுமையாக உரைத்தது.

முதல் வரிசையில் அமர்ந்து பார்த்ததற்கு நான் செய்த செலவு சுமார் 800 இந்திய ரூபாய். காசைப்பற்றி சொல்வதற்கு காரணம், இதைப்போன்று இருமடங்கு செலவு செய்தாலும் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் நமக்குக் கிடைப்பது துணுக்குத் தோரணங்களே, இதுபோன்ற ஒரு பல்சுவை ஷோ இருக்கிறதா என்பதறியேன்.

பார்த்து பதினைந்து நாள் ஆனாலும் இன்னும் அந்த நிறைவான உணர்வை மனதில் உணர்கிறேன்.

27 பின்னூட்டங்கள்:

நேசமித்ரன் said...

நல்ல இடுகை சார் விவரிப்பு அருமை

kailash,hyderabad said...

நல்ல பகிர்வு. நம்ம ஊரில் ஏன் இப்படி சொந்தமாக concept செய்யாமல் சினிமாவையே காப்பியடிக்கிறார்கள்
என்ற ஆதங்கம் ஏற்படுகிறது .

Anonymous said...

இன்னாமா ஜொள்வுட்றீக்கோ... நாங்களும் பாப்போம்ல, அப்ப வச்சுக்கிறோம்!

.:d:.

நட்புடன் ஜமால் said...

காபரே பற்றி இதன் மூலம் நானும் அறிந்து கொண்டேன்.

திருநங்கைகள் - இவர்களை நாம் சக உயிர் என்று கருதும் நிலை எல்லோரிடத்திலும் வர வேண்டும்.

Anonymous said...

Keep writing your travel experience in Thailand. Many people thinks that Thailand is only for the sexual tourism, but still there are many things for family, couples holiday.
I am a regular visitor to Thailand and admired about their hospitality, infrastructure, nature's beauty. Have you been visited Phuket?...

Plz keep writing in your blog about travel experience. I have bookmarked your blog .

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா.... நல்ல பகிர்வு பினாத்தலாரே.

கோபிநாத் said...

ஆகா..செம என்ஜாய் போல..இன்னும் வரும்ல ;)

\\ ஆட்டம் என்றால் என்ன ஆட்டம்! கலா மாஸ்டர் சொல்வதுபோல எல்லாம் ஹெவி ஸ்டெப்புகள் \\\

இன்னுமா அந்த நிகழ்ச்சியை பார்த்துக்ககிட்டு இருக்கிங்க?? ;))

வடுவூர் குமார் said...

ஹூம்! சிங்கையில் இருக்கும் போதே போய்விட்டு வந்திருக்கனும்,விட்டாச்சு.
பார்ப்போம் திரும்ப வாய்ப்பு எப்போது அமைகிறது என்று.

ஜீவன்பென்னி said...

நல்ல பகிர்வு.புகைப்படங்கள் இன்னும் கொஞ்சம்கொடுத்திருக்கலாம்.

Prathap Kumar S. said...

தாய்லாந்து காடுகளில்தான் நிறைய காட்டுகாசிகள் அதிகம் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா.?

நிறைய எழுதியிருக்கலாம் படங்களுடன்.

sultangulam@blogspot.com said...

நீங்க வெளிநாட்டில காப்ரே பாத்திட்டு வந்தீங்க.
நாங்க இங்கே கலைஞர் தொலைக்காட்சியிலே 26.1.10ல பார்த்தோம். உண்மையிலேயே மிக அருமையாக இருந்தது.

Jazeela said...

பார்த்ததை அழகாக விவரித்திருக்கிறீர்கள். துபாயில் ஜுமானா ஷோவுக்கு போயிருக்கிறீர்களா? இது போன்று இல்லாவிட்டாலும் வியக்கத்தக்க வித்தியாசமான ஷோ. அதையும் பார்த்துவிட்டு இந்த மாதிரியான அருமையான பகிர்வை தாருங்கள்.

Karthik said...

போட்டோஸ் பார்த்து நான் ஓபரானு நினைச்சேன். நல்ல பதிவு. :)

//தாய்லாந்து சென்றிருந்தேன் குடும்பத்தோடு.

:) :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[ புன்னகை தேசம் என்று விமானநிலைய வரவேற்புப்பலகை சொல்கிறது. உண்மை. ]]
\
:)) மிக உண்மை..


[[பல தொழில்களிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள், மிக சகஜமாக என்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். நம் ஊரில் மட்டும் இன்னும் இப்படிப் பிறப்பதையும் இருப்பதையும் குற்றமாக்கி, சக உயிரினமாகக் கூட மதிக்காமல் இருப்பதன் அசிங்கம் முழுமையாக உரைத்தது.]]

மனிதநேயம் அதிகமுள்ள மக்கள்.. கோபமே படாதவர்கள்.. சொல்லிக்கொண்டே போகலாம்...

ரோஸ்விக் said...

அருமையான தேசம். நானும் phuket சென்றிருந்தேன். அதைப் பற்றி விரைவில் பதிவிட உள்ளேன். :-)

பழூர் கார்த்தி said...

பினாத்தல் சார், ரொம்ப நாள் கழித்து உங்க பக்கத்திற்கு வருகிறேன்.. தாய்லாந்து அனுபவங்களை ஒரு நீண்ட தொடராக எதிர்பார்க்கிறேன்.. விரைவில் எழுதுங்கள் :-)

<<>>

காபரே என்றால் ஆபாச நடனம் என்றல்லவா, இத்தனை நாள் நினைத்திருந்தேன்!!!

<<>>

தாய்லாந்தில் நாணய மதிப்பு (இந்திய ரூபாயில்) என்ன? கரன்சி பெயர் என்ன?

<<>>

இம்மாதிரி நிகழ்ச்சிகள் எப்போது நம்மூரில் வரும்?

பழூர் கார்த்தி said...

காபரே என்றால் தமிழில் என்ன? இதற்கான சரியான தமிழ்ச் சொல் என்ன?

angel said...

have u written a story naemd malai in kathir

முகமூடி said...

// (பட்டாயா) //

என் கருத்து கீழே இருக்கும் ஒளித்துணுக்குகளில் குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில் -

http://www.youtube.com/watch?v=0G9qLQg-Fn8
3:01 - 3:04

http://www.youtube.com/watch?v=O7ON_Wd20EY
4:17 - 4:27

பினாத்தல் சுரேஷ் said...

நேசமித்ரன், நன்றி.

கைலாஷ்.ஹைதராபாத் - ஆம்,எனக்கும் அதே ஆதங்கம்தான்.

டைனோ - ஜொள்ளுவிட்டு பின்னால மாட்டிக்கிட்டோமே :-( உங்க சாபம் உடனடியாவே பலிச்சுப்போச்சு.

நன்றி நட்புடன் ஜமால்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானிமஸ், புக்கெட்டும் போயிருந்தேன், 3 நாள். எழுதவேண்டும். பார்க்கலாம் :-)

நன்றி நான் ஆதவன்.

கோபிநாத், எங்கே பாக்கறது. அந்த கேபிளை யாரோ அறுத்துட்டாங்க :-( இழப்பு ஒண்ணுமில்லைன்னு வைங்க!

ஆமாம் வடுவூர் குமார், இப்படி வாய்ப்பை இழந்துட்டீங்களே (என்னைச் சந்திக்கும் வாய்ப்பையும் சேர்த்துதான் சொல்றேன்)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜீவன்பென்னி. இந்த நிகழ்வில் ஃபோட்டோ தடை செய்யப்பட்டிருந்ததால் இணையத்தில் கிடைத்ததைத்தான் உபயோகித்தேன் :-)

நாஞ்சில் பிரதாப், காட்டுப்பக்கம் எல்லாம் போகவில்லை :-)

சுல்தான், மானாட வையா சொல்கிறீர்கள்? அது நம் லோக்கல் காபரே அல்லவா?

ஜெஸிலா, ஜுமானா ஷோவா? கேள்விப்பட்டதே இல்லையே :-( இப்படி கூட்டுப்புழுவாய் இருக்கிறேனே :-( மேல்விவரம் சொல்லுங்கள்,

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கார்த்திக்.

நன்றி புன்னகை தேசம். (உங்கள் பெயர் இங்கிருந்துதானோ?) கோபமே படாத மக்கள் -உண்மைதான்.

நன்றி ரோஸ்விக். பதிவிடுங்கள், இங்கே உரலிடுங்கள் :-)

நன்றி பழூர் கார்த்தி. தாய்லாந்து காசு பாட். (பாஹ்ட் என்பது போல ஸ்பெல்லிங்கும் உச்சரிப்பும்.) ஏறத்தாழ 1 பாட்= 1.2 இந்திய ரூபாய்.

எப்போது வரும்? ஏன் வரவேண்டும் என்றல்லவா நம்தயாரிப்பாளர்க்ள் கேட்கிறார்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

ஏஞ்சல், ஆமாம். மழை - தினகரன் வசந்தம் 31-1-2010 நான் எழுதியதுதான். நன்றி :-)

முகமூடி, லாங் டைம் நோ சீ.

கமெண்டுக்காக பார்த்ததில் காலை லேசாச்சு :-) இது இனி நம் காபி பேஸ்டில் இருக்கும், சந்தர்ப்பங்களில் உபயோகிக்கப்படும். நன்றி.

Dubukku said...

அருமையான பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி

சென்ஷி said...

அப்ப இனிமே காபரே டான்ஸுன்னா நம்ம்ம்ப்ப்பி போகலாம்ன்னு சொல்றீங்களா பினாத்தல்ஜி :)

Thamira said...

நல்லதொரு பகிர்வு நண்பரே. காபரே பற்றிய எனது எண்ணமும் தவறாகவே இருந்தது, ஸால்ஸாவைப் போல.! இப்போது தெளிகிறேன்.

 

blogger templates | Make Money Online