Jun 23, 2013

இந்தக்கால எஞ்சினியர்கள்

ஒத்திசைவு எழுதிய பதிவாகட்டும், ஜெமோ எழுதிய பதிவாகட்டும், பேசுபொருள் வேறாக இருந்தாலும் தொனி என்னவோ ஒன்றேதான். நம்ம ஊர் எஞ்சினியர்கள் எல்லாம் சும்மா வெத்துவேட்டு, அந்தக்காலம் போல வருமா..

ஏனோ தெரியவில்லை, இந்தத் தொனியை மட்டும் நான் அந்தக்காலம் முதலே வெறுத்து வருகிறேன். இந்தக்கூற்றில் சிலவேளைகளில் உண்மை இருக்கலாம் என்றாலும் பலவேளைகளில் உண்மை இருப்பதில்லை என்பதே என் அனுபவம்.

25 வருடங்களுக்கு முன்பாக நான் சென்ற இண்டர்வியூக்களில் "ஓம்ஸ் லா கூடத் தெரியாதா? என்னதான் படிச்சிட்டு வரீங்களோ" என்ற கேள்வி இன்றுவரை மாறவில்லை.அப்புறம் என்ன அந்தக்காலம் இந்தக்காலம்?

பாடத்துக்கும் வாழ்க்கைக்குமான வேறுபாடுகள் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கும் - எவ்வளவுதான் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்தாலும். ஏன் அப்படி?

ஃபேஸ்புக்கில் இன்றும் போட்டால் 100 லைக் வாங்கக்கூடிய கேள்வி - "(a+b)2 இன்றுவரை நான் உபயோகிக்கவில்லை, ஏன் படிக்கவேண்டும்?" அதேபோலத்தான் சிந்துசமவெளி நாகரிகத்தையும் யாப்பிலக்கணத்தையும் ஏன் படிக்கவேண்டும்..  இந்தப்பாடத்திட்டம் பைத்தியக்காரத் திட்டமா? இல்லை.

பள்ளிக்கல்வி என்பது பெரும்பாலும் இருக்கக்கூடிய பல தெரிவுகளையும் காட்டி அதில் உனக்கு எது வேண்டுமோ - நீ யாப்பிலக்கணத்தை கூறுகட்டி மேயப்போகிறாயா? சிந்து சமவெளியை மேலும் தோண்டவேண்டுமா, அல்ஜீப்ராவை ஆராய வேண்டுமா - எது வேண்டுமோ எடுத்துக்கொள் என்று தெரிவுகளை முன்வைப்பதற்கான ஒரு களம் மட்டுமே. கல்லூரிக்குச் செல்லும்போது தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் கல்லூரியிலும் இதே நிலை தொடரத்தான் செய்கிறது, தொடரத்தான் செய்யும். மெக்கானிகல் எஞ்சினியரிங் என்று எடுத்துக்கொண்டால் அதை உபயோகப்படுத்தும் துறைகள் ஒன்றா இரண்டா? மேனுஃபாக்சரிங் என்றாலே ராக்கெட் தயாரிப்பில் இருந்து ஸ்க்ரூ தயாரிப்பு வரை அந்தத் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படும் எந்திரங்கள், பராமரித்தல் பழுதுபார்த்தல் தரச்சான்று வழங்கல் - சொல்லி மாளுமா? 

கல்லூரியில் இதில் எதை என்று தேர்ந்தெடுத்துப் பாடத்திட்டம் அமைப்பார்கள்? கொஞ்சம் பொத்தாம்பொதுவாகத்தான் இருக்கும். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் கலந்த பாடத்திட்டமாகத்தான் இருக்கமுடியும். பள்ளிக்கல்வி போலவே, வேலைக்குத் தேவையான சிலதும் தேவையற்ற பலதும் படித்துத்தான் ஒரு பொறியாளன் வெளியே வருகிறான் - அப்படித்தான் இருக்கமுடியும். 

நான் என் நிறுவனத்துக்கு ஆள் எடுக்கும்போது மறுநாள் காலையில் நேரடியாகப் போய் வேலை செய்யவேண்டும் - ஏனென்றால் இவன் ஒரு எஞ்சினியர் - என்று எதிர்பார்த்தால் நான் தான் கேனை. அப்படி 25 ஆண்டுகளுக்கு முன்பும் கிடையாது, இன்றும் கிடையாது, என்றும் இருக்கப்போவதும் கிடையாது. என் நிறுவனத்துக்குத் தேவையான தொழில்நுட்பத்தை முறையான ட்ரெய்னிங் மூலமோ, மூத்த மெக்கானிக்குகள் மூலமோதான் அவனுக்குப் பயிற்றுவிக்கவேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் - சிறிதோ பெரிதோ - இப்படிப்பட்ட முறையான ட்ரெய்னிங்குக்காக நிறையப்பணம் செலவிடத்தான் செய்கின்றன.

இந்தக்காலத்துக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறேனே, முழுமையான மனதுடன் இதைச் செய்கிறேனா? இல்லைதான். இந்தக்காலக் கல்வி தரமானதாக இருக்கிறது என்று உரக்கச் சொல்லமுடியுமா? இல்லைதான். ஆனால் இதற்கு மாணவர்களைக் காரணமாகச் சொல்வேனா? மாட்டேன்.

கோர் எஞ்சினியரிங் என்று மெக்கானிகல் எலக்ட்ரிகல் சிவில் படித்துவிட்டு கேம்பஸில் செலக்ட் ஆகி என்ன படித்தோம் என்பதையே மறந்துபோய் பொட்டிதட்டிக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம். கேம்பஸில் செலக்ட் ஆகாதவர்களுக்கும் வாழ்க்கை லட்சியம் பொட்டி தட்டுவதே என்று  கோர் - ஐடி சம்பள வித்தியாசங்கள் நினைக்கவைக்கின்றன. இவ்வளவையும் மீறி கோர் எஞ்சினியரிங் பக்கம் வருபவன் பெரும்பாலும் ஐடி செக்டாரால் கழித்துக்கட்டப்பட்டவனாகவே இருக்கிறான். 

இந்த நிலை நிரந்தரமல்ல என்பதே என் நம்பிக்கை. ஐடி அடங்கத் தொடங்கிவிட்டது, இன்னும் ஓரிரு வருடங்களில் இதன் தாக்கம் கல்வியில் தெரிய ஆரம்பிக்கும்.  பயோடேட்டாவில் பொய்சொன்னால்தான் வேலை என்று இருந்தால் பொய் சொல்லும் ஆசாமி, ஓம்ஸ் லாவைத் தெரிந்தால்தான் வேலை என்றாகிவிட்டால் நிச்சயம் கற்றுக்கொள்வான். பிரச்சினை ஜாப் மார்க்கெட்டில், படிக்கும் மாணவர்கள் மீது அல்ல என்பதே என் உறுதியான அபிப்பிராயம்.

நாம் நமது அடுத்த தலைமுறையைப்பற்றிப் பேசுகையில் - நம் ஒருவயதுக்குழந்தை மொபைலில் கேம் ஆடும் அழகைப் பெருமையாகப் பேசுகிறோம் - ஆனால் வளர்ந்த அடுத்த தலைமுறை எதற்கும் உதவாது என்று சொல்லத் தயங்குவதில்லை!

ஜெயமோகன் எழுதிய கட்டுரை படித்து, சிரிப்புதான் வந்தது - அதாவது, இன்றுவரை இந்தியாவில் எந்த நவீனத் தொழில்நுட்பமும் பழுதானதே இல்லை, பழுதானால் அது சரியானதே இல்லை - இதுதான் அவர் சொல்ல வருவது. இப்படி ஒரு நிலை இருந்தால் எவனுமே நவீனத் தொழில்நுட்பம் பக்கமே போகமாட்டான். காரைச் சரிசெய்ய சரியான ஆட்களே இல்லை என்கிறார். எங்கே தேடிவிட்டுச் சொல்கிறார்? தெருவோர பஞ்சர் ஒட்டும் கடைகளிலா? அவர்களுக்கு எந்தவிதமான கமிட்மெண்ட் இருக்கிறது? அதிகாரபூர்வத் தொழிற்சாலையில் காரைவிட்டுவிட்டு, எடுக்கும்போது பழுது சரியாகவில்லை என்றால் காசு கொடுப்பார்களா? சினிமாத்தயாரிப்பாளர் ஒருவர் சொன்னாராம்.. சினிமாவிலேயே இன்று எத்தனை நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன? அவையெல்லாம் ஒரு முறை பழுதானால் தூக்கித்தான் வீசிவிடுகிறார்களா? 

இன்றல்ல, நேற்றல்ல - 20 வருடங்களுக்கு முன்னால் பிஹாரின் ஒரு மூலையில் கனரக வாகனங்களைப் பழுதுபார்க்கும் வேலையில் இருந்தபோதே, ஒரு பிரச்சினை என்று வந்தால் அதைத் தீர்க்கவேண்டிய கடமை - எனக்கு, அடுத்து ராஞ்சி ஆபீஸ்க்கு, அவர்களாலும் முடியாதபோது சென்னை தலைமையகத்துக்கு, தீரவே இல்லையென்றால் அமெரிக்கத் தயாரிப்பாளருக்கு என்று இருந்த சங்கிலியில் - என்னைத் தாண்டி ராஞ்சிக்குப் போவதே அவமானம் என்று நினைத்துக்கொண்டிருந்தவன் நான் - நான் மட்டுமல்ல - என் சக தொழிலாளர்கள் பலரும் - அன்றும் அப்படித்தான், இன்றும் அப்படித்தான். இது ஒரு தேவையான ஈகோ, இருக்கிறது, இருக்கும்.

களப்பணியாளராக இருந்தாலும் எழுத்தாளராக இருந்தாலும் நம்முடைய ஒரே பொதுக்குணம் - பொதுமைப்படுத்தத் தயங்காமல் இருப்பது - மட்டும்தான்!

21 பின்னூட்டங்கள்:

Anonymous said...

யதார்த்தை புரிய வைக்கும் பதிவு. அந்தக் கால பழம் பெருமை பேசும் பெரிசுகள் இந்தக் காலத்திலும் இருக்கத் தான் செய்கின்றனர். பேசியதை விட செய்தமை குறைவே. இன்றைய இந்திய வாழ்க்கை முறை நல்லா படிக்கணும், சீக்கிரமா சம்பாதிக்கணும், கலியாணம் கட்டி முதலிரவுக் கொண்டாடணும். இதை தாண்டி சிந்திக்க நம்மிடம் ஒன்றுமே இல்லை , கோர் பொறியியல் பட்டம் படிப்பவர் பலரும் என்னக் கண்றாவிக்கு அதைப் படிக்கணும், அப்புறம் கேம்பசில் ஐடிக்குள் போய் பொட்டித் தட்டணும் புரியவே இல்லை. இவ்வாறான பணம் சம்பாதிக்கணும் சுலபமா வேகமா என்பது எங்கிருந்து வந்தன நம் மூத்தோர் வாய்மொழி வழியில் இருந்தே. இந்த நிலை போனால் என்ன தான் எவன் தான் இந்தியாவில் கண்டறிவான், ஒன்றுமே இல்லை. அது வரை பழமை புகழ் பேசுவோர் காட்டில் மழை தான்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எந்தக் காலத்திலும் முந்தைய காலம் சிறந்தது என்று கூறுவது வழக்கம்.

Anonymous said...

ஜெயமோகன் பதிவிலிருந்து-
/// மொத்த காரையும் கழற்றிப்போட்டு திரும்ப மாட்டக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அனுபவம் மூலம் எந்த பாகம் பிழைசெய்கிறது என்று ஊகித்து அதைக் கழற்றி மாட்டக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு காரின் இயந்திரத்தைப்பற்றி தெரிந்த இந்தியர் என எவரும் இலலை’ ///

காரை முழுவதுமாகக் கழட்டி மாட்டத்தெரியும், பிழைசெய்யும் பாகத்தை மாற்றத்தெரியும் என்றால் அப்புறம் என்ன இயந்திரத்தைப் பற்றித் தெரியாதாம்?

நல்ல விதத்தில் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

சரவணன்

பட்டிகாட்டான் Jey said...

Well said penathal annae, what you written here is reality then, now and even later../

pothumai paduththuthal Ilakkiya vaathikalin style pola :-)))

woven said...

மெக்கானிகல் ,சிவில் படிச்சிட்டு ஐ.டி துறையில் சேர்ந்தவர்களை பற்றிய முறைப்பாடுடா வேறொரு பதிவ வரும்ன்னு எதிர்பார்கிறேன்

முரளிகண்ணன் said...

ஐ ஐ டியில் பி எச் டி பண்ணுபவர்களுக்கு முதலாமாண்டில் ரிசர்ச் மெத்தடாலஜி என்ற வகுப்பு இருக்கும். அதில் சொல்லிக் கொடுக்கப்படும் பாலபாடமே பி எச் டி முடித்தால் நீங்கள் ஆராய்ச்சியாளர் அல்ல. ஆராய்ச்சி என்பதற்குள் நீங்கள் செல்ல கொடுக்கும் பாஸ்போர்ட்டே அது என. பி எச் டி முடிந்து பல ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியின் மூலமே சிக்நிஃபிகண்டாக ஏதும் செய்ய முடியும். இதைத்தான் நாம் பொறியியல் கல்விக்கும் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தக் குறிப்பிட்ட துறையில் என்னவெல்லாம் இருக்கு என்பதைக் கற்கவே நான்கு ஆண்டுகள். பின்னர் அவற்றைக் கொண்டு அவர்கள் தொடர்ச்சியான பணியின் மூலமே எஞ்சினியர் என்ற அந்தஸ்தைப் பெற முடியும்.

முரளிகண்ணன் said...

ஒரு மருத்துவர் ஹவுஸ் சர்ஜன் என ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறார். லாயர் தன் சீனியர் மூலமே தொழிலை கற்கிறார். ஆடிட்டரும் அப்படியே. பொறியியல் மாணவனை மட்டும் இண்டஸ்ட்ட்ரி ரெடியாக எப்படி மாற்ற முடியும்? அவனுக்கும் கூட்டுப்புழு பருவம் தேவை. நீங்கள் குறிப்பிட்டது போல் கோர் பீல்டில் ஏராளமான தொழில்துறைகள். அதில் ஏதாவது ஒன்றில் மட்டும் தான் அவன் நிபுணன் ஆக முடியும். அதற்கும் காலம் தேவை.

முரளிகண்ணன் said...

இப்பொழுது சில சாப்ட்வேர் நிறுவனங்கள் தாங்கள் பயிற்சி கொடுப்பதால் ஆகும் செலவை குறைக்க, அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள கல்லூரிகளிடம் ஆறாவது செமெஸ்டரில் இருந்தே சில குறிப்பிட்ட பேக்கேஜ்களை படிக்கச் சொல்லியும், சாஃப்ட் ஸ்கில்ஸில் குறிப்பிட்ட ட்ரைனிங்கைக் கொடுக்கும்படியும் சொல்லுகின்றன. இதை விட்டு விடுவோம். அதை தேர்ந்த்தெடுப்பவர்கள் பாடு. ஆனால் கோர் இஞ்சினியரிங்கில் இப்படி செய்யமுடியாதே?

முரளிகண்ணன் said...

மேலும் நீங்கள் சொன்னது போல் பெரும்பாலும் சாஃப்ட்வேர் கிடைக்காமல் கழித்து கட்டப்படுபவர்களே கோருக்கு வருகிறார்கள் என்பது முழு உண்மை இல்லை. பாதியளவே உண்மை. டாப்பர்ஸ் பெரும்பாலும் கோர் பீல்டையே விரும்புகிறார்கள். ஆனால் அது 5-10% மட்டுமே. மீதியுள்ளவர்கள் சாஃப்ட்வேர்தான் பிரிபரன்ஸ் கொடுக்கிறார்கள். அந்த டாப்பர்ஸ் தங்கள் துறையில் சாதித்து கொண்டிருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன்.

முரளிகண்ணன் said...

இந்தியா முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேனுஃபாக்சரிங் ஹப்பாக மட்டும் இருந்தது. இப்போது டிசைன் ஹப்ஃபாகவும் மாறிவருகிறது. பிராடக்ட் டெவலப்மெண்ட் அசோசியேசன் ஆஃப் இண்டியா தற்சமயம் நடத்திய காம்பெடிசனில் பல அட்டகாசமான பேடண்ட் வாங்கக்கூடிய பல டிசைன்கள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. எனவே திறமை இல்லாமல் இல்லை. வெளிப்படக் காத்திருக்கிறது.

முரளிகண்ணன் said...

சமீபத்தில் ஈரோடு டிவிஎஸ் டீலர் திரு விஸ்வேஸ்வரன் அவர்களை சந்தித்தேன். அவர் தான் டிவிஎஸ் எக்செல் டிசைன் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியவர். அவர் தான் சில மாதங்கள் முன்பு கலந்து கொண்ட ஒரு பிரெயின் ஸ்டார்மிங் செசன் பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் இந்திய இஞ்சினியர்களால் சொல்லப்பட்ட (எதிர்கால வாகன வடிவமைப்பு) பல கருத்துகள் வெளிநாட்டவரை கவர்ந்ததாம். டிசைனில் அவை இருப்பதால் அது பற்றி இங்கு சொல்லவில்லை.

முரளிகண்ணன் said...

கோர்வையாக சொல்ல வராததால் பிரித்து பிரித்து பின்னூட்டம் போட்டு விட்டேன்.

ஹி ஹி இதைசேர்த்து ஒரு ட்விட்லாங்கர் போட்டுக்கொள்கிறேன். நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நிரஞ்சன். ஐடி செக்டாரின் அசுரப்பசி - ஒரு 4-5 வருடப்பிரச்சினைதான், சரியாகிவிடும் என்றே நம்புகிறேன் :-)

நன்றி முரளிதரன்.

நன்றி சரவணன்.

நன்றி பட்டிக்காட்டான்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வோவன், அவர்களின் நிலைமை ரொம்பக்கஷ்டம்தான். ஆத்திலும் இல்லாம சேத்திலும் இல்லாத நிலை.

முரளி கண்ணன், நிறைய பின்னூட்டம் சேத்துட்டீங்க, நன்றி. பெரும்பாலும் உடன்படுகிறோம் - எக்சப்ட் - டாப்பர்ஸ் கோர் எஞ்சினியரிங்ல சேரவிரும்பறது. உண்மையை ஒத்துக்கொண்டால், எனக்கு இதுபற்றிய விவரம் தெரியாது.

ஆனால், டாப்பர் என்ற 90-100 மார்க் வாங்குபவர்களை விட்டாலும், 70-90 உள்ள பெரும்பான்மை கோர் ஐ விட ஐடியைத்தான் விரும்புகிறார்கள் என்பது என் அபிப்பிராயம்.

இலவசக்கொத்தனார் said...

ஒத்திசைவு ஏற்கனவே மருத்துவர்களைப் பத்தி இந்த மாதிரி ஒரு பொதுமைப்’படுத்தல்’ பதிவு போட்டாச்சு. இப்போ இஞ்சினியர்களின் காலம் போல. அடுத்தது அப்படியே சிஏ பக்கமும் வரச்சொல்லணும்.

நானும் சிஏ படிச்சேன். மதிப்பெண்கள் என்ற அளவுகோலின்படி நல்லாவே படிச்சேன். ஆனா முதல் முதலா வேலைக்கு நேர்முகத் தேர்வுகளுக்குப் போகும் பொழுது ஒருவர் பேசியது - இந்த படிப்பு எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான். இது வேலைக்கு வர உதவுமே தவிர உள்ள வந்த பிறகுதான் உண்மையான படிப்பு.

வேலைக்கு சேர்ந்த பின்னாடி அவர் சொன்னது நூத்துக்கு நூறு சரின்னு உணர்ந்தேன். நெடுங்காலமாக மாறாத சிலபஸ், அதைக் கற்றுத் தர அந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் என்று நடைமுறைக்கு ஏற்றவாறு மாறாத படிப்புதான் இதற்குக் காரணம்.

வேலைக்கு சேர்ந்த பின் ஒருவன் எவ்வளவு சீக்கிரம் தொழிலை கற்றுக் கொள்வான் என்று கணித்திடத்தான் பல்வகை சோதனைகள். அவற்றுள் இந்த ஏட்டுப்படிப்பும் மதிப்பெண்களும். அவ்வளவே. தொழிலில் கற்றுக் கொள்ளும் அனைத்தையும் பள்ளிப்பாடமாக்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இந்த புரிந்துணர்வு இல்லாமல், வெறும் பள்ளிப்படிப்பு முடித்து வெளியே வருபவனிடம் இவர் அத்தனை பட்டறிவும் இருக்க வேண்டும் என்று நினைப்பது அபத்தமே.

முரளிகண்ணன் said...

\\டாப்பர் என்ற 90-100 மார்க் வாங்குபவர்களை விட்டாலும், 70-90 உள்ள பெரும்பான்மை கோர் ஐ விட ஐடியைத்தான் விரும்புகிறார்கள்\\

75% சரி. இப்பொழுது நல்ல விழிப்புணர்வு வந்திருக்கிறது. பல மெக்கானிக்கல், சிவில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் ஸ்லாட் சாஃப்ட்வேர் இண்டர்வியூக்களை பங்க் செய்கிறார்கள். சிலர் வேலை கிடைத்தாலும், ட்ரீம் ஸ்லாட் இண்டர்வியூவில் அவர்களுக்கான கோர் கம்பெனி வரும்போது அதையே செலக்ட் செய்கிறார்கள்.

இதற்கு காரணங்களில் அந்தப் பையன்களின் உறவினர், அண்டைவீட்டார், சீனியர்கள் போன்றோர் சாஃப்ட்வேரில் இருந்து அதன் நன்மை, தீமைகளை சொல்லி வழிகாட்டுவதும் ஒன்று.

மேலும் சாஃப்ட்வேர் பீல்டின் மீதான கவர்ச்சி லேசாக குறையத் துவங்கியிருப்பதும் தெரிகிறது.

முரளிகண்ணன் said...

//வேலைக்கு சேர்ந்த பின் ஒருவன் எவ்வளவு சீக்கிரம் தொழிலை கற்றுக் கொள்வான் என்று கணித்திடத்தான் பல்வகை சோதனைகள். அவற்றுள் இந்த ஏட்டுப்படிப்பும் மதிப்பெண்களும். அவ்வளவே. தொழிலில் கற்றுக் கொள்ளும் அனைத்தையும் பள்ளிப்பாடமாக்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.//

கொத்தனார் அவர்களே, மிக்க சரி.

நான் இலவச கொத்தனார் என்ற பெயர் பார்த்தும் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த விளக்கத்தின் படியும் நீங்கள் சிவில்/ஆர்க்கிடெக்ட் என நினைத்திருந்தேன்.

வோவன், மெக்கானிக்கல் கூட ஓரளவு புலம்பலோடு காலம் கடத்துகிறார்கள். சாஃப்ட்வேருக்கு வந்து விட்டோமே என்று. இந்த சிவில் மக்கள் தான் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

தருமி said...

உங்களப் பத்தி ’கன்னா பின்னா’ன்னு எழுதிட்டேன். மன்னிச்சிக்குங்க ...!

Anonymous said...

One observation that you can note among Tamil writers is that they always think that they can talk about anything and get away with that. True that entry criteria for Engineering colleges have been diluted and because of this people without enough competence enter Engineering college. This is similar to 1000s of wirters or so called writers starting their blog. Most of them are not of high quality. This is a normal distribution in any sample. Some people like Ramasamy are really great intelligent. But they do not know, that their intelligence is also because of certain circumstances and opportunities that they had. In India, for a long time, we have not encouraged original thinking, at least in technical field. But we have had a solid technical community, I am talking about those who stayed back in India, despite the difficulities. We have still are among the top 10 in most Engineering and Science industry, whether it is space or genetic engineering or drug discovery, despite the comments by JeyMo Etc. West has certainly is more advanced than India because of their long headstart and long scientific tradition and rational approach. We are certainly are fast catching up, but it is still not sufficient. But the situation is not as bad as it is projected to be. Many Indian companies like Tata, when they ventured in to designing Nano or Bajaj when they are working on a new Four wheleer or Hindustan lever when they do such a small RO plant , so economically, are doing wonderful job. They are commendable technical job, not just writing, but doing physically working with materials. Many of these people do not even know that Maruti Cars with the incremental inputs provided by the Indian Engineers remains the best low cost advanced reliable cars in the world, at their price. Those who go abroad not necessary go abroad to learn more, but to make more money. Those who stay back are not dumb, they are confident to work even in this adverse conditions. But IT field has first time given opportunity for Indians to do advanced stuff locally for the first time, even though the solutions that we are working on are for the world. Yes, there is a quality issue in the large quantity. That is there in all fields. Many Indians do not know how to appreciate Engineering and design, however talented or intellectual they may be in their own field. For some who are sounding so intelligent, you can notice their silly understanding about technology and design.

பாலாஜி said...

நானும் மின்னியல் படித்தவன் தான்.படித்து முடித்து வெளியே வந்ததும் ஒன்றும் தெரியவில்லை.ஆனால் காலப்போக்கில் மின்னியல் அடிப்படை விதிகள் தெரிந்ததால் எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது.

Tamilan said...

you cannot get opinion from jeymo on car!. what he knew about car or electrical?
Just ignore his ignorance and his alakaissss.

Tamilan
Qatar

 

blogger templates | Make Money Online