Jul 18, 2007

பதிவர் பட்டறை ஆகஸ்ட் 5ம் என் சோதனையும்!

சோதனைப்பதிவு என்று ஒன்றை நேற்று போட்டிருந்தேன். என்ன சோதனை, யாருக்கு சோதனை என்றெல்லாம் விளக்கமாக எழுதாமல், இணையத்தில் சாதாரணமாகத் தேடினாலே வரக்கூடிய Body Mass Index  ஐ ஏன் ஒரு ப்ளாஷாகத் தயாரித்து கஷ்டப்படவேண்டும் - மேட்டர் இல்லாததாலா என்றெல்லாம் கேள்விகள் எழும்பியிருக்கலாம். ஆனால், காரணம் இருக்கிறது.
 
பதிவர் பட்டறை சென்னையில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடக்கவிருப்பது தெரிந்திருக்கும். அதில் நான், எளிய ப்ளாஷ் ஒன்றைத் தயார் செய்வது எப்படி, அதை வலைப்பதிவில் ஏற்றுவது எங்ஙனம் என்று ஒரு சிற்றுரை ஆற்றுவதாக முன்மொழிய, அதை பட்டறைக் குழுவினரும் (விளைவின் விபரீதங்கள் அறியாமல்) ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
 
இதற்காக, ஒரு ப்ளாஷ் தயாரிப்பது எப்படி என்பதை கணித்திரையோடு நான் விளக்கும் ஒரு படத்தை எடுத்தேன், காம்டாஷியா ஸ்டூடியோ உதவியுடன். (இப்படிப்பட்ட படங்கள் எடுக்கவேண்டிய தேவை என் தொழிலில் நிறைய இருக்கிறது -  ஆனால் நான் உபயோகப்படுத்திவந்த மென்பொருள்கள் எதுவும் என் தேவைக்கு செயல்படவில்லை - இந்த காம்டாஷியா எனக்காகவே செய்யப்பட்டிருந்ததை நான் அறிந்திருக்கவில்லை, இந்த அற்புத மென்பொருளை சுட்டியதற்காக பட்டறை நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி).
 
இந்தப்படத்தை எங்கே அப்லோடு செய்து பட்டறை நண்பர்களுக்கு அனுப்புவது என்பது எனக்குப் புரியாமல் சொதப்பிக்கொண்டிருக்கிறேன். இங்கே உள்ள லின்க் வேலை செய்கிறதா என்று பார்த்து, படத்தையும் முடிந்தால் பார்த்து, கருத்துச் சொல்லுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் திருத்தம் செய்யவேண்டிவந்தால் இப்போதே சொன்னால் செய்துவிட முடியும். முன்கூட்டிய நன்றி.
 
பி கு 1: அமீரகத்தில் வலைப்பதிவர் மாநாட்டை ஒருங்குபடுத்திய அபி அப்பாவுக்கு என் பலத்த கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன். நான் ஒருவன், புள்ளைகுட்டிகளை ஊருக்கு பேக் செய்துவிட்டு தனியாக இருக்கிறேன், எங்கே கூப்பிட்டிருந்தாலும் வந்திருப்பேன் என்பதையெல்லாம் மறந்து, எனக்கு அழைப்பு விடாமல் நடத்தியதற்காக. இந்தக் கண்டனத்தை கோபிநாத், தம்பி ஆகியோருக்கும் சேர்த்தே செய்கிறேன் - இவர்களிடமும் என் தொடர்பு எண் இருந்திருக்கிறது. ஒரு மாதம் பதிவு எழுதாமல் இருந்தால் கட்டம் கட்டிவிடுவதா?
 
பி கு 2: தமிழ்நாட்டின் நிம்மதியைக் குலைக்க அங்கே வந்திருக்கும் ஆசான் ஆகஸ்ட் 4 திரும்பிவிடுகிறார், அதற்காக மகிழ்ச்சி அடைந்துவிடவேண்டாம் - சீடன் நான் அதே தினம் வந்துவிடுகிறேன், நடுவானில் ஹேண்டிங் ஓவர், டேக்கிங் ஓவர் எல்லாம் நடந்துவிடும். நள்ளிரவில் ஒன்றிரண்டு மணிநேரம் மட்டுமே நிம்மதியாக இருக்கவிடுவோம்.

5 பின்னூட்டங்கள்:

கதிர் said...

ஆஹா... இதெல்லாம் சங்கத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கணும்ல...

சரி அடுத்த முறை பேக் பண்ணும்போது மறக்காம தெரியபடுத்துங்க.

ரவி said...

சிறந்த மொக்கை பதிவர் யார் என்று சர்வேசனிடம் சொல்லி ஒரு சர்வே வைக்கவேண்டும்...

அதில் இந்த பதிவு இடம் பெறவேண்டும்...

முரளிகண்ணன் said...

உங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி..

சங்கம் கூடு முன் பழைய ஆளுங்க எல்லாம் எங்கே இருக்காங்கன்னு ரோல் கால் பண்றதில்லையா?

ரவி.. பயமா இருக்கு.. ஏன் இந்தக் கொலைவெறி? நானே சந்தேகமாத்தேனே அந்த லின்க்கை கொடுத்தேன். இதோ இது சரியான லின்க் (என நினைக்கிறேன்:-)

http://rapidshare.com/files/43607282/full.avi

சந்திக்கலாம் முரளி. நிச்சயம்.

கோபிநாத் said...

சென்னையை நேக்கி புயல் சின்னம் ஆகஸ்டு 4ம் தேதி தாக்கும் ;))


\\இந்தக் கண்டனத்தை கோபிநாத், தம்பி ஆகியோருக்கும் சேர்த்தே செய்கிறேன் - \\


மீண்டும் மீண்டும் மாப்பு கேட்டுகிறேன்...அடுத்த முறை இந்த தவறு கண்டிப்பாக நடக்காது.

 

blogger templates | Make Money Online