Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

May 9, 2011

தேர்வா? தேர்தலா?

தேர்வு முடிவுகள் வந்துவிட்டதில் இன்னிக்கு நீ, நாளைக்கு நான் என்றிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பரபரப்பான செய்திகளை முந்தித்தரும் தினக்குழப்பம் நாளிதழில் இரண்டு செய்திகளும் மாறிமாறி வர, குழம்பிப்போயிருக்கிறார்கள் நிருபர்களும் ஆசிரியர்களும். எந்தச் செய்தியை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் செய்த வன்முறையில்.. இதோ அந்த ஸ்க்ரீன்ஷாட்.
பிகு: க்ளிக்கிப்பார்த்தால் படிக்கும் அளவுக்குத் தெரியும்.


Mar 23, 2011

எங்கே தேடுவேன்.. தலைவனை எங்கே தேடுவேன்.. (Flash - தேர்தல் ஸ்பெஷல்)

பினாத்தல்கள் வழங்கும் மற்றுமொரு ஃப்ளாஷ் குவிஸ்.

தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித்தலைவர் பாடிவிட்டுப்போய்விட்டார். ஆனால் அந்தத் தலைவன் / தலைவி எங்கே இருக்கிறார்?

இந்த ஃப்ளாஷில் ஒருவேளை இருக்கலாம் :-)

விளையாட்டு ரொம்ப சிம்பிள். பதினாறு அரசியல்வாதிகள் போட்டோக்கள் ஃப்ளாஷின் வலதுபக்கத்தில் இருக்கும். பத்து கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான அரசியல்வாதியை க்ளிக் செய்து உறுதி செய்து அடுத்த கேள்விக்குச் செல்லவேண்டியதுதான்.

வெயிட்.. வாட் இஸ் திஸ் பொருத்தமான?

அதற்குத்தான், க்ளூ தர ஃப்ளாஷின் இடதுபக்கத்தில் ஒரு சிறு அனிமேஷன் க்ளிப்; அந்த அசைபடத்தில் வரும் விஷயங்கள் எந்த அரசியல்வாதிக்குப் பொருத்தம் என்பதைத் தேர்ந்தெடுத்து, க்ளிக்க வேண்டும்.

கடைசியில் வரும் கோடை எனக்கு அனுப்பினால், அதை நான் இங்கே அப்டேட் செய்துவிடுவேன்.



Feb 13, 2011

மயிர் நீப்பின்..

முடிவெட்டுக்கும் எனக்கும் ஒத்துப்போவதே இல்லை. மாதத்துக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த சடங்கு இப்போதெல்லாம் பின்வாங்கத் தொடங்கிய கூந்தலால் இருமாதங்களுக்கு ஒருமுறை ஆனாலும் ஒத்துப்போகாதது மட்டும் தொடர்கிறது.

முடிவெட்டு நிலையங்களில் காத்திருப்பு என்பது கிளுகிளுப்பான அனுபவமாக இருந்தது ஒரு காலத்தில். வேறெங்கும் காணக்கிடைக்காத அரிய காலண்டர்களை நான் பார்ப்பதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற குறுகுறுப்போடு பார்க்கும்போது "பாருப்பா.. பார்க்கறதுக்குத்தானே மாட்டிவச்சிருக்கேன்" என்பார் முடிவெட்டுபவர். இதற்காகவே காத்திருந்தது போல சூழ்ந்திருக்கும் எல்லாரும் சிரிக்க குறுகிப்போவேன். தினத்தந்தி தினகரன் என்று பேப்பர்கள் இரைந்துகிடக்க, "இங்கே அரசியல் பேசாதீர்கள்" என்று ஒரு போர்டு "இவனுங்க மட்டும் என்னவாம்? ஆட்சி மாறத்தான் போவுது நாயக்கரே.. டேய் அந்த கத்தியை எடுடா" என்று தீவிரமாக கத்தியைத் தீட்டுபவரே வைத்த முரண் சிரிக்கவைக்கும். "வந்து உக்காரு. காடாட்டம் வளர்த்து வச்சிருக்க.. அப்பப்ப வந்தா செலவாயிடுமா? அம்பது பைசாவை வச்சு மாடிவீடு கட்டப்போறியா?" முடிவெட்டுபவர், வெட்டப்படுபவர் இரண்டுபேரும் தூங்கிக்கொண்டே வேலைநடக்கும். "என்னடா இப்படி கொந்தி வச்சிருக்கான்?" மட்டும் மாறவே மாறாது.

ஸ்டைலாக முடிவெட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் வந்த வயதிலும் கூட அதே முடிவெட்டுபவர் "ஸ்டெப் கட்டிங் எல்லாம் உனக்கு செட் ஆவாது கண்ணு. நல்லா எண்ணெய் தடவி படிய வாரிக்க, அப்பதான் அயகா இருக்கும்" என்று எனக்காக முடி எடுப்பதுடன் சேர்த்து முடிவெடுப்பார். பின்னணியில் 'ரேடியோ சோதனை மேல் சோதனை-போதுமடா சாமி' என்று பொருத்தமாக ரீரெக்கார்டிங் செய்யத் தொடங்கிவிட்ட காலத்தில்.

17 18 வயதில் டெய்லி ஷேவிங் செய்ய வேண்டியிருக்குதுடா என்று அலுத்துக்கொள்ளும் கும்பல் மத்தியில் பூனைமீசைகூட வராமல் பல்லவ சிற்பம் போல இருப்பதே அவமானம். முடிவெட்டுபவரும் தொழிலில் முன்னேறி டிவி எல்லாம் வைத்திருந்தார். சித்ரமாலாவில் அஸ்ஸாம்காரர்கள் சப்பை மூக்குடன் 'லாட்ல லோட்ல லையூ' என்று பாடிக்கொண்டிருப்பதை சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டே "அடடா.. கிருதா போயிருச்சு. பரவாயில்ல. இந்த ஸ்டைல் உனக்கு நல்லா இருக்கு" என்று விபத்தில் விஞ்ஞானம் வளர்ப்பார்.

வெளியூர் போயும் கூட என் சோகம் தொடர்ந்ததுதான் கொடுமை. பீஹாரின் முடிவெட்டுபவர்கள் அனைவரும் யார் எப்படி வந்தாலும் எல்லா முடியையும் முன் பக்கம் வாரி லாலு ப்ரஸாத் யாதவ் ஹேர்ஸ்டைலுக்குக் கொண்டுவந்துவிட்டுதான் மேலதிக அழகுபடுத்தலை ஆரம்பித்தார்கள். அதற்குள்ளாகவே என் முடியும் அழகும் காலாவதி ஆகிவிடுவதால் அவர்களின் கலைநுணுக்கங்களை ஏற்க முடியாத என் தலைநுணுக்கம்.

சரி.. தலையில் தேவையான அளவு முடி இல்லை என்பதால்தானே இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை? ஆறுமாதங்கள் வெட்டாமல் என் தலைக்கனத்தை ஏற்றினேன்.பங்க் கட்டிங் என்று போனி டெயில் போடும் அளவுக்குப் பின்னந்தலைமுடி வளர்ந்தால் ஜடாமுடி போடும் அளவுக்கு முன்னந்தலைமுடியும் சீராக வளர்ந்தது. பார்ப்பதற்கு பங்க் போலத் தெரியவில்லை. பரதேசி போலத் தெரிந்தது. இப்போதும் பல்லவ சிற்ப முக அமைப்பில் மாற்றம் இல்லாததால் அழகிய தமிழ்மகள் இவள் என்று பீஹார்வாசிகள் பாடுவார்களோ என்று பயந்து லாலு முடிவெட்டுபவரைச் சரணடைய நேர்ந்தது. ஒருமுறை ஆறுமாதங்களுக்குப் பிறகு ஜடாமுடியுடன் என்னைப்பார்த்த என் அப்பா "நீ இஷ்டம் போல இரு, நாளை மறுநாள் வீட்டில் விசேஷம், என் அண்ணன்கள் எல்லாரும் வருவார்கள், அப்போது மட்டும் வெட்டிவிடு.. எனக்குன்னு ஒரு மானம் இருக்கில்ல?" என்றதைத் தொடர்ந்து பலியானது.

சென்னை மாதிரி நகரத்திலும்கூட என் வீட்டுக்கு அருகே அமைந்த முடிவெட்டுக்கடை என் முன்வரலாறு தெரிந்ததாகவே அமைந்த கொடுமை. ஞாயிற்றுக்கிழமைகளின் நீண்ட வரிசைகள், நேரக்கட்டுப்பாடுகளுக்கு இடையில் குயிக் கட் முருகன் என் தலையில் விளையாடுவார். இங்கே அரசியல் பேச்சுக்கள் கிடையாது. க்யூவில் இருப்பவர்கள் எந்நேரமும் சிடுசிடுவென்று இருப்பார்கள். "அப்பா, அம்மா வரும்போது பச்சைமிளகாய் வாங்கிண்டு வரச் சொன்னா"வுக்கு தமிழில் பதில் பேசிவிட்டு "எக்ஸ்க்யூஸ்மீ, ஐ ஹாவ் அப்பாயின்மெண்ட்ஸ், கென் ஐ கோ நெக்ஸ்ட்" என்று ஆங்கிலத்தில் க்யூ முந்துவார்கள். கவனித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டும் புது ப்ளேடு போட்டு பாண்ட்ஸ் பவுடரை தாராளமாக வீசி வயதான ஆட்கள் முடிவெட்டுவார்கள். எனக்கு எப்போதும் கடைக்குப் புதிதாக வந்த பையன்தான். ஆஃபீஸில் மறுநாள் "என்னாச்சு?" என்று துக்கம் விசாரிக்க ஏதுவாக முடிவெட்டுவான் பையன்.

என் முகத்திலும் முடி அரும்ப ஆரம்பித்தாலும் இவர்கள் ஏதாவது செய்து பழைய பல்லவகாலத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் ஷேவிங் மட்டும் செய்துகொள்ளாமல் தப்பித்துக் கொள்வேன். வீட்டுக்கு வந்து முகவெட்டுடன் சவரம் செய்தால்தான் திருப்தி.

துபாய்க்கு வந்தும் என் துயரம் தொலையவில்லை. போஸ்டர்கள் சித்ரமாலா டிவி அரசியல் போன்ற சில்லறைச் சந்தோஷங்கள் விடுபட்டுப் போனது தவிர, முடிவெட்டுபவர்கள் என்னைப் பார்ப்பது மாறவே இல்லை. ஆயிரக்கணக்கான அழகுசாதனங்கள் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் சாதனங்கள் இரைந்துகிடக்க என் தலைக்கு அதே சீப்பும் கத்தரியும் மட்டும்தான். இந்தக்கடை முடிவெட்டுபவர்களுக்கான கல்லூரி போலிருக்கிறது. ஒவ்வொரு முறையும் பழைய ஆட்கள் 2 பேரும், புதியவர்கள் 2 பேரும் இருப்பார்கள். புதியவர்கள் ப்ழையவர்கள் ஆனவுடன் பழையவர்கள் வேறுகடைக்குப் போய் புதிய புதியவர்கள் வருவார்கள். புதிய புதியவர்கள் எப்போது வரலாம் என்பதை என் தலைமுடி அளவு தீர்மானிக்கும். முதல் போணி என்றும் நான்தான்.

புதியவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி. ஒருவர் பின்னந்தலையில் இருந்து ஆரம்பிப்பார். தலையில் குளவி கொட்டும். இன்னொருவர் புஸ்புஸ் என்று தண்ணீரை இரைத்து படிய வாரி கம்மியாதானே இருக்கு, ஏன் வந்தோம் என்று உணரவைப்பார். இன்னொருவர் மெஷினை எடுத்து வலது இடதுபக்கங்களுக்கு வெட்டுவதற்கு முன், வெட்டியதற்குப் பின் என்று வித்தியாசம் காட்டுவார்.இன்னொருவர் பொறுமையாக மில்லிமீட்டர் மில்லிமீட்டராக வெட்டி, வெட்டியதைச் சுத்தம் செய்து, மீண்டும் வெட்டி என்று ஆர்ட்ஃபிலிம் காண்பிப்பார். பாதைகள் ஆயிரம், பயணம் ஒன்றுதான். வழிமுறைகள் ஆயிரம், கொத்துக்கறி என் தலைதான்.

என் தலைக்கு ஏன் இவ்வளவு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டுகிறார்கள் என்று தீவிரமாக யோசித்தேன். ஒருவர் இருவர் என்றால் பிரச்சினை அந்தப்பக்கம் இருக்கலாம். சொல்லிவைத்ததுபோல வேலூர் சென்னை பீஹார் துபாய் என்று எல்லாரும் செய்கிறார்கள் என்றால் என்னதான் கூட்டுறவாக இருந்தாலும் சின்க் ஆகாது, பிரச்சினை என்னிடம்தான் இருக்கவேண்டும். ஒருவேளை முடிவெட்டும்போது ஒரு வார்த்தைகூடப் பேசாமல் முடிந்தவுடன் "ரொம்பச் சின்னதாப்போச்சு இல்ல?" என்று கேட்பதா? மசாஜ் செய்யவருபவர்களைத் தடுத்து எந்த மேலதிக சேவையுமே வேண்டாம் என்று பொருள்பட வைப்பதா? மருத்துவ நாவிதர் சங்கம் - 1-4-XXXXஇல் இருந்து என்று போடப்பட்டிருக்கும் விலைப்பட்டியலில் இருந்து எல்லா நேரமும் 75% டிஸ்கவுண்டிலேயே வெட்டுவதாலா? (அந்த விலைப்பட்டியல் சிவகாசி பட்டாசு விலை போல. யாரும் அந்தப்பணம் கொடுத்து நான் பார்த்ததே இல்லை)

நேற்று முடிவெட்டிக்கொண்டு வந்தேன். மனைவி பார்த்தாள், சிரித்தாள். சிரி சிரி.. புதுசா என்ன? இதெல்லாம் நாங்க எவ்ளோ நாள் பாத்துகிட்டு இருக்கோம்!

"ரொம்ப மோசமா இருக்கா?"

"எப்பவும் போலதான். முடிவெட்டிகிட்டு வந்தா ஒருவாரம் தனி அசிங்கமா இருக்கும் உங்க முகம்"

"அப்புறம்?"

"வழக்கம்போல அசிங்கமா இருக்கும்"

Apr 1, 2010

பதிவர் சங்கம் - என் இரண்டணா

















































Dec 14, 2009

திருத்த வேண்டிய பதிவு

சரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது.

நம்பிக்கை

சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.

எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.

இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.

"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.

"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"

"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"

"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"

"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"

"சொல்லு. வேற என்ன விஷயம்?"

"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு"

"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே?"

"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"

"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"

ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.

"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"

"நான் தான் பேசறேன். கோபிதானே?"

"ஆமாம் சார்"

"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"

"ப்ராப்ளமா சார்?"

"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"

"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"

"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"

ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.

சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.

"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"

"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"

"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"

"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."

காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.

"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"

"என்ன சொல்றாங்களாம்?"

"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"

"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"

"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்!"

சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.

"சரி பாக்கறேன். வேற எதுவும்?"

"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"

"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"

"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"

சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.

ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.

"முத்து, கேண்டீன் வர்றயா?"

ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,

நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்

கேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம்.

”ஓக்கேதானே?” என்றேன்.

”பின்ன?”

பெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல்.

”நெருப்புப் பெட்டி இருக்கா?” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான்.

தீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி..

****

முன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.



Jun 19, 2009

நேற்றைய சிறுகதையின் மறுபக்கம்

நேற்று சவசவ என்று ஒரு கதை மாதிரி எழுதி அதற்குள் ஒரு கதை இருப்பதாக பில்ட் அப் எல்லாம் விட்டிருந்தேன். ஆனால் பலர் போட்டவுடனேயே மேட்டரைக்கண்டுபிடித்துவிட்டார்கள். இப்போது எல்லாருக்குமாக விடைகளை அப்டேட் செய்துவிட்டேன், தயவுசெய்து பார்க்கவும்.


பின்னூட்டம் இந்தப்பதிவுக்கு வேண்டாம். இங்கேயே போடவும் :-)

Jun 17, 2009

நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு

ஆபீஸுக்குள் நுழைகையில் லேட் ஆகிவிட்டிருந்தது. கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

காலை வணக்கத்தை தொடர்ந்து இயல்பாகப் பார்ப்பதுபோல கடிகாரத்தைப் பார்த்தான் வெள்ளைக்காரன். ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறேன் - இந்தச் செயல் எவ்வளவு எரிச்சலூட்டுகிறது என்று. (27a)

“என்னாச்சு? லேட்டா?"

"ஆமாம்.. நாறப்பசங்க. என் கார்க்கு முன்னாலதான் டபுள் பார்க் பண்ணுவானுங்க”

“இன்னிக்குமா? சரி விடு”

“ஆற மாட்டேங்குது சார், மத்தவன் டைமை மதிக்காதவனை கொன்னா கூட குத்தம் இல்லை.” (27b)

“கோபத்தை விடு” அவன்மேலெல்லாம் இல்லைடா.. உன்மேலேதான் கோபம்!

“கோபம்ன்ற சாத்தான் மட்டும் இல்லாட்டி நான் மண்ணு!” (8b,28)

கணினி உள்ளே செல்ல நேரம் எடுத்தது.

”இது டைம் சாப்பிடும் அதுக்குள்ள பேனா சாம்பிள் பிரச்சினையை இன்னிக்கு தீத்துடலாம்” வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய பேனாக்கள். கோயில் ட்யூப்லைட் போல பேனாவைவிட பெரிசாக உபயம் என்று கம்பெனி பெயர் போட்ட விளம்பரம்.

“ரெண்டே மாடல்தானே.. ஒண்ணு ஒல்லி ஒண்ணு குண்டு..என்ன ரீபிள் போடலாம்?”

‘ப்ளாக்தான் சார்.. வேறெந்த கலர்லேயும் பேனா எனக்கு ஒத்துவராது!” (13)

”சரி இதை ட்ரை பண்ணு”

மஞ்சள் போஸ்ட்-இட் டில் வேகமாகக் கிறுக்கினேன்.

“என்னது இது? எதாச்சும் ட்ராயிங்கா?”

“என் பேர் சார்.. என் மொழிலே எழுதினேன்”

“அழகா இருக்கே”

“பேர் எல்லாம் அழகுதான்.. ஆனா இது எங்க மொழியில கோழிக்கிறுக்கல்!” (1,3)

கணினிக்கு உயிர் வந்துவிட்டிருந்தது.

“உன் சின்னப் பெண் தானே?”

“ஆயிரம் முறை பாத்தாலும் உங்களுக்கு ஞாபகம் வராது! இது மூத்த பெண்”

“போன வாரம் சின்னப்பெண் என்று சொன்னியே!”

“அப்புறம் மாத்திட்டேன்.. இதெல்லாமா பிரச்சினை?” (23)

வெள்ளைக்காரன் எல்லா ரிப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு கிளம்ப மணி 9 அடித்துவிட்டது. சக ஊழியன் “இன்னாபா? காபி சாப்பிடப் போலாமா?” என்றான்.

“சரி வரேன்.”

“வெள்ளைக்காரன்கிட்ட பொய்யா? மெய்யா?”

“பொய் சொல்லாம நல்லவனா இருக்க ஆசைதான். விடுதா இந்த சமுதாயம்?” (30) கேண்டீனில் வறட்டு வறட்டு என்று பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். “எப்பா.. நான் போற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?”(24)

”என்ன இன்னிக்கு யூனிபார்ம் போடல? பிறந்தநாளா?” வாடிக்கையாளரிடம் செல்லும் எல்லாநாட்களில் மட்டுமாவது யூனிபார்ம் அணிய வேண்டியது விதி. இன்றைக்கு அவனுக்கு ட்யூட்டி இல்லை என்பது கேட்டுவிட்ட பிறகுதான் நினைவுக்கு வந்தது.

“போரடிச்சுப்போச்சு.. என்ன கலர்லே கொடுத்திருக்காங்க.. சாயம்போனாப்பல க்ரீம் கலர்! பேண்டையாவது ப்ளாக்கா இல்லாம நான் சொன்ன ப்ளூ எடுத்திருக்கலாம்” (11)

“சரி என்ன போச்சு? அடுத்தவருஷம் மாத்திக்கலாமே.. மேட்ச் பாத்தியா?”

“ஏன் தான் பாத்தோமோன்னு இருக்கு.. சொல்லி சொல்லி எல்லார்கிட்டயும் தோக்குறானுங்க! கிரிக்கெட்(17) பாக்கறதையே நிறுத்திரபோறேன்.”

“என்னப்பா.. டைட் மேட்சு.. 3 ரன்லதானே விட்டானுங்க!”

பாலா(16a) போட்டானுங்க.. வெட்டிப்பசங்க(16b).. ஒருபக்கமா(16c) ஆளை நிறுத்திட்டு வேற பக்கம் போட்டுகிட்டு இருக்கானுங்க”

”அத்தை விடு.. பசங்க (20) படம் பாத்துட்டயா? நல்லா இருக்கு”

“தைரியமா பேமிலியோட பாக்கலாமா?”

”நான் தனியாத்தான் பார்த்தேன். குழந்தைக்கு எக்ஸாம்.. முடிஞ்சவுடனே அவங்களும் பாப்பாங்க..எங்க அப்பா கூட பாத்தா நல்லா இருந்திருக்கும்.. (10)ஊருக்குப் போய் அவர்கூட ஒருமுறை பாக்கப்போறேன்”

“தனியா எஞ்சமாய் ஆ?”

”யோவ்.. சினிமா பாக்கறதுல என்ன இருக்கு? இதே கோவா பீச்சுல தனியா போனா சுவாரஸ்யம் இருக்கும்!” (31)

”சரி படம் எப்படி?”

“ஆஹா ஓஹோன்னெல்லாம் சொல்ல முடியாது.. பாக்கற 3 மணிநேரம் சுவாரஸ்யமா போவுது.. வேறென்ன வேணும்?(19) அதுவும் இல்லாம

கேரக்டர்ங்களையும் கஷ்டப்படுத்தி பாக்கற நம்மளையும் அழவிட்டு படுத்தலை.”

”ஆமாம்.. உனக்குதான் சிரிப்புன்னாலும் சோகம்னாலும் கண்ணில தண்ணி கொட்டுமே!” (2)

ரகு காபி கப்களை கொண்டு வந்தான். “பழக்கமாயிடுச்சேன்னு இந்த டுபாக்கூரையெல்லாம் காபின்னு குடிக்க வேண்டியிருக்கு.. ஊர்லே எங்கம்மா போடுவாங்க பார் ஒரு காபி.. காலையிலே எழுந்துக்கும்போது அந்த வாசனை(14) ஆளைத்தூக்கும்”

“சரிதான். ரகு கேட்டுட்டா இதுக்கும் உலைதான். லீவு சாங்க்‌ஷன் ஆயிருச்சா?”

“ஆமாம்.. 26 மத்தியானம் ப்ளைட்டு”

“வெறும் ஊரா.. இல்லை வேறெங்கெயும் பிக்னிக்கா?”

“அம்மணிக்கு அந்தமான் போகணுமாம்.. புது ஊருக்கு போனாதான் பிக்னிக்காம்..நசநசன்னு.. கடைசிலே அங்கேதான் போவோம்னு வையி..(9) இருந்தாலும் எனக்கு என்னவோ பேசாம போன முறையாட்டம் பாணதீர்த்தம் போனா போதும்னு தோணுது (29,6).எங்கே போனாலும் ஒரே வெய்யில்.. குளிர்காலமா இருந்தாலும் பரவாயில்லை.” (21)

”சரி வெட்டி அரட்டை போதும்.. தொழிலை கவனிக்கலாமா?”

“நான் கான்பரன்ஸுக்கு போகணும்.. ஒரு ப்ரசண்டேஷன் - 10 மணிக்கு.. அதுவரைக்கும் ஆதவன் சிறுகதையே துணை!” (22)

கான்பரன்ஸில் பலர் பார்க்காத புது ஆட்கள். சில கண்களில் சினேகம் (7), சில கண்களில் “இவன்-என்ன-எனக்கு-சொல்லி-தருவது”.. வாங்கடா

வாங்க.. பத்து நிமிஷம் போதும்டா எனக்கு. சாயங்காலத்துக்குள்ள நீங்க அத்தனைபேரும் என் விசிறி.(8a) என்ன, நண்பன்னு வெளிய சொல்லிப்பீங்க..(5)

மதிய உணவு இடைவேளைக்குள்ளேயே நான் நினைத்தது நடந்துவிட்டது. “ரொம்ப நாளா இந்த கான்சப்ட் புரியாம இருந்துது.. நீங்க கொடுத்த எக்ஸாம்பிள்ஸ் எல்லாமே சிம்பிள்.. சுலபமா புரிய வச்சுட்டீங்க”(26)

“தொழிலே இதானேங்க.” பிஸிபேளாபாத்தை அப்பளம் சகிதம் நொறுக்கிக் கொண்டே சொன்னேன். “அருமையான சாப்பாடு!” (4)

“அந்த அனிமேட்டட் டயக்ராம் எல்லாம் நான் இதுக்கு முன்னாலே பாத்ததே இல்லை”

“ஸ்பெயின் ஆபீஸ்லே (25) யூஸ் பண்னிகிட்டிருந்தாங்க.. பாத்தவுடனே அமுக்கிட்டேன்!”

அவன் என்கூடவே ஆபீஸுக்கு வந்தான். சேரை பின்பக்கம் அபாயகரமாக சாய்த்துக் கொண்டு ஸ்பீக்கரின் மௌனம் கலைத்தேன்.

“எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்.. பி ற ந் தி ளை த் தே ன்..பி ற ந் தி ளை த் தே ன்” என்றார் ராஜா. (12)

”என்ன சார் இவ்ளோ கம்மி ரெசொல்யுஷன் வச்சிருக்கீங்க? எழுத்து எல்லாம் தெரியுதா?”

“என் கண்ணு ரொம்ப பவர்புல் சார்..அதோ அங்க தூரத்துல 10 பாயிண்ட்லே எழுதி இருக்கே கண்டிஷன்ஸ் அப்ளைன்னு.. அதுகூட தெரியுது.” (18)

ஏமாந்துவிட்டான்.. அதை ப்ரிண்ட் எடுத்ததே நான் தான்.

போன் அடித்தது. எடுத்தேன். “ஹலோ ஹூ இஸ் திஸ்?” என்றது எதிர்க்குரல்

“யோவ்.. கால் பண்ணது நீ.. என்னை கேக்கறியா?”

“இல்லை சார், இந்த நம்பர்லே இருந்து மிஸ்டு கால் வந்தது”

“இது ஆபீஸ் நம்பர்.. போர்டு நம்பர்.. நான் யாரையும் கூப்பிடலை!” (15)

போனை எரிச்சலாக வைத்துவிட்டு.. "Life is one Damn thing after another" என்றேன் எதிரிலிருந்தவனிடம். (32)

பி கு1: இந்தக் கதைக்குள் ஒரு கதை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வது அவசியம். புரிந்தவர்கள் புரியாதவர்கள் இருசாராரும் பின்னூட்டலாம் :-)

பிகு2: உரையாடலாகவே சென்றாலும் உரையாடல் போட்டிக்கு அல்ல.

பிகு3: நாளை இப்பதிவில் சில திருத்தங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகு4: திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. பாலா போடறானுங்க, வெட்டிப்பசங்க, ஒருபக்கமா போட்டானுங்க - இவர்கள்தான் என்னை அழைத்த பதிவர்கள், அவர்கள் பதிவில் பிடித்த பதிவை சுட்டியாகக் கொடுத்துவிட்டேன்.

பிகு5: ஆமாங்க, இது 32ஏதான். அ-புனைவுன்னு ஏன் சொன்னேன்னா, இது புனைவு இல்லை, என்னைப்பற்றின நிஜம்ன்றதால :-)

Apr 1, 2009

துக்ளக் இணைய இதழ் - இலவசமாய் படிக்க:

இதற்கு முன் போட்ட பதிவில் படம் பெரிதாகாமையால் பலர் ஏப்ரல் 1 என நினைத்துவிட்டனர். இப்போது படங்களின் லின்க்கைத் தருகிறேன்.

தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை. ஆனால், விகடன் குமுதம் போன்ற விற்பனை உத்திகள் கைவராததால் வெளிநாடுகளில் இந்த ஏடு கிடைப்பது அபூர்வமே.

சென்ற சில வருடங்களாக துக்ளக் இணையத்தில் கிடைத்தாலும், இணையதள சந்தா அதிகமாக (20$ வருடத்திற்கு) இருப்பதால் படிப்பது கஷ்டமாகவே இருந்துவந்தது.

இந்நிலையில் தெரிந்தவர் ஒருவர் ஒரு சுட்டி கொடுத்தார். இலவச தளம்தான். ரெஜிஸ்ட்ரேஷன் கூட தேவையில்லை.. எல்லாவற்றையும்விட, இந்தத் தளத்தின் வேகம் ஆச்சரியப்படவைத்தது. சில வேளைகளில் அதிகாரபூர்வ வலைத்தளத்தைவிடவும் முன்னரே இங்கே அட்டைப்படங்கள் கிடைத்துவிடுகின்றன.

இந்த சுட்டியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன் தார்மீகரீதியாக இது சரிதானா என நிறையவே யோசித்தேன். கடைசியில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறாகாது என்பதால் வலைக்குடும்பத்துடன் சில அட்டைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியில் முட்டாள் ஆனது நான் தான் :-( படங்கள் பெரிதாகாத முதல் பதிவினால் சொதப்பிவிட்டது.
துக்ளக் வெவ்வேறு நிலைமாற்றங்களுக்கு எப்படி அட்டைப்படம் போடும் என்பதுதான் கான்செப்ட்!
படம் 1 - 15/05/09, ஜ மு கூ வென்றால்:


படம் 2 : மூன்றாம் அணி வென்றால்:

படம் 3 : தே ஜ கூ வென்றால்:




Jan 19, 2009

திருமங்கலம் Millionaire!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ. அவன் அறிவாளி
ஆ. அவன் புத்திசாலி
இ. அவன் ஏமாற்றினான்
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

போலீஸ் ஸ்டேஷன். லாடம் கட்டப்பட்ட நிலையில் சுடலைமுத்து..

"உனக்கு எப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரியும்?"

"எனக்குத் தெரியும்"

"பெரிய பெரிய ப்ரொபஸர்ங்க, ஐ ஏ எஸ் ஆபீஸருங்க எல்லாம் 4 கேள்வி தாண்டறதில்லை.. உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"

"தெரியும்"

"நீ யாரு? எந்த ஊர்லே இருந்து வந்தே?"

"மதுரைக்குப் பக்கத்துல திருமங்கலம்னு ஒரு கிராமம்.. அங்கேதான் நான் வளர்ந்தது.. டீக்கடை வச்சு பொழைச்சுக்கிட்டிருந்தேன்"

காட்சி மில்லியனேர் செட்டுக்கு மாறுகிறது.. நிகழ்ச்சி நடத்துபவர் ஆரம்பிக்கிறார்:

"வாருங்கள் நாம் மில்லியனர் நிகழ்ச்சி விளையாடலாம்... நம் எதிரே இருப்பது திருமங்கலத்தில் இருந்து வந்திருக்கும் சுடலைமுத்து.. சுடலைமுத்து என்ன செய்றீங்க?"

"டீக்கடை வச்சிருக்கேன்"............(தேவையான அளவு அவரைக் கிண்டல் செய்ததன் பின்)..

"இதோ உங்களுக்கான முதல் கேள்வி.. ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் போட்டிருக்கும்?

அ. இந்திரா காந்தி
ஆ. நேரு
இ. ரஜினிகாந்த்
ஈ.காந்தி

ப்ளாஷ் பேக்:

நானும் எல்லா எலக்‌ஷனிலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் தான் ஓட்டுப்போட்டு கிட்டிருந்தேன்.. திடீர்னு ஒரு நாள் டிவியில மட்டும் பாத்த பெரிய மனுஷங்க எல்லாம் ஊருக்கு வந்தாங்க..

வீட்டுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த ரேஷன் கார்டு .. வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துகிட்டு ஓடிப்போனேன்.. கும்பலையெல்லாம் விலக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன்.. அப்ப அதைப்பாத்துட்ட்உ ஒரு பெரிய மனுசன் எனக்கு ரூபாய் நோட்டு ஒண்ணு தந்தாரு.. அதில..

போலீஸ் ஸ்டேஷன்..

கான்ஸ்டபிள் சொல்கிறார்: ஆமாம் சார்.. எனக்கு கூட அப்பதான் 1000 ரூபாய்க்கு நோட்டு இருக்குனே தெரியும்..

மில்லியனர் செட்..

"வாழ்த்துக்கள்.. திருமங்கலம் டீக்கடைக்காரருக்கு 1000 ரூபாய் பரிசு.."

"3000 ரூபாய்க்கான இரண்டாம் கேள்வி.. தயாரா?"

"தயார்"

"மின்சார விளக்கு எரிய முக்கியமான தேவை எது?

அ. நெருப்பு பெட்டி
ஆ. தீப்பந்தம்
இ. மேண்டில்
ஈ.மின்சாரம் "

ப்ளாஷ்பேக்:

"என்னாய்யா டீ போட்டிருக்கே.. ஒரே உப்பா கரிக்குது"

"மன்னிச்சுக்கங்க.. சக்கரையும் உப்பும் பக்கத்துல இருந்துச்சு.. உப்பைப் போட்டுட்டேன் போல.."

"ஒரு மெழுகுவத்தி கொளுத்திக்க வேண்டியதுதானே.."

"எல்லாம் தீந்து போச்சுங்க.. நேத்து வரிக்கும் கரண்டே கட் ஆவலையா? அதனால தேவைப்படல. எலக்‌ஷன் தான் முடிஞ்சு போச்சே.. இதோ போய் வாங்கி வரேன்"

கரவொலி சத்தம் மில்லியனர் அரங்கை நிறைக்கிறது.

"20000 ரூபாய்க்கான பரிசை வாங்கிச் செல்கிறார் திருமங்கலம் சுடலைமுத்து"

"இவ்வளவு பெரிய அமவுண்டை பார்த்திருக்கிறீர்களா சுடலைமுத்து?"

"எங்கேங்க? எங்க வீட்லே மொத்தம் 2 வோட்டுதான். பக்கத்து வீட்டு பரமர் 10 வோட்டு மொத்தமா வச்சிருந்தான்.. அள்ளிட்டான்"

"கவலைப்படாதீங்க.. நீங்க இங்கேயும் அள்ளலாம்"

"ஆறாவது கேள்வி.. தயாரா?"

"கேளுங்க"

"உளியின் ஓசை படத்தின் கதை வசனகர்த்தா யார்?

அ.கலைஞர்
ஆ.ராம நாராயணன்
இ. அகிரா குரசோவா
ஈ.மணிரத்னம்"

ப்ளாஷ்பேக்:

"மச்சான் என்னை சினிமாக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி ஏமாத்திகிட்டே இருக்கே"

"இதோ.. இன்னிக்கு கூட்டிட்டு போறேன்.. வார்டு கவுன்சிலர் வந்தாரு.. எல்லாருக்கும் டிக்கட் தந்தாரு.."

"ப்ரீயாவா?"

"ஆமாம்.. எனக்கு மட்டுமே 10 டிக்கட் தந்தாரு.. முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"

படம் பார்க்கிறார்கள்.

"தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"

மில்லியனேர் செட்

"சரியான விடை சுடலை.. நீங்கள் 40000 ரூபாய் ஜெயித்துவிட்டீர்கள்"..

போலீஸ் ஸ்டேஷன்:

"தில்லானா மோகனாம்பாள் யார் வசனம் சொல்லு பாக்கலாம்?"

"எனக்குத் தெரியாது"

"அதுவே தெரியாது.. இது எப்படி தெரியும்?'

"அவங்க அந்தக் கேள்வி கேக்கலையே!"

மில்லியனர் செட்

"1,60,000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி:

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

அ.பாம்பே
ஆ.ஹாங்காங்
இ.டெல்லி
ஈ.சென்னை"

"இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது.. ஆடியன்ஸ் போல்"

போலீஸ் ஸ்டேஷன்..

"இந்தக் கேள்விக்கு உனக்கு விடை தெரியாதா? குழந்தை கூட சரியாகச் சொல்லுமே?"

"படித்த குழந்தை சரியாக்ச் சொல்லும்.. எனக்குத் தெரியாது"

மில்லியனர் செட்டில்
கரவொலி.

"ஆஹா.. நம்ம டீக்கடைக்காரர் எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி கலக்கிகிட்டிருக்கார்.. இன்னும் இரண்டு லைப் லைன் வேற வச்சிருக்கார். 320000 ரூபாய்க்கான ஒன்பதாவது கேள்வி.. தயாரா?"

"தயார்.."

"மதுரையில் டிவி பார்க்க எந்த கேபிள் கனெக்‌ஷன் வேண்டும்?

அ. அரசு கேபிள்
ஆ.சுமங்கலி கேபிள்
இ. ராயல்
ஈ. ஹாத்வே"

ப்ளாஷ்பேக்
விரிகிறது..

"வெட்றா அந்தக் கம்பத்தை.."

"அண்ணே பாத்து வெட்டுங்கன்னே.. டீக்கடை ஓலைச் சாரம் அதோட ஒட்டி இருக்கு"

"இவன் எவண்டா.. அண்ணன் கேபிள்லே தெரியாத சானல் எங்கயும் தெரியக்கூடாதுன்னு பாடுபட்டுகிட்டிருக்கோம்.."

வெட்டிய கம்பம் கீழே விழுகிறது..டீ பாய்லரும் சேர்த்து.

போலீஸ் ஸ்டேஷன்.

"பத்து நாள் ஆச்சு எனக்கு சூடுபட்ட கொப்பளம் ஆற"

மில்லியனர் செட்

"சரியான விடை.. கலக்கறீங்க சுடலை.."

"10 ஆவது கேள்வி..

"லட்டு தயாரிக்க என்ன தேவை?

அ. கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய்
ஆ.மைதாமாவு சர்க்கரை எண்ணெய்
இ. அரிசிமாவு, சர்க்கரை, எண்ணெய்
ஈ. இவற்றில் எதுவும் இல்லை"

"விடை தெரியுமா தெரியாதா?"

"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"

"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"

ப்ளாஷ்பேக்:

"சுடலை.. லட்டு கொடுக்கறாங்களாம்.. போய் வாங்கல?"

"அடப்போடா.. அவன் அவன் வாஷிங் மெஷினும் டிவியும் கொடுக்கறான்.. இவங்க போயும் போயும் லட்டுதான் தராங்களா?"

"அட.. இது சாதா லட்டு இல்லைடா..வாங்கிப் பிரிச்சுப் பாரு"

மில்லியனர் செட்

"விடை ஈ..இவற்றில் எதுவும் இல்லை"

"ஷ்யூர்? கான்பிடண்ட்?"

"ஆமாம்"

"எப்படி சொல்றீங்க?"

"தங்கத்தைப் பத்தி வேறெந்த விடையிலேயும் இல்லியே?"

"வாவ்.. சரியான விடை"

"13 ஆவது கேள்விக்கு வந்துட்டீங்க.. 50,00.000 ரூபாய் இந்தக்கேள்விக்கு சரியான விடை சொன்னா கிடைக்கும்"

"இவற்றுள் எது கலவரத்தை உடனடியாக உண்டாக்கும்?

அ. பங்காளிச் சண்டை
ஆ. கடன் பாக்கி
இ. ஆபாசமாகத் திட்டுதல்
ஈ. கருத்துக் கணிப்பு"

ப்ளாஷ் பேக்..

"எல்லாக் கடையையும் மூடச்சொல்லுங்கடா.. மேயர் அம்மா வராங்க.. "
"இவன் கடையை உடைச்சு போடுங்கடா"
"டே இருடா.. பத்திரிக்கை ஆபீஸுக்குதான் மொதல்ல போகணும்.. சூடா ஒரு டீ குடிச்சுட்டு போலாம்.. எங்களுக்கெலாம் டீ போடுறா சுடல.. க்ரிஷ்ணாயில் வச்சிருப்பியே? அந்த டின்னை எடுத்துக்கங்கடா கிளம்பலாம்"

போலீஸ் ஸ்டேஷன்..

"ஆச்சரியமா இருக்கு உன்னைப்பாத்தா.. கேள்விக்கு எப்படி பதில் சொல்லி ஏமாத்தினேன்ன்னு கேட்டா அதுல இருந்து தப்பிக்கறதுக்கு கலவரத்துக்கு க்ரிஷ்ணாயில் சப்ளை பண்ணேன்னு ஒத்துக்கற.. இதுக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?"

"என்ன ஒரு இருபதாயிரம் கிடைக்குமா?"

"ஷார்ப்பா இருக்காண்டா"

மில்லியனேர் செட்

"சுடலைமுத்து, நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஒரு கோடிக்கான கேள்வி இது. தயாரா?"

"தயார் சார்"

"இதோ உங்கள் கேள்வி"

"இவற்றுள் எது இலவசமாகக் கிடைக்காது?

அ. டிவி
ஆ. கேஸ் ஸ்டவ்
இ. மில்லி
ஈ. மல்லி"

"குழப்பமா இருக்கே சார்.. டிவி எங்க ஊருக்கு கிடைச்சிருச்சு.. மத்ததுல.."

"மில்லியா.. மல்லியா கேஸா?"

"குழப்பமா இருக்கு சார்.. 50/50 ஆப்ஷன் உபயோகப்படுத்தறேன்"

"சரி.. கம்ப்யூட்டர், ரெண்டு தவறான விடையை அழிச்சுடுங்க"

"இ. மில்லி, ஈ. மல்லி.. எது சரியான விடை?"

"இப்பவும் சரியாத் தெரியலையே சார்.. எலக்‌ஷன் டைம்ல மட்டுமா எல்லா டைம்லேயுமா சார்?"

"அது எனக்குத் தெரியாது.. விடை இ. மில்லியா ஈ. மல்லியா?"

"தெரியலையே சார்"

"அப்ப விடை இ. மில்லியாவும் இருக்கலாம், ஈ.மல்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"ஓக்கே சார்.. சரியான விடை ஈ. மல்லி"

"ஷ்யூர்? இ.மில்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"இருக்கலாம் சார். ஆனா என் விடை ஈ.மல்லிதான்"

"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"

"ஆ! ஈ மல்லி சரியான விடை.. நீங்கள் இப்ப ஒரு கோடீஸ்வரர்.. அடுத்த கேள்வி,.."

பாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

"ஆ! அடுத்த கேள்வி நாளை இதே நேர நிகழ்ச்சியில கேட்கப்படும்.. நன்றி"

செட்டை விட்டு வெளியே வந்த நடத்துநர் "போலீஸ் ஸ்டேஷன், சுடலை ஏமாத்துறான்.. அவனை அடிச்சு உண்மையைக் கண்டுபிடிங்க"

போலீஸ் ஸ்டேஷன்..
"எப்படிடா ஈ மல்லின்னு சரியா சொன்னே?"

"எலக்‌ஷன் டைம்லே நெறய மில்லி ப்ரீயா கிடைச்சுது சார்.. மல்லி எப்பவுமே கிடைச்சதில்ல.. அதான் சொன்னேன்.."

"சரி.. திருமங்கலத்துக்காரன் எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேள்விய செட் பண்ணி இருக்கானுங்க கேனப்பயலுங்க.. அவனுங்க கிட்ட பிரச்சினைய வச்சுகிட்டு உன்னை அடிக்கச் சொன்னான் பாரு.. அவனைத்தான் உதைக்கணும்.."

மறுநாள் செட்டில்:

"வாங்க சுடலைமுத்து.. உங்ககிட்ட கடைசிக் கேள்வி கேட்கணும்.. இதுக்கு சரியான விடை சொன்னா உங்களுக்கு ரெண்டு கோடி.. தப்பான விடை சொன்னா, அய்யா ஜாலி.. நாங்க எதுவுமே கொடுக்க வேணாம்"

"கேளுங்க சார் கேள்வி"

"இந்தியாவின் பிரதம மந்திரி யார்?

அ. கலைஞர் மு கருணாநிதி
ஆ.முலாயம் சிங் யாதவ்
இ. மன்மோகன் சிங்
ஈ.லாலு பிரசாத் யாதவ்."

"சுலபமான கேள்விதான்.... இல்ல?"

"எனக்கு இதுக்கு விடை தெரியாதே?"

"ஏமாத்தாதீங்க.. இதுக்கா விடை தெரியாது?"

"நெஜமாதான் சொல்றேன் சார்..போன் அ பிரண்ட் போடலாமா?"

"யாருக்கு?"

"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."

"யாரது?"

"சோனியா காந்தி!"

***************************************************************************

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?

அ.
ஆ.
இ.
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

இல்லை.. எல்லாம் நம் தலைவிதி!

Sep 17, 2008

ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)

என் கணினி க்ராஷ் ஆகிவிட்டது. பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் பார்த்துக்கொண்டிருந்தபோது க்ராஷ் ஆனதால், சில பதிவுகளில் இருந்து ஒரு ஒரு வரி மட்டும் ஒரே ஒரு டெக்ஸ்ட் பைல் ஆகி அதை மட்டும்தான் மீட்க முடிந்தது. இந்த வரிகள் யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடித்துத் தாருங்களேன் - முழுப்பதிவையும் படித்து உய்வேன்!

உங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பதில்களை உடனுக்குடன் மட்டுறுத்த இயலாது.

1. இரட்டை டம்ளர் முறைக்கு நான் இங்கே தீர்வு கொடுத்துள்ளேன்
2. ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் முதலெழுத்துதான் வித்தியாசம்
3. ஜோதியில் சைவப்படம் போட்டால் சீட்டு கிழியும், தாவூ தீரும்
4. இவ 110,131 மேகீ 43 சரி, மத்ததெல்லாம் தப்பு. முயற்சி பண்ணுங்க.. உங்களால முடியும்.

5. இது இந்தப்பதிவுக்கு மட்டுமல்ல, தங்கமணிக்கும் எதிர்பதிவல்ல
6. என் டி ஷர்ட் டை திருடினாலும் பரவாயில்லை, டி ஷர்ட் வாசகத்தைத் திருடிவிட்டார்கள்.
7. வாரம் 30$ வைக்கலாமா 70$ வைக்கலாமா என்றுதான் குழப்பம்
8. இப்போதெல்லாம் 30 விநாடியில் நேரிசை வெண்பா எழுத முடிகிறது
9. கிளி ஜோக் தவிர வேறெதுவும் கம்பன் விழாவில் சொல்லக்கூடாது
10. காற்றை வஞ்சித்துத்தான் பறக்கவேண்டும் என்றால், எனக்கு வேண்டாம் அந்த பட்டம்
11. கும்மிடிப்பூண்டியில் வயதான ஓட்டுநராக இருந்தாலும் காலை அழுத்தினால் வண்டி நிற்கிறது.
12. சென்னை மாநகராட்சி போர்ட் - என் கைவிரல் சென்னை மாநகராட்சியில் இருக்கிறது, கால் வெளியே.

Jun 24, 2008

கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!

அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.

உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.

கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.

அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.

படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.

ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..

மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)

கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..

இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.




தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

Jun 16, 2008

கேள்வி பதில் ச சங்கர் - கொத்தனார் வயா பினாத்தல்!

இந்தக் கேள்வி விளையாட்டு தேன்கூடு சுடர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது மாட்டவில்லை. என்னடா இது என்னை மட்டும் யாரும் கேள்வி கேக்க மாட்டேங்கறாங்களே? தானே கேள்வி தானே பதில் ஆரம்பிச்சுடவேண்டியதுதானா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவேளையில் ச சங்கர் அன்புடன் கேள்வி கேட்க, இதோ பதில்கள்.
 
1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது "சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக"!??? உங்கள் மனநிலை என்ன ?
 
வலிப்பதிவரா? இதென்ன வலிக்கும்படியான குத்து?
 
எழுதப்போவதில்லை என்று சொன்னது வாஸ்தவம்தான். ஆனால் அப்போதேகூட, நிரந்தரமான முடிவல்ல என்பதையும் சொல்லியே இருந்தேன். அப்படிச் சொன்னதற்கான முக்கியமான காரணம், வலைப்பதிவுகளைப்பற்றிய அறிதல் எனக்கு அப்போது இருந்திராததே என்பது இப்போது புரிகிறது. "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்பதாக அர்த்தம் எடுத்துக்கொண்டு, நான் எழுதுவது நன்றாக வருவதில்லையே என்ற எண்ணத்தில் விட்ட அறிவிப்பு அது. (வெகுண்டு எல்லாம் எழவில்லை :-)
 
ஆனால் வலைப்பதிவர்கள் உருப்படியாகத்தான் எழுதியாகவேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை எனப் பலர் வலியுறுத்தியதால் தொடர ஆரம்பித்தேன். காலமும் அதையே நிரூபித்து, உருப்படியாக எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் ஜாலியாகத் தொடர்கிறேன். காலம் உருண்டோடிய காரணத்தால் மட்டுமே சீனியராக இருக்கிறேன்! இன்றும் எழுதுவதை நிறுத்தத் தயாராகவே உள்ளேன் - ஆனால் - "அவனை நிறுத்த சொல்!"


2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?
 
பதில் 1: அந்த டீச்சருக்கும் எனக்கும் அதிக வயசு வித்தியாசம்னு சொல்லிட்டாங்க!
 
பதில் 2: தெரிஞ்சவங்க நாலுபேரு பக்கத்தில இருந்தாங்க.. கொஞ்சம் கிளம்பறீங்களா? என்று பார்வையாலேயே முறைத்ததில் அப்ஸ்காண்ட் ஆனார்கள். நானும் அவளும் தனியே.. தன்னந்தனியே!
 
உலகத்தில் யாரும் உபயோகப்படுத்தாத முதல் காதல் வார்த்தைகளை அள்ளி வீசவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கேட்டே விட்டேன்!
 
"ட்ரெயின்லயா ஆபீஸுக்குப் போயிட்டு வரீங்க?" 
 
அதிலும் மயங்கினாள் அவள்.
 
பிறகென்ன? கண்கள் கலந்தன, கருத்தொருமித்தோம்!
 
கடைசியில் என்ன ஆச்சா? அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க! மனசைத் திடப்படுத்திக்கங்க - கல்யாணம் ஆயிடுச்சி :-(

3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள்?

இரவு 11 மணிவரை மனைவியின் அருகில் இருந்தேன். வலி எடுக்கவில்லை. எப்போதும் எடுக்கலாம் என்ற நிலை. எனக்கு இருக்கும் குறைபாட்டினால் அங்கே பக்கத்தில் இருக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். காலல 8 :30க்குத்தான் மறுபடி மருத்துவமனைக்கு வந்தேன்.  வருவதற்கு இரண்டே நிமிடம் முன் குழந்தை பிறந்தது எனத் தெரிவித்தார்கள். வெயில் அதிகமாக இல்லாததால் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி உள்ளறையில் விளக்கொளியில் வைத்து கண்ணாடி ஜன்னலைத் திறந்து காட்டினார்கள் என் தேவதையை!

எண்ணங்களா? முதல் எண்ணம் மனைவி பெத்துப் பிழைச்சு வரணும்ங்கறதுதான். ரெண்டாவதா, ஒண்ணு ரெண்டு மைக்ரோ செகண்டுக்கு, "அப்பாவா ஆகப்போறே, இனியாவது குழந்தைத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கணும்" அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. இன்னி வரைக்கும் அந்த எண்ணத்தை ஜெயிக்க விடலையே! நாமல்லாம் யாரு!

4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் ?

ஹலோ பி ஏ.. இப்ப உடனடியா, அடுத்த மூணு நிமிஷத்துக்குள்ள எனக்கு இந்த உத்தரவெல்லாம் டைப் ஆகி வரணும்.
 
1. பிரதமர் பதவிக்கு இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் பெட்ரோல் கோட்டாவை கொஞ்சம் அதிகப்படுத்தணும்.. ரொம்பவெல்லாம் ஒண்ணுமில்ல.. ஒரு லட்சம் லிட்டர் போதும்.. ஊருக்குப் பக்கத்துல ஒரு பெட்ரோல் ரிசர்வாயர் இருக்கு.. அதை வாடகைக்கு எடுத்து ஊத்தி வச்சுருங்க!
 
2. சிபிஐயா ரா-வா? யாருய்யா இதுக்கு இன்சார்ஜு? நம்ம உறவுக்கார பசங்கள்லே யாரு யாரு விசுவாசமா இருப்பானுங்க, எவன் எவன் ஏமாத்திட்டு ஓடிப்போயிருவான்னு ஒரு ரிப்போர்ட்டு உடனடியா வேணும்.. எதுக்கா? வேற என்ன? ஒரு 10000 பேரை காப்பாத்த பெட்ரோல் கேஸ் ஏஜன்ஸி கொடுத்துரலாம்.. பின்னால கஷ்டப்படக்கூடாதில்லையா? நான் இல்லைய்யா.. அந்த மக்களைச் சொன்னேன்!
 
3. அப்புறம்.. ஒரே நாள் பிரதமரா இருந்தாலும் அவருக்கு பென்ஷன் எல்லாம் கரெக்டா வந்துரணும்.. அந்த பென்ஷன் அமவுண்டையும் மாசம் 99 லட்சம்னு ஜி ஓ போட்டு ஒரு லெட்டர் எழுதிக்கொண்டா!
 
4. ஆமாம், இந்த எம் எஸ் ஓ, கேபிள், டிடிஎச் எல்லாம் யாரு பாத்துக்கறது? அந்த மந்திரிய வரச்சொல்லுப்பா உடனே.. நம்ம பசங்களுக்கு ஒரு தொழில் ஆரம்பிச்சுக் கொடுத்துரலாம்!
 
5. எல்லாத்தையும் விட முக்கியமா இந்த லெட்டரை ஜனாதிபதிகிட்ட கொடுத்துடணும்! என்ன எழுதியிருக்கேனா? ஒரு நாள்லே என் கடமையெல்லாம் சரியாச் செய்ய முடியல.. இன்னும் 24 மணிநேரத்துக்கு எக்ஸ்டன்ஷன் கொடுங்கன்னு எழுதியிருக்கேன். இந்த லெட்டர்லே டேட் மாத்தி மாத்தி டெய்லி கொடுக்கவேண்டியது உன் கடமை!
 
என்ன அப்படிப்பாக்கறே? நாட்டுக்கு நல்லதா? அதெல்லாம் 5 வருஷம் மொத்தமா வந்தா யோசிக்கலாம்.. அப்படி வந்தவங்களே யோசிச்சதில்ல! ஒரு நாள்லே என்ன கிழிச்சிறப்போறேன்! வீட்டையாச்சும் கவனிக்கலாமில்ல?
~~~~~~~~~~~~~
அப்பாடா பதில் சொல்லியாச்சு.
 
இப்போ, இலவசக்கொத்தனாரை கொஞ்சம் நோண்டலாமா? (இதே கேள்விகளுக்கு பஞ்ச் பரமசிவத்திடமும் பதில் கேட்டு வாங்கிப் போடுங்கள் - அல்லது ர் மாற்றி எழுதுங்கள்)
 
1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?
 
2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?
 
3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?
 
4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?

Jun 11, 2008

ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும் இன்னபிற பிரபலங்களும் (11 Jun 2008)

அடர்கானகத்தில் திறந்திருக்கும் வாய்
 
மரத்தின் வெளியே
வெளிச்சம் மறைக்கும் தழைகள்.
சத்தம் உணர்த்தும் சருகுகள்.
எங்கோ ஓடிச்செல்லும் முயலின் ஈன ஒலி.
சிங்கங்கள் துரத்தலாம்
மான்கள் மருளலாம்
இக்காட்டின் ஏதோ ஓர் மூலையில்.
அலுத்துக் காத்திருக்கும்புலிக்கு
நேற்று அருந்திய பியர் போத்தல்
எட்டி உதைக்கும் பொம்மை ஆகலாம்.
பசித்திருக்கும் வயிறுகளும் உண்டு.
சிவாஜிக்கு மட்டும்தானா?
இவ்வாய்க்கும் ஜிலேபிகள் தரப்படலாம்.
அதை இலவசமென்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் நீங்கள்.
 
***********************

சிவாஜி வாயிலே ஜிலேபி..

"இதான் க்ளூவா?" இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் தன் சட்டைப்பையினின்றும் எடுத்த கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவண்ணம் கேட்டார்.

"ஆமாம் சார். அந்த யங் சாப் அப்படித்தான் தன் கையிலே பச்சை குத்தியிருந்தான்" சொன்னார் சிலம்பரசன் ஐ பி எஸ்.. சத்தியிலிருந்து மாற்றலாகி வந்திருந்தார். புது ரெக்ரூட்மெண்ட்.

"இறந்தவர் பேரு என்ன?"

"வாகீசன் சார். ஆர் எஸ் புரத்துல தங்கி இருக்கார். இண்டஸ்ட்ரிஸ்ட்"

"எப்படி இறந்தார்?"

"பாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் ரிசல்ட் இன்னும் வரலை.. ஆனா உடம்பெல்லாம் நீலம் பாரிச்சிருந்தது சார்"

"லாஸ்ட் வீக் இதே ஏரியாவுல ஒரு கொலை நடந்ததே.. அதுல இறந்தவர் பேர் என்ன?"

"ஜியா மொகித்தீன் சார்.. அவரும் புட் பாய்சனிங் தானாம் சார்"

".. ம்" கோகுல்நாத் இன்னும் விவேக்கைக் கூப்பிட முடிவெடுக்கவில்லை..

"ஸ்வீட் சாப்பிடறீங்களா சார்.. பக்கத்துக் கடையில ஆனிவர்ஸரியாம்.. அதுக்காகக் கொடுத்துட்டுப் போனாங்க.."

கோகுல்நாத் துல்லியமாக அதிர்ந்தார்..

"சிலம்பரசன்.. அந்த ஜிலேபியச் சாப்பிடாதீங்க..

இன்னுமா உங்களுக்கு க்ளூ புரியல?

சிலம்பரசன் - வாகீசன் - ஜியா மொகித்தீன் -மூணு பேரையும் ஜிலேபி கொடுத்து கொல்லறதா ப்ளான் போட்டிருக்கான் அந்த ப்ளாகாட்!"
 
*******************
ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும்
 
கவுஜயிலே இருக்கற வகைங்களே போதும்னு பொறவிக்கவிஞனான நானும் நினைச்சுப்புட்டா, அண்ணாச்சிக்கு சரக்கு தீந்து போச்சுன்னு அபுதாபிக் கடைங்கள்லே சரக்கை வாங்கி அனுப்புவான் வளர்ந்துவரும் இலக்கியவாதி.. இருக்கற சோகம் போதாதுன்னு இதையும் ஒரு சோகமாக்கி அய்யனார் சோக கீதம் பாடுவான். கோட்டிக்காரங்க அப்படித்தான் பண்ணுவாங்கன்னு விட்டுத் தொலைக்கலாம்  சவத்தைன்னு விட முடியுதா? நம்ம மனசாட்சி நம்மளைக் கேள்வி கேக்காது?  அப்புறம் ஜெமோவுக்கும் சாத்தான்குளத்தானுக்கும் என்ன வித்தியாசம்?
 
இந்தப் புது வகைக் கவுஜைக்கு சரி ரியலிஸம்னு பேரு..எதைச் சொன்னாலும் சரி இருக்கற ஆளுங்கதானே நம்ம ஊர்லே பெரும்பான்மை.. அந்த ஒடுக்கப்பட்ட இனத்துக்காக பாடுபடும் கவுஜை இது!
 
சிவா
ஜி
வாயி
லேஜி
லே
பி.
 
இந்தக் கவுஜைய எவனாச்சும் திறனாய்வு செஞ்சு பின்னூட்டம் போட்டா வெளியிடவே மாட்டேன்.. ஆமாம் சொல்லிபுட்டேன்.
 
************************
அவனுக்கென்று ஒரு ஜிலேபி
 
'மட சாம்பிராணி.. ஒரு பெண்ணை இந்த இடத்திலா நிற்க வைப்பது? ' போவோர் வருவோர் பார்வையெல்லாம் தன்னையே துளைப்பதாக எண்ணிக் குன்றிப்போனாள் ரம்யா. போர்ட்டர் ஒருவன் இடிக்க வந்தபோது இயலாமைச் சினத்தில் துடித்தாள்.

காலையில் அப்பா சொன்னாரே..'என் பெண் சமத்து. எந்த இடத்திலும் தன்னிலை உணர்ந்து நடந்து கொள்வாள்' இங்கே அதெல்லாம் முடியாது என பெருமூச்செறிந்தாள்.

வாயிலுக்குச் செல்லலாம். அங்கேயாவது இந்த அருண் ராஸ்கல் வந்திருக்கிறானா என்று பார்க்கலாம்.

டிக்கட் கேட்ட பரிசோதகரிடம் சீசன் டிக்கட்டைக் காட்டி வெளியே வந்தாள். சி எஸ் டி டெர்மினல் வாசல் ஆட்டோக்காரர்கள் 'வரீங்களா அம்மா' என்று கேட்டதற்கு தலையசைத்துவிட்டு முன்னேறினாள்.

அருண் வேகமாக வந்தான். "டார்லிங், நம் கஷ்டம் எல்லாம் தீந்துது.. இந்தா இனிப்பு சாப்பிடு" என்று வாயிலே ஒரு இனிப்பையும் திணித்தான்.

'என்னது இது.. நான்குபேர் போகிற வருகிற இடத்திலா சாப்பிடுவது?'

' அதனால் என்ன சிவாஜி (டெர்மினஸ்) வாயில்லே ஜிலேபி' என்று ஜோக்கடித்தான் அருண்.

 
***********************
பி கு 1: இந்த சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தொடர் விளையாட்டை ஆரம்பித்து வைத்த புண்ணியவானை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். இன்ஷ்யூர் செய்துகொண்டு வரவும்.
 
பி கு 2: இலவசக்கொத்தனாருக்கும் இன்ஷ்யூரன்ஸ் பரிந்துரைக்கிறேன்.
 
பி கு 3: ராஜேஷ்குமாரும் ரமணி சந்திரனும் கோவிச்சுக்க மாட்டாங்க.. மத்தவங்க கோவிச்சுக்கிட்டாலும் கவலையில்லை :-)
 
பி கு 4: இன்னும் மூணு பேரைக் கூப்பிடணுமாமே - சாத்தான்குளத்தான், அடர்கானகப் புலி, வளர்ந்துவரும் இலக்கியவாதின்னு எங்க லோக்கல் லேயே முடிச்சுக்கிறேன்.
 
பி கு 5: ஒரு மெகா ப்ராஜக்ட் தயாராகி வருகிறது. குவிஸ் மற்றும் பரிசுப்போட்டி. அடுத்த வாரம் ரிலீஸ்.
 
பி கு 6: தசாவதாரம் முதல்நாள் முதல் காட்சிக்கு புக் செய்தாகிவிட்டது. சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்)
 

 

blogger templates | Make Money Online