Dec 17, 2012

இலக்கணம் படிச்சதில்ல தலைக்கனமும் எனக்கு இல்ல

சொல்லிக்கொடுப்பது என் வேலை. எனவே, எப்படி ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் கற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் என் வேலையின் முக்கியமான ஒரு பகுதி.

ஒரு ஆசிரியராக நான் உன்னைவிடப் பெரியவன், விஷயம் அறிந்தவன், நான் கடவுள் என்ற பிரமையை ஏற்படுத்திச் சொல்லிக் கொடுப்பது ப்ரைமரி ஸ்கூலுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம், வயது முதிர்ந்த மாணவர்களுக்கு அந்த முறை வேலைக்காகாது.

பள்ளியில் நான் கற்ற விஷயங்கள் எவை இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று ஆழமாக யோசித்துப் பார்த்தால்,  எனக்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை விட, சக மாணவர்கள் சொல்லிக்கொடுத்தவையே அதிகம் நினைவில் நிற்கின்றன. இவனுக்கே புரிஞ்சிடுச்சே, எனக்குப் புரியாம போயிடுமா என்ற எண்ணம், புரிதலை வேகப்படுத்துகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதே உணர்வைத் தந்த கற்றல் அனுபவம், கொத்தனார் மூலம். கொத்தனாரின் தமிழ் ஆரம்ப காலத்தில் ஒன்றும் அவ்வளவு அபாரமான தமிழ் எல்லாம் இல்லை. சந்திப்பிழை, எழுத்துப்பிழை எல்லாம் இருந்ததுதான். ஆனால் தவறு என்று சுட்டிக்காட்டினால், அது ஏன் தவறு என்று ஆராய்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து, ரெஃபெரன்ஸ்களை அடுக்கி - அந்தத் தவறைச் சரி செய்வதற்குள் அவன் நிறையக் கற்றிருப்பான்.

அப்படிக் கற்ற விஷயங்களை, சக மாணவன் போல சொல்லித்தந்ததில்தான் என் பிழைகளும் பெருமளவுக்குக் குறைந்திருக்கின்றன.

தமிழ் பேப்பரில் இலக்கணம் பற்றி ஒரு தொடர் எழுதச்சொல்லி பாரா சொன்னதும்  நாம் வழக்கமாகத் தமிழில் செய்யும் தவறுகளை, ஏன் தவறு, எப்படித் தவறு என்பதற்கு உதாரணங்களுடன் எழுத ஆரம்பித்தான் -  எனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே, எளிமையாக -சக மாணவன் தொனியுடன். அது ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 

சினிமாப்பாட்டு உதாரணங்கள், குமுதம் ஸ்டைல் கவர்ச்சிப் படங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும் அது வரவேற்பைப் பெற்றிருக்கும். ஏனெனில் - கற்றல் என்பது வேகம் பெறுவது சக மாணவர்களால்தான், ஆசிரியர்களால் அல்ல.

இப்போது புத்தகமாக வந்திருக்கிறது; இது பண்டிதர்களுக்கான புத்தகம் அல்ல. அவர்களுக்குப் புத்தகம் தேவையில்லை. இது நமக்கான புத்தகம். 

தமிழ் எழுத ஆர்வம் கொண்டுதான் அனைவரும் ஆல்ட்+2 அடிக்கிறோம். தப்பும் தவறுமாக எழுதவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் தமிழ் எழுத அதிகம் தேவையில்லாத சூழலில் வேலைபார்க்கும் நமக்குப் படித்த இலக்கணம் மறந்து போனதில் ஆச்சரியம் இல்லை. இந்தப்புத்தகம் பழைய நினைவுகளைக் கிளறும். குட்டிச் சொல்லாமல், தட்டிச் சொல்லும் நம் வழக்கத் தவறுகளை. 

உங்கள் கையில் இருக்கவேண்டிய புத்தகம் - சந்தேகமே இல்லை.

ஆன்லைனில் வாங்க, இங்கே சொடுக்கவும்.

பிகு: அட்டையில் ஓர் ஒற்றுப்பிழை இருக்கிறது - அது என்ன என்று கண்டுபிடித்துவிட்டால், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேறிவிடும்.

Oct 8, 2012

இங்கிலீஷ் விங்கிலீஷ்

மாமி இங்கிலீஷ் கற்கிறாள். இதுதான் கதை என்பதை போஸ்டர் பார்த்த குழந்தைகூடச் சொல்லிவிடும். ஏன் கற்கிறாள்? இங்கேதான் ஆரம்பிக்கிறது இந்தப்படம் ஏன் நல்லபடம் ஆகிறது  என்பது.

அழகான வாழ்க்கை. கணவர் மனைவி மகள் எல்லாரும் இவள் சமையலைப் பாராட்டதான் செய்கிறார்கள். போதாக்குறைக்கு சிறுவாட்டுப் பணமாக லட்டு விற்ற 500ரூபாய்க் கட்டு வேறு சிரிக்கிறது. இங்கிலீஷ் தெரியாதுதான். அதனால் என்ன?

இங்கிலீஷ் பேசும் ரிசப்ஷனிஸ்டுடன் புருஷன் சோரம் போகிறானா? இல்லை.
மகள் மதிக்காமல் உனக்கும் எனக்கும் உறவோ ஒட்டோ இல்லை என்கிறாளா? இல்லை.
மகள் பள்ளி ஆசிரியர் இங்கிலீஷ் தெரியவில்லை என்று கேவலப்படுத்துகிறாரா? இல்லை.
அமெரிக்காவுக்குச் செல்லும்போது இங்கிலீஷ் தெரியவில்லை என்று விசாக்காரார்களோ இமிக்ரேஷன் காரர்களோ திருப்பி அனுப்புகிறார்களார்? இல்லை.
இங்கிலீஷ் தெரியாததால் அமெரிக்காவில் வழிதெரியாமல் வில்லன்களிடம் மாட்டி ஹீரோ பஞ்ச் டயலாக் பேசிக் காப்பாற்றுகிறாரா? இல்லவே இல்லை.

எந்த மிகைப்பட்ட காரணமும் இல்லை. ஒரு பெண்ணுக்கு இயல்பாக ஏற்படும் "தனக்கு மரியாதை இல்லை" என்ற மெல்லிய வருத்தம், அதுசார்ந்து எழும் ஈகோ.. இவர்களுக்குத் தெரியாமல் நானும் வென்று காட்டுவேன் என்று எழும் தன்னம்பிக்கை. என் உறவுப் பாட்டி ஒருவர், 88 வயதில் ஹிந்தி கற்று ப்ராத்மிக் பரீட்சைக்குக் கிளம்பியதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் மீண்டும் பார்த்தேன்.

இவ்வளவு மென்மையான உணர்வை பார்ப்பவர்களுக்குக் கடத்தவேண்டும் என்றால் அபாரமான நடிப்பும் உடல்மொழியும் காட்சியமைப்புகளும் ஒத்துப் போகவேண்டும். ஸ்ரீதேவியும் கௌரி ஷிண்டேவும் அதைச் சாதித்திருக்கிறார்கள்.

நியூயார்க் மெட்ரோ ரயிலில் பயணிக்க எங்கே கார்டைச் சொருகவேண்டும் என்பது தெரியாத, ஓரளவுக்குத் தெரிந்த, பழக்கமான - என்ற மூன்று நிலைகளையும் ஸ்ரீதேவி காட்டும் நடிப்பு ஒன்றே போதும். எல்லாக் காட்சிகளிலும் இருந்தாலும் அலுக்காத முகம், நடிப்பு என்று அசத்தியிருக்கிறார். 

ஸ்ரீதேவி மட்டுமல்ல, ஒரு காட்சிக்கு வரும் அமிதாப் (இமிக்ரேஷன் வாயிலில்: நானா? உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வந்திருக்கிறேன். வேண்டாமா? திரும்பப்போய்விடட்டுமா?), துள்ளிக்கொண்டே பாடம் எடுக்கும் டேவிட் (return back தேவையில்லை, return போதும்..) , பாகிஸ்தான் ட்ரைவர் (இந்தியன் சிஸ்டர், மெக்சிகன் சிஸ்டர், சீன...) , மெக்சிகன் ஆயா (I will teach all of america spanish) , சாஃப்ட்வேர் தமிழன் (I love Idly and my mother.. no My mother first and idly next), முடிவெட்டும் சீனாக்காரி (May I slap you?), கே ஆஃப்ரிகன் அமெரிக்கன் (I am here not to speak, but listen), ஃப்ரென்ச் ஹோட்டல் சமையல்காரன் (cooking is art, you are artist) - எல்லாருமே கச்சிதமான பாத்திரங்கள். கனகச்சிதமான நடிப்பு.

லட்டுத் தட்டோடு வரும்போது பயமுறுத்தி, லட்டுகள் கீழே விழுந்தவுடன் ஓடிப்போய் வெளிறிப்போன முகத்துடன் சாரி கேட்கும் சின்னப் பையனிடமே அற்புதமான நடிப்பை வாங்கத் தெரிந்திருக்கிறது இயக்குநருக்கு.

பின்னணி இசையையும் குறிப்பாகச் சொல்லவேண்டும். பலநேரங்களில் சின்னச் சின்ன ஒலித்துணுக்குகள் உணர்ச்சியை போல்ட் இடாலிக் அண்டர்லைன் எல்லாம் செய்து காட்சிக்குப் பலம் சேர்க்கிறது.

எந்த எதிர்பாராத திருப்பமுமே இல்லாத கதையை இரண்டரை மணிநேரம் சுவாரஸ்யமாகச் சொன்ன திரைக்கதை. 

குடும்பத்துடன் போயிருந்தேன். குழந்தைகளும் ரொம்பவே ரசித்தார்கள். 

இங்கிலீஷ் அல்ல கதையின் முக்கியமான விஷயம் - எவ்வளவு சாதாரணமாக இல்லத்தரசிகளை நினைக்கிறது இந்தக் குடும்ப அமைப்பு, அவள் உணர்ச்சிகளுக்கு குடும்ப அங்கத்தினர்கள் கொடுக்கும் மரியாதை என்ன - இவைதான் முக்கியமான விஷயம்; இதைச் சொல்ல இங்கிலீஷ் ஒரு கருவி. மனைவிகளிடம் நிச்சயம் ஹிட் அடிக்கக்கூடிய டாபிக்.

இந்தப்படம் ஓடும். ஆனால் வைஃபாலஜியால் பாதிக்கப்பட்ட கணவர்களின் நுண்ணுணர்வுக்கு, இதுவரை படமும் வரவில்லை, வந்தாலும் ஓடாது :-(( நம் சோகம் நம்மோடுதான்..

Highly recommended. See with your family.


Aug 14, 2012

மதிரில்லர் வரிசை நாவல்கள்

திரில்லர்  வரிசை நாவல்களாக என் இரு புத்தகங்கள் வெளியாகி விட்டன. உங்கள் அபிமானப் புத்தகக் கடைகளில் இப்போது!


அல்வா













பதறாதே படுக்காதே 

மதி நிலையம் வெளியீடு; ஈரோடு புத்தகக் காட்சியில் விற்பனைக்கு. 

Jul 31, 2012

நாளை முதல் உங்கள் அபிமான புத்தகக் கடைகளில்..



சாஃப்ட்வேர் ஆசாமி குலசேகரனுக்குத் தெரியாது - சாதாரணமாகத் தொடங்கிய நாளின் முடிவில் பிரம்மாண்டமான சதிப்பின்னலில் தானும் ஒரு அங்கமாகப் போவது.

மும்பை நடிகை மஞ்சுவுக்குத் தெரியாது - தான் சந்திக்கப் போகும் அரபியின் கையில்தான் தனது முடிவு என்பது.

அரபிப் பணக்காரன் கம்ரானுக்குத் தெரியாது - தன் சக்திக்கும் மீறிய எதிரிகளின் கையில் சிக்கி இருப்பது.

கூலிக் கொலைகாரன் மார்க்குக்குத் தெரியாது - இது தன்னுடைய கடைசி அசைன்மெண்ட் என்று.

சிறப்புக் காவல்படை துரைராஜுக்குத் தெரியாது - தன் முதல் வேலையில் இருக்கும் பிரம்மாண்டமான ரிஸ்க்!

எல்லாத் தெரியாதவர்களும் ஆடும் சம்பவங்களின் சதிராட்டம்....

________________


ஆக்கும் சக்தி எல்லாமே அழிக்கவும் வல்லவைதான். கண்டுபிடித்த விஞ்ஞானியைவிட உபயோகிக்கும் தீவிரவாதிக்கு அழிக்கும் திறன் அதிகமாகத் தெரியும். தீவிரவாதிக்குத் தெரியாத விஷயங்களும் தெரிந்திருந்தால்தான் காவல்படைகள் தன் வேலையைச் செய்ய முடியும்.

அமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்குக் கடத்த வேண்டும்?  இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும்? வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபீஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃப் பி ஐ உயிரை விட வேண்டும்? 

சர்வதேசத் தீவிரவாதம்.. 
சர்வதேசக் காவல்படை.. 
சர்வதேசமும் சுற்றும் கதை...

_____________________________________________________________________

ஆகஸ்ட் மூன்று - ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியீடு.

உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.

Jul 25, 2012

”அல்வா” - வளர்ந்த கதை.

தமிழ் பேப்பர் என்று ஆரம்பிக்கப் போகிறோம். நீ தொடர்கதை எழுது. கட்டளையிட்டார் பாரா.

தொடர்கதையா? காமெடி பண்ணாதீர்கள். ஏதோ சீவக சிந்தாமணியை உல்டா பண்ணச் சொன்னீர்கள், செய்தேன். தொடர்கதை ஃபார்மட்டுக்கு எல்லாம் என் எழுத்து சரிப்பட்டு வராது என்றேன்.

இப்படியே சொல்லிகிட்டிருந்தா எப்படி. தலைப்பு அல்வா.  இந்தா பிடி நாட். பினாத்தல் சுரேஷ் அரபு ஷேக்கோட பொண்டாட்டியோட ஜல்சா பண்றான். அது ஷேக்குக்குத் தெரிஞ்சு போயிடுது. பினாத்தல் ஓடறான். இதை டெவலப் பண்ணி எழுது.

சரிதான். இந்த ஆசாமி கதை எழுதச் சொல்லவில்லை, என்னை ஜெயிலுக்குப் போகவைக்கத் திட்டமிடுகிறார் என்று புரிந்தது.

ஆனாலும் முதல் வாரத்தில் ஆளை மற்றும் மாற்றி ஏறத்தாழ இதே நாட்டைத்தான் எழுதினேன். எழுதும்போதே இந்த மேட்டரைத் தொடரக்கூடாது, எதாவது உருப்படியா எழுதலாம். உடனே நினைவுக்கு வந்தது ஆயில் ரிக்குகள். வேலை விஷயமாக அடிக்கடி போயிருக்கிறேன். ஹெலிகாப்டரில் இருந்து பிடிமானம் இல்லாத இடத்தில் இறக்கி விடுவார்கள். சிறை மாதிரி வாழ்க்கை. பல அறைகளுக்கு உள்ளே போகக்கூடாது என்று கட்டுப்பாடு. உள்ளே தனி அரசாங்கம். க்ரைம் கதைக்கு ஏற்ற செட்டப். ஹீரோவை இங்கே கொண்டு வரலாம்.

ஏன் ஹீரோ இங்கே வருகிறான்? கிட்நாப் செய்யப்பட்டு வருகிறான்.. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிமானம் கிடைத்து கதை உருவாகத் தொடங்கியது. 

பர்ப்பெச்சுவல் எனர்ஜி என்பது எல்லா அறிவியல்வாதிகளுக்கும் என்றும் மாறாப் பேராசை. இதைக் கொண்டு வரலாமா? ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன்.  ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது? இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி.

பல்ப் ஃபிக்‌ஷன் வகைதான். படித்தவுடன் மறக்கும் கதைதான். ஆனால் அதற்காக எதோ ஒன்றை எழுதிவிடக்கூடாது. யாராவது ஒருவர் சீரியஸாக எடுத்துக்கொண்டு இதெல்லாம் ஒரு லாஜிக்கா? விமர்சனம் எழுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே? என்று கேட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

பார்த்த பழகிய இடங்களை மட்டும் எழுதலாம். தெரியாத இடங்களைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். 

யூபிஎஸ் பார்சல் சர்வீஸ் சீருடையில் நட்சத்திரங்கள் மின்னின என்று எழுதி, வெளியிடுவதற்கு முன்னால் நண்பர் டைனோபாய்க்கு அனுப்பினால் அடிக்கவே வந்துவிட்டார். யூபிஎஸ் ஆசாமிகள் எப்போதும் ஷார்ட்ஸ்தான். தெரிஞ்சுகிட்டு எழுது என்று சொல்ல, மாற்றினேன். 

தீவிரவாதப்பணம் எப்படியெல்லாம் கைமாறுகிறது என்று நாராயண் விளக்கமாகச் சொன்ன விஷயங்களைக் கதையில் தேவையான இடத்தில் புகுத்தினேன்.

கதையே படிக்காத கொத்தனாரைப் படுத்தி எடுத்தேன். உனக்காகப் படிக்கிறேன். இங்கே ச் வரணும் ப் வரணும் என்று சந்தி திருத்தினான்.

கதைக்கான விமர்சனமாக, என் சுதந்திரத்தைச் சில மணித்துளிகள் அதிகப்படுத்திய தங்கமணியை மறந்தால் மறுவேளை சோறு கிடைக்காது.

பல்ப் ஃபிக்‌ஷன்தான். ஆனால் நிறைய உழைப்பையும் நம்பகத் தன்மைக்கான தேடலையும் கொண்ட பல்ப் ஃபிக்‌ஷன்.

தமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே பலர், இது நாவல் ஃபார்மட். மொத்தமாகப் படித்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள். இப்போது மொத்தமாக.. இன்னும் சில நாட்களில்..

Jul 22, 2012

பதறாதே - படுக்காதே - ”சென்ஷி”

விரைவில் வெளியாகவுள்ள என் அடுத்த நாவல் - பதறாதே-படுக்காதே.. வளைகுடா நகரப் பின்னணியில் நடக்கும் அதிவேக த்ரில்லர்.


இந்த நாவலை எழுதியவுடன் நண்பர் சென்ஷியிடம் அனுப்பிவைத்தேன் - அவர் பார்வை:


நகரங்கள் ஒரு தனித்த உருவம் கொண்டவை. நகரங்கள் உருவாகிய பின் அதன் கரங்கள் மாயவலையை மக்களிடையே வீசி இழுத்துக் கொள்கின்றன. நகரத்தின் கவர்ச்சியில் மீளவியலாது மக்களின் மனம் நகரம் நாடியதாயமைகின்றது.. வெளிச்சம் காட்டும் நகரின் இருளுருவம் குறித்தும் அழுக்குகள் குறித்தும் மனதிலெழுகின்ற பிம்ப வடிகால்கள் தொலைக்கப்படுகின்ற தூரத்தின் அளவீட்டை கணக்கிலெடுத்துக் கொள்ளும்படியான சுவாரசிய அபத்தங்களின் மதிப்பின் மீது வைத்துப்பார்க்...... வெயிட் வெயிட்.. சத்தியமா இது ஒரு புத்தகத்துக்கான விமர்சனம்தான்..  இது ச்சும்மா ஒரு பந்தாவுக்கு எழுதிப் பார்த்தது.


இந்த புத்தகத்துல என்ன இருக்குன்னு சொல்லுறதை விட என்னென்ன இல்லைன்னு எளிமையா சொல்லிட முடியும். மன சஞ்சலங்கள், ஆழ்மன தத்துவங்கள், மனித வாழ்வின் மற்றும் உறவுகளின் சிக்கல்கள், பிரதி பிம்பம் படியெடுப்பு... இப்படி தீவிர இலக்கியத்திற்கு முன்னிறுத்தப்படும் எந்த விஷயமும் இதில் இல்லை. இந்த நாவலில் கிடைப்பது சூழல்  மாத்திரமே. ஒவ்வொருவரின் சூழலும் மற்றையோரை பாதிக்கும் என்பதை மிக எளிமையாக விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராம்சுரேஷ்.

ஒவ்வொருவரின் மனதிலும் ஏதேனுமொரு விஷயம் அழுக்காய் படர்ந்திருக்கும். ஒருவரின் நன்மையென்பது இன்னொருவருக்கான கெடுதலில் முடியுமென்பதைப் பற்றிய கவலையோ அச்சமோ இன்றளவில் காணக்கிடைப்பதில்லை. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியையோ, நன்மை செய்தால் நன்மையுண்டாகும் என்ற நியதியையோ யாரும் மனதில் கொள்ளுவதில்லை. நியாயம் என்பது தனக்கான அளவுகோலின்படி மாத்திரமே கணிக்கப் பழகிக் கொண்டதில் தொலைந்தது சக மனிதன் மீதான அக்கறை மாத்திரமே. இந்தக் கதையிலும் யாரும் யாருக்காகவும் அக்கறைப்படுவதில்லை. தனக்கான நியாயங்களின்படி தார்மீகமாக செயல்படுகிறார்கள். நல்லவன் கெட்டவன் என்ற பேதமறுந்து எல்லோரும் வாய்ப்பு கிடைக்காதவரை நல்லவர்கள் என்ற கட்டவிழ்ந்து நாவலில் வந்து செல்லும் எல்லோரையும் ஏதேனும் ஒரு இடத்தில் சகமனித அன்பெனும் பாசாங்கற்றவர்களாகவே நடந்து கொள்கின்றனர். ஆனால் எல்லாமே விறுவிறு சுறுசுறுவென்று கடந்துவிடுவதால் இந்த பாதிப்பு மனதில் அத்தனை அழுத்தமாக எல்லோருக்கும் படியுமா என்று தெரியவில்லை. ஓட்டம் ஓட்டம் ஓட்டம். மாரத்தான் ஓட்டத்திற்கான பந்தயத்தை நூறுமீட்டர் தொலைவுக்கான விநாடிகளில் கடந்துவிடும் அவசரமாய் தறிகெட்டு ஓடுகிறது கதை.


நாவலில் குறிப்பிடப்படும் நகரம் பற்றிய பெயர் இல்லை. எதுவாக இருக்கலாம் என்ற ஊகத்தை விட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அமைப்பை கதையோட்டம் தந்துவிடுகிறது. அரபி கம்ரான் வருகிற இடத்தில் நம்மூரில் நமக்குப் பிடிக்காத அரசியல்வாதியின் பெயரைப் போட்டுக்கொள்ளலாம். அன்வர், ரஷீத் மற்றும் மார்க்கிற்கு பதில் கோபாலையோ தண்டபாணியையோ அல்லது வேலுவையோ சேர்த்துக் கொள்ளலாம். மாறாமல் இருப்பது நாவலில் வரும் குலசேகரன்கள் மாத்திரமே. சூழலென்னவென்று புரியாமலே ஒரு மாயவலையில் தன்னையுமறியாமல் சபலத்திற்கு உட்பட்டு சிக்கிக் கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் அலைபாயும் மனம் கொண்ட குலசேகரன்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் ஆபத்துகளும் அவர்களைச் சுற்றியே இருந்தும், தனி மனித ஒழுக்கமெல்லாம் இருட்டில் தொலைந்து போகும், தன்னைச் சுற்றியுள்ள இருட்டைத்தவிர வேறு யாருக்கும் தெரியாதென்ற நினைவில் சபலத்திற்கு உட்பட்டு அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து சுவைத்துவிட்டு இருட்டுதான் அவர்களுக்கான எதிரியென்று தெரிந்தபின் தப்பிக்க ஓட முயற்சிப்பவர்கள்.


பல்ப் பிக்சன் எனப்படும் வகையில், கதைத்தன்மை சூழலை மாத்திரம் முக்கியமாய்க் கொண்டு அதில் பின்னலாய் உலவுகின்ற மனிதர்களை அதிலும் அதிகம் வெளிச்சம் பட்டிராத மனிதர்களின் அந்தரங்கங்களின் ஒரு சிறிய பார்வைதான் இந்த கதை. நல்லவன் வாழ்வான் கருதுகோள்களை தாண்டிவிடாமல் அந்த கோட்டிலேயே நடந்து போகிற நாவல். இவற்றை இலக்கியமாகக் கருதி கொண்டாடுதல் தேவையற்றது. காரணம் இவை விற்பனைக்கானவை. பெருவாரியான மக்களின் சாகசத்தன்மைக்கான மனநிலையை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று மாத்திரமே. வாசிப்பவர் எல்லோரும் எல்லா கதாபாத்திரங்களையும் தங்களுக்கான ஒன்றாக நினைக்கவியலாத வகையில் பார்வையாளர்களாக மாத்திரமே இருக்க வைக்குமளவு கவனமாய் கையாளப்பட்ட ஒன்று. இது போன்ற கதைகளை வாசிக்கையில் சுஜாதாவை தவிர்த்து யோசிக்கவியலாத வகைப்படுத்தப்பட்டுள்ளதால் சுஜாதாவின் வார்த்தை-கள் அளவுகோலை தாண்டிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதாபாத்திரங்கள் பேச்சுக்கூட அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்ப் பிக்சன் இலக்கியமாகக் கருதிவிடக்கூடாதென்ற மனநிலை வாய்த்தவர்கள் வெறும் வாசிப்பின்பத்திற்காக மாத்திரமே இதை வாசித்து மகிழலாம். அல்லது படித்துவிட்டு மொக்கையென்றும் தூக்கிப் போடலாம். முக்கியம் வாசித்தலும் கருத்துக்கூறலுமேயென்பதாய் இருப்பதால் என்னைப் போல இலவசமாய் வாங்கியாவது படித்து இன்புற்று மேன்மை பெறுக.


சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு சுரேஷ், வாசித்துக் கருத்து கூறு என்று இணைய இணைப்பில் தந்திருந்த இந்த நாவலை நான்குநாட்கள் வாசிக்க மனமின்றி என்ன இருந்திடப்போகுது என்ற மனநிலையில் தொலைபேசிய இரண்டு முறைகளில் நான்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அசுவாரசியமாய் முதல் பத்தியில் படிக்க ஆரம்பித்து கதையில் சுவாரசியத்தில் ஒரு மணிநேரத்தில் படித்து முடித்து அவசரமாய் சுரேஷிற்கு போன் செய்து இரண்டு நிமிடங்கள் பாராட்டிவிட்டு மீண்டும் இரவில் ஒரு முறை படித்து மெல்ல உள்வாங்கி மறுநாள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்தக் கதையைப் பற்றிய கருத்தை சுரேஷிடம் பதிவு செய்திருந்தேன். என்னையுமறியாமல் கதையைப் படித்த உற்சாகம் குரலில் தென்பட்டதை மறைக்க முடியவில்லை. முதல் வாசகன் என்ற பெருமிதமாயிருந்திருக்கலாம். கூறியவற்றை மின்மடலில் அனுப்பி வைக்கச் சொன்ன, ஒரு வருடம் கழித்து மீண்டும் கதையைப் படிக்க அமர்ந்து மீண்டும் அதே உற்சாகம் மனதில் தொற்றிக்கொள்ள அந்த உத்வேகத்திலேயே இதை தட்டச்சி அனுப்பி வைக்க முடிவு செய்தாயிற்று. புத்தகமாக வெளிவந்த பிறகு (ராம்சுரேஷின் இரண்டாம் புத்தகமாக இருக்குமென்று நினைக்கிறேன்) மறுபடி ஓசி பிரதி வாங்கி படித்துக் கொள்ள முடிவு.

கதையில் குறையெனப்பட்டவை. பதிவர் பெனாத்தலாராக அறிமுகமான ராம்சுரேஷின் கிரியேட்டிவிடி பிரமிக்க வைக்கும் ஒன்று. சாதாரண சினிமாவிற்கும் விதவிதமாக ஃபிளாஷ் டிசைன் செய்து அசத்துபவர் முடிவை சற்று அவசரமாய் முடித்துவிட்டார் அல்லது சாதாரணமாய் முடித்துவிட்டார் என்று எண்ணச் செய்தது. அருமையாய் போய்க் கொண்டிருந்த கதையின் முடிவை இன்னும் யோசித்திருக்கலாமே என்ற ஏமாற்றம் வந்தது. ஆனால் அது சற்று நேரம்தான். அடுத்த பல்ப் பிக்சனில் என்னுடைய இந்தக் குறை தவிர்க்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இன்னொரு பிடிக்காதது இந்தக் கதையின் தலைப்பு -  ’பதறாதே.. படுக்காதே..’ ’ஙே’ புகழ் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவல் தலைப்புகள் சாயலில் மனதிற்கு பட்டது. கதையின் தலைப்பையாவது என்னைப் போன்ற இலக்கிய நேசிப்பாளர்களுக்கு பிடிப்பது போல வைத்திருக்கலாம்.  இன்னமும் இந்த மாதிரி தலைப்புகள் உலவுவதால்தான் விஜய் டிவியில் மக்கள் புத்தகங்கள் வாசிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்னமோ.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

(அடுத்து ராஜேஷ்குமாரின் ”தப்பு தப்பாய் ஒரு தப்பு” நாவலுக்கு விமர்சனம் எழுதினால் என்னவென்ற ஒரு எண்ணம் உண்டாகிறது. (கைவசம் பிடிஎஃப் உள்ளது). கிரைம் நாவல் புத்தகத்தில் வாசகர் கடிதமளவில் மடக்கிய அஞ்சு வரி எழுத்துக்குவியலாக இல்லாது  நீண்ட விமர்சனமெழுதி அனுப்பி வைக்கலாமென்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. அப்படியே படிப்படியாய் சுபா, பிகேபி மற்றும் இந்திரா சௌந்தரராஜனிலிருந்து ரமணிச்சந்திரன் கதைகள் வரை விமர்சனம் எழுதவும் முடியுமென்ற நம்பிக்கைக் கீற்று மனதில் ஒளியுண்டாக்கியுள்ளது.) 
கூடிய விரைவில் இணையத்தில் வாங்கும் லிங்க்கை ஏற்றுகிறேன்.

வேணும் ஆசீர்வாதம்!

Apr 13, 2012

நாஞ்சில் நாடன் - ஜெயமோகன் - துபாய்

பிரபலங்களைச் சந்திப்பது என்பது எனக்கு எப்போதுமே சங்கடத்தைத் தரக்கூடிய விஷயம். “நீங்க நல்லா எழுதறீங்க” என்பதா? இதை அவர்கள் பலநூறு முறை கேட்டிருக்கமாட்டார்களா? “ ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று பொய் சொல்வதா? “உங்கள் எழுத்துகள் நான் படித்ததில்லை. கொஞ்சம் படித்ததில் எதுவும் பிடிக்கவில்லை” என்று சண்டை மூடோடு செல்வதா? அதற்கும் ஒரு கன்விக்‌ஷன் வேண்டாமா? மையமாகப் பார்த்து “எப்படி இருக்கீங்க” என்று எந்தத்தாக்கத்தையும் உண்டாக்காமல் கைகுலுக்கிவிட்டு வருவதா? என்னது? நான் சாதா ஆசாமி போல நடந்துகொள்வதா?


ஆனால், ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வருகிறார்கள் என்று தெரிந்ததும், இந்தத் தயக்கங்கள் எதுவும் என் மனதில் இல்லை. ஜெயமோகனிடம் கூச்சமே இல்லாமல் சொல்லலாம் “நான் படித்தவரை உங்கள் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது என்று. நாஞ்சில் நாடனிடம் தாராளமாகச் சொல்லலாம் “ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று.

இரண்டு தினங்கள் இருவரையும் சந்தித்தேன். முதல் தினம் இயல்பான நண்பர்கள் சந்திப்பு, இரண்டாம் தினம் இலக்கியக் கூடல் - மேடை நிகழ்ச்சி.

இயல்பான சந்திப்பின்போது நாஞ்சில் நாடன் சுவாதீனமாக பேச ஆரம்பித்தார். நாவல்களில் ஆரம்பித்த பேச்சு வெகுவிரைவாக சலாட் செய்வது எப்படி என்று மாறி, புடலங்காய் சலாடைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தவர், கொஞ்ச நேரம் கழித்த பிறகு “ம்ம், ஓக்கே” என்பதற்கு மேல் அதிகம் பேச முடியவில்லை. ஏன், நிமிடத்துக்கு 300 வார்த்தை பினாத்தும் நானோ, சமயம் பார்த்து கவுண்டர் கொடுக்கும் குசும்பனோ கூட எதுவும் பேசமுடியவில்லை. ஜெயமோகன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். எந்த டாபிக் எடுத்தாலும் ஆழமாகப் பேசுகிறார். காட்டைப் பற்றிப் பேசினால் எது போன்ற மரங்களைத் தவிர்க்கவேண்டும், ஏன் இன்றைய ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் அதிக தொழில்காதலுடன் இருக்கின்றார்கள், தமிழ்நாட்டில் எங்கே காடுகள் இருக்கின்றன, எங்கே என்ன மிருகங்கள் பார்க்கலாம், எப்படி புக் செய்யலாம், எங்கே குழந்தைகளுடன் செல்லலாம்...

ஒரு தலைப்பில் இருந்து அடுத்த தலைப்புக்கு எப்போது செல்கிறார் என்பதைக் கொஞ்சம்கூட ஊகிக்க முடிவதில்லை. சந்திரசேகரேந்திர சரஸ்வதி காந்திக்குக் கூட்டிச் சென்றார், காந்தியில் இருந்து பாரதி.. பாரதி எப்போது வள்ளலார் ஆனார் என்பது இன்னும் எனக்கு விளங்கவே இல்லை.

மூன்று மணிநேரங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகைய ஆனால் இன்ஃபார்மல் பேச்சின் விஸ்தீரணத்தை இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன்,

அமீரகத் தமிழர் மன்றம் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே வித்தியாசமான நிகழ்ச்சியாக இலக்கியக் கூடல் அமைந்திருக்கும். சினிமாப் புகழ்கள் இல்லாமல் சம்பிரதாய குழந்தை நடனங்கள் மிமிக்ரிகள் இல்லாமல், நேரடியாக அறிமுகம், நாஞ்சில் நாடன் ஜெயமோகன் பேச்சு, கேள்வி நேரம் என்று ஜிகினாவே இல்லாத எளிய விழா.

நாஞ்சில் நாடன் பேசுகையில் சொற்கணக்கை வைத்து ஆரம்பித்தார். 1330 குரலில் குறள்களில், குறைந்த பட்சம் 4000 யுனிக் சொற்கள் உபயோகமாகி இருக்கும், கம்பராமாயணத்தில் 12500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான யுனிக் சொற்கள் பிரயோகிக்கப் பட்டிருக்கலாம். கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம் - ஆனால் எவ்வளவு பயன்படுகிறது? படைப்பாளி எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சொற்களின் மரணத்தைத் தள்ளிப் போடும்.. அநியாயச் சுருக்கம்தான் என்னுடைய வெர்ஷன்.. சுவாதீனமாக கம்பனையும் திருக்குறளையும் வாழ்க்கையையும் மேற்கோள் காட்டி தடங்கல் இன்றி மிக அருமையாக அமைந்த பேச்சு.

ஜெயமோகன் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார். மணிமேகலை சென்றடைந்த பளிங்கு மண்டபமும் கையில் இருந்த மாலையில் கண்ணீரும் பெண் நிலைமையை அன்றில் இருந்து ஏன், சிவனும் உமையும் ஆடிய ஆடு புலி ஆட்டத்தில் இருந்தே லா ச ராவின் ஆடு புலி ஆட்டம் வரை தொடர்கிறது என்றார். வண்ணதாசன் கதையும் இடையில் உவமைக்கு வந்தது.

மேடைப்பேச்சுகளைக் கேட்டால் பத்து நிமிடத்துக்கு மேல் அமராத எனக்கு, முழு நேரமும் ஒரே இடத்தில் அமர வைத்த பேச்சுகளுக்கும், பேச்சாளிகளுக்கும், அமீரகத் தமிழர் மன்றத்துக்கும் நன்றி..

Mar 13, 2012

+2 சாமியார்கள்

காலையில் ஏதோ ஒரு இடத்தில் +1  முடிவு பற்றிய ஒரு பதிவு பார்த்தேன். +1 முடிவுகள் வந்து +2 ஆரம்பிக்க உள்ள காலம் என்ன தெரியுமா? 2 நாட்கள். ஆண்டு விடுமுறை - 2 நாட்கள். என்னய்யா விளையாடுகிறீர்களா?

ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு இருந்துடு. டிவி பாக்காதே. விளையாட்டு பக்கம் போயிராதே. காலைலே மூணு மணிக்கு எழுந்திரு. பத்து வருஷக் கொஸ்டின் பேப்பரைத் திருப்பி திருப்பி எழுதி ப்ராக்டிஸ் பண்ணு. பதினோராவது கேள்வி எல்லாம் வராது. டெய்லி டெஸ்ட், வாரம் ஒரு முறை பரீட்சை, மாதம் ஒரு முறை மாடல் எக்ஸாம். ஐ ஐ டி கோச்சிங், மேத்ஸ் ட்யூஷன் ப்ளா ப்ளா என்று கர்ப்பஸ்திரீக்கு அறிவுரை போல ஒரு வருடத்தை (பல சமயங்களில் 2-3 வருடங்களிக் கூட) சாமியார் வாழ்க்கை வாழ வைக்கிறோம் மாணவர்களை.

ஒரு தலைமுறையையே நாசம் செய்து வைத்திருக்கிறோம். +2வில் வரும் மார்க்குகள்தான் வாழ்க்கை என்று ஒரு கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பேசும்போது என்ன பேசினாலும் நடைமுறையில் மார்க்குதான் தெய்வம். அதை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீருவோம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

யாரை இதற்குக் குறை சொல்வது? பெற்றோரையா? பள்ளியையா? கல்வி முறையையா?

மூன்றுமே இல்லை என்பதுதான் என் வாதம்.

பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வில் மூன்று மணி நேரத்தில் பதினாறு தாள்களில் என்ன எழுதுகிறானோ / ளோ அதுதான் முழு வாழ்க்கைக்கும் அஸ்திவாரம் என்று ஆன சமுதாயச் சூழல்தான் முக்கியக் காரணம். அந்தத் தேர்வின் மதிப்பெண்கள்தான் அவன் போகப் போகும் கல்லூரியைத் தீர்மானிக்கின்றது. அவன் / அவள் போகப்போகும் கல்லூரிதான் வேலையைத் தீர்மானிக்கப் போகிறது. வேலைதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது.. இந்த மாயச் சுழல்தான் அந்த மதிப்பெண்களுக்கு மரியாதையைக் கூட்டுகின்றது - இந்த விஷயத்தை சொல்லி வைத்தாற்போல எல்லாரும் கவனிக்கத் தவறுகின்றனர். 

அந்த மதிப்பெண்களுக்கு இருக்கும் அபரிமித மரியாதையே மார்க் எடுத்தே ஆகவேண்டும் - அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று பெற்றோர்களை இறங்க வைக்கிறது. இப்போது இருக்கும் தலைமுறையினர் - ஒன்று படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த தலைமுறை - அல்லது படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த மற்ற மத்திய வர்க்கத்தினரைப் பார்க்கும் தலைமுறை. பில் கேட்ஸ் காலேஜ் ட்ராப் அவுட் என்று ஃபேஸ்புக்கில் தினம் தினம் பார்த்தாலும் எல்லாரும் பில் கேட்ஸ் ஆவதில்லை என்ற உண்மை உரைப்பதால் படிப்பை மட்டுமே - அதுவும் உயர்கல்வியை மட்டுமே - குறிப்பாக எஞ்சினியரிங்கை மட்டுமே குறிவைத்து வாழ்க்கையை அமைக்க வைக்கிறது.
 
எஞ்சினியரிங்குக்கு தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் அமோக ஆதரவு ஆச்சரியம் அளிக்கிறது. எத்தனை காலேஜ்கள் - தமிழகத்துக்கு மட்டும் அல்லாது மொத்த இந்தியாவின் எஞ்சினியரிங் பட்டதாரிகளின் தேவையை தமிழ்நாடே தர இயலும் என்ற அளவுக்கு இங்கே காலேஜ்கள் இருக்கின்றனவாம். ஏன் இத்தனை? இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மற்ற அனைவருக்கும் வேலை இல்லாமல் போனால்தான் தமிழகத்து எஞ்சினியர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் - அப்படியென்றால் நிச்சயம் தமிழகத்து எஞ்சினியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல்தான் இருக்கப் போகிறார்கள். எந்தப் பாதிக்கு வேலை கிடைக்கும்? முக்கியக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு. யார் முக்கியக் கல்லூரிகளில் இடம் பிடிக்கப் போகிறார்கள்? நன்றாகப் படிக்கும் மாணவர்கள். நன்றாகப் படிப்பார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? +2 மதிப்பெண்களை வைத்து. ஆக, இந்த மதிப்பெண் மரியாதைக்கு இந்தச் சுழல் சூழல்தான் முக்கியக் காரணம்.

அப்படியென்ன எஞ்சினியரிங் மேல் மோகம்? டாக்டர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், எல்லாரும் ப்ரொஃபஷனல்கள் தானே? அந்தத் தொழில்களில் இல்லாத ஆசை ஏன் எஞ்சினியரிங் மேல் மட்டும்?

படிப்பு என்பதை கல்வி என்று சிந்தித்த காலம் மலையேறிப் போய், முதலீடு என்று சிந்திக்கிற காலம் வந்தே பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் இப்போது predominant ஆக இருக்கும் படிப்பால் மட்டுமே முன்னுக்கு வந்த தலைமுறை. முதலீடு என்று வந்தவுடன் ப்ரேக் - ஈவன் என்பதைப் பார்க்கவும் வேண்டும் அல்லவா? 

ஒரு மாணவன், 17 ஆம் வயதில் +2 முடித்தால் 21 ஆம் வயதில் எஞ்சினியர். அவன் முதல் வேலை படித்து முடிக்கும் முன்னரே கேம்பஸில் கிடைத்து விடுகிறது. (எலைட் மாணவர்களுக்கு). ஆனால் அவன் ஒரு டாக்டராக வேலை தொடங்க குறைந்தது 25 வயதாவது ஆக வேண்டும். பிறகும் எதேனும் ஒரு மருத்துவமனையின் அடி ஆழத்தில் ட்யூட்டி டாக்டராக ஆரம்பித்து கைராசி எனப் பெயர் வாங்கி சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நரைத்து விடுகிறது. வக்கீல்கள் பெயர் வாங்க இன்னுமே அதிகக் காலம் ஆகும். கேஸ் கிடைக்க வேண்டும். சீனியரிடம் இருந்து விடுபடவேண்டும்..ஆடிட்டர்கள் கதையோ அமோகம். சி ஏ பாஸ் செய்வதற்குள்ளேயே பாதி பேருக்கு நரைத்து விடுகிறது.

உடனடி காசு எஞ்சினியரிங்கில்தான். எனவே எஞ்சினியரிங். 

மார்க் வேண்டும். அதற்கு நல்ல பள்ளியாகப் பிடிக்க வேண்டும். நல்ல பள்ளி என்பது எது? ஆசிரியர்கள் அன்பாக நடந்துகொண்டு நல்லபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியா? அதற்கு என்ன அளவுகோள்?  போன முறை வரை அவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன? எத்தனை ஸ்டேட் ராங்க்.. இவைதானே?  

பள்ளிகளுக்கு யுனிக் செல்லிங் பாயிண்ட் அவர்கள் மாணவர்களிடம் இருந்து கறக்கும் மதிப்பெண்கள்தான் என்று ஆன பிறகு, ஒரு மாணவன் முடியவில்லை, படிக்கத் தெரியவில்லை என்று சொன்னால் அவர்களுடைய யூ எஸ் பிக்கு பாதிப்பு வராதா? அவர்கள் எப்படி அதை விடுவார்கள்? ஏதேனும் செய்து - அவனுக்கு அழுத்தம் கொடுத்து அல்லது பள்ளியில் இருந்தே விலக்கி அவர்களுடைய ஃபிகர்களுக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளத் தானே பாடுபடுவார்கள்? ஒரு மாணவன் தோற்றாலும் 100 சதம் இரட்டை இலக்கமாகி விடுகிறதே..

ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் மரியாதை பற்றி நிறைய பேசப்படுகிறது - குறிப்பாக சமீபத்தில் ஒரு பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட பிறகு. 'அந்தக் காலத்துல நாங்க எல்லாம்' ரேஞ்சில் கருத்துகளை உதிர்க்கும் அனைவரும் மறப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று அவர்கள் ஆசிரியர்கள் எத்தனை பேரை அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? ஒவ்வொரு மாணவனும், ஆறாம் வகுப்பில் இருந்து ஞாபகம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் - 12 ஆம் வகுப்பு வரை - 35- 40 ஆசிரியர்களைப் பார்க்கிறான். 40 வயதான அப்பாவிடம் அந்த 40 ஆசிரியர்களின் பெயரையும் கேட்டால் நினைவிருக்குமா?  அதே விகிதத்தில் இன்றும் நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இரண்டாவது கவனிக்க வேண்டிய விஷயம் -அவர்கள் படிப்பிற்காகக் கொடுத்த பணத்தை. பணத்தின் மதிப்பு டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதால் நேரடி மதிப்பைப் பார்க்காமல் இப்படிப் பார்க்கலாம் - அவர்கள் படித்தபோது பள்ளிகளின் ஃபீஸ் அவர்கள் அன்றைய குடும்ப வருமானத்தில் எவ்வளவு சதவீதம்?  இன்று எவ்வளவு? ஆராய்ச்சியே பண்ணத் தேவையில்லை. சதவீதமே மிக அதிகமாக ஆகியிருக்கிறது. அன்று பள்ளிக்குக் கொடுத்த சம்பளம் ஏறத்தாழ ஓசிதான். ஓசியிலே கற்பிக்கும்போது மரியாதை வரத்தான் செய்யும். இன்று வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதம் பள்ளிக்குப் போகும்போது எதிர்பார்ப்புகளும் அதிகம். அவர்கள் சும்மா சர்வீஸ் ப்ரொவைடர்கள்தானே என்ற எண்ணத்தில் மரியாதை குறையத்தான் செய்கிறது. அதை மாற்ற முடியாது. 

கல்விமுறையைப் பற்றிச் சொல்வதும் வீண். சமுதாயம் என்ன கேட்கிறதோ அதைத்தான் கல்விமுறை செய்கிறது. மெக்காலே கல்வித்திட்டத்தைத் திட்டுவது நம் எல்லாருக்கும் செல்லப் பொழுதுபோக்கு. 'யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சொல்லிக் கொடுங்கள்' வாதமாகப் பேசும்போது இனிமையாக ஒலிக்கிறதே, இதன் நடைமுறை சாத்தியக் கூற்றைப் பற்றி யோசித்திருப்போமா?  நாம் கல்வியை பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றிவைத்துவிட்டோம். விட்டில் பூச்சிகளைப் போல எல்லாரும் ஒரே இடத்தில் மொய்க்கும்போது பேகான் ஸ்ப்ரே அடிக்கத்தான் செய்வார்கள். எப்படி உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட படிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? நுழைவுத் தேர்வு போன்ற இரண்டாம் நிலை ஃபில்டர்களும் இல்லாத பட்சத்தில்?

எல்லாவித careerகளுக்கும் சம மதிப்பு இருந்தால்தான் இந்த மாயச் சுழலில் இருந்து விடுபட முடியும். அதற்கு என்ன செய்வது? விவாதிக்கலாமா?

Mar 2, 2012

அரவான்

வெயில் படத்துக்குதான் முதலில் இப்படி எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் போய் படம் நன்றாக இருந்ததில் ஆச்சரியத்துடன் மகிழ்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே இயக்குநர் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் எதிர்பார்ப்புகளே இல்லை என்று சொல்லமாட்டேன், எதிர்மறை எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ச வெங்கடேசனின் காவல் கோட்டத்துக்கு விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் - ஆயிரம் பக்கத்துக்கு எழுதியதால் இருக்கலாம். படித்த இரண்டு விமர்சனங்களும் இரண்டு துருவங்களில் நின்றன (எஸ் ரா, ஜெயமோகன்). கதை வரட்டு வரலாறாகத்தான் இருக்கும் என ஒரு பிம்பம் மனதில் ஏனோ விழுந்துவிட்டது. அந்தக் கதையின் ஒரு பகுதிதான் படமாக வருகிறது என்று கேள்விப்பட்டதும் இந்தப் படத்தைப் பற்றியும் அபிப்பிராயம் பெரிதாக வரவில்லை.


நாவல் எப்படியோ, இன்னும் தெரியவில்லை. படத்துக்கு கதை மிகவும் நேர்த்தியாக இருந்தது. களவே தொழிலான கிராமங்கள் பணக்கார வீடுகளைக் கொள்ளையடிக்க முயல, காவலே தொழிலான கிராமங்கள் அதே பணக்கார வீடுகளைக் காப்பாற்ற முயன்ற காட்டுமிராண்டித்தனங்கள் முற்றிலுமாக ஒழிந்திராத 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக் கதை. அரவான் என்றதும் முதலில் நமக்கு என்ன தோன்றுகிறது? அதுதான் கதை.





வேம்பூர் ஒரு களவு கிராமம். நான்கைந்து செட் திருடர்கள் போய்த் திருடிக் கொண்டுவரும் கேப்பையில்தான் ஊரே வயிறு கழுவுகிறது, ஒரு செட்டின் தலைவன் கொம்பூதி(பசுபதி) யின் தன் களவுத்திறனால் மயக்கி ரெக்ரூட் ஆகிறான் வரிப்புலி (ஆதி).ஊருக்கு அவமானம் ஏற்படும் நேரத்தில் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்ல வேண்டி வருகிறது. வரிப்புலி சாதா ஆசாமி அல்ல, இரண்டு கிராமங்களால் பலி போடத் தேடப்பட்டு வரும் அரவான் என்ற ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

இரண்டு தனித்தனிக் கதைகள் போல இருந்தன இரண்டு பாதிகளும். களவு இருட்டு கன்னம் வைத்தல் என்றே நகர்ந்த முதல் பாதி, சின்னான் (வரிப்புலி) ஏன் பலிகடா ஆனான் - ஏறத்தாழ துப்பறியும் கதை போல நகரும் இரண்டாம் பாதி.

விரிவான தகவல்களுடன் அடர்ந்த கதையை சோர்வடைய வைக்காமல் அலுக்காமல் கொண்டு சென்ற திரைக்கதை. பீரியட் படம் பார்க்கிறோம் என்ற எண்ணமே வராமல் இயல்பாக நம்மை அவர்கள் உலகத்தில் கொண்டு சென்ற வசனங்கள், காட்சி அமைப்புகள்.

எல்லா நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய வேலையைத் திறம்ப்டச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆதி - படம் முழுக்க ஒரு சுத்தமான காட்சி கிடையாது அவருக்கு. சேற்றில் குதித்து ஓடுவது கன்னம் வைத்து இறங்குவது அடிபட்டு ரத்தம் சிந்துவது.. இதேதான் படம் முழுக்க. எல்லாக் காட்சிகளிலுமே இயல்பான 18ஆம் நூற்றாண்டு இளைஞனாக வாழ்வது சுலபம் அல்ல. அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார். பசுபதியின் திறமையை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதிலும். ஓரிரு காட்சியில் வந்து போகும் பரத், அஞ்சலி உட்பட அனைத்து நடிகர்களுமே தங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

முதல் படமாமே இசையமைப்பாளார் கார்த்திக்குக்கு? ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு நன்றாகவே இருந்தது.

குறைகளே இல்லையா? இருந்தன. ஆனால் மிகைநாடி மிக்க கொளின் மறைந்து போய்விடும் குறைகள்தான். கிராஃபிக்ஸின் மிகக் குறைந்த தரம் இரண்டு காட்சிகளில் நம்மை காட்சியில் இருந்து விலக்கி விடுகிறது - இரண்டாம் பாதியில் தொய்வடைய வைக்கிறது பாடல்கள் போன்ற சில்லறைக் குறைகள்தான்.

சரி, நல்ல கதை. நல்ல திரைக்கதை, நடிப்பு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. இவ்வளவுதானே? இதற்கு ஏன் must see என்று கேப்ஷன் வைக்கிறேன்?

நம்முடைய இருண்ட பழங்காலத்தைப் பற்றிய ஒரு நேர்மையான பதிவு என்பதால். பீரியட் படம் என்றாலே செம்பு நகைகள் பளபளக்க செந்தமிழில் அரசர்கள் உணர்ச்சிவசப்படும் படங்களையே பார்த்த நமக்கு இது ஒரு ஆச்சரியப்படுத்தும் மாறுதல். அரசர் இல்லை, (பாளையத்துக் காரன் ஒரு ஆள் வந்தாலும் அரச மரியாதை எல்லாம் இல்லை) சாதாரண மக்கள் வாழ்க்கை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. கிராமங்களின் தொழில், அவர்களிடையே இருந்த போட்டி பொறாமை, ரத்த வெறி, காட்டுமிராண்டித் தனங்கள் எல்லாம் எந்த விதமான மழுப்பலும் இன்றி இயல்பாக படமாக்கப் பட்டிருக்கின்றன.

இறுதிக் காட்சி, அதற்குப் பின் போடப்படும் ஸ்லைடு - மிக வலுவான தாக்கத்தை உண்டுசெய்தது. மரண தண்டனை எதிர்ப்பை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது.

ஹேட்ரிக் அடித்திருக்கும் வசந்தபாலன் + டீமுக்கு வாழ்த்துகள்.

நிச்சயம் பாருங்கள்.



 

blogger templates | Make Money Online