வயது குறைவாயிற்றே என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். ஆனால், கால் நூற்றாண்டுக்கு முன்பே பிறந்த நான், சமீபத்தில் பிறந்த டோண்டுவுக்கு அறிவுரை சொல்வது தவறல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.
இன்னும் சொல்லப்போனால், இது டோண்டுவுக்கான அறிவுரை மட்டுமல்ல, பிரச்சினையில் சம்மந்தப்பட்ட, படாத அனைவருக்குமான திறந்த அறிவுரைகள். இந்த அறிவுரைகளைச் சொல்வதும் நானல்ல, நம் பாட்டி:-)
1.அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.
ஊருக்குச் சென்றிருந்ததால் ஒரு சிறு இடைவெளி விழுந்துவிட்டு, மேட்டர் இல்லாமல் தலையைச் சொறிந்துகொண்டிருந்த நேரத்தில் இந்த உப்புமாவுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.
Feb 6, 2007
டோண்டுவுக்கு சில அறிவுரைகள் (06 Feb 2007)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 29 பின்னூட்டங்கள்
வகை ஆத்திச்சூடி, உப்புமா, டோண்டு
Feb 5, 2006
பாண்டுச்சோழன் சரித்திரம் - 04 Feb 06
கதை கவிதை என அனைத்து இலக்கிய வடிவங்களையும் முயன்று பார்த்துவிட்ட பினாத்தல், சரித்திரத்தை மட்டும் விட்டுவிடத் தயாராக இல்லை.
பாண்டுச்சோழன்
முன்னொருகாலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியில் பாண்டுச்சோழன் என்னும் மகாராஜா ஆண்டுவந்தார். இவருக்கு வலைகொண்டான், பன்மொழிப்புலவர், அனுபவ வித்தகர் என்ற பல பெருமைகளும் உண்டு. களம் பல கண்டு வெற்றிகண்ட இவர், வலையூரிலும் தன் கொடியை நாட்டிட முனைந்தார்.
இதே காலத்தில் சோழர்களின் ஆட்சி முறை பற்றி பலரும் விமர்சித்து வந்திருந்தனர். அவ்வாறு விமர்சித்தவர்களுள் ஒருவர் கீர்த்திவாசன். நேசநாட்டுக்கவிஞர் ஒருவர் பல்வேறு கலைஞர்களைப் பற்றிப் பாடிய பாடலில் கீர்த்திவாசன் ஒரு குறை கண்டார். பல்வேறு கலைஞர்களைப் பற்றிய பாடலாயினும், அனைத்தும் சோழர்களைப் பற்றியதாகவே உள்ளதே என்றார்.
இவ்வமயம் ஆங்கே வருகை புரிந்த பாண்டுச்சோழன், சோழர்களைப் பற்றிக் கூறியதில் தவறொன்றுமில்லை என வாதிட்டார். அப்போது கீர்த்திவாசனும் வெகுண்டு, நீர் எப்படிப்பட்ட சோழன் என்றும் பாண்டுச்சோழனைக்கேட்கத் தலைப்பட்டார். சோழர்கள் என்று இல்லை, எந்த மன்னருமே தன் வம்சத்தைப் பற்றிப் பெருமை கொள்ளல் ஆகாது என்றும் வாதிட்டார்.
வெளிப்படைக்கல்வெட்டுக்கள்
இதனால் மனக்காயம் அடைந்த பாண்டுச்சோழன், தன் வெளிப்படையான எண்ணங்களை கல்வெட்டாகப் பதிந்துவைத்தார். சோழர் அல்லாதவர்களுக்கும் சோழர்களுக்கும் உள்ள பிரிவினை இவர் அதிகப்படுத்திவிட்டார் எனக்கூறுவோரும் உண்டு.
மன்னர்கள் மீதும், குறிப்பாகச் சோழர்கள் மீதும் கோபம் அடைந்திருந்த கீர்த்திவாசன், இக்கல்வெட்டுக்கு எதிராக போர் புரிந்தார்.
மாறுவேடச் சோழன்
இந்நிலையில், மாறுவேடச் சோழன் என்று ஒருவன் முளைத்தான். இச்சரித்திர ஆசிரியருக்கு மாறுவேடச் சோழனின் பூர்வாசிரமத்தைப் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இம்மாறுவேடச்சோழன், நட்பு நாட்டரசர்களிடம் சென்று சோழன் கூறியதாக இல்லாததையும் பொல்லாததையும் கூற, முதலில் அவர்களில் சிலரும் நம்பத் தலைப்பட்டனர். சோழன் கூறியதாக எண்ணி பல சிறு போர்களும் நடைபெற்றன.
முத்திரை மோதிரம்
இதனால் பாதிக்கப்பட்ட பாண்டுச்சோழன், முத்திரை மோதிரம் இல்லாதவர்களை அரசியல் பேச்சுவார்த்தைக்கு அனுமதியாதீர் என்று அனைத்து அரசர்களுக்கும் அறைகூவல் விடுத்தார். பெரும்பான்மையான அரசர்கள், பாண்டுவின் நேர்மையான கோரிக்கைக்கு செவி சாய்த்தனர்.
மாறுவேடச்சோழன் சளைத்தவன் இல்லை. இவனும் பல போலி முத்திரை மோதிரங்களை உருவாக்கி, தன் அவதூற்றுப் பிரசாரத்தை நடத்தத் துவங்கினான்.
பெரும்பான்மையான அரசர்களுக்கு, உண்மையான பாண்டுச்சோழனுக்கும், மாறுவேடச்சோழனுக்கும் வித்தியாசம் தெரிந்துவிட, மாறுவேடச் சோழன் செல்லும் இடத்தில் எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டனர்.
மாறுவேடச்சோழன் அவதூறு
இதனால் வெகுண்ட மாறுவேடச்சோழன், தன்னை அலட்சியப்படுத்தியவர்கள் பெயரிலும் அவதூற்றைத் துவங்கினான். சில அரசர்கள் மாறுவேடச்சோழனைக் கையும் களவுமாகப் பிடித்தனர் என்ற ஒரு வரலாறும் உலவுகிறது. சிலர் அவதூற்றினால் பாதிக்கப் பட்டு ஆட்சியைவிட்டு சிறிது காலத்துக்கு சன்யாசமும் கொண்டனர்.
புலிக்குட்டிச் சோதனை
பாண்டுச்சோழனும், மேலும் எச்சரிக்கை கொள்ளத் துவங்கினார். புலிக்குட்டிச் சோதனையை அறிமுகப்படுத்தினார். மாறுவேடச் சோழன் மீது புலிக்குட்டியை ஏவினால், அவன் மாறுவேடமா அல்லது மெய்யான சோழனா என்று தெரிந்துவிடும் என்பதே அந்தச் சோதனை. பாண்டு செல்லும் இடமெல்லாம் தன் புலிக்குட்டியுடனே செல்லத் துவங்கினார்.
இரண்டாம் கல்வெட்டூர்
அதுமட்டும் இன்றி வேறு மன்னர்களுடன் பேசும் வார்த்தைகளையெல்லாம் கல்வெட்டாக மாற்ற ஒரு தனி ஊரையும் துவங்கினார். இந்த ஊர் மற்ற ஊர்களின் எல்லையில் இருந்ததால், மற்ற நாட்டரசர்களின் முக்கியமான கல்வெட்டுக்களையும் இந்த இரண்டாம் கல்வெட்டூர் ,மறைத்தது என்று ஒரு குற்றச்சாட்டு உலவியது.
இதனிடையில் மாறுவேடச்சோழனின் ஆட்டம், புதிய மன்னர்களின் நாட்டில் அதிகமாகியது. புலிக்குட்டிச் சோதனை, இரண்டாம் கல்வெட்டூர் பற்றி அறியாத புதிய மன்னர்கள் சிலர், மாறுவேடச்சோழனின் சதியில் சிக்கி, பாண்டுச்சோழன் மீதும், மாறுவேடச்சோழனின் பிற எதிரிகள் மீதும் சந்தேகம் கொண்டனர். அது உடனேயே தெளிவாகிவிட்டது என்றாலும், பாண்டுச்சோழனுக்கு கோபம் அதிகமாகிவிட்டது.
எல்லைப் பாதுகாப்புப் படை
இதற்கிடையில், எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் பொதுவாக எல்லைப் பாதுகாப்புப் படை ஒன்று துவங்கப்பட்டது. இதன்படி, நாட்டிற்கு வரும் அனைத்து விருந்தினர்களும், எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு, கடவுச்சீட்டு, புலிக்குட்டிச் சோதனை செய்யப்பட்ட பிறகே அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும்படிச் செய்ய இயலும்.
எல்லைப் பாதுகாப்பை சில நாட்டரசர்கள் விரும்பி ஏற்றனர். மாறுவேடம் தரித்தவர்கள், வெள்ளையர் ஊடுறுவல் ஆகியவற்றைத் திறம்படத் தடுக்க இயலும் என்றாலும், வேறு சில நாட்டரசர்களுக்கு இம்முறை ஒத்துவரவில்லை. எல்லைப்பாதுகாப்பிற்காகச் செலவிடவேண்டிய செலவு, நேரம் ஆகியவை மட்டுமின்றி, வந்தாரை வாழவைக்கும் தம் நாட்டின் மரபும் குலைந்துவிடும் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
இந்நிலையில் கீர்த்திவாசன், பன்னாட்டுக் கூட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட, மாறுவேடச் சோழன் பன்னாட்டுக்கூட்டமைப்பின் தலைவர்கள் பெயரிலும் ஓலை கொண்டு சென்று அவதூறு செய்ய்த் துவங்கினான்
பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள்
பல்வேறு அழையா விருந்தாளிகளின் அவதூற்றுப் பிரசாரங்களினாலும், வெள்ளையர் ஊடுறுவலினால் முக்கியக்கல்வெட்டுக்கள் மறைந்ததாலும், மாறுவேடங்களின் குறிப்பிட்ட தாக்குதலினாலும், பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள் திருத்தப் பட்டன. எல்லைப் பாதுகாப்புப் படை செயல்படாத நாடுகளின் புதிய சீர்திருத்தங்கள் பன்னாட்டுக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப் படாது என முடிவெடுக்கப்பட்டது.
பன்னாட்டுக் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்த பாண்டுச்சோழன், இம்முடிவைத் தன் வெற்றியாகக் காட்ட முனைந்தார் என்று கூருவோரும் உண்டு. மற்ற நாட்டரசர்கள் பாண்டுவின் கேள்வி மழை பொழிந்தனர். முத்திரை மோதிரம், புலிக்குட்டிச் சோதனை, எல்லைப்பாதுகாப்புப் படை, இரண்டாம் கல்வெட்டூர் எனப் பல பாதுகாப்புகளும் செய்துகொண்டுவிட்ட பாண்டுச் சோழனை விட, மாறுவேடச் சோழனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நாட்டரசர்களே ஆவர். போரில் பங்கு கொள்ள முடியாத நிலையில் மாறுவேடச் சோழன் இருந்த நிலையிலும், தன் பல அறைகூவல்களினால் மாறுவேடச்சோழனைப் போருக்குத் தூண்டியதும் இவர்தான் என்றும் பலர் கூறியதாக வரலாறு.
போர் முடிவு
வரலாற்றின் எந்த ஆவணங்களிலும், பாண்டுச்சோழன் விடுத்த போர் யாது, அதில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல்கள் காணப்பெறவில்லை.
முடிவுரை
இந்த வரலாற்றைப் படித்தவர்கள், இதில் பினாத்தலுக்கு மேல் வேறு எந்த அர்த்தமும் கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 34 பின்னூட்டங்கள்
Jan 26, 2006
போலி எழுத்தாளருக்கு நன்றி (26 Jan 2005)
உலகின் முதல் voyeur-ஆல்தான் கதவு என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் முதல் திருடனால்தான் பூட்டும் சாவியும் கண்டுபிடிக்கப்பட்டன.
அடுத்தவர் அஞ்சலை எட்டிப்பார்த்து வம்புக்கு அலைபவர்களால்தான் அஞ்சலை மூடி சீலிடும் வழக்கம் ஆரம்பித்தது.
இவ்வளவு ஏன்? வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் எனக்குத் தெரியாமல் இருந்த எவ்வளவு விஷயங்கள் ஒரு தனி நபரின் பெர்வர்ஷன்கள் தெரிய வைத்திருக்கின்றன?
1. பிளாக்கர் வலைத்தளங்களில் பிளாக்கர் கணக்கு வைத்திருப்பவர் மட்டுமே பின்னூட்டம் இடுமாறு செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது, என் அறிவுக்கண்ணைத் திறந்தது இவரே.
2. வெள்ளைக்காரர்கள் நம் தமிழ்க்கவிதைகளைப் படித்துப் புல்லரித்து, தன்னிச்சையாக பின்னூட்டம் இடுவதை Word Verification செயல்படுத்தி நிறுத்த முடியும் என்பதும் இவர் ஆட்டத்துக்குப் பின்னால்தான் தெரிய வந்தது.
3. எழுதியவர் யார் என்று பார்க்காமல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கே அதிக கவனம் செலுத்த வேண்டிய - எல்லா விமர்சனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய உத்தமமான வழியை - இவர்தான் வலுக்கட்டாயமாக அனைவரையும் பின்பற்ற வைத்தார்.
4. ஐ பி, பொய் பி போன்ற கணினி சார்ந்த விஷயங்களில் என் சூன்ய ஞானத்தை அபிவிருத்தி செய்யக் கட்டாயப்படுத்தியவரும் இவரே.
5. பிளாக்கரில் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு இவர் செய்து வரும் பிரசாரம் மிகவும் வலுவானது. நேற்று வரை இதற்கு எதிராக இருந்த என்னையும் இதை உபயோகப்படுத்தும்படி செய்துவிட்டார்.
இப்படிப்பட்ட ஒரு "ஞானகுரு"வின் சில செயல்பாடுகள் மட்டும் எனக்குப் புரிவதில்லை.
1. ஜாதி இல்லை இல்லை என்றே "போராடினாலும்", குரிப்பிட்ட சிலரை மட்டுமே குறிவைத்துத் தாக்கி, வேரு ஜாதிகளை வெளிப்படையாகக் கூறுபவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது தன் துவேஷங்களை வெளிச்சமிடும் என்று உணராதது ஏன்?
2. தமிழ்மணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவு நீக்கப்பட்ட மறு நாளில் இருந்து தமிழ்மண நிர்வாகிகள் பெயரிலும் வந்து சேறு பூசும் செயல் தன்னைக்காட்டிக்கொடுத்துவ்டும் என்று இவர் அறிவுக்குப் புலப்படாதது ஏன்?
3. மட்டுறுத்தப்படும் பதிவுகளில் சும்மாவேனும் கூட தன் தூய தமிழ் பின்னூட்டங்களைப் போட்டு "போரட்டத்தை"த் தொடராதது ஏன்?
4. ஆரம்பத்தில் நான் பிளாக்கரை ஹேக் செய்வேன், ஈமெயிலில் உள்ளே புகுவேன் என்று ஆடிய ஆட்டம் எல்லம் இப்போது எங்கே போனது?
5. ஐ பி சேகரிக்கப்படும் வலைத்தளங்களில் இவர் நடமாட்டமே இல்லாதது ஏன்?
6. கே வி ஆர் விடுத்த Open Challenge-ஐக் எதிர்நோக்காமல் ஓடியது ஏன்?
இப்படிப்பல கேள்விகள்...
இன்று காலையில் விழித்த கொஞ்ச நேரத்தில், வேலைக்குக் கிளம்பும் முன் பின்னூட்டங்களைப்பார்க்கலாம் என்றால் முழித்ததே இந்த ஆபாசத்தில்! இதைப்பார்த்து பயப்படுவதும், நாமும் ஒரு போராட்டத்தைத் தொடங்குவதும் சேற்றில் கல்லடிப்பது போன்ற வீண் செயல்தான் என்றாலும் 30 - 40 பின்னூட்டங்களைப் பார்க்காமல் அழிக்க முடியாததால் காலை வேளை எரிச்சல் நாளையே கெடுத்துவிடுகிறது.
pervert, psycho, sadist போன்ற அத்தனை வார்த்தைகளும் இந்தக் கேடுகெட்ட ஜென்மத்தின் முன்னால் மென்மையான வார்த்தைகள் ஆகிவிடுகின்றன. இவர் யார் என்பது ஊரறிந்த ரகசியம். தண்டிக்கப்படப்போவதும் உறுதி என்றாலும், எப்போது, யாரால் தண்டிக்கப்படுவார் என்பது மட்டுமே தெரியாமல் இருக்கிறது.
பி கு:
Just in Case!!
என் பெயரில் வரும் எந்தப்பின்னூட்டமும் இதுவரையோ இனியுமோ
1. தனிநபர் தாக்குதலாக இருந்ததில்லை, இருக்காது.
2. ஜாதி, மத விஷயங்களில் நான் பட்டுக்கொன்டதும் கிடையாது, இனியும் அந்த எண்ணம் இல்லை
3. ஆபாசமான, உடல் உறவு சார்ந்த எந்த வார்த்தையயும் என் எந்தப்பதிவிலுமோ நான் இட்ட பின்னுட்டங்களிலுமோ பயன்படுத்தியது கிடையாது, பயன்படுத்தௌம் எண்ணமும் கிடையாது
4. என் பிளாக்கர் Profile என்:4928811 , என் ஒரே வலைத்தளம் பினாத்தல்கள். வேறு எண்ணோ, வலைத்தளமோ உருவாக்கும் திட்டம் இல்லை.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 4 பின்னூட்டங்கள்
Jul 12, 2005
தமிழ் சினிமா சஸ்பென்ஸ் திரைக்கதைகள் - ஒரு பார்வை:-)
மு கு: இந்தப் பதிவிற்கும், வலைப்பதிவுகளில் இன்று காலையில் இருந்து நடைபெற்றுவரும் பின்னூட்டப் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்தியன் - படத்தில் தாத்தா கொலை செய்கிறார் என்று பார்வையாளர்களுக்குத் தெரியும் - ஆனால் கதையில் வரும் போலீஸுக்குத் தெரியாது - முதல் பாதியில். பின்னால் போலீஸ் துப்பறிந்த பிறகு, தாத்தா வெளிப்படையாக டிவியில் ஒளியும் ஒலியும் காட்டி எல்லோருக்கும் தன்னை அறிவித்துக் கொள்வார்.
ஆளவந்தான் - படத்தில் நந்து எங்கே இருக்கிறான் என்று விஜய்க்குத் தெரியாது - முதல் பாதியில். பின்னால் விஜய் துப்பறிந்த பிறகு, நந்து வெளிப்படையாக நடு ரோட்டில் வெறி ஆட்டம் போடுவான்.
அந்நியன் - படத்தில், அம்பியும் அந்நியனும் வேறு ஆட்கள் என்பது போல முதல் பாதி காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பின்னால் இருவரும் ஒருவரே எனத்தெரிந்தவுடன் அடுத்தடுத்த நொடியிலேயே அம்பி அந்நியானக மாறுவான்.
இந்தத் திரைக்கதை அமைப்புகளில் இருந்து என்ன தெரிகிறது?
மக்களுக்குத் தெரியாமல் இருக்கும் வரை இரட்டை வேடம் போடுபவர்கள், தெரிய ஆரம்பித்த பிறகு தங்கள் வெறி ஆட்டத்தை அதிகப்படுத்துகிறார்கள்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 10 பின்னூட்டங்கள்
Jun 26, 2005
பிரச்சினை டோண்டுவுக்கு மட்டுமா?
டோண்டுவின் எதிரி - ஒரு ப்ரோஃபைல்:
1. தமிழ் தெரிந்தவர் - அற்புதமாக டோண்டுவின் நடையை காப்பி அடிக்கிறார்.
2. டோண்டுவின் அத்தனை பதிவுகளும் படித்தவர்
3. தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் படித்து contexual-ஆக பின்னுட்டம் இடும் புத்திசாலி
4. தொழில்நுட்பத்தில் வல்லவர், எத்தனை லாக் வைத்தாலும் உடைக்கக் கூடிய அறிவாளி
5. கொண்ட காரியத்தில் வெற்றி கொள்ள எதையும் செய்யும் துணிந்த மனம் படைத்தவர் - பெரும்பாலும் வெற்றியும் அடைந்துள்ளார்.
6. ஆரம்ப காலத்தில் அவரது பின்னூட்டங்கள் போலி எனத் தெளிவாகத் தெரிந்தாலும், தற்போது அவரது திறமையான ஆள்மாறாட்ட வேலைகள் சுலபமாக அடையாளம் காண முடியாத வண்ணம் உள்ளன.
இவ்வளவு திறமையும், அறிவும், தனித்தன்மையும் கொண்டவர், அவர் பெயரிலே வலையோ மீனோ தொடங்காமல், அடுத்தவர் மீது சேற்றை வாரி வீசும் போதுதான், இது ஒரு இழிபிறவி என்பது உறுதி ஆகிறது!
ஏன் இப்படி டோண்டுவைக் குறிவைத்துத் தாக்குகிறார் இந்த இழிபிறவி என்பதிலும் அவர் யார் என்பதற்கான க்ளூ ஒழிந்திருக்கக்கூடும்.
இது யாருக்கும் வரக்கூடிய (வரக்கூடாத) பிரச்சினை, இதற்கு தொழில்னுட்பம் தெரிந்த யாரேனும் உடைக்கமுடியாத தீர்வைக் காண வேன்டியது அவசியம், அவசரம்.
எப்படியாவது இந்தப் பிரச்சினையை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வந்தால் நல்லது. என்னாலும் டோண்டு படும் மன உளைச்சலைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 23 பின்னூட்டங்கள்
வகை டோண்டு
