Jun 27, 2005

புதுப்பொலிவுடன் உங்கள் அபிமான "பினாத்தல்கள்" - NEW LOOK

மக்களே!

புதுப்பொலிவுடன் உங்கள் அபிமான "பினாத்தல்கள்"

அன்னியன் விமர்சனம் ஆனாலும் பழி வாங்குது! நானும் விடறதா இல்லை. எனவே, கம்ப்யூட்டர் திரையில் மூன்றாவது முறையாக - அன்னியன் விமர்சனம் பை பினாத்தல்கள்!

என்னைப் பொறுத்தவரை அந்நியன் ரிலீஸ் தேதியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணிப்பு எவ்வளவு தூரம் உண்மையானது என்று பார்ப்பதற்காக.

என்ன கணித்தேன் என்று கேட்கிறீர்களா? பாடல்கள் வெளிவந்து அவற்றைக் கேட்டவுடனே எந்தப் பாடல் எத்தனையாவது ரீலில் இடம்பெறும் என்று ஊகித்தேன் - பெரும்பாலும் சரி (கண்ணும் கண்ணும் நோக்கியா-வும், குமாரியும் இடம் மாறி இருந்தன). மற்றபடி ரீல் கணக்கு மிகச் சரியாகவே இருந்தது.

கதையை எல்லாரும் கிழித்து பஞ்சு பஞ்சாக்கிவிட்டார்கள். எனவே நேரடியாக எனக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள்:

பிடித்தவை - நொடிக்கு நொடி குணம் மாறும் அந்நியன் , ரெமோ, அம்பி (விக்ரம்), காதலுக்கு ஆயிரம் ஐடியா சொல்லும் விவேக், அகூந்பதம்-க்கு 720 காம்பினேஷன் சொல்லும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பு, சண்டைக் காட்சி அமைப்பு (பீட்டர் ஹெயின்), ரண்டக்க பெயின்ட் திருவிழா (சாபு சிரில்), ஆம்ஸ்டெர்டாம் அழகை அள்ளிக்கொட்டிய காமெரா (மணிகன்டன், ரவிவர்மன்) மற்றும், லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் -பிரபல அஞ்சுபைசா வசனம் (தலைவர்)!!

பிடிக்காதவை - ஆயிரம் ஓட்டை லாஜிக் கொண்ட கதை, திரைக்கதை, அந்நியன் நல்லவனா கெட்டவனா என்று குழப்பும் பாத்திரப்படைப்பு, டெம்பிளேட் மாறாத ஷங்கரின் இயக்கம்.

இதற்கு நம் தமிழ்மணம் கூறும் நல்லுலக விமர்சனங்கள் சற்று அதிகப்படியாகவே எனக்குத் தோன்றியது.

தனது பழைய படங்கள் மூலம் தன்னைத் தெளிவாக அடையாளம் காட்டி இருப்பவர் ஷங்கர் - அவரிடம் பதேர் பாஞ்சாலியா எதிர்பார்க்க முடியும்? முனியான்டி விலாஸில் மோர்க்குழம்பா எதிர்பார்க்கமுடியும்?

அம்பி ஒரு ஐயங்காராக இருப்பது பார்ப்பனீயத்தின் குறியீடு என்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை - மென்மையான, ரூல்ஸ் பேசும் ஒரு வக்கீல் ஆவேசமாக மாறுகிறான் என்பதைக்காட்ட சமூகத்தால் மென்மையானவர்கள் எனப் பார்க்கப் படுகின்ற ஐயங்காரை எடுத்துக் கொண்டு கான்ட்ராஸ்ட் காட்ட முயற்சித்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால் இந்தியனில் இருந்த கதைத் தெளிவு இதில் நிச்சயமாக இல்லை. லஞ்ச ஊழலை ஒரு முன்னாள் சுதந்திரப் போராட்டத் தியாகி எதிர்க்கும்போது தெரியும் நியாயம், காரை நிறுத்தாதவனைக் கொல்லும் போது தெரிவதில்லை - என்னதான் அஞ்சு பைசா அலட்சியம் என்று நியாயப் படுத்த முயன்றாலும் கூட.

நேரு அரங்கக் காட்சி அபத்தத்தின் உச்சகட்டம்! இந்தக்காட்சியையும், தொடரும் "நாடே திருந்திவிட்டது" ரகக்காட்சிகளையும் இரக்கமே இல்லாமல் வெட்டி இருந்தால் "ஸ்பிளிட் பர்சனாலிடி" பற்றி ஒரு பிரமாண்டப் படம் பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும்.

என் பார்வையில் இது ஒரு சாதாரணத் திரைப்படம்தான், சிறந்த தொழில்நுட்பவியலாளர்களின் உதவியோடு, நல்ல தரத்தில் தரப்பட்ட ஒரு சாதாரண மசாலா. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

Jun 26, 2005

பிரச்சினை டோண்டுவுக்கு மட்டுமா?

டோண்டுவின் எதிரி - ஒரு ப்ரோஃபைல்:

1. தமிழ் தெரிந்தவர் - அற்புதமாக டோண்டுவின் நடையை காப்பி அடிக்கிறார்.

2. டோண்டுவின் அத்தனை பதிவுகளும் படித்தவர்

3. தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் படித்து contexual-ஆக பின்னுட்டம் இடும் புத்திசாலி

4. தொழில்நுட்பத்தில் வல்லவர், எத்தனை லாக் வைத்தாலும் உடைக்கக் கூடிய அறிவாளி

5. கொண்ட காரியத்தில் வெற்றி கொள்ள எதையும் செய்யும் துணிந்த மனம் படைத்தவர் - பெரும்பாலும் வெற்றியும் அடைந்துள்ளார்.

6. ஆரம்ப காலத்தில் அவரது பின்னூட்டங்கள் போலி எனத் தெளிவாகத் தெரிந்தாலும், தற்போது அவரது திறமையான ஆள்மாறாட்ட வேலைகள் சுலபமாக அடையாளம் காண முடியாத வண்ணம் உள்ளன.


இவ்வளவு திறமையும், அறிவும், தனித்தன்மையும் கொண்டவர், அவர் பெயரிலே வலையோ மீனோ தொடங்காமல், அடுத்தவர் மீது சேற்றை வாரி வீசும் போதுதான், இது ஒரு இழிபிறவி என்பது உறுதி ஆகிறது!


ஏன் இப்படி டோண்டுவைக் குறிவைத்துத் தாக்குகிறார் இந்த இழிபிறவி என்பதிலும் அவர் யார் என்பதற்கான க்ளூ ஒழிந்திருக்கக்கூடும்.

இது யாருக்கும் வரக்கூடிய (வரக்கூடாத) பிரச்சினை, இதற்கு தொழில்னுட்பம் தெரிந்த யாரேனும் உடைக்கமுடியாத தீர்வைக் காண வேன்டியது அவசியம், அவசரம்.

எப்படியாவது இந்தப் பிரச்சினையை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வந்தால் நல்லது. என்னாலும் டோண்டு படும் மன உளைச்சலைப் புரிந்து கொள்ள முடிகிறது.

Jun 16, 2005

பாவம் குங்குமம் ஆசிரியர்

குங்குமம் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்- ஐ குறை கூறி பலர் எழுதி விட்டார்கள். (நான் கூட ஒரு பதிவு இட்டிருக்கிறேன்).

ஆனால் குங்குமம் ஆசிரியராக இருந்து பாருங்கள், அதன் கஷ்டம் புரியும்.

1. அரசின் குறைகளைக் கூறலாம் - ஆனால் மாநில அரசின் குறைகள் மட்டும்தான் கூற முடியும்.

2. அடுத்த கட்சிகளைப்பற்றிக் குறை கூறலாம் - ஆனால் எந்த நேரத்தில் அந்தக்கட்சி நம் கூட்டணியில் சேருமோ என்று தெரியாது.எனவே அ.தி.மு.க தவிர வேறு எந்தக் கட்சியையும் விமர்சிக்க முடியாது.

3. நல்ல சிறுகதை நாவல் எழுதுகிறவர்கள் குங்குமத்துக்கு அனுப்புவதில்லை. அப்படியே தவறி அனுப்பினாலும் நம்மால் அடையாளம் காண இயலாது.

4. ஜெயமோகன் முதல் ஜெயகாந்தன் வரை - ஒன்று அவர்கள் நம்மைப் பகைத்துக் கொண்டுவிட்டார்கள் அல்லது நாம் அவர்களை!

5. விஜயகாந் முதல் சிம்பு வரை எந்த நடிகரும் நாளை கட்சி ஆரம்பிக்கலாம், நம்முடன் கூட்டு சேரலாம், எனவெ அவர்கள் படத்துக்கு காட்டமாக விமர்சனம் எழுத முடியாது. சன் TV ரைட்ஸ் பிரச்சினை வேறு.

இந்த நிலையில், சினிமக் கிசுகிசு மட்டும்தான் எழுத முடியும், அப்புரம் கொள்கை விளக்கக் கேள்வி பதில்..



இத்தனையும் மீறி நம்பர் ஒண் ஆக வேண்டுமானால் --




அன்னபூர்ணா ஆட்டாவே துணை!

Jun 15, 2005

பா ம க - என் பார்வை

மு.கு: இது என் முதல் அரசியல் பதிவு. என் அரசியல் அறிவு செய்திகளையும் பத்திரிக்கைகளையும் மட்டுமே பார்த்து வளர்ந்தது. சில பிழைகள் இருக்கலாம், சொன்னால் திருத்திக்கொள்கிறேன்.

பா.ம.கவின் அரசியல் செயல்பாடுகளின் நன்மை- தீமைகளை ஒவ்வொன்றாக என் அறிவுக்கு எட்டியவரை அலசுகிறேன்.

1. இட ஒதுக்கீடு போராட்டம் - மரங்கள் வெட்டி சாலை மறியல்

ஒடுக்கப்பட்டிருந்த, அதே நேரத்தில் வெளியே வராத ஒரு சமூகத்தின் குரல் முதல் முறையாக வெளிவந்தது, வன்னிய சமூகத்தின் பலம் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது, போராட்டத்தின் முடிவில் இட ஒதுக்கீட்டுக்கும் வழி செய்யப்பட்டது (கருத்து நன்றி: குழலி)

ஆனால் முடிவு வழிமுறைகளை நியாயப்படுத்தாது (சாலைகள் துண்டிக்கப் பட்டதால் அல்லலுக்கு ஆளான பல பொதுமக்களில் நானும் ஒருவன், ஒரு நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டேன்.) மேலும் ஜாதி அடிப்படை இட ஒதுக்கீடு கேட்க எல்லா ஜாதியினருக்கும் ஊக்கம் கொடுத்தது இந்த வெற்றி.

2. பா.ம.க வின் உள் கட்சி செயல்பாடுகள்.

ஆட்சியில் இருந்த கழகங்களின் முயற்சியினால் பல முறை கட்சி பிளக்கப்பட்டாலும், பெரிய பங்கு எப்போதும் மருத்துவர் கையிலேயே உள்ளது. அடிமட்டக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப் படாது. எனினும், பா.ம.க வும் ஒரு "ஓனர்ஷிப்" கட்சி ஆகும் அபாயம் இந்த பிளவுகளால் ஏற்பட்டது, இன்னும் அப்படியே தொடர்கிறது. - இதன் நீட்சியாகவே "நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவரோ பதவி ஏற்க மாட்டோம்" என்ற உறுதிமொழியை பகிரங்கமாக மீறியும், கட்சிக்குள்ளே சலசலப்போ எதிர்ப்புக் குரல்களோ தோன்றவில்லை.

3. அணி மாற்றங்கள்:

தேர்தலுக்கு ஒரு முறை பெரிய அண்ணனிடமும், உடன் பிறவா சகோதரியிடமும் மாறி மாறிக் கூட்டணி - எந்த அணி மத்தியில் பதவிக்கு வந்தாலும் மந்திரி பதவி - இதை ஒரு பெரிய குற்றமாகக் கூற முடியாத அரசியல் சூழல் நம்முடையது. இதில் இரு விஷயங்கள் கவனிக்கத் தக்கது -பா.ம.க ஒருபோதும் தேர்தலுக்குப் பின்னால் கூட்டணி மாறவில்லை, அணி மாற்றம் தவறு என்றால் அந்தத் தவற்றில் மு.க விற்கும், ஜெவிற்கும் கூட சம பங்கு உள்ளது.

4. பா.ம.க வும் ஊடகங்களும்

சினிமா பின்புலம் கிடையாது, தலைவர் "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்" பேசக்கூடியவர் அல்ல, சொந்தப் பத்திரிக்கையோ, தொலைக்காட்சியோ கிடையாது, ஜாதிக்கட்சி என்ற தீட்டு வேறு - இப்படிப்பட்ட ஒரு கட்சியை எப்படி நமது ஊடகங்கள் கொண்டாடும்?

பரபரப்பு என்ற மந்திரச் சொல்லுக்காக, எதிர்மறை நிகழ்வுகளையே பிரதானப்படுத்தி வருபவையே மக்களின் பேராதரவைப் பெறும் ஊடகமாக உள்ள நிலையில்,அவற்றைக் குறை சொல்லியும் பயனில்லை.

மற்ற கட்சிகளில் மாவட்டச் செயலாளர் மாற்றம் கூட பத்திரிக்கை செய்தி ஆகும் போது, பா ம கவின் முக்கிய கொள்கை விளக்கங்கள் கூட சீந்தப்படாமல் இருந்த காலமும் உண்டு.

வெறுத்துப் போன தலைமை எடுத்தது அடுத்த ஆயுதத்தை - சினிமா எதிர்ப்பு - குறிப்பாக ரஜினி எதிர்ப்பு.

எந்த மாதிரி நேரத்தில் பா ம க ரஜினி எதிர்ப்பை கைக்கொண்டது?

விகடனுக்கும் குமுதத்துக்கும் கவர் மேட்டர் கிடைக்காவிட்டால் "ரஜினி அரசியல் பிரவேசம் - ஒரு எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட்" என்று நிரப்பிக் கொண்டிருந்த காலத்தில். "பாபா" இமாலய வெற்றி பெறும் என்று கணித்துக் கொண்டிருந்த காலத்தில்.

மறுபடியும், அதீத வழிமுறைகள் - பாபாவை திரையிடக் கூடாது என மிரட்டல்கள் - படப்பெட்டி கடத்தல் - ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல், பொது மக்களுக்கும் வெறுப்பூட்டின.

பாபா ஊத்தி மூடியது, வாய்ஸ் பிசுபிசுத்தது என்பது போன்ற பிற்கால நிகழ்வுகளால் அந்த வழிமுறைகளை நியாயப் படுத்த முடியாது.

5. தற்போதைய தமிழ் பாதுகாப்பு:

ஊடங்களின், மக்களின் கவனத்தைப் பெற அடுத்த முயற்சி - சற்று புத்திசாலித்தனமான முயற்சி - ஏன் எனில், இதை யாரும் எதிர்த்துவிட முடியாது - தமிழ் எதிரி என முத்திரை குத்தப் படும் அபாயம்! மேலும், இம்முறை களத்தில் தனியாக இறங்காமல், தலித் அமைப்புகள், வெறு தமிழ் அமைப்புகளின் துணையோடு இறங்குகிறது பா ம க. திரைப்பட பெயர் பிரச்சினையில் முதலில் மிரட்டினாலும், பின் தணிந்து போனது அணுகுமுறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம்.

ஆனால், தார் பூசக் கிளம்பிய தொண்டர்கள் இந்த அணுகுமுறை மாற்றத்தை புரிந்து கொண்டார்களா இல்லை என் "அணுகுமுறை மாற்றம்" பற்றிய பார்வைதான் தவறா எனத் தெரியவில்லை.

மொத்தமாக பார்க்கப்போனால், பா ம க செய்த நன்மைகள் எல்லாம் அவர்கள் சமூகத்துக்குள்ளே அடங்கிவிட்டது - அவர்களில் வழிமுறைகளின் தீய பலன்கள் - எல்லப் பொதுமக்களுக்கும் சொந்தம் ஆகிவிட்டது!

பி.கு 1: தயவு செய்து யாரும் "நீ என்ன ஜாதி" என்று பின்னூட்டத்தில் கேட்காதீர்கள் - அது அனாவசியம்.

பி.கு 2: மற்ற தமிழகக் கட்சிகளைப்பற்றியும் முடிந்தால் அலசுவேன் - விரைவிலேயே.

Jun 13, 2005

துளசி மேடம் மன்னிக்கவும்!

அடுத்தவர் விவகாரங்களைக் கவனித்து வம்பு பேசுபவனுக்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டுமோ..

அடுத்தவர் ஈ-மெயிலை படிப்பவன் என்ன கதி அடைவானோ..

அடுத்தவர் கடிதங்களைப்படிப்பவன் என்ன நிலை காண்பானோ..

அந்தக் கதி எனக்கும் நேரட்டும் - ஏனெனில் நான் ஒரு பாவி.

துளசி மேடமுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இரண்டு திரைப்படங்களை நான் பார்த்துவிட்டேன்.

கற்க கசடற, 6'2"

படங்களைப்ப் பார்த்ததே தண்டனை எனினும், துளசி மேடம் உரிமை மீறல் பிரச்சினை எழுப்பாமல் இருக்க வேண்டும் என பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.

நான் ஒரு மஸாக்கிஸ்ட் - கையில் முள்ளும் மலரும் கேஸட் வைத்துக் கொண்டு இதை யெல்லாம் பார்க்கிறேன்!

Jun 11, 2005

நானும் கலந்துக்கிறேன் இந்த விளையாட்டுலே!

என்னை யாரும் கூப்பிடலேதான் - அதுக்காக அமைதியா இருந்துடறதா?

நாமும் போஸ்ட் போட்டு பல மாசம் ஆச்சு.

அருமையான கருத்துக்களம்- புத்தகம் பற்றி..

புடிச்சுக்கோங்கோ என் லிஸ்ட்-ஐ!

புத்தகப்பிரியர்கள் பலரின் பாதை ஒரே மாதிரியாக இருப்பதைப்பார்த்து வியக்கிறேன், நானும் பலரைப்போலே:

1. விகடன் ஜோக்ஸில் ஆர்ம்பித்து

2, இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக் என்று காமிக்ஸில் தொடர்ந்து,

3. தமிழ்வாணன் சங்கர்லால் எனத் தடம் புரண்டு,

4. சிவசங்கரி, அனுராதா ரமணன் என உணர்ச்சிப்பிழம்பாகி,

5. சுஜாதா என்ற மெயின் டெர்மினஸுக்கு வந்து, அவர் காட்டிய சிற்றிதழ், பேரிதழ், ஆங்கில எழுத்துக்கள் என கலந்து கட்டிய வாசிப்பு.

19 - 25 வயதில், ராஞ்சி (பிகார்) தனிமையில், 100 ருபாய்க்கு 5 கிலோ புத்தகங்கள் கிடைக்கும் செகண்ட்ஹான்ட் கடைகளுக்கு மத்தியில் வாழ்ந்தேன், புத்தகம் தவிர வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாததால், இந்த மாதிரி என்றில்லாமல் எல்லா வகையான புத்தகங்களையும் படித்து, வெறுத்து, மகிழ்ந்ததில், எனக்கென உள்ள டேஸ்ட்டை புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்குப்பிடித்த புத்தகங்கள் - எதைப்பற்றியது என்பதோ, யார் எழுத்தாளன் என்பதோ முக்கியமில்லை, சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் - அவ்வளவுதான்.

எனவேதான், என்னால் சீரியஸ் இலக்கியவாதியாகவோ, எழுத்தாளன் ஆகவோ முடியவில்லை (no regrets!)

ஏறத்தாழ ஒரு 400 ஆங்கிலபுத்தகங்களும், 300 தமிழ்ப்புத்தகங்களும் வாங்கிப் படித்திருந்தாலும் இப்போது ஒரு 50 - 100 புத்தகங்களே கையில் உள்ளன. (எல்லவற்றையும் எடை காரணமாக எடுத்து வர முடியவில்லை - வெட் கிரைண்டரும், மிக்ஸியும் வாழ்க்கைக்கு அதிக அத்தியாவசியமாக இருப்பதால்!)

இப்போது லிஸ்ட்:

பிடித்த 5 தமிழ் புத்தகங்கள்:

1. பொன்னியின் செல்வன் - கல்கி - காரணம் தேவை இல்லை - படித்த பெரும்பாலோரின் பிடித்த 5க்குள் அடங்கும் ஒரே புத்தகம்.

2. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - முக்கியமாக அரிசி, தனிமை கொண்டு ...

3. வஸந்தகாலக்குற்றங்கள் - சுஜாதா - நான்கைந்து கேஸ்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளூம் கமிஷனர் - இந்தக்கதையின் காட்சி அமைப்பு மிகவும் பிடிக்கும் - ஒரு நல்ல திரைக்கதை போல.

4. பட்டாம்பூச்சி - ஃபெலிக்ஸ் மிலானி - தமிழில் - ரா.கி.ரங்கராஜன் - மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ரா.கி.ர வின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடவே முடியாது.

5. வால்காவிலிருந்து கங்கை வரை - ராஹுல சாங்கிருத்தியாயன் - பல விஷயங்களைத் தெரிய வைத்த புத்தகம் - இப்போது அந்தக் கருக்துக்களோடு முழு உடன்பாடு இல்லாமல் போனாலும் கூட.

பிடித்த 5 ஆங்கிலப்புத்தகங்கள்:

1. Gone with the Wind - Margaret Mitchell - காதலும் போரும் இந்த அளவுக்கு அழகாக சொல்லப்பட்டதை வேறெங்கும் பார்த்ததில்லை.

2. Future Shock - Alvin Toffler - பயம், பிரமிப்பு, அட, எல்லா உணர்ச்சிகளையும் தூண்டிய non-fiction!

3. A Brief History of Time - Stephen Hawking - இந்தப் புத்தகத்தின் நடை எனக்கு இயல்பியல் பிடித்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

4. To kill a Mocking Bird - Lee Harper - குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட பெரியவர்களின் கதை

5. The Negotiator - Frederick Forsyth - சாகசக் காட்சிகள் நிறைந்த ஒரு மஸாலாக்கதை!

சமீபத்தில் படித்த புத்தகங்கள்:

1.-ச்ரீரங்கத்துக் கதைகள் - பாகம் 2 - சுஜாதா - மொழிப்போர், மாஞ்சு மனதைக் கவர்ந்தன.

2. The Sky is falling - Sydney Sheldon - டப்பாக் கதை - நேரம் வேஸ்ட்!

3. Detective - Arthur Hailey - திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் கதை!

4. மறுபடியும் - ஞாநி - அன்றாடப் பரபரப்பில் படிக்கும் செய்திகளையும் கருத்துக்களையும் கொஞ்ச நாள் கழித்துப் படித்தால் தமாஷாகக்கூட இருக்கிறது!

5. Third Wave - Alvin Toffler - சாதாரணமாக நாம் பார்க்கும் மாற்றங்களை அட்டகாசமாக Analyse செய்திருக்கிறார்.

வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்:

1. துப்பறியும் சாம்பு - தேவன்

2. ஜெயகாந்தனின் சிறுகதைகள்

3. ஒரு கிராமத்துப்பெண்ணின் தலைப்பிரசவம் - இரா. முருகன்

4. The Lost World - Michael Crichton

5. ஜேஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

படித்த பிறகு கருத்து சொல்கிறேன்.

Bye-bye!

 

blogger templates | Make Money Online