Jun 3, 2010

என்னோட நண்பனுக்கு எட்டு பொண்டாட்டி

எழுதுவதற்கு ஆசை வந்தவுடன் முதலில் புனைபெயரைத்தான் தேட ஆரம்பித்தேன். சுரேஷ், சுரேபா, ராமசுப்பு, சுரேஷ்ராமமூர்த்தி என்று மனதுக்குப் பிடிக்காத பலவிதமான பெயர்கள் முதல் பரிசீலனையைத் தாண்டவில்லை. பதிவு எழுத ஆரம்பித்தபோதுகூட பதிவுக்குதான் பினாத்தல்கள் என்று பெயர் வைத்திருந்தேனே ஒழிய என் பெயர் சுரேஷ் என்றுதான் இருந்தது. பிறகு பல சுரேஷ்கள் குவிய ஆரம்பித்த பிறகுதான் பினாத்தல் சுரேஷ் என்று ப்ளாக்கர் ஹாண்டிலை மாற்றினேன். இந்தப் பெயர் கிண்டல் எழுத்துக்கு ஓக்கே, உருப்படியா எழுதினா? என்ற எண்ணத்தை, முதல்ல உருப்படியா எழுது, அப்புறம் புனைபெயர், பூனைபெயர் எல்லாம் பாத்துக்கலாம் என்று ஒத்திவைத்தேன்.


அந்த உருப்படியா எழுதுவது மட்டும் விலகிக்கொண்டே போனது. அவ்வப்போது ஒன்றிரண்டு தப்பிப்போனாலும்.

யாருடைய மூளைக்குழந்தையோ, இன்னும் எனக்குத் தெரியவில்லை, ஐம்பெருங்காப்பியங்களை எளிய நாவல்களாக்க உத்தேசம், உன்னால் முடியுமா என்று கேட்டபோது “என்னை வச்சு காமடி கீமடி பண்ணலியே” என்றுதான் கேட்கத் தோன்றியது. ஆனால் பயம் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குதானே வரும்? எனக்குதான் அந்தச் சுமையே கிடையாதே.

குருட்டுத் தைரியத்தில் ஒப்புக்கொண்டு சீவகசிந்தாமணியைப் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள்களில் ஆர்வம் என்று சொல்லிக்கொள்ள முடியாது, இருந்தாலும், நாமளும் இதையெல்லாம் படிக்கணும்டா என்பது மாதிரி ஆர்வம் எப்போதாவது வந்து போகும்.

நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான்

என்பதுபோல சந்தத்தோடு, கொஞ்சம் கஷ்டப்பட்டால் புரிந்துவிடக்கூடிய பாடல்கள் சில இருந்தாலும், பல பாடல்களில் இருக்கும் சொற்கள் பிரித்தாலும் புரியாமல், சேர்த்தாலும் புரியாமல் இலக்கியத்தரமாக இருந்தது. (இப்போ புரியுதா இலக்கியத்தரம்னா இன்னான்னு?)

சரி, உரையை எடுத்துப் படிக்கலாம் என்றால் பலநேரங்களில் செய்யுளே புரிந்துவிடுகிறது, உரை புரியவில்லை. வந்தான் என்று சொல்வதற்கு வந்தனன், நின்றனன், சென்றனன் னு உரையாசிரியர் வேற இலக்கியத்தரம் வளர்க்கிறார்.

எனக்கு வேலை சொன்ன பாராவை சாட்டில் பிடித்தேன்.

“படிக்கறதுக்கே கஷ்டமா இருக்கே, எதாவது படிக்கச் சுலபமான மொழியிலே உரை இருக்கா, கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்”

“அதானேய்யா உனக்குக் கொடுத்த வேலை! படிக்க சுலபமா உரை இருந்தா அதை ரெகமண்ட் பண்ணிட்டு போயிரமாட்டோமா?”

இப்போதுதான் புரிந்தது அந்த ஐடியாவின் அருமை. தமிழ் மீடியத்தில் படித்து, யாப்பு இலக்கணத்தில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு வெண்பா வெண்பாம் என்றெல்லாம் மற்றவர்களை இம்சிக்கும் எனக்கே புரிவதில் இவ்வளவு கஷ்டம் இருந்தால், தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்திருக்கும் ஆர்வத்தை மட்டுமே கொண்ட தலைமுறைக்கு எப்படி இருக்கும்?

விளையாட்டாக ஆரம்பித்ததைக் கொஞ்சம் தீவிரமாக்கினேன். சீவகன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்தான். “வா சுரேஷ், சும்மா மொக்கைப்பதிவே போட்டுகிட்டிருக்காம என்கிட்டே வா.. என் கதை என்ன தெரியுமா? நான் ஏன் எட்டு கல்யாணம் செஞ்சேன் தெரியுமா? எத்தனை திருப்பம் தெரியுமா என் வாழ்க்கையில்?”

சீவக சிந்தாமணி - தமிழ் அறிஞர்களுக்காக எழுதப்படவில்லை. நமக்காக. நான் எப்படி ஒரு நாவல் இருந்தால் படிப்பேனோ, அப்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். “நூலையும் உவமைகூற இயலாத மெல்லிய இடை ஒடிய விம்மி அடி பருத்த “ என்றெல்லாம் இருக்கும் அட்ஜெக்டிவ்களை கழட்டிவிட்டு நேரடியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முயற்சி. செய்யுளுக்குச் செய்யுள் அர்த்தம் சொல்லும் உரை அல்ல. “வா சீவகா, உட்கார்” என்று நெருங்க வைக்கும் முயற்சி. தேமா புளிமா கூவிளங்காய் தெரிந்து புணர்ச்சி இலக்கணம் தெரிந்த பண்டிதர்களுக்காக அல்ல - ”தமிழில் எதோ காப்பியம் எல்லாம் இருப்பதாகச் சொல்றாங்க, என்ன மேட்டர்னு புரியலை” என்பவர்களுக்காக.

தீக்குச்சி விழுந்து தெரிக்குதடி -கருந்தேக்குமரக் காடு வெடிக்குதடி” என்று எளிமையாக அக்கினிக்குஞ்சு பாட்டை ரீமேக் செய்திருக்கிறாரே வைரமுத்து, அதைப்போல ஒரு முயற்சி.

எழுதி முடித்தபின் புனைபெயர் இப்போது தேடலாம் என்ற எண்ணம் வந்தது.

ராம்சுரேஷ் என்ற பெயரில் இதோ, என் முதல் புத்தகம். உங்கள் ஆதரவை எதிர்பார்த்து:




இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கு படத்தின் மேல் க்ளிக்கவும். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

 

blogger templates | Make Money Online