Feb 22, 2006

அனுபவச்சிதறலும் அடங்குடா மவனேயும் (22Feb06)

மேற்படி இரண்டு கேரக்டர்களையும் நீங்கள் பினாத்தல்களின் டேக் லைனில் சந்தித்திருக்கலாம். இவர்கள் இருவரும் தரும் தொல்லையால் பாதிக்கப்படுவது சுரேஷ்தான். ஒரு சாம்ப்பிள் பாருங்கள்:

அடங்குடா மவனே: உன்னையெல்லாம் எழுதச்சொல்லி யார் அழுதாங்க? ஏன் நீயும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே?

அனுபவச்சிதறல்கள்: என்னுடைய தீராத இலக்கிய தாகம், இந்த சமுதாயத்துக்கு என் கருத்துக்களைக் கூறியே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் என்னைத் தள்ளுகிறது. என் எண்ணங்களை எழுத்துக்களாக பதிவு செய்வது என் தார்மீகக் கடமை ஆகிறது..

அ.ம : டேய்.. அடங்க மாட்டே நீ? நான் ஒருத்தன் பக்கத்துலே இருக்கும்போதே இந்த ஆட்டம் ஆடறே. உன்னைத் தனியா விட்டா.. அவ்வளோதான்!

அ.சி: என் வலைப்பதிவை இதுவரை 30000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டிருக்கிறார்கள் தெரியுமா?

அ.ம: என்னது? 30000மா? எதோ படத்துலே "நான் வெட்டினாலும் அறுவா வெட்டும்" நு விஜய் சொன்னா மாதிரி நீயே பாத்துகிட்டாலும் ஹிட் கவுண்ட்டர் ஏறும். உண்மையச் சொல்லு - அதுலே குறைஞ்சது 10000 மாவது நீயே பாத்ததா இருக்காது?

அ.சி: "ஒரு எழுத்தாளர் விடை பெறுகிறார்"- என்று நான் எழுதியபோது எத்தனை பேர் நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்பினார்கள் தெரியுமல்லவா?

அ.ம: அதிலே எத்தனை பேர் இப்போ தன் தலைய அடிச்சுகிட்டிருக்காங்க தெரியுமா?

அ.சி: எழுத ஆரம்பித்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே தமிழ்மணம் நட்சத்திரம் ஆக்கப்பட்டேனே மறந்துவிட்டதா?

அ.ம: நானே இந்தப்பேச்சை எடுக்கணும்னு இருந்தேன்.. அது என்னடா நட்சத்திர வாரம்? 5 கமெண்ட்டு, 10 கமெண்ட்டு - இப்போ எல்லாம் பாரு, எல்லரும் 50, 100ன்னு பின்னறாங்க!

அ.சி: பின்னுட்டத்தின் எண்ணிக்கையை வைத்து பதிவை எடை போட முடியாது.

அ.ம: ஆமாண்டா, கமெண்ட்ட வச்சு சொல்லக்கூடாது, ஹிட்டை வச்சு சொல்லக்கூடாதுன்னா எதை வைச்சுத்தாண்டா சொல்லறது?

அ.சி: எத்தனை பேர் பினாத்தல் என்ற பெயர் இப்பதிவுக்குப் பொருந்தாது என்று அதை மாற்றச்சொல்லி இருக்கிறார்கள்?

அ.ம: ஒரு மூணு பேர் இருக்குமா? நூறு பேர்லே ஒரு மூணு நாலு பேர்..

அ.சி: கவிதையிலே முதலாவதாய் வந்தேனே?

அ.ம: அந்தப்பேரை கவிதைகளைக் கிண்டல் அடிச்சு கெடுத்துகிட்டயே?

அ.சி: சிறுகதையிலும் முதலாவதாய் வந்தேனே?

அ.ம: அதைத்தவிர வேற எந்தக்கதையாவது உருப்படியா, நாலு பேர் படிக்கற மாதிரி எழுதி இருக்கியா?

அ.சி: நான் போட்ட பிளாஷ் நகைச்சுவை யெல்லாம் எவ்வளவு வரவேற்பு பெற்றது.. பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்?

அ.ம: பிளாஷ் உனக்கே சரியாத் தெரியாது.. தெரிஞ்சவங்க - நாராயணன், ஹல்வாசிட்டி விஜய் மாதிரி ஆளுங்க எல்லாம் ரெகுலரா பிளாஷ் போட ஆரம்பிச்சா அப்ப தெரியும் உன் பவிஷு.

அ.சி: அவள் விகடன்லே என் பதிவு வந்ததையுமா மறைக்கத் துடிக்கிறாய்?

அ.ம: தினமலர்லே எல்லார் பேரும் வந்துடிச்சி - உன் பேர் இன்னும் வரலையே அதுக்கு என்ன சொல்லறே?

அ.சி: இந்தப்பதிவு என் நூறாவது பதிவு.

அ.ம: ஆமா, ஏறத்தாழ ஒண்ணரை வருஷத்துலே நூறு பதிவு.. எத்தனையோ பேர் ஒனுன்ரெண்டு மாசத்துலே நூறு போடறாங்க தெரியுமா?

அ.சி: எண்ணிக்கையை வைத்துத் தரத்தை அறிய முடியாது.

அ.ம: இதுதாண்டா லிமிட்! குவான்டிடி கம்மியா இருந்துட்டா, குவாலிட்டி அதிகம்னு ஆடுவியோ? அப்போ கம்மியா எழுதறவனெல்லாம் ஹை குவாலிட்டி, நெறய எழுதறவனெல்லாம் லோ குவாலிட்டின்றயா? உனக்கு கொழுப்பு கொறயவே இல்லடா! நீ அடங்க மாட்டே? ஓடுறா!

இப்படியாக, இன்றைய சண்டையிலும் அடங்குடா மவனே கட்சிதான் வெற்றி பெற்றது.

Feb 21, 2006

அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள் (21Feb06)

காலச் சுழற்சியில், பதிவுகள் மேல் பதிவுகள் வந்து இந்தக்கவிதையைச் சாப்பிட்டுவிட்டன.

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க (ஒருத்தர் கேட்டாலும் இப்படித்தானுங்களே சொல்லணும்?) தனியாக மறுபதிப்புச் செய்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு நல்ல புத்தகம் கைக்குக் கிடைத்திருக்கிறது.

யூஜீன் பெட்ரோவா - அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள் (பிரபலமான புத்தகம்தான் என்றாலும், இதுவரை தமிழில் இதைப்பற்றிப் பார்த்ததில்லை)

பிரச்சினை பூமி என்றே நான் அறிந்த செசன்யாவிலிருந்து ஒரு தென்றல், யூஜீன் பெட்ரோவா என்னும் கவிதாயினி. (எரிக்கா யாங்குக்கு செசன்யாவின் இணை என்கிறது முன்னுரை). முக்கியமான பாடுபொருள் காதலும் இயற்கையுமே என்றாலும் ஜார் ஆண்ட சோவியத்தில், புரட்சியின் ஆரம்பம் தென்படத்தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அதன் தாக்கங்களும் விரவி இருக்கின்றன.

முடியும்போது இக்கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து இடுகிறேன். இப்போதைக்கு, தலைப்புக்கவிதையைத் தமிழில்:

அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள்

ஆண்டுக்கான சூரியன் அஸ்தமித்த நேரத்தில்
ஆலிவ் பூக்கள் உதிரத்தொடங்கின.
மாஸ்கோவின் தோழர்போல் செஞ்சட்டை அணிந்த ஆலிவ்.
மரத்திலேயே இருந்திருக்கலாமோ என
மனம் அலைபாய்கிற பூக்களும் உண்டு.
பனித்தரையில் பகுக்க முடியா
வெள்ளை நிறப்பூக்கள்
பச்சோந்திகளோ?
எனக்கெனவும் ஒரு பூ இருக்கிறது.
அது என் மரண மலர் வளையத்தில்
மையமாய் இருக்கலாம் -
அல்லது
நந்தவனத்தின் அத்தனை மலர்களையும்
கொய்து அவன் தரப்போகும் பூங்கொத்தின்
பகுதியாயும் இருக்கலாம்.
எப்படியும்
எனக்கான மலர் எனக்குத்தெரியும்.

நன்றாக இருந்தால் சொல்லுங்கள், மொத்த புத்தகத்தையும் மொழிபெயர்த்துவிடுகிறேன். மேலும் இக்கவிதை பற்றிய சில பின்னணித்தகவல்களையும் கூறவேண்டி இருக்கிறது.

Feb 20, 2006

நடுநிலைமை - சாத்தியமா? (20 Feb 06)

மு கு 1: கடந்த சில நாட்களாக என் பதிவுகளில் இருக்கும் ஏமாற்று வேலை எதுவும் இப்பதிவில் இல்லை. அப்படி ஏதேனும் எதிர்பார்த்தால் மட்டுமே ஏமாந்து போவீர்கள்.

மு கு 2: தமிழ்மணத்தில் வகைப்படுத்தும் வசதி இப்போது எனக்கில்லை. எனவே, முதலில் வகைப்படுத்தும் புண்ணியவான் இதை "விவாத மேடை" என வகைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

"கமலை ரசிக்கிறார்களா அல்லது படத்தை ரசிக்கிறார்களா என்ற குழப்பம் எனக்கு எப்போதும் உண்டு." என்கிறார் முத்து (தமிழினி). இந்த வரிகள் என் சிந்தனையில் ரொம்ப நாளாகவே இருந்துவந்த குழப்பத்தை இன்னும் தூண்டிவிட்டது.

இந்தக்கேள்வியை நான் பார்க்கும் விதம் - கலைவடிவத்தை விமர்சிக்கிறோமா அல்லது கொடுத்தவரை விமர்சிக்கிறோமா? (இந்த வார்த்தைகள் இந்தக்கட்டுரையில் அடிக்கடி வரப்போவதால், ஒரு சுருக்கமான வரைவு -

கலை என நான் குறிப்பிடுவது திரைப்படம், கதை, கட்டுரை, அரசியல் நிகழ்வு எல்லாவற்றுக்கும் பொருந்தும்

பிம்பம் என்பது அக்கலையை நிகழ்த்தியவர் - திரை நடிகர், கதாசிரியர், இயக்குநர், கட்டுரையாசிரியர், அரசியல்வாதி எல்லாரையும் குறிக்கும்)

நேர்மையான விமரிசனம்  என்பது எதையும் விமர்சிக்காமல் இருப்பதோ அல்லது எல்லாவற்றையும் கிழித்துத் தோரணம் கட்டுவதோ இல்லை. ஆனால் கலையை விட்டு, பிம்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது முதலில் அடிவாங்குவது நடுநிலைமைதான்.

நான் ஒரு நேர்மையான பார்வையாளன் என்று சொல்லிக்கொள்வதற்கு முன் இந்த Biasஸை விட்டு விலகி வருவது அவசியம். அது நிச்சயமாக சுலபமான ஒன்றல்ல. நம் பிறப்பு, வளர்ப்பு, பார்த்த நிகழ்வுகள், பாதித்த  சம்பவங்கள் (ஏன், ஜாதியும் மதமும் கூட) அனைத்தும் சில பிம்பங்களின் மீது அதீத வெறுப்போ அல்லது அதீதக்காதலோ வரவைத்து விடுகின்றன.

இதற்கு ஒரு சரியான உதாரணம் "சோ"வின் நடுநிலைமை". (இது ஹிட்லரின் ஜீவகாருண்யம் போல Mutually Exclusive-ஆன பதம் என்பது என் கருத்து:-)) கருணாநிதியைப்பற்றி நினைக்கும் பொழுது திமுகவால் அவர் தாக்கப்பட்ட நிகழ்வுகளை விடுத்து யோசிக்க முடியாது, பாஜகவை நினைக்கும்போது அவரின் ராஜ்ய சபா எம்பி பதவியை மறக்கவும் முடியாது.. எனவே ஜெயலலிதாவை விமர்சிக்கும்போதெல்லாம் கருணாநிதியைத் தொட்டுக்கொள்ளாமல் விமர்சிக்க முடிவதில்லை, பாஜகவைத் திட்ட வேண்டி வந்தால் "காங்கிரஸ் போலவே ஆகி வருகிறது" என்ற வார்த்தையைத் தவிர்க்க முடிவதில்லை!

நடுநிலைக்கு அவசியமான ஒன்று இந்தப் பிம்பங்கள் உடைதல். பிம்பங்களை மீறி கலையைப் பார்க்கும்போது மட்டுமே நடுநிலை என்பது சாத்தியம்.

நான் நடுநிலை வாதியா எனக்கேட்டால், என் விருப்பத்தையும் மீறி இல்லை என்றே உண்மை சொல்வேன்.

சிறு வயதில், கமல் / ரஜினி என்ற பைனரி ரசிகக்கூட்டத்தின் ஊடே, என் தனித்தன்மையை நிரூபிக்க "சத்யராஜ்" ரசிகன் என்ற மூன்றாம் நிலை எடுத்தேன். அன்று என்னைக்கவர்ந்த அதே தகட்டை (தகடு தகடு) இன்றும் வியாபாரம் செய்து வருவதால் சத்யராஜால்  நீண்ட நாள் என்னைத் தன் ரசிகராக தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. அப்போதைய நான் சத்தியராஜின் படத்தை விமர்சித்திருந்தால் அது நடுநிலையாக இருந்திருக்குமா?

சிந்துபைரவி வந்த காலகட்டத்தில், உலகின் ஒரே சிறந்த இயக்குநர் என்று பாலச்சந்தரை நினைத்திருந்தேன். பின்னர் அவருடைய நாடகபாணியும், "ப்சு, த்சு" என்று மேனரிஸம் காட்டும் கேனத்தனமாக செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள், மகளிரை அழவைக்க சாகவைக்கப்படும், கஷ்டப்படவைக்கப்படும் காட்சி அமைப்புகளைப்பார்த்து வெறுப்பு வந்தது.. இரு நிலைகளிலுமே, என் விமரிசனம் நடுநிலைமையாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பாலகுமாரன் போல எழுதுவதற்கு ஆளே இல்லை என நினைத்த காலத்திலும், அடுத்து வந்த "என்னத்தையோ எழுதித்தள்ளறான்யா" என நினைத்த காலத்திலும் பாலகுமாரனைப்பற்றி நடுநிலையாக விமரிசித்திருக்க முடியுமா?
 
வட இந்தியாவுக்குச்சென்று இந்தி தெரியாமல் கஷ்டப்பட்ட நாட்களில் இந்திக் கல்வியை எதிர்த்தவர்கள் மீது வெறுப்பு வந்தது. சிங்கப்பூரில் ரயிலில் தமிழ் கேட்டதும் "தமிழ் ஏன் இந்திக்குப் பணிய வேண்டும்" என்ற எண்ணமும் வந்தது. இரு நேரங்களிலுமே, ஒரு பக்கச்சார்போடுதான் சிந்தித்திருக்கிறேன்.

அதே நேரத்தில், பிம்பங்கள் இல்லாத நேரத்தில், பக்கச்சார்புகள் இல்லாமல் சிந்திக்கவும் அதீதக்கோபமோ, அதீதப்பாசமோ இல்லாமல் விமர்சிக்க முடிகிறது.

கமல் மேல் பெரிய ஈர்ப்பு இல்லாததால், மும்பை எக்ஸ்பிரஸ்ஸும் ஒரு படமா? என்று திட்டவும், விருமாண்டி அருமையான படம் எனப்போற்றவும் முடிகிறது.

ரஜினி மீது வெறுப்பு இல்லாததால், பாட்ஷா படத்தை பத்து முறை பார்க்கவும், சந்திரமுகி- அதிர்ச்சி வெற்றி எனப்பதிவு போடவும் முடிகிறது.

எந்த அரசியல்வாதியினாலும் தனிப்பட்ட ஆதாயமோ, பாதிப்போ அடையாததால், பிம்பங்கள் ஏதும் இன்றி, நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்துக்களை அமைத்துக்கொள்ள முடிகிறது.

சில பிம்பங்கள் விழுந்துவிட்டன, சில பக்கச்சார்புகள் மாறிவிட்டன என்பதால் முழு நடுநிலை வந்துவிட்டது என நினைத்துக்கொள்ள முடியாது அல்லவா?

இது என் Observation . உங்கள் கருத்து?

Feb 19, 2006

பெரியவங்க தொல்லை (19 Feb 06)

ம்ஹூம்; இந்த பெரியவங்க தொல்லை தாங்க முடியலை!

மனுசனாப் பொறந்தவனுக்கு வேலை இருக்காதா?

எனக்கு வாரம் சனிக்கிழமையிலேதான் ஆரம்பிக்குது. வெள்ளிக்கிழமை லீவுன்னாலும், விட்டுப்போன சில்லறை வேலைகளையெல்லாம் கிடைக்கிற கொஞ்ச கொஞ்ச கேப்லே செஞ்சுகிட்டு கம்ப்யூட்டரை ஆன் கூட செய்ய முடியாம இருந்தேன் நேத்து சாயங்காலம்.

ஆனா பாருங்க இந்த பெரியவங்களை!

ஒருத்தர் என்னடான்ன ராத்திரி மூணு மணிக்கு எழுந்தேன், பதிவு போடறேன்றாரு.

இன்னொருத்தர் அவசரமா, எமோஷனலா பதிவு போடறேன்றாரு..

அப்புறம் நாங்க எல்லாம் எப்பத்தன் "அன்பே சிவம்" பாத்ததைப் பத்தி, அணு அணுவா ரசிச்சதைப்பத்திப் பதிவு போடறதாம்?

அதுக்காக விட்டுட முடியுமா? நான் ரசித்த விஷயங்களைப் பட்டியல் போடுடறேன்.

1. கதாபாத்திரங்களின் பெயர்கள் - (அன்பு)அரசு, (நல்லா) சிவம், (பாலா) (சரஸ்வதி) என்று எல்லாக்கதா பாத்திரங்களுக்கும் இரட்டைப்பெயர், ஒருவருக்குத் தெரிந்த அரைப்பெயர் இன்னொருவருக்குத் தெரியாது என்று இயல்பாக கதையை ஓட்டி இருந்த விதம்!

2. மிகவும் வேறுபடும் கதாபாத்திரங்கள் - ஆனாலும் தினமும் நாம் சந்திக்கும் இயல்பான பாத்திரங்கள் (குடைச்சண்டை போடும், டிஜிடல் காமெராவில் விளையாடும் கம்யூனிஸ்ட்டை விட்டுவிட்டால்:-))

3. பிரசார நெடி வெளிப்படையாகத் தெரியாத புத்திசாலித்தனமான வசனங்கள்.

"தாஜ்மஹால் இடிஞ்சு போச்சின்னா காதல் பண்ணறதை விட்டுடுவீங்களா?" ரஷ்யா உடைந்ததை குத்திக்காட்டும் மாதவனிடம் கமல்.

"பொம்பளைங்களால வீதியிலே நாடகம் மட்டும்தான் போட முடியும்" அவசரமாய் ஜிப் திறக்கும் சகாக்களிடம் பெண் சகாக்கள்

"மனசு மாறிட்டேன், சரி - அதுக்காக கடவுள்னு எல்லாம் சொல்ல்லாதீங்க " -"அப்படி நாத்திகம் பேசக்கூடாது" வெட்ட வந்த சந்தானபாரதியிடம் கமல்.

"என்னுதும் டிஸைனர் ஷூதான் சார், மேட் இன் ஆஸ்பத்திரி" இத்தலிய ஷூவை விற்றுவிட்ட வெறுப்பில் கமலின் ஷூவை மாதவன் வீசிவிட்ட பின்.

"உங்களுக்கு கூடப்பிறந்த பெண்கள் உண்டா" எனக்கேட்கும் ஒரிய ட்ரேன்ஸ்லேட்டர் "You are technically wrong" என்று மாதவனைத் திட்டிக்கொண்டிருக்கும் டாக்ஸி ட்ரைவரிடம்.

"வருத்தப்படாதீங்க அர்ஸ் - பீ பாஸிட்டிவ் - நீங்க AB நெகடிவ்" ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் மாதவனிடம் கமல்.

3. காட்சி அமைப்புகளுக்காக மெனக்கெட்டிருத்தல் -

தண்ணீர் வழிந்தோடும் புவனேஸ்வர் ரயில் நிலையம்,
ஆக்ஸி அஸிட்டிலீன் கட்டிங் செய்யப்படும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டி,
கோழி பறக்கும் ஒரிஸ்ஸா பஸ் கூறை
அந்த இச்சாபுரம் ஸ்டேஷன் மாஸ்டரின் (ஆர் எஸ் சிவாஜி) தெலுங்கு கலந்த ஆங்கிலம்

இவற்றை எல்லாம் நிஜமாகவே பல முறை பார்த்திருக்கிறேன்.. படத்தில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இயல்பு!

இன்னும் நான் ரசித்த ஒவ்வொரு அம்சத்தைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் எனக்கு வேறு வேலை ஓடாது என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.

படத்தை இயக்கியது சுந்தர் சி என்பது கமல் படங்களில் தொடர்ந்து வந்திருக்கும் கேலிக்கூத்து.

திக்கற்ற பார்வதி, நாட்டிய மயூரி போன்ற மெலோட்ராமாக்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவ், கமலோடு மட்டுமே அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் போன்ற படங்களைக்கொடுத்தார்.

மகாநதி, குணா ஆகிய படங்களை "இயக்கிய" சந்தான பாரதி, கமல் இல்லாமல் இயக்கிய படங்களுக்கு ஒரு சாம்ப்பீள் - சின்ன மாப்ளே, ராஜா கைய வெச்சா!

மீரா என்ற சாதாரண காதல் சினிமா, சுஜாதாவின் நல்ல கதையை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய "வானம் வசப்படும்" ஆகிய படங்களுக்கு நடுவில் பி ஸி ஸ்ரீராம் "இயக்கிய" படம் குருதிப்புனல்.

மறுபடி அன்பே சிவம்: இந்தப்படம் தோல்வி அடைந்தது ஒரு சராசரி தமிழ் திரைப்பட ரசிகனாக எனக்கு இழப்பே. தருமியுடன் 100% ஒத்துப்போகிறேன். ஒன்றிரண்டு குறைகள் இருக்கலாம்.. ஒன்றிரண்டு நிறைகளோடு மட்டுமே வரும் படங்கள் கூட பிய்த்துக்கொண்டு ஓடும்போது இது நிராகரிக்கப்பட்டது வருத்தம்தான். இப்படித் தொடர்ச்சியாக நல்ல படங்களைத் தோல்வியுறச்செய்தால், சிவகாசியும் பரமசிவனும்தான் "மக்கள் கேட்கிறார்கள்" என்ற அடைமொழியுடன் பரிமாறப்படும்.

Feb 16, 2006

மூன்று மேட்டர்கள் (16 feb 06)

மேட்டர் ஒன்று:

எனக்கு ப்ளாக்கரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. "நீங்கள் விரும்பிக்கேட்டதால், உங்கள் கணக்கு பற்றிய விவரங்களை இந்தச்சுட்டியில் போய் தெரிந்துகொள்ளுங்கள்" என்று.

1. நான் விரும்பியோ வெறுப்புடனோ கேட்கவில்லை. என் சார்பாக யாரோ கேட்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி அறிய இவ்வளவு ஆர்வம் கொண்ட மக்களும் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.

2. நல்ல வேளையாக, ப்ளாக்கர் மக்கள் முதலில் பதியப்பட்ட மின்னஞ்சலுக்கு இத்தகவலை அனுப்புகிறார்கள் - கேட்கும் நபருக்கு அனுப்புவதில்லை.

3. இதனால் ஏற்பட்ட இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் என் பாஸ்வேர்டை நானே மறக்கும் அளவிற்கு கஷ்டமானதாக மாற்றிவிட்டேன்.

இருந்தாலும், மோகன் தாஸின் ஹாக்கிங் பற்றிய பதிவைப்படித்ததும் பயம் வரத்தான் செய்கிறது. கணினியில் எழுதப்படும், இணையத்தில் பரவவிடப்படும் எந்த விபரத்தையும் தொழில்நுட்பம் நன்கு அறிந்த ஹாக்கர்கள் சற்று நேரம் செலவழித்தால் அறிய முடியும் போலிருக்கிறது. எனவே மக்களே, கவனம். அடிக்கடி உங்கள் பூட்டுக்களை உறுதி செய்து கொள்ளுங்கள். (பதிவுக்கு நன்றி மோகன், அங்கே பின்னூட்ட முடியவில்லை- சொந்தக்காரணங்களால்)

மேட்டர் ரெண்டு

நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு நல்ல புத்தகம் கைக்குக் கிடைத்திருக்கிறது.

யூஜீன் பெட்ரோவா - அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள் (பிரபலமான புத்தகம்தான் என்றாலும், இதுவரை தமிழில் இதைப்பற்றிப் பார்த்ததில்லை)

பிரச்சினை பூமி என்றே நான் அறிந்த செசன்யாவிலிருந்து ஒரு தென்றல், யூஜீன் பெட்ரோவா என்னும் கவிதாயினி. (எரிக்கா யாங்குக்கு செசன்யாவின் இணை என்கிறது முன்னுரை). முக்கியமான பாடுபொருள் காதலும் இயற்கையுமே என்றாலும் ஜார் ஆண்ட சோவியத்தில், புரட்சியின் ஆரம்பம் தென்படத்தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அதன் தாக்கங்களும் விரவி இருக்கின்றன.

முடியும்போது இக்கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து இடுகிறேன். இப்போதைக்கு, தலைப்புக்கவிதையைத் தமிழில்:

அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள்

ஆண்டுக்கான சூரியன் அஸ்தமித்த நேரத்தில்
ஆலிவ் பூக்கள் உதிரத்தொடங்கின.
மாஸ்கோவின் தோழர்போல் செஞ்சட்டை அணிந்த ஆலிவ்.
மரத்திலேயே இருந்திருக்கலாமோ என
மனம் அலைபாய்கிற பூக்களும் உண்டு.
பனித்தரையில் பகுக்க முடியா
வெள்ளை நிறப்பூக்கள்
பச்சோந்திகளோ?
எனக்கெனவும் ஒரு பூ இருக்கிறது.
அது என் மரண மலர் வளையத்தில்
மையமாய் இருக்கலாம் -
அல்லது
நந்தவனத்தின் அத்தனை மலர்களையும்
கொய்து அவன் தரப்போகும் பூங்கொத்தின்
பகுதியாயும் இருக்கலாம்.
எப்படியும்
எனக்கான மலர் எனக்குத்தெரியும்.

நன்றாக இருந்தால் சொல்லுங்கள், மொத்த புத்தகத்தையும் மொழிபெயர்த்துவிடுகிறேன்.

மேட்டர் மூன்று

இது ஒரு சோதனைப்பதிவு - மெயில் மூலம் பிளாக்கருக்கு ஏற்றும் முயற்சி. வெல்லுதா பார்க்கலாம்.

Feb 14, 2006

காதலர் தினம் - யாருக்கு உரிமை? (14 feb 06)

என்னவளைக்கண்டு நாணி
சாலை ஓரத்தில் நின்றது
பேருந்து மட்டுமா?
என் இதயமும்தான்.

பயணம் முடித்த பாட்டி அவளுக்கு
அமர இடம் கொடுத்தாள் - நானோ
என் நெஞ்சில் அவளுக்கு
அமர இடம் கொடுத்தேன்..

என்கிற ரேஞ்சில் கவிதைகளில் விளையாடிக்கொண்டிருக்கும் இளவட்டங்களே, காதலர் தினத்தை என்ஸாய் பண்ணுங்க:-)

காதலர் தினத்தின் வியாபார நோக்கங்கள் வெளிப்படையாகவே தெரிந்தாலும், காதல் என்ற வஸ்து வியாபரமாக்கப்படுவது இன்றா நேற்றா? எஸ். வி.வி ஒரு கதையில் எழுதி இருந்தார்.."அவனும் அழகாக இருந்து அவளும் அழகாக இருந்து சைத்தானும் புகுந்துகொண்டு விட்டால் காதல்தானே.. மேலே கேட்பானேன்?"

ஆனால், காதல் வசப்பட்டவர்களை விட, அதற்குத் துணை போகும் பரிதாப ஜீவன்களுக்காக 360 நாள் சிறப்புதினங்கள் கொண்டாடலாம்.. தப்பில்லை.

"டேய்.. அவ இன்னிக்கு என்னை ஒரு மயக்கற பார்வை பார்த்தா பாரு.."

"என் ஆளு சிரிச்சா சிற்றிலக்கியம், பேசினா பேரிலக்கியம்டா"

போன்ற பொன்மொழிகளை சிரிக்காமல் கேட்டுக்கொள்ளும்

"அவன் உனக்காக உயிரையே விடுவாம்மா.. நேத்து காலையிலே இருந்து 12 மணிவரை சாப்பிடவே இல்லைம்மா"

என்று தூது போகும்

"என் பைக்கை எடுத்துகிட்டுப்போ.. பெட்ரோல் மட்டும் போட்டுக்கோ"

என்று பகுதி நேரக் கர்ணன்களாக மாறும்

"உன் கல்யாணத்த நான் முடிச்சு வைக்கிறேண்டா"

என்று உறுதி அளிக்கும்

"மெட்ராஸ் போயிட்டா போதும், என் பிரண்டு வீட்டுலே ரெண்டு மூணு நாள் இருந்துக்கலாம்"

என்று லாங் டெர்ம் (?!) திட்டம் தீட்டும்

தோழர்கள் வாழ்க!

தோழர் குலத்தின் முதல் பிரதிநிதியின் (வாலண்டைன்) மரணதினத்தையும் காதலர்களுக்கே விட்டுக்கொடுத்த தோழர்களின் தியாகத்தை எப்போதுதான் அங்கீகரிக்கப்போகிறீர்கள்?

-ஒரு தோழன்!

Feb 8, 2006

சுய பரிசோதனை - உங்கள் நேர்மை பற்றி Flash (08 Feb 06)

தொழில் ரீதியாக சில வினாத்தாள்களைத் தயார் செய்ய வேண்டி இருந்தது.

வினாத்தாள் தயாரிக்கும் முறைகளைப்பற்றி பலவிதமான வழிகாட்டுதல்களும், எப்படி வினாக்களை அமைக்கக் கூடாது என்பதற்கும் பல சித்தாந்தங்கள் நிலவுகின்றன, அவைபற்றி பல வலைத்தளங்களும் உள்ளன.

எதேச்சையாக, நேற்று, ஹார்மிங்ஹாம் பலகலைக்கழகத்தின் வலைத்தளத்துக்குள் நுழைந்தேன். தங்கச்சுரங்கத்தைக் கண்டவன் போல குதூகலப்பட்டேன்.

தொழில்நுட்பக் கேள்விகளில் இருந்து, மனோதத்துவக் கேள்விகள் வரை.. அரசியல் கேள்விகளிலிருந்து, தனி மனிதக் கேள்விகள் வரை.. எல்லா விதமான சோதனைகளும் உள்ளன.

நான் பார்த்தவைகளில் வியந்தது, மனோதத்துவக்கேள்விகள்தான்.
வழக்கமாக, மனோதத்துவக் கேள்விகளுக்கு விடை அளிப்பது மிகவும் சுலபம். என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக்கணிப்பது பெரும்பாலான நேரங்களில் சாத்தியமே, எனவே முடிவில் வரும் ஆரூடம் நம் பொய் சொல்லும் திறனுக்கு ஏற்பவே அமையும்.

ஆனால், ஹார்மிங்ஹாம் பலகலைக்கழகத்தின் கேள்விகளில் தனிச்சிறப்பு என்னவென்றால், நம் பதிலைக் கொண்டு விடை வருவதில்லை. கேள்வியைப்படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம், மவுஸ் பாயிண்ட்டரின் அலைபாய்தல், பதிலளிக்க எடுக்கும் அவகாசம் ஆகியவையும் சேர்த்து மதிப்பிடப்படுகின்றன. நான் முயற்சி செய்த பல சோதனைகளிலும், சரியான விடையே வந்தது. ஏறத்தாழ இது ஒரு மனோதத்துவச்சோதனை போலத்தான்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கேள்வித்தாள்களை நாமேவும் உருவாக்க முடியும். கேள்விகளை அளித்து, பதில்களுக்கான வெயிட்டஜையும் கொடுத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் நம் பர்ஸனலிஸ்டு கேள்விக்கான flash தயாராகிவிடுகிறது. (கட்டணச்சேவை - எனவே லிங்க் கொடுக்கவில்லை)

தற்போதைய வலைப்பதிவு சண்டைகளில் பெரிதும் அடிபடும் நேர்மையைப்பற்றி நான் ஒரு சோதனைக் கேள்வித்தாள் தயாரித்தேன்..

முயற்சித்துப் பாருங்கள்!


Feb 5, 2006

பாண்டுச்சோழன் சரித்திரம் - 04 Feb 06

கதை கவிதை என அனைத்து இலக்கிய வடிவங்களையும் முயன்று பார்த்துவிட்ட பினாத்தல், சரித்திரத்தை மட்டும் விட்டுவிடத் தயாராக இல்லை.

பாண்டுச்சோழன்

முன்னொருகாலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியில் பாண்டுச்சோழன் என்னும் மகாராஜா ஆண்டுவந்தார். இவருக்கு வலைகொண்டான், பன்மொழிப்புலவர், அனுபவ வித்தகர் என்ற பல பெருமைகளும் உண்டு. களம் பல கண்டு வெற்றிகண்ட இவர், வலையூரிலும் தன் கொடியை நாட்டிட முனைந்தார்.


இதே காலத்தில் சோழர்களின் ஆட்சி முறை பற்றி பலரும் விமர்சித்து வந்திருந்தனர். அவ்வாறு விமர்சித்தவர்களுள் ஒருவர் கீர்த்திவாசன். நேசநாட்டுக்கவிஞர் ஒருவர் பல்வேறு கலைஞர்களைப் பற்றிப் பாடிய பாடலில் கீர்த்திவாசன் ஒரு குறை கண்டார். பல்வேறு கலைஞர்களைப் பற்றிய பாடலாயினும், அனைத்தும் சோழர்களைப் பற்றியதாகவே உள்ளதே என்றார்.

இவ்வமயம் ஆங்கே வருகை புரிந்த பாண்டுச்சோழன், சோழர்களைப் பற்றிக் கூறியதில் தவறொன்றுமில்லை என வாதிட்டார். அப்போது கீர்த்திவாசனும் வெகுண்டு, நீர் எப்படிப்பட்ட சோழன் என்றும் பாண்டுச்சோழனைக்கேட்கத் தலைப்பட்டார். சோழர்கள் என்று இல்லை, எந்த மன்னருமே தன் வம்சத்தைப் பற்றிப் பெருமை கொள்ளல் ஆகாது என்றும் வாதிட்டார்.

வெளிப்படைக்கல்வெட்டுக்கள்

இதனால் மனக்காயம் அடைந்த பாண்டுச்சோழன், தன் வெளிப்படையான எண்ணங்களை கல்வெட்டாகப் பதிந்துவைத்தார். சோழர் அல்லாதவர்களுக்கும் சோழர்களுக்கும் உள்ள பிரிவினை இவர் அதிகப்படுத்திவிட்டார் எனக்கூறுவோரும் உண்டு.

மன்னர்கள் மீதும், குறிப்பாகச் சோழர்கள் மீதும் கோபம் அடைந்திருந்த கீர்த்திவாசன், இக்கல்வெட்டுக்கு எதிராக போர் புரிந்தார்.

மாறுவேடச் சோழன்

இந்நிலையில், மாறுவேடச் சோழன் என்று ஒருவன் முளைத்தான். இச்சரித்திர ஆசிரியருக்கு மாறுவேடச் சோழனின் பூர்வாசிரமத்தைப் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இம்மாறுவேடச்சோழன், நட்பு நாட்டரசர்களிடம் சென்று சோழன் கூறியதாக இல்லாததையும் பொல்லாததையும் கூற, முதலில் அவர்களில் சிலரும் நம்பத் தலைப்பட்டனர். சோழன் கூறியதாக எண்ணி பல சிறு போர்களும் நடைபெற்றன.

முத்திரை மோதிரம்

இதனால் பாதிக்கப்பட்ட பாண்டுச்சோழன், முத்திரை மோதிரம் இல்லாதவர்களை அரசியல் பேச்சுவார்த்தைக்கு அனுமதியாதீர் என்று அனைத்து அரசர்களுக்கும் அறைகூவல் விடுத்தார். பெரும்பான்மையான அரசர்கள், பாண்டுவின் நேர்மையான கோரிக்கைக்கு செவி சாய்த்தனர்.

மாறுவேடச்சோழன் சளைத்தவன் இல்லை. இவனும் பல போலி முத்திரை மோதிரங்களை உருவாக்கி, தன் அவதூற்றுப் பிரசாரத்தை நடத்தத் துவங்கினான்.

பெரும்பான்மையான அரசர்களுக்கு, உண்மையான பாண்டுச்சோழனுக்கும், மாறுவேடச்சோழனுக்கும் வித்தியாசம் தெரிந்துவிட, மாறுவேடச் சோழன் செல்லும் இடத்தில் எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டனர்.

மாறுவேடச்சோழன் அவதூறு

இதனால் வெகுண்ட மாறுவேடச்சோழன், தன்னை அலட்சியப்படுத்தியவர்கள் பெயரிலும் அவதூற்றைத் துவங்கினான். சில அரசர்கள் மாறுவேடச்சோழனைக் கையும் களவுமாகப் பிடித்தனர் என்ற ஒரு வரலாறும் உலவுகிறது. சிலர் அவதூற்றினால் பாதிக்கப் பட்டு ஆட்சியைவிட்டு சிறிது காலத்துக்கு சன்யாசமும் கொண்டனர்.

புலிக்குட்டிச் சோதனை

பாண்டுச்சோழனும், மேலும் எச்சரிக்கை கொள்ளத் துவங்கினார். புலிக்குட்டிச் சோதனையை அறிமுகப்படுத்தினார். மாறுவேடச் சோழன் மீது புலிக்குட்டியை ஏவினால், அவன் மாறுவேடமா அல்லது மெய்யான சோழனா என்று தெரிந்துவிடும் என்பதே அந்தச் சோதனை. பாண்டு செல்லும் இடமெல்லாம் தன் புலிக்குட்டியுடனே செல்லத் துவங்கினார்.

இரண்டாம் கல்வெட்டூர்

அதுமட்டும் இன்றி வேறு மன்னர்களுடன் பேசும் வார்த்தைகளையெல்லாம் கல்வெட்டாக மாற்ற ஒரு தனி ஊரையும் துவங்கினார். இந்த ஊர் மற்ற ஊர்களின் எல்லையில் இருந்ததால், மற்ற நாட்டரசர்களின் முக்கியமான கல்வெட்டுக்களையும் இந்த இரண்டாம் கல்வெட்டூர் ,மறைத்தது என்று ஒரு குற்றச்சாட்டு உலவியது.

இதனிடையில் மாறுவேடச்சோழனின் ஆட்டம், புதிய மன்னர்களின் நாட்டில் அதிகமாகியது. புலிக்குட்டிச் சோதனை, இரண்டாம் கல்வெட்டூர் பற்றி அறியாத புதிய மன்னர்கள் சிலர், மாறுவேடச்சோழனின் சதியில் சிக்கி, பாண்டுச்சோழன் மீதும், மாறுவேடச்சோழனின் பிற எதிரிகள் மீதும் சந்தேகம் கொண்டனர். அது உடனேயே தெளிவாகிவிட்டது என்றாலும், பாண்டுச்சோழனுக்கு கோபம் அதிகமாகிவிட்டது.

எல்லைப் பாதுகாப்புப் படை

இதற்கிடையில், எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் பொதுவாக எல்லைப் பாதுகாப்புப் படை ஒன்று துவங்கப்பட்டது. இதன்படி, நாட்டிற்கு வரும் அனைத்து விருந்தினர்களும், எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு, கடவுச்சீட்டு, புலிக்குட்டிச் சோதனை செய்யப்பட்ட பிறகே அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும்படிச் செய்ய இயலும்.

எல்லைப் பாதுகாப்பை சில நாட்டரசர்கள் விரும்பி ஏற்றனர். மாறுவேடம் தரித்தவர்கள், வெள்ளையர் ஊடுறுவல் ஆகியவற்றைத் திறம்படத் தடுக்க இயலும் என்றாலும், வேறு சில நாட்டரசர்களுக்கு இம்முறை ஒத்துவரவில்லை. எல்லைப்பாதுகாப்பிற்காகச் செலவிடவேண்டிய செலவு, நேரம் ஆகியவை மட்டுமின்றி, வந்தாரை வாழவைக்கும் தம் நாட்டின் மரபும் குலைந்துவிடும் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

இந்நிலையில் கீர்த்திவாசன், பன்னாட்டுக் கூட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட, மாறுவேடச் சோழன் பன்னாட்டுக்கூட்டமைப்பின் தலைவர்கள் பெயரிலும் ஓலை கொண்டு சென்று அவதூறு செய்ய்த் துவங்கினான்

பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள்

பல்வேறு அழையா விருந்தாளிகளின் அவதூற்றுப் பிரசாரங்களினாலும், வெள்ளையர் ஊடுறுவலினால் முக்கியக்கல்வெட்டுக்கள் மறைந்ததாலும், மாறுவேடங்களின் குறிப்பிட்ட தாக்குதலினாலும், பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள் திருத்தப் பட்டன. எல்லைப் பாதுகாப்புப் படை செயல்படாத நாடுகளின் புதிய சீர்திருத்தங்கள் பன்னாட்டுக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப் படாது என முடிவெடுக்கப்பட்டது.

பன்னாட்டுக் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்த பாண்டுச்சோழன், இம்முடிவைத் தன் வெற்றியாகக் காட்ட முனைந்தார் என்று கூருவோரும் உண்டு. மற்ற நாட்டரசர்கள் பாண்டுவின் கேள்வி மழை பொழிந்தனர். முத்திரை மோதிரம், புலிக்குட்டிச் சோதனை, எல்லைப்பாதுகாப்புப் படை, இரண்டாம் கல்வெட்டூர் எனப் பல பாதுகாப்புகளும் செய்துகொண்டுவிட்ட பாண்டுச் சோழனை விட, மாறுவேடச் சோழனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நாட்டரசர்களே ஆவர். போரில் பங்கு கொள்ள முடியாத நிலையில் மாறுவேடச் சோழன் இருந்த நிலையிலும், தன் பல அறைகூவல்களினால் மாறுவேடச்சோழனைப் போருக்குத் தூண்டியதும் இவர்தான் என்றும் பலர் கூறியதாக வரலாறு.

போர் முடிவு

வரலாற்றின் எந்த ஆவணங்களிலும், பாண்டுச்சோழன் விடுத்த போர் யாது, அதில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல்கள் காணப்பெறவில்லை.

முடிவுரை

இந்த வரலாற்றைப் படித்தவர்கள், இதில் பினாத்தலுக்கு மேல் வேறு எந்த அர்த்தமும் கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Feb 1, 2006

ரங் தே பஸந்தி 01 Feb 06

ஆதியும் பரமசிவனும், நேற்று முளைத்த சரவணாவும் வானிலிருந்து குதித்த நாயகர்களாக பன்ச் டயலாக் என்ன, பாவப்பட்ட துணை நடிகர்களை 100 மீட்டர் தள்ளி விழவைக்கும் (மூன்று அந்தர் பல்டி உள்பட) குத்து என்ன என்று ஹீரோயிஸம் காட்டும் படங்கள் மத்தியில், ஐந்து இளைஞர்களில் ஒருவராக, தன்னை மட்டுமே முன்னிலைபடுத்திக் கொள்ளாத ஆமிர் கான் முதல் ஆச்சரியம்.

டாகுமெண்டரிப்படம் எடுக்க வரும் வெளிநாட்டுப்பெண், அவளுக்கு உதவும் இந்தியப்பெண் என்று இரண்டே பெண் பாத்திரங்கள் (கிரேஸி மோகன் நாடகம் போல), ஒரு டூயட்டோ, குத்துப்பாட்டோ, திணிக்கப்பட்ட கிளுகிளுக்காட்சிகளோ இல்லை என்பது இரண்டாவது ஆச்சரியம்.

விடுதலைப்போரில் பங்கேற்ற இளைஞர்களுக்கும், பொறுப்பற்றுத் திரியும் இன்றைய இளைஞர்களுக்கும் காண்ட்ராஸ்ட் காட்டுவதே கதையின் போக்கு என்பதால் பொதுமைப்படுத்திவிடும் அபாயம் இருந்தும் தவிர்த்திருப்பது மூன்றாவது ஆச்சரியம்.

ஆய்த எழுத்துக்குப்பின் அட்ரஸ் இல்லாமல் போன சித்தார்த்தின் நடிப்பு - நண்பர்களின் கொண்டாட்டங்களில் பங்கேற்றாலும் கண்களில் தெரியும் நிரந்தர சோகம், வெறுமை, பகத்சிங்காக வரும்போது காட்டும் முகபாவ வேறுபாடுகள்! இன்னொரு ஆச்சரியம்.

நடிப்பில் இவர் மட்டும் இல்லை, மற்ற இளைஞர்கள் (பெயர்கள் தெரியவில்லை), அதுல் குல்கர்னி, சோனியாவாக வரும் நடிகை, வெளிநாட்டு சூ, சிறப்புத் தோற்றம் என்றாலும் பின்பாதிக்கதைக்கு அச்சாணியாக வரும் மாதவன், இரண்டே காட்சிகள் வந்து போகும் ஓம் பூரி, அனுபம் கெர், கிரண் கெர் அனைவரும் பிரமாதப்படுத்தி இருக்கின்றனர்.

கதை ஒன்றும் புதியதில்லை. பக்த்சிங்கைத் தூக்கிலிட்ட தாத்தாவின் டைரி உந்த, டகுமெண்டரி எடுக்க வரும் வெளிநாட்டுப்பெண், இந்தியாவில் சந்திக்கும் கல்லூரி இளைஞர்களை நடிக்க வைக்க, அந்த இளைஞர்களின் நண்பன் MIG விமான விபத்தில் இறக்க, அந்த விபத்து அரசியலாக்கப்பட, கோபம் கொண்டு பாதுகாப்பு மந்திரியைக் கொல்கிறார்கள்; கொல்லப்பட்டவரை தேசப்பிதா ஆக்கும் முயர்சியைத் தடுக்க வானொலி நிலையத்தைக் கைப்பற்றி "நாங்கள் தீவிரவாதிகள் இல்லை" என்று அறிக்கை விடுத்தும், கமாண்டோப்படையால் கொல்லப்படுகிறார்கள்.. இந்தியன் ரமணா என்று நாம் பார்த்த பல கதைகள் போலத்தான்.

ஆனால் கதை சொல்லப்பட்ட விதம், பழைய கதையானாலும் புதிய பார்வை. அவ்வப்போது பகத்சிங்கையும் பிஸ்மில், ஆஸாத், அஸ்லம் என்று அவன் குழாத்தையும் கருப்பு வெள்ளையில் தொட்டுச்சென்றாலும், முக்கியமான கவனம் விழித்தெழும் பொறுப்பற்ற இளைஞர்களைச் சுற்றியே என்பதால் பீரியட் படம் என்ற எண்ணம் எழவில்லை.

ஒளிப்பதிவு பிரமாதம் - விமானம் நம் மேலேயே ஏறுகிறது, ஆமிர்கான் வேகமாக பைக் ஓட்டும்போது நமக்கு அடிவயிற்றில் பயம் வருகிறது! எடிட்டிங்கும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.பெரும்பாலும் ஊகிக்க முடியாத நேரங்களிலேயே சுதந்திரப்போர்க் காட்சிகள் தடக்கென மாறுகிறது.. காட்சி மாறிய கொஞ்ச நேரம் கழித்துத்தான் உரைக்கிறது!

குறைகள் இல்லாமல் இல்லை. இன்னும் சற்று பழைய காட்சிகள் அமித்திருக்கலாம்.என்னதான் இருந்தாலும் ஆமிர்கானின் முகம் கல்லூரி மாணவனாக?? ம்ஹூம்!(காலேஜ் முடித்து ஐந்து வருடம் ஆகியும் அங்கேயே சுற்றுகின்றாராம் - சப்பைக்கட்டு வேறு.) இந்த இளைஞர்கள் தவிர நடிப்பதற்கு வேறு ஆட்களே இல்லையா, ஏன்
அவர்கள் இறுதிக்காட்சியில் கொல்லப்பட வேண்டும், க்ளைமாக்ஸை அவ்வளவு இழுத்திருக்க வேண்டுமா எனப்பல கேள்விகள் இருந்தாலும்,


பார்த்து ரசிக்க வேண்டிய படம் - அதில் சந்தேகமில்லை.

 

blogger templates | Make Money Online