மு கு 1: கடந்த சில நாட்களாக என் பதிவுகளில் இருக்கும் ஏமாற்று வேலை எதுவும் இப்பதிவில் இல்லை. அப்படி ஏதேனும் எதிர்பார்த்தால் மட்டுமே ஏமாந்து போவீர்கள்.
மு கு 2: தமிழ்மணத்தில் வகைப்படுத்தும் வசதி இப்போது எனக்கில்லை. எனவே, முதலில் வகைப்படுத்தும் புண்ணியவான் இதை "விவாத மேடை" என வகைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
"கமலை ரசிக்கிறார்களா அல்லது படத்தை ரசிக்கிறார்களா என்ற குழப்பம் எனக்கு எப்போதும் உண்டு." என்கிறார் முத்து (தமிழினி). இந்த வரிகள் என் சிந்தனையில் ரொம்ப நாளாகவே இருந்துவந்த குழப்பத்தை இன்னும் தூண்டிவிட்டது.
இந்தக்கேள்வியை நான் பார்க்கும் விதம் - கலைவடிவத்தை விமர்சிக்கிறோமா அல்லது கொடுத்தவரை விமர்சிக்கிறோமா? (இந்த வார்த்தைகள் இந்தக்கட்டுரையில் அடிக்கடி வரப்போவதால், ஒரு சுருக்கமான வரைவு -
கலை என நான் குறிப்பிடுவது திரைப்படம், கதை, கட்டுரை, அரசியல் நிகழ்வு எல்லாவற்றுக்கும் பொருந்தும்
பிம்பம் என்பது அக்கலையை நிகழ்த்தியவர் - திரை நடிகர், கதாசிரியர், இயக்குநர், கட்டுரையாசிரியர், அரசியல்வாதி எல்லாரையும் குறிக்கும்)
நேர்மையான விமரிசனம் என்பது எதையும் விமர்சிக்காமல் இருப்பதோ அல்லது எல்லாவற்றையும் கிழித்துத் தோரணம் கட்டுவதோ இல்லை. ஆனால் கலையை விட்டு, பிம்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது முதலில் அடிவாங்குவது நடுநிலைமைதான்.
நான் ஒரு நேர்மையான பார்வையாளன் என்று சொல்லிக்கொள்வதற்கு முன் இந்த Biasஸை விட்டு விலகி வருவது அவசியம். அது நிச்சயமாக சுலபமான ஒன்றல்ல. நம் பிறப்பு, வளர்ப்பு, பார்த்த நிகழ்வுகள், பாதித்த சம்பவங்கள் (ஏன், ஜாதியும் மதமும் கூட) அனைத்தும் சில பிம்பங்களின் மீது அதீத வெறுப்போ அல்லது அதீதக்காதலோ வரவைத்து விடுகின்றன.
இதற்கு ஒரு சரியான உதாரணம் "சோ"வின் நடுநிலைமை". (இது ஹிட்லரின் ஜீவகாருண்யம் போல Mutually Exclusive-ஆன பதம் என்பது என் கருத்து:-)) கருணாநிதியைப்பற்றி நினைக்கும் பொழுது திமுகவால் அவர் தாக்கப்பட்ட நிகழ்வுகளை விடுத்து யோசிக்க முடியாது, பாஜகவை நினைக்கும்போது அவரின் ராஜ்ய சபா எம்பி பதவியை மறக்கவும் முடியாது.. எனவே ஜெயலலிதாவை விமர்சிக்கும்போதெல்லாம் கருணாநிதியைத் தொட்டுக்கொள்ளாமல் விமர்சிக்க முடிவதில்லை, பாஜகவைத் திட்ட வேண்டி வந்தால் "காங்கிரஸ் போலவே ஆகி வருகிறது" என்ற வார்த்தையைத் தவிர்க்க முடிவதில்லை!
நடுநிலைக்கு அவசியமான ஒன்று இந்தப் பிம்பங்கள் உடைதல். பிம்பங்களை மீறி கலையைப் பார்க்கும்போது மட்டுமே நடுநிலை என்பது சாத்தியம்.
நான் நடுநிலை வாதியா எனக்கேட்டால், என் விருப்பத்தையும் மீறி இல்லை என்றே உண்மை சொல்வேன்.
சிறு வயதில், கமல் / ரஜினி என்ற பைனரி ரசிகக்கூட்டத்தின் ஊடே, என் தனித்தன்மையை நிரூபிக்க "சத்யராஜ்" ரசிகன் என்ற மூன்றாம் நிலை எடுத்தேன். அன்று என்னைக்கவர்ந்த அதே தகட்டை (தகடு தகடு) இன்றும் வியாபாரம் செய்து வருவதால் சத்யராஜால் நீண்ட நாள் என்னைத் தன் ரசிகராக தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. அப்போதைய நான் சத்தியராஜின் படத்தை விமர்சித்திருந்தால் அது நடுநிலையாக இருந்திருக்குமா?
சிந்துபைரவி வந்த காலகட்டத்தில், உலகின் ஒரே சிறந்த இயக்குநர் என்று பாலச்சந்தரை நினைத்திருந்தேன். பின்னர் அவருடைய நாடகபாணியும், "ப்சு, த்சு" என்று மேனரிஸம் காட்டும் கேனத்தனமாக செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள், மகளிரை அழவைக்க சாகவைக்கப்படும், கஷ்டப்படவைக்கப்படும் காட்சி அமைப்புகளைப்பார்த்து வெறுப்பு வந்தது.. இரு நிலைகளிலுமே, என் விமரிசனம் நடுநிலைமையாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
பாலகுமாரன் போல எழுதுவதற்கு ஆளே இல்லை என நினைத்த காலத்திலும், அடுத்து வந்த "என்னத்தையோ எழுதித்தள்ளறான்யா" என நினைத்த காலத்திலும் பாலகுமாரனைப்பற்றி நடுநிலையாக விமரிசித்திருக்க முடியுமா?
வட இந்தியாவுக்குச்சென்று இந்தி தெரியாமல் கஷ்டப்பட்ட நாட்களில் இந்திக் கல்வியை எதிர்த்தவர்கள் மீது வெறுப்பு வந்தது. சிங்கப்பூரில் ரயிலில் தமிழ் கேட்டதும் "தமிழ் ஏன் இந்திக்குப் பணிய வேண்டும்" என்ற எண்ணமும் வந்தது. இரு நேரங்களிலுமே, ஒரு பக்கச்சார்போடுதான் சிந்தித்திருக்கிறேன்.
அதே நேரத்தில், பிம்பங்கள் இல்லாத நேரத்தில், பக்கச்சார்புகள் இல்லாமல் சிந்திக்கவும் அதீதக்கோபமோ, அதீதப்பாசமோ இல்லாமல் விமர்சிக்க முடிகிறது.
கமல் மேல் பெரிய ஈர்ப்பு இல்லாததால், மும்பை எக்ஸ்பிரஸ்ஸும் ஒரு படமா? என்று திட்டவும், விருமாண்டி அருமையான படம் எனப்போற்றவும் முடிகிறது.
ரஜினி மீது வெறுப்பு இல்லாததால், பாட்ஷா படத்தை பத்து முறை பார்க்கவும், சந்திரமுகி- அதிர்ச்சி வெற்றி எனப்பதிவு போடவும் முடிகிறது.
எந்த அரசியல்வாதியினாலும் தனிப்பட்ட ஆதாயமோ, பாதிப்போ அடையாததால், பிம்பங்கள் ஏதும் இன்றி, நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்துக்களை அமைத்துக்கொள்ள முடிகிறது.
சில பிம்பங்கள் விழுந்துவிட்டன, சில பக்கச்சார்புகள் மாறிவிட்டன என்பதால் முழு நடுநிலை வந்துவிட்டது என நினைத்துக்கொள்ள முடியாது அல்லவா?
இது என் Observation . உங்கள் கருத்து?
13 பின்னூட்டங்கள்:
கமல் மேல் பெரிய ஈர்ப்பு ->
ரஜினி மீது வெறுப்பு - It's possible!
ரஜினி மேல் பெரிய ஈர்ப்பு ->
கமல் மீது வெறுப்பு - Is it possible?
//கமல் மேல் பெரிய ஈர்ப்பு இல்லாததால், மும்பை எக்ஸ்பிரஸ்ஸும் ஒரு படமா? என்று திட்டவும், விருமாண்டி அருமையான படம் எனப்போற்றவும் முடிகிறது.//
கமல் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தும் ,காதலா காதலா ,சிங்காரவேலன் போன்ற படங்களை என்னால் காறி துப்ப முடிந்தது .ரஜினியின் 'தில்லு முல்லு' படத்தை பல முறை ரசித்து பார்க்க முடிந்தது.
//பாட்ஷா படத்தை பத்து முறை பார்க்கவும்//
அடேங்கப்பா! எனக்கு அதைவிட அண்ணாமலையே பரவாயில்லன்னு தோணுச்சு.
Actually "CHO" is not a supporter to any party. That is the true and real reason for his judgements and they become true also. Whether you agree it or not it is true.He is the only person who critises BJP inspite of his getting the Rajya Saba MP post for supporting it, as you say. You want a clear vision to agree it and accept it.
பினாத்தல்,
இது ஒரு அருமையான விவாத தலைப்பு என்பதற்காக முதலி்ல் பாராட்டுக்கள்.
அந்த சத்யராஜ் மேட்டர்.என்ன கொடுமைய்யா அது. நானும் ரஜினியில் இருந்து மாறி சத்யராஜீல் கொஞ்ச நாள் இருந்து பின்னர் கமலின் அபூர்வ சகோதரர்கள் பார்த்தப்பிறகு
நானும் கமல் ரசிகன் என்று பிரகடனம் செய்தேன்.
பள்ளியில் கடும் கண்டனம்.பெண்களை கட்டி பிடிக்கும்(?) கமல் ரசிகனை நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.ரஜினி நல்லவராம்.அசிங்கமா நடிக்க மாட்டாராம்.( இதுவும் நண்பர்கள் கூறியதுதான்).
நிற்க.இந்த விவாதத்தில் என் சிந்தனையில விளைந்த முத்துக்கள் சில(?).சில முத்துக்கள் பேசுபொருளை விட்டு வெளியெ சென்றிருந்தால் அது என் தவறே.
நடுநிலைமை என்பது நீங்களே கூறியது போல எல்லோர்க்கும் நல்ல பிள்ளையாக இருப்பது அல்ல.ஒவ்வொருவரின் பிம்பமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி மாதிரி தெரிவது இயற்கைதான்.
1.கலை என்பது அந்த பிம்பத்தின் பிரதிபலிப்பு ஒரு குறிப்பிட்ட அளவுவரை.எந்த அளவு என்பது படைப்புக்கு படைப்பு மாறுபடும்.இதை பொதுமைப்படுத்த முடியாது.
பிம்பம் என்று வரும்போது உருவம் மட்டுமல்ல.அவரின் டோட்டல் பர்சானிலிட்டி, அவர்களே வெளிப்படுத்தும் விருப்புகள், வெறுப்புகள், ஆர்வங்கள் ஆகியவற்றை பொறுத்தும் வரும்.கமலை விமர்சிக்கும்போது அவர் சொந்த வாழ்க்கையும் கருத்துக்களும் ஒரளவு அவர் படைப்புகளை பாதிக்கும் என்ற நிலையிலும் பார்க்கலாம்.
ஒரு உதாரணம்: மாதவனை வைத்து அவர் எடுத்த படத்தில்(ஆஸ்ரேலியா குடியுரிமை சம்பந்தமான படம்..பெயர் நினைவில்லை) மாதவனின் கல்யாணமான தங்கையை வரதட்சணை கேட்டு அவள் கணவன் கொடுமைபடுத்தியதால் அவளை முன்னால் லவ் செய்துக்கொண்டிருந்த ஒருவருக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார். இது சாதாரணமாக தமிழ் படங்களில் வராது.படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது என் நண்பன் சொன்னான்.
"கமல் அவன் புத்தியை காமிச்சுட்டாண்டா"
ஆகவே பிம்ப சமாச்சாரங்களை கேஸ் பை கேஸ் ஆகத்தான் பார்க்கமுடியும்.
பிம்பத்தை கலையில் இருந்து முழுமையாக பிரிக்க முடியாது.
2.இந்த கேஸில் கமலை கமலுக்காகவே ரசிப்பது என்பதை பல இடங்களில் நாம் பார்க்க முடியும்.ஹே ராம் படத்தை நான் முதல் நாள் பார்கக சென்றபோது படத்தை பற்றி புரியாமல் பலர் உட்கார்ந்திருந்ததையும் ஆனால் கமல் படம் என்பதால் ஏதும் பேசமுடியாமல் இருந்ததையும் பார்க்க முடிந்தது.
அரை மணி நேரம் பொறுத்து ஒருவன் கத்தினான்.
"டேய் , படத்தை போடுங்கடா "
ஏற்கனவே படம போட்டு அரைமணி ஆகியிருந்தது.உடனே கரகோஷம்.அப்ளாஸ்.இதை எப்படி புரிந்துகொள்வது?
சின்ன வயதில் ரஜினி ரசிகனாகி பிறகு ஈகோவினாலேயே ரஜினி மிகச்சிறந்த நடிகர் என்று மெயின்டெய்ன் செய்பவர்கள் பற்றி என்ன சொல்லுவீர்கள்?(உண்மையான ரசிகர்கள் சண்டைக்கு வரவேண்டாம்.இது உங்களைப்பற்றி அல்ல)
3.நடுநிலைமைக்கு ஒரு உதாரணமாக ஒன்றை மட்டும் கூறுகிறேன்.ஒருவரை விமர்சிக்கவோ பாராட்டவோ வைத்திருக்கும் நம்முடைய அளவுகோலை அனைவருக்கும் பொதுவாக பயன்படுத்துவது தான் நடுநிலைமை எனப்படும்.ஆளுக்கு ஒரு தராசை எடுத்து எடைபோடுவது தவறல்லவா?(சோ வகையறா). இது ஓரளவு சரியாக வருகிறதா?
நன்றி பாலமுருகன், ஏதோ வார்த்தையிலே விளையாடறீங்கன்னு புரியுது.. ஆனா, நான் ஈர்ப்பு, வெறுப்பு ஆகிய வார்த்தைகளை சாதாரண அர்த்தத்திலேயே உபயோகப்படுத்தி இருக்கிறேன்.
நன்றி ஜோ - எனக்கு பாட்ஷா உங்களுக்கு அண்ணாமலை!
(பாட்ஷா ஸ்கிரீன்பிளே சூப்பர் சார்!)
நன்றி கீதா சாம்பசிவம். சோ எந்தக்கட்சி உறுப்பினரும் கிடையாது என்பதை நானும் மறுக்கவில்லை. அவர் தனது "நடுநிலை" இமேஜைக்காப்பாற்ற கஷ்டப்பட்டு சிலவேளைகளில் பாஜகவைக் குறை கூறினாலும் "காங்கிரஸ் போல் ஆகி வருகிறது" என்பதுதான் அவர் குற்றச்சாட்டு. He is the only person who critises BJP ?? என்னங்க, பாஜகவைத் திட்டறதுதாங்க எல்லா விமர்சகர்களுக்கும் பாலபாடம்.
வாங்க முத்து.. //"கமல் அவன் புத்தியை காமிச்சுட்டாண்டா"// இதை சரியான விமரிசனம் என்கிறீர்களா?
//நடுநிலைமைக்கு ஒரு உதாரணமாக ஒன்றை மட்டும் கூறுகிறேன்.ஒருவரை விமர்சிக்கவோ பாராட்டவோ வைத்திருக்கும் நம்முடைய அளவுகோலை அனைவருக்கும் பொதுவாக பயன்படுத்துவது தான் நடுநிலைமை எனப்படும்.// நல்ல Definition; ஆனால் அதே அளவுகோலை உபயோகப்படுத்துவதை பின்புலமும் சார்பு நிலைகளும் தடுக்கின்றன அல்லவா?
////"கமல் அவன் புத்தியை காமிச்சுட்டாண்டா"// இதை சரியான விமரிசனம் என்கிறீர்களா?//
this is just an example for bimbam's relationship with kalai
//அதே அளவுகோலை உபயோகப்படுத்துவதை பின்புலமும் சார்பு நிலைகளும் தடுக்கின்றன அல்லவா//
that is where they fail...
"இதற்கு ஒரு சரியான உதாரணம் "சோ"வின் நடுநிலைமை". (இது ஹிட்லரின் ஜீவகாருண்யம் போல Mutually Exclusive-ஆன பதம் என்பது என் கருத்து:-))"
அப்படியா? வேறு எந்த பத்திரிகையாளர் நடுநிலைமையுடன் இருக்கிறார் என்று கூறுவதாக உத்தேசம்? உங்கள் வார்த்தைகளின்படி ஒருவருமே நடுநிலைமை வகிப்பவர் என்று கூறமுடியாது என்றுதானே ஆகிறது? இதில் சோவை மட்டும் ஏன் இழுக்கிறீர்கள்?
நான் கூறுவேன் அவர் அளவுக்கு நியாயமாக எழுதினாலே பத்திரிகைத் துறை உருப்பட்டுவிடும் என்று. அவர் பா.ஜ.க. அனுதாபிதான், இருப்பினும் அக்கட்சியை விமசரிக்க நேரும்போது அவர் சப்பைக்கட்டு கட்டியதே இல்லை. அவரை விடக் கடுமையாக தான் ஆதரிக்கும் கட்சியை பற்றி மற்றப் பத்திரிகையாளர்கள் எழுதுவதில்லை என்பதே உண்மை.
பிரச்சினை என்னவென்றால் அவரைப் பற்றி எழுதும்போதுமட்டும் சோதனைகளைக் கடுமையாக்கி லென்ஸ் வைத்து பார்க்கிறார்கள். மற்ற பத்திரிகையாளர்கள் விஷயத்தில் அவ்வாறு இல்லை.
இப்பின்னூட்டத்தை உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய சோ அவர்கள் பற்றியப் பதிவில் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டோண்டு.
//வேறு எந்த பத்திரிகையாளர் நடுநிலைமையுடன் இருக்கிறார் என்று கூறுவதாக உத்தேசம்?// - அப்போது இலுப்பைப்பூவை சர்க்கரை எனச் சொல்லச் சொல்கிறீர்களா?
//நான் கூறுவேன் அவர் அளவுக்கு நியாயமாக எழுதினாலே பத்திரிகைத் துறை உருப்பட்டுவிடும் என்று// - அப்போது அது முழு அளவு அல்ல என்பதை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?
//பிரச்சினை என்னவென்றால் அவரைப் பற்றி எழுதும்போதுமட்டும் சோதனைகளைக் கடுமையாக்கி லென்ஸ் வைத்து பார்க்கிறார்கள்// - உண்மைதான் - அதற்குக் காரணம் அவரைச்சுற்றி உள்ள நடுநிலை ஒளிவட்டம்.. வேறு யாரும் அதை இவ்வளவு கஷ்டப்பட்டு சுமப்பதில்லை. தம் சார்புகளை இவ்வளவு கஷ்டப்பட்டு மறைப்பதும் இல்லை.
சோ சம்மந்தப்பட்ட விவாதமாக திசை மாறுகிறதோ என்று தோன்றுகிறது. என் உத்தேசம் அது இல்லை.
முத்து, மீண்டும் நன்றி. கமல் அவன் புத்தியைக் காண்பிப்பது எந்த அளவிற்கு அந்தப் படத்துக்கு ரெலவண்ட் என்றுதான் கேட்கிறேன்.
"அப்போது இலுப்பைப்பூவை சர்க்கரை எனச் சொல்லச் சொல்கிறீர்களா?"
ஏன் உண்மையான சர்க்கரை யாரையாவது கண்டுபிடிப்பதுதானே?
"அப்போது அது முழு அளவு அல்ல என்பதை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?"
முதலில் அந்த அளவுக்காவது யாரையாவது கண்டுபிடியுங்கள். பிறகு முழு அளவு ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் சோ அவர்கள்தான் முழு அளவு.
"அவரைச்சுற்றி உள்ள நடுநிலை ஒளிவட்டம்.. வேறு யாரும் அதை இவ்வளவு கஷ்டப்பட்டு சுமப்பதில்லை. தம் சார்புகளை இவ்வளவு கஷ்டப்பட்டு மறைப்பதும் இல்லை."
அப்படியா, அவர் சார்புநிலை என்ன என்பதை எப்போதுமே மறைத்ததில்லையே. நாட்டுக்கு எது நல்லது என்பதைப் பார்த்து அவர் எழுதி வருகிறார். முதலில் பழைய காங்கிரஸை ஆதரித்தார், அது மறைந்த பிறகு ஜனதா, அதுவும் மறைந்த பிறகு பா.ஜ.க. இதில் அவர் தெளிவாகத்தானே இருக்கிறார்? அதே நேரத்தில் காங்கிரசும் அழிந்துவிடக்கூடாது என்றும் கூறுவதற்கு காரணம் ஜனநாயகத்துக்கு இரு சம பலம் வாய்ந்த கட்சிகள் தேவை என்பதால்தான்.
"சோ சம்மந்தப்பட்ட விவாதமாக திசை மாறுகிறதோ என்று தோன்றுகிறது. என் உத்தேசம் அது இல்லை."
என் உத்தேசமும் அதுவல்ல. தேவையில்லாமல் அவர் பெயரை இழுத்ததால்தான் வந்தான் இந்த டோண்டு ராகவன்.
இப்பின்னூட்டத்தையும் உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய சோ அவர்கள் பற்றியப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மீண்டும் நன்றி டோண்டு. இருப்பவர்களில் நடுநிலை என்பதால் சோவை ஆதரிக்கிறேன் என்கிறீர்கள் - அதை நான் மறுக்கவில்லை. அதுதான் நடுநிலையா என்பதிலேயே எனக்கு உள்ள சந்தேகத்தையே பதிவு செய்கிறேன்.
நீங்கள் முதலில் எடுத்தது இந்த நிலை: "சோ"வின் நடுநிலைமை". (இது ஹிட்லரின் ஜீவகாருண்யம் போல Mutually Exclusive-ஆன பதம் என்பது என் கருத்து:-))
இப்போது எடுப்பது இந்த நிலை:
"இருப்பவர்களில் நடுநிலை என்பதால் சோவை ஆதரிக்கிறேன் என்கிறீர்கள் - அதை நான் மறுக்கவில்லை."
இந்த முன்னேற்றம் போதும் எனக்கு.
இப்பின்னூட்டத்தையும் உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய சோ அவர்கள் பற்றியப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
OK Dondu! You win:-))
The Web Mento is leading Web Design Company in India | web design company in lucknow | affordable web design company in india | web design company in noida offers Offshore Web Development, Outsourcing, E-commerce, Web Design, Multimedia Presentations, SEO and Web Hosting services globally in the world
Post a Comment