Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Mar 2, 2012

அரவான்

வெயில் படத்துக்குதான் முதலில் இப்படி எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் போய் படம் நன்றாக இருந்ததில் ஆச்சரியத்துடன் மகிழ்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே இயக்குநர் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் எதிர்பார்ப்புகளே இல்லை என்று சொல்லமாட்டேன், எதிர்மறை எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ச வெங்கடேசனின் காவல் கோட்டத்துக்கு விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் - ஆயிரம் பக்கத்துக்கு எழுதியதால் இருக்கலாம். படித்த இரண்டு விமர்சனங்களும் இரண்டு துருவங்களில் நின்றன (எஸ் ரா, ஜெயமோகன்). கதை வரட்டு வரலாறாகத்தான் இருக்கும் என ஒரு பிம்பம் மனதில் ஏனோ விழுந்துவிட்டது. அந்தக் கதையின் ஒரு பகுதிதான் படமாக வருகிறது என்று கேள்விப்பட்டதும் இந்தப் படத்தைப் பற்றியும் அபிப்பிராயம் பெரிதாக வரவில்லை.


நாவல் எப்படியோ, இன்னும் தெரியவில்லை. படத்துக்கு கதை மிகவும் நேர்த்தியாக இருந்தது. களவே தொழிலான கிராமங்கள் பணக்கார வீடுகளைக் கொள்ளையடிக்க முயல, காவலே தொழிலான கிராமங்கள் அதே பணக்கார வீடுகளைக் காப்பாற்ற முயன்ற காட்டுமிராண்டித்தனங்கள் முற்றிலுமாக ஒழிந்திராத 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக் கதை. அரவான் என்றதும் முதலில் நமக்கு என்ன தோன்றுகிறது? அதுதான் கதை.





வேம்பூர் ஒரு களவு கிராமம். நான்கைந்து செட் திருடர்கள் போய்த் திருடிக் கொண்டுவரும் கேப்பையில்தான் ஊரே வயிறு கழுவுகிறது, ஒரு செட்டின் தலைவன் கொம்பூதி(பசுபதி) யின் தன் களவுத்திறனால் மயக்கி ரெக்ரூட் ஆகிறான் வரிப்புலி (ஆதி).ஊருக்கு அவமானம் ஏற்படும் நேரத்தில் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்ல வேண்டி வருகிறது. வரிப்புலி சாதா ஆசாமி அல்ல, இரண்டு கிராமங்களால் பலி போடத் தேடப்பட்டு வரும் அரவான் என்ற ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

இரண்டு தனித்தனிக் கதைகள் போல இருந்தன இரண்டு பாதிகளும். களவு இருட்டு கன்னம் வைத்தல் என்றே நகர்ந்த முதல் பாதி, சின்னான் (வரிப்புலி) ஏன் பலிகடா ஆனான் - ஏறத்தாழ துப்பறியும் கதை போல நகரும் இரண்டாம் பாதி.

விரிவான தகவல்களுடன் அடர்ந்த கதையை சோர்வடைய வைக்காமல் அலுக்காமல் கொண்டு சென்ற திரைக்கதை. பீரியட் படம் பார்க்கிறோம் என்ற எண்ணமே வராமல் இயல்பாக நம்மை அவர்கள் உலகத்தில் கொண்டு சென்ற வசனங்கள், காட்சி அமைப்புகள்.

எல்லா நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய வேலையைத் திறம்ப்டச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆதி - படம் முழுக்க ஒரு சுத்தமான காட்சி கிடையாது அவருக்கு. சேற்றில் குதித்து ஓடுவது கன்னம் வைத்து இறங்குவது அடிபட்டு ரத்தம் சிந்துவது.. இதேதான் படம் முழுக்க. எல்லாக் காட்சிகளிலுமே இயல்பான 18ஆம் நூற்றாண்டு இளைஞனாக வாழ்வது சுலபம் அல்ல. அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார். பசுபதியின் திறமையை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதிலும். ஓரிரு காட்சியில் வந்து போகும் பரத், அஞ்சலி உட்பட அனைத்து நடிகர்களுமே தங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

முதல் படமாமே இசையமைப்பாளார் கார்த்திக்குக்கு? ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு நன்றாகவே இருந்தது.

குறைகளே இல்லையா? இருந்தன. ஆனால் மிகைநாடி மிக்க கொளின் மறைந்து போய்விடும் குறைகள்தான். கிராஃபிக்ஸின் மிகக் குறைந்த தரம் இரண்டு காட்சிகளில் நம்மை காட்சியில் இருந்து விலக்கி விடுகிறது - இரண்டாம் பாதியில் தொய்வடைய வைக்கிறது பாடல்கள் போன்ற சில்லறைக் குறைகள்தான்.

சரி, நல்ல கதை. நல்ல திரைக்கதை, நடிப்பு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. இவ்வளவுதானே? இதற்கு ஏன் must see என்று கேப்ஷன் வைக்கிறேன்?

நம்முடைய இருண்ட பழங்காலத்தைப் பற்றிய ஒரு நேர்மையான பதிவு என்பதால். பீரியட் படம் என்றாலே செம்பு நகைகள் பளபளக்க செந்தமிழில் அரசர்கள் உணர்ச்சிவசப்படும் படங்களையே பார்த்த நமக்கு இது ஒரு ஆச்சரியப்படுத்தும் மாறுதல். அரசர் இல்லை, (பாளையத்துக் காரன் ஒரு ஆள் வந்தாலும் அரச மரியாதை எல்லாம் இல்லை) சாதாரண மக்கள் வாழ்க்கை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. கிராமங்களின் தொழில், அவர்களிடையே இருந்த போட்டி பொறாமை, ரத்த வெறி, காட்டுமிராண்டித் தனங்கள் எல்லாம் எந்த விதமான மழுப்பலும் இன்றி இயல்பாக படமாக்கப் பட்டிருக்கின்றன.

இறுதிக் காட்சி, அதற்குப் பின் போடப்படும் ஸ்லைடு - மிக வலுவான தாக்கத்தை உண்டுசெய்தது. மரண தண்டனை எதிர்ப்பை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது.

ஹேட்ரிக் அடித்திருக்கும் வசந்தபாலன் + டீமுக்கு வாழ்த்துகள்.

நிச்சயம் பாருங்கள்.



Aug 26, 2010

எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)

எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?

ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்‌ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.

ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!

ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!

Apr 1, 2010

பதிவர் சங்கம் - என் இரண்டணா

















































Mar 2, 2010

வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!

பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி வருவாயா வரை.

பெரும்பாலான முதல்நாள் விமர்சகர்கள் வித்தியாசமான காதல் கதை என்று பாராட்டியதாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அற்புதம் என்று சிலாகித்ததாலும், மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கௌதம் படங்கள் பிடித்தே இருந்ததாலும் - கவிழ்ந்தேன் - படம் பார்த்ததும்தான் தெரிந்தது, நம் மக்கள் எவ்வளவு காய்ந்துபோயிருக்கிறார்கள், வித்தியாசத்தின் அளவுகோல் எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது!

"மச்சி காதல்ன்றது " என்று நண்பர்களிடம் பேசும் காட்சி ஆர்டினரி.. "எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது" என்று பேசுவது வித்தியாசம்

பாடல் காட்சிகளில் 40 ஆண் 40 பெண் ஆடுவது ஆர்டினரி, 10 ஆண்கள் மட்டும் அக்ரோபாடிக்காக ஆடுவது வித்தியாசம்.

பஸ் ஸ்டேண்டில் சைட்டடிப்பது ஆர்டினரி, கேஎஃப்சிக்கு துரத்திச் செல்வது வித்தியாசம்.

அண்ணன்கள் அரிவாளோடு காதலனைத் தேடுவது ஆர்டினரி, பாக்ஸிங் செய்வது வித்தியாசம்

காதலுக்குத் தடையாக மதம் இருப்பது ஆர்டினரி, காதலுக்குத் தடையாக மதம்+வயது இருப்பது வித்தியாசம்.

எல்லா கதாபாத்திரங்களும் தமிழில் பேசுவது ஆர்டினரி, தமிழில் பேச முயற்சித்து திக்குவது வித்தியாசம். (நல்ல தமிழ் பேசக்கூடிய உமா பத்மநாபன், கிட்டி ஆகியோரும்கூடத் திக்குவது ஸ்பெஷல் வித்தியாசம்)

தங்கை காதலுக்கு உதவுவது ஆர்டினரி, "அவளுக்கு ரூட் போடாதே" என்று சொல்லிவிட்டு பிற்கு போய் காதலியின் கல்யாண ஆல்பம் பார்த்துவிட்டு வருவது வித்தியாசம்.

"அவனைக் காதலிச்சா என் பொணத்துமேலதான் கல்யாணம்" என்பது ஆர்டினரி "Over my dead body" என்பது வித்தியாசம்.

சிம்பு விரலை ஆட்டிக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு பேசினால் ஆர்டினரி, விரலை ஆட்டாமல் பல்லைக்கடித்தால் வித்தியாசம்.

நாயகி முதல் சீனில் நாயகனிடம் திட்டுவாங்கி மூன்றாவது சீனில் காதலுக்கு ஓக்கே சொன்னால் ஆர்டினரி, இடைவேளை தாண்டியபின் சொன்னால் வித்தியாசம்.

கதாநாயகியைத் துரத்திக்கொண்டு கேரளா போய் "மனசுக்குள்ளே காதல் வந்துச்சா" - ஆர்டினரி, "மன்னிப்பாயா" வித்தியாசம்.

கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "என்ன சொல்லப்போகிறாய்" என்பது ஆர்டினரி. கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "ஆரோமலே" என்பது வித்தியாசம்.

நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு குடைக்குள் மழையாகக் கனவு கண்டால் ஆர்டினரி, நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு ஜெஸ்ஸி ரீலீஸாகக் கனவு கண்டால் வித்தியாசம்.

அமெரிக்க மாப்பிள்ளை (பாவம் இந்த ப்ரீட்!) உடனான திருமணம் க்ளைமாக்ஸில் நின்றால் ஆர்டினரி, இடைவேளையில் நின்றால் வித்தியாசம்!

இவை மட்டுமல்ல, நிறைய நிறைய வித்தியாசங்கள் கொட்டிக்கிடக்கின்றன படம் முழுவதும்.
ஸ்லோவாப் போனா க்ளாஸிக் மூவி என்ற அடூர் காலத்து எண்ணத்தில் இருந்து எப்பதான் வெளிய வரப்போறோமோ! நுணுக்கமான விவரணைக்காக திரைக்கதை நொண்டியடித்தால் ஓக்கே - இந்த சப்பை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரங்களுக்கா? அநியாயம்.

நல்ல விஷயமே இல்லையா படத்தில்? இருக்கிறது! அவையாவன: 1. ரஹ்மானின் பின்னணி இசை எனக்குபபிடித்த முதல் படம் இதுதான். 2. ஒளிப்பதிவு - தெள்ளத்தெளிவு. 3. காத்திருந்து வந்த இடைவேளை, 4. நொந்து முடிந்தபின் வந்த சுபம்.

இதிலே பெரிய காமெடி என்னவென்றால், இந்தப்படம் பிடிக்காதவர்கள் கிழவர்கள் என்று ட்விட்டரிலும் பஸ்ஸிலும் மக்கள் அடிக்கும் கூத்துதான். இதே அளவுகோலை வேட்டைக்காரனுக்கும் வைக்கப்போகிறேன். "என்னா ஃபைட்டு.. உங்களுக்கெல்லாம் படம் சுறுசுறுப்பா இருந்தா பிடிக்காதா? வயசாயிடுச்சுப்பா உங்களுக்கு!"

இதனால் அறிவிப்பது என்னவென்றால், நம் மக்கள் விமர்சனத்தின் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டேன்! (இது இந்த விமர்சனத்துக்கும் பொருந்தும்:-)

Dec 26, 2009

நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!

அவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழுவதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-)

12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால் மற்றவர்களை அடிமையாகவும் தாழ்ந்தவர்களாக்கும் எண்ணங்களும் வரலாற்றுக்குப் புதிதல்ல.

நிறைந்த கோப்பை கொண்ட மனிதர்களின் மனத்தில் வேற்று மக்களின் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் புரியாமல் போவதும், அவற்றை காட்டுமிராண்டித்தனமாகப் பார்ப்பதும் நிச்சயமாகப் புதிய விஷயமல்ல. அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காலிக் கோப்பையாளர்களையும் கட்டம் கட்டி ஒழித்ததும் அதே நேரங்களில் நடந்தவைதான்.

இயற்கை கொடுத்த வளங்களைத் தங்கள் தனிப்பட்ட உரிமை என்று நம்பி,அதைப் பங்குபோட வரும் வேறெவரையும் எதிரியாக்கி, வில்-அம்புக்கு துப்பாக்கி, துப்பாக்கிக்கு வெடிகுண்டு என்று ஆயுதங்கள் வளர்த்த தொழில்நுட்பத்தால் எதிரிகளைப் பந்தாடி, இயற்கைக்கு நிரந்தர மாற்றங்களை - திரும்பமுடியாத மாற்றங்களை உண்டுசெய்து, வல்லான் வகுத்த வாய்க்காலில் யாரையுமே வாழவிடாமல் செய்வதும் மனிதர்களின் வழக்கம்தான்.

மனிதனின் இந்த இயற்கையான கேடுகெட்ட மனோபாவத்தை விண்வெளியில் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் கேமரூன்.

மனிதனுக்கும் நாவிகளுக்குமான போராட்டத்தில் ஆரம்பத்தில் மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம்.

பண்டோராவின் வினோத மிருகங்களையும் பூச்சிகளையும் தொங்கும் மலைகளையும் (அல்லேலூயா மவுண்டன் - ஆம். Chomolungma என்று Everest ஐ சொன்னால் நமக்குப் புரியாமல் போனதை குத்திக்காட்டிய ஜெஃப்ரீ ஆர்ச்சரின் Path of Glory நினைவுக்கு வந்தது) பறவைகள் தேர்ந்தெடுக்கும் நாவிக்களையும் தொட்டுவிடும் தூரத்தில் இயல்பாக உலவவிட்ட முப்பரிமாணத்தையும் மீறி..

மனிதர்களை ஒற்றுமையால் வென்று சிறைப்படுத்தி உங்கள் பச்சை இல்லாத கிரகத்துக்கே திருப்பிப் போங்கள் என்று அனுப்பும் இறுதிக்காட்சியையும் மீறி..

இன்னொரு பத்தாண்டுகளில் இன்னும் பெரிய ஆயுதங்களோடு மனிதர்கள் போகத்தான் போகிறார்கள் பண்டோராவுக்கு, ஜெயிக்கத்தான் போகிறார்கள் என்ற வரலாற்று யதார்த்தம் சக நாவியான எனக்குத் தோன்றி வருத்தம்தான் தந்தது.

படம் - நிச்சயம் பாருங்கள், எல்லாரும் பாருங்கள்!

Jun 13, 2008

தசாவதாரம் - முதல்கை (Warning - May contain Spoilers)

கண்டேன் சீதையை பாணியில் முதல்வரி சொல்லிவிடுகிறேன் : படம் பிரமாதம், அவசியம் தியேட்டரில் பார்க்கவேண்டும்.

முதலில் பாராட்ட வேண்டியது திரைக்கதையை. வாஷிங்டன் டோக்கியோ சிதம்பரம் பாண்டிச்சேரி வேளாங்கண்ணி சென்னை என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் பயணிக்கும் ஒரே மெகா துரத்தல்தான் கதை என்றாலும் அதை எந்த விலகலும் இல்லாமல் சுவாரஸ்யம் குறையாமல் எந்த லாஜிக் சம்மந்தப்பட்ட கேள்விகளும் இல்லாமல் ஓடும் திரைக்கதை.

இரண்டாவது ஒளிப்பதிவு. நடுக்கடலில் தொடங்கி நேரு ஸ்டேடியம் வரை மெரினா செண்ட்ரல் வழியாக வந்து கோயிலின் எல்லா நிலைகள் மேல் ஏறி கீழ் இறங்கி சோழன் மந்திரியின் தாடிவரை தடையில்லாமல் ஒரே ஷாட்! பாதி கிராபிக்ஸாக இருக்கலாம் - அது தெரியாமல் செய்திருக்கும் டெக்னாலஜி.

மூன்றாவது கமல்! ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் 3 கமலாவது இருக்கிறார்கள் - வழக்கமான டபுள் ஆக்ஷன் படங்கள் போல மரியாதையான தூரத்தில் அல்ல - ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, துவைத்துக்கொண்டு, துரத்திக்கொண்டு. எந்த நேரத்திலும் மெயின் கேரக்டர் தவிர வேறு யாரும் கமல்தான் என்ற எண்ணம் வராமல் இருப்பது பெரிய ஆச்சரியம். ஜார்ஜ் புஷ்ஷின் மரியாதைப்பட்ட ஆங்கிலம், ப்ளெட்சரின் அலட்சிய ஆங்கிலம், பல்ராம் நாயுடுவின் தெலுங்கு வாடை குப்பென்று அடிக்கும் தமிழ், மலையாளம் கலந்த பூவராகன் தமிழ், அக்ரஹாரத்து பாட்டி தமிழ், ஏன் ஜப்பானிஸ் கூட :-) ஒவ்வொரு வேடத்துக்கும் மேக்கப் மட்டுமின்றி உடல்மொழி, நுணுக்கமான விவரங்கள்.. முகத்தில் மாஸ்க் ஒட்டுவது மட்டும் வேடம் போடுவது அல்ல!

அடுத்து வசனங்கள்..
நண்பனின் மனைவி - life has to go on - நான் ஹிரோஷிமாவால் பாதிக்கப்பட்டவள் - வாழ்க்கையைத் தொடராமலா விட்டேன்?-
ஜார்ஜ் புஷ் கேட்கிறார் - நியூகிளியர் வெப்பன் போட்டால் பிரச்சினை தீருமா?
நான் கடவுள் இல்லைன்னா சொன்னேன்? இருந்திருக்கக்கூடாதான்னுதான் சொன்னேன்!
போடா.. கருத்துட்டான்றதுனால என் மகனா இல்லாம போயிடுவானா?

டெக்னாலஜியை முழுமையாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் - பலநேரங்களில் தமிழ்ப்படம் பார்க்கும் நினைப்பே இல்லை.

என் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லைதான். 10 வேடங்கள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. அதாவது, கமலே நடித்தாக வேண்டிய வேடங்கள் என்று இல்லாமல், முக்கியமான எல்லாப் பாத்திரங்களிலும் அவரே வியாபித்திருக்கிறார். ஜார்ஜ் புஷ் ஆகவும், சி ஐ ஏ முன்னாள் ஏஜண்ட் ஆகவும் ஜப்பானிய கராத்தே மாஸ்டர் ஆகவும் நடிக்கவேண்டிய எந்த அவசியமும் தெரியவில்லை. மேக்கப் சில வேடங்களுக்கு கடுப்பேற்றுகிறது. 7 அடி கைஃப் உல்லாவும் ஜார்ஜ் புஷ்ஷும் பொம்மை போலத்தான் நடமாடுகிறார்கள்!

பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது!

ரங்கராஜன் நம்பி காட்சிகள் மெகா மிரட்டலாக இருந்தாலும், அதற்கும் மற்ற காட்சிகளுக்கும் என்ன சம்மந்தம் என்றே தெரியவில்லை!

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஒரு தீவிர ரசிகர், கேஎஸ்ரவிகுமார் டச்சே இல்லியே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். தெரிந்த ஆளாயிருந்தால் சொல்லி இருப்பேன், நான் மகிழ்ச்சி அடையறதே அதுக்குதான் சார் என்று :-)

சுரேகா எழுதி இருந்தார் - எந்த முன்முடிவும் இல்லாமல் போனால், 3 மணிநேரம் மெகா எண்டர்டெயின்மெண்ட் என்று - அதை நிச்சயம் வழிமொழிகிறேன்.

 

blogger templates | Make Money Online