Dec 26, 2009

நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!

அவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழுவதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-)

12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால் மற்றவர்களை அடிமையாகவும் தாழ்ந்தவர்களாக்கும் எண்ணங்களும் வரலாற்றுக்குப் புதிதல்ல.

நிறைந்த கோப்பை கொண்ட மனிதர்களின் மனத்தில் வேற்று மக்களின் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் புரியாமல் போவதும், அவற்றை காட்டுமிராண்டித்தனமாகப் பார்ப்பதும் நிச்சயமாகப் புதிய விஷயமல்ல. அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காலிக் கோப்பையாளர்களையும் கட்டம் கட்டி ஒழித்ததும் அதே நேரங்களில் நடந்தவைதான்.

இயற்கை கொடுத்த வளங்களைத் தங்கள் தனிப்பட்ட உரிமை என்று நம்பி,அதைப் பங்குபோட வரும் வேறெவரையும் எதிரியாக்கி, வில்-அம்புக்கு துப்பாக்கி, துப்பாக்கிக்கு வெடிகுண்டு என்று ஆயுதங்கள் வளர்த்த தொழில்நுட்பத்தால் எதிரிகளைப் பந்தாடி, இயற்கைக்கு நிரந்தர மாற்றங்களை - திரும்பமுடியாத மாற்றங்களை உண்டுசெய்து, வல்லான் வகுத்த வாய்க்காலில் யாரையுமே வாழவிடாமல் செய்வதும் மனிதர்களின் வழக்கம்தான்.

மனிதனின் இந்த இயற்கையான கேடுகெட்ட மனோபாவத்தை விண்வெளியில் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் கேமரூன்.

மனிதனுக்கும் நாவிகளுக்குமான போராட்டத்தில் ஆரம்பத்தில் மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம்.

பண்டோராவின் வினோத மிருகங்களையும் பூச்சிகளையும் தொங்கும் மலைகளையும் (அல்லேலூயா மவுண்டன் - ஆம். Chomolungma என்று Everest ஐ சொன்னால் நமக்குப் புரியாமல் போனதை குத்திக்காட்டிய ஜெஃப்ரீ ஆர்ச்சரின் Path of Glory நினைவுக்கு வந்தது) பறவைகள் தேர்ந்தெடுக்கும் நாவிக்களையும் தொட்டுவிடும் தூரத்தில் இயல்பாக உலவவிட்ட முப்பரிமாணத்தையும் மீறி..

மனிதர்களை ஒற்றுமையால் வென்று சிறைப்படுத்தி உங்கள் பச்சை இல்லாத கிரகத்துக்கே திருப்பிப் போங்கள் என்று அனுப்பும் இறுதிக்காட்சியையும் மீறி..

இன்னொரு பத்தாண்டுகளில் இன்னும் பெரிய ஆயுதங்களோடு மனிதர்கள் போகத்தான் போகிறார்கள் பண்டோராவுக்கு, ஜெயிக்கத்தான் போகிறார்கள் என்ற வரலாற்று யதார்த்தம் சக நாவியான எனக்குத் தோன்றி வருத்தம்தான் தந்தது.

படம் - நிச்சயம் பாருங்கள், எல்லாரும் பாருங்கள்!

18 பின்னூட்டங்கள்:

ஜீவன்பென்னி said...

நல்ல பகிர்வு.

சுவாசிகா said...

வித்தியாசமான் திரைப்பார்வை!

//சக நாவியான எனக்குத் தோன்றி வருத்தம்தான் தந்தது//

யேய்..நான் மனுசனே இல்லைன்னு சொல்ல வரீங்க போல :-)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ஆயில்யன் said...

//மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம். ///

நாவிகளின் மேல் கருணை அனுதாப பார்வை கொள்ள வைக்கும் படமா? நிச்சயம் வித்தியாசமானதொரு திரைக்கதை முயற்சிதான் - பார்க்க முயற்சிக்கிறேன் - (இங்க எப்ப வருமோ?)

ஒப்பாரி said...

எனக்கும் இதுதான் படத்தின் உள்நோக்கம் என்பது தெளிவாக பட்டது, மனிதனின் கால்படாத காடுகள் பண்டோராவைவிட அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்ததாக இருந்திருக்குமோ என்னவோ? இயற்கையோடு இதயத்தை ஒன்றினைத்து வாழும் நாவிகளாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் திரைகதையின் வெற்றி.

Prathap Kumar S. said...

நல்ல கருத்துக்கள். வித்தியாசமான பார்வை...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பினாத்தல் :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்ல பதிவு,
// சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு // - இத மாத்தவே முடியாது.
பார்க்க வேண்டிய படம் தான்

ஷண்முகப்ரியன் said...

அப்பாடா.சக ரசிகர் ஒருவரைச் சந்திப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது,சுரேஷ்.
பெரு மகிழ்ச்சியைத் தந்த விமர்சனம்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜீவன்பென்னி.

நன்றி கேசா.மீ :-)

சக நாவி என்பதன் அர்த்தம் நானும் 12 அடி நீலம் என்பதல்ல :-) படம் பாருங்கள் என் அங்கலாய்ப்பு புரியும்.

ஆயில்யன், ஆமாம். பாத்துடுங்க.

பினாத்தல் சுரேஷ் said...

ஆம் ஒப்பாரி. கதை திரைக்கதை ஆசிரியர்களின் ஏக்கம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. பின்னலை இணைத்தால்தான் குதிரை புறப்படும், பின்னல் மூலம்தான் ஏவா அருள் பாலிப்பாள், ”இரவல் வாங்கிய சக்தி” என்ற பவர்புல் வசனம்.. இதுதான் கரு.

நன்றி நாஞ்சில் பிரதாப்.

நன்றி அக்பர்.

நன்றி ஷண்முகப்ரியன். 3டி, கணினி வரைவியல் எல்லாம் மாத்திரையை மறைத்த இனிப்புப்போர்வை.

Thamira said...

நல்ல பகிர்வு.

Jazeela said...

ரொம்ப காலத்திற்கு பிறகு 3டி படம். எது கிராபிக்ஸ் எது நிஜமென்று தெரியாத அளவுக்கு காட்சியமைப்பு. எப்படிதான் இப்படிலாம் சிந்திக்கிறார்களோன்னு சிந்திக்க தோணுது. ரொம்ப சுருக்கமா அழகா நச்சுன்னு சொன்ன பதிவு.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.

நன்றி ஜெஸிலா.

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

வடுவூர் குமார் said...

போன வாரம் இப்படம் பார்க்க மஸ்கட் முழுவதும் சுற்றி பார்க்க முடியாமல் திரும்பினோம் - கூட்டம் காரணமாக இல்லை,இன்னும் இங்கு திரையிடப்படவேயில்லை என்பது தான் சோகம்.
இத்தனைக்கும் நாட்டின் தலைநகரத்தில்.

rhariharasudhan05 said...

ரெம்ப அருமை!

உங்க விமர்சனம் அவதார் படத்தோட "கதை கருவை" அப்படியே உணரவைக்குது மேலும்!

//மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம். ///

தாங்கல் "நாவிகல்" என்று சொன்னிர்கள் அதற்க்கு என்ன அர்த்தம் என்பது என்னக்கு புரியவில்லை - தாங்கல் தயவு செய்து அர்த்தம் தெரிவிக்கவும்...!

மற்றபடி உங்கள் விமர்சனம் - ! சன் டிவி - திரை விமர்சனம்.!

சூப்பர் அப்பு!

நன்றி
ர. ஹரிஹர சுதன்

Anonymous said...

தொழில்நுட்ப விஷயத்தில் யாரும் தொட முடியாது தான். ஆனால், அடிப்படையில் ஒரு காதல் கதை தான். கதாநாயகன் ' ...பின்னால் நான் நிஜமாகவே காதலில் விழுந்து விட்டேன்' என்பது நிச்சயம் நமக்கு புதிது இல்லை தானே.

-மணிகுமார்

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

 

blogger templates | Make Money Online