Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Mar 23, 2011

எங்கே தேடுவேன்.. தலைவனை எங்கே தேடுவேன்.. (Flash - தேர்தல் ஸ்பெஷல்)

பினாத்தல்கள் வழங்கும் மற்றுமொரு ஃப்ளாஷ் குவிஸ்.

தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித்தலைவர் பாடிவிட்டுப்போய்விட்டார். ஆனால் அந்தத் தலைவன் / தலைவி எங்கே இருக்கிறார்?

இந்த ஃப்ளாஷில் ஒருவேளை இருக்கலாம் :-)

விளையாட்டு ரொம்ப சிம்பிள். பதினாறு அரசியல்வாதிகள் போட்டோக்கள் ஃப்ளாஷின் வலதுபக்கத்தில் இருக்கும். பத்து கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான அரசியல்வாதியை க்ளிக் செய்து உறுதி செய்து அடுத்த கேள்விக்குச் செல்லவேண்டியதுதான்.

வெயிட்.. வாட் இஸ் திஸ் பொருத்தமான?

அதற்குத்தான், க்ளூ தர ஃப்ளாஷின் இடதுபக்கத்தில் ஒரு சிறு அனிமேஷன் க்ளிப்; அந்த அசைபடத்தில் வரும் விஷயங்கள் எந்த அரசியல்வாதிக்குப் பொருத்தம் என்பதைத் தேர்ந்தெடுத்து, க்ளிக்க வேண்டும்.

கடைசியில் வரும் கோடை எனக்கு அனுப்பினால், அதை நான் இங்கே அப்டேட் செய்துவிடுவேன்.



Sep 22, 2010

அமரர் கல்கி சிறுகதைப் போட்டியும் நானும்

அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்கு தேர்வு பெற்ற கதை

Kalki Suresh


நன்றி: கல்கி
நன்றி: என்றும் துணைநிற்கும் சக எழுத்தாளர்கள்

Oct 29, 2009

படுக்கை - சிறுகதை

படுக்கையில் கிடந்தான் கிழவன். எவ்வளவு நாள் ஆசைப்பட்டிருப்பேன் இவனை இப்படிப்பார்க்க.

”தேவா”

கவனிக்கவில்லை. அவனை இந்தப்பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை.

“தேவா.. கண்ணைத் திறந்து பாரு”

புரண்டு படுக்க முயற்சித்தான். குத்தல் வலியில் முகம் அஷ்டகோணல் ஆனது. இந்த நிலையில் இருப்பவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறுதான். இருந்தாலும் என்னால் மகிழ்ச்சியை மறைக்கமுடியவில்லை.

“நீயா? இப்ப திருப்தியா இருக்கணுமே”

“திருப்தி? அதை நான் இழந்து பல ஜென்மம் ஆச்சு.”

“இன்னுமா உன் கோபம் அடங்கல?”

“அவ்வளவு சுலபமா? உன் வீரத்தை என்கிட்ட எத்தனை முறை காமிச்சிருக்கே? இப்பதானே நான் ஆட ஆரம்பிச்சிருக்கேன்!”

வலியிலும் கிழவனுக்கு சிரிப்பு வந்தது,

“நீயா? இப்ப ஆடறியா? நீ ஜெயிச்சிட்டதா நினைக்கிறயா?”

”தெரியும் தெரியும். இப்பவும் எதாச்சும் சொல்லுவே. இப்படி நீ படுக்கையா கிடக்கறதுக்கு நான் காரணம் இல்லன்னு சொல்லுவே”

”நீ நம்பமாட்டே. ஆனாலும் சொல்றேன். நீ இல்லை!”

அதே சிரிப்பு. பலவருடங்கள் முன்பு எரிச்சலை ஏற்படுத்திய அதே சிரிப்பு.

தேவா அப்போது மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அப்போதும் என்னைப்பார்க்கையில் கிழவன் தான்.

நான் பயணத்தில் களைத்துப் போயிருந்தேன். ஏமாற்றங்களில் அடிபட்டிருந்தேன்.

”திரும்ப வந்துட்டியா? போன வேலை?” உண்மையான கனிவோடு கேட்பவன் போலவே கேட்டான்.

தலையை ஆட்டினேன். கண்ணீர் அவனுக்கு கதை சொல்லியிருக்கும்.

”என்ன பண்ணப்போறே?”

எச்சிலை விழுங்கிக்கொண்டேன். இவனிடம் எப்படிச் சொல்வது?

“நீங்க..” வார்த்தை திக்கியது.

“நான்?” தேவாவின் முகம் குழப்பமானது.

“நான் உங்களை..”

“என்னை?” வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளி அவனைத் துன்புறுத்தியது போல.

“நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறீங்களா” சொல்லியே விட்டேன். இந்தக் கிழவனைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லும் அளவுக்கு விதி என்னைக் கொண்டு விட்டதை நினைத்து இலக்கில்லாத கோபம் வந்தது. விதியா? இவனா? இல்லை என் கோபத்தின் இலக்கு இவன் தான்.

உடனே பதில் வரவில்லை. என்னை ஏற இறங்கப் பார்த்தான். என் அழகு பருவத்தின் உச்சத்தில் இருந்த நேரம் அது. சம்மதித்து விடுவான். எங்கே போகிறான். கல்யாணம் மட்டும் ஆகட்டும். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம். வட்டியும் முதலுமாக.

இந்த வயதில் இவ்வளவு அழகான பெண் கிடைத்திருக்கிறாள். முதலில் அவன் கண்ணில் தெரிந்தது ஆசைதான். ஆனால் கொஞ்ச நேரம்தான். நடைமுறைச் சிக்கல்களை நினைத்திருப்பான் போல. ஆசை போய் ஏமாற்றம் வந்தது.

“என்ன பேத்தறே? உன் வயசென்ன என் வயசென்ன? இந்தக் கிழவனை ஆசையா படறே?” அவன் குரலில் அது உண்மையாக இருந்துவிடக்கூடாதா என்ற ஆசை இருந்தது.

“நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா எனக்கு வேற வழி இருக்கா?”

உண்மை சுட்டிருக்கவேண்டும். கோபமாக எழுந்தான்.

“உனக்கு வேற வழி இருக்கான்னு தெரியாது. எனக்கு வேற வழி இருக்கு. நீ எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?”

ஒருவேளை பொய் சொல்லியிருந்தால் கிழவன் அன்றே மசிந்திருப்பானோ என்று பலமுறை பிறகு யோசித்திருக்கிறேன். எவ்வளவு சுலபமாக முடிந்திருக்கவேண்டிய பழிவாங்கல். எத்தனை வருடங்கள் இழுத்துவிட்டது. ஆனால்.. இன்றாவது முடிந்ததே. கிழவனை திருப்தியாகப் பார்த்தேன். முனகிக்கொண்டுதான் இருந்தான்.

“நான் அன்னிக்கே உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டிருப்பேன். ஆனா ரொம்ப சீக்கிரமா படுக்கையில விழுந்திருப்பேன். உன்னோட ஆசையும் அதுதான்னு எனக்கும் தெரியும்” தேவா ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் வலி தெரிந்ததில் என் வெறி தணிந்தது.

“உன்னோட ஆசை மட்டும் இல்ல.. என்னோட ஆசையும் அதுதான். சொல்லப்போனா அன்னிக்கு உன்னை ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு என்னை நானே திட்டிக்காத நாளே கிடையாது.”

சாகும் நேரத்தில் பேசுகிறான். ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

“பாழாப்போன கௌரவர்கள், பாண்டவர்கள்.. அவங்க நல்லதை நினச்சு பிரம்மச்சரியம் பேசியே என் வாழ்க்கையை கெடுத்துகிட்டேன். உன் வாழ்க்கைய சர்வநாசம் செஞ்சிட்டேன். சால்வன் உன்னை திருப்பி அனுப்புவான்னு எதிர்பார்க்கவே இல்லை. அம்பா.. என்னை மன்னிச்சுடு..” அம்புகள் புரள ஆசைப்பட்டபோதெல்லாம் குத்தியதில் புதிதாக ரத்தம் பீரிட்டது.

“இப்ப என் பேர் அம்பா இல்லை. சிகண்டி” திரும்பினேன் நான்.
***

May 21, 2009

பேருந்துகளுக்கு கலர் அடிக்கலாம் வாங்க! (Flash)

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாஷுடன் வந்திருக்கிறேன்.

பேருந்துகளுக்கு கலர் அடிக்க வேண்டும். இதான் விளையாட்டு. 7 பேருந்து, 7 கலர் காம்பினேஷன் கீழே கொடுத்திருக்கிறேன். எந்தப் பேருந்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம்? அதான் கன்ப்யூஷன்.



எந்தக் கலர் எந்த வண்டிக்கு சூட் ஆகும்? வண்டியோட ஓட்டுநர் என்ன நினைக்கிறார், நடத்துநர் என்ன நினைக்கிறார்? வண்டியில என்ன சினிமா ஓடுது, அந்த வண்டியில ஏறிட்ட பயணிங்க என்ன நினைக்கிறாங்க - இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு, தனித்தனியா கொடுத்திருக்கேன். அதை மறைக்க ஒரு பட்டை - ஒரு க்ளிக் பண்ணா எழுத்து தெரியும். இந்த க்ளூவெல்லாம் வச்சு, கீழே இருக்க ஏழு கலர் காம்பினேஷன்லே இருந்து இந்தப்பேருந்துக்கு கரெக்டா கலர் அடிக்கணும். அவ்வளவுதான் கேம்.



கலர் கரெக்டுதான்னு உறுதிப்படுத்திட்டீங்கன்னா, அடுத்த பேருந்து ரெடியா நிக்கும். அதுக்கும் க்ளூவைப்பாத்து கரெக்டா கலர் அடிங்க. எல்லா பஸ்ஸும் முடிச்சிட்டீங்கன்னா எத்தனைக்கு கரெக்டா கலர் அடிச்சீங்கன்னு மார்க்கும், எவ்வளவு க்ளூ உபயோகப்படுத்தினீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி போனஸ் கூட கிடைக்கும் - அதாவது இருக்கற 4 க்ளூவில் 2லேயே கண்டுபிடிச்சிட்டா அதிக போனஸ்!

அங்க இருக்கிற கோட் - ஐ பின்னூட்டமா போட்டீங்கன்னா நீங்க எவ்வளவு வாங்கினீங்கன்னு நானும் தெரிஞ்சுக்குவேன்.



யார்யார் சரியான விடை சொல்லி இருக்காங்கன்னு இங்கே உடனுக்குடனே பதிவாயிடும்.





இது சங்கமம் போட்டிக்காக உருவாக்கப்பட்ட ப்ளாஷ். நேரம் வரும்போது அங்கேயும் வந்து ஓட்டுப் போட்டுடுங்க!

Mar 19, 2009

நாற்பது மாத்திரைகள் (சங்கமம் போட்டிக்கதை)

தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை. விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாப்பில் இறங்கி இவ்வளவு தூரமா நடக்கவேண்டும் ஹாஸ்டலுக்கு? வீட்டில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹாஸ்டலில் இருந்து அவசரமாக வரச்சொல்லி போன் வர கல்லூரியின் இரவுமுகம் தரிசனம்.

ஹாஸ்டல் வாசலிலேயே இருந்தார் வார்டன். என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.


“ஏண்டா இவ்ளோ நேரம்.. எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல?”

“பஸ் கிடைக்கல சார்”

”கிளம்பு திரும்ப.. ஹாஸ்பிடலுக்கு எடுத்துகிட்டு போயிட்டாங்க சுந்தரமூர்த்தியை”

“என்ன ஆச்சு சார் அவனுக்கு.. போன்லேயே ஒண்ணும் சொல்லல”

“எனக்கென்ன தெரியும். பவுண்டனுக்கு அடியில விழுந்து கிடந்தான். குடியா கஞ்சாவா தெரியல”

“அவன் அப்படிப்பட்ட பையன் இல்ல சார்”

“நானும் அப்படிதான் நினைச்சுகிட்டிருந்தேன். எவ்ளோ தட்டினாலும் சுரணையே இல்லாம சிரிச்சுகிட்டிருக்கான்.. நேரா பாக்கவே மாட்டேங்கறான். வாய்யா வேஸ்ட்வாட்டர்ன்றான் என்னைப்பாத்து”

வார்டன் பெயர் தண்டபாணி. மொழிபெயர்த்து வேஸ்ட்வாட்டராகத் தான் எல்லாராலும் அறியப்பட்டார். சூழல் புரியாமல் சிரிப்பு வந்தது.

”எந்த ஹாஸ்பிடல் சார்?”

“கவர்மெண்டு ஹாஸ்பிடல்தான். சரி இரு நானும் வரேன். சூசை.. பாத்துக்கடா இங்கே”

மாவு மெஷினை ஞாபகப்படுத்தும் சத்தத்தோடு கிளப்பினார் அவர் டிவிஎஸ்ஸை. ஸ்வெட்டர் போடாமல் வந்துவிட்டேன் அவசரத்தில். நள்ளிரவின் குளிர் உடம்புக்குள் ஊடுருவியது. மலைப்பகுதியின் இருள் குளிரை ஏற்றியதாகத் தோன்றியது. ஏன் இந்த ஆள் இவ்வளவு ஸ்லோவாக வண்டி ஓட்டுகிறார்? வண்டி ஓடும்போதே ஷேவிங் செய்துகொள்ளலாம் போல.

மருத்துவமனையின் கிராதிகள் இழுத்து பூட்டப்பட்டிருந்தன. தினத்தந்தி மேல் படுத்திருந்த ஆள் புரண்டு படுக்குமுன் “சத்தம் போடுங்க சார். வாட்ச்மேன் வருவான்”

“என்னா வேணும்? டாக்டரெல்லாம் காலைலேதான் வருவாங்க” தூக்கம் கலைந்த அதிருப்தி வாட்ச்மேன் குரலில் தெரிந்தது.

“சுந்தரமூர்த்தின்னு ஒரு பையன்.. காலேஜ்லே இருந்து கொண்டு வந்தாங்க”

“அந்த தற்கொலை கேஸா? காலைலதான் பாக்கமுடியும்”

தண்டபாணி அவனுக்கு கிட்டத்தில் சென்று குசுகுசுக்க, கதவு திறந்தது.

பொது வார்டில் காலையில் போட்ட டெட்டால் கரைந்துவிட்டிருந்தது. மருத்துவமனை நாற்றத்தைவிட சாக்கடை நாற்றம்தான் அதிகம் வீசியது. கட்டிலை மீறி நோய்க்கூட்டம் தாண்ட கீழே பாய்போட்டு சலைனுக்கு மட்டும் கம்பி வைத்திருந்தார்கள். பாட்டிலையும் லுங்கியையும் ஒரு சேரப்பிடித்து குந்தி இருந்த ஆள் நான் கடக்கையில் “பீடி இருக்கா தம்பி” என்றான்.

சுந்தரமூர்த்திக்கு எப்படியோ கட்டில் கிடைத்துவிட்டிருந்தது. அருகில் கோபியும் சேகரும் உட்கார்ந்திருந்தார்கள். பெரிய வாளியில் தண்ணீர், ஒரு குழாய், இன்னொரு வாளி. “குடிரா சுந்தர்” தண்ணீரை மக்கில் புகட்டிக்கொண்டிருந்தார்கள்.

“என்ன ஆச்சு கோபி?”

“தூக்க மாத்திரை போட்டுகிட்டானாம்டா”

தூக்க மாத்திரை? நேற்று சாயங்காலம் அவனுடன் மார்க்கெட்டில் அலைந்தது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு பார்மஸியாக உள்ளே போய் வெளியே கவருடன் வந்துகொண்டிருந்தான்.

“எதுக்குடா நாலஞ்சு கடைக்கு போறே?”

“என் தாத்தா ஊருக்கு போறாரு.. அவருக்கு நிறைய மாத்திரை தேவைப்படுது. பிரிஸ்கிருப்ஷன்லே 10 மாத்திரைதான் போட்டிருக்கான்”

”தாத்தா” வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.

”டாக்டர் பாத்தாரா?” சுற்றுவட்டாரத்தில் மருத்துவமனை சார்ந்த யாரையுமே காணவில்லை. தூங்கிக்கொண்டிருந்த எல்லாரையும் விழிக்க வைக்கும் அளவுக்கு லொக் லொக்கிக் கொண்டிருந்தார் மூன்றாம் பெட். அவருக்கு வாந்தி சத்தத்தில் சவால் விட்டுக்கொண்டிருந்தான் சுந்தர்.

வார்டின் முடிவில் நர்ஸின் வெள்ளுடையும் போன் பிடித்த கையும் தெரிந்தது.

“நர்ஸ்தான்.. டாக்டர்கிட்ட போன்லே பேசி ட்ரீட்மெண்ட் கொடுக்கறாங்க”

நர்ஸ் சேச்சி “வாந்தியிலே மாத்திரை வந்துச்சா? என்ன மருந்து போட்டான்ன்னு டாக்டர் கேக்குறார்” போனில் டாக்டர் பக்கத்தை கைவைத்து மூடியிருந்தாள்.

சுந்தரின் சட்டைப்பையில் இருந்த காகிதக்குப்பைகளில் மாலை பார்த்த மருந்துச்சீட்டை கண்டுபிடித்து எடுத்து நர்ஸிடம் கொடுத்தேன்.

“எத்தனை போட்டு?”

எனக்குத் தெரிந்து நாலு கடை.. “நாப்பது” என்றேன்.

”ஈ மருந்து ஒண்ணும் செய்யா.. சரியாப்போவாம்.. டாக்டர் பறஞ்சு”

நாப்பது மாத்திரையுமா ஒண்ணும் செய்யாது?

“ரெண்டு நாள் தூங்கும். சலைன் போட்டு. வாந்தி வேணாம்”

கோபி முகத்தில் மகிழ்ச்சி. அப்பாடா ஸ்கேவஞ்சர் வேலை பார்க்கவேண்டாம்.

“வெத்துக்கு டென்ஷன் ஏத்திட்டாண்டா”

“என்ன சொல்ற நீ? செத்தாதான் உனக்கு திருப்தியா?”

“அட.. தெரிஞ்சே பிலிம் காமிச்சானா தெரியாமயா?”

“இல்லடா. ஒரு வாரமாவே சீரியஸா யோசிச்சுகிட்டுதான் இருந்தான். அபூர்வ சகோதரர்கள் ரிலீஸன்னிக்கு கூப்டேன். அதுக்குக்கூட வரலை”

“என்ன மேட்டர்? இப்ப எதுவும் ரிஸல்டு கூட வரலையே?”

“வந்துச்சே போன வாரம் ஒரு ரிஸல்டு”

“யாருகிட்ட ஊத்தற? எனக்கும்தான் நாலு கப்பு இருக்கு. என்ன ரிஸல்டு வந்துச்சு?”

“அட எக்ஸாம் ரிஸல்டு இல்லப்பா.. லதா ரிஸல்டு”

“குள்ளி லதாவா? இந்த சொன்னையா? தேவையா இவனுக்கு இதெல்லாம்?”

“சும்மாவா? கவிதையா இல்ல பொழிஞ்சாரு அண்ணன்!”

“செருப்பால அடிச்சிருப்பாளே?”

“இல்லை.. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. தனியா கேண்டீன் பக்கம் போய் ரெண்டு மணிநேரம் அட்வைஸ். உனக்கு என்ன வயசு.. நாம படிக்க வந்திருக்கோம்.. உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.. ஆர் சுந்தரராஜன் பட ஹீரோயின் மாதிரி அட்வைஸ்! திருந்திடுவான்னு நினைச்சேன். இப்படி மாத்திரை வரைக்கும் போவான்னு நினைக்கலை”

சுந்தரமூர்த்தி சற்று அசைந்தான். கண் திறந்தது. “நான் எங்கே இருக்கேன்? சொர்க்கத்திலயா?”

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சொர்க்கமா தெரியுதாம்டா.. அந்த மாத்திரை இனிமே மார்க்கெட்லே செம பிக்கப் ஆயிடும்” சேகருக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி.

“ஏண்டா லூஸு இப்படி பண்ணே? அந்த மாத்திரை அவ்ளோ டேஞ்சரஸ் இல்லையாம் தெரியுமா?”

“என்ன சொல்ற கோபி? டேஞ்சரஸ் இல்லாத மாத்திரையைப் போட்டதையா லூஸுத்தனம்ன்றே?”

“நான் சாகறதுக்குள்ள .. அவளை.. ஒரு முறையாச்சும் .. பாக்கணும்..” குண்டடி பட்ட கதாநாயகன் போல திக்கித் திக்கிப் பேசினான்.

“என்னடா பண்ணலாம்? அவ வீடு பக்கத்துலதான். வேணா போய் மேட்டர் சொல்லி கூப்டிட்டு வரட்டுமா?”

“நடு ராத்திரியிலயா? அவங்க வீடுல அலவ் பண்ணமாட்டாங்களே.. அதுவும் இல்லாம இது என்ன மரணப்படுக்கையிலயா கிடக்குது?”

“இதாண்டா சான்ஸ். சேத்துவைக்க ஒரு ட்ரை பண்ணுவோமே? அனுதாபம் வொர்க் அவுட் ஆனா ஆவட்டுமே?வேஸ்ட்வாட்டர் வெளியதான் இருக்காரு- அவரைக்கூட்டிட்டு போனா அலவ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்”

“அவனைவிட நீ அதிகமா எக்ஸைட் ஆவறே!” கோபிக்கு ஏனோ என் ஐடியா பிடிக்கவில்லை.

”அட ஒழிஞ்சு போறாண்டா.. ஒரு ட்ரை அடிக்கலாமே” சேகர் ஓட்டும் என் பக்கம் சேர்ந்தது.

வார்டனுடன் கிளம்புகையில் “நான் வரேண்டா.. சேகர் இங்க இருக்கட்டும்” எனச் சேர்ந்துகொண்டான் கோபி.

ஐந்து நிமிடம் ஆனது லதா வீட்டுக் கதவு திறக்க. தெருவின் அத்தனை நாய்களும் எங்களை விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.லதாவின் அப்பா தூக்கம் நிரம்பிய கண்கள் சிவக்க கோபமாகத் தெரிந்தார். விஷயம் சொன்னவுடன் லதாவை எழுப்பினார்.

“அச்சச்சோ.. இப்ப எப்படி இருக்கார்?”

“எதுவும் சொல்றதுக்கில்லை.. உன் பேரையே சொல்லி புலம்பிகிட்டிருக்கான்” பில்ட் அப் தானே முக்கியம்.

”இதோ ஒரு பைவ் மினிட்ஸ்லே ரெடி ஆயிடறேன்.. உங்களுக்கு சில்வர் ப்ளஸ் ஓட்டத் தெரியுமா?” கியர் வண்டி. இரவில் முதல்முறை முயற்சிக்க வேண்டாமே என நான் தயங்க “நான் ஓட்டுவேன்” என்றான் கோபி.

”அப்ப நாங்க கிளம்பறோம். கோபி, நீ கூட்டிகிட்டு பத்திரமா வந்துரு. ரொம்ப தாங்க்ஸ் சார்” தண்டபாணி லதா அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டார்.

சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.

எங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் நேராக சுந்தரமூர்த்தியிடம் சென்று அவனை உலுக்கினாள்.

“எழுந்துருடா.. லூஸுப்பயலே! பொண்ணுங்கன்னா மட்டம்னு நினைச்சயாடா பொறுக்கி. உனக்கு உன் உயிருக்கு மரியாதை இல்லாம இருக்கலாம்.. எனக்கு அப்படி இல்லை”

“லதா.. அது வந்து”

“நிறுத்துடா இடியட். போன வாரம் கூட உன்னை புத்திசாலின்னுதான் நினைச்சேன்.. ஒருவேளை மனசுகூட மாறி இருக்கலாம். இப்ப சான்ஸே இல்லை. சாதாரண விஷயத்துக்கு மாத்திரை வரைக்கும் போற ஒரு அடிமுட்டாளோட எனக்கு எந்த ரிலேஷன்ஷிப்பும் எந்தக் காலத்துலேயும் வராது.”

“..” சுந்தருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வாயடைத்துதான் போய்விட்டது. மூன்றாம் நம்பர் பெட் இருமல்கூட நின்றுவிட்டது. ஆஸ்பத்திரியில் அதுவும் நள்ளிரவில் யாரும் இப்படி ஒரு சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கவில்லை. சுந்தர் கை நடுங்கியது முன்பிருந்தேவா இப்போதுதான் ஆரம்பித்ததா தெரியவில்லை.

“நான் பலமுறை சொல்லிட்டேன்.. உன்ன மாதிரி ஒரு ஃபூலோட என் லைபை கமிட் பண்ணிக்க நான் தயாரா இல்லை.. இதுக்கு மேலே செத்தா சாவு போ!”

“கோபி, என்னை ட்ராப் பண்ணிடறீங்களா?”

நல்லவேளையாக சுந்தரமூர்த்தி அதற்குப்பிறகு எந்த முயற்சியும் செய்யவில்லை.

லதா பத்ரகாளியாக மாறியது எனக்கென்னவோ குழப்பமாகவே இருந்தது. நிஜமாகவே கோபமா அல்லது சுந்தர் திருந்துவதற்காக கொடுத்த அதிர்ச்சி வைத்தியமா.. ரொம்ப நாட்களுக்கு இதற்கு விடை தெரியவே இல்லை.

போன முறை ஊருக்குப் போனபோது பொருட்காட்சியில் லதாவைப் பார்த்தேன். ஹாய் ஹல்லோ எல்லாம் முடிந்தபின்.. “கல்யாணம் ஆயிருச்சா? எத்தனை குழந்தைங்க?”

“சரிதான் போ.. உனக்கு விஷயமே தெரியாதா? காலேஜ் முடிச்ச அடுத்த வருஷமே நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோமே? ரெண்டு குழந்தைங்க.. அதோ வராரு பாரு உன் பிரண்டு.”

ரெண்டு குழந்தைகளுக்கும் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்து கைகொள்ளாமல் டெல்லி அப்பளங்களுடன் எங்கள் பக்கம் வந்துகொண்டிருந்தான் கோபி.
********************************************************************

பி கு: பெயர்கள் மாற்றப்பட்ட நிஜக்கதை. “சுந்தரமூர்த்தி” இன்று ஒரு தொழிற்சாலையில் ப்ரொடக்‌ஷன் ப்ளானிங் மேனேஜர். “கோபி” உள்ளூரிலேயே பொட்டிதட்டும் கடை வைத்திருக்கிறான். “லதா” அவனுக்கு ஆக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறாள்.

சங்கமம் போட்டிக்காக
எழுதியது.

Mar 2, 2009

அவன் அவள் கெமிஸ்ட்ரி

அலைகள் எட்டடி உயரத்துக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்றுக் கிடந்தது வெள்ளை மணல் கடற்கரை. பௌர்ணமி நிலா மஞ்சள் வெளிச்சம் கொட்டி சூழலை அழகாக்கிக் கொண்டிருந்தது. வித்தியாசமான கட்டடம் ஒன்று தன் பழைய பொலிவையெல்லாம் இழந்து பாழடைந்து கிடந்தது.

"ஜே இந்த இடம்தானா?"

"ஆம். என்றுதான் நினைக்கிறேன். சுற்றுவட்டாரத்தில் என்ன பார்க்கிறாய்?"

"கடல்-அலை-வெள்ளைமணல்-பௌர்ணமிநிலவு"

"போதாது. ஏதேனும் கட்டடம் தெரிகிறதா?"

"ஆம். வித்தியாசமாக இருக்கிறது. பிரமிட்டின் குழந்தை வடிவம் போல. கூம்பாக வானை நோக்கி"

"சரிதான். உன் ஜீன்கள் தமிழ்தானா? அது ஒரு கோயில். அலைவாய்க்கோயில் என்று சொல்வார்கள்"

"ஓ.. ஞாபகம் வருகிறது.. மாமல்லபுரம் என்பது பழைய பெயர் - சரியா?"

"சரியே! இன்னும் 24 விநாடிகள் அங்கே காத்திருக்க வேண்டி இருக்கும். அவள் இன்னும் 17இல்தான் இருக்கிறாள்"

24 விநாடிகள். என்ன செய்து பொழுதைப் போக்குவது? இந்த ஜேக்கு நேரத்தின் அருமையே தெரிவதில்லை. ஒரு புத்தகம் படிக்கலாமா? மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். விரல்கள் நடுங்குவது தெரிந்தது.

"கவிதை! கவிதைப் புத்தகம் படி. இப்போதைக்கு உனக்கு அதுதான் தேவை"

"ஜே. எத்தனை முறை சொல்வது? மனத்தையெல்லாம் படிக்காதே.. இது என் நேரம். கடமை நேரம் அல்ல!"

யதேச்சையான திருப்பலில் "விழிகள் விண்ணை வருடினாலும் விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான்" என்ன அர்த்தம் இதற்கு? ஜன்னல் கம்பி என்றால் என்ன?

"அதை விடு.. பக்கம் 48க்கு போ!" என்றான் ஜே காதோரம்.

"எதுவும் பிரச்சினை வராதே?

"நீ எதற்கும் தயாரானவன் சீ! உன்னால் முடியாததா?"

"உனக்கென்ன- பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய். நேரடியாக இறங்குபவன் நான் தானே"

"பயம் வேண்டாம். உனக்கு இது சுலபம்!"

"அவள் தயார்ப் படுத்தப்பட்டுவிட்டாளா?"

"ஆம். 5 சிசி"

"அவர்கள்?"

"காத்துக் கொண்டிருக்கிறார்கள்"

அவள் வண்டி வானில் தென்பட்டது. சிறிய வண்டி. அவள் அமரவும், ஒரு சிறு பெட்டி வைக்கவும் மட்டுமே இடம். மண்ணைச் சிதறடித்து இறங்கினாள்.

"திருவாளர் சீ"

"நானே!" என்றேன். அவள் மீதிருந்து கண்ணை எடுக்க முடியாமல். அளவான வடிவுகள், வளைவுகள்- சீருடையையும் மீறிய வசீகரம்.

"வசீகரம் என்றால் என்ன?" என்றான் ஜே.

சும்மா இருடா - மனத்துக்குள்ளேயே அவனுக்கு பதில் சொல்லிவிட்டு "உங்கள் பெயர்?" என்றேன் அவளிடம்.

"எனக்கு பெயர் கிடையாது. 44 என்பது என் பணி எண் - உங்கள் அடையாளம் காட்டுகிறீர்களா?" பெட்டியிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தாள்.

கிளம்புகிறாளே. எப்படி நிறுத்துவது? "நீங்கள் உணவருந்திவிட்டீர்களா?"

"ஒரு மணிக்குதான். இடை நேரங்களில் எதுவும் சாப்பிடக்கூடாது"

"தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு கேள்வி"

கேள்விக்குறியாய் புருவம் தூக்கினாள்.

"நீங்கள் மனிதப்பிறவிதானே? எந்திரள் அல்லவே?"

சிரிப்பு போலவே அவள் உதடு குவிந்தது. "மனிதள்தான்!"

"அமருங்களேன் உணவருந்தலாம்"

"இல்லை என்னை அடுத்த கடமை அழைக்கிறது"

அடுத்த கடமையா?

"இல்லை. அவற்றை கவ்னித்தாகி விட்டது" ஜே குசுகுசுத்தான்.

"இந்த அழகிய மாலை, ஆர்ப்பரிக்கும் கடலலை, மஞ்சள் நிலா - இதை விடுத்து அடுத்த கடமையா? எனக்காக சிறிது நேரம் அமரமாட்டீர்களா?"

வண்டியிலிருந்த திரையைப் பார்த்தாள்."ஆமாம்.. வேறு கடமைகள் இன்று இல்லை! என்ன ஆச்சரியம்!"

"இந்த உணவு எனக்கு மிக அதிகம். நீங்களும் பங்கு கொள்கிறீர்களா?"

"இல்லை வேண்டாம். நான் கிளம்புகிறேன். அறையில் வேலைகள் இருக்கின்றன; இந்த எதிர்பாராத விடுமுறையை உபயோகிக்க உத்தேசம்" கிளம்பிவிட்டாள்.

ஜே. திட்டத்தின் அடுத்த கட்டம்..

"இதோ"

அவள் வண்டி வேகமெடுத்து மேலேறுவதற்கு முன்னர் எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் நான்கு வண்டிகள் அவளைச் சூழ்ந்து அவளைத் தரையிறக்கின. நானும் அவள் வண்டி இருக்குமிடத்துக்கு ஓடினேன்.

"அழகிய பெண். மனிதள் போல!" என்றான் அவளைச் சூழ்ந்த நால்வரில் ஒருவன்.

"ஆம். மனிதளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது"

"பெண்ணே உன் உடைகளை அவிழ்"

44 ந் முகத்தில் கலக்கம். "எனக்கு அதற்கு ஆணையில்லை"

"ஆணையும் வேண்டாம் ஆனையும் வேண்டாம். நீயாக அவிழ்த்தால் வன்முறை தேவையில்லை"

என்ன ஜே இது பிராசமாகப் பேசுகிறார்கள்! நாடகத்தனமாக இருக்கிறார்களே.. அவள் புரிந்துகொண்டுவிடப்போகிறாள்!

"அவளுக்கு அவ்வளவு மூளை கிடையாது"

44க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. "யாரடா நீங்கள்? என்ன செய்கிறீர்கள் அந்தப் பெண்ணை"

"இதைக் கவனி.. அவளைக் காப்பாற்ற வந்த வீரனை முதலில் முடிக்கலாம்"

நால்வரும் என் மீது பாய, நான் அவர்களை அடிக்க, அவர்கள் என்னை அடிக்க.. மூன்று நிமிடங்களின் முடிவில் அவர்கள் தோற்று ஓடி வண்டியேறிப் பறந்தார்கள்.

"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?" நன்றி என்ற வார்த்தை பழகாவிட்டாலும் அவள் குரலில் நன்றி இருந்தது.

"நீங்கள் என்னுடன் அமர்ந்து உணவருந்தி இருந்தால் இது நிகழ்ந்திருக்காது"

அமைதியாகவே என்னுடன் வந்தாள். "அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்கள் அழகு அப்படி"

"கலக்கறே சீ!" என்றான் ஜே.

"அழகாகவா இருக்கிறேன்?"

"அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் இருக்கிறது என்று ஒரு பழைய பழமொழி. நீங்கள் எல்லார் கண்ணிலும் அதை ஏற்றக்கூடியவர்"

"நீங்கள் பேசுவது பெரும்பாலும் புரியவில்லை"

"ஞாயும் ஞாயும் யாராகியரோ"

"இது சுத்தமாகப் புரியவில்லை"

"இது சங்ககாலத் தமிழ்க் கவிதை. எங்கே பிறந்து எங்கே வளர்ந்தாலும் அன்புடை நெஞ்சம் கலந்துவிடும் என்று அர்த்தம்"

"நெஞ்சம் என்றால் இதயமா? அது எப்படிக் கலக்கும்?"

"செம்புலப் பெயல்நீர் போல"

"எங்கள் உணவகத்தில் அந்த நீர் கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டும்தான்" நகைச்சுவையாகப் பேசுகிறாளா இல்லை நிஜமாகவே அப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டாளா? எதையும் காட்டாத முகபாவம்.

"உங்களை இதற்கு முன்னால் எங்கேயாவது சந்தித்திருக்கிறேனா?"

"இருக்கலாம். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இதே உணவகத்தில் வேலை செய்கிறேன்"

"மூன்று அல்ல.. முன்னூறு ஆண்டுகளாகப் பார்த்த ஞாபகம். ஜன்ம ஜன்மமாய்த் தொடரும் பந்தம்"

"முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நான் பிறக்கவே இல்லை!" இப்போது நிஜமாகவே சிரித்தாள்.

"சிரிக்கிறாளா.. அற்புதம். இன்னும் கொஞ்சம் கஷ்டப்படு! மடிந்துவிடுவாள்"

"பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்ட பந்தமாகத்தான் நான் உணர்கிறேன். நீ?"

"எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஆனால் உங்களை முன்னமேயே பார்த்த உணர்வு எனக்கும் இருக்கிறது"

"முதல் பார்வையில் காதல் வருமா என நேற்று கேட்டிருந்தாலும் இல்லை என்றுதான் சொல்லி இருப்பேன்"

"இன்று?"

"இன்றுதான் உன்னைச் சந்தித்து விட்டேனே.. என் முன் அனுபவங்கள் அனைத்தும் மாறிப்போயின. இன்று - இக்கணம் புதிதாய்ப் பிறந்தவன் போல உணர்கிறேன்!"

"கவித கவித" ஜே சும்மாவே இருக்கமாட்டான்.

"நீங்கள் பேசுவது முழுவதும் புரியாவிட்டாலும் நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது" அவள் கண்ணில்.. இதுதான் காதலா?

"இன்னும் இல்லை. அவளை உன் முடிவுக்குக் கட்டுப்படவை" ஜே புத்தகப்புழு. அவனுக்கு முடிவுகளை நிரூபிக்கவேண்டும்.

"என் இல்லத்துக்குச் செல்லலாமா? 15 நிமிடம்தான் ஆகும். அங்கும் கடற்கரை, இதே நிலவு, மாலை இப்போதுதான் துவங்கி இருக்கும்.. என் கவிதைப் புத்தகத்தைக் காட்டுகிறேன்"

"கவிதையா? நீங்கள் எழுதுவீர்களா?"

"கவிதை மட்டுமா? காற்றிலேறி அந்த விண்ணையும் சாடுவோம் - காதல் பெண்டிர் கடைக்கண் பார்வையில்!"

"இது உன் கவிதையாடா? அவளுக்குத் தெரியாதுன்ன வுடனே பொளந்து கட்றான் பாரு"

"மிக அழகாகப் பேசுகிறீர்கள். உங்களுடனேயே இருந்துவிடலாம் போல் இருக்கிறது"

"கிளம்பிவிடு. உணவகத்தில் இரண்டுநாள் தேடுவார்கள் அப்புறம் கைவிட்டு விடுவார்கள்."

"பிறகு?"

"நமக்காக ஒரு புது உலகம் காத்திருக்கிறது. காதல் செய்வோம்! சம்போகம்! ஆணும் பெண்ணும் கலக்கும் அற்புத வினாடிகள்! இன்றைய நடைப்பிணங்கள் வாழ்நாளில் கண்டிராத இன்பத்தின் உச்சம் காண்போம். தொழிற்சாலை வேண்டாம். நம் இல்லத்தில் உருவாக்குவோம் நம் சந்ததிகளை! காதலினால் மனிதர்க்கு கலவி உண்டாம் - கவலைபோம் - ஆதலினால் காதல் செய்வோம்!"

அவளை லேசாக அணைத்து மேல் நெற்றியில் ஒரு முத்தமிட்டேன். சிலிர்த்தது இருவருக்கும்.

அவள் என் வலது காதை வருடினாள். பின்னர் இடது காதோரம் வந்து,

"ஜே.. உங்களுக்கும் கேட்கும் என நம்புகிறேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட காதல் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததற்காகவும், அரசு அனுமதியின்றி திருடப்பட்ட எஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை உபயோகித்து உணர்ச்சிகளை தூண்டியதற்காகவும், அரசின் ஜனத்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் 1208ன் கீழ் உங்கள் இருவரையும், 244, அமைதி காப்புப் படைக் காவலாளியாகிய நான் கைது செய்கிறேன். உங்கள் உணர்ச்சிநீக்குத் தண்டனை இன்னும் சில விநாடிகளில் நிறைவேறும்."
***********************
குறிப்பு: அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டிக்காக ஆக்கப்பட்டது. ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி. மேட்டர் இல்லாத நேரத்தில் போட்டி ஆக்கத்தை பதிவில் போடலாம் எனத் தூண்டி “நானும் ப்ளாக்கர்தான்” எனச் சொல்ல வைத்ததற்காக!

Sep 17, 2008

ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)

என் கணினி க்ராஷ் ஆகிவிட்டது. பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் பார்த்துக்கொண்டிருந்தபோது க்ராஷ் ஆனதால், சில பதிவுகளில் இருந்து ஒரு ஒரு வரி மட்டும் ஒரே ஒரு டெக்ஸ்ட் பைல் ஆகி அதை மட்டும்தான் மீட்க முடிந்தது. இந்த வரிகள் யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடித்துத் தாருங்களேன் - முழுப்பதிவையும் படித்து உய்வேன்!

உங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பதில்களை உடனுக்குடன் மட்டுறுத்த இயலாது.

1. இரட்டை டம்ளர் முறைக்கு நான் இங்கே தீர்வு கொடுத்துள்ளேன்
2. ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் முதலெழுத்துதான் வித்தியாசம்
3. ஜோதியில் சைவப்படம் போட்டால் சீட்டு கிழியும், தாவூ தீரும்
4. இவ 110,131 மேகீ 43 சரி, மத்ததெல்லாம் தப்பு. முயற்சி பண்ணுங்க.. உங்களால முடியும்.

5. இது இந்தப்பதிவுக்கு மட்டுமல்ல, தங்கமணிக்கும் எதிர்பதிவல்ல
6. என் டி ஷர்ட் டை திருடினாலும் பரவாயில்லை, டி ஷர்ட் வாசகத்தைத் திருடிவிட்டார்கள்.
7. வாரம் 30$ வைக்கலாமா 70$ வைக்கலாமா என்றுதான் குழப்பம்
8. இப்போதெல்லாம் 30 விநாடியில் நேரிசை வெண்பா எழுத முடிகிறது
9. கிளி ஜோக் தவிர வேறெதுவும் கம்பன் விழாவில் சொல்லக்கூடாது
10. காற்றை வஞ்சித்துத்தான் பறக்கவேண்டும் என்றால், எனக்கு வேண்டாம் அந்த பட்டம்
11. கும்மிடிப்பூண்டியில் வயதான ஓட்டுநராக இருந்தாலும் காலை அழுத்தினால் வண்டி நிற்கிறது.
12. சென்னை மாநகராட்சி போர்ட் - என் கைவிரல் சென்னை மாநகராட்சியில் இருக்கிறது, கால் வெளியே.

Jul 14, 2008

அக்கினிக்குஞ்சு

துப்பாக்கி வெடித்தபோது நான் பெட்டியை தள்ளுவண்டிக்குள் தள்ளிக்கொண்டிருந்தேன். வெடிச்சத்தம் கேட்டதும் அனிச்சையாக கீழே கவிழ முற்பட்டபோதுகூட நான் தான் இதற்குக் காரணம் என்பது தெரியவில்லை.

அவ்வளவு குண்டான பாதுகாப்பு அதிகாரி வேகமாக ஓடிவந்தது, சந்தர்ப்பம் தெரியாமல் சிரிப்பு வந்தது. என்னை நோக்கி "கையை மேலே தூக்கு" என்றான். நான் தூக்கினேன்.

"உங்களைச் சொல்லவில்லை - பக்கத்தில் இருக்கிறானே மொட்டையன்.. அவனைச் சொன்னேன்"

மொட்டையன் கையைத் தூக்கும் முன்பே மேலும் இரண்டு அதிகாரிகள் அவனைச் சூழ்ந்து கீழே வீழ்த்தினர். அவனுக்கும் ஏன் என்று புரியவில்லை என்பது பயமும் கலவரமும் கலந்த பார்வையில் தெரிந்தது.

"என்ன ஆயிற்று?" தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.

"உங்களைத்தான் கொலை செய்ய வந்திருக்கின்றான் - அதுவே தெரியலையா?"

"என்னையா?" நம்ப முடியவில்லை. மொட்டையன் வயதான ஆள். ஒல்லியாக ஊதினால் ஒடிந்துவிடுவான் போல இருந்தான். எல்லா நிறங்களும் அள்ளித் தெளிக்கப்பட்ட சால்வையைப் போர்த்திக்கொண்டது போல ஒரு வினோதமான உடை. ஊடாவின் நவநாகரீகத்துக்கு முன் பழைய கலாசாரத்தின் எச்சம் போல இருந்தான்.

விமானம் பிடிக்க ஒரு மணிநேரமாக வரிசையில் ஊர்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரை அவனை கவனிக்கக்கூட இல்லை. ஒரு நிமிடம் முன்புதான் தள்ளுவண்டியில் இருந்து கீழே விழுந்த பெட்டியை எடுத்துக் கொடுத்தான். இந்த ஒல்லிப்பிச்சான ஆஜானுபாகுவான என்னைக் கொலை செய்ய வந்தான்?

"இல்லையே.. அவர் பெட்டியைத்தானே எடுத்துக் கொடுத்தார்!"

"உங்களைத் தொட வந்தானோ என்று நினைத்துவிட்டோம்.. இவர்களிடம் நாமெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. டேய் மொட்டை - அட்டையைக் காண்பி"

அட்டையை தன் கையிலிருந்த சாதனத்தால் வருடித் தகவலைப் படித்தான்.

"ஒழிஞ்சு போ! இவர்களுக்கெல்லாம் விமானப்பயணம் ஒன்றுதான் கேடு"

வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டார்கள்.

மொட்டையன் குனிந்து சிதறி இருந்த காகிதங்களைச் சேகரித்தான்.

"அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு.."

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எங்களுக்கு இது பழக்கமானதுதான் - நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் குருவி சுடுவதைப் போல சுட்டுப்போட்டுவிட்டு சென்றிருப்பார்கள்" பேசுகையில் மூச்சு வாங்கியது. ட வரும் இடங்களில் த போல உச்சரித்தான். மொட்டையர்களே பொதுவாக அப்படித்தான் பேசுவார்களோ இல்லை அடிபட்டி மேலுதடு வீங்கியதால் குரல் பிறழ்ந்ததோ தெரியவில்லை.

"எந்த ஊருக்குப் போகிறீர்கள்?"

"அலையில் இருந்து உலைக்கு"

என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை.மொட்டையன் பேச்சில் தெரிந்தது வெறுப்பா விரக்தியா? பாதுகாப்பு அதிகாரி சொன்னது நிஜம்தான் போல!

"நீங்கள் எங்க போகிறீர்கள்?"

"நான்..பூமாவுக்கு"

"நானும் அங்கேதான்.."

வரிசை நகர, வெளியேறல் பரிசோதனைக்கு ஊட்டாக் குடிமக்கள் வரிசையில் நுழைந்தேன். ஊடாக்காரர் வரிசை காலியாக இருந்தது. கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்புறத்தில் ஏராளமான மொட்டையர்கள் நின்றுகொண்டு தங்கள் முறைக்காகக் காத்திருந்தார்கள். ஊடாக்குதானே முன்னுரிமை!

ஒளிக்கதிர்கள் வருடி நான் எல்லா வகையிலும் சுத்தமானவன் என்று பறைசாற்றியது.

விமானத்துக்குள் நுழையக் கதவு திறந்ததும் குபீரென அடித்தது துர்நாற்றம். கை அனிச்சையாக மூக்கை மூடியது. சுவாசத்துக்கு முகமூடி போட்ட பணிப்பெண் மரியாதையாக வருந்தினாள்.

"மன்னிக்கவும்..நறுமணம் தூவப்படுகிறது.. நிமிடங்களில் சரியாகிவிடும்"

"என்ன நாற்றம் இது?"

"செய்திகளில் பார்க்கவில்லையா? புரட்சி செய்த மொட்டையர்கள் 300 பேர் இதில் திரும்பிப் போகிறார்கள்"

"அதனால் ஏன் நாற வேண்டும்?"

"அந்த உடல்கள் பின்பக்கமாக ஏற்றப்படுகின்றன"

குபீரென வாந்தி வந்தது.

"கவலைப்படாதீர்கள், உங்கள் இருக்கை முன்பக்கமாகத்தான் இருக்கிறது"

பக்கத்து இருக்கைக்கு கிழ மொட்டையன் வந்தது ஆச்சரியமாக இருந்தது. இதெப்படி நடக்கமுடியும்? ஊடாக்குடிமகனுடன் மொட்டையனா? விரிந்த என் புருவத்தைக்கவனித்த மொட்டையன், "ஊடாக்காரர்கள் உங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. வேறு வழியில்லாமல்தான் என்னை இங்கே உட்கார வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஆட்சேபித்தால் அனுப்பிவிடுவார்கள்"

"சேச்சே அதிலே என்ன? நீங்கள் இருக்கலாம் தாராளமாக..பேச்சுத்துணையாக இருக்கும்"

"இது வெற்று வார்த்தை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். "

"நான் அப்படிப்பட்டவன் இல்லை. தலைமுடியை வைத்து எடை போடாதீர்கள். மனிதனை மனிதன் கேவலமாக நடத்துவது எனக்கு ஒவ்வாதது"

கிழவனின் புருவம் உயர்ந்தது. என் "பெருந்தன்மை"யை உடனே சோதிக்க விரும்பினான் போலும். கையை நீட்டி, "என் பெயர் சூ மோ"

அனிச்சையாக "ஆத்மா" என்று கையைப் பற்றிக் குலுக்கினேன். கரங்களின் சூடு என்னைத்தாக்கியது. வெயில் தேசத்தின் விளைவு நிரந்தரமாக அவர்கள் உடலில் ஏறிவிட்டது போலும். மீன் பிடிப்பது போல மென்மையான குலுக்கல். இவன் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேனே!

"சூ மோ? நீங்கள்தான் அந்தப் பிரபல..""

"நானேதான்"

"பூமா காந்தி?" என் ஞாபகசக்தி எனக்கே வியப்பாக இருந்தது. எப்போதோ படித்த மொட்டையர் பிரசுரம்! இப்போது புரிந்தது இவருக்கு மட்டும் ஏன் சலுகை என்று.

"காந்தி யாரெனத் தெரியுமா உங்களுக்கு? ஆச்சரியமாக இருக்கிறது!"

"தெரியாது.. கேள்விப்பட்டிருக்கிறேன்.. உங்கள் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த புரட்சியாளர்.. இல்லையா? உங்களையும் உங்கள் ஆதரவாளர்கள் அப்படித்தான் கூப்பீடுவார்கள் என எங்கேயோ படித்த ஞாபகம்."

"காந்தி என்ற பெயருக்கெல்லாம் எனக்குத் தகுதி கிடையாது. 300 பிணங்களை ஏற்றிச் செல்லும் விமானத்தில் காந்தி பயணித்திருந்தால் அவரும் பிணமாகத்தான் சென்றிருப்பார். பிச்சை பெற்ற உயிருடன் என்னை மாதிரி வரமாட்டார்"

"எனக்கு இதைப்பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியாது. நானுண்டு என் வேலையுண்டு என்றிருப்பேன். இந்தக் கலவரத்தைப் பற்றியே விமான நிலையம் வருகையில்தான் படித்தேன். மொட்டையர் விவகாரங்கள் பெரும்பாலும் எங்கள் பார்வைக்கு வராது. தடை!"

"எங்கே வேலை செய்கிறீர்கள்?"

"விவசாய ஆராய்ச்சி மண்டலத்தில் விஞ்ஞானியாக இருக்கிறேன். இப்போதும் நெல் விளைவிக்க ஏற்ற மண்ணைத் தேடித்தான் உங்கள் ஊருக்கு வருகிறேன்"

"மறுபடியும் இன்னொரு வகை மண்! இதைத் தோண்டுவதில் எத்தனை மொட்டையர்களைப் பலி கொடுக்க வேண்டுமோ!" சூ மோ இதை என்னிடத்தில் சொல்லவில்லை. தனக்குத் தானே விரக்தியாகச் சொல்லிக்கொண்டார். வெறித்த பார்வை பயமூட்டியது. எப்படி பேச்சைத் தொடர்வது என்று தெரியவில்லை. தொடரத்தான் வேண்டுமா என்றும் தோன்றியது. எனக்கு எதற்கு இதெல்லாம்.

"வெயில் பார்த்திருக்கிறீர்களா? தாங்குவீர்களா?" இதை என்னைப்பார்த்துதான் கேட்டார்.

"தாங்குவேன் என்றுதான் நினைக்கிறேன். ஒரு வேலையாக நார்வே சென்றிருந்தேன். அங்கே 55 டிகிரி வெப்பம். அதைத் தாங்கிவிட்டேன்"

"55 டிகிரி, எங்களுக்கு குளிர். 80-90 டிகிரி சுலபமாகப் போகும். சிறப்பாடை அணியாமல் வெளியே சென்றுவிடாதீர்கள்"

"அவ்வளவு வெப்பமா? தண்ணீரின் கொதிநிலைக்கு மிக அருகில் இருக்குமே!"

"ஆமாம். நாங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன் முடியோடு இருந்தவர்கள்தான். இந்த வெப்பம்தான் எங்களை மொட்டையர்களாக்கியது. மொட்டை அடிப்பது என்பதற்கு கொள்ளை அடிப்பது என்று ஒரு அர்த்தமும் உண்டு. எங்களை மொட்டை அடித்தது வெப்பம். கொள்ளை அடித்தது நீங்கள்!" எதிர்பாராமல் வந்த குற்றச்சாட்டில் திகைத்தேன்.

"நானா?"

"நீங்கள் இல்லை - உங்கள் ஊரின் அரசாங்கம். திட்டமிட்ட சுரண்டல்."

"உணவும் வெயில் தாங்க சிறப்பாடையும் அனைத்து மொட்டையர்களுக்கும் இலவசமாக அளிக்கிறதே ஊட்டா அரசாங்கம்?"

"நீங்கள் உங்கள் வரலாற்று நூலை நன்றாகவே படித்திருக்கிறீர்கள்! நாய்க்கு எலும்புத்துண்டு போடுவதைக்கூட காருண்யம் என்று ஒப்புக்கொள்ளலாம். செடிக்கு உரம் போடுவது கருணையா? மொட்டையர்கள் செத்தால் அவர்களுக்கு யார் வேலை செய்வார்கள்? இவை இல்லாவிடில் சாவு உறுதி அல்லவா? "

"இருந்தாலும் உதவிதானே செய்கிறார்கள்?"

"உதவி! உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன், உங்கள் ஊடாவில் மனிதர்களே கிடையாது. புவி வெப்பம் ஏறப்போவது தெரிந்து, பூமா போன்ற பகுதிகள் கொதிக்கப்போவது தெரிந்து பனிப்பிரதேசங்களாக இருந்த இடங்களுக்கு ஓடிவந்தவர்கள்தான் இன்றைய ஊடாக்காரர்கள். இன்று? உங்கள் ஊட்டத்தையும் எங்கள் வாட்டத்தையும் பாருங்கள்! யார் கண்டது, நம் இருவரின் கொள்ளுப்பாட்டன்களும் ஒரே ஆளாகக்கூட இருக்கலாம்."

"அப்புறம் ஏன் இந்தப் பிரிவினை?"

"தங்கள் வளங்களை பூமாக்காரர்களோடு பங்குபோட விரும்பவில்லை ஊடா. பூமாவின் மண் வேண்டும் விவசாயத்துக்கு. அந்த மக்கள் வேண்டும் மண்ணை இடம் பெயர்க்க. விவசாய ஆராய்ச்சிதானே செய்கிறீர்கள், மணல் எடுப்பது எப்படிப்பட்ட வேலை தெரியுமா உங்களுக்கு? தினம் பல உயிர்களையும் கப்பமாக எடுத்துக்கொள்ளும் சுரங்கங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பெயர்க்கப்படும் மணலுக்கு என்ன விலை கொடுக்கப்படுகிறது தெரியுமா? உணவும் ஆடையும்! இந்த மணல் இல்லையென்றால் உங்களுக்கு ஏது உணவு? எங்கள் பிரதேச வளங்களை உறிஞ்சியதும் ஊடாதான். இப்போது உதவி செய்யும் சாக்கில் அடிமைப்படுத்துவதும் ஊடாதான்."

"அப்படி இது அடிமை வாழ்வாக இருந்தால் ஏன் ஊடாவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டும்? முடியாது என்று சொல்லிவிடலாமே?"

"பூமாவில் மக்கள் இருக்கிறார்கள், நிலம் இருக்கிறது. காட்டுவிஷச்செடிகள் தவிர வேறு ஒரு செடி தழைப்பதில்லை. வயிறு ஒன்று இருக்கிறதே. உணவைக்காட்டித் தான் அடிமை ஆக்கினார்கள். "

"என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? வெப்பம் அதிகம்தான்.. அதற்காக விவசாயம் செய்ய முடியாமல் போய்விடுமா என்ன? கடல்நீர் இருக்கிறதல்லவா?"

மேலே பேச முடியவில்லை. உணவுத்தட்டுகளை பணிப்பெண் அடுக்க ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு தனி உணவு இருக்கிறது." சூ மோவைக் கண்கொண்டு என்னால் பார்க்க முடியவில்லை. ஏன் அவரும் இவ்வுணவை உண்டால் என்ன? திரும்பிவிட்ட பணிப்பெண்ணை அழைக்க முனைந்தவனை சூ மோ தடுத்தார்.

"நான் என் மக்களுடன் பின் கட்டுக்குச் சென்று சாப்பிட்டு வருகிறேன். "

உணவு அருமையாக இருந்தது - உள்ளே செல்லவில்லை. இன்னும் முழுமையாக அடங்காத நாற்றம், சூ மோ சொன்ன கதை, உணவுக்காக அடிமையான - பின்கட்டில் சடலமாக உள்ள பூமாக்கார மொட்டையர்கள்.. தீண்டத்தகாதவர்களாக்கிவிட்ட ஊடா அரசாங்கம்! குற்ற உணர்ச்சியைத் தூண்டிய உணவு. ரத்தம் தோய்ந்த உணவு.. சாப்பிட மனம் வரவில்லை.

சூ மோ திரும்பி வந்தார். முகத்தில் மேலும் கவலை ரேகைகள். "310 ஆகிவிட்டது"

"10 பேரா? விமானத்துக்குள்ளேயா?"

"ஆமாம். பயணம் முடிவதற்குள் இன்னும் 20-30 ஆவது ஏறும். விஷவாயு வேலையைக் காட்ட நேரம் ஆகலாம். ஆனால் நிச்சயம் காட்டும்."

"விஷவாயு?"

"ஆமாம்! எவ்வளவு பெரிய தவறு செய்தார்கள் இவர்கள்! ஊடாவின் தெருவில் படுத்துத் தூங்கும் அளவுக்கு என்ன தைரியம்!"

"தூங்கினதற்கா இந்த தண்டனை?"

"தூங்கினதற்கு மட்டும் இல்லை.. மணல் கொண்டு வந்த கப்பலோடு வந்தவர்கள் ஊருக்குள்ளே வந்ததே தவறு.. ஒரு வேளை ஊடாக்காரர் யாரையாவது தொட்டுவிட்டால்? மேலும், தூக்கம் - அதுவும் குத்தும் வெப்பம் இல்லாத ஊடாவில் தூக்கம் ஒரு ஆடம்பரம். அதற்குப் பழகியவன் கேள்வி கேட்பான். கேள்வி கேட்பவன் புரட்சி செய்வான். ஊடா அரசாங்கத்துக்கு எதையும் வளரவிட்டுப் பழக்கமில்லை. ஆரம்பத்திலேயே ஒழிப்பது எல்லா வகையிலும் சௌகரியம்."

"தூங்குபவர்கள் மீதா வாயுவைப் பிரயோகித்தார்கள்?" இவர் எப்படி அமைதியாக இருக்கிறார்? எத்தனை பிணங்கள் - அதுவும் உப்புப்பெறாத காரணத்துக்கு!

"அதைக் கேள்வி கேட்கத்தான் வந்தேன் நான். பிணங்களை எடுத்துச் சென்றால்தான் பேச்சுவார்த்தை என்றார்கள்.. பட்டாலே நோய் தொற்றி விடும் என்ற தேவையில்லாத பயம்! திரும்ப வேண்டியதாகிவிட்டது"

தயங்கித் தயங்கிக் கேட்டேன் "நோய் தொற்றிவிடுமா என்ன?"

"நீங்கள் ஒரு விஞ்ஞானி! உங்களுக்கும் இந்த நம்பிக்கையைத் தொற்ற வைத்துவிட்டார்கள்!" வரட்டுச் சிரிப்பு.

அடங்கியிருந்த துர்நாற்றம் மீண்டும் எழுந்து சூழலைச் சொன்னது. அவரவர் சிந்தனையில் அமைதியானோம். நீண்ட நேரம் கழித்து,

"உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன். அதற்குள் பேச்சு மாறிவிட்டது"

"கேளுங்களேன்"

"பூமாவில் விவசாயத்தை யாரும் ஆராய்ச்சி செய்வதில்லையா? ஏன் செடி தழைப்பதில்லை என்று யாரேனும் முயற்சித்துப்பார்க்கவில்லையா?"

"ஏன் செய்யாமல்? தாராளமாகச் செய்திருக்கிறோம்.. ஆனால் படிப்பும் விஞ்ஞானமும் தடைசெய்யப்பட்டிருக்கிறதே! "

"எனக்குத் தெரிந்த அளவில் பூமாவில் தாராளமாக விவசாயம் செய்ய முடியும். இங்கிருந்து வரும் மண்ணில்தானே ஊடாவில் விவசாயம் நடக்கிறது? என்ன கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்! நான் கூடச்செய்ய முடியும்"

"சொல்வது சுலபம் ஆத்மா. நீங்கள் எங்களுக்கு உதவினால் நீங்களும் ஊடாவுக்குத் தீண்டத் தகாதவராகி விடுவீர்கள். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாதீர்கள்" சூ மா வெளிப்படையாக வேண்டாம் என்றாலும் அவர் கண்களில் அழைப்பு இருந்தது. உணர்ச்சியற்று இருந்த அவர் குரலில் இரைஞ்சல் தெரிந்தது.

இருந்தோம் உண்டோம் செத்தோம் என்பதும் வாழ்க்கையா? அரசாங்கத்தின் பொம்மலாட்டப் பொம்மையாக வாழ்ந்தது போதும். விமானத்தில் நாங்கள் சந்தித்தது எப்படிப்பட்ட யதேச்சையாக இருந்தாலும் விளைவுகளை வருங்காலம் பேசவேண்டும். வெப்பம்தானே பிரச்சினை? சமாளிக்கலாம். நான் முடிவெடுத்துவிட்டேன்.

விமானம் தரை இறங்கியதைக் குலுக்கல் சொன்னது.

குடியேறல் பரிசோதனைக்குள் செல்லுமுன் சூ மோவிடம் ஐந்து விரல்களைக் காட்டினேன். இன்னும் ஐந்து நாள் என் வேலை முடிய.

பாதுகாப்பு அதிகாரி நட்பாகப் புன்னகைத்தான், மொட்டை இல்லை. ஊடாக்காரன்தான்.

"எத்தனைநாள் பயணம்?"

"ஒரு வாரம்"

"மொட்டையர்களோடு பழகாதீர்கள் - ஊடாவிற்கு எல்லா இடமும் கண்கள்"

"இந்த மருந்தைக் குடியுங்கள்.. வெயிலுக்கு நல்லது" முத்திரை குத்திக்கொண்டே வலதுபுறம் இருந்த குப்பியைக் காட்டினான். மருந்து கசந்து தலை சுற்றியது. ஒரே நிமிடம்தான். சரியாகி விட்டது.

வெளியே விநோதமாக சில மொட்டையர்கள் அழுது கொண்டிருந்தார்கள். "சூ மோ.. இப்படி ஒரு நிலைமை நமக்கு மட்டும் ஏன்?"

சூ மோ என்று அழைக்கப்பட்ட மொட்டையன் வயதான ஆள். ஒல்லியாக ஊதினால் ஒடிந்துவிடுவான் போல இருந்தான். எல்லா நிறங்களும் அள்ளித் தெளிக்கப்பட்ட சால்வையைப் போர்த்திக்கொண்டது போல ஒரு வினோதமான உடை. ஊடாவின் நவநாகரீகத்துக்கு முன் பழைய கலாசாரத்தின் எச்சம் போல இருந்தான்.

இவனும் இதே விமானத்தில்தான் வந்திருப்பான் போல!
******************************
சிறில் அலெக்ஸின் அறிவியல் புனைகதை போட்டிக்காக எழுதப்பட்டது. கருவாக்கத்திலிருந்து உருவாக்கம் வரை ஆலோசனை கொடுத்த நண்பர் குழாத்துக்கு நன்றி.

Jun 30, 2008

பொதுஜனத்தை மறந்த பொதுஜனம்!

நம்ம மக்களுக்கு, கமல்ஹாசனைத் தெரியுது, டாக்டர் விஜய் ஐத் தெரியுது ஏன் வாட்டாள் நாகராஜைக்கூடத் தெரியுது - ஆனா பொது ஜனத்தைத் தெரியலைங்க! என்னாதான் மாசத்துக்கு லட்சத்துக்கு நூறு இருநூறு கம்மியா வாங்கற பொட்டி தட்டற தொழில்லே இருந்தாலும் இப்படியா? மறுகாலனீய ஏகாதிபத்திய சிந்தனாமுறையின் இருத்தலியல் சாராக் கற்பனாவாதம் முத்திப்போச்சு போல!

சரி சரி எங்கேயும் போயிடாதீங்க.. மேட்டருக்கு வந்துடறேன்!

குவிஸ் வைச்சா ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கும்னு தெரிஞ்சதுதான்னாலும், இவ்வளவு சூப்பர் ரெஸ்பான்ஸை நானே எதிர்பார்க்கலை - அதுவும் அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் எல்லாப்பக்கமும் இருந்து கொட்டிக்கிட்டிருக்கும் வேளையில!

4000 ஹிட்டுக்களை விடுங்க! 130 பின்னூட்டங்களை விடுங்க! 118 முழுசா முடிச்சு அனுப்பிய விடைகளையும் விடுங்க! எனக்கு நிஜமான ஆச்சரியம் இத்தனை பேரும் இந்தப்போட்டிக்காக செலவழிச்சிருக்க நேரம்! 500லிருந்து 1000 நொடி!

கோட்னு ஒண்ணு கொடுத்ததால, சுலபமா காபி பேஸ்ட் பண்ணிட்டாங்கன்னாலும், யாருமே ரிப்பீட்டேய் போடலைன்றது ஒரு சந்தோஷம்தான்! உடனே கண்டுபிடிச்சுருவேனே :-)

இன்னொரு ஓ போடவேண்டிய சமாச்சாரம்! விடை அனுப்பியவங்களுக்கு சராசரியாக 72 சதவீதம் மதிப்பெண் கிடைச்சிருக்கு!

சரி..விடைகளைச் சொல்ல வேண்டிய நேரம்! பாஸ்டன் பாலா கேட்ட புள்ளிவிவரங்களுடன்!



வெற்றி பெற்றவர்களைப் பற்றிய அறிவிப்புலதான் ரொம்பவே குழம்பிட்டேன். நேரம் மற்றும் குறிப்புகளை வைத்து வரிசைப்படுத்தலாம் னு நெனச்சேன். ஆனால், அது நியாயமானதா இருக்காது - சிலர் திறந்துட்டு வேற ஜன்னலைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம். சிலர் இரண்டாவது மூன்றாவது முறையாக முயற்சித்ததில் குறைந்த நேரத்தில் குறைந்த குறிப்புகளுடன் முடித்திருக்கலாம் - என்பதால் அப்படி வரிசைப்படுத்தாமல், எனக்கு பின்னூட்டம் / மின்னஞ்சல் வந்த நேரப்படி வரிசைப்படுத்தி இருக்கிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஓ!



ஆனா மக்களே! கும்மிக்கும் மொக்கைக்கும் நடுவுல அப்பப்ப இந்த மாதிரி எதாவது செஞ்சே தீரணும்னு எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்துட்டீங்களே! எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் இப்படி ஒரு இம்சையைக் கொடுத்தே தீருவேனே! பாவம் நீங்க!

Jun 24, 2008

கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!

அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.

உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.

கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.

அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.

படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.

ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..

மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)

கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..

இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.




தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

Apr 26, 2008

இரண்டும் ஒன்றும்

மூன்று வருஷக் காத்திருப்புக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தது ரயில். இறங்கியதும் ரகுவின் கலைந்த தலையும் மூன்று நாள் தாடியும் சிந்துவுக்கு போதை ஏற்றியது.. அவளுக்கே அவள் மீது கோபம் வந்தது. அப்படியென்ன அலைச்சல் என் உடம்பே?
 
சாதாரணமாக, "வா சிந்து.. எப்படி இருக்கே?" என்று கேட்டவன் மீது கோபம் வந்தது. கூட்டத்தின் நடுவில் கட்டியணைப்பான் என்று இடம்பொருள் தெரியாமல் எதிர்பார்த்தது தப்புதான். இருந்தாலும் இவன் என்ன மறந்துவிட்டானா? முகத்தில் எந்த ஆர்வமும் காட்டாமல் "இதான் நாராயண், என் பிரண்டு"
 
கூட்டத்தை விட்டு எப்போது வீட்டுக்குப் போய்ச் சேர்வோம்.. அவள் அவசரம் புரியாமல் ஊர்ந்துகொண்டிருந்தனர்.
 
பெரிய ட்ரங்க் பெட்டியை டிக்கட் பரிசோதகர் திறந்துவைத்த சின்னப் பாதையில் நுழைக்கச் சிரமப்பட்டான் ரகு. மிலிட்டரி என்றதும் வெறுப்பு கலந்த அலட்சியத்துடன் பரிசோதகர் வெளியே விட, "டாக்ஸியிலே போயிடலாமா?" என்றாள் சிந்து.
 
"ஜி எச் பக்கமா போயிட்டா ஆட்டோக்காரன் சீப்பா வருவான்"
 
"இந்தப் பொட்டியத் தூக்கிட்டு சப்வேயில இறங்கி ஏறறதுக்குள்ளே"
 
"பழக்கமாயிட்டுது. வெயிட்டைத் தூக்கிக்கிட்டு ஓடறதுதானே தினசரி பயிற்சியே!"
 
"லேட் ஆயிடுமே" இதைவிடத் தெளிவாகத் தன் நிலைமையைச் சொல்ல முடியுமா? இவனுக்கு ஏன் புரியவில்லை?
 
ஆட்டோக்காரன் பெட்டியை ஏற்ற மறுத்து, பஸ் பிடித்து ஏறுமுன் சிந்துவின் செல் அடித்தது.
 
"ஆமாம்.. இங்கேதான், பக்கத்துலதான் இருக்கார்"
 
"நாராயண்.. இந்த நம்பர் அவருக்கு எப்படித் தெரியும்? இப்பதானே பாத்தோம்.. அதுக்குள்ள என்ன?"
 
"நான் தான் கொடுத்தேன்.. சொல்லு நரேன்"
 
"சரி.."
 
"சரி.."
 
"ஓக்கே.. அப்ப நாளைக்கு சாயங்காலம்?!"
 
"ம்"
 
"யெப்பா.. அதெல்லாம் இப்ப ஏன்? சொல்றன் இல்ல? எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம்"
 
போனை வைத்த ரகுவை ஆச்சரியமாகப் பார்த்தாள் சிந்து.
 
"நாளைக்குச் சாயங்காலமே ப்ரோகிராமா? எங்க?"
 
"மீட்டிங், ராத்திரி தண்ணி பார்ட்டின்னு ப்ரோக்ராம் போடறான்.. அவனுக்கு இந்த ஊர்லே யாரும் இல்லை."
 
"வீட்டுக்கே கூட்டிவந்திருக்கலாமே?"
 
"வீட்டுல உன்னைத் தனியாப்பாக்கணுமே" அப்பாடா! அவனுக்கும் உணர்ச்சி இருக்கிறது!
 
"சீ.. அதைத் தவிர வேற நினைப்பே கிடையாதா?" சிந்துவுக்கும் அதைத் தவிர வேறு நினைப்பு இல்லைதான்..
 
தெருமுனையில் தெரிந்தவர் "வாப்பா ரகு.. எந்த ஊர்லே போஸ்டிங் இப்ப? அங்கேயெல்லாம் வெறும் ரொட்டிதானா? பகல்பூர்னா ராஜஸ்தான் பக்கம்தானே?"
 
"இந்தக் கேள்விகளுக்கு ஸ்டாண்டர்டா பதில் தயார் செஞ்சு வச்சுக்கங்க! தேவைப்படும்.. உங்க அவசரம் தெரியாம போரடிக்கிறாங்க பாருங்க!" காதோரத்தில் கிசுகிசுத்தாள்.
 
வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தும் காபி டிபன் என்ற கடமைகள் எல்லாம் முடிய நேரம் ஆனது.. பிறகும்..
 
"என்னங்க ஆச்சு?"
 
"தெரியலைடி.. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை"
 
"சரி விடுங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.. பயணக்களைப்போ என்னவோ" அவள் கண்களிலும் ஏமாற்றம்.
 
இரவுக்குள் ஏமாற்றம் தொடர்கதை ஆனதை சிந்துவால் தாங்க முடியவில்லை.
 
"எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்.. முழுசா மூணு வருஷம் கழிச்சுப் பொண்டாட்டியைப் பாக்க்றீங்க.. இப்பவும் முடியலன்னா எப்படி?"
 
".."
 
"உங்களுக்கு என்னவோ நடந்திருக்கு.. அதை உண்மையாச் சொல்லுங்க"
 
".."
 
"நான் உங்க தாலி கட்டின பொண்டாட்டி.. என்கிட்ட என்ன பயம்.. சொல்லுங்க"
 
"நாராயண்" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன ரகுவால் சிந்துவின் கண்களைப் பார்க்க முடியவில்லை.
 
"செண்ட்ரல்ல காட்டினீங்களே அந்த ஆளா? அவருக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?"
 
"கல்யாணம் ஆன ஒரு மாசத்துல பாரக்குக்கு போயிட்டேன். அதுக்கு அப்புறம் அவன் தான் இதுக்கு"
 
"சீச்சீ என்ன சொல்றீங்க!"
 
"கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு இந்தப் பழக்கம் இருந்தது.. சீரியஸ்னு நினைக்கலை.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறமும் இது தொடரவேதான் தப்புப் பண்ணிட்டேன்னு புரிஞ்சுது"
 
"விளையாடாதீங்க! கல்யாணம் முடிஞ்ச முதல் மாசத்துல நீங்க இப்படி இல்லையே?"
 
"அதான் எனக்கும் தெரியல. அப்ப வேற மாதிரி எக்ஸைட்மெண்ட்!"
 
"ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே!"
 
"வேணும்னு ஏமாத்தலை.. எங்க அப்பா வற்புறுத்திதான்.."
 
சிந்துவுக்கு ஏமாற்றமும் இந்தப்புதுக்கதையும் தாங்காமல் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
 
காலையில் குளித்துவிட்டு ஷேவ் செய்துகொண்டிருந்தான் ரகு.
 
"எங்க கிளம்பிட்டீங்க?"
 
"டாக்டரைப் பாக்க.. இதுக்கு எதாச்சும் செய்ய முடியுமான்னு.."
 
"இது பொறவியிலேயே வர்றது.. இதுக்கு டாக்டர் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு படிச்சிருக்கேன்"
 
"அப்ப என்ன பண்ணலாம்ன்றே?"
 
எதிர்காலம் இருண்டுதான் தெரிகிறது. ராத்திரி பூரா விட்டத்தைப் பார்த்து அழுததில் கண்கள் கனத்தது. ஆயாசத்தில் எடுத்த வாந்தியில் உடல் பலவீனமாய்த் தெரிந்தது. இருந்தாலும் முடிவெடுக்க வேண்டும்.
 
"போங்க! அந்தச் சக்களத்தி நாராயண் கிட்ட!" அடங்கியிருந்த கண்களிலிருந்து புதிதாய்க் கரித்த உப்பு.
 
*************************
 
வ வா ச போட்டிக்கு எழுதப்பட்ட கதை. நகைச்சுவைதான் வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே?

Apr 22, 2008

இதென்ன கலாட்டா?

தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - காலை 11 மணிக்கு
 
1. கடலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி வேலூருக்கும் வேலூர் எஸ் பி கடலூருக்கும் மாற்றம்.
 
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 19 ஆம் தேதி தொடக்கம்.
 
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 3000 உதவித்தொகை
 
4. தமிழ்ப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் யாரேனும் ஒருவர் பெயர் தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
 
தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - மாலை 6 மணிக்கு
 
1. வேலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி கடலூருக்கும் கடலூர் எஸ் பி வேலூருக்கும் மாற்றம்.
 
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 18 ஆம் தேதி தொடக்கம்.
 
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 5000 உதவித்தொகை.
 
4. தமிழ்ப்படங்களில் பேசப்படும் வசனங்களில் ஏதேனும் ஒருவரி தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
 
நடிகர் சங்க அறிக்கை - காலை 11:30க்கு
 
வரும் 28 ஆம் தேதி வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
நடிகர் சங்க அறிக்கை -மாலை 6:30க்கு
 
வரும் 27 ஆம் தேதியும் வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
முதலமைச்சர் அறிக்கை - காலை
 
கர்நாடக முதல்வர் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அவர் பேச மறுப்பதில் சற்றும் நியாயம் இல்லை. முடிவெடுப்பதை ஒத்திப்போட்டிருக்கிறேன்.
 
முதலமைச்சர் அறிக்கை - மாலை
 
கர்நாடக முதல்வருடன் பேசிவிட்டேன். அவர் பேசுவதில் சற்றும் நியாயமில்லை. பிரச்சினையை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறேன்.
 
முதலமைச்சர் பேட்டி - காலை
 
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. என்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியை ஆதரிக்கின்றனர்.
 
அதே சமயத்தில் போக்குவரத்துத் துறையில் நடைபெறும் ஊழலால் நாடே தத்தளிக்கிறது. கல்வி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம்.
 
முதலமைச்சர் பேட்டி - மாலை
 
தமிழ்நாட்டில் வாகன வசதி மிகவும் அற்புதமாக உள்ளதை உலகவங்கியே வியந்து பாராட்டுகிறது. கல்வியில் குறுகிய காலத்தில் சிறந்துவிட்ட தமிழ்நாட்டைப்பற்றி முனைவர்கள் ஆராய்ச்சி செய்கின்றார்கள்.
 
ஆனால், அளவுக்கதிகமாக உயர்ந்துவிட்ட விலைவாசியைப்பற்றியும், தாறுமாறாகக் கெட்டுக்கிடக்கும் சட்டம் ஒழுங்கைப்பற்றியும் மக்கள் தெரிவிக்கும் கவலையில் நானும் பங்கேற்கிறேன். அடுத்தமாதம் விலைவாசி உயர்வை எதிர்த்து பிரம்மாண்டப் பேரணி நடத்துவோம்.
*****
 
என்னடா இது கலாட்டான்னு பாக்கறீங்களா? தமிழ்நாட்டோட சோகம் எல்லாம் முதலமைச்சரா இல்லாதப்ப மட்டும்தான் அம்மாவுக்கும் சரி, கலைஞருக்கும் சரி - கண்ணுல படுது. இதே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தரை காலை நேர முதல்வராவும், இன்னொருத்தரை மாலை நேர முதல்வராவும் முதலமைச்சராக ஆக்கிட்டா? 
 

Dec 12, 2007

எழுத்தறிவித்தல் - உதவுங்களேன்!!!

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்!

எழுத்தறிவித்தல் அப்படின்னா எழுத்தைப் பத்தின அறிவிப்பு எனத்தானே பொருள்? இந்தப் பதிவும் அதுதான்:-)

மேட்டர் ஒண்ணும் பெரிசா இல்லைங்க, சர்வேசன் ஒரு சிறுகதைப் போட்டி அறிவிச்சாலும் அறிவிச்சார், நீண்டநாளா எழுதாத சிறுகதைகள் எல்லாம் முட்டிக்கிட்டு வந்து ஒண்ணுக்கு மூணா எழுதித் தள்ளிட்டேன். ஆனா சர்வேசன் ஒண்ணுதான் ஏத்துப்பாராமே..

எழுதினவன்ற முறையில எனக்குப் பிடிக்காத கதையை பதிந்திருக்கவே மாட்டேன் - எனவே மூணுமே எனக்குப் பிடிச்ச கதைகள்தான். ஹிட்ஸ், பின்னூட்டம் -- இது எல்லாமே மூணு கதைக்கும் ஏறத்தாழ சமமாவே இருக்கு.

அதனால, சர்வேசன் பாணியிலேயே ஒரு சர்வே வச்சுடலாம்னு..

படித்த பிறகே வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

கதை ஒன்று: காமத்திற்கும் கண் உண்டு

கதை இரண்டு : கடன் அட்டை

கதை மூன்று: காட்டு வழி போற தேவ் நீ கவலப்படாதே

படிச்சுப் பாத்து, வாக்களியுங்கள் என கரம் சிரம் தாழ்த்தி வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்.


Dec 10, 2007

காட்டுவழி போற தேவ் நீ கவலைப்படாதே!

பசுமை! பசுமை! பார்க்கும் இடமெல்லாம் பசுமை!
 
நகர வாழ்க்கையிலேயே பழக்கப்பட்டிருந்த தேவுக்கு காட்டின் பசுமை புது உற்சாகம் அளித்தது. தனியாக காட்டுவழியில் செல்வதில் பயம் இருந்தாலும் இயற்கை அவன் மனதைக் குளிர்வித்தது. தன்னைத் தேடித் துரத்துபவர்கள் இங்கேயும் தொடர மாட்டார்கள் என்பதால் இலகுவாக உணர்ந்தான்.
 
பிரச்சினைகள் துரத்துவதால் எந்த வாகனமும் கிடைக்காமல் நடந்தே ஆகவேண்டும். இன்று இரவுவரை நடக்கவேண்டுமா? ஏன் மேலேகூட ஆகலாம். அதிலும் இந்தக் காட்டுப்பாதையில் யானைகள் திரியுமாம். "என்ன ஆனாலும் பாத்துக்கலாம்" என்ற முரட்டுத் தைரியத்துடன் தேவ் நடந்தான். 
 
பாதை ஊகிக்க முடியாததாக இருந்தது. சரேலேன ஏற்றம் குபீரென இறக்கம்!
 
"அம்மா.. ம்மா.." ஈனஸ்வரமாகக் குரல் கேட்டதும் தேவ் அதிர்ந்தான். நல்லவேளை..மனிதக் குரல்தான்!
 
4 அடிதான் குழி.. குழிக்குள் ஒரு இளைஞன். எப்படி விழுந்தானோ!
 
"இங்கே பாருங்க, கை கொடுங்க.."
 
வெளியே வந்ததும் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக்கொண்டான் அந்த இளைஞன். "மிக்க நன்றி ...."
 
"என் பெயர் தேவ்.. அதனாலென்ன பரவாயில்லை"
 
"நான் அருண். இங்கே காட்டுக்குள் மாட்டினால், சில நாட்கள்கூட ஆகலாம் உதவி வர.. என் அதிர்ஷ்டம்தான் நீங்கள் உடனே வந்தது."
 
"என்ன செய்றீங்க அருண்?"
 
"இங்கதான் கிராமத்தில் ஒரு வேலையா வந்தேன்.. திரும்பிப் போகணும், இன்னும் உத்தரவு வரலை. சரி வெட்டியா இருக்கறதுக்கு ஊராச்சும் சுத்தலாமே ன்னு வந்தேன், விழுந்தேன்" வசீகரமான சிரிப்பு.
 
"நானும் ஏறத்தாழ அப்படித்தான்.. கிராமத்துல பெரிய்வர் இருக்காரில்ல, அவர்கிட்ட ஒரு தகவல் சொல்லணும், அதுக்குதான் வந்தேன்"
 
"இந்தக் காலத்தில, ஆள் மூலம் தகவலா? புறா அனுப்ப வேண்டியதுதானே!"
 
"எந்தக் காலமா இருந்தாலென்ன? சில முக்கியமான விஷயம் நம்பகமான ஆள் மூலம் அனுப்பறதுதான் இன்னிக்கும் பாதுகாப்பு"
 
"யாருக்கு? என்ன தகவல்?"
 
"அதை உன்கிட்ட சொன்னா நானென்ன நம்பகமான ஆள்?"
 
"அது சரி.. " மறுபடி அதே சிரிப்பு.
 
பாதையின் கடுமையும் பயமும் காணாமல் போய்விட்டது - கூட ஒரு ஆள் இருந்ததால். அவ்வப்போது தூரத்தில் கேட்ட சில மிருக ஒலிகள் முன்போல பயமுறுத்தவில்லை.
 
"இங்கேயெல்லாம் தனியாக வந்தா மகிழ்ச்சி இல்ல! காதலியோட வரணும்"
 
"ஓ, தேவ் காதல் வேற பண்றாரா?"
 
"ஆம்.. இப்போதுதான் கொஞ்ச நாளா! கண்டதும் காதல்!"
 
"சரி தகவலைத்தான் சொல்ல மாட்டே, காதலையாச்சும் சொல்லலாமில்ல?"
 
"அதுல ஒரு பிரச்சினையும் இல்ல.. சொல்றேன்..
 
"எனக்கு காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு கிராமம். பெரும்பாலும் காஞ்சிபுரத்துலதான் இருப்பேன். அங்கே நாங்க நண்பர்கள் நாலஞ்சு பேரு வேலை வெட்டியில்லாம ராஜவாழ்க்கை வாழ்ந்துகிட்டிருந்தோம். அப்பதான் என் நண்பன் ஆதி ஒரு வேலை சொன்னான்"
 
"காஞ்சிபுரம், ஆதியா?"
 
"தெரியுமா? பிரபலமான ஆளுதான்"
 
"இல்ல தெரியாது.. நீங்க மேல சொல்லுங்க"
 
"அவங்க அப்பாகிட்ட ஒரு தகவல் சொல்லணுமாம்.. என்னை அனுப்பினான்.. அவங்க அப்பா ஊருக்கு வந்து பாத்தா ஒரே களேபரம்! அவரு தஞ்சாவூர்லே பெரிய பசையுள்ள புள்ளி..பெரிய புள்ளின்னாலே நாலு எதிரிங்க, நாலு நண்பர்ங்க இருப்பாங்க இல்லியா? அவரைப் பாக்கவே விடல"
 
"அப்புறம்?"
 
"வேறென்ன, எப்படியாவது விஷயத்தை ஆதி அப்பாகிட்ட சொல்லிடணும்னு ஒரு தப்பு பண்ணிட்டேன்"
 
"என்ன தப்பு?"
 
"பொய் சொல்லி உள்ளே நுழைஞ்சுட்டேன்.. விஷயத்தை என்னவோ ஆதிஅப்பாகிட்டே சேத்துட்டேன்.. அவரோட நண்பர்கள், நான் என்னவோ அவரைக் கொலை செய்யத்தான் பொய் சொன்னதா நினைச்சுகிட்டுத் துரத்தறாங்க. அவரோட எதிரிங்களுக்கு, நான் அந்த ஆளை சந்திச்சதுல கடுப்பு.. என்னைப் போட்டுத் தள்ளிடணும்னு துரத்தறாங்க!"
 
"காதல்னு சொன்னீங்களே!"
 
"வரேன், வரேன்.. கிரமப்படிதானே வரமுடியும்? துரத்துனாங்களா? ஒளியறதுக்கு இடம் தேவைப்பட்டுச்சு. அப்பதான் ஆதியோட தங்கையைப் பாத்தேன்.
 
"பாத்ததுதான்.. முதல் பார்வையிலேயே காதல்னு முன்னாடி சொல்லியிருந்தா நம்பியிருக்கமாட்டேன்.. அருண் நீ என்ன நினைக்கிறே?"
 
"காதலுக்குக் கண் இல்லைன்னு"
 
"கிண்டலா? நீ யாரையும் காதலிக்கலையா?"
 
"இல்லைப்பா.. நிறைய வேலைகள்.. கடமைகள்.. அதெல்லாம் முடிஞ்சபிறகுதான் யோசிக்கமுடியும்! சரி அப்புறம்?"
 
"அவங்ககிட்டே எல்லாத்தையும் விலாவாரியாச் சொன்னேன்.. அவங்க என்ன சொன்னாங்க, சரி நீங்க கொஞ்சநாள் தலைமறைவா இருங்க, கிராமத்துக்குப் போயிருங்க..
 
"எனக்குத் தெரிஞ்சவர்தான் கிராமத்துப் பெரியவரு, அவருக்கு ஒரு கடுதாசி கொடுத்தா அவர் உங்களை இப்ப உள்ள பிரச்சினைலே இருந்து காப்பாத்துவார்"னு.. அதான் இங்க வந்திருக்கேன்..
 
பேசாமல் கொஞ்ச தூரம் சென்றார்கள்.. அப்புறம்தான் உறைத்தது தேவுக்கு..
 
"கில்லாடி அருண் நீ.. கொஞ்சம் கொஞ்சமா பேசி என்கிட்டே இருந்தே விஷயத்தையெல்லாம் கறந்துட்டியே!"
 
"சேசே.. கவலைப்படாதே.. நானும் நம்பகமான ஆள்தான்.. அதிலும் என்னை நீ காப்பாத்தி வேற இருக்கே"
 
"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்?"
 
"வந்துட்டோம் ஏறத்தாழ!.. அதோ புகை தெரியுதா?"
 
புகை தெரிந்தது, ஆனாலும் புகையின் ஆதாரத்தை நெருங்குவதற்குள் மாலை மங்கத் தொடங்கிவிட்டது.
 
"இதான் கிராமத்துப் பெரியவர் வீடு. நீ போய் உன்னை அறிமுகப்படுத்திக்கோ.. நான் துணியெல்லாம் மாத்திகிட்டு வரேன். எதாச்சும் பிரச்சினைன்னா தாராளமா நான் அருணோட நண்பன்னு சொல்லிக்க"
 
பெரியவர் என்ன காரணமோ தெரியவில்லை, கோபமாக இருந்தார்.
 
"அய்யா வணக்கம்.. என் பெயர் தேவ், காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்கேன்"
 
"இவந்தானா தேவ்.. இவனை உடனே பிடிச்சு சிறைலே போடுங்கடா. தஞ்சாவூர்லே என்ன பண்ண நீ? கொலை பண்ண முயற்சி பண்ணிட்டு ஓடிவந்துட்டியா? எங்களுக்கு வேற வழியிலே விஷயம் வராதுன்னு நினைச்சயா?"
 
நான்கு பேர் உடனே தேவைச் சூழ்ந்து அவனைப் பிடிக்க முற்பட, உடை மாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்த அருண் சொன்னான்..
 
"கொடும்பாளூர் பெரிய வேளாரே! அருண்மொழி வர்மன் ஆணையிடுகிறேன். வந்தியத் தேவர் நம் நண்பர். அவரைப் பிடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர் என் தமக்கை குந்தவை பிராட்டியாரிடம் இருந்து எனக்கு முக்கியமான தகவல் கொண்டு வந்திருக்கிறார்"
 
************************

Dec 8, 2007

கடன் அட்டை

மணிக்கு அந்தக் கடிதம் வந்ததிலிருந்துதான் தொடங்கியது சனி.

"திரு சுப்பிரமணியம் கோவிந்தராஜன், தங்கள் கடன் அட்டையில் இரண்டு மாதங்களாக ரூ 150000/- (ரூ ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மட்டும்) கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது. தாங்கள் உடனே ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம், ஒ-ம், ---வங்கி"

எப்படி இது சாத்தியம்? வீட்டின் கடைசிச் செலவுகளுக்காக கடன் வாங்கியது உண்மை. ஆனால் அடுத்த மாதம் அலுவலகத்தில் எல்லாக்கடன்களையும் எடுத்து வங்கிக்குக் காசோலை அனுப்பியாகிவிட்டதே. இரண்டு மாதங்களாக நிலுவையா? வங்கிக்கே பேசிவிடலாமா?

"உங்கள் சேமிப்பு கணக்கு பற்றிய தகவல்களுக்கு 1 ஐ அழுத்தவும்.."

ஏழெட்டு எண்களை அழுத்தி "உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது, தயவு செய்து காத்திருக்கவும்" 20 நிமிடம் கேட்டுக்கொண்டிருந்தபின்

"வணக்கம் என் பெயர் ஜான். உங்களுக்கு என்ன சேவை வேண்டும்" அப்பாடா மனிதக் குரல்!

"என் பெயர் சுப்பிரமணியம் கோவிந்தராஜன். என் அட்டை எண்----------------"

"ஒரு நிமிடம் திரு கோவிந்தராஜன்.."

"உங்கள் கணக்கில் இன்னும் 1.5 லட்சம் கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது"

"நான் சென்ற 3ஆம் தேதி அதற்குக் காசோலை அனுப்பிவிட்டேனே"

"இன்று தேதி 5 தான் ஆகிறது, ஒருவேளை கணக்கு இற்றைப்படுத்தப்படாமல் இருக்கலாம்."

"நான் சொல்வது போனமாதம் 3ஆம் தேதி"

"மன்னிக்கவும் திரு கோவிந்தராஜன், இன்னும் எங்களுக்கு அந்தக் காசோலை வந்து சேரவில்லை"

"ஆனால் வங்கிக்கணக்கில் அந்தப் பணம் குறைந்துவிட்டிருக்கிறதே"

"இன்னும் இந்தக் கணக்குக்கு வரவில்லை திரு கோவிந்தராஜன். நீங்கள் உடனே அந்தப் பணத்தைக் கட்டவேண்டும். எங்கள் கடன்மீட்புத் துறைக்கு உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை அறிவித்து விட்டோம்"

"ஆனால் நான் அனுப்பிவிட்டேனே"

"உங்கள் காசோலை எண்ணைச் சொல்கிறீர்களா? சரி பார்க்கிறேன்"

சொன்னான்.

"ஆம், இந்தக் காசோலை எங்கள் வங்கிக்கு வந்திருக்கிறது, ஆனால் வேறு ஒரு எண்ணுக்கு. உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் அட்டைகள் இருக்கின்றனவா?"

"இல்லையே. உங்கள் வங்கியிலிருந்து ஒரே ஒரு அட்டைதான். எந்த எண்ணுக்குச் சென்றுள்ளது?"

"மன்னிக்கவும். வேறு ஒருவர் பெயரில் உள்ள அட்டை எண்ணை நாங்கள் தெரிவிக்கக்கூடாது"

"காசோலையில் எண் தவறுதலாகப் போடப்பட்டிருக்கலாம்"

"மன்னிக்கவும், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை"

"அந்த அட்டைக்குரியவரிடம் பேசி, தவற்றைச் சரி செய்யலாம் அல்லவா?"

"அதை இந்த வங்கி செய்யாது. நீங்களே செய்துகொள்ளத் தடை இல்லை."

"எனக்கு யாருடைய கணக்கு என்பது எப்படித் தெரியும்?"

"மன்னிக்கவும், நான் தகவல்கள் தர இயலாது"

"உங்கள் மேலாளரிடம் பேசிப்பார்க்கலாமா?"

"தாராளமாக. ஆனால் அவரும் இத்தகவல்களைத் தரமாட்டார்"

"அப்போது என்னதான் வழி?"

"தாங்கள் ரூ 1.5 லட்சத்தை உடனடியாகக் கட்டவேண்டும்"

"எப்படிக் கட்டுவது?"

"மன்னிக்கவும், வேறு எதேனும் கேள்வி இருக்கிறதா? நல்ல நாளுக்கு வாழ்த்துகள்" வைத்துவிட்டான்.

நல்ல நாள்? இதைவிட மோசமான நாள் இருக்க முடியுமா?

என்ன செய்வது? எப்படி இந்தப் பிரச்சினையிலிருந்து மீள்வது? யாரை ஆலோசிப்பது..ஒன்றும் புரியாமல் அடிவயிறு கனக்க வீட்டிற்குச் சென்றால் வாசலிலேயே மடக்கினார் செயலர் ராமாராவ்.

"என்ன மணி, உங்கள் வீட்டுக்கு இப்படிப்பட்ட விருந்தாளிங்க எல்லாம் வருவாங்களா?"

யார் அது விருந்தாளி?

"இது மரியாதைப்பட்டவங்க இருக்கற இடம். இந்த மாதிரி ரவுடிங்க எல்லாம் வராம பாத்துக்கங்க"

ராமாராவுடன் சண்டை பிடிக்க நேரம் இல்லாமல் வீட்டிற்கு விரைந்தான். 3 தடி ஆட்கள் அழைப்பு மணியைப் புறக்கணித்து கதவை ஓங்கித் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

"யாருங்க நீங்க"

"நாங்க வங்கியிலிருந்து வரோம். கடன் வாங்கினியே.. திரும்பிக் கொடுக்கவாணாம்?"

அந்த முகங்கள், அவர்கள் உடைகள் எதுவும் பன்னாட்டு வங்கியின் பெயருடன் ஒத்துவரவில்லை. ஆரம்பிக்கும்போதே ஒருமையில் ஆரம்பிக்கிறானே..

"வாங்க உக்காந்து பேசலாம்"

உட்கார்வதற்குள் "வாளைமீனுக்கும் விலாங்குமீனுக்கும்" சத்தம்.

"அந்த கஸ்மாலத்தை அணைச்சு வையின்னு சொன்னேனில்ல?.. எடுறா!" என்றான் அவர்களுள் தலைவன் போலத் தோற்றமளித்தவன்.

"என்னாது .. கொடுக்க முடியாதாமா? கைகால் போனா பரவாயில்லையான்னு கேளு! கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்கமுடியாத நாய்க்கு வாய் மட்டும் வண்டலூர் வரைக்கும்!"

அணைத்துவிட்டு மணியைப் பார்த்தான்.

"என்னாய்யா? எப்ப தருவே?"

"நான் பணத்தை அனுப்பிட்டேனுங்க. ஆனா ஒரு தப்பு நடந்துபோச்சு"

"எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க"

"இல்லீங்க, நிஜமாவே, வேர ஒரு கணக்குக்கு பணம் போயிருச்சு"

"அதுக்கு, என்னை என்னா பண்ணச் சொல்றே? டேய் மொட்டைக்கு போட்டுப் பேசுறா! அந்த நங்கநல்லூர்காரன் விஷயம் ஒரு வாரத்துக்கு மேல இழுத்துகிட்டிருக்கு"

"நான் மேலதிகாரிங்ககிட்ட பேசி சரி பண்ணிருவேங்க"

"மொட்டை.. அவன் என்னதான் சொல்றான்? குடும்பத்தோட மரியாதையா வாழணுமாவா? வேணாமாவா? ஒரு காட்டு காட்டிட்டு வா! அப்பதான் தெரியும் இவனுங்களுக்கு" மணி பேசியதை காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

"தோ பாரு மணி.. ஒரு வாரம் உனக்குத் தர்றேன். அதுக்குள்ள பைசல் பண்ணாச் சரி. இல்லாட்டி என்ன வேணும்னாலும் நடக்கும்"

வெளியேறிவிட்டார்கள். இரண்டு நிமிடம்தான் உள்ளே இருந்தார்கள், ஆனால் ஒரு தேர்ந்த நாடகம் போல, மேலே கை வைக்காமல், நேரடியாகத் திட்டாமல் செய்தியை மணிக்குச் சொல்லிவிட்டார்கள் - நாங்கள் எந்த அளவுக்கும் இறங்குவோம்!

அடுத்து வந்த நாட்கள் அன்றைவிட மோசமாகவே இருந்தன.

"அட்டைக்கு அனுப்பப்படும் காசோலை யாருடைய கணக்கில் இருந்து வந்தது என்பது எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். உங்களுக்கும் அந்த அட்டைதாரருக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ? அவராக முன்வந்து சரிசெய்தால் மட்டுமே முடியும்"

"சரி அவர் பெயர் முகவரி சொன்னீங்கன்னா கேட்டுப்பாக்கிறேனே"

"மன்னிக்கவும். நாங்கள் அந்த எண்ணைத் தரமுடியாது. நீங்கள் இப்போது உடனடியாக 175000த்தை கட்டுவது தவிர வேறு வழி கிடையாது"

வங்கி மேலதிகாரிகள் கைகழுவிவிட்டார்கள்.

வாரம் கழிந்தவுடன் சரியாக வந்துவிட்டார்கள் தாதாக்கள்.

"என்னா மணி, இன்னும் கட்டலியாமே? என்னா தெனாவட்டுடா உன்க்கு?"

"இல்லைங்க, எதாவது பண்ணி சரி பண்ணிடுவேன்."

"த்தா.. உனக்கெல்லாம் ஒரு வீடு.. சோறுதானே திங்கறே? கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கணும்ன்ற ஒணக்கை வேணாம்?"

"எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்லே..."

"கடைசியா இன்னும் ரெண்டு நாள் கொடுக்கறேன். மவனே அதுக்குள்ள கணக்குத் தீர்க்கலே..."

யாரைக் கேட்பது? .

"உங்க அப்பாகிட்ட இருந்து எதாச்சும்?"

"அவரு கடைசிக் காசையும் சுரண்டிதானே 3 லட்சம் கொடுத்தாரு? உங்களுக்குத் தெரியாததா?"

எந்த வழியும் இல்லை. அலுவலகத்தில், வங்கிகளில் தெரிந்தவர்களிடம் எல்லாம் எல்லை வரைக் கடன் வாங்கித்தான் வீடே முழுமை ஆகி இருக்கிறது. நண்பர்கள் எல்லாரும் முடியாது என்றே சொல்லிவிட்டார்கள்.

நடைப்பிணமாகத்தான் அலைந்தான் மணி. "அஞ்சு வட்டிக்குத் தர்றேன். ஆனா ரெண்டு மாசத்துக்குள்ள திருப்பணும்" ரெண்டு மாசத்துக்குள்? வேறு குண்டர்களை அழைப்பதில்தான் இது முடியும். "வேணாங்க"

வீட்டை அடகு வைக்கலாமா? "இதை எப்படிங்க அடகு வைக்க முடியும்? ஏற்கனவே அடகுக்குதானே வீட்டுக்கடன் வாங்கியிருக்கோம்?"

ஒன்றும் புரியவில்லை. தற்கொலையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஒருநாள் அம்சா பதட்டமாக அழைக்க, வீட்டிற்கு வேகமாக ஓடினான்.

வீட்டு வாசலில் ஒரு வண்டியில் அவன் தொலைக்காட்சியும் குளிர்பதனப் பெட்டியும்.

அதே தாதாதான் நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்."மணி.. வண்ட்டியா? காசைத் திருப்பிக் கொடுக்காத டோமரு உனக்கு படம் பாக்கணுமா?"

ராமாராவும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். "மணி, இதெல்லாம் சரியில்லை. நான் முதல்லேயே சொன்னேன், இது மரியாதைப் பட்டவங்க இருக்கற இடம்னு. நீங்க கூடிய சீக்கிரம் வீட்டைக் காலி பண்ணிடுங்க. குழந்தைங்க எல்லாம் பயப்படுது பாருங்க!"

வீட்டில் தொலைக்காட்சி போனதில் நிசப்தம் பெரும் சப்தமாகக் கேட்டது. சமையலறையில் கேவல்.

அடுத்த முறை தாதா வந்தபோது, மணியும் வீட்டில் இருந்தான் நல்ல வேளையாக..

"மணி.. உன் மூஞ்சுக்குதான் இவ்ளோ நாள் மேல கைவைக்காம விட்டு வச்சிருக்கேன்.."

"இதோ பாருங்க.. நீங்க பண்றது சட்டப்படி தப்பு.. தீர்ப்பு கூட வந்திருக்கு தெரியுமா?"

"நீ சரிப்படமாட்டே.. சட்டம் பேசறியா.. தயிர்சோத்துக்கு இவ்ளோ காண்டு கூடாது..தோ கூப்பிடறேன் நம்ம பசங்கள.."

"அய்யோ.. அவங்ககிட்டே ஏன் வம்பு.. எதாச்சும் கொடுத்து அனுப்புங்க!" கண்ணில் கலவரத்தோடு அம்சா..

"என்ன இருக்கிறது கொடுக்க?"

"ஏன் உன் பொண்டாட்டிய அனுப்பேன்! அம்சாவா பேரு? அம்சமாத்தானே இருக்கா?"

கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்..

"இந்தத் தாலி ஒண்ணுதான் இருக்கு.. சாமி படத்துக்குக் கீழே மஞ்சள் கயிறு இருக்கு அதை எடுத்துகிட்டு வாங்க.."

சமையல் அறையைத் தாண்டும்போதுதான் அதைப் பார்த்தான்.

மாட்சிமை தாங்கிய நீதிபதி அவர்களே.. என் கட்சிக்காரர் மணி, உணர்ச்சியின் தூண்டுதலால்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார் என்பதால், குறைந்தபட்சத் தண்டனை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

************************************
ஆங்கிலக் கலப்பை என் குறையாகக் கூறிய நண்பர் சாத்தான்குளத்தாருக்கு, துளி ஆங்கிலமும் கலக்காமல் எழுதிய இக்கதையை காணிக்கையாக்குகிறேன்.

Dec 6, 2007

காமத்திற்கும் கண் உண்டு - சிறுகதை

என் கற்பை இன்று இழக்கத் தீர்மானித்துவிட்டேன்.

28 வருடங்களாகப் பெயர் தெரியாத ஒருத்திக்காக பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்ததை கைவிட முடிவெடுத்ததில் வருத்தம் இல்லாதது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

வாய்ப்புக் கிடைக்காத வரைதான் நீ யோக்கியன் என்று குரு சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

இந்த நகரம் அப்படிப்பட்டது. இந்த விஷயத்தில் யோக்கியனாக இருப்பது ரொம்பவே கஷ்டம். அமெரிக்காவை டாலர் தேசம் என்றால் பாரீஸை காதல் தேசம் என்று சொல்லலாம்.. இல்லை இல்லை காம தேசம். க்யூவில் நிற்கும் நேரத்தைக்கூட வீணடிக்காமல் முத்தமிட்டுக்கொண்டிருப்பவர்கள் நிறந்த தேசம். தன்னூரில் எப்படியோ தெரியாது, இந்த ஊர்க்காற்றுக்கே உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய சக்தி அதிகமாகவே இருக்கிறது.சிக்னலில் நிற்கும் நேரத்தில் அப்படி என்னதான் அவசரமோ..தடவிக்கொண்டிருக்கிறான்.. இந்தக் கண்றாவியெல்லாவற்றையும் சூடேறிப் பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. காலார நடந்தாலும் தெருவோரக்கடைகளில் தூண்டிவிடும் விதவிதமான பொம்மைகள், உண்மைகள், லேப் டான்ஸுகள், க்ளப்புகள்!.. நடப்பதைக் கூட விட்டுவிடவா முடியும்? இந்த ஊரில் இவ்வளவு நாள் காப்பாற்றி வந்ததே பெரிய விஷயம்.

வாய்ப்பு கிடைக்காமல் இல்லை. பயம். புன்னைநல்லூர் நடராஜனுக்கு மேட்டர் தெரிந்து மறுபடி பெல்டைக் கழற்றுவாரோ என்ற தேவையில்லாத பயம் தொடங்கி எங்கேயாவது போட்டுக்கொடுக்கப்படுவோமே என்ற பயம். எதாவது வியாதி வெக்கை வந்து அசிங்கமாகிவிடுமோ என்ற பயம்.

இருந்தும், இன்று அந்த பயங்களைத் துறந்துவிட்டேன்.

காலையில் போர்டன் சொன்னபோதுகூட ஒன்றும் தோன்றவில்லை. "ராவி, நைட் கொஞ்சம் CDG போய் எலிஸாவைப் பிக் செய்து ஹோட்டலில் ட்ராப் செய்து விடுகிறாயா?"

இதுபோன்ற வேலைகள் எல்லாம் என் தலைமீது விழுவது வழக்கம்தான். நீதானே தனியாக இருக்கிறாய்.. நாங்கள் எல்லாம் குடும்பத்துக்குத் திரும்பவேண்டும். வீட்டில் தனியாக என்னதான் செய்வாய், உனக்கு பொழுதுபோக்குக்கு இன்று நான் பிச்சை போட்டேன்.. என்பது உள்ளே ஒலிக்கும்.

40 கிலோமீட்டர்.. சாயங்கால பாரீஸ் ட்ராபிக்கில் தள்ளாடிக்கொண்டு செல்லவேண்டும். இன்னும் 10 கிலோமீட்டர் ஊர்ந்துவிட்டால் பிறகு கொஞ்சம் ஆக்சிலரேட்டரை அழுத்தலாம். அறைக்குப் போனாலும் போர்தானே அடித்திருக்கும்..ரேடியோவைப் போட்டால் ஆப்பிரிக்க ஜாஸ் காட்டுக்கத்தலாகக் கத்தி காதைப் பதம் பார்த்தது.. எப்படித்தான் கேட்கிறார்களோ இந்த சத்தத்தை.. ஆட்டத்தை பார்க்க வேறு கூட்டிப்போயிருந்தான் ஒரு நண்பன். அருவருப்பு தாங்காமல் பாதியில் திரும்பி வந்துவிட்டேன். சிடியைத் தட்ட "தனிமை கொடுமையோ" என்று ஏ ஆர் ரஹ்மான் MP3யாக ஒலித்துக்கொண்டிருந்தார்.

உண்மை.. தனிமை, செய்ய வேலை ஏதும் இல்லாத, விலை உயர்ந்த பொழுதுபோக்குகள் மட்டுமே உள்ள இந்த நகரத்தில் தனிமை கொடுமைதான்.

பாடல் மாறியது.. "தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்".. என்ன இன்று இந்த மாதிரிப் பாட்டுகளாகவே வந்துகொண்டிருக்கின்றன?  என் மனசு தெரிந்து நடந்துகொள்கிறதா சிடி?

எப்படி இருப்பாள் அந்த எலிஸா? யான் என்ன சொன்னான்? "பிக் அப் பண்ணி ட்ராப் செய்துவிட்டு வந்துவிடாதே.. அமெரிக்க ஆபீஸில் அவளுக்கு ரொம்ப நல்ல பெயர். நிம்ஃப்!"

"யோவ்.. என்னய்யா சொல்றே?"

"அட கேள்விப்பட்டதைத் தான்பா சொல்றேன். ஒருத்தரை விட்டதில்லையாம் அவ!"

ஜேசுதாஸ் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.."விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்"

இதைவிட நல்ல சந்தர்ப்பம் எனக்கு வாய்க்காது என்று அப்போதே புரிந்துவிட்டது. ஒருநாள் ட்ரிப்பாக வரப்போகிறாள், இங்கே யாரையும் அவளுக்குத் தெரியாது. எதாவது ஏடாகூடம் ஆகிவிட்டாலும் போட்டுக்கொடுக்கமுடியாது.. யான் சொன்னது உண்மையாக இருந்தால் ஏடாகூடம் ஆக வாய்ப்பும் கிடையாது..

எனவேதான், என் கற்பை இன்று இழக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

டெர்மினலின் பார்க்கிங்கில் ஜகஜ்ஜோதியாக நின்றுகொண்டிருந்தது கூட்டம். ஏர்போர்ட் பார்க்கிங் ஒரு காட்டெருமை. எப்போது பாயும் எப்போது மேயும் என்று யாருக்கும் தெரியாது. மெஷின் க்யூவில் முன்னாள் ஒரு கறுப்பன்.. விரோதமாகப் பார்க்கிறானா, சிரிக்கிறானா என்று வித்தியாசம் தெரியவில்லை. நான் என் பங்குக்கு காசைப் போடும் முன் ஒருமுறை ஆசைதீர முறைத்தேன்.டெர்மினலை நோக்கி நடக்கையில் வயிற்றுக்குள் எதோ பந்து மாதிரி உருண்டது.

உள்ளே நுழைவதற்குமுன் ஆசுவாசத்திற்கு ஒரு சிகரெட் கொளுத்தினேன். இன்று மூன்று ஆகிவிட்டது. ஒரே நாளில் முழுசாகக் கெட்டுப்போய்விடப்பொகிறேனா?

சிகரெட்டை அணைப்பதற்குள்ளாகவே செல் மணியடித்தது. "ராவி?"

"யா"

"நான் எலிஸா.. போர்டன் சொன்னார், நீ என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக."

"ஆம், டெர்மினல் வாசலில் இருக்கிறேன்"

"ஓ, த கய் வித் ப்ளாக் ஓவர்கோட்? ஸ்பாட்டட்!"

டெலிபோனிலும் நேரிலும் ஒரே நேரத்தில் குரல் கேட்க, ஆரவாரமாகக் கையசைத்துக்கொண்டு நின்றாள் எலிஸா.

திரும்பும்போது நான் அதிகம் பேசவில்லை.. என் நிலைமை பேச அனுமதிக்கவில்லை.. அவள் வளவள என்று பேசிக்கொண்டே வந்தாள்..

"யூ ப்ரம் இண்டியா? த லேண்ட் ஆப் காம்சூத்ரா?"

"யூ லிவ் நியர் தாஜ்மகால்?" தாஸ்மால் என்று உச்சரித்தாள்.

"மெட்ராஸ்! ஓ கேள்விப்பட்டிருக்கிறேன்!"

"உன் மொழிப் பாட்டா? நன்றாக இருக்கிறது! யூ ஹாவ் ஜாஸ், ராக்?" ரேடியோவுக்கு வேண்டாவெறுப்பாக மாற்றினேன்.

ஹோட்டலில் செக் இன்னை முடித்து சாவி வாங்கிக்கொண்டே "உனக்குத் தெரியுமா ராவி? ஜஸ்ட் 50 வருஷம் முன்னால்கூட என்னை ஹோட்டலுக்குள் அனுமதிக்க யோசித்திருப்பார்கள்!"

என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. "இப்போது டிஸ்கிரிமினேஷன் குறைந்துவிட்டிருக்குமே"

"ஆமாம், வெளிப்பக்கம்! உள்ளே எல்லாரும் அப்படியேதான் இருக்கிறார்கள்" புன்னகை என்னவோ வசீகரமாகத்தான் இருந்தது.

"ரூமுக்கு வாயேன், கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம்.. ஹவ் அபவுட் எ ட்ரிங்க்? என் பாடி க்ளாக்குக்கு இப்போதுதான் மதிய நேரம்" கண்ணில் அழைப்பு. யான் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

"இல்லை எலிஸா.. எனக்குக் கொஞ்சம் சில்லறை வேலைகள் இருக்கின்றன. நாளைக்காலை எட்டு மணிக்கு வந்து பிக் செய்துகொள்கிறேன்..குட்நைட்"

திரும்ப வரும்போது மனதில் வெறுமை.. எல்லாமே எதிர்பார்த்ததுபோல்தானே நடந்தது? ஏன் தவறவிட்டேன் இப்படி ஒரு வாய்ப்பை? இதை நிறவெறி என்று சொல்ல முடியுமா? பேசும்போது பழகும்போது எல்லாம் நிறவெறியா காட்டுகிறேன்.. இருந்தாலும் இந்த அளவுக்கு..மனசு இன்னும் பக்குவப்படவில்லை! அட இந்த அசிங்கம் செய்வது பக்குவமா?  பயமோ? தயக்கமோ? என்ன எழவோ!  
 
சே! வேறு வழியில்லை.. நடராஜனே கதி!

************************

பின்குறிப்பு: கதை என்று எழுதி ரொம்பநாள் ஆகிவிட்டது.. தேன்கூடு சாகரனை ரொம்ப மிஸ் செய்கிறேன்! தேன்கூடு போட்டிகள் இருந்தவரை மாதம் ஒன்றாவது எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் போட்டி என்று அறிவித்த சர்வேசனுக்கும், ஊக்கப்படுத்திய பாஸ்டன் பாலாவுக்கும் நன்றி



Dec 16, 2006

சனிக்கிழமை - Promise fulfilled;-)

குறும்புன்னு ஒரு பிளாஷ் தயார் பண்ணா, பிளாக்கரும், பிளாஷும் போட்டோபக்கெட்டும் சேர்ந்து என்கிட்டே அடிச்ச குறும்பு தாங்க முடியல!

பட்டன் வொர்க் ஆகாததையே குறும்புன்னு நெனச்சு சிரிச்ச ஆவிங்க,
வேலைக்கு ஆவலை, சனிக்கிழமை கச்சேரி வச்சுப்போம்னு சொன்ன லக்கிலுக்,
போன் பண்ண ரெடியா இருந்த முத்துகுமரன்
இடைக்கால நிவாரணம் கொடுத்த கோபி, கஷ்டப்பட்டு பார்த்து பாராட்டிய சிறில், பொன்ஸ், நாமக்கல் சிபி,I H மற்றும் பலர்,
வெள்ளெழுத்து வந்துடிச்சான்னு அக்கறைப்பட்ட இ கொ,
எறும்பு ஊருது, ஒண்ணும் தெரியலேன்னு கஷ்டப்பட்ட உஷா,
மார்க்கை சுழிச்சுறவான்னு பயமுறுத்தின தருமி..

எல்லாரும் இப்ப பாருங்க!

முக்கியமான பிரச்சினை என்னன்னா, பிளாஷிலே கறுப்பு பின்புலம் கொடுத்துட்டு, பிளாக்கர்லே ஆரஞ்சு பின்புலம்னு தப்பா கொடுத்துட்டேன். அதனால, ஆரஞ்சு மேலே வெள்ளை என் உள்ளத்தைக் காட்டினாலும், உள்ளதைக்காட்டவில்லை;-))

மின்னஞ்சல் வேணும்னா கேளுங்க!


Dec 14, 2006

ஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006? (குறும்பு - தேன்கூடு)(Repair version 2:-))

வலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.

ஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்!

இதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006!

விளையாடுங்கள்.

பி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.

பி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.

பி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))

பி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.

பி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.

பி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:
கோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..

மக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து "தொடர இங்கே அழுத்தவும்" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.



Dec 6, 2006

மறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)

ஒன்று

காலை எட்டரை:

"என்ன சார், வண்டி ஸ்டார்ட் ஆகலியா?"

"என்ன பண்றது? ரெண்டு தூறல் போட்டா இதுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுது"

"வித்துட்டு புது வண்டி வாங்கிக்க வேண்டியதுதானே?"

"காசு?"

"சார் கால்லே அடி பட்டிருக்கு பாருங்க, ரத்தம் வருதே! கொஞ்சம் இருங்க, டிங்சர் கொண்டு வரேன்"

"ஸ்டேண்ட் இடிச்சுடுச்சு போல! பரவாயில்லை, நான் பாத்துக்கறேன்"

காலை பத்தரை:

"என்ன ஞானசகாயம், இன்னும் போர்ஷனை முடிக்கலன்றீங்க?"

"என்ன பண்றது சார், இந்த வகுப்புலே பசங்க கொஞ்சம் மந்தம். படிப்பிலே ஆர்வமே இல்ல"

"இதை நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றவங்க கிட்டே சொல்ல முடியுமா?.. எதோ கடமைக்கு வேகமா நடத்தி முடிங்க கே என்"

"அப்படி நடத்தறது என் தொழிலுக்கு மரியாதை இல்லை சார்"

"ஆமா! தொழிலுக்கு எல்லாம் மரியாதை கொடுங்க! ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க! இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை!"

காலை பதினொன்று:

"எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். யாரு இந்தப்படத்தை வரைஞ்சது?"

"...."

"பாடம் நடத்த முடியலே, சொன்னாப் புரிஞ்சுக்கறதுக்கு துப்பில்லே, வீட்டுப்பாடம் ஒருத்தனும் எழுதலே.. என்னைக் கிண்டல் செய்யறதுக்கும் படம் போடறதுக்கும் மட்டும் தெரியுதா? இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும்!"

"..."

"ராமு.. இங்கே வா.. எனக்கு உம்மேலேதான் சந்தேகம்..என்னடா வாய்லே! இப்படி நாருது? பீடியா?"

"இல்லே சார், கஞ்சா!"

"எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே கூசாம சொல்லுவே! நீட்டுறா கைய"

பிற்பகல் மூன்று:

******குறும்பு*******

பிற்பகல் ஐந்தரை:

"இன்னும் எவ்வளவு நேரம்பா ஆகும்?"

"கார்புரேட்டரை கழட்டி சுத்தம் செய்யணும் சார். டயர் வேற கிழிஞ்சிருக்கு.. சைலெண்சர்லேயும் அடைப்பு இருக்கு.. நீங்க நாளைக்குக் காலையிலே எடுத்துக்கங்க சார்."

____________________________________________

இரண்டு

காலை நாலரை:

"இன்னுமா எழுந்திருக்கலே. எத்தனை முறைதான் எழுப்பறது?"

"இன்னும் ரெண்டு நிமிஷம்மா!"

"ரெண்டு ரெண்டு நிமிஷமாவே அரை மணிநேரம் ஓட்டிட்டே. நாளைக்கு புருஷன் வீட்டிலே போயி இப்படியா தூங்குவே?"

"அதுக்கு இருக்கும்மா இன்னும் பத்து வருஷம்"

"பத்தா! இப்பவே வயித்துலே நெருப்பைக் கட்டிக்கற மாதிரி இருக்கு. சும்மாவா சொன்னாங்க.. பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு"

"அவங்களேதான் சொன்னாங்கம்மா - தாய்க் கண்ணோ பேய்க்கண்ணோன்னும்"

"இதெல்லாம் பேசத் தெரியுது, காலையிலே எழுது வாசல் தெளிச்சு கோலம் போடத் தெரியலே"

காலை ஏழு:

"அம்மா இன்னிக்கு மத்தியானத்துக்கு என்ன?"

"பாம்பே மீல்ஸ் போதுமா? என்னடி இது கேள்வி, தயிர்சாதமும் ஊறுகாயும்தான்"

"அம்மா டிபன் பாக்ஸ் சரியாவே மூட மாட்டேங்குதும்மா. என் காலேஜ் புக்ஸ்லே எல்லாம் உன்னோட ஆவக்காய் வாசம் வீசுது. பசங்க கிண்டல் பண்றாங்கம்மா"

"சரி போயி சாமி விளக்கேத்து"

"இல்லேம்மா, நான் இன்னிக்கு கூடாது"

"சரியாப்போச்சு.. செய்றதே ரெண்டு மூணு வேலை.. அதுக்கும் லீவா? சரி எதையும் தொடாம ஓரமா நட!"

காலை எட்டரை:

"பாப்பா, வரயா, வண்டியிலே காலேஜ் போகலாம்"

"உன் வேலையப் பாத்துகிட்டுப் போடா"

"என்ன ப்ரியா, லேட்டாயிடுச்சி?"

"என்ன பண்ரது சொல்லு. காலையிலே எழுந்து தலைக்குக் குளிச்சு காயப்போடக்கூட நேரம் இல்லே. மண்டை இடிக்குது. வர வழியிலே தயிர் சாதம் மூடி வேற திறந்துகிச்சு. இதுலே டேட்ஸ் வேற! இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை! இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா?"

******குறும்பு*******

காலை பத்து:

"ப்ரியா! எத்தனை முறை கூப்பிடறது? ஒரு சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியலே.. நீங்கள்லாம் காலேஜ் வரைக்கும் எப்படித்தான் வந்துடறீங்களோ!"

"..."

"அழுகை மட்டும் உடனே வந்துடுது!"

_____________________________

மூன்று

மாலை ஐந்து:

"எத்தனை முறைதான் வாசல்லே இருந்தே வேடிக்கை பார்ப்பீங்க? வாங்க உள்ளே போகலாம்"

"விலை அதிகமா இருக்கும்போல இருக்கே"

"தேவைன்னா விலையப் பாத்தா ஆகுமா?"

"சரி 200 ரூபாய்க்கும்தான் குளிர்கண்ணாடி கிடைக்குது"

"அதுவும் இதுவும் ஒண்ணாகுமா? இதுக்கு உள்ள நம்பகம் அதுக்கு வருமா? காசைப் பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதீங்க"

"சரி இப்ப இருக்கற நெலைமையிலே 3000 ரூபா அதிகமாப் படுதே"

"என்ன நெலைமை? நான் தரேன், வாங்கிக்குங்க"

"உனக்கு ஏது பணம்?" "நான் வாய்க்கட்டி வயித்தக்கட்டி பருப்பு டப்பாவிலே பாதுகாத்து வச்சிருந்தேன்"

"பருப்பு டப்பாவிலே மொளைச்சுதா? அதிக செலவுன்னு என்னை ஏமாத்தித் தானே வச்சிருக்கே?"

"என்னமோ.. நீங்க என்கிட்டே கொடுத்தப்புறம் அது என் பணம்தான். இந்த ப்ரேம் உங்களுக்கு அழகா இருக்கும், எடுத்துக்கங்க"

மாலை ஏழு:

"இந்த வீடுதானா?" "ஆமாம். வாசலே KB100 நிக்குதே, அவருதுதான்"

""சீனிவாசன்.. சீனிவாசன்"

"இது அவர் பிள்ளைதானே?"

"அப்பா! அப்பா யாரோ வந்திருக்காங்க"

"வாங்க சார், உக்காருங்க.. டேய், இது மதுவந்தி அப்பாடா, ஞாபகம் இல்லே? அன்னிக்கு பார்ட்டிக்குப் போயிருந்தோமே! அங்கிளுக்கு ஹாய் சொல்லு"

" ஹாய் அங்கிள்! அப்பாவோட ஆபீஸ்லேதான் வேலை செய்றீங்களா?"

"ஆமாண்டா கண்ணா.. உன் பேர் என்ன?"

"குரு, 3 A. அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர்தான் உங்களுக்கும் மேனேஜரா?"

"பையன் ரொம்பச் சூட்டிகை!"

"ஆமாம் சார்.. அறுந்த வாலு!"

"இதென்ன கண்ணாடி? ரஜினி மாதிரி பண்ணுவீங்களா? நான் பண்ணுவேனே!"

******குறும்பு*******

இரவு பத்து:

"வாரண்டி, கேரண்டி எல்லாம் நீங்க உடைச்சுட்டு வந்தா தர முடியாது சார். வொர்க்மேன்ஷிப்லே டிபக்ட் இருந்தா மட்டும்தான் அப்ளை ஆகும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். இன்னொரு கண்ணாடி எடுத்துக்கங்க, 10% தள்ளுபடி தரேன்.

நீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை!

Nov 28, 2006

விழித்தெழுந்தது தூங்கிய சிங்கம் (28 Nov 06)

போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு பாட்டுப் பாடின சிங்கம், கொஞ்ச நாளா தூங்கப் போயிடிச்சு. அதுக்காக போட்டியில கலந்துக்கலையான்னு கேக்காதீங்க! ஒரு முறை தவிர, எல்லா தேன்கூடு போட்டியிலையும் கலந்துகிட்டது என்னமோ உண்மைதான். அது தவிரவும் தடாலடி அது இதுன்னு எங்கே போட்டி நடந்தாலும் தன் மூக்கை நுழைச்சதும் உண்மைதான், அந்த மூக்கு (கொஞ்சம் நீளம் அதிகமான மூக்கு) பலமுறை உடைபட்டதும் உண்மைதான். சிங்கம் கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிச்சுப் பாத்துது.

"உனக்கு ஒரு மூணு போட்டியில முதல் பரிசு கிடைச்சுதுன்னா அதுக்கு என்ன காரணம்?

போட்டியெல்லாம் புதுசா இருந்த காலம், நெறையபேர் கலந்துக்கலைன்றது முக்கிய காரணம்.
யதேச்சையா உனக்குத் தோணின விஷயங்கள் போட்டி கருத்துக்கு ஒத்துப்போன அதிர்ஷ்டம் ஒரு காரணம்.
போட்டிகளோட ரீச் பெரிசா வராத நேரம், பெரிய பெரிய பார்ட்டிங்க எல்லாம் அப்பால பாத்துக்கலாம்னு வழிவிட்டுட்டது ஒரு காரணம்.

இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ, தெளிஞ்சுக்கோ (விக்கிப் பசங்க டேக்லைன் - இதைத்தான் இன்லைன் அட்வர்டைஸ்மெண்டுன்னு சொல்வாங்களோ?). அடங்கி வாழு!"

இப்படி அந்த சிங்கம் அடங்கி வாழ முயற்சி பண்ணாலும், போட்டியில கலந்துக்கறதை மட்டும் கைவிடல! மறுபடி அந்தப் பொற்காலம் (ரசிகர்களுக்கு போதாத காலம்) வாராதான்னு எல்லா முடிவுகளையும் பார்த்துப் பெருமூச்சு விடறதோட சரின்னு இருந்துது.

விடாமுயற்சியைப் பாராட்டி ஒரு பரிசு கொடுக்கவே கொடுத்துட்டாங்க.

தேர்ந்தெடுத்த வலைப்பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சிறப்பு நடுவர்களுக்கு என் நன்றி.


--
With Best Regards,

R Suresh Babu

 

blogger templates | Make Money Online