துப்பாக்கி வெடித்தபோது நான் பெட்டியை தள்ளுவண்டிக்குள் தள்ளிக்கொண்டிருந்தேன். வெடிச்சத்தம் கேட்டதும் அனிச்சையாக கீழே கவிழ முற்பட்டபோதுகூட நான் தான் இதற்குக் காரணம் என்பது தெரியவில்லை.
அவ்வளவு குண்டான பாதுகாப்பு அதிகாரி வேகமாக ஓடிவந்தது, சந்தர்ப்பம் தெரியாமல் சிரிப்பு வந்தது. என்னை நோக்கி "கையை மேலே தூக்கு" என்றான். நான் தூக்கினேன்.
"உங்களைச் சொல்லவில்லை - பக்கத்தில் இருக்கிறானே மொட்டையன்.. அவனைச் சொன்னேன்"
மொட்டையன் கையைத் தூக்கும் முன்பே மேலும் இரண்டு அதிகாரிகள் அவனைச் சூழ்ந்து கீழே வீழ்த்தினர். அவனுக்கும் ஏன் என்று புரியவில்லை என்பது பயமும் கலவரமும் கலந்த பார்வையில் தெரிந்தது.
"என்ன ஆயிற்று?" தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.
"உங்களைத்தான் கொலை செய்ய வந்திருக்கின்றான் - அதுவே தெரியலையா?"
"என்னையா?" நம்ப முடியவில்லை. மொட்டையன் வயதான ஆள். ஒல்லியாக ஊதினால் ஒடிந்துவிடுவான் போல இருந்தான். எல்லா நிறங்களும் அள்ளித் தெளிக்கப்பட்ட சால்வையைப் போர்த்திக்கொண்டது போல ஒரு வினோதமான உடை. ஊடாவின் நவநாகரீகத்துக்கு முன் பழைய கலாசாரத்தின் எச்சம் போல இருந்தான்.
விமானம் பிடிக்க ஒரு மணிநேரமாக வரிசையில் ஊர்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரை அவனை கவனிக்கக்கூட இல்லை. ஒரு நிமிடம் முன்புதான் தள்ளுவண்டியில் இருந்து கீழே விழுந்த பெட்டியை எடுத்துக் கொடுத்தான். இந்த ஒல்லிப்பிச்சான ஆஜானுபாகுவான என்னைக் கொலை செய்ய வந்தான்?
"இல்லையே.. அவர் பெட்டியைத்தானே எடுத்துக் கொடுத்தார்!"
"உங்களைத் தொட வந்தானோ என்று நினைத்துவிட்டோம்.. இவர்களிடம் நாமெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. டேய் மொட்டை - அட்டையைக் காண்பி"
அட்டையை தன் கையிலிருந்த சாதனத்தால் வருடித் தகவலைப் படித்தான்.
"ஒழிஞ்சு போ! இவர்களுக்கெல்லாம் விமானப்பயணம் ஒன்றுதான் கேடு"
வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டார்கள்.
மொட்டையன் குனிந்து சிதறி இருந்த காகிதங்களைச் சேகரித்தான்.
"அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு.."
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எங்களுக்கு இது பழக்கமானதுதான் - நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் குருவி சுடுவதைப் போல சுட்டுப்போட்டுவிட்டு சென்றிருப்பார்கள்" பேசுகையில் மூச்சு வாங்கியது. ட வரும் இடங்களில் த போல உச்சரித்தான். மொட்டையர்களே பொதுவாக அப்படித்தான் பேசுவார்களோ இல்லை அடிபட்டி மேலுதடு வீங்கியதால் குரல் பிறழ்ந்ததோ தெரியவில்லை.
"எந்த ஊருக்குப் போகிறீர்கள்?"
"அலையில் இருந்து உலைக்கு"
என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை.மொட்டையன் பேச்சில் தெரிந்தது வெறுப்பா விரக்தியா? பாதுகாப்பு அதிகாரி சொன்னது நிஜம்தான் போல!
"நீங்கள் எங்க போகிறீர்கள்?"
"நான்..பூமாவுக்கு"
"நானும் அங்கேதான்.."
வரிசை நகர, வெளியேறல் பரிசோதனைக்கு ஊட்டாக் குடிமக்கள் வரிசையில் நுழைந்தேன். ஊடாக்காரர் வரிசை காலியாக இருந்தது. கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்புறத்தில் ஏராளமான மொட்டையர்கள் நின்றுகொண்டு தங்கள் முறைக்காகக் காத்திருந்தார்கள். ஊடாக்குதானே முன்னுரிமை!
ஒளிக்கதிர்கள் வருடி நான் எல்லா வகையிலும் சுத்தமானவன் என்று பறைசாற்றியது.
விமானத்துக்குள் நுழையக் கதவு திறந்ததும் குபீரென அடித்தது துர்நாற்றம். கை அனிச்சையாக மூக்கை மூடியது. சுவாசத்துக்கு முகமூடி போட்ட பணிப்பெண் மரியாதையாக வருந்தினாள்.
"மன்னிக்கவும்..நறுமணம் தூவப்படுகிறது.. நிமிடங்களில் சரியாகிவிடும்"
"என்ன நாற்றம் இது?"
"செய்திகளில் பார்க்கவில்லையா? புரட்சி செய்த மொட்டையர்கள் 300 பேர் இதில் திரும்பிப் போகிறார்கள்"
"அதனால் ஏன் நாற வேண்டும்?"
"அந்த உடல்கள் பின்பக்கமாக ஏற்றப்படுகின்றன"
குபீரென வாந்தி வந்தது.
"கவலைப்படாதீர்கள், உங்கள் இருக்கை முன்பக்கமாகத்தான் இருக்கிறது"
பக்கத்து இருக்கைக்கு கிழ மொட்டையன் வந்தது ஆச்சரியமாக இருந்தது. இதெப்படி நடக்கமுடியும்? ஊடாக்குடிமகனுடன் மொட்டையனா? விரிந்த என் புருவத்தைக்கவனித்த மொட்டையன், "ஊடாக்காரர்கள் உங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. வேறு வழியில்லாமல்தான் என்னை இங்கே உட்கார வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஆட்சேபித்தால் அனுப்பிவிடுவார்கள்"
"சேச்சே அதிலே என்ன? நீங்கள் இருக்கலாம் தாராளமாக..பேச்சுத்துணையாக இருக்கும்"
"இது வெற்று வார்த்தை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். "
"நான் அப்படிப்பட்டவன் இல்லை. தலைமுடியை வைத்து எடை போடாதீர்கள். மனிதனை மனிதன் கேவலமாக நடத்துவது எனக்கு ஒவ்வாதது"
கிழவனின் புருவம் உயர்ந்தது. என் "பெருந்தன்மை"யை உடனே சோதிக்க விரும்பினான் போலும். கையை நீட்டி, "என் பெயர் சூ மோ"
அனிச்சையாக "ஆத்மா" என்று கையைப் பற்றிக் குலுக்கினேன். கரங்களின் சூடு என்னைத்தாக்கியது. வெயில் தேசத்தின் விளைவு நிரந்தரமாக அவர்கள் உடலில் ஏறிவிட்டது போலும். மீன் பிடிப்பது போல மென்மையான குலுக்கல். இவன் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேனே!
"சூ மோ? நீங்கள்தான் அந்தப் பிரபல..""
"நானேதான்"
"பூமா காந்தி?" என் ஞாபகசக்தி எனக்கே வியப்பாக இருந்தது. எப்போதோ படித்த மொட்டையர் பிரசுரம்! இப்போது புரிந்தது இவருக்கு மட்டும் ஏன் சலுகை என்று.
"காந்தி யாரெனத் தெரியுமா உங்களுக்கு? ஆச்சரியமாக இருக்கிறது!"
"தெரியாது.. கேள்விப்பட்டிருக்கிறேன்.. உங்கள் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த புரட்சியாளர்.. இல்லையா? உங்களையும் உங்கள் ஆதரவாளர்கள் அப்படித்தான் கூப்பீடுவார்கள் என எங்கேயோ படித்த ஞாபகம்."
"காந்தி என்ற பெயருக்கெல்லாம் எனக்குத் தகுதி கிடையாது. 300 பிணங்களை ஏற்றிச் செல்லும் விமானத்தில் காந்தி பயணித்திருந்தால் அவரும் பிணமாகத்தான் சென்றிருப்பார். பிச்சை பெற்ற உயிருடன் என்னை மாதிரி வரமாட்டார்"
"எனக்கு இதைப்பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியாது. நானுண்டு என் வேலையுண்டு என்றிருப்பேன். இந்தக் கலவரத்தைப் பற்றியே விமான நிலையம் வருகையில்தான் படித்தேன். மொட்டையர் விவகாரங்கள் பெரும்பாலும் எங்கள் பார்வைக்கு வராது. தடை!"
"எங்கே வேலை செய்கிறீர்கள்?"
"விவசாய ஆராய்ச்சி மண்டலத்தில் விஞ்ஞானியாக இருக்கிறேன். இப்போதும் நெல் விளைவிக்க ஏற்ற மண்ணைத் தேடித்தான் உங்கள் ஊருக்கு வருகிறேன்"
"மறுபடியும் இன்னொரு வகை மண்! இதைத் தோண்டுவதில் எத்தனை மொட்டையர்களைப் பலி கொடுக்க வேண்டுமோ!" சூ மோ இதை என்னிடத்தில் சொல்லவில்லை. தனக்குத் தானே விரக்தியாகச் சொல்லிக்கொண்டார். வெறித்த பார்வை பயமூட்டியது. எப்படி பேச்சைத் தொடர்வது என்று தெரியவில்லை. தொடரத்தான் வேண்டுமா என்றும் தோன்றியது. எனக்கு எதற்கு இதெல்லாம்.
"வெயில் பார்த்திருக்கிறீர்களா? தாங்குவீர்களா?" இதை என்னைப்பார்த்துதான் கேட்டார்.
"தாங்குவேன் என்றுதான் நினைக்கிறேன். ஒரு வேலையாக நார்வே சென்றிருந்தேன். அங்கே 55 டிகிரி வெப்பம். அதைத் தாங்கிவிட்டேன்"
"55 டிகிரி, எங்களுக்கு குளிர். 80-90 டிகிரி சுலபமாகப் போகும். சிறப்பாடை அணியாமல் வெளியே சென்றுவிடாதீர்கள்"
"அவ்வளவு வெப்பமா? தண்ணீரின் கொதிநிலைக்கு மிக அருகில் இருக்குமே!"
"ஆமாம். நாங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன் முடியோடு இருந்தவர்கள்தான். இந்த வெப்பம்தான் எங்களை மொட்டையர்களாக்கியது. மொட்டை அடிப்பது என்பதற்கு கொள்ளை அடிப்பது என்று ஒரு அர்த்தமும் உண்டு. எங்களை மொட்டை அடித்தது வெப்பம். கொள்ளை அடித்தது நீங்கள்!" எதிர்பாராமல் வந்த குற்றச்சாட்டில் திகைத்தேன்.
"நானா?"
"நீங்கள் இல்லை - உங்கள் ஊரின் அரசாங்கம். திட்டமிட்ட சுரண்டல்."
"உணவும் வெயில் தாங்க சிறப்பாடையும் அனைத்து மொட்டையர்களுக்கும் இலவசமாக அளிக்கிறதே ஊட்டா அரசாங்கம்?"
"நீங்கள் உங்கள் வரலாற்று நூலை நன்றாகவே படித்திருக்கிறீர்கள்! நாய்க்கு எலும்புத்துண்டு போடுவதைக்கூட காருண்யம் என்று ஒப்புக்கொள்ளலாம். செடிக்கு உரம் போடுவது கருணையா? மொட்டையர்கள் செத்தால் அவர்களுக்கு யார் வேலை செய்வார்கள்? இவை இல்லாவிடில் சாவு உறுதி அல்லவா? "
"இருந்தாலும் உதவிதானே செய்கிறார்கள்?"
"உதவி! உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன், உங்கள் ஊடாவில் மனிதர்களே கிடையாது. புவி வெப்பம் ஏறப்போவது தெரிந்து, பூமா போன்ற பகுதிகள் கொதிக்கப்போவது தெரிந்து பனிப்பிரதேசங்களாக இருந்த இடங்களுக்கு ஓடிவந்தவர்கள்தான் இன்றைய ஊடாக்காரர்கள். இன்று? உங்கள் ஊட்டத்தையும் எங்கள் வாட்டத்தையும் பாருங்கள்! யார் கண்டது, நம் இருவரின் கொள்ளுப்பாட்டன்களும் ஒரே ஆளாகக்கூட இருக்கலாம்."
"அப்புறம் ஏன் இந்தப் பிரிவினை?"
"தங்கள் வளங்களை பூமாக்காரர்களோடு பங்குபோட விரும்பவில்லை ஊடா. பூமாவின் மண் வேண்டும் விவசாயத்துக்கு. அந்த மக்கள் வேண்டும் மண்ணை இடம் பெயர்க்க. விவசாய ஆராய்ச்சிதானே செய்கிறீர்கள், மணல் எடுப்பது எப்படிப்பட்ட வேலை தெரியுமா உங்களுக்கு? தினம் பல உயிர்களையும் கப்பமாக எடுத்துக்கொள்ளும் சுரங்கங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பெயர்க்கப்படும் மணலுக்கு என்ன விலை கொடுக்கப்படுகிறது தெரியுமா? உணவும் ஆடையும்! இந்த மணல் இல்லையென்றால் உங்களுக்கு ஏது உணவு? எங்கள் பிரதேச வளங்களை உறிஞ்சியதும் ஊடாதான். இப்போது உதவி செய்யும் சாக்கில் அடிமைப்படுத்துவதும் ஊடாதான்."
"அப்படி இது அடிமை வாழ்வாக இருந்தால் ஏன் ஊடாவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டும்? முடியாது என்று சொல்லிவிடலாமே?"
"பூமாவில் மக்கள் இருக்கிறார்கள், நிலம் இருக்கிறது. காட்டுவிஷச்செடிகள் தவிர வேறு ஒரு செடி தழைப்பதில்லை. வயிறு ஒன்று இருக்கிறதே. உணவைக்காட்டித் தான் அடிமை ஆக்கினார்கள். "
"என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? வெப்பம் அதிகம்தான்.. அதற்காக விவசாயம் செய்ய முடியாமல் போய்விடுமா என்ன? கடல்நீர் இருக்கிறதல்லவா?"
மேலே பேச முடியவில்லை. உணவுத்தட்டுகளை பணிப்பெண் அடுக்க ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு தனி உணவு இருக்கிறது." சூ மோவைக் கண்கொண்டு என்னால் பார்க்க முடியவில்லை. ஏன் அவரும் இவ்வுணவை உண்டால் என்ன? திரும்பிவிட்ட பணிப்பெண்ணை அழைக்க முனைந்தவனை சூ மோ தடுத்தார்.
"நான் என் மக்களுடன் பின் கட்டுக்குச் சென்று சாப்பிட்டு வருகிறேன். "
உணவு அருமையாக இருந்தது - உள்ளே செல்லவில்லை. இன்னும் முழுமையாக அடங்காத நாற்றம், சூ மோ சொன்ன கதை, உணவுக்காக அடிமையான - பின்கட்டில் சடலமாக உள்ள பூமாக்கார மொட்டையர்கள்.. தீண்டத்தகாதவர்களாக்கிவிட்ட ஊடா அரசாங்கம்! குற்ற உணர்ச்சியைத் தூண்டிய உணவு. ரத்தம் தோய்ந்த உணவு.. சாப்பிட மனம் வரவில்லை.
சூ மோ திரும்பி வந்தார். முகத்தில் மேலும் கவலை ரேகைகள். "310 ஆகிவிட்டது"
"10 பேரா? விமானத்துக்குள்ளேயா?"
"ஆமாம். பயணம் முடிவதற்குள் இன்னும் 20-30 ஆவது ஏறும். விஷவாயு வேலையைக் காட்ட நேரம் ஆகலாம். ஆனால் நிச்சயம் காட்டும்."
"விஷவாயு?"
"ஆமாம்! எவ்வளவு பெரிய தவறு செய்தார்கள் இவர்கள்! ஊடாவின் தெருவில் படுத்துத் தூங்கும் அளவுக்கு என்ன தைரியம்!"
"தூங்கினதற்கா இந்த தண்டனை?"
"தூங்கினதற்கு மட்டும் இல்லை.. மணல் கொண்டு வந்த கப்பலோடு வந்தவர்கள் ஊருக்குள்ளே வந்ததே தவறு.. ஒரு வேளை ஊடாக்காரர் யாரையாவது தொட்டுவிட்டால்? மேலும், தூக்கம் - அதுவும் குத்தும் வெப்பம் இல்லாத ஊடாவில் தூக்கம் ஒரு ஆடம்பரம். அதற்குப் பழகியவன் கேள்வி கேட்பான். கேள்வி கேட்பவன் புரட்சி செய்வான். ஊடா அரசாங்கத்துக்கு எதையும் வளரவிட்டுப் பழக்கமில்லை. ஆரம்பத்திலேயே ஒழிப்பது எல்லா வகையிலும் சௌகரியம்."
"தூங்குபவர்கள் மீதா வாயுவைப் பிரயோகித்தார்கள்?" இவர் எப்படி அமைதியாக இருக்கிறார்? எத்தனை பிணங்கள் - அதுவும் உப்புப்பெறாத காரணத்துக்கு!
"அதைக் கேள்வி கேட்கத்தான் வந்தேன் நான். பிணங்களை எடுத்துச் சென்றால்தான் பேச்சுவார்த்தை என்றார்கள்.. பட்டாலே நோய் தொற்றி விடும் என்ற தேவையில்லாத பயம்! திரும்ப வேண்டியதாகிவிட்டது"
தயங்கித் தயங்கிக் கேட்டேன் "நோய் தொற்றிவிடுமா என்ன?"
"நீங்கள் ஒரு விஞ்ஞானி! உங்களுக்கும் இந்த நம்பிக்கையைத் தொற்ற வைத்துவிட்டார்கள்!" வரட்டுச் சிரிப்பு.
அடங்கியிருந்த துர்நாற்றம் மீண்டும் எழுந்து சூழலைச் சொன்னது. அவரவர் சிந்தனையில் அமைதியானோம். நீண்ட நேரம் கழித்து,
"உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன். அதற்குள் பேச்சு மாறிவிட்டது"
"கேளுங்களேன்"
"பூமாவில் விவசாயத்தை யாரும் ஆராய்ச்சி செய்வதில்லையா? ஏன் செடி தழைப்பதில்லை என்று யாரேனும் முயற்சித்துப்பார்க்கவில்லையா?"
"ஏன் செய்யாமல்? தாராளமாகச் செய்திருக்கிறோம்.. ஆனால் படிப்பும் விஞ்ஞானமும் தடைசெய்யப்பட்டிருக்கிறதே! "
"எனக்குத் தெரிந்த அளவில் பூமாவில் தாராளமாக விவசாயம் செய்ய முடியும். இங்கிருந்து வரும் மண்ணில்தானே ஊடாவில் விவசாயம் நடக்கிறது? என்ன கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்! நான் கூடச்செய்ய முடியும்"
"சொல்வது சுலபம் ஆத்மா. நீங்கள் எங்களுக்கு உதவினால் நீங்களும் ஊடாவுக்குத் தீண்டத் தகாதவராகி விடுவீர்கள். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாதீர்கள்" சூ மா வெளிப்படையாக வேண்டாம் என்றாலும் அவர் கண்களில் அழைப்பு இருந்தது. உணர்ச்சியற்று இருந்த அவர் குரலில் இரைஞ்சல் தெரிந்தது.
இருந்தோம் உண்டோம் செத்தோம் என்பதும் வாழ்க்கையா? அரசாங்கத்தின் பொம்மலாட்டப் பொம்மையாக வாழ்ந்தது போதும். விமானத்தில் நாங்கள் சந்தித்தது எப்படிப்பட்ட யதேச்சையாக இருந்தாலும் விளைவுகளை வருங்காலம் பேசவேண்டும். வெப்பம்தானே பிரச்சினை? சமாளிக்கலாம். நான் முடிவெடுத்துவிட்டேன்.
விமானம் தரை இறங்கியதைக் குலுக்கல் சொன்னது.
குடியேறல் பரிசோதனைக்குள் செல்லுமுன் சூ மோவிடம் ஐந்து விரல்களைக் காட்டினேன். இன்னும் ஐந்து நாள் என் வேலை முடிய.
பாதுகாப்பு அதிகாரி நட்பாகப் புன்னகைத்தான், மொட்டை இல்லை. ஊடாக்காரன்தான்.
"எத்தனைநாள் பயணம்?"
"ஒரு வாரம்"
"மொட்டையர்களோடு பழகாதீர்கள் - ஊடாவிற்கு எல்லா இடமும் கண்கள்"
"இந்த மருந்தைக் குடியுங்கள்.. வெயிலுக்கு நல்லது" முத்திரை குத்திக்கொண்டே வலதுபுறம் இருந்த குப்பியைக் காட்டினான். மருந்து கசந்து தலை சுற்றியது. ஒரே நிமிடம்தான். சரியாகி விட்டது.
வெளியே விநோதமாக சில மொட்டையர்கள் அழுது கொண்டிருந்தார்கள். "சூ மோ.. இப்படி ஒரு நிலைமை நமக்கு மட்டும் ஏன்?"
சூ மோ என்று அழைக்கப்பட்ட மொட்டையன் வயதான ஆள். ஒல்லியாக ஊதினால் ஒடிந்துவிடுவான் போல இருந்தான். எல்லா நிறங்களும் அள்ளித் தெளிக்கப்பட்ட சால்வையைப் போர்த்திக்கொண்டது போல ஒரு வினோதமான உடை. ஊடாவின் நவநாகரீகத்துக்கு முன் பழைய கலாசாரத்தின் எச்சம் போல இருந்தான்.
இவனும் இதே விமானத்தில்தான் வந்திருப்பான் போல!
******************************
சிறில் அலெக்ஸின் அறிவியல் புனைகதை போட்டிக்காக எழுதப்பட்டது. கருவாக்கத்திலிருந்து உருவாக்கம் வரை ஆலோசனை கொடுத்த நண்பர் குழாத்துக்கு நன்றி.
Jul 14, 2008
அக்கினிக்குஞ்சு
Subscribe to:
Post Comments (Atom)
36 பின்னூட்டங்கள்:
இப்போதைக்கு கடைசி வரிகள் நல்லா இருக்குன்னு சொல்லிக்கறேன். மத்தவங்க எல்லாம் வந்து போன பின் மீதி கருத்து சொல்லறேன்!! :))
தலைப்பு ஆபாசமாக இருப்பதால் இந்த பதிவினை தமிழ்மணம் தூக்க பரிந்துரை செய்கிறேன்.
அற்புதமான கதை சுரேஷ். இது நூறாண்டுகள் கழித்து அல்ல, இன்றைக்கும் கூட பொருந்தும்.
நன்றாக இருக்கிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். (சில வரிகளில் சுஜாதா வாசனை )
பெனாத்தல் சார்,
நன்றாக இருக்கிறது.
//துப்பாக்கி வெடித்தபோது //
பொதுவாக அறிவியல் புனைக் கதைகளில் லேசர் துப்பாக்கி, கதிரியியக்க துப்பாக்கி அப்படின்னுதானே சொல்லனும். நீங்க ஓல்டு பேஷனா சொல்றீங்களே...
//அவ்வளவு குண்டான பாதுகாப்பு அதிகாரி வேகமாக ஓடிவந்தது, //
அங்க செக்வே (segway) எல்லாம் இல்லையா? இல்ல குண்டானவங்க உபயோகிக்கற மாதிரி செக்வே இன்னமுமா கண்டுபிடிக்காம இருக்காங்க? இல்ல குண்டானவங்களை கிண்டல் பண்ணினா நகைச்சுவையா இருக்கும்னு எழுதினீங்களா? எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் இப்ப.
//முன் பழைய கலாசாரத்தின் எச்சம் போல இருந்தான்.//
எந்த கலாச்சாரத்தை சொல்கிறீர்கள்? இப்பொழுது சில பேர் ரொம்ப கஷ்டபட்டு போராட்டம் எல்லாம் பண்ணி காப்பாத்திட்டு வர்றாங்களே அந்த கலாச்சாரத்தையா?
இரண்டு இடத்தில் இதையே குறிப்பிட்டிருக்கீங்க. அப்ப நம்ம கலாச்சாரம் இரட்டை நோக்கோடதுன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா?
//அனிச்சையாக "ஆத்மா" என்று கையைப் பற்றிக் குலுக்கினேன். //
அனிச்சையாக 'ஆத்மா' என்று பெயர் வைத்து விட்டீர்கள் போல :-) 'நித்யா'வைக் காணோமே?
//பனிப்பிரதேசங்களாக இருந்த இடங்களுக்கு ஓடிவந்தவர்கள்தான் இன்றைய ஊடாக்காரர்கள்.//
செவ்வாய் கிரகவாசிகளளப் பற்றித்ததன் பொதுவாக அறிவியல் புனைவுகள் இருக்கும். நீங்கள் வித்தியாசமாக நதிக்கரைகளில் நாகரீகம் அமைத்த மனிதன், பனிமலைக்குள் புகுவதை தொட்டு எழுதியிருக்கிறீர்கள்.
ஒரே ஒரு சந்தேகம் - வெப்பம் அதிகமாக ஆக பூமி முழுவதும் வெள்ளக்காடாகதானே ஆக வேண்டும் - பனிமலைகள் உருகி, உருகி... :-)
//இருந்தோம் உண்டோம் செத்தோம் என்பதும் வாழ்க்கையா? //
நீங்க அப்பப்ப குவிஜு அது இதுன்னு போடறதுக்கு இதான் தூண்டுகோலா? :-))
//சூ மோவிடம் ஐந்து விரல்களைக் காட்டினேன். //
இதில ஏதோ அரசியல் இருக்குன்னு அடிச்சி சொல்றாங்கப் பாருங்க :-))
//கருவாக்கத்திலிருந்து உருவாக்கம் வரை ஆலோசனை கொடுத்த நண்பர் குழாத்துக்கு நன்றி.//
ஆஹா... ஒரு குருப்பாத்தான் கெளம்பியிருக்கீங்கப் போல. :-))
கதை நன்றாயிருக்கிறது.
ஊடா, மொட்டை, வெப்பம், முடியை வைத்து முடிவு செய்வது, வளத்தை கொள்ளையடிப்பது என்றெல்லாம் இன்றைய உலக வழக்கை நன்றாகவே சாயமடித்திருக்கிறீர்கள்!!;-)
கொஞ்சம் நீ....ளமா இருந்தாலும், நல்லா இருக்கு!
//தலைப்பு ஆபாசமாக இருப்பதால் இந்த பதிவினை தமிழ்மணம் தூக்க பரிந்துரை செய்கிறேன்.//
சூதானம்...சூதானம் :)
கதை நல்லாயிருக்கு.
இன்னும் பல நூற்றாண்டுகளானாலும் மேல்தட்டு கீழ்தட்டு பிரச்சனை எந்த வடிவிலாவது இருக்கும் என்பது வருத்தமளிக்கும் கற்பனை. அப்படி நடக்காதென்று நம்புவோமாக.
வாங்க கொத்தனார்.. வெயிட்டிங்!
குசும்பன்.. நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன்?
நன்றி வெண்பூ. இன்றைக்கும் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கட்டும் என்றுதான் இந்தக் கருவையே தேர்ந்தெட்டுத்தேன்.
கதை நல்லா இருக்கு.
//தங்கள் வளங்களை பூமாக்காரர்களோடு பங்குபோட விரும்பவில்லை ஊடா. பூமாவின் மண் வேண்டும் விவசாயத்துக்கு. அந்த மக்கள் வேண்டும் மண்ணை இடம் பெயர்க்க. விவசாய ஆராய்ச்சிதானே செய்கிறீர்கள், மணல் எடுப்பது எப்படிப்பட்ட வேலை தெரியுமா உங்களுக்கு? தினம் பல உயிர்களையும் கப்பமாக எடுத்துக்கொள்ளும் சுரங்கங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பெயர்க்கப்படும் மணலுக்கு என்ன விலை கொடுக்கப்படுகிறது தெரியுமா? உணவும் ஆடையும்! இந்த மணல் இல்லையென்றால் உங்களுக்கு ஏது உணவு? எங்கள் பிரதேச வளங்களை உறிஞ்சியதும் ஊடாதான். இப்போது உதவி செய்யும் சாக்கில் அடிமைப்படுத்துவதும் ஊடாதான்//
இது இப்பவே நடக்கற மாதிரி தான் இருக்கு :-))
கதை சூப்பர் :-)
//இந்த மருந்தைக் குடியுங்கள்.. வெயிலுக்கு நல்லது//
இதுதானா காரணம்.. ம்.. நல்லாருக்கு கதை.
தல
கதை சூப்பர் ;))
கடைசி வரியை ரெண்டு தடவை படிச்சேன்...கலக்கிட்டிங்க ;)
கதை நல்லா வித்தியாசமா இருந்தது. வெப்பமாதல், மேல்தட்டு/கீழ்தட்டு, க்விக் அம்னீஷியான்னு கலக்கல்.
தலைப்பு: அக்கினிக்குஞ்சு தணிஞ்சு போச்சா? காடு தான் பத்தி எரியுதா?
//சூ மா வெளிப்படையாக வேண்டாம் என்றாலும் அவர் கண்களில் அழைப்பு இருந்தது. உணர்ச்சியற்று இருந்த அவர் குரலில் இரைஞ்சல் தெரிந்தது.// இங்க கொஞ்சம் நாச்சுரலா இல்லை.
வாழ்க்கைச்சக்கரம் ங்கறீங்க...! சரி.
//கடைசி வரியை ரெண்டு தடவை படிச்சேன்...கலக்கிட்டிங்க ;)//
"வகை புனைவு, போட்டி"
இந்த வரியை எதுக்கு தல ரெண்டு தடவை படிச்சீங்க??? ;)
நன்றி முரளி கண்ணன். நீளத்தைக் குறைக்க ரொம்பவே முயற்சி செய்தேன் - இவ்வளவுதான் முடிந்தது. ஒரிஜினல் இன்னும் 3 பக்கம் அதிகம் :-)
ஸ்ரீதர்,
//பொதுவாக அறிவியல் புனைக் கதைகளில் லேசர் துப்பாக்கி, கதிரியியக்க துப்பாக்கி // நான் என்ன வெடிமருந்து வச்சு கெட்டிக்கற துப்பாக்கின்னா சொன்னேன்? கதிரியக்கத் துப்பாக்கின்னே வச்சுக்குவோமே :-)
//அங்க செக்வே (segway) எல்லாம் இல்லையா? // இருந்தது. ஆனா கீயை எடுத்துக்கிட்டுகாபி சாப்பிடப்போயிருந்தான் இன்னொரு செக்யூரிட்டி. அவனைக்கூப்பிட்ட்டு செக்வேலே போறதைவிட நடந்தே போகலாம்னு முடிவெடுத்துட்டாரு.
//போராட்டம் எல்லாம் பண்ணி காப்பாத்திட்டு வர்றாங்களே அந்த கலாச்சாரத்தையா? // இந்தக் கேள்விக்கு இப்ப இல்ல, எப்பவுமே நான் ஒரே பதிலைத்தான் சொல்வேன் - நோ கமெண்ட்ஸ் :-)
//'நித்யா'வைக் காணோமே?//
ஸ்கோப் இல்லை. இருந்திருந்தா நித்யா மட்டுமா, மாலதி, முதுகுடுமிப் பெருவழுதி, டாக்டர் ராகவானந்தம் -- எல்லாரும் வந்திருப்பாங்க! மெய்யாலுமே தலைக்கு ட்ரிப்யூட்டா தான் ஆத்மா பேர், கண்டுகினதுக்கு ஸ்பெஷல் நன்னி.
//வெள்ளக்காடாகதானே ஆக வேண்டும் - பனிமலைகள் உருகி, உருகி... :-)// உயரமான பகுதிகளில்? நிஜமாகவே, க்ளோபல் வார்மிங்கினால் கிரீன்லாந்தில் விவசாயம் செய்யலாம் என நே. ஜியா வில் படித்ததின் தொடர்ச்சியே இக்கதை.
விரிவான விமர்சனத்துக்கு நன்றி.
பெனாத்த்ஸ்,
முடிவு கொஞ்சம் எனக்கு இடித்தாலும்,அன்னளவில் இக்கதை நம் எஹ்டிர்காலம் ,மற்றும் சில நிகழ்காலத்தையும் நினைவூட்ட்டுகிறது..குறிப்பாக நான் கேள்விப்பட்டவரையில் மத்திய கிழக்கு நாடுகள் நம் தொழிலாளிகளை நடத்தும் விதமும் அவர்கள் சுனாமி சமயத்தில் (பல்வேறு ஏழை நாட்டு மக்களின் உழைப்பை உபயோகித்தாலும்)மேலை நாடுகள் அளவு உதவாததும்....சில....
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''
இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல
///மத்தபடி எவ்வளவு வேணும்னாலும் திட்டிக்கங்க!///
//??ஆபாசம் வேணாம்??//
அக்கினி (க்) '''குஞ்சு'''.......
அருமை, அபாரம்!
மிக நல்ல கற்பனை.
90 டிகிரியில் மனித வாழ்வும் இனத்துவேஷ தீவிரவாத வளர்ச்சியும் சாத்திய சோதனைதான். நிகழ்வற்க!
நல்லாருக்கு தல!
ஆஹா எல்லாருமே கலக்கலா எழுதறீங்களே, நாங்க எத்தனப் பேருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்னு சொல்றது:):):) எனக்கே இப்படின்னா, போட்டி முடிவுகள எப்படி அறிவிக்கப் போறாங்க
உயர்திரு சுரேஸ் அவர்களுக்கு! தங்களின் வெண்பா பாடும் திறமையை இயன்றவரையில் இனிய தமிழ் வலைதளத்தின் மூலம் அறிந்தேன். நான் என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஈற்றடி வழங்கி பலரையும் ஈற்றடிக்கு வேண்பா எழுதச்செய்ய முயல்கிறேன். தாங்களும் என் வலைக்கு வந்து ஈற்றடிக்கு வாராவாரம் வேண்பா எழுதுமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
நல்ல நடையில் இருக்கு கதை...
கொஞ்சம் சுருக்கலாம்னுதான் தோணுது....
நன்றி யோசிப்பவர். சாயமடிக்காம முடியுமா :-)
தஞ்சாவூரான், நீளம்னா சொல்றீங்க, சரிதான். நல்லா இருக்குன்னதுக்கும், குசும்பனுக்கு சூதானம் அட்வைஸுக்கும் நன்றி :-))
கோபி, //அப்படி நடக்காதென்று நம்புவோமாக.// நம்புவோமாக. நன்றி.
நன்றி ச சங்கர்.
நன்றி வெட்டிப்பயல்.
நன்றி புபட்டியன். (மருந்துன்னு தலைப்பு வைக்கச் சொல்லிகூட ஒரு நண்பர் பரிந்துரைத்தார் :-)
நன்றி கோபிநாத்.
நன்றி கெக்கேபிக்குணி.
////சூ மா வெளிப்படையாக வேண்டாம் என்றாலும் அவர் கண்களில் அழைப்பு இருந்தது. உணர்ச்சியற்று இருந்த அவர் குரலில் இரைஞ்சல் தெரிந்தது.// இங்க கொஞ்சம் நாச்சுரலா இல்லை.//
கொஞ்சம் விரிவாச் சொன்னா நல்லா இருக்கும். அவர் குரல் உணர்ச்சியற்று இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்கிறார், ஆனால் அவர் உள்மனம் வேண்டாம் என்று சொல்லவில்லை - என்பதையே சொல்லவிரும்பினேன்.
நன்றி சென்ஷி.
வெட்டிப்பயல், ஏன் பாவம் கோபிநாத்தைக் கலாய்க்கறீங்க :-)
சீதா,
//முடிவு கொஞ்சம் எனக்கு இடித்தாலும்,// எனக்கென்னவோ இதுதான் இயல்பான முடிவாகப் படுகிறது. ஆம் - பல நாடுகளின் இன்றைய நிலைப்பாடுகளும், மற்றவர்களை மதிக்கும் (!) விதமும்தான் இக்கதைக்குத் தூண்டல்.
புதுகைச் சாரல் (அ) தமிழகத்தின் தலைவன் :-))
நன்றி மங்களூர் சிவா.
நன்றி ஓகை. நல்ல தமிழ் பின்னூட்டத்துக்கும் சேர்த்து :-)
நன்ன்றி கப்பி பய!
நன்றி ராப். இதுல என்ன குழப்பம் - நல்லா இருக்கிற கதை ஜெயிக்கப்போகுது. எழுதினவுடனே விளைவுகளை மறந்துடுவேன் நான் :-)
நன்றி அறிவன்.
அகரம் அமுதா, மின்மடல் அனுப்பி இருக்கிறேன்.
எழுத்தாளர் சுஜாதாவின் இடத்தை நிறம்பும் ஆற்றல் தங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்.
:)))) tucker..
நன்றி அகரம் அமுதா, என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே :-)
நன்றி ஜி.
ஐயய்யோ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லீங்க. பட்டதைச் சொன்னேன். அவ்வளவே
A video about S/w Engineers Life
Enjoy
TamilNenjam
Really gr8 Story Mr. Suresh Sir,
your style of writing reminds of the great writer Sujatha
சுரேஷ். கதை நல்லா இருக்கு. அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு அடிக்கடி நடுநடுவுல வந்த மாதிரி ஒரு தோற்றம். கடைசி வரிகள் நல்லா இருக்கு.
Good One
Sairam G
வருடங்கள் கழித்து, இன்று இதை மறுபடி படிக்க நேர்ந்தது.
க்ளாசிக் என்று கமென்டாமல் செல்ல முடியவில்லை! ;)
Post a Comment