Nov 25, 2007

5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? Wifeology Exclusive Flash

விளையாட்டா பாடம் கத்துக்கறது எப்பவுமே சுலபம்ன்றதால இந்தப் பாடத்துக்காகவே ஒரு ப்ளாஷ் கேம் தயாரிச்சிருக்கேன். Practice makes perfect னு சொல்வாங்க இல்லையா, அதனால ஒரு முறை தோத்தாலும் பலமுறை முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!

சைட் அடிக்கறது சரியா தப்பான்ற விவாதத்துக்குள்ள நான் போக விரும்பலை. நான் தப்புன்னு சொன்னா நிறுத்திரப்போறீங்களா என்ன? இது ஒரு தவிர்க்க முடியாத விஷயம் அப்படின்றத யாரும் மறுக்க மாட்டீங்க! டாக்டர்கள் என்ன சொல்றாங்கன்றத இங்க போய் பாத்துக்கங்க! தங்கமணிங்க ஒத்துக்கவா போறாங்க? ஹூம்!

சரி தங்கமணியோட வெளிய போறீங்க, சைட் அடிச்சு மாட்டிக்கறீங்க. இந்த சிச்சுவேஷன்லே இருந்து வெற்றிகரமாக (அடிவாங்காம -ன்றதத்தான் அப்படிச் சொல்றேன்) வெளியே வருவது எப்படின்றதத் தான் இந்த பாடத்துல பாக்கப் போறோம்.

வழக்கமான டிஸ்கி: இது சிலருக்கு வொர்க் அவுட் ஆவலாம், ஆகாமலும் போகலாம், அவரவருக்கு வாய்த்தது அவரவருக்கு!

இந்த சிச்சுவேஷனையும் மூணு விதமா டீல் பண்ணலாம்.

1. "என்ன லுக்கு?"

"என்ன, அதெல்லாம் ஒண்ணும் இல்லையே"

இத்தோடு மேட்டர் முடிந்துவிட்டது போலத் தோன்றும்.. ஆனால் டேக் இட் ஈஸி பாலிஸி தங்கமணிகளுக்குத் தெரியாத பாலிஸி. அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாலிஸி கிவ் அண்ட் டேக் பாலிஸி (போட்டு வாங்கறதுதான்)

எதிர்பாராத நேரத்தில் உங்களை இப்படி ஒரு கேள்வி தாக்கும் -

"அந்தப் பொண்ணு போட்டிருந்த மாதிரி ஒரு யெல்லோ ட்ரெஸ் எனக்கு வாங்கித் தரீங்களா?"

எதோ ஞாபகத்தில் "உங்கிட்டதான் அதே ட்ரெஸ் ஏற்கனவே இருக்கே" என்றோ, "அவ போட்டிருந்தது யெல்லோ இல்லையே ப்ளூ வாச்சே" என்று சொல்லியும் விடுவீர்கள்! பொய் சொல்வதற்கு நிறைய ஞாபகசக்தி வேண்டும். இல்லையென்றால் மாட்டுவது நிச்சயம். . அடி வாங்குவது சர்வ நிச்சயம்..

2. "என்ன லுக்கு?"

"ஆமா! லுக்குதான் விட்டேன்.. என்னான்ற இப்ப? நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சுக்க ஒரு லுக்கு விடக்கூட சுதந்திரம் கிடையாதா?"

இப்படிச் சொல்லும் ஆளின் கதி என்ன என்பதை அருகாமையில் உள்ள மருத்துவமனையின் ட்யூட்டி டாக்டரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். "ICU லே சேத்தாங்களே அந்த ஆளு" என்று சொன்னால் ரிசப்ஷனில் வழி காட்டுவார்கள்.

3. இவர்தான் நம்ம ஆளு. வைபாலஜியில டாக்டரேட் வாங்கினவரு.

"என்ன லுக்கு?"

"என்ன?"

"வச்ச கண் வாங்காம சைட் அடிச்சுகிட்டிருக்கீங்களே.. "

"சைட்டா? பாத்தேன் உண்மைதான்.. எதுக்காகப் பாத்தேன்ன்னு தெரியாம பேசாதே"

"எதுக்கு?"

1. "அவ போட்டிருந்தாளே ஒரு பின்க் ட்ரெஸ்.. அந்த அட்டு பிகருக்கே அது அவ்ளோ நல்லா இருக்கே, உனக்குப் போட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்.. நய்ஹாலே கிடைக்கும் இல்ல? உடனே போய் வாங்கிகிட்டு வந்திடலாமா?"

இதை செலவுன்னு நினைக்காதீங்க.. அடிவாங்காம இருக்கறதுக்குக் கொடுக்கற Protection Money!

2. "இந்த மாதிரி ரெண்டு பேரைப் பாத்தாதானே நான் எவ்வளவு பாக்கியசாலின்னு எனக்கே தெரியுது. .இதையெல்லாம் தடுக்காதே!"

3. "அவளைப் பாத்தா உன்னோட கஸின் மீனா மாதிரியே இல்லை?கல்யாணத்துல இண்ட்ரொட்யூஸ் செஞ்சியே? Remarkable Resemblance! உனக்கு அப்படி தோணலே?"

நேரடியாக இல்லைன்னு சொல்றதைவிட, ஆமாம்னு அடிவாங்கறதைவிட, இந்த மாதிரி சமாளிபிகேஷன் வொர்க் அவுட் ஆக வாய்ப்பு அதிகம்.

சரி.. கீழே இருக்கற கேமை விளையாடிப் பாருங்க! தங்கமணி பாக்காத நேரத்துல ரங்கமணி மேலே க்ளிக்கி சைட் அடிக்க வைங்க! பத்து பாயிண்ட் எடுத்தா வர ஸ்க்ரீனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க, ஒத்துக்கறேன் நீங்க வீரர்னு!


Nov 24, 2007

கற்றது தமிழ் - பார்த்தபிறகு எழுந்த எண்ணங்கள்

முன் குறிப்பு: தியேட்டர்லே வந்தபோது தவறவிட்டு, ஒரிஜினல் பிரிண்டுக்காக வெயிட்டி வெயிட்டி கிடைக்காமல் கடைசியா ஒரு திராபை பிரிண்டுல பார்க்கவேண்டி வந்தது. ஹீரோயின் அழுதுகிட்டே வசனம் பேசின காட்சிகள், ஹீரோ பேக்கிரவுண்ட் ம்யூசிக்கோட பேசற காட்சிகள் எல்லாத்துலயும் க்ரிப்டோகிராபி உபயோகப் படுத்தி அர்த்தம் புரிஞ்சிக்க வேண்டி வந்தது.
 
நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருக்கு: நல்ல ஆழமான வசனங்கள், காட்சிப்படுத்தல்கள், கவிதையான ஏழு வயதுச் சிறுவர்களின் நட்பு, தமிழய்யா வார்டன் (அழகம்பெருமாள்) பாத்திரப்படைப்பு, நாயகன் நாயகி நடிப்பு, நாயகன் வாயிலாகவே கதைசொல்வதால் அவன் கண்ணாகவே ஓடும் காமரா, வேல் மாதிரி mediocre படங்களுக்கு mediocre ஆகவும், இது போன்ற படங்களுக்கு வேறு அளவுகோலும் வைத்து இசையமைத்திருக்கும் யுவனின் அற்புதமான இசை, பாடல்கள், பின்னணி இசைக்கோர்ப்பு, தற்கொலைக்குப் பின் நண்பர்கள்(?) எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற முன்கூட்டிய கற்பனை, அங்கங்கே தெறிக்கும் தமிழ் ஆங்கில கவிதை எடுத்தாளல்கள் .. சொல்லிக்கொண்டே போகலாம்.
 
ஆனால், முழுமையாக நல்ல படம் என்று முத்திரைப்படுத்தவிடாமல் செய்யும் விஷயங்களையும் பட்டியலிடலாம்.
 
தமிழ் கற்றதால்தானா பிரபாகருக்கு இந்த நிலைமை? சந்தையில் அதிகவிலை பெறாத BA History போன்ற ஒரு பாடத்தை எடுத்திருந்தாலும் இந்த நிலைமை வந்திருக்கலாமே! பிரபாகர் ஒரு கிராமத்து ஆசாமி என்பதால் (கல்சர் சரியில்லை என்னும் நாமக்காரன்) ஒதுக்கப்படுகிறானா, பணம் இல்லை என்பதால் (200 ரூபாய் பைன் கட்ட கையில் இல்லை) ஒதுக்கப்படுகிறானா, உறவுகள் இறந்ததால் தனிமை வசப்படுகிறானா, 27 வயதிலும் பாலியல் தேவைகள் பூர்த்தி ஆகாததால் மனம் பிறழ்கிறானா -- என்று பல கோணங்களில் ஆராய வகை செய்யும் பாத்திரப் படைப்பு. தமிழ் என்பது வசனத்துக்காக மட்டும் (2000 வருஷத் தமிழுக்கு 2000, 25 வருஷ கம்ப்யூட்ட்டருக்கு 2 லட்சமா?) உபயோகப்படுகிறதே அன்றி, கதைக்கு எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை. தமிழய்யாவைப் பிடித்திருந்ததால் தமிழ் படித்ததாகச் சொல்கிறானே ஒழிய, தமிழ் பிடித்ததால் படித்ததாகச் சொல்லவில்லை. போலீஸ் பிடித்துக் கொண்டு செல்வதற்கும் சிகரெட்தான் காரணமே ஒழிய தமிழ் காரணமில்லை.. தமிழை உணர்ச்சிப் பொருளாக்குவது தவிர, தமிழுக்கும் இந்தப்படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. (பிரபாகரா.. விவகாரமான பேரு என்று வரும் வசனமும் இன்னும் ஒரு சாராரை மகிழ்ச்சிப்படுத்தச் சேர்த்ததே என்றும் நினைக்கிறேன்.)
 
Income Inequality,  Economic divide  என்பவை, தற்போது பேசியே ஆகவேண்டிய பிரச்சினைகள் என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. நாராயணன் 7 ட்ரெயிலர் ஓட்டிவிட்டார், எப்போது மெயின் ரீலுக்கு வரப்போகிறார் என்பது தெரியவில்லை, ஆனால் அவர் ட்ரெயிலர்களிலேயே யோசிக்கவேண்டிய பலவிஷயங்களை முன்வைத்திருக்கிறார். பெரிய பிரச்சினை ஆகும் முன் தவிர்க்க, இது ஒரு பிரச்சினை என்று அங்கீகரிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் தீர்வை நோக்கிச்செல்ல முடியும், அதைத்தான் நான் இங்கும் சொல்லி இருக்கிறேன்.
 
இந்தப்படத்தைப் பார்க்காமலே நான் சொன்ன கருத்து: "கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன். 
 
இந்தக் கருத்திலிருந்து, படம் பார்த்தபின்னும் மாற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு பிட்ஸாவுக்காகக் கூட நாளை கொலை நடக்கலாம் என்று கூறும் இயக்குநர், அந்தக் கொலைகளையும், மனப்பிறழ்வையும் நியாயப்படுத்தும் வசனங்களையும் வைத்து ஒருபக்கம் ஓடிவிட்டார். கருணாஸ் சொல்லும் "பக்கத்து வீட்டுக்காரன் அதிகமா சம்பாதிக்கிறான், அந்த வயித்தெரிச்சல்லே அவன் ஸ்கூட்டரைப் பஞ்சர் பண்ணுவேன், அதைவிட கொஞ்சம் அதிகமா நீங்க செஞ்சிருக்கீங்க" என்பதும், தொலைக்காட்சியில் பேட்டிக்குப் பின் வரும் வசனங்களும் (வாடகை எல்லாம் சாப்ட்வேர்காரங்களாலத்த்தான் அதிகமாச்சு, ஒரு இடத்துல மட்டும் வளந்தா அது வளர்ச்சியில்ல, வீக்கம்) கோபப்படுவது தார்மீக உரிமை, ஸ்கூட்டரைப் பஞ்சர் செய்வதும் கொலை செய்வதும் தவிர்க்க இயலாத வெளிப்பாடுகள் போன்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன.
 
மிதக்கும் வெளி சொல்வதுபோல மாற்றுக்கருத்துக்கும் இடம் ஒதுக்கினாலும், இயக்குநர் செய்யவிரும்பும் கட்டமைப்பு தெளிவாகத் தெரிகிறது. (ஷங்கர் படங்களில் மாற்றுக்கருத்து வருவதில்லையா? முதல்வன் படத்தில் எல்லாரும் அடுத்த முதல்வராக புகழேந்தியைச் சொல்ல, ஒரு குரல் எம்ஜியார் என்று சொல்லியதே? சிவாஜியை எல்லாரும் புகழ, ஹனிபா "அவன் ஜெயிலிலேயே இருக்கணும்" என்று சொல்லவில்லையா? -- ஆனால் ஷங்கர் சொல்லவிரும்புவது பெரும்பான்மை மூலம் தெரிகிறது, இங்கேயும் அப்படியே!)
 
இங்கே பயமுறுத்துவது, நாயகன் கொலை செய்யத் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் - செல்லாத ரூபாய் நோட்டை ஒத்துக்கொள்ளாத ரெயில்வே ஊழியன், பீச்சில் காதலிக்கும் ஜோடி, உதவ முயலும் சைக்கியாஸ்டிரிஸ்ட் என தங்கள் அளவில் தவறுசெய்யாத சாதாரணர்கள். வில்லன்களாகச் சித்தரிக்கப் படுபவர்கள் ராத்திரி முழுக்க வேலை செய்து வீடு திரும்பும் BPO ஊழியன், 2 லட்சம் சம்பளம் வாங்கியும், கல்சர் சரியில்லாத (என அவன் நினைக்கும்) நண்பனை அலுவலகத்துக்கு அழைத்து உபசரிக்கும் சாப்ட்வேர் ஊழியன், வசனம் எழுதப்பட்ட டி ஷர்ட் அணிந்த பெண் - அவர்கள் அளவில் எந்தத் தவறும் செய்யாதவர்கள்தான்.
 
எதற்கென்றே தெரியாமல் காழ்ப்புணர்ச்சி காட்டும் போலீஸ்காரனும், லஞ்சம் வாங்க முயலும் ரயில்வே போலீஸும் வில்லன்களாகச் சித்தரிக்கப் படுவதையாவது ஓரளவு ஏற்கலாம். இப்படிக் கொலைகள் செய்யும் ஒருவனை Income Inequality என்ற ஒரே காரணத்திற்காக நியாயப் படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
 
ஒரு சைக்கோ, கொலை செய்தான் செத்தான் என்ற அளவில் கதை நின்றிருந்தால் இதைப் பற்றிப் பேசவேண்டியிருக்காது. ஆனால், அவன் சைக்கோ ஆனதுக்குக் காரணம் இவை என நியாயப்படுத்த முயலும்போது - அதுவும் தமிழ் என்ற ever-boiling உணர்ச்சியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அதிக சம்பளம் வாங்கும், பணம் உள்ள, பெண்துணை கொண்ட அனைவரும் வில்லன்கள் என்று சொல்ல வருவது அநீதி.
 
யோசிக்க வைத்த படம் என்பது சரிதான், ஆனால் படத்தின் அடிநாதம் சரியில்லை. Dangerous Movie.

Nov 20, 2007

பாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் (Wifeology)

இன்னிக்கு வர பாடம், ரொம்ப முக்கியமான பாடம்.

கல்யாணம் ஆனவங்க யோசிச்சுப்பாருங்க, உங்கள் தங்கமணி எப்ப உங்களுக்கு வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்கன்னு?

ஞாபகம் வந்துருச்சா?

ஹனிமூன் போனீங்களே, அங்கே என்ன நடந்தது?

சே.. அதைச் சொல்ல வரலைப்பா! ஏ சர்டிபிகேட் மேட்டர் எல்லாம் கிடையாதுன்னுதான் முதல்லியே சொல்லிட்டேனே!

இப்ப ஞாபகம் வருதா?

"ஸாரிங்க, என் ஹேண்ட்பேக்கை ஹோட்டல்ரூமிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. கொஞ்சம் ப்ளீஸ் போயி எடுத்துகிட்டு வந்துடறீங்களா?"

ஆமாம். இப்படி சாதாரணமா, ஸாரி, ப்ளீஸ் எல்லாத்தோடயும் ஆரம்பிக்கற வேலை வாங்கற டெக்னிக்தான் பிற்காலத்துல "வெட்டியாத்தானே பொட்டி தட்டிகிட்டு இருக்கே, அந்தப் புடவைக்கெல்லாம் ரிவைவ் போட்டாதான் என்னவாம்?" என்று பரிணாம வளர்ச்சி அடையுது.

முளையிலேயே கிள்ளவேண்டிய விஷயத்தை வளரவிட்டுட்டு அப்பால குத்துதே குடையுதேன்னு சொல்றதில எந்த அர்த்தமும் இல்லை.

ரொம்ப கேர்புல்லா ஹேண்டில் பண்ணவேண்டிய ஏரியா இது. ரொம்ப அசட்டுத்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது, ரொம்ப புத்திசாலித்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது.

"ஆஹா, நீ சொல்லவே வேணாம்.. இதோ போய் செஞ்சுடறேன்"னு முதல்ல ஆரம்பிச்சீங்கன்னா, பிற்காலத்துல வலைப்பூ பாக்க முடியாது, சேலைப்பூ தான் பாக்க முடியும்.

ஓவர் புத்திசாலித்தனமா ஒருத்தர் நடந்துகிட்டாராம். அவர் தன் அனுபவத்தை நண்பர்கிட்ட பகிர்ந்துகிட்டார் இப்படி:

"என் மனைவி காலைலே ப்ரேக்பாஸ்ட் பண்றதை பார்த்தேன். தேவையில்லாத மூவ்மெண்ட் நிறைய, காய்கறிகள் எல்லாம் நறுக்கி வச்சுகிட்டு வேலைய ஆரம்பிக்கறதில்லை, நிறைய ஐடில் டைம் நடுவுல.. டைமை வேஸ்ட் பண்றா. டைம் மேனேஜ்மண்ட் படி, லெப்ட் ஹாண்ட் மூவ்மெண்ட், ரைட் ஹாண்ட் மூவ்மெண்ட், ப்ரெபரேஷன்ஸ் எல்லாத்தையும் ஒரு நாள் அனலைஸ் பண்ணி சார்ட் போட்டுக் கொடுத்தேன் அவளுக்கு"

"இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுதா?"

"நல்ல இம்ப்ரூவ்மெண்ட். முன்னெல்லாம் ப்ரேக்பாஸ்ட் பண்றதுக்கு அவளுக்கு 30 நிமிஷம் ஆகும். இப்பல்லாம் எனக்கு 10 நிமிஷம்தான் ஆகுது"

இல்லை, "செய்ய முடியவே முடியாது"ன்னு ஸ்ட்ராங்கா சொன்னீங்கன்னா, விளைவும் தவிட்டு ஒத்தடம் ரேஞ்சுக்கு ஸ்ட்ராங்காத்தான் இருக்கும்.

அதனால, இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுக்கும் நடுவுல ஏதோ ஒரு இடத்துல இருக்கு நமக்கான தீர்வு!

உப்புமா செய்வது எப்படின்னு செய்முறைக்குறிப்பு போட்டிருக்கேன், படிச்சுப் பாத்து அதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துகிட்டு, எல்லா வேலைக்கும் இதையே அப்ளை பண்ணலாம்.

உப்புமா செய்வது எப்படி

உப்புமா செய்ய ஆரம்பிக்கும் முன் சொல்ல வேண்டிய வசனங்கள் - "சமையல்லே இருந்து இன்னிக்கு உனக்கு ரெஸ்ட். அய்யா சமையலை சாப்பிட்டதில்லையே நீ? சாப்பிட்டவங்களைக் கேட்டுப்பாரு.. நளபாகம்னு சொல்வாங்களே அது என் கைவண்ணம்தான். இனிமே குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாச்சும் ப்ளீஸ் சமைங்கன்னு கெஞ்சப்போறே பாத்துக்க!"

1. அடுப்பை "ஹை"யில் ஏற்றி வைத்துக்கொள்ளவும். ஆண்கள் குறைந்த நெருப்பில் எப்போதும் சமைப்பதில்லை.

2. ரவையை அதன் பாத்திரத்திலிருந்து வேகமாக ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும். வேகம் மிகவும் அவசியம். அப்போதுதான் ரவை வீடு முழுவதும் தெறிக்கும்.

3. அடுப்பில் வாணலியை ஏற்றி, வாணலியில் ஒரு சொட்டு எண்ணெய் அல்லது நெய் விடவும். (அடுப்பு "ஹை"யில் எரியவேண்டும், மறக்காதீர்கள்)

4. ரவையை வாணலியில் கொட்டவும்.

5. டிவியில் என்ன ஓடுகிறது என்று பார்த்துவிட்டு வரவும்.

6. இப்போது வாணலியின் அடியில் உள்ள ரவை சற்றே கருத்தும் மேல்புறம் ஒரு மாற்றமும் இல்லாமலும் காணப்படும். ஒரே கிளறு. மேல்பாகம் கீழும், கீழ்பாகம் மேலும் செல்லும் வண்ணம் கிளறவும்.

7. ஈமெயில் எதாவது வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரவும்.

8. இப்போது ரவை சமச்சீராக கருத்து இருக்கும். அதை ஒரு தட்டில் கொட்டவும். அடுப்பை அணைக்கவும்.

9. டிவி பார்த்துக்கொண்டே வெங்காயத்தை உரித்து, அதன் தோலியை வரவேற்பரையில் கொஞ்சம், சமையலறையில் கொஞ்சம், மேலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் கொஞ்சம் என சமச்சீராக பரப்பவும். வெங்காயத்தை சமச்சீரற்ற துண்டுகளாக நறுக்கவும்.

10. மறுபடி அடுப்பை ஹையில் பற்றவைத்து, எண்ணெய் ஊற்றவும்.

11. எண்ணெய் கருகும் வாசனை வந்தவுடன் கடுகைப் போடவும். உடனே வெடிக்கவேண்டும். பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கடலைக்காய் - எது கிடைக்கிறதோ எல்லாவற்றையும் போட்டுவிட்டு, கிளறுவதற்கான கரண்டியைத் தேடவும்.

12. இப்போது போட்ட பருப்புகள் எல்லாம் "கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"ன்னு பாட ஆரம்பித்திருக்கும். அதன் தலையில் நறுக்கிய வெங்காயம், முழுத் தக்காளியை நேரடியாக எடுத்து ரெண்டே துண்டாக வெட்டி அதன்மேல் போடவும்.

13. வெங்காயம் தக்காளி கோபம் தணிந்து குழைய ஆரம்பிக்கும்வரை கிளறவும்.

14. இப்போது அதன்மேல் தண்ணீரை ஊற்றவும். அடுப்பின் தணலைச் சற்று குறைத்துக்கொண்டால்,மறுபடி மெயில் பார்க்க / மசாலா மிக்ஸ் பார்க்க நேரம் கிடைக்கும்.

15. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைக் கொட்டிக் கிளறவும். வெந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும் (உப்புமா இப்போது சிவாஜி ஆகியிருக்கும் - பாத்திரத்தோடு ஒன்றி இருக்கும்).

************"உப்பு போடவேண்டும் என்று சொல்லாதது தெரியாமல் செய்த பிழை அல்ல!"*************************

உப்புமா சாப்பிடும்போது சொல்லவேண்டிய வசனம் : "என்ன இருந்தாலும் நீ செய்யறது போல வரலை, இல்லையா? எந்த வேலையா இருந்தாலும் உனக்கு இருக்க இன்வால்வ்மெண்ட், கமிட்மெண்ட் எல்லாம் எனக்கு வர்றதில்லை. சும்மாவா சொன்னாங்க இதனை இதனான் இவள்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவள்கண் விடல்- னு?"

இதுவும் உறுதியான மெத்தட் கிடையாதுதான். இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம்.

இன்னிக்கு வீட்டுப்பாடம் உப்புமாதான்.

Nov 19, 2007

தேவையா தேவ் ஐயா?

தன்னிலை விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டாமென்றுதான் இருந்தேன். ஆனால், எதிரிகளின் புரளிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது ராஜதந்திரம் என்றால், தன் இனத்தவரின் சந்தேகங்களைத் தீர்க்காமல் இருப்பது பிரிவினைக்கே வழிவகுக்கும் என்பதும் அதுவேதானே!
 
அன்பு கச்சேரியார் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி இருக்கிறார். நம் ரகசியங்களை எதிரிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறேனாம், ஆயுதங்களைக் காட்டிக் கொடுக்கிறேனாம்!
 
உண்மை என்ன? நம் இல்லறத்தியல் வகுப்புகளால்,
 
அட போங்கய்ய உங்க அண்டப்புளுகுகளும் அதை கேக்ரவங்களும். என்று சொன்ன ஒரு தங்கமணியை
 
எல்லாத்தயும் விட படு ஜோக் என்னென்னா, பொம்பளங்க ஷ்ஆப்பிங்க் போகும்போது, பின்னாடி ஆம்பிளங்க ஒண்ணும் பண்ணமுடியாம வெட்டியா பையை தூக்கிட்டு நடப்பாங்க பாருங்க  என்று சொல்ல வைத்திருக்கின்றன நம் சோக கீதங்கள்!
 
பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க. இதுல அரத்தல் புரத்தலாய் பாடம் எடுக்கிறாராம். ஸ்டூபிட் என்று அளப்பறை விட்ட அதே பெண்ணீய அனானி,
 
எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்பர் 1 ஆனதும், அன்னிய தேதில எது பெஸ்ட் பிளேனோ அதை வாங்கி தருவதாய் சத்தியம் செஞ்ருக்கார். என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்.

இந்த அளவுக்கு மாற்றம் இருப்பதே இத்தொடருக்கு கிடைத்த வெற்றியா நான் பாக்கறேன். ஏனென்றால் நாம் எடுக்கும் வகுப்புகளால் உலகம் தலைகீழாகத் திரும்பிவிடும் என்று எதிர்பார்த்து இத்தொடர் தொடங்கப்படவில்லை. பாம்புன்னா படம் எடுக்கும், பாலைவனம்னா சுட்டெரிக்கும், டாஸ்மாக்னா தள்ளாடவைக்கும், தங்கமணின்னா டப்பா டான்ஸ் ஆடும் .. இதெல்லாம் உலக நியதி!
 
மேலும், இந்த வகுப்புகளால் மனைவிக்குப் பயப்படாமல் வாழும் நிலை உருவாகும் என்பதா நம் நோக்கம்? நடக்க இயலாதவற்றைச் சொல்ல நாம் என்ன விளம்பரத்துறையில் இருக்கிறோமா அல்லது ஹாரி பாட்டர் கதை எழுதுகிறோமா?
 
அறிவிப்பின்போது தங்கமணிகளையும் ஏன் இந்த வகுப்புக்கு அழைத்தேன் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
 
இங்கே பாருங்கள், அந்த ரகசியம் விளங்கும்!
 
ஆயுதங்களைக் காட்டிக்கொடுக்கிறேனா? அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் அய்யா! தங்கமணிகளுக்கு இந்த ரகசியங்கள் தெரிந்துவிடக் கூடுமே என்று எதையுமே சொல்லாமல் தவிர்த்தால் நம் இளைய ரங்கமணிகளுக்கு ஏது எதிர்காலம்?
 
கச்சேரியாருக்கு இன்னும் ஒரு சந்தேகம்:
 
நம சிங்கத் தலை கைப்புள்ள, சங்கத்தின் தங்க மகன் இளையதளபதி வெட்டிப் பயல ஆகியோர் இல்லறத்தில் இனிதே அடியெடுத்து வைத்த நேரம் பாசமிகு தம்பிகளாம் நீங்களும் மண வாழ்வில் நுழைய வரிசையில் காத்து நிற்க இப்படி ஒரு தொடர்...
 
வேறெந்த நேரத்திலய்யா இப்படி ஒரு தொடர் வெளிவரவேண்டும்? இதைவிடச் சிறந்த, பொருத்தமான நேரம் வாய்க்குமா?
 
கைப்புள்ளைக்கு ஆப்பு வாங்குவது என்ன புதிதா? அவருடைய "ஆப்பு" அனுபவத்துக்கு இந்தத் தொடர் மட்டுமல்ல வேறெந்தத் தொடருமே தேவையில்லையே!
 
வெட்டிப்பயலின் தற்போதைக்கு கடைசிப்பதிவைப் பார்த்து நானே புல்லரித்துப் போயிருக்கிறேன்! லகான் எங்கே என்று தெரிந்த குதிரையாக உலக இயல்புகளையும் நடப்புகளையும் புரிந்துகொண்டிருக்கும் அவருக்கு இத்தொடரால் நஷ்டமா?
 
ஆனால், இல்லற வாழ்வில் குதிக்கக் காத்திருக்கும் பலகோடி இளைஞர்கள், கல்வியறிவு பெற்றிடக்கூடாது, வாழ்க்கை சாகரத்தில் தொபுக்கடீர் எனக்குதித்து அடிபட்டுத்தான் முன்னேற வேண்டும் என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தங்கமணிகளின்  சூழ்ச்சிக்கு நீங்கள் பலியானது மட்டுமின்றி அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை புதிர்காலமாக  ஆக்கும் நோக்கமும்  அல்லவா தெரிகிறது? 
 
கம்ப்யூட்டரைத் திறந்தாலே  ஒரு எக்காளச் சிரிப்பு கேக்குது. "பாத்தியா, பிரிஞ்சுட்டாங்க, சண்டை போட்டுக்கறாங்க! இனிமே நமக்கு வெற்றிதான்"னு தங்கமணிங்க குரல்கள்! ரங்கமணிங்க ரெண்டுபட்டா தங்கமணிங்களுக்கு கொண்டாட்டமாம்!
 
தேவ் எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான், சூழ்ச்சிக்கு பலியாகி மட்டும்தான் இப்படி ஒரு போராட்டத்தைத் தொடங்கி இருப்பார் என்று உளமாறவே நான் நம்புவதால், அவரைக் குறை சொல்ல விரும்பவில்லை.
 
ஒரு ஆம்பளை மனசு இன்னொரு ஆம்பளைக்குத் தான் புரியும் என்பதால், தேவ் இந்த விஷயங்களைத் தெளிவா புரிஞ்சுப்பாருன்னு நம்பறேன்.
 
 எனவே, மீண்டும் நமது ஒற்றுமையை தங்கமணிகளின் உலகுக்குப் பறைசாற்றி, அவர்கள் ஆனந்தத்தில் அணுகுண்டு போடுவோம் வாருங்கள்! 
 
பி கு: இல்லறத்தியல் பாடம் இன்னும் ஓரிரு நாட்களில்.

Nov 17, 2007

எப்பவும் நீ ராஜா!

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு பெரும்பாலானவர்கள் உபயோகித்த உறிச்சொல், "இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு!" என்பதுதான். பத்திரிக்கை விமர்சனங்களில் இதே உறி, "ஹாலிவுட் தரத்துடன் இருக்கிறது" என்று ரிபைன் ஆகும். இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதை நிறுத்திவிட்டார்களா, நான் அப்படிச் சொல்பவர்களை விட்டு விலகிவிட்டேனா தெரியவில்லை, இந்த அடைமொழி காணாமல் போய்விட்டது.

தேடி ஓடிப் போய் பார்த்த "ஹாலிவுட் தர" படங்கள் இப்போது வீட்டு வரவேற்பரையில் இலவசமாக விழும்போது மனதுக்குள் ஒரு வெட்கம் சூழ்ந்து கொள்கிறது. இதைப்போயா அவ்வளவு பாராட்டினோம் என்று.

ஆனால், "உலகத்தரம்" என்று தெரிந்திராத, கொண்டாடப்பட்டிராத ஒரு சிறுவயது ஆதர்சத்துக்கு மட்டும் இன்னும் வெட்கம் வரவில்லை. ராஜா!

லைவ் ஷோக்கள் நிறைய பார்த்ததில்லை. ஒரு முறை, சொத்தில் பாதியை அடகுவைத்து நட்சத்திரக் கலைவிழா துபாயில் நடக்கிறது என்று போனால், கண்ணுக்கெட்டாத தூரத்தில் நடிகர்கள் சொதப்பலாக ஆடிக்கொண்டிருந்தார்கள். மும்தாஜே கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் சிம்ரன் எங்கே தெரிந்திருக்கப்போகிறார்! டிவி திரையில் வீட்டிலேயே பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு பார்த்திருக்கலாமே என்ற நினைப்பு வந்ததில் பிறகு எந்தக் கலை நிகழ்ச்சி என்றாலும் "ஆளை விடு" தான்.

ஆனால், இளையராஜா முதல்முறையாக அமீரகம் வருகிறார், அதுவும் வீட்டிலிருந்து கல்லெறி தூரத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு என்னும்போது மீண்டும் ஆசையும், மீண்டும் கலவரமும் ஒரே நேரத்தில் தோன்ற, ராஜா ரசிகன் வென்றான்.

ஆறரை என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ஐந்தரை மணிக்கு உள்ளே நுழைந்து இடம்பிடித்து அமர்ந்தால் (குசும்பனும் லொடுக்குவும் இன்னுமே பாஸ்ட். நாலரைக்கே உள்ளே இருந்திருக்கிறார்கள்!) பொறுமையைச் சோதித்து 7 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, ஏழேகாலுக்கு பேச ஆரம்பித்த உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர், தனக்குத் தெரிந்த மழலைத்தமிழில், மிக அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறிக்கொண்டே போக (மேடையில் அவர் சொல்கிறார்: 35000 ரசிகர்கள் கூடியிருக்கும் இந்த வேளையில், அருகே ஒரு கோபக்கார ரசிகர்: தெரியுதில்ல, 35000 பேரும் உம்மேல ஏறினா சட்னிதான் மாப்பு! இறங்குடா உடனே!), பொறுமை எல்லைக்கு வந்தது.

ஒரு வழியாக ஏழரைக்கு ஜெயராமும் குஷ்பூவும் மேடைக்கு வந்து, ஒரு அறிமுகப் பாடலோடு இளையராஜாவை வரவேற்க, அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் நேரடியாக "சிவஷக்தியாய.." என்று ஜனனி பாடலை ஆரம்பித்ததும் தொடங்கிய இசைமழை, இடைவெளியில்லாமல் 12:30 வரை புயலாய், தென்றலாய், தேனாய்க் காதில் ரீங்கரிக்க ஆரம்பித்தது!

41 பாடல்கள்! நிச்சயம் இளையராஜா ரசிகர்கள் யாரும் முழுத்திருப்தி அடைந்திருக்க முடியாது. வெளியே வரும்போது சங்கீத மேகம் என்னாச்சு, முத்துமணிமாலை இல்லையே, ரம்பம்பம் என்று ஆடவிடவில்லையே என்ற பல குரல்கள்! ஆனால்ம், இளையராஜாவின் ஆயிரக்கணக்கான சூப்பர்ஹிட் பாடல்களில் 41 ஐத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டமான காரியம், ஒரு வருடத்தில் வெளியான பாடல்கள், ஒரு நடிகருக்கு / இயக்குநருக்கு / தயாரிப்பாளருக்கு அளித்த பாடல்கள் என்று வைத்தாலே சுலபமாக 50ஐத் தாண்டும்.. பொதுவான தேர்ந்தெடுப்பில் சாத்தியமே இல்லை என்பதும் புரிந்திருந்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப்பாடலும் ஹிட் ஆகாத பாடல் இல்லை என்பதாலும் வருத்தமும் இல்லை!

எஸ் பி பி! எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை, 60ஐத் தாண்டியும் 20 போல குஷியும் குதூகலமுமாக, அந்திமழை மேகமாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், பாடலின் ஆதார சுருதி மாறாமல், குறையாமல் அதே நேரத்தில் மெருகும் ஏற்றி, கணீரெனப் பாடுகிறார்! கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது! நினைத்தாலே சிலிர்க்குது! என்ன ரேஞ்ச்.. வார்த்தை பிசகாமல் உணர்ச்சி மாறாமல் அவ்வளவு பெரிய பாடலில் ஒரு தடங்கலும் இல்லாமல் லைவ்-ஆக! சான்ஸே இல்லை!

சித்ரா, சாதனா சர்கம், ஷ்ரேயா கோஸல் - நேரடியாக வந்து ஒரு பிசிறில்லாமல் பாடிவிட்டு அடக்கமாகச் சென்றார்கள்! இவர்களில் டாப், என் பார்வையில் "காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஷ்ரேயா கோஸல். மூவருக்குமே ஒரு ஒற்றுமை, தமிழ் தாய்மொழி இல்லை, லிட்டில் லிட்டில் தமில்தான் தெரியும், ஆனாலும் லைவ் நிகழ்ச்சியில் உச்சரிப்புப் பிழையில்லாமல் பாடுவது என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

மீண்டும் இளையராஜா! எவ்வளவு கண்டிப்பான இசைக்காரர் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில், பாடல் முடிந்தவுடன் மட்டும் கைதட்டுங்கள், விசில் ஆட்டம் போன்றவை வேண்டாம், அளவாக அனுபவியுங்கள் என்று ரசிகர்களுக்கு அளித்த கட்டளைகளை காலப் போக்கில் தளர்த்திக் கொண்டாலும், ஒரு சிறு பிழையைக் கூட பொறுக்காமல் இசையை நிறுத்தி மறுபடி பாடுங்கள் என்று கேட்டுக்கொண்டதில் அவருடைய அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிந்தது. கடைக்கோடி ரசிகனுக்கு ஒரு வார்த்தை சரியாக எடுக்கவில்லை என்று தெரியப்போகிறதா, டெம்போ விலகியது புரியப்போகிறதா? இதுதான் பாட்டு, இவ்வளவுதான் முடியும் என்று விட்டுவிட்டால் கேள்வியா கேட்கப்போகிறான்? ம்ஹூம்.. இசை என்பது அவருக்கு ஒரு தவம். பிசகக்கூடாது, ரெக்கார்டிங் தியேட்டராக இருந்தால் என்ன, லைவ் நிகழ்ச்சியாக இருந்தால் என்ன?

குறைகளும் இருந்தன, இல்லாமல் இல்லை. அந்தக்குறைகளும் ராஜா குடும்பத்தில் இருந்தே வந்ததுதான் ஐரனி.. "இது சங்கீதத் திருநாளோ" என நன்றாகவே ஆரம்பித்த பவதாரிணி, "மயில் போல பொண்ணு ஒண்ணு"வில் தாளத்தை அடிக்கடி விட்டு சாரி கேட்டார். எதிர்பாராத(?) விருந்தினர்களான யுவன் ஷங்கர் ராஜாவும் கார்த்திக் ராஜாவும் "ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா"வை வார்த்தைகள் மாற்றிப்போட்டு பாட முயற்சித்து படு தோல்வி அடைந்தார்கள்! ஒத்திகை தேவைப்பா கண்ணுகளா! கட்டுத்தறியா இருந்தாலும் நேரடியா வந்து கவிபாட முடியாது.

வார்த்தைகள் மாற்றிப்பாடிய "சொர்க்கமே என்றாலும்"தான் சூப்பர்ஹிட்! சாதனா கூடப்பாடிய வரிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று திருப்பிப்பாடியதாகட்டும், "நம்ம ஊர்லே பண்ணமுடியற விஷயங்களை வெளிநாட்டுல பண்ண முடியாதுங்கறது ஒரிஜினல் பாட்டு, ஆனா நம்ம ஊர்லே இழக்கற விஷயங்களை ஞாபகப் படுத்தத்தான் வரிகளை மாற்றினேன்" என்று ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் சிறைக்குள் தள்ளினார் ராஜா!

ஆக, 5 மணிநேரம் ராயல் எண்டர்டெயின்மெண்ட்! மறக்கமுடியாத நிகழ்ச்சி!

Nov 12, 2007

Wifeology பாடம் 3 - தயார் ஆகுங்க!

போன வாரப் பாடத்துல மனைவியருடைய விசேஷ குணாம்சங்களான அரை லாஜிக், உள்குத்துகள், அபார ஞாபகசக்தி ஆகியவற்றைப் பார்த்தோம். ரிவைஸ் பண்ணிட்டு வாங்க.
 
இந்த வாரப் பாடத்துல, நாம (ஆண்கள்) எப்படியெல்லாம் தம்மை மேம்படுத்திக்கணும், ஆரம்ப காலத்து அதிர்ச்சிகள் வராம எப்படி நம்மளை பாதுகாத்துக்கறது ஆகியவற்றைப் பார்க்கலாம்.
 
1. கருப்புப் பணம் காப்போம்!
 
"உங்க சம்பளம் என்ன?"
 
இந்தக்கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க? "பொம்பளை கிட்ட வயசைக் கேட்கக்கூடாது, ஆம்பளை கிட்ட சம்பளத்தைக் கேட்கக்கூடாது"ன்னு பழமொழி எல்லாம் இருந்தாலும்கூட இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடிவதில்லை. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றது பொதுவா மூணாவது நபர் கேட்டாலே அவ்வளவு சுலபம் இல்லை.
 
கேக்கறவங்க வேலைக்குச் சேரப்போற எச் ஆர் டிபார்ட்மெண்டா இருந்தா ஒரு 30% கூட்டிச் சொல்றதும்,  பொறாமைப் படக்கூடிய நண்பனா இருந்தா ஒரு 30% குறைச்சுச் சொல்றதும் சகஜம்தான், அதெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.
 
ஆனா, உங்க மனைவி ஆகப்போறவங்க இந்தக் கேள்வியைக் கேட்டால், குழப்பம்தான். நான் எவ்ளோ பெரிய ஆள் பார்னு அதிகப்படுத்திச் சொல்லுவாங்க சிலர், மனைவிகிட்ட ஏன் மறைக்கணும்னு சரியாச் சொல்வாங்க சிலர்.
 
ரெண்டு பேருமே தப்பு! ஒரு 10-15% குறைச்சுச் சொல்றதுதான் புத்திசாலித்தனம். ஏன்?
 
போன பாடத்தோட பின்னூட்டத்துல ஒரு அனானி சொன்னாங்க:
//ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும், சிக்கனமா இருங்கன்னு// இந்தக்காலத்துப் பொண்ணுங்க சொல்வாங்களாம்.
 
உங்க சம்பளம் ஆயிரங்களிலா லட்சங்களிலா என்பது இல்லை இங்கே பிரச்சினை! மாச பட்ஜெட்டில் ஒரு பகுதி பக்கத்து வீட்டுக்காரி வாங்கின பட்டுப்புடவைக்கு அப்போர்ஷன் ஆகலாம் அல்லது அம்பானி மாதிரி பொண்டாட்டிக்கு ப்ளேன் வாங்கறதுக்கும் (உதைக்கணும் அவனை! செஞ்சுட்டுப் போ, நியூஸ் ஏன் கொடுக்கறே?) அப்போர்ஷன் ஆகலாம்.அதாவது, கல்யாணம் ஆன மறுநாள்லே இருந்தே நம்முடைய பொருளாதார உரிமை பறிக்கப்படப் போகுதுன்றதுக்கு பெண்ணீய வாக்குமூலமே இதுலே இருக்கு!
 
அதுனாலதான் சொல்றேன், ஒரு 10-15% ஐ யார் கண்லேயும் படாம ஒதுக்குப் புறமா வச்சிருங்க. நம்ம லாகிரிக்குத் தேவைப்படும்.
 
2. நாகாக்க!
 
நட்பா காதலான்னு நம்ம சினிமாக்காரங்க பிரிச்சு மேய்ஞ்சிட்டாங்க! அவங்களே நண்பனா மனைவியான்னு பெரிசா கேள்வி கேக்கலல. நண்பன் கிட்டே பேசறதெல்லாம் மனைவிகிட்ட பேச முடியாது.. என்னாதான் சினேகிதனை.. சினேகிதனை.. ரகசிய சினேகிதனைன்னு பாட்டுப் பாடினாலும்! அடிவாங்கறது நிச்சயம். அதுவும் பிறவியிலேயே நாக்கு நீளமான என்னைப்போன்ற பிறவிகளுக்கு.
 
கல்யாணமான புதுசுலே வாக்குவாதம் வந்தது - ஆம்பளைங்க புத்திசாலிங்களா, பொம்பளைங்களான்னு! (தேவைதானா?) நான் சொன்னேன், சந்தேகத்துக்கே இடமில்லாமல் பொம்பளைங்கதான் - ஏன்னா அவங்கதானே இளிச்சவாயனுங்களைக் கல்யாணம் செய்துக்கறாங்க!  விளைவு என்னாச்சுன்னு கேக்காதீங்க, பர்சனல்!
 
அப்பவாவது திருந்தினேனா, ஒரு ட்ரஸ் செலக்ஷன் பண்ணும்போது இன்னொரு வாக்குவாதம் - நான் செலக்ட் பண்ணது நல்லா இருக்கா, அவங்க செலக்ட் பண்ணதா? வாக்குவாதத்தின் முடிவில், வழக்கம்போல தோற்றபிறகாவது சும்மா இருந்திருக்கலாம் - ஆனா நாக்கு இருக்கே! "உன் செலக்ஷன் தான் எப்பவும் சூப்பர்! என் செலக்ஷன் மோசம்தான் என்றேன் அவளை ஏற இறங்கப் பார்த்து! இதோட விளைவு முன்னை மாதிரி பல மடங்கு!
 
நாகாக்க! இந்த மாதிரி ஜோக்கடிக்கிறேன்னு தத்துபித்து பண்றது விபரீத விளைவுக்கு வழிகோலும். அதுவும் அவங்க வீட்டைச் சார்ந்தவங்களைப் பத்தி ஜோக் அடிச்சா முடிவே நிச்சயம்.
 
3. நிறங்களில் இத்தனை நிறங்களா?
 
இந்தக் கலர் எல்லாம் எப்பவாச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா? பீச், பீச் ப்ளூ, காப்பர் சல்பேட், மயில் கழுத்துக் கலர், ராமர் கலர், டர்க்காய்ஸ், டீல் - சான்ஸே இல்லை!
 
ஒரு துணிக்கடையில 50000 கலர் பட்டுப்புடவைன்னு விக்கும்போது இதையெல்லாம் எண்ணிப்பார்க்கவா போறாங்கன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்தாங்களாம்! ஒரு மனைவி அந்தப் பட்டுப்புடவையில இந்தக்கலரெல்லாம் இல்லைன்னு ஒரு லிஸ்டும், இந்தக்கலரெல்லாம் ரிப்பீட் ஆவுதுன்னு ஒரு லிஸ்டும் கொடுத்தபோது மயங்கிக் கீழே விழுந்தாங்களாம்!
 
பொதுவா, ஆம்பளைக்களுக்குத் தெரிஞ்ச வண்ணங்கள் எல்லாம் வானவில், குறிப்பா ட்ராபிக் சிக்னல் புண்ணியத்தால மூணு கலர் - இவ்ளோதான் உருப்படியாத் தெரியும்!  வேலை செய்யும்போதும் FFFFFF, 000000 போன்ற HTML கலர் கோடையே உபயோகப்படுத்துவோம், இல்லை எங்க இருந்தாவது காபி-பேஸ்ட் செய்வோம்!
 
திருமணத்துக்குத் தயாராகும் விதமா, இப்ப ஒரு சின்ன வீட்டுப்பாடம் :
 
1. வெள்ளை மயிலோட கழுத்து என்ன கலர்? சாதா மயிலோட கழுத்து என்ன கலர்?
2. ராமர் கலர் என்பது ராமர் ராஜாவாக இருந்தபோது இருந்த கலரா இல்லை காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது இருந்த கலரா?
 
பொது வீட்டுப்பாடம்:
 
பி கு: பலத்த மிரட்டல்களுக்கு இடையில் எழுதப்படும் இந்த இலக்கியவடிவம், திங்கள்தோறும் வெளியாவதைத் தடுக்க பெரிய அளவில் சதி நடக்கிறது. "அமீரகத்தில் அருவா ஆட்டம்" என்று பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகவும் வரலாம்!
 
போலீசாரின் கண்பார்வைக்குள்ளேயே இருந்துகொண்டு தந்திரமாக லெனின் எழுதியதுபோல இந்த இலக்கியத்தின் ஆசிரியரும் எழுதவேண்டி இருப்பதால், பிரதி திங்கள் என்ற இலக்கு தளர்த்தப்பட்டு, முடிந்தபோதெல்லாம் எழுத முடிவு கொண்டிருக்கிறோம்.

Nov 11, 2007

எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா? (11 Nov 07)

பாஸ்டன் பாலாவுடன் சேட்டிக்கொண்டிருந்தபோது நான் எழுதும் திரை விமர்சனங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் ஒரு சவால் விட்டார். அந்தச் சவாலை ஏற்றபோது எனக்கு வந்த எண்ணம் - "எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப்பண்ண முடியாதா?" என்றுதான்.
 
சவால் இதுதான்: ஒரு திரைப்படத்துக்காவது, நான் பாஸிடிவாக விமர்சனம் எழுத வேண்டும்.
 
"வேல்" திரைப்படத்துக்குப் போவதாக முடிவு செய்திருந்த வேளையில், இந்தச் சவால் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. நல்ல நடிகராக வளர்ந்துகொண்டிருக்கும் சூர்யா; சாமி, தாமிரபரணி போன்ற சுவாரஸ்யமான மசாலாக்களைக் கொடுத்த ஹரி; நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிசின் அசின்; நகைச்சுவைக்கு வடிவேலு; ஹிட்டாகத் தள்ளிக்கொண்டிருக்கும் யுவன்;-- கூட்டணி, ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்புகளைக் கிளறிவிட்டது. கவனிக்கவும் - நான் தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடும் ஒரு நெம்புகோல் படத்தை எதிர்பார்க்கவில்லை - 3 மணிநேர பொழுதுபோக்கை மட்டுமே எதிர்பார்த்துப் போனேன்.
 
ஆனால், சவாலில் தோல்வி அடைந்துவிட்டதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ரயிலில் பிரியும் இரட்டைக் குழந்தைகள், அரிவாள் ஒரு சூர்யாவுக்கு, அறிவால் ஒரு சூர்யாவுக்கு, பேமிலி செண்டிமெண்ட் என்று கதையின் முடிச்சு வகுக்கப்பட்ட விதிகள் மாறாமல்!
 
ஒரு சூர்யா  ஒரு பிரம்மாண்டமான குடும்பத்தில் (ஹரியின் வழக்கமான - யார் என்ன எங்கே எப்படி உறவு என்று தெரியாமல் எல்லா நேரமும் ப்ரேமில் 20 - 25 உறவினர்கள் உள்ள குடும்பம்! பாதி பேர் செட் ப்ராப்பர்டி போலத்தான் வருகிறார்கள்- மூணுபேருக்கு மட்டும் மொத்தம் அரைப்பக்கத்துக்கு வசனம்!) வளர, இன்னொரு சூர்யா சிந்திய கண்ணும் அழுத மூக்குமாய் காணாமல் போன மகனைப்பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் சரண்யாவிடம் வளர்கிறார். (நிச்சயமாக சம்பளத்தைவிட கிளிசரின் செலவு அதிகமாயிருக்கும்). பின்னர் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டு ஒரு சுருக்கமான ஆள்மாறாட்டம் செய்து, வில்லனைப் பந்தாடி இணைகிறார்கள்.
 
கதையில் எனக்குப் பெரிய வருத்தம் ஏதும் இல்லை. இதைவிட கதையம்சம் குறைவாக இருந்த படங்களையும் திரைக்கதையால் தேற்றி, கொட்டாவி விடாமல் 3 மணிநேரத்தை நகர்த்திய ஹரிக்கு இப்போ என்ன ஆச்சு? எதிர்பார்க்க முடியாமல் ஒரே ஒரு காட்சி, ஒரே ஒரு வசனம் கூட இல்லாமல் நகர்த்த வேண்டிய கட்டாயம் என்ன? ஆள்மாறாட்டத்தில் கூட ஒரு சஸ்பென்ஸ் கிடையாது, சம்மந்தப்பட்ட எல்லாருக்கும் இப்போது இங்கே இருப்பது யார் என்று தெளிவாகத் தெரிகிறது!
 
சூர்யா பஞ்ச் டயலாக் பேசும்போது அவராலேயே சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஓப்பனிங்கில் பறந்துகொண்டே எதையாவது கொளுத்திக் கொண்டு எண்ட்ரி, பெண்கள் எப்படி உடையணியவேண்டும் என்ற லெக்சர், அரிவாளள எப்படிப் பிடிக்கவேண்டும்,  சட்டைமடிப்பு கலையாமல் 500 பேரைப் பந்தாடுவது --இதையெல்லாம் மற்றவர்களுக்கு விட்டுத் தந்துவிட்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடிப்பதையே தொடரலாம் அவர்.
 
அசினுக்கு வேலை ரெண்டு டூயட் தான்.  ஹரி வேகமான இயக்குநர்தான், ஆனால் அசினுக்கு மேக்கப் போட இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம் - கட்சி மாற வைத்துவிடுவார் போல!
 
வடிவேலு காமடியில் டீக்கடையில் அரை நிமிடத்தில் கலவரம் ஏற்படுத்தும் ஒரு காட்சி மட்டும் தேறுகிறது. மற்றபடி ஒண்ணும் பெரிசா இல்லை.
 
வில்லனாக கலாபவன் மணி - வில்லனா, காமடியனா என்றே புரியாமல் பாதிப்படம் நகர்கிறது. வழக்கம்போல முட்டாள் வில்லன், பனைமரத்தை எரிப்பது, பழைய சேலையை பிடுங்குவது என்ற ரேஞ்சுக்கு சாத்வீகமான வில்லன்!
 
யுவனுக்கு என்ன ஆச்சு? "கனாக்காணும் காலங்கள்", "முன்பனியா முதல் மழையா" ரேஞ்சுக்கு பாடல் வேண்டாம் - ஒரு "கருப்பான கையால என்னைப் புடிச்சான்" "சரோஜா சாமான் நிக்காலோ" ரேஞ்சுக்குக் கூட பாடல் போடவில்லை! பின்னணி இசையைப் பற்றி பேசாமலே இருந்துவிடலாம். காது இன்னும் வலிக்கிறது!
 
தலைப்பைப் பார்த்து இது அழகிய தமிழ்மகன் விமர்சனம் என்று நினைத்து வந்தவர்களுக்கு மட்டும் : இன்னும் அந்த விபத்து நடக்கவில்லை - காலத்தின் சூழ்நிலைக்கைதியாக இருக்கும் பினாத்தலாருக்கு நிச்சயம் நடக்கக்கூடிய விபத்துதான் - தள்ளிப்போடப்பட்டிருக்கிறது அவ்வளவே!
 

Nov 8, 2007

தீபாவளி - பரிணாம வளர்ச்சி!

தீபாவளி- 1978

என்னப்பா பத்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்கே? கோபி வீட்டிலே நூறு ரூபாய்க்கு வாங்கி இருக்காங்களாம் தெரியுமா?ஒரு பாக்கெட் கூட ராக்கெட், ட்ரெயின் இல்லையே - எல்லாம் நமுத்துப்போன ஒத்த வெடியா இருக்கு?

அய்யோ தூறல் போடுது - காய வெச்ச பட்டாசெல்லாம் நனைஞ்சிடும் - ஒடு..

அவன் தான்மா நான் பாக்காத நேரத்திலே லக்ஷ்மி வெடி வெச்சுட்டான். புதுச்சட்டை வீணாப்போச்சு, விரலை மடக்கவே முடியலை அம்மாஆஆஆஅ!

தீபாவளி - 1986

ஏன்டா தீபாவளியும் அதுவுமா தியேட்டர் வாசல்லே தேவுடு காக்கறீங்க?

அதுசரி - நாளைக்குப் பார்த்தா உனக்கும் எனக்கும் (ரசிகனுக்கும்) என்ன வித்தியாசம்?

பட்டாசு வெடிக்கலையா?

அதெல்லாம் கார்த்திகை தீபத்துக்கு பார்த்துக்கலாம். தலைவர் படம் பேரெல்லாம் சேர்த்து ஒரு கவிதை(?!) எழுதித் தரச் சொன்னேனே - செஞ்சியா?

தீபாவளி - 1994

இங்க பாரு -When I say no, it is NO! சைட்லே இருக்கறதே நீ ஒரு ஆளு. உனக்கு 10 நாள் லீவு எல்லாம் கொடுக்க முடியாது.

நான் தீபாவளிக்கா சார் லீவு கேக்கறேன்? என் பாட்டி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க சார். அவங்களுக்கு என் மேலே உயிர்! நான் போகலேன்ன ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க சார்.

கஸ்டமர் கிட்டே எல்லாம் சொல்லிட்டேன் சார். எல்லா மெஷினும் இப்போ கண்டிஷன்லேதான் இருக்கு. எதாவது ப்ராப்ளம் ஆனாலும், மேட்டரை பெரிசா ஆக்க மாட்டாங்க சார். ப்ளீஈஈஈஈஈஸ் சார்!

தீபாவளி - 1999

ஏண்டி ஒரு மனுஷன் எவ்வளவுதான் ஸ்வீட் சாப்புடுவான்? ஒரு சோதனைச் சுண்டெலி மாட்டினா போதுமே? ஊர்லே எல்லார்கிட்டே இருந்து வந்த பட்சணத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணிடுவீங்களே!

இதப்பாரு, நான் சரம் மட்டும்தான் வெடிப்பேன் - இந்த புஸ்வாணம், சக்கரம் எல்லாம் லேடீஸ் மேட்டர்.

நிச்சயமா முடியாது. தீபாவளி அன்னிக்கு சினிமா போறதில்லைன்னு ஒரு பிரின்சிப்பிள்ளே வச்சிருக்கேன். அடுத்த வாரம் ட்ரை பன்னறேன் - உறுதியா சொல்ல முடியாது.

தீபாவளி - 2005

சரியாப்போச்சு போ! தீபாவளி அன்னிக்கு எனக்கு க்ளாஸ் இருக்கு. புது ட்ரெஸ் எல்லாம் போட முடியாது. யூனிஃபார்ம் நிச்சயம் போட்டே ஆகணும்.

பட்டாசா? எந்த ஊர்லே இருக்கே தெரியுமா? ஜெயில்லதான் தீபாவளி கொண்டாடறதுன்னு முடிவு பண்ணிட்டயா? நீயும் பொங்கல் ரிலீஸ்தான் ஞாபகம் வெச்சுக்க!

சாஸ்திரத்துக்கு ஒரு ஸ்வீட் பண்ணு போதும். சுகர் எற்கனவே கச்சா முச்சான்னு இருக்கு!
 
2005  என்ன 2007ம் அதே கதைதான் என்பதால், இங்கிருந்து ஒரு மீள்பதிவு.
 
தீபாவளியை கொண்டாடுபவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

Nov 5, 2007

பாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology

கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..

எல்லாத்தையும் பாட்டாவே பாட முடியாதுங்கறதால, மேட்டருக்கு வரேன்.

இன்னிக்கு நம்ம பாடத்துல நாம பாக்கப்போற விஷயம் - கல்யாண்த்துக்கான முன்னேற்பாடுகள்.

ஒரு ஜோக் சொல்வாங்க, கல்யாணத்துக்கு முன்னால அவன் பேசினான், அவள் கேட்டாள், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேசினாள், அவன் கேட்டான், 10 வருஷம் கழிச்சு ரெண்டு பேருமே பேசினாங்க - ஊரே கேட்டுதுன்னு.. (நம்ம நிலைமையெல்லாம் எப்படி சிரிப்பா சிரிக்குது பாத்தீங்களா?)

அவன் பேசினதுக்கும் அவள் பேசினதுக்கும் இடையே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி என்ன? ஏன் அப்படி ஆனது?

பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது.

சில அடிப்படைப்பாடங்களை கவனிக்கலாம்.

1. லாஜிக் தவிர். பெண்மை தவறேல்!

பெண்களுக்கு லாஜிக்கே இல்லைன்னு நான் சொல்லவரலை. இருக்கு. ஆனா, நமக்குப் புரியாம எங்கேயோ மூலையில மறைஞ்சுகிட்டு இருக்கு. இந்தப்பாடத்தை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்,

நம்ம பிரண்டு அப்பாவி கோயிந்து, மனைவியோட ஷாப்பிங் மால் போனார். 3 மணிநேரம் சுத்தினாங்க அம்மணி, ஒண்ணும் பெரிசா வாங்கலை. (சிறிசா வாங்கனதுலேயே பர்ஸ் பழுத்துடுச்சுன்னு வைங்க - அது கணக்குல வராது). ஒரு கடையில அரை மணிநேரம் செலவு பண்ணிட்டு வெளிய வராங்க, அப்ப தலைவர்
கேக்கறாரு:

"கடையிலெ எதாச்சும் வாங்கினயா? ஏன் இவ்வ்ளோ நேரம்?"

"ஒண்ணும் வாங்கலை! வாங்கினாத்தான தப்பு? வெறுமனே பாத்தா என்ன தப்பு?"

"இதுக்கா அரை மணி நேரம்"னு கேள்விய மனசுக்குள்ளே அடக்கிட்டு, அடுத்த கடைக்கு உள்ளே போகாம, வெளிப்பக்கமா ஒரு பென்சுல உக்கார்ந்துகிட்டு, கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கார். அம்மணி வராங்க, இவர் விடற லுக்கை லுக்கு விட்டுடறாங்க.

"என்ன கண்ணு அலைபாயுது?"

நம்ம கோயிந்து லாஜிக்லே புலியாச்சே.. புத்திசாலித்தனமா கேக்கறாராம்..

"தப்பா எதாச்சும பண்ணேன்? வெறுமனே பாத்தா தப்பில்லைன்னு நீதானே சொன்னே?"

என்னா ஆயிருக்கும் அவர் கதின்றத வாசகர்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

(இந்த மாதிரிக் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்றதை பின்னால வர பாகங்கள்லே சொல்றேன்)

2. அர்த்தத்துக்கு அர்த்தம்

நவீன கவிதைகள் எல்லாம் வரதுக்கு ரொம்ப நாள் முன்னாலேயே அர்த்ததுகுள்ளே அர்த்தம் வச்சு பேசத் தெரிஞ்சவங்க நம்ம பெண்கள். தமிழ்ப்பதிவுகள் ஆரம்பிக்கறதுக்கு பலகோடி வருஷத்துக்கும் முன்னாலேயே வரிக்கு வரி உள்குத்து வச்சுப் பேசத் தெரிஞ்சவங்க!

அவங்க எதாச்சும் பேசினாங்கன்னா நேரடியான அர்த்தம் மட்டும் எடுத்துக்காதீங்க!

உதாரணமா, "இன்னிக்கு என்ன தேதி"ன்னு கேட்டா அதுக்குள்ளே, "அடுத்த வாரம் என் பிறந்த நாள் வருது, கிப்ட் ரெடியா" என்ற கேள்வியோ, "சம்பளம்தான் வந்தாச்சு இல்ல, எங்கயாவது போயி அதை ஊதிவிட்டுட்டு வரலாமா?" என்ற கேள்வியோ உள்ளே பதுங்கி இருக்கும்!

சாப்பாடு விஷயத்துல கூட, "இன்னிக்கு டின்னர் என்ன பண்ணலாம், தோசையா, உப்புமாவா?" அப்படின்னு ஒரு கேள்வி வந்தா உடனடியா பதில் சொல்லிடக்கூடாது. எது பண்ரதால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையோ அதைச் சொல்லித் தப்பிச்சுடறதுதான் புத்திசாலித்தனம். அட்வான்ஸ்டு கணவர்கள், நேரடியா அவங்க ஆப்ஷன்ஸில முதல்ல என்ன சொல்றாங்களோ அதையே சொல்லிடுவாங்க. இல்லாட்டி, காலப்போக்குல, "இன்னிக்கு டின்னர் என்ன? தோசையா, வேறே எதாச்சுமா?" என்று அறிவுறுத்தப்படுவார்கள். இதுக்கும் திருந்தாதவர் ஒருத்தர் வீட்டுல நடந்த சம்பவம்:

"இன்னிக்கு டின்னர் வேணுமா?

"ஆப்ஷன்ஸ் என்ன?"

"யெஸ் ஆர் நோ"!

3. Omit your commitments

வரலாற்று ஆசிரியர்கள், ஞாபகசக்தி க்ராண்ட் மாஸ்டர்கள் என இருக்கும் எல்லாரின் ஞாபகசக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபகசக்தி. "நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக்கூட நான் அந்த ஊதாக்கலர் சல்வார் போட்டிருந்தேன், நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா?" என்பது பொன்ற கேள்விகளைத் தவிர்க்க ஒரே வழி எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதுதான்.

எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்!

இந்த ஞாபகசக்தி இருந்தாலுமே, நமக்கு அவங்க செய்த கமிட்மெண்ட்கள் செலக்டிவ் அம்னீஷியாவில் காணாமல் போவதும் லாஜிக்கை மீறிய விஷயம்தான். (அதாவது நம்ம லாஜிக்கை)

இதுவே ரொம்ப நீளமா போயிட்டதால, அடுத்த வாரமும் இதே சப்ஜெக்ட் தொடரும்.

வீட்டுப்பாடம்:

1. http://www.yoest.org/archives/shopping_male_female_gap_tom_peters.jpg

Nov 2, 2007

சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்?

முதலில் டிஸ்கி: நான் ஒரு சாப்ட்வேர் ஆள் கிடையாது, வேலைக்குத் தேவையான தகவல்களைப் பெற மட்டுமே கணினியைத் தொடுபவன், மற்ற நேரங்களில் ஸ்பானரும் ஆயில் கிரீஸும்தான்!

சாப்ட்வேர்காரர்களின் அதிக சம்பளத்தால் சமூகத்தில் பாதிப்பேற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியான விடை - ஆம் ஆகத்தான் இருக்கும்.

சென்னையில் 80களிலும் கூட தி நகர், மாம்பலம் போன்ற பகுதிகளில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு  நடுத்தர வர்க்கத்தினர் வாங்கக்கூடிய விலைக்குள் இருந்தது,  90களில் ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற பகுதிகள் நடுத்தர வர்க்கத்தினரின் சரணாலயமாக இருந்தது.ஆனால், 2000 - 2007ல், இது வேகமாக ஓடி, இப்போது சிங்கப்பெருமாள் கோயில் மதுராந்தகம் போன்ற இடங்கள் கூட மத்யமரின் வாங்கும் சக்திக்குள் இல்லை. இந்த மாற்றம் அதிவேகமாக நடந்ததனால், முன்னாளில் கௌரவம் எனக் கருதப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தன் கூட, ஒரு அடுக்குமமடியின் பொந்து கூட வாங்க முடியாமல் தவிக்கிறான்.

இதற்குக் காரணம், சந்தேகமே இல்லாமல் சாப்ட்வேரில் புழங்கும் அதிகப் பணம்தான். ட்ரீட் கொடுத்து, 500 ரூபாய் ஆம்னிபஸ்ஸில் பயணம் செய்தபின்னும் மிஞ்சுவது, மேற்படி சர்க்கார் உத்யோகஸ்தனின் முழுச்சம்பளத்தைவிட சில மடங்குகள் அதிகமாக இருப்பதே.

அப்பாவை விட அதிகச் சம்பளம் என்பது பையனுக்குப் பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கலாம். ஆனால் அப்பாவுக்கு? அப்படிப்பட்ட பையன்கள் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாக்களுக்கு?

அதிகப்பணம் எங்களுக்கு மட்டும்தானா? அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கவில்லையா? சினிமாக்காரர்கள் கோடிக்கணக்கில் வாங்கவில்லையா என்ற கேள்விகளும் அர்த்தம் அற்றவையே! அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரின் தினப்படி செயல்பாடுகளில் போட்டிக்கு வந்ததில்லை, அவர்களின் ஜனத்தொகையும் பொதுமக்களின் ஜனத்தொகையில் 1 சதவீதத்தைத் தாண்டியதில்லை.

விலையேற்றம் என்பது சகஜம்தான். அந்த காலத்துல 5 பைசாவுக்கு கைநிறைய பொரிகடலை கிடைச்சுது என்று சொல்வது அபத்தம். ஆனால், Burning platform என்பது இப்படிப்பட்ட திடீர் நிகழ்வுகளால் வேகமாவது, அந்த வேகத்தில் கூடச்சேராத மக்களைப் பாதிக்கத்தான் செய்யும். இங்கே பிரச்சினை விலையேற்றம் அல்ல - அதன் வேகம்!

பிரச்சினை பணம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. வாழ்க்கைத்தரம் பற்றிய அளவுகோல்கள் வேகமாகத் திருத்தப்படுவது! இது அங்கே ஒரு அரசியல்வாதி, இங்கே ஒரு வியாபாரி என்றில்லாமல், பொது ஜனத்தொகையில் 15-20 சதமாக இருப்பதால் மிச்சமுள்ள, பேண்ட் வேகனில் ஏறமுடியாதவர்கள் 80% ஆக இருப்பதும், அவர்களின் அந்தஸ்து சடாலெனக் குறைவதும், நேற்றுவரை அவர்கள் கைக்குள் இருந்த வசதிகள் இப்போது பகட்டாகவும் ஆடம்பரமாகவும் மாறிவிட்டதுதான்.

அன்றைய தேதிக்கு விலைபோகும் படிப்பைப் படித்து, அன்றைய தேதியின் நல்ல வேலையில் சேர்ந்து, சரியான பணி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் பெற்றுவரும் ஒரு ஆள், கோட்டின் மற்ற பகுதி திருத்தப்படுவதால் வாழ்க்கைத்தரம் குறைவதின் வலி, அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

சம்பள ஏற்றத்தாழ்வு என்பது இன்று நேற்று வந்த பிரச்சினையில்லை. ஆனால் இன்று அது உச்சத்தில் இருப்பதற்கும், பேசுபொருளாக ஆகியிருப்பதற்கும் காரணம் திடுதிப்பென மாறும் சமூக அளவுகோல்கள்.  10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான். சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான். 

மூன்றாம் வகுப்பு மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச்சொன்னாராம் ஒரு பள்ளி ஆசிரியர். ஒரு பணக்காரக் குழந்தை எழுதினாளாம்: Once upon a time, there was a very poor family, everybody in the house were poor, the parents were poor, the housemaid was poor, the gardener was poor, the car driver was poor, everybody was poor":  என்று! சாப்ட்வேர்காரர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தென்படவில்லை. வாங்கற சம்பளம் ட்ரீட் கொடுத்து, ஐ மாக்ஸில படம் பாத்து, 500 ரூபா ஆம்னிபஸ்ஸில போயி, மிஞ்சவே மாட்டேங்குது என்பது போன்ற தன்னிலை விளக்கங்கள் முன் பத்தியில் சொல்லப்பட்ட ஆளுக்கு எப்படிப்பட்ட எரிச்சலைத் தரும்?

ஆனால்!

இந்தப்பிரச்சினைக்கு சம்பளம் வாங்குபவர்களைக் காரணமாகச்சொல்வது எந்த விதத்தில் சரியாகும்?

ரஜினியை வைத்து 50 கோடிக்கு படமும் 10 கோடி சம்பளமும் கொடுக்கிறார்கள் என்றால் அந்தப்பணத்தை வசூலித்துவிடமுடியும் என்ற நம்பிக்கைதானே காரணம்?

சாப்ட்வேரை விற்றால் பணம் வராது என்ற நிலையில் 2000த்தின் ஆரம்பங்களின் டாட்காம் வீழ்ச்சியிலும் பின்னர் 2002லும் கூட எத்தனை சாப்ட்வேர் மக்கள் வேலை இழந்தார்கள்? அப்போது, மற்றவர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை சாப்ட்வேர்காரர்களுக்குத் தந்தார்களா? சாப்ட்வேர் படித்தவர்கள் அத்தனை பேருமா கோடியில் கொழிக்கிறார்கள்? (சிவாஜி பவுண்டேஷன் ஆரம்பிக்கிறார்கள்:-)) அனுமதிக்கப்பட்ட விலக்குகள் (வீட்டுக்கடன், சேவைகளுக்குத் தரும் நன்கொடை) நீங்கலாக அவர்கள் கடமையான வருமான வரியிலிருந்து தப்பிக்கவோ ஏய்க்கவோ முடியாமல் சோர்சிலேயே கழிக்கப்படுகிறது. மிச்சப்பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பது அவரவர் சௌகரியம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

அவர்கள் பொறுப்பில்லாமல் செலவழிப்பது மட்டுமே விலையேற்றங்களுக்குக் காரணம் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. வியாபாரிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய, எப்படிப்பட்ட சம்பாத்தியம் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. சென்னையில் பிரம்மச்சாரிகளுக்கு வீடுகிடைக்காத நிலை மாறி, பிரம்மச்சார்களுக்கு மட்டுமே வீடு கிடைக்கும் நிலை வந்திருக்கிறது என்றால், இரு பக்கமுமே குற்றமில்லை - காலம் செய்த குற்றம்தான்.

இந்த நிலையைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குத் தான் இருக்கிறது. சாப்ட்வேர் வேலைகளைப் பரவலாக்குதல், சேலம், சத்தி போன்ற நடுததர ஊர்களிலும் மென்பொருள் பூங்காக்களை அமைத்தால், சென்னையில் 100 பேர் என்பது சென்னையில் 50 மற்ற ஊர்களில் 10 - 10 என்று பிரியும், சுபிட்சம் பரவலாகாவிட்டாலும், ஓரிடத்தில் குவிக்கப்பட்டதாக இருக்காது. அதிக வரிவிதிப்பு போன்ற முறைகள் எல்லாம் அநியாயம்தான்.

சாப்ட்வேர் இளைஞர்கள் ஒரு விஷயத்தை உணரவேண்டும். தங்கள் உரிமைகள், சமூக அந்தஸ்து பறிக்கப்பட்டதாக உணரும் மக்கள்தான் பெரும்பான்மை. அதிலும், உணர்ச்சிகளுக்கு வடிகால்கள் இல்லாத, வன்முறைக்கு ஏங்கும் ஒரு இளைய தலைமுறையும் அதில் அடக்கம். அவர்கள், தங்கள் வலிக்குக் காரணமாக உங்களை நினைக்கிறார்கள் - சரியா தப்பா என்று என்னைக் கேட்காதீர்கள் - நான் தப்பு என்றுதான் சொல்வேன். இவர்கள் ஒரு ஊதுபொறிக்காகக் காத்திருக்கின்றனர். பெங்களூருவில் எதுடா சாக்கு என்று கலவரம் கிளம்புவதைக் கவனித்திருக்கலாம். உங்கள் பகட்டு இதற்குக் காரணமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

"கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன்.

 

blogger templates | Make Money Online