Dec 30, 2008

பினாத்தல் டாப் டென் மூவீஸ் 2008!

வழங்குகிறோம்: பினாத்தல் டாப் டென் மூவீஸ்.

இது இந்த வருடம் வெளியான சில படங்களைப் பற்றிய எங்கள் விமரிசனக்குழு கணிப்புகள். தமிழ்நாட்டில் வெளியானவை பற்றி மட்டுமே இந்த கணிப்புகள் வெளியிடப்படுகின்றன; விமரிசனக்குழுவைப் பாதித்த எல்லா படங்களும் இந்த வரிசையில் இருக்கின்றன - ஆனால் எந்தப்படம் சிறந்த படம் என்று வரிசைப்படுத்தப்படவில்லை.

1.அபியும் நானும்:

தாத்தா பக்கமா பேரன் பக்கமா என்று திண்டாடும் ஆவி, கோலங்கள் அபியினால் ஒரு பக்கம் சாயும் கதை. லூஸ் போன்ற சிறுவர்களை வைத்து மதுரையைக் கிண்டல் அடித்தாலும், தாத்தா வேட்டியினால் வந்த பிரச்சினைக்கு ஞானத்தை பலி கொடுக்கும் காட்சி உருக்கம். க்ராபிக்ஸ் மூலம் உயரமாக ஒல்லியாக மாறும் நாயகன், பழைய க்ளிப்பிங்ஸை வைத்தே பொக்கிஷமாக மக்களைக் கவர முயற்சிக்கிறார் - ஆனால் முடிந்ததா எனத் தெரியவில்லை. எதிர்பாராத திருப்பமாக தாத்தாவும் பேரனும் சேர்ந்துவிட, கழுகார் கேட்கும்" நான் யார் பக்கம் என்று உங்களுக்காவது தெரிகிறதா" என்ற க்ளைமாக்ஸ் காட்சி செண்டிமெண்டாக எடுத்திருந்தாலும் சிரிப்பலைதான் பரவுகிறது!

அபியும் நானும் - அலங்கோலங்கள்!

2. சில நேரங்களில்:

ஊர்ப்பெரியவர் ஒருவர் அடுத்த ஊர்ப்பிரச்சினையில் சில நேரங்களில் சில மாதிரி முடிவெடுக்கும் உளவியல் ரீதியான கதை. சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு உயிரையும் கொடுப்பேன், பதவியைத் துறப்பேன் என்கிறார் - அடுத்த காட்சிகளிலேயே - கைகோத்தால் போதும், ஏன் உயிரை விடவேண்டும் என்கிறார். அடுத்த ஊர்ப் பிரச்சினையைப் பற்றிப் பேசினால் தண்டனை கொடுப்பேன் என்கிறார் சில நேரங்களில், உணர்ச்சி வசப்பட்டு பேசுவது கூடத் தவறா எனக் குமுறுகிறார் சில நேரங்களில். அத்தனை சில நேரத்து முடிவுகளுக்கும் காரணம் மேலூரில் இருக்கும் பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துதான் எனத் தெரியும் காட்சிதான் க்ளைமாக்ஸ் - ஆனால் அதையும் ஊகித்துவிட முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.

சில நேரங்களில் - சில பேரங்களில்!

3. பிரிவோம் சந்திப்போம்:

பச்சைத் துரோகம் செய்திருந்தாலும் நாயகனோடு வேறு வழியில்லாமல் நட்பாக இருக்கும் நண்பனைப் பற்றிய கதை. நாயகன் வேறு வழியின்றி பிரிவதாக அறிவிக்கும் சோகமான காட்சி - எதிர்பார்த்திருந்தாலும் கண்ணீரை வரவழைக்கிறது. தன்னைத் திட்டிய நண்பனின் ஆள் பேசிய சிடி கிடைத்ததும் கோபமாக நண்பனின் குருவைச் சிறையில் அடைக்கிறார் நாயகன். பட முடிவில் நாங்கள் எப்போது பிரிந்தோம், புதிதாகச் சந்திக்க என்று காமெடி செய்கிறார். நடுவில் ஏற்பட்ட மாற்றம் என்ன, குருவை ஏன் சிறையில் அடைத்தார், ஏன் விடுதலை செய்தார், நண்பனின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமலேயே படம் முடிகிறது.

பிரிவோம் சந்திப்போம் - சந்திப்பார்களா? சந்தி சிரிப்பார்களா?

4.பிடிச்சிருக்கு:

வேறு வழியில்லாமல் நாயகியைப் பிடிச்சிருக்கு என்றே படம் முழுக்கச் சொல்லி வரும் நாயகனின் கதை. ஏன் பிடிச்சிருக்கு, எப்படிப் பிடிச்சிருக்கு என்பதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. இத்தனைக்கும் நாயகி கொஞ்ச நாள் முன்னால் நாயகனைச் சிறையில் அடைத்தவள். வெளியூருக்காக பாடுபட்ட நாயகன், நாயகிக்குப் பிடிக்காது என்பதால் அதையும் அடக்கி வாசிக்கிறான். விடியோ கவரேஜ் இல்லை என்பதால் சண்டை போட்ட நாயகனுக்கு அபரிமிதமாக விடியோ கவரேஜ் கிடைத்தாலும் நாயகி "பிடிச்சிருக்கு" என்பதால் எதையுமே உபயோகப் படுத்திக் கொள்வதில்லை. குழப்பமான கதை!

பிடிச்சிருக்கு - என்ன பிடிச்சிருக்கு?

5.ஆயுதம் செய்வோம்:

வேறு யாரும் ஆயுதம் செய்யக்கூடாது, தாங்கள் மட்டும்தான் செய்வோம்; நாங்கள் சொல்லும் ஆளோடுதான் செய்யவேண்டும் என்றெல்லாம் நிபந்தனை வைத்து கூட்டாளிகளைக் கவிழ்க்க நினைக்கும் தோழர்களின் முழக்கம். எதிராளிகளைக் கவிழ்க்க முடியாத நிலையில் ஆயுதம் செய்ய கூட்டுக்கு ஆள் தேடுகிறார்கள் - இதோ எங்கள் அணித்தலைவன், இவர்தாண்டா மதச் சார்பற்ற தலைவி என்று பண்ணும் காமெடி இரண்டாம் பாதியை ரசிக்க வைக்கிறது.

ஆயுதம் செய்வோம் - காமெடி கீமடி பண்ணலியே?

6.ஆனந்த தாண்டவம்:

தோற்றாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அடுத்த முறைக்கு வேறு நாதியில்லை என்று ஆனந்த தாண்டவம் ஆடும் அம்மணியின் கதை. மும்பையில் குண்டு வெடித்தாலும் மூவரசம்பட்டு சாக்கடை அடைத்தாலும் மைனாரிட்டி பஞ்சாயத்து தலைவர் வெளியேறினால் போதும் என்ற சர்வரோக நிவாரணியே துணை என்று வாழ்கிறார் அம்மணி. ஓய்விலேயே செல்லும் முதல்பாதி, ஓய்விலேயே இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் இரண்டாம் பாதி; படம் முடிவு வரை க்ளைமாக்ஸ் தேர்தல்கள் வராததால் சொதப்பல்.

ஆனந்த தாண்டவம் - ஓவரா ஆடாதீங்கம்மா!

7.சரோஜா:

படத்தின் பெயருக்கு வித்தியாசமான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் - த்தியமூர்த்தி பவன் எதிரே ரோட்டில் நடக்கும் ஜாலியான சண்டை என்று. இந்தப்படம் வழக்கம்போலவே பல இயக்குநர்களால் குதறப்பட்டு இருந்தாலும், எப்போது படம் சூடுபிடிக்கும், எப்போது டல்லடிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. அவ்வப்போது ஊர்ப்பெரியவரோட சண்டை பிடிப்பது மாதிரி தெரிந்தாலும் அம்மா சொன்னவுடன் அமைதியாகிறார்கள் நாயகர்கள்; திடுதிப்பென்று செத்துப்போன அப்பா ஞாபகம் வந்து போடு.. எல்லாரையும் ஜெயில்ல போடு என்று மிரட்டுகிறார்கள் ஊர்ப்பெரியவரை. எனக்கு ஆறு மாசம், உணக்கு மூணு வருஷம் என்பது போல பஞ்ச் டயலாக்குகளும் உண்டு.

சரோஜா - சறுக்கும் ரோஜா!

8.அஞ்சாதே:

26 நவம்பர் வெளியீடு. நிறைய காரக்டர்கள், எது எங்கே எப்போது எப்படி நடந்தாலும் அதை வைத்து நம் கொள்கையை வலுப்படுத்திக் கொள்ள அஞ்சாதே என்பதுதான் கதையின் நாட். எதிரி நம் மேல குண்டு போட்டாச்சு, எதிரி மேலே ஏன் இன்னும் குண்டு போடலைன்னு கேட்க அஞ்சாதே, 16 வருஷம் முன்னாடி நீ போட்ட கடப்பாரைக்கு இந்த குண்டு சரியாப்போச்சு என்று சொல்ல அஞ்சாதே, ஏன் பணக்கார செத்தவனை மட்டும் கவனிக்கிறே என்று திசைதிருப்ப அஞ்சாதே, ஒருத்தனை சாகடிக்கத்தான் 200 பேரைக் கொன்னாங்க என்று சொல்ல அஞ்சாதே - எனப் பல அஞ்சாதேக்கள். விறுவிறுப்பாக போனாலும் வெறுவெறுப்பாக முடிகிறது - யாரும் எப்போதும் மாற மாட்டார்கள் என்பதை வலியுறுத்தும் கதை!

அஞ்சாதே - அஞ்சாமல் இருக்க முடியாதே!

9.குசேலன்:

பங்கு பிரித்த பிறகு ஏழையாக மாறிவிட்ட குசேலன், குபேரன் மீது போர்தொடுத்து, அவனை நல்வழிப்படுத்தும் கதை. குபேரன் வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சியை ஆதரிப்பதும், அது குசேலனுக்கு இன்னும் கோபத்தை உண்டுபண்ணுவதும் விறுவிறுப்பான காட்சிகள். க்ளைமாக்ஸில் குபேரன் குசேலனுக்கு செட்டில்மெண்ட் செய்து கண்கள் பனிக்கின்றன; ஆண்டி க்ளைமாக்ஸாக போரில் இருபுறமும் உதவியவர்கள் நடுங்கிக்கொண்டு இருக்கும் காட்சி நகைச்சுவையா சீரியஸா எனத் தெரியவில்லை.

குசேலன் - மாடி வீட்டு ஏழை!

10. தசாவதாரம்:

எனக்கு யார் கூட்டும் தேவையில்லை, நானே எல்லா அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் அணித்தலைவன், இன்றாவது நம்முடன் கூட்டு என்று வயிற்றில் பால்வார்ப்பாரா எனக் காத்துக்கிடக்கும் மேலூர்ப் பெரிசுகளை அலட்சியப்படுத்துகிறார். தப்பு - இங்கே எல்லாரும் தப்பு - நான் மட்டும்தான் சரி என்று பஞ்ச் டயலாக் விடுகிறார்; வாரம் ஒரு ஊருக்குச் சென்று விளையாட்டு காட்டுகிறார். வாரிசுகளை ஒழிக்கணும் என்று மனைவியை வைத்தும் பஞ்ச் டயலாக் விடுகிறார். ஊரில் உள்ள மற்ற பெரிசுகள் எல்லாம் இவரை பாம்பு என்று அஞ்சுவதா, பழுது என்று மிதிப்பதா என்று புரியாமல் டரியல் ஆகிறார்கள்.

தசாவதாரம் - பத்துக்கு ரெண்டு தேறும்!

Nov 14, 2008

கருவி - சிறுகதை (14 நவ08)

சட்டக்கல்லூரி சம்பவங்களை நினைவுபடுத்தும் இந்தச் சிறுகதையின் நிகழ்வுகள் (சில இட்டு நிரப்பல்கள் தவிர்த்து) உண்மையில் நடந்தவை - 1988-89ல்.

கருவி

விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்கி உள்ளே நடந்தேன்.

"வாணியம்பாடி, திருப்பத்தூர்" என்று கூவிக்கொண்டிருந்த கண்டக்டர் என்னைப்பார்த்ததும் முகம் மாறினான்.

"நீ சரவணன் இல்லே?"

பத்து வருடம் கழிந்தாலும் என்னை நினைவு வைத்திருக்கிறான். நான் செய்த காரியத்துக்கு அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன..

"கலாட்டா பண்ணாம இருக்கறதுன்னா வண்டிக்குள்ளே ஏறு. ஏறுமாறா நடந்தேன்னா இறக்கி வுட்டுறுவேன்"

முன்னெல்லாம் என்னைப் பார்த்தாலே பயந்துவிடுவான். பதிலேதும் பேசாமல் ஒரு ஓர சீட்டைப் பார்த்து அமர்ந்தேன்.

பஸ் வேகமெடுக்க அதிகாலைக் குளிர் காற்று முகத்தில் அறைந்தது. கொஞ்ச நேர ஓட்டத்திலேயே பஸ் நிறைந்துவிட்டிருந்தது. அதே காலை நேரம், பஸ் முழுவதும் எஞ்சினியரிங் மாணவர்கள் மினிட்ராப்ட் துருத்திய பைகளுடன் கதை அடிக்கும் சத்தம், முன்சீட்டுப் பெரிசுடன் அந்தக்கால கதை பேசிக்கொண்டு டிரைவர்.. எதுவுமே பெரிதாக மாறிவிடவில்லை.

இரண்டு பயணிகளை ஏற்ற விண்ணமங்கலம் புளியமரத்தில் வண்டி நிற்க, மரத்தில் கிறுக்கல் - கீதா ஐ லவ் யூ - மறக்கத் துடித்திருக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டது...

_____________________________________________________________

"சரவணன், சுவற்றில் ஆபாசமாக எழுதியது நீங்கள்தானே?" பிரின்ஸிபாலின் கோபம் அவருடைய செயற்கையான மரியாதையில் தெரிந்தது.

அவர் அலுவலகத்தின் ஒரு மூலையில் நான் நிற்க, அவரின் எதிர் சீட்டுகளில் மெக்கானிகல் கணேஷ், பிஸிக்ஸ் தேவசகாயம், சரளா (வேண்டுமென்றே கணேஷை விட்டு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்திருந்தாள்) தவிர கம்ப்யூட்டர் ராஜாவும் இருந்தான்.

"எனக்கு நல்லாத் தெரியும் - அது உன் கையெழுத்துதான்" கணேஷ்

"ஏண்டா என்னைப்பத்தி இவ்வளவு கேவலமா எழுதினே" சரளா கண்ணில் கண்ணீர்.

நான் ராஜாவைப்பார்த்தேன். மிக நுணுக்கமாக தலையை ஆட்டியதைப் புரிந்து கொண்டேன்.

"நான் எழுதலே சார். என்னைப்போலவே வேற எவனோ எழுதியிருக்கான்"

"உங்களைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்"

"ஒரு அப்பாவியை அநியாயமாக சஸ்பெண்ட் செய்தீர்களானால் ஸ்டிரைக் வெடிக்கும் சார்"

"பயமுறுத்துகிறாயா?"

"இல்லை சார், நம்ம கிட்டே சாலிட் ப்ரூப் இல்லை..இப்போ இந்த மாதிரி ஆக்-ஷன் எடுத்தா பிரச்சினை ஆயிடும்" ராஜா சாதாரண ஆசிரியர்தான். ஆனாலும் கரெஸ்பாண்டெண்ட்டின் தம்பி மகன்.

வெளியே ஆவலுடன் காத்திருந்தார்கள் நண்பர்கள்.

"என்ன ஆச்சு தலைவா?"

"முதல்லே சிகரெட்டைக்கொடு"

கொஞ்சம் தூள் கசக்கிப் புகைத்தபின்தான் சற்றுப்பதட்டம் குறைந்தது.

"சொட்டைத்தலையன் சஸ்பெண்டுன்னு ஒத்தைக்கால்லே நின்னான்.. ராஜா சார் நம்ம பக்கம் பேசின உடனே சொட்டைக்கு முகமே தொங்கிப்போச்சு."

செல்வின் ஓடிவந்தான்.

"ராஜா சார் சாயங்காலம் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாரு."

"சரி போயிடறேன்..ராத்திரி கச்சேரி எங்கே?"

"உமாஷங்கர் வீட்டுலே எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. சரக்கு என்னுது, சால்னா பழனி"

_____________________________________________________________

மாலை வீட்டில் ராஜா கோபமாக இருந்தான்.

'என்னடா.. வேற ஆளை விட்டு எழுத மாட்டியா? உன் கையெழுத்து அது-இதுன்றான் கணேஷ்"

"அவசரத்துக்கு வேற யாரும் கிடைக்கலே சார்"

"நேத்து பெரியப்பா வந்திருந்தார். நெல்லு மண்டியாருக்கு கரெஸ்பாண்டெண்ட் ஆவணுமாம். மில்லுக்காரர் அவருக்கு சப்போர்ட்டாம்"

"பத்திரிக்கையிலிருந்து வராங்கன்னு சொன்னீங்களே"

"நாளைக்கோ நாளை மறுநாளோதான் வருவாங்க. சீக்கிரமா இந்த பிரின்ஸிக்கும் கணேஷுக்கும் ஒரு வழி பண்ணியாவணும்"

"பத்திரிக்கைல வர்றத வச்சு என்ன சார் பண்ண முடியும்?"

"முட்டாள் மாதிரி பேசாதே - நம்ம வார்த்தைய வச்சு மட்டும் அவனுங்களை தூக்க முடியாது. நெல்லு மண்டியார் கேக்க மாட்டார். பத்திரிக்கையிலே ஸ்ட்ராங்கா வந்துச்சுன்னா அத்தனை பார்ட்னருங்களுக்கும் வேற வழி இருக்காது. இப்போ மட்டும் சும்மா விட்டா, பிரின்ஸியும் கணேஷும் சேர்ந்து நம்ம எல்லாரையும் காலி பண்ணிடுவானுங்க"

_____________________________________________________________

பஸ் நிறுத்தம் வரை சென்று திரும்புவதைவிட கொஞ்ச முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம். ராஜா வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தச் சொல்லலாம்.

"உனக்காக நிறுத்த எல்லாம் முடியாது. வேணுமுன்னா ஸ்லோவா ஓட்டச்சொல்லறேன்.. நீதான் ரன்னிங்லேயே இறங்குவியே.. பத்து வருஷத்துலே மறந்து போச்சா"

பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்ததில், இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது.

ராஜா வீட்டின் முன்புறம் மாறிவிட்டிருந்தது. தாழ்வாகப் போடப்பட்ட ஓலைக்கூரை உள்ளே இருந்த பகட்டை மறைத்து எளிமையாகக் காட்டிக்கொண்டிருந்தது. வாசலில் நாலைந்து கரை வேட்டிகள்.

"யாரு வேணும்"

"அவரோட பழைய ஸ்டூடண்ட், சரவணன்னு"

"நீதானா அது? கரஸ்பாண்டெண்ட் அய்யாகிட்டே சொல்லறேன்"

சரிதான், மறுபடியும் அதிகாரம் கைமாறிவிட்டதா.

ராஜா பெருத்துப் போயிருந்தான். முழு அரசியல்வாதியாக ஆகிவிட்டான் என்பது வெள்ளை சட்டையிலும், பகட்டுச் சங்கிலியிலும் தெரிந்தது. தூக்கக்குறைவும், நேற்றைய போதையின் மிச்சமும் கண்களில் சிவப்பாகத் தெரிந்தது,

"வாடா வா.. இவன் யாரு தெரியுதா அறிவழகன், சரவணன்! இவன் துணை மட்டும் இல்லாட்டா நான் வாத்தியாராவே ரிட்டயர் ஆயிருப்பேன்."

"பெரிய ஆளாயிட்டே ராஜா.. என்னை ஞாபகம் கூட வச்சிருக்கியே"

"அறிவழகன் கொஞ்சம் வெளியே இருங்க" என்றான் ராஜா நான் ஒருமைக்கு மாறிவிட்டதைக்கண்டு.

"கதவு திறந்தே இருக்கட்டும்" என்றேன் அறிவழகனிடம்.

"உன் கோபம் எனக்குப் புரியுது.. நான் ஒன்னும் பண்ண முடியாத நிலைமையிலே இருந்தேன் சரவணா.. நீ பண்ண வேலை அப்படி"

"யாருக்காக செஞ்சேன்?"

"எனக்காகதான் செஞ்சே, நான் இல்லேங்கலியே, ஆனா அன்னிக்கு நான் உனக்கு உதவி செய்ய வந்திருந்தேன்னா அன்னிக்கே என்னை கட்டம் கட்டியிருப்பாங்க. எழுந்திருச்சிருக்கவே முடியாது. எல்லார்கிட்டேயும் உனக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாதுன்னு சொல்லிகிட்டே வக்கீல் வைக்க முடியுமா நீயே சொல்லு!"

"அதுவும் இல்லாம என் உபயோகமும் முடிஞ்சு போச்சு - இல்லையா?"

"என்ன பேச்சு பேசறே நீ? நீ மட்டும் நான் சொன்னதையா செஞ்சே? யோசிச்சுப் பாரு?"

யோசித்துப் பார்த்தேன்..

_____________________________________________________________

"நீதி கேட்டுப் போராட்டம்" "உண்ணாவிரதம்" "மாணவரை மதியாத முதல்வர் ஒழிக" பலவிதமான தட்டிகள் நடுவே உட்கார்ந்திருந்தேன்.

"தலைவா.. போர்வாள் பத்திரிக்கையிலே உன் போட்டோ வந்திருக்கு பாத்தியா?"

"முதல்வர் ஊழல், தட்டிக்கேட்ட மாணவன் டிஸ்மிஸ்" என்று அட்டையிலேயே என் புகைப்படம் போட்டிருந்தார்கள்.

"செமெஸ்டர் எக்ஸாம் வேற வருது தலைவா..ஸ்டுடெண்டுங்கள ரொம்ப அடக்கி வைக்க முடியாது"

"இன்னும் ரெண்டு மூணு நாளில எல்லாம் மாறிடும், நிறுத்திடலாம், தலைவன்றீங்க.. நான் சொல்ற பேச்சை மீறி நடப்பீங்களா?" புகழ் போதை என் தலைக்கு ஏறிவிட்டிருந்தது.

எதிர்பார்த்ததற்கு நேர் எதிராக எல்லாம் நடந்து கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ராஜாவைச் சந்திக்கும்வரை.

"நூறு ஸீட்டுடா.. எல்லாம் போச்சு! அவனுங்க செய்யறதைத்தான் செய்துகிட்டிருக்காங்க. உன்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. ஆடறாங்கடா.. ஸ்டிரைக்கும் பிசுபிசுத்துப் போச்சு.. பத்திரிக்கையிலே வந்ததுக்கும் ஒரு எபெக்டும் இல்லே.." கோபமாகப் புலம்பினான் ராஜா.

"இப்போ என்னதான் சார் செய்ய?"

"போராட்டத்தை நிறுத்திடு. அடுத்த வாரம் எக்ஸாம் ஆரம்பிக்குது, நீ எழுதறதுக்குப்போ"

"என்னைத்தான் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே..எக்ஸாம் ஹாலுக்கு உள்ள விட மாட்டாங்களே"

"அதுதானேடா திட்டமே" விளக்கினான் ராஜா.

பரீட்சை அன்று காலையிலிருந்தே பதட்டம் அதிகமாக இருந்தது. ஏற்றிய சரக்கு உதவவில்லை. நாலைந்து பாக்கெட் தூளைக் கசக்கிப் புகைத்தும் பயனில்லை.

பரீட்சை அறைக்குள் கணேஷ் வினாத்தாள்களை வினியோகித்துக்கொண்டிருந்தான்.

"டேய் கணேஷ் பாடு, என் சீட்டு எங்கேடா"

"சரவணன் - கெட் அவுட் ஆப் ஹியர்.. பரீட்சை நடக்கிறது..கலாட்டா பண்ணாதே"

"எனக்குக் கொடுடா கொஸ்டின் பேப்பர்" என்று அவன் கையிலிருந்து பேப்பர்களைப் பிடுங்கினேன். அவன் கையை உதறிய வேகத்திலும் ஏறியிருந்த போதையிலும் சடாலென கீழே விழுந்தேன்.

பாக்கெட்டிலிருந்த புட்டியும் விழுந்ததில் உடைந்து நாற்றமெடுக்க, அமைதியாக இருந்த மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, தேர்வுக் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

வெறியும் கோபமும் தலைக்கேற, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன்..

_____________________________________________________________

"கணேஷ் வாத்தியாரின் வீடு இந்தச் சந்துதானே" வேகமாக வந்ததில் மூச்சு இறைக்கக் கேட்டேன்.

"அவர் போயி பத்து வருசமாச்சேப்பா - அவங்க சம்சாரமும் குழந்தையும் அந்த மூணாவது வீட்டுலே இருக்காங்க"

மூன்றாவது வீட்டு வாசலில் கில்லி ஆடிக்கொண்டிருந்தான் அவர் மகன்..பெரியவனாகிவிட்டிருந்தான். எத்தனை முறை இவனை கணேஷின் டிவிஎஸ் 50ன் முன்னால் நிற்கப் பார்த்திருப்பேன். சட்டை இல்லை, கிழிந்த டிரௌசர்..என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கதவைத் தட்ட வெளியே வந்த கணேஷின் மனைவி ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.. நான் இங்கேயே வருவேன் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சி.. "இன்னும் யாரைக்கொல்ல இங்கே வந்திருக்கே? உனக்கு வெறி இன்னுமா அடங்கலே" ஆத்திரமும் அழுகையும் சேர்ந்திருந்தது ..

"நான் செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்புத்தான்.. பத்து வருஷம் இல்லே.. நூறு வருஷம் ஜெயில்லே இருந்தாலும் அது பத்தாத தண்டனைதான்."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தெருவில் சுமோவின் பிரேக் கிறீச்சிட்டது. தபதபவென்று ஆட்கள் இறங்கி ஓடிவரும் சப்தம்..

"பிடிடா அவனை..எவ்வளவு கொழுப்பிருந்தா வீடு புகுந்து ராஜா சாரைக் கொன்னுட்டு தப்பிச்சு ஓடப் பார்ப்பே?" அவர்கள்தான்.. என்னைத் துரத்தி வந்தவர்கள்தான்..

சரமாரியான அடிகள் என்மேல் விழ..

வலிக்கவில்லை

_____________________________________________________________

Oct 9, 2008

சிகரெட்டை சீக்ரட்டா புடிக்கணுமாமே!

பத்து நாளில் எல்லாரும் மறக்கப்போகிற விஷயத்துக்கு எவ்வளவுதான் கருத்து சொல்வார்கள் நம் வலைஞர்கள்? பொது இடப் புகைத் தடை என்பது தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 7 ஆண்டுகளாக அமலில் இருக்கும் ஒரு சட்டம். (யாரேனும் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தைத் தளர்த்தினார்களா என்ன?) முதல் மூன்று நாட்கள் பலத்த கெடுபிடியும், பிறகு ஒரு மாதத்துக்கு அளவான கெடுபிடியும், மேலும் சில மாதங்களுக்கு மாதக்கடைசி கெடுபிடியும் இருந்துவிட்டு அப்படியே மண்ணோடு மண்ணாய்ப் போகப்போகிற சட்டத்துக்கு எவ்வளவு வாதம், பிரதிவாதம்!

விவாதங்கள் பெருமளவு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. "இயற்கையாக வரும் பொருள் புகையிலை - அதனால் ஒரு கேடும் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் ஒரு சாரார். (அரளிவிதை, ஆமணக்கு எல்லாம் இயற்கையாக வரும் பொருட்கள்தானே?) வாகனப்புகையை விட இரண்டாம்கை புகையிலைப்புகை அதிக ஆபத்து என்கிறார்கள் இன்னொரு சாரார். (ஒரு 100 CC வாகனம், ஒரு நிமிடத்தில் சராசரியாக 2,00,000 CC அதாவது 200 லிட்டர் ஆபத்தே இல்லாத புகையை விட்டாலும் ஒரு மனிதன் விடும் 5-6 லிட்டர் புகையிலைப்புகையை விட அதிகக் கெடுதலையே விளைவிக்கும்- இது கெடுதல் பற்றிய கணக்கல்ல - அளவு பற்றிய கணக்கு).

புகைப்பழக்கத்தைக் குறைக்க முதலில் செய்ய வேண்டிய வழி விலையை அதிகப்படுத்த வேண்டியது. நான் முதல் சிகரெட் பிடித்தபோது வில்ஸ் பில்டர் 1.00 ரூ இன்று 3.50 - மூன்றரை மடங்கு மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தங்கம் ஏறத்தாழ 7 பங்கும், மான்யமில்லாத அரிசி 8 பங்கும் விலை ஏறி இருக்கிறது - ஒரு சிகரெட்டின் விலை, நியாயமாகப்பார்த்தால் இன்று 12 ரூபாய் ஆகியிருக்க வேண்டும். ஏன் ஏறவில்லை? இத்தனைக்கும் வருடா வருடம் புகையிலைப்பொருட்கள் மீது வரி ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இங்கே வைத்திருக்க வேண்டும் முதல் ஆப்பை.

அடுத்ததாக, தடை விதிக்கும் முன் பொது இடம் என்பதை நியாயமாக வரையறை செய்திருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாலே பொது இடம் என்பதில் நியாயம் இல்லை. தெருவில் நடந்துகொண்டு பிடித்தால் தப்பில்லை, வணிக வளாகத்தின் வாயில் முன் இல்லாத வரை என்கிறார்கள் - 7 அடி அகல டீக்கடை என்றொரு வணிக வளாகமும் 8 ஆம் அடியில் நகலகம் என்று அடுத்த வணிக வளாகமும் வாயில்கள் அகலத்துக்கே இருக்கும் நம் தெருக்களில் நடந்துகொந்தே இருக்கும்வரை சட்டப்படி இருப்பவன், செருப்பு கடித்தது என்று நின்றால் சட்டமீறல் செய்கிறான் என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

சிங்கப்பூரில் ஒரு நண்பர் சொன்னார்- வானத்தைப்பார் - கூரை இல்லை என்றால், புகை அனுமதிக்கப்படாத வளாகத்துக்குள் இல்லாத பட்சத்தில், (zoo, bird park, railway stations போன்ற இடங்கள்) தாராளமாகப் புகைக்கலாம். (இது 10 வருடத்துக்கு முந்திய கதை - இப்போது மாறுதல் இருந்தால் சொல்லுங்கள்) - இப்படி ஒரு தெளிவான வரையறை இல்லாத பட்சத்தில் - சிகரெட்டை விடமுடியாதவன் முதலில் குற்ற உணர்ச்சியுடனும், பிறகு பழக்கப்பட்ட விதிமீறல் மனப்பான்மையுடனும் பிறகு விதிமீறல் தன் பிறப்புரிமை என்ற உணர்ச்சியுடனும் புகைப்பான்.

கேஸ் போட்டால் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காவல்நிலையத்துக்கு வந்து 200 ரூபாய் கட்டு அல்லது இங்கே என்னிடம் 20 ரூபாய் அழுத்து என்று நோ எண்ட்ரியில் நுழைந்த விதிமீறல் செய்ய விரும்பாதவனையே சட்டப்படி நடப்பதன் சிக்கல்களை உணர்த்தி லஞ்சம் கொடுக்கவைக்கும் நமது சட்டக்காப்பாளர்களுக்குக் கிடைத்த மறைமுக ஊதிய உயர்வுதான் இந்தச் சட்டம்.

சட்டம் போடுவதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், அமலாக்க நடைமுறை சாத்தியமற்ற நேரத்தில் ஒரேயடியாக இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது எப்படிப்பட்ட விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை போன முறை இதே சட்டம் வந்தபோதே பார்த்தோம். மற்ற போதைகளை பொது இடங்களில் இருந்து எப்படிப் பாதுகாத்திருக்கிறோம்? மதுவுக்கு டாஸ்மாக் தவிர மற்ற எல்லா இடங்களிலும் விற்பனை தடை என்றவுடன் போதை என்பது டாஸ்மாக் மற்றும் சுற்றுப்புற குறைந்த பரப்பிலும் குன்றிவிடவில்லையா? பான்பராக் எல்லா பெட்டிக்கடைகளிலும் சகஜமாகவே கிடைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் அதை மறைத்தே கையாளுவதில்லையா? விற்பனையைத் தடை செய்தால் நிச்சயம் புகை குறையும் - அதே இடங்களில் மறைவாக விற்கப்பட்டாலுமே கூட.

விலையேற்றமும் இல்லை, விற்பனைத் தடையும் இல்லை என்பதால் தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய அளவு பாதிப்பு இல்லை. தெளிவற்ற அமலாக்கத் திட்டம் என்பதால் ரொம்ப நாள் ஓடப்போவதும் இல்லை. இந்த நிலையில் பொது இடப் புகைத் தடை என்பது இந்த அரசாங்கமும் எதோ செய்கிறது என்ற கண்துடைப்பன்றி வேறில்லை.

Sep 17, 2008

ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)

என் கணினி க்ராஷ் ஆகிவிட்டது. பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் பார்த்துக்கொண்டிருந்தபோது க்ராஷ் ஆனதால், சில பதிவுகளில் இருந்து ஒரு ஒரு வரி மட்டும் ஒரே ஒரு டெக்ஸ்ட் பைல் ஆகி அதை மட்டும்தான் மீட்க முடிந்தது. இந்த வரிகள் யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடித்துத் தாருங்களேன் - முழுப்பதிவையும் படித்து உய்வேன்!

உங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பதில்களை உடனுக்குடன் மட்டுறுத்த இயலாது.

1. இரட்டை டம்ளர் முறைக்கு நான் இங்கே தீர்வு கொடுத்துள்ளேன்
2. ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் முதலெழுத்துதான் வித்தியாசம்
3. ஜோதியில் சைவப்படம் போட்டால் சீட்டு கிழியும், தாவூ தீரும்
4. இவ 110,131 மேகீ 43 சரி, மத்ததெல்லாம் தப்பு. முயற்சி பண்ணுங்க.. உங்களால முடியும்.

5. இது இந்தப்பதிவுக்கு மட்டுமல்ல, தங்கமணிக்கும் எதிர்பதிவல்ல
6. என் டி ஷர்ட் டை திருடினாலும் பரவாயில்லை, டி ஷர்ட் வாசகத்தைத் திருடிவிட்டார்கள்.
7. வாரம் 30$ வைக்கலாமா 70$ வைக்கலாமா என்றுதான் குழப்பம்
8. இப்போதெல்லாம் 30 விநாடியில் நேரிசை வெண்பா எழுத முடிகிறது
9. கிளி ஜோக் தவிர வேறெதுவும் கம்பன் விழாவில் சொல்லக்கூடாது
10. காற்றை வஞ்சித்துத்தான் பறக்கவேண்டும் என்றால், எனக்கு வேண்டாம் அந்த பட்டம்
11. கும்மிடிப்பூண்டியில் வயதான ஓட்டுநராக இருந்தாலும் காலை அழுத்தினால் வண்டி நிற்கிறது.
12. சென்னை மாநகராட்சி போர்ட் - என் கைவிரல் சென்னை மாநகராட்சியில் இருக்கிறது, கால் வெளியே.

Sep 13, 2008

ஆறிப்போன விஷயங்களும் ஆறாத கழுத்தெலும்பும் (13 Sep 08)

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை. எனவே ஒருவேளை விலக நேர்ந்தாலும் "மனக்கனத்துடன் விடை பெறுகிறேன்" "போகாதே போகாதே என் பதிவா" போன்ற பதிவுகள் தேவைப்படாது என்பது திண்ணம் ஆகிவிட்டது :-)

ஊருக்குப் போனதில் பெரும்பாலும் இணையத்தின் தொடர்பில் இருந்து அறுபட்டேன். அரை மணிநேரம், கால்மணிநேரம் என்று பார்த்ததில் மின்னஞ்சல் தவிர வேறெதுவும் கவனிக்க முடியவில்லை. ஊரில் இருந்து திரும்பி வந்தும் தட்டச்ச முடியாத நிலையில் படிக்க மட்டுமே முடிந்தது.. ஏன் தட்டச்ச முடியாத சூழல்? கடைசியாகச் சொல்கிறேன்.

படித்த / பார்த்த / கேள்விப்பட்ட விஷயங்களில் என் பரிதாபத்துக்கு ஆளானவர்கள் ரஜினிகாந்த், கலைஞர் டிவி, ஞாநி, ஆற்காடு வீராசாமி!

ரஜினிகாந்த் தெளிவாகப் பேசினாலே குழப்புவார்கள், குழப்பமாகப் பேசினால்? குசேலன் அடிவாங்க வேண்டிய படம்தான் என்றாலும் மன்னிப்பு வருத்தம் என்பதைப் போட்டு வறுத்து எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை. என்னவோ ரஜினிகாந்த் மட்டுமே கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் பாலம் போலவும் அவர் தப்பாக ஒருவார்த்தை (அது கூட சொல்லவில்லை, ஊடகங்கள் பிரம்மாண்டப்படுத்திவிட்டன) சொன்னால் அடுத்த செகண்ட் பிரச்சினை வெடிக்கும் போலவும் என்னா பில்ட் அப்! இதில் செய்தி சொன்ன அடுத்த செகண்ட் க்ரூசிபை பண்ணக்காத்திருக்கும் சக நடிகர்கள், ஊடகங்கள், பதிவர்கள்!

கலைஞர் டிவி விநாயகர் சதுர்த்தியை விடுமுறை நாள் என்று சொன்னது தவறு என்று சொன்ன அனைவரும், விநாயகர் சதுர்த்தி என்று சொல்லி இருந்தாலும் எகிறிக் குதித்திருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஞாநியின் பூணூல் மீண்டும் ஆராய்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. கலைஞர் அரசைத் திட்டும்போது மட்டுமே இந்த ஆராய்ச்சி செயல்படுவது ஆச்சரியம். இதில் அங்கங்கே கேட்கும் இன்னொரு குரல்: முற்போக்குப் பாப்பானை நம்பாதே! சரிதான்.

கரெண்ட் கட்டைக் கண்டுபிடித்தது ஆற்காடு வீராசாமி என்று தினமணி கார்ட்டூன் போட்டிருக்கிறதாம். என்னவோ இதுக்கு முன்னே யாரும் கரெண்ட் கட்டே பார்க்காதது போல. அநியாயம்.

இப்போது, கழுத்தெலும்புக்கதை.

சென்னை (மாநகர எல்லைக்குள் மட்டும்) போக்குவரத்து பெரும் அளவில் சீராகிவிட்டது போலத்தான் தோன்றியது. ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட முக்கியத்தடங்களில் 6 வழிப்பாதைகள் நீளத்தை அதிகப்படுத்தினாலும் சீரான ஓட்டத்துக்கு வழி வகுக்கிறது. கத்திப்பாராவின் முடிக்கப்பட்ட பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தினேன். இந்த அளவுக்கு இந்தப்பாலத்தால் நன்மை ஏற்படும் என நினனக்கவில்லை. அருமையான ஓட்டம். நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் 6 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிவிட்டிருந்த தரையடிப்பாலம் இப்போதுதான் உபயோகத்துக்கு வரத் தொடங்கி இருக்கிறது. பல இடங்களில் குறைகள் இருக்கலாம் - ஆனால் போக்குவரத்துத் துறை நிவாரண முயற்சிகளை எடுத்து வருவதே பாராட்டத்தக்க விஷயம்.

ஆனால், மக்கள் இன்னும் போக்குவரத்து விதிகளை மதிக்கத் தயாராக இல்லை என்பதை என் விடுப்பு முடியும் தருவாயில் கண்டேன்.

கோயம்பேடு SAF விளையாட்டு வளாகத்துக்கு எதிரே ஒரு சிக்னல். நான் வரும்போது ஆரஞ்சு அணைந்து சிகப்பாகி விட்டது. சிகப்பு விழுந்தால் நிறுத்தவேண்டும் எனக் கற்ற பாடத்தில் நிறுத்தினேன். பின்னால் ஒரு டெம்போ, அட இவன் நிறுத்தவா போகிறான் என்ற எண்ணத்தில் முழுவேகத்தில் வந்து என் வண்டியின் பின்னால் இடிக்க, வண்டியை விட்டுப் பறந்தேன், கிழே விழுமுன் மூன்று சுற்றுக்கள் சுற்றியதாக சிக்னலில் இருந்த போக்குவரத்துக் காவலர் பின்னால் அறிவித்தார். எங்கே அடிபட்டது என்று தெரியும் முன்னால் நெற்றிப்பொட்டிலிருந்து ரத்தம் கசிவதை உணர்ந்தேன். ஹெல்மெட்டோடு வண்டி ஓட்டுவது பழக்கமின்மையால் திட்டிக்கொண்டே (நல்லவேளையாக) உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த ஹெல்மட்டின் தகரம் உடைந்து, அது கீறியதால்தான் நெற்றிப்பொட்டில் ரத்தம் என்பது புரிந்ததும் திகில்!

கையைக்காலை ஆட்ட முடியவில்லை. இடுப்பெலும்பில் எதோ வலி. உடலெங்கும் பட்சபாதம் பார்க்காமல் சிராய்ப்புகள். என்ன செய்வது என்று புரியாமல் முதலில் நாராயணையும் ஐகாரஸ் பிரகாஷையும் அழைத்தேன் (இவர்களைச் சந்திக்கத்தான் சென்றுகொண்டிருந்தேன்). பிறகு என் உறவினரையும் அழைத்தேன்.

போலீஸ்காரர் தெளிவாக என் மீது தவறில்லை, டெம்போ மீதுதான் தவறு என உணர்ந்து டெம்போக்காரரைப் பிடித்து வைத்துவிட்டார். டெம்போக்காரர் கண்ணில் என்னைவிட அதிகம் வலியும் பயமும். இரவு வரை என்னுடனே சுற்றியதில் அவர் பரிதாபக்கதை தெரிந்தது. கேஸ் எதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

நாராயணும் பிரகாஷும் உடனே வந்து ஆறுதல் அளித்தார்கள். காலில் ஒன்றும் ஆகவில்லை , நடக்க முடிகிறது ஆனால் இடுப்பில் உட்கார்ந்து எழும்போது மட்டும் வலி எனத் தெரிந்தது.இடது உள்ளங்கை வீங்கி விட்டது, வலது கையைச் சுற்ற முடியவில்லை.

மருத்துவமனையில் உடனடியாக எடுக்கப்பட்ட எக்ஸ் ரேக்கள் வலது கழுத்தெலும்பு உடைந்திருப்பதையும், இடது கை விரல் எலும்புகள் சில பிசகி இருப்பதையும் காட்டின. இடுப்பில் எதுவும் இல்லை.

பெரிய அடி என்று சொல்லமுடியாவிடினும், இரண்டு கைகளுமே டிஸ் ஏபிள் ஆகிவிட்டிருக்கிறது. தலைக்கு வந்தது நிச்சயமாக தலைப்பாகையோடு போனது! இனி அந்த ஹெல்மட்டையும் வண்டியையும் உபயோகிக்க முடியாது.

விபத்து நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் கழுத்தெலும்புக்கு இன்னும் 10 நாள் ஆகும் என்று சொல்கிறார்கள், கை கூடிவிட்டது, இடுப்பு சரியாகிவிட்டது.

நீதி: எவ்வளவு கஷ்டமாய் இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் போடுங்கள்.

Jul 23, 2008

India Inc - என்ன விலை அழகே!

ஒரு சீரிய திரைப்படத்திலோ நெடுந்தொடரிலோ கூடக் காணப்படாத உணர்ச்சிக் குவியல் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்தது பாரதமக்கள் செய்த பாக்கியம்!

நம்பிக்கை வாக்கெடுப்பு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பாக உருவகப்படுத்தப்பட்டதுதான் காமெடி. 541 பேரில் எத்தனை பேர் நிஜமாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள்? ஜன்மவைரி அமெரிக்கா என்ற ஸ்மரணையோடு மட்டும் மக்கள் பணி செய்யும் இடதுசாரிகள், இப்போது என்ன அவசரம், ஆறு மாதம் பொறுத்தால் எங்கள் பேனாவில் கையெழுத்துப் போடலாம் என்ற உயர்சிந்தனை கொண்ட பாஜகவும் எதிர்த்து வாக்குப்போட்டு கடமை நிறைவேற்றிய விதம் புல்லரிக்கவைத்தது!

நாட்டுமக்களின் நலனுக்காக அரைமணி நேரத்தில் ஒப்பந்தத்தின் சாதக பாதகத்தைச் சீர்தூக்கி் முடிவெடுத்த அண்ணன் அமர்சிங்கின் அறிவாற்றல் வியக்கவைத்தது. அதைவிட வேகமாக  பாதக அம்சங்களைப் புரிந்துகொண்ட மாயாவதியின் மக்கள் பற்று பிரம்மிக்க வைத்தது.

அணு - ஆட்சி என்று இருபரிமாணத்தோடே ஆரம்பித்தாலும் அணு-ஆட்சி-அம்பானி என்ற மூன்றாவது பரிமாணம் வந்தபின் தான் கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. ஓட்டுக்கு 25-30 கோடி (மந்திரி), ஓட்டுப்போடாமல் இருக்க 10 கோடி, உடம்பு சரியில்லை என லீவ் லெட்டர் கொடுக்க 5 கோடி என்று விலைப்பட்டியல் அடித்து நினைத்ததை விட அதிக வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறவைத்த அம்பானி சகோதரபாசம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கவைத்தது.

நல்ல வேளை வித்தியாசம் பெரிதாக இருக்கிறது. கொறடா உத்தரவை மீறி பதவி விலகக் காத்திருக்கும் ஏழெட்டு உறுப்பினர்கள் மட்டுமே வித்தியாசமாக இருந்திருந்தால், நம்பிக்கைத் தீர்மானத்தைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்திருக்குமே - அது தவிர்க்கப்பட்டதில் மனம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறது.

நம் மீடியாவின் பொறுப்புணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. ஜார்ஜ் பெர்னான்டஸ், பங்காரு மீதான ஸ்டிங் வீடியோக்களைக் காட்டியபின் வந்த  முதிர்ச்சியோ தெரியவில்லை - அத்வானியும் பிரகாஷ் காரத்தும் லஞ்சப்பணம் பட்டுவாடா செய்ய முயன்றதுக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னால் கூட, அதைப்பற்றிப் பேசாமல், பார்லிமெண்டுக்குள் பணக்கட்டைக் கொண்டுவந்த எம்பிக்களின்  பாதுகாப்பு மீறலை SMS ஆக ஓடவிட்டுக்கொண்டிருந்த மனமுதிர்ச்சி நெகிழச் செய்கிறது.

உணர்ச்சிக்கொந்தளிப்புகளை மீறி அணுசக்தி தேவையா இல்லையா என்ற விவாதம் பாராளுமன்றத்துக்கு வெளியேதான் நடந்தது - ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் -நாளைய ஆட்சியாளர்கள், உடன் இருந்தவர்கள் - இப்போது இல்லாதவர்கள் என்ற எந்த சக்திவாய்ந்த அமைப்பும் அணுசக்தி தேவையில்லை எனச் சொல்லவில்லை என்பதால் இப்படிப்பட்ட விவாதங்கள் Academic ஆக மட்டுமே முடியும்.

மேலும், மின்சாரம் பெற மரபுசாரா வழிமுறைகள் - அலையிலிருந்தும்  காற்றிலிருந்து மின்சாரம், எலுமிச்சையிலிருந்து பல்ப் எரியவைத்தல், வேப்பங்குச்சியிலிருந்து செல்போன் சார்ஜ் - யானைப்பசிக்கு சோளம் இருக்கும் இடத்தைக் காட்டுவது மட்டும்தான்! அதைப் பொறிக்கக்கூட இன்னும் முயற்சிகள் ஆரம்பிக்கவில்லை, பொறிந்தாலுமே தேவைக்கு எந்தப்பயனும் இருக்காது.  மரபுசார் வழிமுறைகள் எரிபொருளை இழக்க ஆரம்பித்துவிட்ட தறுவாயில் அணுசக்தி தவிர்க்கமுடியாதது. பாதுகாப்பான வழிமுறைகளை ஆராயவேண்டுமே அன்றி செர்னோபில்லையும், தவறான உதாரணமாக ஹிரோஷிமாவையும் சொல்லும் மக்கள் மின்சாரம் இன்றி இருக்கத் தயாராகவேண்டியதுதான் என்பது என் கருத்து.

ஆனால், வழிமுறைகள்?

மாயன் எழுதிய பதிவு அதிகக் கவனம் பெறாமல் போனது வருத்தமே. Frederick Forsyth வகையறா ஒற்றர் கதைகளில் அடிக்கடி வரும் ஒரு வாக்கியம் - Co incidence களை நம்பக்கூடாது! அப்படிப் பார்த்தால் சென்ற மாதம் கிடுகிடு பாய்ச்சல் காட்டி இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கவிழும் எண்ணெய் விலையும், வரலாறு காணாத "அறிவிக்கப்பட்ட" மின்வெட்டும் குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மிகச் சமீபத்தில்  நடப்பது  Coincidence  ஆக எனக்குத் தோன்றவில்லை.  அமெரிக்கா தன் நலங்களுக்காக ஒரு மெல்லிய பயமுறுத்தலைச் செய்வது முதல் முறையாகவும் இருக்காது. இந்த பயமுறுத்தல் நிச்சயமாக அரசியல்வாதிகளை இல்லாவிட்டாலும் மக்களை நோக்கி தன் கடமையைச் செய்யும்.

வேறு வழியில்லை எனச் சொல்லப்படும் அணுசக்தியை பயமுறுத்தி ஏன் உள்ளே கொண்டு வர முயற்சிக்கவேண்டும்? கருத்தொற்றுமை பெற்று, மக்கள் வாக்கைப் பெற்று நாடாள வந்து பிறகு இதைச் செய்வதுதானே நியாயமான வழியாக இருக்கமுடியும்? அந்த வழிமுறையில் நம்பிக்கை இல்லாததால் பணம் ஒரு பக்கமும் பயம் ஒரு பக்கமுமாக இரட்டைத் தாக்குதலா?

எனக்கென்னவோ நடக்கிற மொத்தக்கூத்திலும் மன்மோகன் அம்பானி அத்வானி அமர்சிங் இடதுசாரி - எல்லாருமே தோல்பாவைகளாகத் தான் தெரிகிறார்கள். சூத்திரக்கயிறு கண்ணில் படவில்லை - ஊகிப்பதும் கடினமில்லை! 271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை அந்த சூத்ரதாரிகளுக்கு இப்போது வந்திருக்கும். நிம்மதிப் பெருமூச்சும் வந்திருக்கும்.

வாழிய பாரத மணித்திரு நாடு!

Jul 14, 2008

அக்கினிக்குஞ்சு

துப்பாக்கி வெடித்தபோது நான் பெட்டியை தள்ளுவண்டிக்குள் தள்ளிக்கொண்டிருந்தேன். வெடிச்சத்தம் கேட்டதும் அனிச்சையாக கீழே கவிழ முற்பட்டபோதுகூட நான் தான் இதற்குக் காரணம் என்பது தெரியவில்லை.

அவ்வளவு குண்டான பாதுகாப்பு அதிகாரி வேகமாக ஓடிவந்தது, சந்தர்ப்பம் தெரியாமல் சிரிப்பு வந்தது. என்னை நோக்கி "கையை மேலே தூக்கு" என்றான். நான் தூக்கினேன்.

"உங்களைச் சொல்லவில்லை - பக்கத்தில் இருக்கிறானே மொட்டையன்.. அவனைச் சொன்னேன்"

மொட்டையன் கையைத் தூக்கும் முன்பே மேலும் இரண்டு அதிகாரிகள் அவனைச் சூழ்ந்து கீழே வீழ்த்தினர். அவனுக்கும் ஏன் என்று புரியவில்லை என்பது பயமும் கலவரமும் கலந்த பார்வையில் தெரிந்தது.

"என்ன ஆயிற்று?" தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.

"உங்களைத்தான் கொலை செய்ய வந்திருக்கின்றான் - அதுவே தெரியலையா?"

"என்னையா?" நம்ப முடியவில்லை. மொட்டையன் வயதான ஆள். ஒல்லியாக ஊதினால் ஒடிந்துவிடுவான் போல இருந்தான். எல்லா நிறங்களும் அள்ளித் தெளிக்கப்பட்ட சால்வையைப் போர்த்திக்கொண்டது போல ஒரு வினோதமான உடை. ஊடாவின் நவநாகரீகத்துக்கு முன் பழைய கலாசாரத்தின் எச்சம் போல இருந்தான்.

விமானம் பிடிக்க ஒரு மணிநேரமாக வரிசையில் ஊர்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரை அவனை கவனிக்கக்கூட இல்லை. ஒரு நிமிடம் முன்புதான் தள்ளுவண்டியில் இருந்து கீழே விழுந்த பெட்டியை எடுத்துக் கொடுத்தான். இந்த ஒல்லிப்பிச்சான ஆஜானுபாகுவான என்னைக் கொலை செய்ய வந்தான்?

"இல்லையே.. அவர் பெட்டியைத்தானே எடுத்துக் கொடுத்தார்!"

"உங்களைத் தொட வந்தானோ என்று நினைத்துவிட்டோம்.. இவர்களிடம் நாமெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. டேய் மொட்டை - அட்டையைக் காண்பி"

அட்டையை தன் கையிலிருந்த சாதனத்தால் வருடித் தகவலைப் படித்தான்.

"ஒழிஞ்சு போ! இவர்களுக்கெல்லாம் விமானப்பயணம் ஒன்றுதான் கேடு"

வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டார்கள்.

மொட்டையன் குனிந்து சிதறி இருந்த காகிதங்களைச் சேகரித்தான்.

"அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு.."

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எங்களுக்கு இது பழக்கமானதுதான் - நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் குருவி சுடுவதைப் போல சுட்டுப்போட்டுவிட்டு சென்றிருப்பார்கள்" பேசுகையில் மூச்சு வாங்கியது. ட வரும் இடங்களில் த போல உச்சரித்தான். மொட்டையர்களே பொதுவாக அப்படித்தான் பேசுவார்களோ இல்லை அடிபட்டி மேலுதடு வீங்கியதால் குரல் பிறழ்ந்ததோ தெரியவில்லை.

"எந்த ஊருக்குப் போகிறீர்கள்?"

"அலையில் இருந்து உலைக்கு"

என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை.மொட்டையன் பேச்சில் தெரிந்தது வெறுப்பா விரக்தியா? பாதுகாப்பு அதிகாரி சொன்னது நிஜம்தான் போல!

"நீங்கள் எங்க போகிறீர்கள்?"

"நான்..பூமாவுக்கு"

"நானும் அங்கேதான்.."

வரிசை நகர, வெளியேறல் பரிசோதனைக்கு ஊட்டாக் குடிமக்கள் வரிசையில் நுழைந்தேன். ஊடாக்காரர் வரிசை காலியாக இருந்தது. கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்புறத்தில் ஏராளமான மொட்டையர்கள் நின்றுகொண்டு தங்கள் முறைக்காகக் காத்திருந்தார்கள். ஊடாக்குதானே முன்னுரிமை!

ஒளிக்கதிர்கள் வருடி நான் எல்லா வகையிலும் சுத்தமானவன் என்று பறைசாற்றியது.

விமானத்துக்குள் நுழையக் கதவு திறந்ததும் குபீரென அடித்தது துர்நாற்றம். கை அனிச்சையாக மூக்கை மூடியது. சுவாசத்துக்கு முகமூடி போட்ட பணிப்பெண் மரியாதையாக வருந்தினாள்.

"மன்னிக்கவும்..நறுமணம் தூவப்படுகிறது.. நிமிடங்களில் சரியாகிவிடும்"

"என்ன நாற்றம் இது?"

"செய்திகளில் பார்க்கவில்லையா? புரட்சி செய்த மொட்டையர்கள் 300 பேர் இதில் திரும்பிப் போகிறார்கள்"

"அதனால் ஏன் நாற வேண்டும்?"

"அந்த உடல்கள் பின்பக்கமாக ஏற்றப்படுகின்றன"

குபீரென வாந்தி வந்தது.

"கவலைப்படாதீர்கள், உங்கள் இருக்கை முன்பக்கமாகத்தான் இருக்கிறது"

பக்கத்து இருக்கைக்கு கிழ மொட்டையன் வந்தது ஆச்சரியமாக இருந்தது. இதெப்படி நடக்கமுடியும்? ஊடாக்குடிமகனுடன் மொட்டையனா? விரிந்த என் புருவத்தைக்கவனித்த மொட்டையன், "ஊடாக்காரர்கள் உங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. வேறு வழியில்லாமல்தான் என்னை இங்கே உட்கார வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஆட்சேபித்தால் அனுப்பிவிடுவார்கள்"

"சேச்சே அதிலே என்ன? நீங்கள் இருக்கலாம் தாராளமாக..பேச்சுத்துணையாக இருக்கும்"

"இது வெற்று வார்த்தை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். "

"நான் அப்படிப்பட்டவன் இல்லை. தலைமுடியை வைத்து எடை போடாதீர்கள். மனிதனை மனிதன் கேவலமாக நடத்துவது எனக்கு ஒவ்வாதது"

கிழவனின் புருவம் உயர்ந்தது. என் "பெருந்தன்மை"யை உடனே சோதிக்க விரும்பினான் போலும். கையை நீட்டி, "என் பெயர் சூ மோ"

அனிச்சையாக "ஆத்மா" என்று கையைப் பற்றிக் குலுக்கினேன். கரங்களின் சூடு என்னைத்தாக்கியது. வெயில் தேசத்தின் விளைவு நிரந்தரமாக அவர்கள் உடலில் ஏறிவிட்டது போலும். மீன் பிடிப்பது போல மென்மையான குலுக்கல். இவன் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேனே!

"சூ மோ? நீங்கள்தான் அந்தப் பிரபல..""

"நானேதான்"

"பூமா காந்தி?" என் ஞாபகசக்தி எனக்கே வியப்பாக இருந்தது. எப்போதோ படித்த மொட்டையர் பிரசுரம்! இப்போது புரிந்தது இவருக்கு மட்டும் ஏன் சலுகை என்று.

"காந்தி யாரெனத் தெரியுமா உங்களுக்கு? ஆச்சரியமாக இருக்கிறது!"

"தெரியாது.. கேள்விப்பட்டிருக்கிறேன்.. உங்கள் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த புரட்சியாளர்.. இல்லையா? உங்களையும் உங்கள் ஆதரவாளர்கள் அப்படித்தான் கூப்பீடுவார்கள் என எங்கேயோ படித்த ஞாபகம்."

"காந்தி என்ற பெயருக்கெல்லாம் எனக்குத் தகுதி கிடையாது. 300 பிணங்களை ஏற்றிச் செல்லும் விமானத்தில் காந்தி பயணித்திருந்தால் அவரும் பிணமாகத்தான் சென்றிருப்பார். பிச்சை பெற்ற உயிருடன் என்னை மாதிரி வரமாட்டார்"

"எனக்கு இதைப்பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியாது. நானுண்டு என் வேலையுண்டு என்றிருப்பேன். இந்தக் கலவரத்தைப் பற்றியே விமான நிலையம் வருகையில்தான் படித்தேன். மொட்டையர் விவகாரங்கள் பெரும்பாலும் எங்கள் பார்வைக்கு வராது. தடை!"

"எங்கே வேலை செய்கிறீர்கள்?"

"விவசாய ஆராய்ச்சி மண்டலத்தில் விஞ்ஞானியாக இருக்கிறேன். இப்போதும் நெல் விளைவிக்க ஏற்ற மண்ணைத் தேடித்தான் உங்கள் ஊருக்கு வருகிறேன்"

"மறுபடியும் இன்னொரு வகை மண்! இதைத் தோண்டுவதில் எத்தனை மொட்டையர்களைப் பலி கொடுக்க வேண்டுமோ!" சூ மோ இதை என்னிடத்தில் சொல்லவில்லை. தனக்குத் தானே விரக்தியாகச் சொல்லிக்கொண்டார். வெறித்த பார்வை பயமூட்டியது. எப்படி பேச்சைத் தொடர்வது என்று தெரியவில்லை. தொடரத்தான் வேண்டுமா என்றும் தோன்றியது. எனக்கு எதற்கு இதெல்லாம்.

"வெயில் பார்த்திருக்கிறீர்களா? தாங்குவீர்களா?" இதை என்னைப்பார்த்துதான் கேட்டார்.

"தாங்குவேன் என்றுதான் நினைக்கிறேன். ஒரு வேலையாக நார்வே சென்றிருந்தேன். அங்கே 55 டிகிரி வெப்பம். அதைத் தாங்கிவிட்டேன்"

"55 டிகிரி, எங்களுக்கு குளிர். 80-90 டிகிரி சுலபமாகப் போகும். சிறப்பாடை அணியாமல் வெளியே சென்றுவிடாதீர்கள்"

"அவ்வளவு வெப்பமா? தண்ணீரின் கொதிநிலைக்கு மிக அருகில் இருக்குமே!"

"ஆமாம். நாங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன் முடியோடு இருந்தவர்கள்தான். இந்த வெப்பம்தான் எங்களை மொட்டையர்களாக்கியது. மொட்டை அடிப்பது என்பதற்கு கொள்ளை அடிப்பது என்று ஒரு அர்த்தமும் உண்டு. எங்களை மொட்டை அடித்தது வெப்பம். கொள்ளை அடித்தது நீங்கள்!" எதிர்பாராமல் வந்த குற்றச்சாட்டில் திகைத்தேன்.

"நானா?"

"நீங்கள் இல்லை - உங்கள் ஊரின் அரசாங்கம். திட்டமிட்ட சுரண்டல்."

"உணவும் வெயில் தாங்க சிறப்பாடையும் அனைத்து மொட்டையர்களுக்கும் இலவசமாக அளிக்கிறதே ஊட்டா அரசாங்கம்?"

"நீங்கள் உங்கள் வரலாற்று நூலை நன்றாகவே படித்திருக்கிறீர்கள்! நாய்க்கு எலும்புத்துண்டு போடுவதைக்கூட காருண்யம் என்று ஒப்புக்கொள்ளலாம். செடிக்கு உரம் போடுவது கருணையா? மொட்டையர்கள் செத்தால் அவர்களுக்கு யார் வேலை செய்வார்கள்? இவை இல்லாவிடில் சாவு உறுதி அல்லவா? "

"இருந்தாலும் உதவிதானே செய்கிறார்கள்?"

"உதவி! உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன், உங்கள் ஊடாவில் மனிதர்களே கிடையாது. புவி வெப்பம் ஏறப்போவது தெரிந்து, பூமா போன்ற பகுதிகள் கொதிக்கப்போவது தெரிந்து பனிப்பிரதேசங்களாக இருந்த இடங்களுக்கு ஓடிவந்தவர்கள்தான் இன்றைய ஊடாக்காரர்கள். இன்று? உங்கள் ஊட்டத்தையும் எங்கள் வாட்டத்தையும் பாருங்கள்! யார் கண்டது, நம் இருவரின் கொள்ளுப்பாட்டன்களும் ஒரே ஆளாகக்கூட இருக்கலாம்."

"அப்புறம் ஏன் இந்தப் பிரிவினை?"

"தங்கள் வளங்களை பூமாக்காரர்களோடு பங்குபோட விரும்பவில்லை ஊடா. பூமாவின் மண் வேண்டும் விவசாயத்துக்கு. அந்த மக்கள் வேண்டும் மண்ணை இடம் பெயர்க்க. விவசாய ஆராய்ச்சிதானே செய்கிறீர்கள், மணல் எடுப்பது எப்படிப்பட்ட வேலை தெரியுமா உங்களுக்கு? தினம் பல உயிர்களையும் கப்பமாக எடுத்துக்கொள்ளும் சுரங்கங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பெயர்க்கப்படும் மணலுக்கு என்ன விலை கொடுக்கப்படுகிறது தெரியுமா? உணவும் ஆடையும்! இந்த மணல் இல்லையென்றால் உங்களுக்கு ஏது உணவு? எங்கள் பிரதேச வளங்களை உறிஞ்சியதும் ஊடாதான். இப்போது உதவி செய்யும் சாக்கில் அடிமைப்படுத்துவதும் ஊடாதான்."

"அப்படி இது அடிமை வாழ்வாக இருந்தால் ஏன் ஊடாவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டும்? முடியாது என்று சொல்லிவிடலாமே?"

"பூமாவில் மக்கள் இருக்கிறார்கள், நிலம் இருக்கிறது. காட்டுவிஷச்செடிகள் தவிர வேறு ஒரு செடி தழைப்பதில்லை. வயிறு ஒன்று இருக்கிறதே. உணவைக்காட்டித் தான் அடிமை ஆக்கினார்கள். "

"என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? வெப்பம் அதிகம்தான்.. அதற்காக விவசாயம் செய்ய முடியாமல் போய்விடுமா என்ன? கடல்நீர் இருக்கிறதல்லவா?"

மேலே பேச முடியவில்லை. உணவுத்தட்டுகளை பணிப்பெண் அடுக்க ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு தனி உணவு இருக்கிறது." சூ மோவைக் கண்கொண்டு என்னால் பார்க்க முடியவில்லை. ஏன் அவரும் இவ்வுணவை உண்டால் என்ன? திரும்பிவிட்ட பணிப்பெண்ணை அழைக்க முனைந்தவனை சூ மோ தடுத்தார்.

"நான் என் மக்களுடன் பின் கட்டுக்குச் சென்று சாப்பிட்டு வருகிறேன். "

உணவு அருமையாக இருந்தது - உள்ளே செல்லவில்லை. இன்னும் முழுமையாக அடங்காத நாற்றம், சூ மோ சொன்ன கதை, உணவுக்காக அடிமையான - பின்கட்டில் சடலமாக உள்ள பூமாக்கார மொட்டையர்கள்.. தீண்டத்தகாதவர்களாக்கிவிட்ட ஊடா அரசாங்கம்! குற்ற உணர்ச்சியைத் தூண்டிய உணவு. ரத்தம் தோய்ந்த உணவு.. சாப்பிட மனம் வரவில்லை.

சூ மோ திரும்பி வந்தார். முகத்தில் மேலும் கவலை ரேகைகள். "310 ஆகிவிட்டது"

"10 பேரா? விமானத்துக்குள்ளேயா?"

"ஆமாம். பயணம் முடிவதற்குள் இன்னும் 20-30 ஆவது ஏறும். விஷவாயு வேலையைக் காட்ட நேரம் ஆகலாம். ஆனால் நிச்சயம் காட்டும்."

"விஷவாயு?"

"ஆமாம்! எவ்வளவு பெரிய தவறு செய்தார்கள் இவர்கள்! ஊடாவின் தெருவில் படுத்துத் தூங்கும் அளவுக்கு என்ன தைரியம்!"

"தூங்கினதற்கா இந்த தண்டனை?"

"தூங்கினதற்கு மட்டும் இல்லை.. மணல் கொண்டு வந்த கப்பலோடு வந்தவர்கள் ஊருக்குள்ளே வந்ததே தவறு.. ஒரு வேளை ஊடாக்காரர் யாரையாவது தொட்டுவிட்டால்? மேலும், தூக்கம் - அதுவும் குத்தும் வெப்பம் இல்லாத ஊடாவில் தூக்கம் ஒரு ஆடம்பரம். அதற்குப் பழகியவன் கேள்வி கேட்பான். கேள்வி கேட்பவன் புரட்சி செய்வான். ஊடா அரசாங்கத்துக்கு எதையும் வளரவிட்டுப் பழக்கமில்லை. ஆரம்பத்திலேயே ஒழிப்பது எல்லா வகையிலும் சௌகரியம்."

"தூங்குபவர்கள் மீதா வாயுவைப் பிரயோகித்தார்கள்?" இவர் எப்படி அமைதியாக இருக்கிறார்? எத்தனை பிணங்கள் - அதுவும் உப்புப்பெறாத காரணத்துக்கு!

"அதைக் கேள்வி கேட்கத்தான் வந்தேன் நான். பிணங்களை எடுத்துச் சென்றால்தான் பேச்சுவார்த்தை என்றார்கள்.. பட்டாலே நோய் தொற்றி விடும் என்ற தேவையில்லாத பயம்! திரும்ப வேண்டியதாகிவிட்டது"

தயங்கித் தயங்கிக் கேட்டேன் "நோய் தொற்றிவிடுமா என்ன?"

"நீங்கள் ஒரு விஞ்ஞானி! உங்களுக்கும் இந்த நம்பிக்கையைத் தொற்ற வைத்துவிட்டார்கள்!" வரட்டுச் சிரிப்பு.

அடங்கியிருந்த துர்நாற்றம் மீண்டும் எழுந்து சூழலைச் சொன்னது. அவரவர் சிந்தனையில் அமைதியானோம். நீண்ட நேரம் கழித்து,

"உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன். அதற்குள் பேச்சு மாறிவிட்டது"

"கேளுங்களேன்"

"பூமாவில் விவசாயத்தை யாரும் ஆராய்ச்சி செய்வதில்லையா? ஏன் செடி தழைப்பதில்லை என்று யாரேனும் முயற்சித்துப்பார்க்கவில்லையா?"

"ஏன் செய்யாமல்? தாராளமாகச் செய்திருக்கிறோம்.. ஆனால் படிப்பும் விஞ்ஞானமும் தடைசெய்யப்பட்டிருக்கிறதே! "

"எனக்குத் தெரிந்த அளவில் பூமாவில் தாராளமாக விவசாயம் செய்ய முடியும். இங்கிருந்து வரும் மண்ணில்தானே ஊடாவில் விவசாயம் நடக்கிறது? என்ன கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்! நான் கூடச்செய்ய முடியும்"

"சொல்வது சுலபம் ஆத்மா. நீங்கள் எங்களுக்கு உதவினால் நீங்களும் ஊடாவுக்குத் தீண்டத் தகாதவராகி விடுவீர்கள். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாதீர்கள்" சூ மா வெளிப்படையாக வேண்டாம் என்றாலும் அவர் கண்களில் அழைப்பு இருந்தது. உணர்ச்சியற்று இருந்த அவர் குரலில் இரைஞ்சல் தெரிந்தது.

இருந்தோம் உண்டோம் செத்தோம் என்பதும் வாழ்க்கையா? அரசாங்கத்தின் பொம்மலாட்டப் பொம்மையாக வாழ்ந்தது போதும். விமானத்தில் நாங்கள் சந்தித்தது எப்படிப்பட்ட யதேச்சையாக இருந்தாலும் விளைவுகளை வருங்காலம் பேசவேண்டும். வெப்பம்தானே பிரச்சினை? சமாளிக்கலாம். நான் முடிவெடுத்துவிட்டேன்.

விமானம் தரை இறங்கியதைக் குலுக்கல் சொன்னது.

குடியேறல் பரிசோதனைக்குள் செல்லுமுன் சூ மோவிடம் ஐந்து விரல்களைக் காட்டினேன். இன்னும் ஐந்து நாள் என் வேலை முடிய.

பாதுகாப்பு அதிகாரி நட்பாகப் புன்னகைத்தான், மொட்டை இல்லை. ஊடாக்காரன்தான்.

"எத்தனைநாள் பயணம்?"

"ஒரு வாரம்"

"மொட்டையர்களோடு பழகாதீர்கள் - ஊடாவிற்கு எல்லா இடமும் கண்கள்"

"இந்த மருந்தைக் குடியுங்கள்.. வெயிலுக்கு நல்லது" முத்திரை குத்திக்கொண்டே வலதுபுறம் இருந்த குப்பியைக் காட்டினான். மருந்து கசந்து தலை சுற்றியது. ஒரே நிமிடம்தான். சரியாகி விட்டது.

வெளியே விநோதமாக சில மொட்டையர்கள் அழுது கொண்டிருந்தார்கள். "சூ மோ.. இப்படி ஒரு நிலைமை நமக்கு மட்டும் ஏன்?"

சூ மோ என்று அழைக்கப்பட்ட மொட்டையன் வயதான ஆள். ஒல்லியாக ஊதினால் ஒடிந்துவிடுவான் போல இருந்தான். எல்லா நிறங்களும் அள்ளித் தெளிக்கப்பட்ட சால்வையைப் போர்த்திக்கொண்டது போல ஒரு வினோதமான உடை. ஊடாவின் நவநாகரீகத்துக்கு முன் பழைய கலாசாரத்தின் எச்சம் போல இருந்தான்.

இவனும் இதே விமானத்தில்தான் வந்திருப்பான் போல!
******************************
சிறில் அலெக்ஸின் அறிவியல் புனைகதை போட்டிக்காக எழுதப்பட்டது. கருவாக்கத்திலிருந்து உருவாக்கம் வரை ஆலோசனை கொடுத்த நண்பர் குழாத்துக்கு நன்றி.

 

blogger templates | Make Money Online