Oct 9, 2008

சிகரெட்டை சீக்ரட்டா புடிக்கணுமாமே!

பத்து நாளில் எல்லாரும் மறக்கப்போகிற விஷயத்துக்கு எவ்வளவுதான் கருத்து சொல்வார்கள் நம் வலைஞர்கள்? பொது இடப் புகைத் தடை என்பது தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 7 ஆண்டுகளாக அமலில் இருக்கும் ஒரு சட்டம். (யாரேனும் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தைத் தளர்த்தினார்களா என்ன?) முதல் மூன்று நாட்கள் பலத்த கெடுபிடியும், பிறகு ஒரு மாதத்துக்கு அளவான கெடுபிடியும், மேலும் சில மாதங்களுக்கு மாதக்கடைசி கெடுபிடியும் இருந்துவிட்டு அப்படியே மண்ணோடு மண்ணாய்ப் போகப்போகிற சட்டத்துக்கு எவ்வளவு வாதம், பிரதிவாதம்!

விவாதங்கள் பெருமளவு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. "இயற்கையாக வரும் பொருள் புகையிலை - அதனால் ஒரு கேடும் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் ஒரு சாரார். (அரளிவிதை, ஆமணக்கு எல்லாம் இயற்கையாக வரும் பொருட்கள்தானே?) வாகனப்புகையை விட இரண்டாம்கை புகையிலைப்புகை அதிக ஆபத்து என்கிறார்கள் இன்னொரு சாரார். (ஒரு 100 CC வாகனம், ஒரு நிமிடத்தில் சராசரியாக 2,00,000 CC அதாவது 200 லிட்டர் ஆபத்தே இல்லாத புகையை விட்டாலும் ஒரு மனிதன் விடும் 5-6 லிட்டர் புகையிலைப்புகையை விட அதிகக் கெடுதலையே விளைவிக்கும்- இது கெடுதல் பற்றிய கணக்கல்ல - அளவு பற்றிய கணக்கு).

புகைப்பழக்கத்தைக் குறைக்க முதலில் செய்ய வேண்டிய வழி விலையை அதிகப்படுத்த வேண்டியது. நான் முதல் சிகரெட் பிடித்தபோது வில்ஸ் பில்டர் 1.00 ரூ இன்று 3.50 - மூன்றரை மடங்கு மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தங்கம் ஏறத்தாழ 7 பங்கும், மான்யமில்லாத அரிசி 8 பங்கும் விலை ஏறி இருக்கிறது - ஒரு சிகரெட்டின் விலை, நியாயமாகப்பார்த்தால் இன்று 12 ரூபாய் ஆகியிருக்க வேண்டும். ஏன் ஏறவில்லை? இத்தனைக்கும் வருடா வருடம் புகையிலைப்பொருட்கள் மீது வரி ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இங்கே வைத்திருக்க வேண்டும் முதல் ஆப்பை.

அடுத்ததாக, தடை விதிக்கும் முன் பொது இடம் என்பதை நியாயமாக வரையறை செய்திருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாலே பொது இடம் என்பதில் நியாயம் இல்லை. தெருவில் நடந்துகொண்டு பிடித்தால் தப்பில்லை, வணிக வளாகத்தின் வாயில் முன் இல்லாத வரை என்கிறார்கள் - 7 அடி அகல டீக்கடை என்றொரு வணிக வளாகமும் 8 ஆம் அடியில் நகலகம் என்று அடுத்த வணிக வளாகமும் வாயில்கள் அகலத்துக்கே இருக்கும் நம் தெருக்களில் நடந்துகொந்தே இருக்கும்வரை சட்டப்படி இருப்பவன், செருப்பு கடித்தது என்று நின்றால் சட்டமீறல் செய்கிறான் என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

சிங்கப்பூரில் ஒரு நண்பர் சொன்னார்- வானத்தைப்பார் - கூரை இல்லை என்றால், புகை அனுமதிக்கப்படாத வளாகத்துக்குள் இல்லாத பட்சத்தில், (zoo, bird park, railway stations போன்ற இடங்கள்) தாராளமாகப் புகைக்கலாம். (இது 10 வருடத்துக்கு முந்திய கதை - இப்போது மாறுதல் இருந்தால் சொல்லுங்கள்) - இப்படி ஒரு தெளிவான வரையறை இல்லாத பட்சத்தில் - சிகரெட்டை விடமுடியாதவன் முதலில் குற்ற உணர்ச்சியுடனும், பிறகு பழக்கப்பட்ட விதிமீறல் மனப்பான்மையுடனும் பிறகு விதிமீறல் தன் பிறப்புரிமை என்ற உணர்ச்சியுடனும் புகைப்பான்.

கேஸ் போட்டால் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காவல்நிலையத்துக்கு வந்து 200 ரூபாய் கட்டு அல்லது இங்கே என்னிடம் 20 ரூபாய் அழுத்து என்று நோ எண்ட்ரியில் நுழைந்த விதிமீறல் செய்ய விரும்பாதவனையே சட்டப்படி நடப்பதன் சிக்கல்களை உணர்த்தி லஞ்சம் கொடுக்கவைக்கும் நமது சட்டக்காப்பாளர்களுக்குக் கிடைத்த மறைமுக ஊதிய உயர்வுதான் இந்தச் சட்டம்.

சட்டம் போடுவதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், அமலாக்க நடைமுறை சாத்தியமற்ற நேரத்தில் ஒரேயடியாக இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது எப்படிப்பட்ட விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை போன முறை இதே சட்டம் வந்தபோதே பார்த்தோம். மற்ற போதைகளை பொது இடங்களில் இருந்து எப்படிப் பாதுகாத்திருக்கிறோம்? மதுவுக்கு டாஸ்மாக் தவிர மற்ற எல்லா இடங்களிலும் விற்பனை தடை என்றவுடன் போதை என்பது டாஸ்மாக் மற்றும் சுற்றுப்புற குறைந்த பரப்பிலும் குன்றிவிடவில்லையா? பான்பராக் எல்லா பெட்டிக்கடைகளிலும் சகஜமாகவே கிடைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் அதை மறைத்தே கையாளுவதில்லையா? விற்பனையைத் தடை செய்தால் நிச்சயம் புகை குறையும் - அதே இடங்களில் மறைவாக விற்கப்பட்டாலுமே கூட.

விலையேற்றமும் இல்லை, விற்பனைத் தடையும் இல்லை என்பதால் தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய அளவு பாதிப்பு இல்லை. தெளிவற்ற அமலாக்கத் திட்டம் என்பதால் ரொம்ப நாள் ஓடப்போவதும் இல்லை. இந்த நிலையில் பொது இடப் புகைத் தடை என்பது இந்த அரசாங்கமும் எதோ செய்கிறது என்ற கண்துடைப்பன்றி வேறில்லை.

29 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் said...

சிங்கையை பற்றி சொல்கிறேன்.. இன்னும் அந்த ஹேங்க் ஓவர் போகவில்லை..:-)
ரயில் நிலையத்தில் புகை பிடிக்கக்கூடாது.
பஸ் நிலையத்தில் இரண்டு பேருக்கு மேல் இருந்தால் பிடிக்கக்கூடாது.
குளிர் வசதி செய்யப்பட்ட இடங்களில் இந்த தடை உண்டு.
சட்ட திட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தா வரையில் இந்த மாதிரி சட்டங்கள் தெண்டமே.
ஆமாம்,இங்கு வெற்றிலை விற்பவர்களுக்கு 5000 திராம் வரை பைனாமே!! முடியுமா?எச்சில் துப்புவர்களுக்கு 500 திராமாம்.

Anonymous said...

மோகினிகள் கழகம் இந்தப் பதிவை வழி மொழிகிறது!

rapp said...

me the first

Anonymous said...

நெம்ப நாளா ஆளையே காணோம்?
நல்லா இருக்கீங்களா?

Anonymous said...

நானும் வந்துட்டனே!

Sridhar V said...

//நான் முதல் சிகரெட் பிடித்தபோது வில்ஸ் பில்டர் 1.00 ரூ இன்று 3.50//

நீங்க ரொம்ப லேட்டா ஆரம்பிச்சீங்கப் போல. நாங்க எல்லாம் ஸ்கூல்லேயே ஆரம்பிச்சிட்டோம்ல. அப்ப பில்ட கோல்ட் பிளேக் 40 பைசா. இப்ப நிச்சயம் 4 ரூவா இருக்கும். பெட்ரோல் 20 ரூபாயோ என்னவோ. இப்ப 60 ரூபா பக்கம் வருது.

நினைவு தெரிஞ்ச நாள்ளேந்த் ஒவ்வொரு பட்ஜெட் போதும் சிகரெட் வரி ஏத்ததான் செய்யுறாங்க.

சட்டம் என்பது ஒரு கருவிதானே. இப்ப மக்களுக்கு Green Energy, Green Air பத்தின விழிப்புணர்வு நிறையவே வந்திருக்கு. கண்டிப்பாக இது ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்கும்.

என்ன பீடி பிடிக்கும் அடித்தட்டு மக்களுக்கு சுற்று சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். நமக்கு இருக்கிற ஒரே ஸ்ட்ரெஸ் பஸ்டரும் இல்லாம போயிடுதேன்னு வருத்தம் வரலாம். அதை ஹேண்டில் பண்ணுவது கஷ்டம்தான்.

இந்த விசயத்தில் என்னை அதிகம் கவர்ந்தவர் ரஜினிகாந்த்தான். சினிமாவில் சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்ததும் உடனடியாக அதை ஏற்று சந்திரமுகி படத்திலிருந்து அதை கடைபிடித்து வருவது மிகவும் பாராட்டுகுரியது.

rapp said...

// ஒரு தெளிவான வரையறை இல்லாத பட்சத்தில் - சிகரெட்டை விடமுடியாதவன் முதலில் குற்ற உணர்ச்சியுடனும், பிறகு பழக்கப்பட்ட விதிமீறல் மனப்பான்மையுடனும் பிறகு விதிமீறல் தன் பிறப்புரிமை என்ற உணர்ச்சியுடனும் புகைப்பான்//

ரொம்ப கரெக்டா சொல்லிருக்கீங்க.

rapp said...

உலகத்தில் எங்கயும் நடக்காத அநியாயம்னெல்லாம் காமடிப் பண்றாங்க. இது ஏற்கனவே பல நாட்டிலும் நிஜமாகவே நடைமுறையில் இருக்கும் சட்டம்தானே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நான் அந்த bio product உதாரணத்தை, பெட்ரோல் / டீசல் போன்றவற்றுடன் இணைத்தே எழுதியிருந்தேன். அதாவது இரண்டினாலும் வெளியாகும் புகைபற்றிய ஒப்பீடு அது. சிலர் கள்ளிப்பாலையும், பாம்பு விஷத்தையும் bio product தானே எனச் சொன்னால் என்ன செய்ய :((

இச்சட்டம் அமல்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதல்ல. அது நிச்சயம் முடியாது என்பதும் தெரியும்.

பான் பராக் தடைச் சட்டம் என்ன ஆனது? பெட்டிக்கடைக்காரன் முறைத்துக் கொண்டாலோ அல்லது சாப்பிட்ட பொருளுக்குக் காசு கேட்டாலோ அவன்மீது போடப்படுகிறது. அதுவே இச்சட்டத்திலும் நிகழும்.

ஆயில்யன் said...

//விலையேற்றமும் இல்லை, விற்பனைத் தடையும் இல்லை என்பதால் தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய அளவு பாதிப்பு இல்லை. தெளிவற்ற அமலாக்கத் திட்டம் என்பதால் ரொம்ப நாள் ஓடப்போவதும் இல்லை. இந்த நிலையில் பொது இடப் புகைத் தடை என்பது இந்த அரசாங்கமும் எதோ செய்கிறது என்ற கண்துடைப்பன்றி வேறில்லை.//

சரிதான்!

நிச்சயம் இப்படித்தான் ஆகியிருக்கிறது,ஆகப்போகிறது :(

மங்களூர் சிவா said...

//
"சிகரெட்டை சீக்ரட்டா புடிக்கணுமாமே!"
//

;))))))

கோவி.கண்ணன் said...

//சிங்கப்பூரில் ஒரு நண்பர் சொன்னார்- வானத்தைப்பார் - கூரை இல்லை என்றால், புகை அனுமதிக்கப்படாத வளாகத்துக்குள் இல்லாத பட்சத்தில், (zoo, bird park, railway stations போன்ற இடங்கள்) தாராளமாகப் புகைக்கலாம். (இது 10 வருடத்துக்கு முந்திய கதை - இப்போது மாறுதல் இருந்தால் சொல்லுங்கள்) - இப்படி ஒரு தெளிவான வரையறை இல்லாத பட்சத்தில் - சிகரெட்டை விடமுடியாதவன் முதலில் குற்ற உணர்ச்சியுடனும், பிறகு பழக்கப்பட்ட விதிமீறல் மனப்பான்மையுடனும் பிறகு விதிமீறல் தன் பிறப்புரிமை என்ற உணர்ச்சியுடனும் புகைப்பான்.
//

இப்போ சிங்கையில் Food Court களில் Smoking Zone வைத்திருக்கிறார்கள். அதைத் தவிர மற்ற மேசைகளில் அனுமதி இல்லை.

குளிர்சாதன BAR களில் புகைக்கு தடைவிதித்தாகிவிட்டது.

சரவணகுமரன் said...

நான் சிகரெட் விலை ரொம்ப ஏத்திடாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். இல்லையா? அப்ப, இன்னும் கூட்டலாம். ஆனா, அப்பவும் ஒரு கூட்டம், ஏழைங்க வயத்துல அடிக்குறீங்க'ன்னு ஒப்பாரி வைப்பாங்க. கலைஞர்கிட்ட மானியம் கொடுக்க சொல்லுவாங்க...

பினாத்தல் சுரேஷ் said...

வடுவூர் குமார்,

சட்டத் தெளிவையும் அமலாக்கும் சாத்தியத்தையும் பற்றித்தான் ஒப்பிடுகிறேன். சிங்கப்பூர், துபாய் போன்ற சிறிய இடங்களில் உள்ள சாத்தியம் இந்தியா போன்ற பெரும் நாட்டில் வேறு வழியாக அணுகப்படவேண்டியது,

இங்கே வெற்றிலை இறக்குமதிதான் செய்யப்படுகிறது என்பதால், விற்பனைத்தடை என்பது இறக்குமதித்தடையுடன் சேர்ந்தே வருவதால் அமலாக்கல் சாத்தியமே. எச்சில் துப்புவதை நிச்சயமாக கண்டிப்பாக அமலாக்க முடியாது!

வாங்க மோகினிங்களா! எப்படி இருக்கீங்க?

ராப்.. யூ த தேர்டு அண்ட் ஃபிப்த் :-)

பினாத்தல் சுரேஷ் said...

குட்டிச்சாத்தான்களா, கொள்ளிவாய்ப்பிசாசுங்களா.. வாங்க.. எங்க போயிருந்தீங்க இவ்ளோ நாள்!

ஸ்ரீதர்,

//கண்டிப்பாக இது ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்கும்// அதாவது, என்போர்ஸ் செய்யப்பட்டால்!

//உடனடியாக அதை ஏற்று சந்திரமுகி படத்திலிருந்து// பொட்டி காக்கா போச்சுன்னா நீங்களா வருவீங்க ஹெல்புக்கு? ;-)

ராப்,

நன்றி. உலகத்தில் எங்கும் இல்லாதது அல்ல - ஆனால் இங்கே வேறுவிதமான தடைகள் - மனத்தடைகள் உள்பட இருப்பதுதான் வித்தியாசம்.

லக்கிலுக் said...

//அப்ப பில்ட கோல்ட் பிளேக் 40 பைசா.//

ஸ்ரீதர் தாத்தா உங்களுக்கு வயசு ஒரு அறுவது இருக்குமா? :-)

பினாத்தல் சுரேஷ் said...

ஜ்யோவ்ராம் சுந்தர்
//அதாவது இரண்டினாலும் வெளியாகும் புகைபற்றிய ஒப்பீடு அது.// நிச்சயமாக. கெடுதலை மட்டுமே எடுத்துக்கொண்டால்கூட வாகனப்புகையை விட சிகரெட் புகை அதிகத் தீங்கு என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. கார்பன் மோனாக்ஸைடும், நைட்ரஸ் ஆக்சைடுகளும் நிச்சயம் கெடுதல்தான். அளவு இன்னொரு விவகாரம்.

//கொண்டாலோ அல்லது சாப்பிட்ட பொருளுக்குக் காசு கேட்டாலோ அவன்மீது போடப்படுகிறது.// இதுவும் நடக்கும்.

புகை மீதான தடைக்கு நான் எதிர்ப்பாளன் அல்ல. ஆனால் ஒரு ரோட் மேப்புடன், தெளிவான ஒரு திட்டத்துடன் செயல்படுத்தவேண்டியதை ஒரு ஓவர்நைட் சட்டத்தின் மூலம் செயல்படுத்த முடியுமா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தச்சட்டம் என்ன புதிதா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆயில்யன்.

நன்றி மங்களூர் சிவா.

கோவி கண்ணன், நன்றி.

//இப்போ சிங்கையில் Food Court களில் Smoking Zone வைத்திருக்கிறார்கள்.// சிங்கப்பூரைப் பொறுத்தவரை, அது ஒரு Fine நாடு என்ற எண்ணத்தை முதலிலேயே விதைத்து விடுகிறார்கள். விமான நிலையத்தில் இங்கு மட்டும்தான் பிடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்கும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும், பேருந்து நிலையத்தில் சகாக்களுடன் தன் இடம் என்ற ஸ்வாதீனத்துடன் புகைக்கும் மக்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்?

பினாத்தல் சுரேஷ் said...

சரவணகுமரன்,

நன்றி. //இன்னும் கூட்டலாம். ஆனா, அப்பவும் ஒரு கூட்டம், ஏழைங்க வயத்துல அடிக்குறீங்க'ன்னு ஒப்பாரி வைப்பாங்க.// அடடா.. பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னொரு இலவசம் ஸ்டாக் ஆகுதே!

முரளிகண்ணன் said...

நல்ல அலசல்.
திருடனாய் பார்த்து பாடல்தான் நினைவுக்கு வந்தது

இலவசக்கொத்தனார் said...

சிகரெட் புகையில் இருக்கும் நஞ்சின் அளவு வாகனப் புகையில் இல்லையாமே. இதைப் பத்தின தரவு எதாவது இருக்கா? (கேஆரெஸ் இல்லைன்னா யாரு வேணா தரவு கேட்கலாமாமே!)

அப்புறம் பதிவின் அடிநாதம் இதெல்லாம் ஒரு ரூலா என்று கேலி பேசுவது போல் இருக்கிறதே!! :))

யோசிப்பவர் said...

//பத்து நாளில் எல்லாரும் மறக்கப்போகிற விஷயத்துக்கு எவ்வளவுதான் கருத்து சொல்வார்கள் நம் வலைஞர்கள்?//
அப்புறம் எதற்கு இவ்வளவு பெரிய அலசல் பதிவு பெனாத்தலாரே?!;-)

//அப்புறம் பதிவின் அடிநாதம் இதெல்லாம் ஒரு ரூலா என்று கேலி பேசுவது போல் இருக்கிறதே!! :))
//
கொத்ஸ், பின்னே என்ன? இதெல்லாம் ஒரு ரூலா?!;-)

பினாத்தல் சுரேஷ் said...

லக்கிலுக்.. நேரடியா பின்னூட்டத்துக்கு கமெண்டா? பதிவுக்கு?

ஆமாம் முரளி கண்ணன். ஆனா திருடறதுக்கான வாய்ப்புகளை ரொம்பக் குறைச்சா திருடறவன் குறைவான் இல்லையா? திருடக்கூடாதுன்னு சட்டம் மட்டும் போடறதை விட அதுக்கு இன்னும் கொஞ்சம் எபக்ட் இருக்கும் இல்லையா?

கொத்ஸ்

//இதைப் பத்தின தரவு எதாவது இருக்கா?// என்கிட்டே இல்லை. ஒப்பிடல்னாலும் எப்படிப்பட்ட ஒப்பிடல் பண்ணனும்? கிரீன்ஹவுஸ் வாயுகள் படியா, டாக்ஸிக் அளவை வைத்தா, வாசிபரஸ் அளவை வைத்தா.. கன்பூசிங்.. வெறும் அளவுன்னா வாகனம்தான் அதிகம், அதை நிரூபிக்கலாம்.

//அப்புறம் பதிவின் அடிநாதம் இதெல்லாம் ஒரு ரூலா என்று கேலி பேசுவது போல் இருக்கிறதே!! :))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

யோசிப்பவர்,
//அப்புறம் எதற்கு இவ்வளவு பெரிய அலசல் பதிவு பெனாத்தலாரே?!;-)//
பதிவு போட்டு ரொம்ப நாளாச்சுன்றதுனாலதான் :-)

ச.சங்கர் said...

இந்தப் பதிவு ஹாயா நெனைச்ச எடத்துல நெனைச்ச மாதிரி தம்மடிக்க முடியாம (வீட்டுல தவிர-ஏன்னா அங்க பொட்டிய ராவிடுவாங்கல்ல)நம்ம உரிமைல?!!! கை வச்சுட்டானுவளே அப்படீன்னு கடுப்புல வந்த பதிவுதான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. :)

இப்படிக்கு ஒரு முன்னாள் "தம்" பார்ட்டி.

லக்கிலுக் said...

//லக்கிலுக்.. நேரடியா பின்னூட்டத்துக்கு கமெண்டா? பதிவுக்கு?//

அட்சரம் பிசகாமல் பதிவை ஒப்புக்கொண்டேன் என்று அர்த்தம்.

புகைக்கு தடை தவறில்லை. இப்போது எடுத்துக் கொண்டு வந்திருப்பது போல அவசரக்கோலத்தில் தடை கொண்டுவருவது தவறு என்று சொல்கிறீர்கள். அதை அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.

Sridhar V said...

லக்கி,

//அப்ப பில்ட கோல்ட் பிளேக் 40 பைசா.//

ஸ்ரீதர் தாத்தா உங்களுக்கு வயசு ஒரு அறுவது இருக்குமா? :-)//

85-ல் என்று நினைக்கிறேன். அப்பொழுது சில பள்ளி நண்பர்களாக முயன்று பார்த்திருக்கிறோம். அப்பொழுது 7-ம் வகுப்பு :-)

இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எதையாவது தீர்மானமாக செய்ய ஏற்படும் ஒரு உந்துதலினால் இம்மாதிரியான பழக்கங்கள் ஏற்படுகின்றன என்று தோன்றுகிறது. நண்பர்களுடன் சேர்ந்தால் ஒரு கொண்டாட்டமாக இருக்கும். இதையும் தாண்டி நிறைய விசயங்கள் கொண்டாட இருக்கிறது என்ற தெளிவு வந்தால் பழக்கத்தை விட்டுவிடுவது சுலபம்தான்.

Unknown said...

பெனாத்தலாரே, எப்படி இருக்கீங்க? உங்களை சென்னையில் சந்திக்க இயலவில்லை. கொஞ்சம் கடுமையான வேலை!

மக்கள் .... மக்கள்.... மக்கள் தொகை. இது அதிகமாக இருக்கும் எந்த நாட்டிலும், இது போன்ற சட்டங்கள் அமல்படுத்த எளிதானவை அல்ல. சிங்கப்பூரில் இது சாத்தியமாவதற்கு, கடுமையான சட்டங்கள் மட்டுமன்றி, அதை அமல்படுத்தும் அரசாங்கமும், மக்களும் அதை கடுமையாக பின்பற்றுவதனால்தான்.

அமெரிக்காவிலும், இந்த மாதிரி தடைகள் உள்ளன. பார் மற்றும் உணவுக்கடைகளில் தடை. நாங்கள் வழக்கமாக போகும், இடுப்பாட்ட/ஹூக்கா கடையில் இப்போது கூட்டம் குறைவாகவே வருகிறதாம். அதே சமயம், புகைப்பவர்களுக்கென்று ஒரு தனி இடம் அமைத்துக் கொடுத்தால், இத்தடை பொருந்தாது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிறுவர்களும் புதிதாக ஆரம்பிக்க நினைக்கும் நபர்களும் முற்றிலும் தடுக்கப் படுகிறார்கள், நிருத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு வரம்

jothig said...

அது ஒரு கனா காலம் பரிந்துரைத்தது சரி தான். நல்ல சிந்தனை நல்ல வார்த்தைகளில். ஆனால் உங்கள் தளத்தின் பெயர் தான் புரியவே மாட்டேன் என்கிறது. ஒரு வேளை நல்ல விஷயங்களை சொல்லி முடித்து பிறகு மற்றவர்களால் சொல்லப்படும் வார்த்தை என்பதால் தானோ?


நட்புடன்


ஜோதிஜி

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://texlords.wordpress.com

 

blogger templates | Make Money Online