Dec 30, 2008

பினாத்தல் டாப் டென் மூவீஸ் 2008!

வழங்குகிறோம்: பினாத்தல் டாப் டென் மூவீஸ்.

இது இந்த வருடம் வெளியான சில படங்களைப் பற்றிய எங்கள் விமரிசனக்குழு கணிப்புகள். தமிழ்நாட்டில் வெளியானவை பற்றி மட்டுமே இந்த கணிப்புகள் வெளியிடப்படுகின்றன; விமரிசனக்குழுவைப் பாதித்த எல்லா படங்களும் இந்த வரிசையில் இருக்கின்றன - ஆனால் எந்தப்படம் சிறந்த படம் என்று வரிசைப்படுத்தப்படவில்லை.

1.அபியும் நானும்:

தாத்தா பக்கமா பேரன் பக்கமா என்று திண்டாடும் ஆவி, கோலங்கள் அபியினால் ஒரு பக்கம் சாயும் கதை. லூஸ் போன்ற சிறுவர்களை வைத்து மதுரையைக் கிண்டல் அடித்தாலும், தாத்தா வேட்டியினால் வந்த பிரச்சினைக்கு ஞானத்தை பலி கொடுக்கும் காட்சி உருக்கம். க்ராபிக்ஸ் மூலம் உயரமாக ஒல்லியாக மாறும் நாயகன், பழைய க்ளிப்பிங்ஸை வைத்தே பொக்கிஷமாக மக்களைக் கவர முயற்சிக்கிறார் - ஆனால் முடிந்ததா எனத் தெரியவில்லை. எதிர்பாராத திருப்பமாக தாத்தாவும் பேரனும் சேர்ந்துவிட, கழுகார் கேட்கும்" நான் யார் பக்கம் என்று உங்களுக்காவது தெரிகிறதா" என்ற க்ளைமாக்ஸ் காட்சி செண்டிமெண்டாக எடுத்திருந்தாலும் சிரிப்பலைதான் பரவுகிறது!

அபியும் நானும் - அலங்கோலங்கள்!

2. சில நேரங்களில்:

ஊர்ப்பெரியவர் ஒருவர் அடுத்த ஊர்ப்பிரச்சினையில் சில நேரங்களில் சில மாதிரி முடிவெடுக்கும் உளவியல் ரீதியான கதை. சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு உயிரையும் கொடுப்பேன், பதவியைத் துறப்பேன் என்கிறார் - அடுத்த காட்சிகளிலேயே - கைகோத்தால் போதும், ஏன் உயிரை விடவேண்டும் என்கிறார். அடுத்த ஊர்ப் பிரச்சினையைப் பற்றிப் பேசினால் தண்டனை கொடுப்பேன் என்கிறார் சில நேரங்களில், உணர்ச்சி வசப்பட்டு பேசுவது கூடத் தவறா எனக் குமுறுகிறார் சில நேரங்களில். அத்தனை சில நேரத்து முடிவுகளுக்கும் காரணம் மேலூரில் இருக்கும் பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துதான் எனத் தெரியும் காட்சிதான் க்ளைமாக்ஸ் - ஆனால் அதையும் ஊகித்துவிட முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.

சில நேரங்களில் - சில பேரங்களில்!

3. பிரிவோம் சந்திப்போம்:

பச்சைத் துரோகம் செய்திருந்தாலும் நாயகனோடு வேறு வழியில்லாமல் நட்பாக இருக்கும் நண்பனைப் பற்றிய கதை. நாயகன் வேறு வழியின்றி பிரிவதாக அறிவிக்கும் சோகமான காட்சி - எதிர்பார்த்திருந்தாலும் கண்ணீரை வரவழைக்கிறது. தன்னைத் திட்டிய நண்பனின் ஆள் பேசிய சிடி கிடைத்ததும் கோபமாக நண்பனின் குருவைச் சிறையில் அடைக்கிறார் நாயகன். பட முடிவில் நாங்கள் எப்போது பிரிந்தோம், புதிதாகச் சந்திக்க என்று காமெடி செய்கிறார். நடுவில் ஏற்பட்ட மாற்றம் என்ன, குருவை ஏன் சிறையில் அடைத்தார், ஏன் விடுதலை செய்தார், நண்பனின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமலேயே படம் முடிகிறது.

பிரிவோம் சந்திப்போம் - சந்திப்பார்களா? சந்தி சிரிப்பார்களா?

4.பிடிச்சிருக்கு:

வேறு வழியில்லாமல் நாயகியைப் பிடிச்சிருக்கு என்றே படம் முழுக்கச் சொல்லி வரும் நாயகனின் கதை. ஏன் பிடிச்சிருக்கு, எப்படிப் பிடிச்சிருக்கு என்பதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. இத்தனைக்கும் நாயகி கொஞ்ச நாள் முன்னால் நாயகனைச் சிறையில் அடைத்தவள். வெளியூருக்காக பாடுபட்ட நாயகன், நாயகிக்குப் பிடிக்காது என்பதால் அதையும் அடக்கி வாசிக்கிறான். விடியோ கவரேஜ் இல்லை என்பதால் சண்டை போட்ட நாயகனுக்கு அபரிமிதமாக விடியோ கவரேஜ் கிடைத்தாலும் நாயகி "பிடிச்சிருக்கு" என்பதால் எதையுமே உபயோகப் படுத்திக் கொள்வதில்லை. குழப்பமான கதை!

பிடிச்சிருக்கு - என்ன பிடிச்சிருக்கு?

5.ஆயுதம் செய்வோம்:

வேறு யாரும் ஆயுதம் செய்யக்கூடாது, தாங்கள் மட்டும்தான் செய்வோம்; நாங்கள் சொல்லும் ஆளோடுதான் செய்யவேண்டும் என்றெல்லாம் நிபந்தனை வைத்து கூட்டாளிகளைக் கவிழ்க்க நினைக்கும் தோழர்களின் முழக்கம். எதிராளிகளைக் கவிழ்க்க முடியாத நிலையில் ஆயுதம் செய்ய கூட்டுக்கு ஆள் தேடுகிறார்கள் - இதோ எங்கள் அணித்தலைவன், இவர்தாண்டா மதச் சார்பற்ற தலைவி என்று பண்ணும் காமெடி இரண்டாம் பாதியை ரசிக்க வைக்கிறது.

ஆயுதம் செய்வோம் - காமெடி கீமடி பண்ணலியே?

6.ஆனந்த தாண்டவம்:

தோற்றாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அடுத்த முறைக்கு வேறு நாதியில்லை என்று ஆனந்த தாண்டவம் ஆடும் அம்மணியின் கதை. மும்பையில் குண்டு வெடித்தாலும் மூவரசம்பட்டு சாக்கடை அடைத்தாலும் மைனாரிட்டி பஞ்சாயத்து தலைவர் வெளியேறினால் போதும் என்ற சர்வரோக நிவாரணியே துணை என்று வாழ்கிறார் அம்மணி. ஓய்விலேயே செல்லும் முதல்பாதி, ஓய்விலேயே இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் இரண்டாம் பாதி; படம் முடிவு வரை க்ளைமாக்ஸ் தேர்தல்கள் வராததால் சொதப்பல்.

ஆனந்த தாண்டவம் - ஓவரா ஆடாதீங்கம்மா!

7.சரோஜா:

படத்தின் பெயருக்கு வித்தியாசமான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் - த்தியமூர்த்தி பவன் எதிரே ரோட்டில் நடக்கும் ஜாலியான சண்டை என்று. இந்தப்படம் வழக்கம்போலவே பல இயக்குநர்களால் குதறப்பட்டு இருந்தாலும், எப்போது படம் சூடுபிடிக்கும், எப்போது டல்லடிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. அவ்வப்போது ஊர்ப்பெரியவரோட சண்டை பிடிப்பது மாதிரி தெரிந்தாலும் அம்மா சொன்னவுடன் அமைதியாகிறார்கள் நாயகர்கள்; திடுதிப்பென்று செத்துப்போன அப்பா ஞாபகம் வந்து போடு.. எல்லாரையும் ஜெயில்ல போடு என்று மிரட்டுகிறார்கள் ஊர்ப்பெரியவரை. எனக்கு ஆறு மாசம், உணக்கு மூணு வருஷம் என்பது போல பஞ்ச் டயலாக்குகளும் உண்டு.

சரோஜா - சறுக்கும் ரோஜா!

8.அஞ்சாதே:

26 நவம்பர் வெளியீடு. நிறைய காரக்டர்கள், எது எங்கே எப்போது எப்படி நடந்தாலும் அதை வைத்து நம் கொள்கையை வலுப்படுத்திக் கொள்ள அஞ்சாதே என்பதுதான் கதையின் நாட். எதிரி நம் மேல குண்டு போட்டாச்சு, எதிரி மேலே ஏன் இன்னும் குண்டு போடலைன்னு கேட்க அஞ்சாதே, 16 வருஷம் முன்னாடி நீ போட்ட கடப்பாரைக்கு இந்த குண்டு சரியாப்போச்சு என்று சொல்ல அஞ்சாதே, ஏன் பணக்கார செத்தவனை மட்டும் கவனிக்கிறே என்று திசைதிருப்ப அஞ்சாதே, ஒருத்தனை சாகடிக்கத்தான் 200 பேரைக் கொன்னாங்க என்று சொல்ல அஞ்சாதே - எனப் பல அஞ்சாதேக்கள். விறுவிறுப்பாக போனாலும் வெறுவெறுப்பாக முடிகிறது - யாரும் எப்போதும் மாற மாட்டார்கள் என்பதை வலியுறுத்தும் கதை!

அஞ்சாதே - அஞ்சாமல் இருக்க முடியாதே!

9.குசேலன்:

பங்கு பிரித்த பிறகு ஏழையாக மாறிவிட்ட குசேலன், குபேரன் மீது போர்தொடுத்து, அவனை நல்வழிப்படுத்தும் கதை. குபேரன் வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சியை ஆதரிப்பதும், அது குசேலனுக்கு இன்னும் கோபத்தை உண்டுபண்ணுவதும் விறுவிறுப்பான காட்சிகள். க்ளைமாக்ஸில் குபேரன் குசேலனுக்கு செட்டில்மெண்ட் செய்து கண்கள் பனிக்கின்றன; ஆண்டி க்ளைமாக்ஸாக போரில் இருபுறமும் உதவியவர்கள் நடுங்கிக்கொண்டு இருக்கும் காட்சி நகைச்சுவையா சீரியஸா எனத் தெரியவில்லை.

குசேலன் - மாடி வீட்டு ஏழை!

10. தசாவதாரம்:

எனக்கு யார் கூட்டும் தேவையில்லை, நானே எல்லா அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் அணித்தலைவன், இன்றாவது நம்முடன் கூட்டு என்று வயிற்றில் பால்வார்ப்பாரா எனக் காத்துக்கிடக்கும் மேலூர்ப் பெரிசுகளை அலட்சியப்படுத்துகிறார். தப்பு - இங்கே எல்லாரும் தப்பு - நான் மட்டும்தான் சரி என்று பஞ்ச் டயலாக் விடுகிறார்; வாரம் ஒரு ஊருக்குச் சென்று விளையாட்டு காட்டுகிறார். வாரிசுகளை ஒழிக்கணும் என்று மனைவியை வைத்தும் பஞ்ச் டயலாக் விடுகிறார். ஊரில் உள்ள மற்ற பெரிசுகள் எல்லாம் இவரை பாம்பு என்று அஞ்சுவதா, பழுது என்று மிதிப்பதா என்று புரியாமல் டரியல் ஆகிறார்கள்.

தசாவதாரம் - பத்துக்கு ரெண்டு தேறும்!

28 பின்னூட்டங்கள்:

சி தயாளன் said...

ஆகா...நல்ல கற்பனை நண்பரே..

வாழ்த்துகள்..

இராம்/Raam said...

hehehe... :)


kushalan & abi'yum naanum super review.. :)

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Excellent Suresh !

Your article is clever as it lists top ten films of the year 2008 without arranging in any order and at the same time combining the current political scenario with good amount of humour inbuilt.

You lived up to our expectations.

Well done !

வடுவூர் குமார் said...

சில நேரங்களில் - இரண்டாவது நிலையில் இருந்தாலும் உள்ளூர் அரசியலை தொட்டுச்செல்வதாக எனக்கு தோன்றுகிறது.
செம "நச்"

வடுவூர் குமார் said...

இவரை பாம்பு என்று அஞ்சுவதா, பழுது என்று மிதிப்பதா என்று புரியாமல் டரியல் ஆகிறார்கள்.
ஐயோ!ஐயோ! ..வயிறு வலிக்குது. :-)

முரளிகண்ணன் said...

super top 10

யோசிப்பவர் said...

ஒன்னோன்னும் சூப்பர் படம். இப்படிப் போட்டுக் கிழிச்சுட்டீரே?! ஆவி அபிக்கெல்லாம் முதலிடமா(உங்க கம்பெனி தயாரிச்ச படமா?!).

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல பதிவு படிக்கிறேன். அதுக்காக ஒரு பதிவுக்கு ரெண்டு மாசமெல்லாம் ஓவராயில்லையா?!;-))

யோசிப்பவர் said...

//ஆனால் எந்தப்படம் சிறந்த படம் என்று வரிசைப்படுத்தப்படவில்லை//
மன்னிக்கவும். முதல் வாசிப்பில் இதை கவனிக்கவில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டொன் லீ.

நன்றி ராம்.

நன்றி ஸ்ரீதரன்.

நன்றி வடுவூர் குமார். உள்ளூரை மட்டுமே வைத்துக்கொண்டேன் :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முரளி கண்ணன்.

நன்றி யோசிப்பவர். தோன்றத் தோன்ற எழுதிக்கொண்டே வந்தேன். அப்புறம் வரிசைப்படுத்த எண்ணவில்லை :-) அப்படியே போட்டுவிட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் கலர் கண்ணாடி அரசியல். நாங்க எல்லாம் ஆலிவுட் படம் மட்டும்தான் பார்ப்போம். அதனால நோ கமெண்ட்ஸ்! :)

Anonymous said...

ஹி.........ஹி.......

உண்மைத்தமிழன் said...

சூப்பர் குத்துகள் சாமி.. குசேலன் விமர்சனமும், அபியும், நானும் விமர்சனமும் சிம்பிள் சூப்பர்..

பெனாத்தலு.. உடம்பு நல்லாயிருச்சு போல இருக்கு..

வாழ்க வளமுடன்

ஆயில்யன் said...

நெசம்மாவே நான் படங்களை த்தான் சொல்றீங்கன்னு ஆரம்பிச்சேன்!


கலக்கல் எல்லாம் கண்டுபுடிக்க முடிஞ்சுது ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் எனக்கு புரியல குபேரன் குசேலன் யாருங்க பாஸ்?

பெருசு said...

பெனாத்தலு

கிட்டத்தட்ட முகமூடி எழுத்து மாதிரியே இருக்கு.ஆனா இல்ல.

ஏதோ புரியர மாதிரி இருக்கு.ஆனா புரியல.

நீங்க அடிக்கடி எழுதற மாதிரியே இருக்கு.ஆனா எழுதறதில்ல.


உடம்பு சரியாருச்சா.

உங்க ஆக்கிடெண்டே ஆட்டோ அனுப்புனதுலதான்னு புதசெவி.

கபீஷ் said...

அருமை! கலக்கல்! அடிபொளி!நீங்க ஏன் தொடர்ந்து எழுதலை? இன்னும் உடம்பு சரியாகலையா?

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு.. என்னதிது வெட்டி பந்தா.. காதலிக்க நேரமில்லை காலத்துல இருந்து அதேதானா! நோ கமெண்ட்ஸா? கொத்ஸா?

நன்றி கவின்.

நன்றி உண்மைத்தமிழன். எனக்கு உடம்பு சரியானது இருக்கட்டும்.. (சரி ஆயிடுச்சு).. உங்களுக்கு என்ன ஆச்சு? தம்மாத்தூண்டு கமெண்டு போடறீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆயில்யன். இருக்கறதிலேயே ஈஸி அதான், அதா புரியல? டுமீல் விடாதீங்க!

பெருசு.. என்ன புலம்பல் சாஸ்தியா இருக்கு :-) எழுத முன்னைப்போல முனைப்பு இல்லைன்றதுதான் உண்மை. ஆக்ஸிடெண்ட், ஆட்டோ எல்லாம் கரெக்ட், யார் அனுப்பினதுன்றதுதான் டவுட்டா இருந்துது.. இப்ப லைட்டா புரியற மாதிரி இருக்கு!

நன்றி கபிஷ். மொக்கை இல்லாமல் எழுதணும்னு பாக்கறேன். அதுக்கு மேட்டர் கிடைக்கும்போது எழுதறேன். அம்புட்டுதேன். (அதுக்காக இது மொக்கை இல்லையான்னு கேக்காதீங்க)

Anonymous said...

அற்புதம், அற்புதம்...

\\சத்தியமூர்த்தி பவன் எதிரே ரோட்டில் நடக்கும் ஜாலியான சண்டை என்று.//

கலக்கல்...

உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்... நிறைய எழுதுங்க!!!

-அரசு

Unknown said...

வாரணம் ஆயிரம்... தெனாவட்டு..காதலில் விழுந்தேன்.. திண்டுக்கல் சாரதி...மற்றும் குருவி போன்ற திரைக்காவியங்களை பட்டியலில் சேர்க்காமல் விட்டதன் மூலம் பெனத்தலாரின் வேடம் கலைந்து விட்டது....

டாப் டென் அல்ல இது டூப் 10... செல்லாது செல்லாது...

ramachandranusha(உஷா) said...

வூட்டுக்கு ஆட்டோ வராது, தெகிரியம்தான் :-)

seethag said...

stop your vananvasam ..penths..


excellent movies. sadly ,as you u said once before, the thiruvalar podhujanam is the audience for all these comedy act.

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.....

இவை வெறும் பினாத்தல்கள்தான்னு விடமுடியலைப்பா:-))))))

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க தல ;))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அரசு. மேட்டர் இருந்தால் எழுதாமல் இருக்க மாட்டேனே :-)

தேவ் அவர்களே; இதை டூப் டென் என்று பழி நீங்கள் சொல்வதன் காரணம் எனக்கு தெரியும். அதைப் பொதுவில் வைத்துவிடும் அளவுக்கு இங்கிதம் தெரியாதவனல்ல நான் என்பதாலேயே நீங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டிருப்பேன் எனக் கனவு காணாதீர்கள்! “எந்திரன்” மறுபடி வரும்!

உஷாக்கா,

ஊட்டுக்கு ஆட்டோ வராதுதான். ஆனா ஊர்லே வந்தப்ப ஆட்டோ வந்ததே!

பினாத்தல் சுரேஷ் said...

சீதா,

வனவாசம் எல்லாம் இல்லை! கொஞ்சம் விட்டு பிடிக்கிறேன் அம்புட்டுதேன் :-)

துளசியக்கா,

யார் சொன்னாங்க இதெல்லாம் வெறும் பினாத்தல்னு? அனுபவம் சிதறி ஆறாய் ஓடுகிறது.. அய்யா குடி அம்மா குடி!

நன்றி கோபிநாத்!

நாடோடி இலக்கியன் said...

எப்படீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.

கலக்கல்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாடோடி இலக்கியன். அளவற்ற கோபத்தோடு நாட்டுநடப்பைப் பார்த்தால் போதாதா?

 

blogger templates | Make Money Online