Jan 8, 2009

சிறுகதை: ஓர் இரவு

ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட அருவருக்க வைக்கவில்லை. அனாதரவாக விட்டுவிட்டு வந்திருக்கும் லாப்டாப் நினைவும் பயமுறுத்தவில்லை.


இவ்வளவு மகிழ்ச்சியாய் எல்லா செல்களிலும் புத்துணர்வோடு எப்போது இருந்தேன் கடைசியாக? ம்ஹூம் – ஞாபகமே இல்லை.


திரும்பி இருக்கையில் அமரும்போதும் எதிர் சீட்டில் இன்னும்"என்னைக்-கற்பழிக்க-வந்த-காமாந்தகாரா" பார்வையுடன் முறைத்துக்கொண்டிருந்தாள் மூதாட்டி. சீட்டுக்கடியில் பெட்டி நுழைத்தபோது லேசாக இடித்த கோபம் இன்னும் குறையாமல் டெக்கான் ஹெரால்டுக்குள் மூழ்கி இருந்தார் அவள் மூக்குக்கண்ணாடிக் கணவர்.


ரயில் சினேகத்தின் பேட்டர்ன் தொடர்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் கோபம் மறையும், "நீங்கள் மேல்பர்த்துக்கு" வேண்டுகோள், புளிசாதப் பகிர்வு, நாட்டைக் கெடுக்கும் சக்திகள் பற்றிய கருத்துரையாடல், இறங்குகையில் தொலைபேசி எண் பரிமாற்றம், பின் அவரவர் வழி என்றும் மாறாத வரிசை.


இன்று அதைப் பற்றியெல்லாம் என் கவலை செல்லவில்லை. யாரிடமாவது என் சாதனையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன். இன்னும் கருணை காட்டவில்லை. ஊருக்குச் சென்றதும் முதல்வேலையாக இதை ரோமிங்காக மாற்றவேண்டும். லாப்டாப்பிலும் சக்தி இல்லை


ஏன் இப்படி ஊர்கிறது இந்த ரயில்? இந்த நேரத்தில் வாரங்கல் வந்திருக்கவேண்டாமா?


"நீங்களும் சென்னைக்கா?" டெக்கான் ஹெரால்ட் முடிந்துவிட்டது போல.


இதென்ன கேனத்தனமான கேள்வி. இந்த ரயில் என்ன ஆம்ஸ்டர்டாமா போகிறது?


நக்கலைத் தவிர்த்து சினேகமாகத் தலையாட்டினேன்.


வாய்யா வா! அடுத்த கேள்வி மேல் பர்த்தானே?


"ஹைதராபாத்தில் வேலையா?"


"இல்லை. சென்னைதான். ஹைதராபாத்தில் ஒரு சின்ன ட்ரபுள்ஷூட்டிங் வேலை"


"ஓ சாப்ட்வேரா?" இவர்களுக்கு என்ன புரியும்? டாடா எண்ட்ரியிலிருந்து ராக்கெட் நுட்பம் வரையில் எல்லாவற்றையும் ஒரே கோணிக்குள் அடக்கிய சாப்ட்வேர் தவிர்த்து.


"இப்ப சாப்ட்வேர் மார்க்கெட் டல் போலிருக்கே" டெக்கான் ஹெரால்டில் பிசினஸ் பக்கங்களும் உண்டு போல.


"கொஞ்சம் டல்தான். ஆனால் எங்கள் கம்பெனியில் பிரச்சினை இல்லை. இப்போதுகூட ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட் நடக்குது, இது மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா இந்தியாவோட எகானமியே மாறிடும்"


"ஓ! முடிஞ்சுடுச்சா?"


"ஏறத்தாழ! அதுல ஒரு சின்ன ப்ராப்ளம். அதைச் சரிசெய்யத்தான் நான் வந்தேன். ரெண்டு நாள் முன்னாடிதான் கிளம்பினேன்"


"சரி ஆயிடுச்சா?"


"ஆச்சு! ரெண்டு நாள்லே முடியும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! என் பாஸ்க்கு கூட இன்னும் தகவல் தெரியாது.. அவனுக்கு நிச்சயம் ஏமாத்தம்தான்" இதையெல்லாம் நான் ஏன் இவரிடம் சொல்கிறேன்? யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்துதல் என்னைப்போட்டு படுத்திக் கொண்டிருந்தது..


"பாஸை அவன் இவன்னு சொல்றீங்க?"


"அவன் என் வயசுதான் சார். ஒரு கிரேட் மேலே அவ்ளோதான்.. என்னைப் பழிவாங்கணும்னே ஹைதராபாத் அனுப்பினான்"


"ஒரு களிமண்ணைப் பிடிச்சு பாஸ்னு பேர்வச்சாலும் அப்படித்தான்.. என் மேலதிகாரி என் கல்யாணத்துக்குக் கூட அரைநாள்தான் லீவ் கொடுத்தான். வருவேனோ மாட்டேனோன்னு இவ கண்ணுல தாரைதாரையாக் கண்ணீர்.. மையெல்லாம் அழிஞ்சு பாக்கவே கோரமா இருந்தா.. ஞாபகம் இருக்காடி?"


'டி' இந்த சம்பாஷணையில் மகிழ்ச்சியுறவில்லை. குமுதத்தில் நிலைத்த பார்வையை மாற்ற் யத்தனிக்கவில்லை.


"எனக்கும் ஏறத்தாழ அதே நிலைமைதான். இன்னும் மூணுநாள்லே கல்யாணம். இந்த வேலை ஒரு வாரம் பிடிக்கும்னு எஸ்டிமேட். அப்பவும் என்னை அனுப்பினான்"


"ஓ.. வாழ்த்துக்கள்! நல்லா இருங்க.. இவ்ளோ டைட்டா ஏன் போகணும்?"


"வேலையில இருந்த ஒரு கவர்ச்சிதான் சார்! யாராலயும் முடியலைன்னு கைதூக்கிட்ட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணா வர சாடிஸ்பேக்‌ஷன் வேற எங்கேயுமே கிடையாது சார். அந்த ரிஸ்க் எனக்குப் பிடிக்கும்.."


"ஆமாம். வொர்க்லே டெடிகேஷன் இருக்கறத் இப்பல்லாம் பாக்கவே முடியறதில்லை!"


"அப்படி பொதுவா சொல்லிட முடியாது சார். எங்க டீம்லே உள்ள எல்லா மெம்பருங்களுமே ரொம்ப டெடிகேட்டட் தான் இன்னும் சொல்லப்போனா இந்தக் காலத்துலதான் டெடிகேஷன் அதிகமா இருக்கு"


"நான் பொதுவா பாக்கறதை சொன்னேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. இந்தக்காலத்துப் பசங்களுக்கு பொதுவாவே தகுதிக்கு மீறிய வருமானம். பொறுப்பில்லாம வர பணத்தையெல்லாம் தண்ணியடிச்சு கூத்தடிச்சு கரைக்கறது. இதையெல்லாம்தானே பாக்கறோம்.. அதை வச்சி சொன்னேன்"


"சில பேர் அப்படியும் இருக்கலாம்.. ஆனா என்னைப்போல ஆளுங்க எல்லாம் சம்பளத்தை புத்திசாலித்தனமா இன்வெஸ்ட் செய்யறோம்.. என் பணமெல்லாம் என் கம்பெனியிலேயே இருக்கு மொத்தம் ஷேரா"


"ஓஹோ.. நல்ல விஷயம்தான்" பெரிசு அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டதை உணர்ந்து அமைதியானார்.


மறுபடியும் போனை எடுத்துப் பார்த்தேன். ம்ஹூம்..


"சார் உங்ககிட்ட போன் இருக்கா? ஒரு மிஸ்டு கால் கொடுத்து விடறேன். அவங்க கால் பண்ணுவாங்க"


"அவங்க ன்னா? அவங்களோ?" பெரியவர் கண்ணடிப்பது போல முயற்சித்தார். நானும் அவர் ஆசைப்படி அசடு வழிந்தேன்.


செல்போனை இவ்வளவு பத்திரப்படுத்திப் பார்த்ததில்லை நான். கட்டைப்பைக்குள் ஒரு கஷ்கப்பை அதற்குள் பாலிதீன் உறையில் பவுச். அதற்குள் இருந்த அரதப் பழைய மாடல்.


இரண்டே நிமிடத்தில் போன் வந்துவிட்டது. காத்திருந்திருப்பாள்.


"தூங்கிட்ருப்பேன் தெரியுமா?"


"நீ தூங்கியிருக்கமாட்டே.. அதுதான் எனக்குத் தெரியும்"


"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது. ஒரு டுபாக்கூர் போனை எடுத்துகிட்டு ஹைதராபாத் போகலைன்னு யாரு அழுதா?"


"போன்லே என்ன பிரச்சினை? சர்வீஸ்தானே?"


"நேரு சொன்ன மாதிரி ஐ ஆம் நாட் இண்ட்ரஸ்டட் இன் எக்ஸ்க்யூஸஸ்"


"துரைசாணி இங்கிலீச் எல்லாம் பேசுது"


"போடா இடியட்.. யாரு உன்னை இந்த வேளையில ஊரைவிட்டு போகச்சொன்னது?"


"கடமைம்மா.. கடமை! சோறு போடற கம்பெனிக்கு விசுவாசம்!"


"ஓவர் சீன் ஒடம்புக்கு ஆவாது கண்ணா! என்ன ஆச்சு? வேலை முடிஞ்சுதா?"


"யாரைப்பாத்து என்ன கேள்வி? ராஜா கைய வச்சா.. அது ராங்கா போயிருக்கா?"


"சரி சரி! அளப்பறை தாங்கல! சிவாக்கு தெரியுமா?"


"எங்கே..கடைசி நேரத்துல ப்ளைட் டிக்கட் கிடைக்காம ட்ரெயின்ல வரேன்..

சிக்னலே கிடைக்கலை.. உனக்கே இவ்ளோ லேட்டா பண்றேன்"


"அவனை இந்த நம்பருக்கு கால் பண்ணச் சொல்லட்டுமா?"


"வேணாம் வேணாம்.. ஒரு பெரிசு கிட்ட வாங்கி போன் பண்றேன்..புதையல் காத்த பூதம் போல கற்பு கழியாம வச்சிருக்காரு போனை!"


"அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர்.. என் தம்பிக்கு 10 லட்சம் பேங்க் பேலன்ஸ் காட்டணுமாம். அப்பா வேறெங்கேயோ ட்ரை பண்ணாரு.. நான் தான் சொன்னேன்.. வேணாம்.. ஒரு இளிச்சவாயன் பணத்தை என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுகிட்டிருக்கான்னு"


"அட.. என் பணமெல்லாம் ஷேர்லே முடங்கி இருக்கே அதை மறந்துட்டியா?"


"முட்டாளே.. நீதான் ஒரு பேங்கர் கிட்டே பேசறோம்ன்றதை மறந்துட்டு பேசறே.. அதை ப்லெட்ஜ் பண்ணி ஷார்ட் டெர்ம் லோனா வாங்கித்தர கூட என்னால முடியாதா?"


"ஓக்கே.. அதை நீயே பாத்துக்க.. அப்புறம்?"


"அப்புறம் என்ன? எனக்காக என்ன வாங்கி வரே?"


"என்னையே வாங்கிவரேன்.."


"அதை வச்சு என்ன பண்றது? கால் காசுக்கு பிரயோஜனமா?"


"லைப் டைம் இன்வெஸ்ட்மெண்டும்மா!"


"இப்படியெல்லாம் பயமுறுத்தாதே.. ரீ கன்ஸிடர் பண்ணவேண்டி இருக்கும்"


"அவசர அவசரமா வந்து ட்ரெயின் ஏறறேன்.. கடைக்கெல்லாம் போகநேரமே இல்லடி கண்ணு!"


"கொஞ்ச ஆரம்பிச்சுடுவியே உங்கிட்ட ப்ராப்ளம் இருந்தா"


"அப்புறம்"


பெரிசு தூரமாக இருந்தாலும் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார்.. சில்மிஷ்மான சிரிப்போடு "ஸ்வீட் நத்திங்ஸா" என்றார்.


"ஆமாம்.. கொஞ்ச நாள் போனாதான் நத்திங் இஸ் ஸ்வீட்னு தெரிய வரும்"


புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பேன் வேகமாக சத்தம் மட்டும் போட்டது. ஒருவழியாக தூக்கம் வந்து கலைந்தபோது ரயில் நின்றுகொண்டிருந்தது.


"சென்னை வரலை?"


"சரியாப்போச்சு.. மூணு மணி நேரம் லேட்.. இப்போதான் நெல்லூர் உள்ளே எண்டர் ஆகுது"


பெரியவர் நெல்லூரிலும் இறங்கி எப்படியோ நியூஸ்பேப்பரை மட்டும் வாங்கி வந்துவிட்டார்.


அவர் மூன்றாம் பக்கம் படிக்கத் திருப்பும்போதுதான் பார்த்தேன் முதல்பக்கத்தில் நான் ஓட்டாண்டியான கதையை.

26 பின்னூட்டங்கள்:

இப்னு ஹம்துன் said...

'சத்யமா' சூப்பர்.

கணேஷ் said...

ஃபைனல் டச் ரியலி சூப்பர். எல்லாம் சத்யம் மாயம்.

pudugaithendral said...

மிக அருமையா இருதுச்சு.

ஒர் இரவில் என்ன வேணாம் நடக்கலாம் எனும் கருத்தை அழகாச் சொல்லியிருக்கீங்க
வாழ்த்துக்கள்.

பாலராஜன்கீதா said...

*சத்தியமா* இது கதைன்னு நம்பிட்டோம்.
:-)

வடுவூர் குமார் said...

வேலையில இருந்த ஒரு கவர்ச்சிதான் சார்! யாராலயும் முடியலைன்னு கைதூக்கிட்ட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணா வர சாடிஸ்பேக்‌ஷன் வேற எங்கேயுமே கிடையாது சார்
இந்த மாதிரி சில சமயம் மட்டுமே அமைகிறது.அப்படி அமையும் பட்சத்தில் விடி காலையில் மெல்லிய பனியில் கைகள் இரண்டையும் மேலே தூக்கி மூச்சை இழுத்துவிடும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி மாதிரி இருக்கும்.

வடுவூர் குமார் said...

செல்போனை இவ்வளவு பத்திரப்படுத்திப் பார்த்ததில்லை நான். கட்டைப்பைக்குள் ஒரு கஷ்கப்பை – அதற்குள் பாலிதீன் உறையில் பவுச்

டோண்டு சார் ஞாபகம் வருது. :-)

வடுவூர் குமார் said...

சத்யம் கதையை இப்படி முடிச்சிட்டி(ட்டா)ங்களே!!

sathish said...

excellent!!!!

சரவணகுமரன் said...

கதை சூப்பர்...

Anonymous said...

Jeffrey Archer, Sujatha, Pinathal - in that order

Sridhar Narayanan said...

வழக்கம் போல ஒரு 'சுடச்சுட' கதையா? :-)) நல்லா இருக்கு.

முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் சொன்ன விதம் நல்லா இருக்கு.

என்ன 'சத்யம்' பத்தி தெரியாதவங்களுக்கோ, இல்ல எதிகாலத்தில இந்தக் கதையை மட்டும் 'தனியா' படிக்கிறவங்களுக்கோ சின்ன குழப்பம் வரலாம்.

கலக்கல் :-)

சென்ஷி said...

அதே..அதே..அதே..

பினாத்தல் ஸ்டைல் :-))

Radha Sriram said...

நல்லா இருந்துது கதை. செம ஹாட் டாபிக் வச்சு வீவ் பண்ணின விதம் பிடிச்சுது..:):)

Anonymous said...

// நானும் அவர் ஆசைப்படி அசடு வழிந்தேன். //

இதை மிகவும் ரசித்தேன்.

சின்னப் பையன் said...

கதை சூப்பர்...

Chithran Raghunath said...

நல்லா இன்டெரெஸ்டிங்கா எழுதியிருக்கீங்க..

த.அகிலன் said...

ஹா ஹா ஹா சூப்பர்..

கோபிநாத் said...

டைமிங் கதையா..சூப்பரு தல ;))

வார்த்தைகளில் விளையாடியிருக்கிங்க....கடைசி வரிக்கு ஒரு ஸ்பெசல் சூப்பரு ;))

திவாண்ணா said...

நல்ல கதை! தோள் சரியா போச்சா? இனி தொடர்ந்து எழுதலாம்தானே?

anujanya said...

டாபிகல் கதை. வாத்தியார் நடை. கலக்குங்க. ரசித்தேன்.

அனுஜன்யா

சிங். செயகுமார். said...

அதே..அதே..அதே..

பினாத்தல் ஸ்டைல் :-))

யோசிப்பவர் said...

பெனாத்தலாரே,
சத்யமா சொல்றேன். கதை சூப்பர்.

ஆனால்,
//என்ன 'சத்யம்' பத்தி தெரியாதவங்களுக்கோ, இல்ல எதிகாலத்தில இந்தக் கதையை மட்டும் 'தனியா' படிக்கிறவங்களுக்கோ சின்ன குழப்பம் வரலாம்// என்பதை வழிமொழிகிறேன். இந்தப் பிரச்சனை பற்றி எல்லோரும் மறந்து போன பிறகு, இது பற்றித் தெரியாதவர்கள் கதையை படித்தால், சத்யமா முடிவு புரியாது!!;-))

Anonymous said...

I agree with all the comments by other readers. I enjoyed the topical theme and style of narrating. Hope to be a regular reader of your blog.

R. Jagannathan, Sharjah

நிஜமா நல்லவன் said...

சூப்பர்..!

மங்களூர் சிவா said...

'சத்யமா' சூப்பர்.

Anisha Yunus said...

அந்த நேரத்துல படிச்சிருந்தா புரிஞ்சிருக்கும். ஆனா இப்பதான் படிச்சதால ஒரு நிமிஷம் என்ன சொல்ல வந்தீங்கன்னு புரியலை, கடசி வரியில. அருமையான கதை. நல்ல Flow. வாழ்த்துக்கள்.

 

blogger templates | Make Money Online