ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாத சேரிச்சிறுவனுக்கு 100 டாலர் நோட்டின் பெஞ்சமின் ப்ராங்க்ளின் எப்படித் தெரியும்? தர்ஷன் தோ கன்ஷ்யாம் என்ற பஜனை எழுதிய சூர்தாஸுக்கும் இந்தச் சேரிச்சிறுவனுக்கும் என்ன உறவு? துப்பாக்கியைக் கண்டுபிடித்த கோல்ட் இவன் சித்தப்பாவா? ராமனின் கையில் இருக்கும் வில்லைப்பற்றி சேரியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சிறுவனுக்கு எப்படித் தெரியும்?
இப்படி சம்மந்தமே இல்லாத, தெரிய வாய்ப்பே இல்லாத கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லி கோடீஸ்வரனாகும் ஜமால் மேல் மில்லியனர் நிகழ்ச்சி நடத்துபவருக்கு சந்தேகம் வருவது நியாயம்தானே? சேரிச்சிறுவன் தானே - கேட்க ஆளில்லை - கூப்பிடு போலீஸை - ரெண்டு அடி அடிச்சா எப்படி இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியும் -எப்படி ஏமாத்தினான்னு சொல்லிடுவான்..
சொல்கிறான். ஒவ்வொரு கேள்விக்கும் விடை தெரிந்த தன் வாழ்க்கைச் சரித்திரத்தை. மலத்தில் குதித்து ஆதர்ச நடிகனிடம் பெற்ற ஆட்டோகிராப்பை சில்லறைக்கு விற்கும் அண்ணன் துரோகத்தை. ராமன் குறுக்கே வந்து அம்மாவைத் தூக்கிச் சென்றதை. குழந்தைப் பிச்சைக்கும் கைக்குழந்தைப் பிச்சைக்கும் கண்ணில்லாப்பிச்சைக்கும் உண்டான பொருளாதார வித்தியாசங்களை. ரயிலின் மேலிருந்து கயிறுகட்டி உணவு திருடும் வித்தையை. இளவயதுக்காதலியை கொலை செய்து மீட்டு அண்ணன் அபகரித்த துரோகத்தை. கடைசி நிமிடத்திலும்கூட ஏமாற்றப்பார்க்கும் பெரிய மனிதர்களின் காருண்யத்தை.
இவ்வளவு வித்தியாசமான திரைக்கதைப் பின்னலை சமீபத்தில் பார்த்ததில்லை. சுவாரஸ்யம் துளிக்கூட குன்றாமல் அதே நேரத்தில் அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் குறையாமல் பேண்டஸித் தன்மையோடு நகரும் காட்சிகள். எழுதும்போதே தெரிகிறது யதார்த்தத்தோடு பேண்டஸி எப்படி ஒட்டும்? சேரியின் அப்பட்டமான நிஜமும் அறைகிற அதே வேகத்தோடு மாய யதார்த்தமாக கோடிகளை வென்று ரயிலடியில் சேரும் நிஜத்துக்கு ஒட்டாத காட்சிகளும் ஓடிவிடுகின்றன.
இயக்கம் கலை இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு எல்லாமாய்ச் சேர்ந்து படம் பார்க்கும் உணர்வை முதலில் நம்மிடமிருந்து அகற்றிவிடுகின்றன. ஜமாலுக்கு விழும் அடிகளை நாம் வாங்குகிறோம். டாய்லெட்டில் குதிக்கும்போது மூக்கை மூடுகிறோம். கலவரத்தில் எழுந்து ஓடும் எரிபிணத்தைப்பார்த்துப் பதைக்கிறோம். சூடாக்கப்படும் ஸ்பூனைப்பார்த்து வியர்க்கிறோம். ரயிலில் இருந்து மணலில் விழுந்து உருள்கிறோம். திருடுகிறோம், மாட்டுகிறோம்..
தனித்தனியாக பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒரே விஷயத்தை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன்:
ராமர் கிளப்பிய கலவரத்தில் தாயை இழந்து பிச்சையெடுக்கும்போது கன்ஷ்யாமைப் பாடிவிட்டு மற்றபடி கடவுளைப்பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கை ஓட, தாதா வாழ்க்கை வந்தவுடன் தொழுகை செய்யும் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்கும் ஜமாலின் பார்வை -- ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத நுட்பம்!
குறைகள் இல்லாமல் இல்லை - வழக்கம்போல நம் குறைகளை ஏற்றுமதி செய்யும் மனோபாவம், ஹிந்தியில் எழுதி இலக்கணம் மாறா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் - சேரிச்சிறுவர்கள் பேசும் ஒட்டாத மொழி, படம் முடிகையில் பாட்டு நடனம், வலிந்து திணிக்கப்பட்டதாய்த் தோன்றும் சில விடைகள்..
2008ல் பார்த்த சில ஹிந்திப்படங்கள் (ஆம் இது ஹிந்திப்படம்தான்! என்ன, எழுதப்பட்ட பேசப்பட்ட சப்டைட்டில்!) மிகுந்த நம்பிக்கையை வரவழைக்கின்றன. (தேர்ந்தெடுத்துப் பார்ப்பதால் இருக்கலாம்) - வெட்னஸ்டே, ஆமீர், மும்பை மேரி ஜான் - இப்போது இது.
.
நிச்சயம் பாருங்கள்!
Jan 11, 2009
Slumdog Millionaire விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
12 பின்னூட்டங்கள்:
நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க. அம்புட்டு புரியுது. ஆனா இதெல்லாம் நமக்குப் புரியாது. நானுண்டு என் கார்ட்டூன் படங்கள் உண்டுன்னு இருந்துக்கிறேன். மி தி எஸ்கேப்பூ....
கட்டாயம் பாத்துடணும் இந்தப்படத்தை என்கிற எதிர்பார்ப்பை எழுதியவர்கள் எல்லோரும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்...
நல்ல விமர்சனம். இசையை பற்றி ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டீங்களே? இந்த படத்திருக்கு இசையமைத்த ரகுமான் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்... இன்று தான் விருதுகள் அறிவிக்கப் படுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.
தி.டிவிடி கிடைக்குதே என்னமோ? wednesday கிடச்சுது.......
விமரிசகர்களிடம் இருந்தும் நேற்று கோல்டன் க்ளோப் விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்திய தொலைகாட்ச்சியில் காட்டியசில காட்சிகள், மற்றும் நேர்முகம் இரண்டுமேபடம் பார்க்காஅவலை தூண்டி இருந்தது. இப்போது கட்டாயம் பார்க்க வேண்டிய லிச்டில் இருக்கிறது.
ஆகா..தல விமர்சனம் கலக்கலாக இருக்கு..கண்டிப்பாக பார்த்துவிடுவோம் ;))
நல்ல விமர்சனம்.
கண்டிப்பாக பார்த்து ஆதரவு அளிப்போம்..
வில்லு, படிக்காதவன், சிலம்பாட்டம் மத்தியில் இப்படி பட்ட திரைப் படங்களும் வருவதால் தான் திரை துறை இன்னும் உயிரோடு இருக்கிறது.
பேரரசு, விஜய், ரவிக்குமார் போன்றவர்கள் இந்த படத்தை நூறு முறை பார்க்க வேண்டும்.
குப்பன்_யாஹூ
---சில ஹிந்திப்படங்கள் மிகுந்த நம்பிக்கையை வரவழைக்கின்றன. ---
அதே அதே :)
சத்தமா சொல்லாதீங்க ;)
நல்ல விமர்சனம்.
///ராமர் கிளப்பிய கலவரத்தில் தாயை இழந்து பிச்சையெடுக்கும்போது கன்ஷ்யாமைப் பாடிவிட்டு மற்றபடி கடவுளைப்பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கை ஓட, தாதா வாழ்க்கை வந்தவுடன் தொழுகை செய்யும் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்கும் ஜமாலின் பார்வை -- ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத நுட்பம்!////
hmm. i didnt even notice this 'punch'.
kalaikkannai, maththa kuraigal kandupidikkaradhula seluththitten :)
நல்ல வேளை படத்தைப் பாத்த பின்னாடி உங்க விமர்சனத்தைப் படிச்சேன். இல்லாட்டி என்ன சொல்றீங்கன்னே புரிஞ்சிருக்காது. :-)
இந்த விமர்சனத்தைக் கொஞ்சம் பாருங்கள் ஐயா.
எனது இரண்டு ரூபாய்க்கான கருத்து:
வெள்ளைக்காரனின் கற்பனையில் இருக்கும் இந்தியாவை காட்டிக் காசுப்பார்ப்பதில் இந்திய இடதுசாரி "லிபரல்" இயக்குனர்களுக்குப் போட்டியாக வெள்ளைக்காரர்கள் களம் இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.
Post a Comment