காலச் சுழற்சியில், பதிவுகள் மேல் பதிவுகள் வந்து இந்தக்கவிதையைச் சாப்பிட்டுவிட்டன.
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க (ஒருத்தர் கேட்டாலும் இப்படித்தானுங்களே சொல்லணும்?) தனியாக மறுபதிப்புச் செய்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு நல்ல புத்தகம் கைக்குக் கிடைத்திருக்கிறது.
யூஜீன் பெட்ரோவா - அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள் (பிரபலமான புத்தகம்தான் என்றாலும், இதுவரை தமிழில் இதைப்பற்றிப் பார்த்ததில்லை)
பிரச்சினை பூமி என்றே நான் அறிந்த செசன்யாவிலிருந்து ஒரு தென்றல், யூஜீன் பெட்ரோவா என்னும் கவிதாயினி. (எரிக்கா யாங்குக்கு செசன்யாவின் இணை என்கிறது முன்னுரை). முக்கியமான பாடுபொருள் காதலும் இயற்கையுமே என்றாலும் ஜார் ஆண்ட சோவியத்தில், புரட்சியின் ஆரம்பம் தென்படத்தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அதன் தாக்கங்களும் விரவி இருக்கின்றன.
முடியும்போது இக்கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து இடுகிறேன். இப்போதைக்கு, தலைப்புக்கவிதையைத் தமிழில்:
அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள்
ஆண்டுக்கான சூரியன் அஸ்தமித்த நேரத்தில்
ஆலிவ் பூக்கள் உதிரத்தொடங்கின.
மாஸ்கோவின் தோழர்போல் செஞ்சட்டை அணிந்த ஆலிவ்.
மரத்திலேயே இருந்திருக்கலாமோ என
மனம் அலைபாய்கிற பூக்களும் உண்டு.
பனித்தரையில் பகுக்க முடியா
வெள்ளை நிறப்பூக்கள்
பச்சோந்திகளோ?
எனக்கெனவும் ஒரு பூ இருக்கிறது.
அது என் மரண மலர் வளையத்தில்
மையமாய் இருக்கலாம் -
அல்லது
நந்தவனத்தின் அத்தனை மலர்களையும்
கொய்து அவன் தரப்போகும் பூங்கொத்தின்
பகுதியாயும் இருக்கலாம்.
எப்படியும்
எனக்கான மலர் எனக்குத்தெரியும்.
நன்றாக இருந்தால் சொல்லுங்கள், மொத்த புத்தகத்தையும் மொழிபெயர்த்துவிடுகிறேன். மேலும் இக்கவிதை பற்றிய சில பின்னணித்தகவல்களையும் கூறவேண்டி இருக்கிறது.
5 பின்னூட்டங்கள்:
பாஸ்,
அருமையானக் கவிதை.... மொத்தமும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திட்டு மொழிபெயர்க்கவான்ன்னு அனுமதிக் கேட்குறீங்க... ? Eagerly awaiting the translation
கவிதை நல்லாருக்கு
##பின்னூட்டியவர்:Boston Bala : பிப்ரவரி 16, 2006 8:18 PM
சுரேஷ்,
யூஜின் பெட்ரோவாவை நீங்களும் வாசித்திருக்கிறீர்களா?
அவரது கவிதைகளில் அழகுணர்ச்சியை விட செஞ்சட்டை தோழர்களிடம் வெளிப்படும் எள்ளலும் கருணையும் எனக்கும் பிடிக்கும். கொஞ்சம் புரியாதது போலத் தோன்றினாலும் நிச்சயம் ரசிக்க வைக்கும் கவிதைகள்தான்.
உங்கள் அறிமுகம் பார்த்ததும் மீண்டும் வாசிக்கத் தோன்றுகிறது
சாத்தான்குளத்தான்
##பின்னூட்டியவர்:ஆசிப் மீரான் : பிப்ரவரி 21, 2006 4:29 PM
Republishing the comments from 3 matters post.
லக்ஷ்மணன், எங்கே ரொம்ப நாளாக் காணோம்?
//உங்கள் திறமைக்கு கொஞ்சமேனும் பக்கத்தில் இருக்கிறதா?//
கிண்டலா? என் திறமை(?)க்கு பக்கத்தில் இருப்பதாக உங்களை நீங்களே குறைத்துக்கொள்வது தகுமோ, முறையோ.. தர்மம்தானோ...............
Post a Comment