May 14, 2008

ஜெய்ப்பூரும் நானும்

வங்கதேசத்துப் புயல் லட்சம் பேரைக் காவுகொண்டது, சீனத்து நிலநடுக்கம் ஆயிரங்களைத் தாண்டுகிறது.. ஜெய்ப்பூரில் 60 -80 பேர்தான் பலி என்று நிம்மதியா அடைய முடிகிறது?
 
எண்ணிக்கையாகவே எல்லாச்சாவுச் செய்திகளையும் படித்துவிடமுடிகிறதா?
 
என்னால் முடிவதில்லை.
 
இயற்கைச் சீற்றங்களையும், சரக்கடித்த நேஷனல் பர்மிட் லாரி நெடுஞ்சாலையில் மல்லாந்து பலிகொள்வதும் விதி என்ற ஒற்றைச்சொல்லில் மறக்கடிக்கப்படலாம். ஆனால் மனிதன் உருவாக்கும் விபத்துகள்?
 
சைக்கிள்களில் அலாரம் கடிகாரங்களை டெட்டொனேட்டர்களாக வைத்து,  பயங்கொள்ள எந்தக் காரணமும் இல்லாத மக்கள் கூடும் இடங்களில் பொருத்தி, அதிகமாகக் கூடும் நேரம் பார்த்து, ஒரு வெடிப்பில் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு இடத்தில் என்று 20 நிமிடங்களில் 6 இடங்களில் வெடிக்கவைத்து, வெடிப்பின் விஸ்தீரணம் கூட தோட்டாக்களை வைத்து தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவன் என்ன கடவுளா? யார் விதியை யார் எழுதுவது? அவன் பக்கம் உள்ள நியாயம் (நியாயமாகவே இருந்தாலும்)கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப் படுகிறதா? மதம் கொடுத்த உரிமை, உரிமை மறுப்பு கொடுத்த கோபம் என்று இவற்றை நியாயப்படுத்த முடியுமா?
 
ஆலமரம் விழுந்ததால் கூட புற்களும் விழுந்தாகவேண்டும் என்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒரு இனத்தையே அழித்தொழிப்பு செய்தார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?
 
தலைவியே சிறைக்குச் செல்கிறாள், பேருந்தில் மாணவிகள் இருந்தாலென்ன, எரித்தே தீருவோம் என்றார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?
 
ரயிலை எரித்தார்கள் என்று எரித்த இனத்தையே சுத்திகரிக்க முனைந்தவர்களை நியாயப்படுத்த முடியுமா?
 
எங்கேயோ யாரோ யாரையோ அழிக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த 9 மணி பாஸ்ட் பாசஞ்சரைப் பிடித்தவர்களை வெடிக்கவைத்ததை?
 
அண்ணனுக்கு ஆதரவில்லை என்று சொன்னவனின் கீழ் வேலை பார்த்தவர்களை எரித்ததை?
 
யார் கொடுத்தார் உனக்கு இந்த உயிரெடுக்கும் உரிமை? மதம் கொடுத்ததா? வேறு வழியின்றி உனக்கு விழும் வாக்குகள் கொடுத்ததா? ஆட்சி உன் பக்கம் என்ற ஆணவம் கொடுத்ததா? கும்பலில் உன்னைத் தனித்து அடையாளம் காணமுடியாது என்ற பாதுகாப்பு கொடுத்ததா?
 
இந்தச் சாவுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்க என்னால் முடிவதில்லை.
 
சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வெளிவரும் ஒற்றைத் துளி ரத்தத்தையும் பார்க்கமுடியாமல் முகம் திருப்புகிறேனே, சாலையில் செத்துக்கிடக்கும் பூனையின் ரத்தம் பார்த்தும் வாந்தி கக்குகிறேனே, குழந்தைக்குச் சிறு கீறல் ஏற்பட்டு ரத்தம் சிந்தினால் மயக்கம் வருவதாக உணர்கிறேனே, நான் இப்படி பூஞ்சையாக இருந்ததில்லை - என் 22 வயதுவரை.
 
உத்தரப்பிரதேசத்தில் உள்ளமைந்த நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ரயில் பயணமாக பாபர் மசூதி இடித்த மறுதினம் சென்ற போதும் இப்படி ஆகவில்லை.
 
தமிழகத்தில் செத்தார் ராஜீவ் காந்தி என்ற ஒரே காரணத்தால் தமிழர்களைத் தேடித் தேடி பீகார் காங்கிரஸார் அடித்த போதும்கூட பூஞ்சையாய் மாறவில்லை.
 
உடன் வேலை செய்த மெக்கானிக் மதம் காரணமாக வெட்டிப்போடப்பட்ட போதும் கூட இந்த  ரத்த போபியா வரவில்லை.
 
இவை நடந்தபோதெல்லாம் கலவரத்தை வாய்மொழியாக மட்டுமே கேட்டிருந்தேன், விளைவுகளை மட்டுமே பார்த்திருந்தேன் - தாக்கத்தை உண்டுசெய்தனதாம், ஆனால் நிரந்தர மாற்றத்தை உண்டு செய்யவில்லை. நிரந்தர மாற்றத்தை உணர்ந்த நாள் தெளிவாகவே நினைவிருக்கிறது.
 
ஒரு இளங்காலை நேரம், பணியிடத்துக்கு நடந்து செல்லும்போது எதிர்ச்சாரியில் எந்த வண்டியும் செல்லாதது வியப்பாக இருந்தாலும் புதிதாக இல்லை - அடிக்கடி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவிக்கும்  "ஆர்த்திக் நாகாபந்தி" (சாலை மறியல்) பழகிவிட்டிருந்தது. ஆனால் பணியிடத்திலும் சலசலப்பு இல்லாதது, ஆட்கள் யாருமே கண்ணில் படாதது புதிதுதான்.
 
என் வேலையைப் பற்றி ஒரு வரி: நிலக்கரிச் சுரங்கம் நடத்துவது அரசாங்கம், அதற்கு இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்தில் என் பணி.  இயந்திரங்கள் பராமரிப்பையும், மராமத்தையும் மேற்பார்வை பார்த்து, உத்தரவாத நேரத்துக்குள் பழுதேற்பட்டால் அதைப் பரிசீலித்து என் நிறுவனத்துக்குத் தகவல் அளித்து சரிசெய்யும் செலவை ஏற்கவைக்கவேண்டியது என் பொறுப்பு.
 
யாரும்தான் இல்லையே, சரி இயந்திரங்களின் வேலைசெய்த நேரத்தைக் காட்டும் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று வண்டிகள் மேல் ஏறத் தொடங்கினேன்.  ஏறும்போது யாரும் கண்ணில் படவில்லை.. இறங்கும்போது ஒரு கும்பல் எனக்காகக் காத்திருந்தது. காட்டுவாசிகள்.
 
20 - 30 பேர் இருப்பார்கள். எதிரில் நான் தனியன். அவர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், வில் அம்பு - விஷம் தோய்த்த அம்பு. தலைவன் போலிருந்தவன் மிரட்டினான் - புரியாத பாஷை. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு. பதில் சொல்லக்கூட நா எழும்பவில்லை. அதிகமான பயத்தில் உடலில் பல மாற்றங்கள்,   வாந்தி வருவது போலிருந்தது. ஒருவன் வில்லை நாணேற்றத் தொடங்கினான்.
 
மூன்றாவது வரிசையில் இருந்த ஒரு ஆளுக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது. முன்வரிசைக்கு முந்தி வந்தான். பளாரென ஒரு அறை விட்டான். ஹிந்தியில் பேசினான். " இன்னிக்கு பந்த் னு தெரியாது? வீட்லேயே இருக்க வேண்டியதுதானே.. ஓடிப்போயிரு.." அவர்களிடம் திரும்பி.. "இவன் அரசாங்கம் இல்ல.. தனியார் கம்பேனி.. தெரியாம வந்துட்டான்.. ஓடச்சொல்லுங்க"  கண்ணில் குரோதத்துடன் கும்பல் வழிவிட மூன்று கிலோமீட்டர் எந்தப்பக்கமும் பார்க்காமல் ஓடியே வீடு வந்து சேர்ந்தேன்.
 
மரணம் தொட்ட அந்தக் கணத்தில் இருந்துதான் இப்படிப்பட்ட செய்திகளின் வீரியம் என்னைத் தாக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனால் உருவாக்கப்படும் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் எந்தச் செய்தியும் குறைந்தபட்சம் மூன்றுநாட்களாவது மனநிம்மதியைக் குலைக்கிறது.
 
இதை எழுத எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது - ஒருவேளை இப்படிப்பட்ட மரணங்களுக்குக் காரணமான யாராவது ரத்தம் சிந்தினால் அதைப்பார்த்து எனக்கு வாந்தி மயக்கம் வராமலும் இருக்கலாம்.
 
ஒவ்வொரு கலவரமும் குண்டுவெடிப்பும் கொண்டுசெல்லும் உயிர்களைத் தவிர்த்தும் இப்படி வாழ்நாள் முழுக்கப் பாதிப்புடன் வளைய வரும் என்னைப் போன்ற எத்தனை பேரை உருவாக்குகின்றதோ! இலங்கையில் ஈழத்தில் பாலஸ்தீனத்தில் ஈராக்கில் எத்தனை பேர் நாள்தோறும் இப்படிப் பாதிக்கப்படுகின்றார்களோ! ஜெய்ப்பூரில் இன்று எத்தனை என்போன்றோர் உருவானோர்களோ..
 
எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?
 
பி கு: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புச் செய்திகள் வெளிவந்த நேரத்தில் இலவசக்கொத்தனாருடன் மின்னரட்டையில் இருந்தேன், நாளை காலை ஒரு பதிவிடுவேன் என்று சொன்னேன். அவர் கேட்டார்.. எப்போ குண்டு வெடிச்சாலும் ஒரு கடமையாவே இதைச் செய்யறீங்களே..  எனவே காரணமான சொந்தக்கதையும் சொல்லியிருக்கிறேன்.

32 பின்னூட்டங்கள்:

Aruna said...

//மரணம் தொட்ட அந்தக் கணத்தில் இருந்துதான் இப்படிப்பட்ட செய்திகளின் வீரியம் என்னைத் தாக்கத் தொடங்கியது ///

இப்பிடி ஒரு கணம் என் தம்பியின் வாழ்விலும் நேர்ந்தது...அப்பப்பா அதிலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வருவதற்குள் நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்.....அதனால் உங்களின் தவிப்பு நன்றாகப் புரிகிறது.......
அன்புடன் அருணா

Anonymous said...

unmai than! ithayellam vidhinnu solli ethukka mudiyadhu

seethag said...

சுரேஷ் ,உஙளுக்கு நேர்ண்ததை நினைக்கும் போது பயமாக இருக்கிறது. மூன்று நாள் இல்லை,,,வாழ்னாள் எல்லாம் இந்த பயம் இருக்கும்.
சென்னை எனக்கு மிகவும் பழக்கமான இடம். என் உடன் பிறப்பு ஒரு முறை ஒரு இஸ்லாமிய பெண்ணை சந்திக்க நேர்ந்ததாம்..அந்தப்பெண்ணின் கணவர் இனக்கலவரத்தில் நம் பல்லவனில் எல்லார் முன்னிலையிலும் கொல்லப்பட்டவராம்...என்ன சொல்வது..சென்னை..நம்ப இயலுமா?

மனிதனுக்கு "அடையாளங்கள் "இருக்கும் வரை இத்தகய துக்கமான செயல்கள் நடக்கும். அரசியல்வதிகளை இதில் குளிர் காய விடாமல் இருப்பது நமது பொறுப்பு.நமது குழந்தைகளுக்குகேனும் நாம் பேதங்கள் கற்பிக்காமால் இருந்தால் அது பெரியது..

தருமி said...

//எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?//

அதிலும் ஒரு ப்ரச்சனை, சுரேஷ். யார் மீது, எதன் மீது கோபப்படுவது என்பதுகூட பல சமயங்களில் தெரியாமல் போய் விடுகிறது.

மனிதத்தன்மையையே கேள்விக் குறியாக்கும் இந்த வெறித்தனங்கள் நின்று போகக்கூட வேண்டாம்; குறையக் கூட வழியிருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக் குண்டு வெடிப்புகளின் காரணிகளை நினைத்தால் வேதனை மேலும் கூடுகிறது.

தருமி said...

//நமது குழந்தைகளுக்குகேனும் நாம் பேதங்கள் கற்பிக்காமால் இருந்தால் அது பெரியது..//

சுரேஷ்,
சீதா அவர்கள் சொல்லும் அந்த நம்பிக்கையும் எனக்கில்லை. குழந்தைகளும் இந்த நாறிப்போன சமூகத்தில்தானே வாழ்வார்கள். நீங்கள் கற்பிப்பதை சமூகம் மாற்றாமலிருக்க வேண்டுமே. உங்களுக்கு வரும் கோபம் இயலாமையில் முடிகிறது. ஆனால், சிலருக்கு ...

'உன் ஆயுதத்தை உன் எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்' என்று வேறு கூறுகிறார்கள்.

violence begets violence ....

இப்படியே போனால் ...

கைப்புள்ள said...

//எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?//

சார், நானும் இந்த மாதிரி உணர்ந்திருக்கிறேன். மத்தபடி இப்பதிவில் ஒவ்வொரு பத்தியும் ஒரு உணர்வுக் குவியல். சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை.

மற்றபடி "No one has ever won a War" என்பதை வன்முறையில் ஈடுபடுபவர்களும் தீவிரவாதிகளும் உணரும் வரை மும்பைகளும், ஜெய்ப்பூர்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது கசப்பான உண்மை.

திவாண்ணா said...

சுரேஷ், இதெல்லாம் கூட நான் தாங்கிப்பேன்.
ஆனா இப்படி நடந்தப்பறம் உள் துறை அமைச் சர் குண்டு வைத்தவர்கள் கோழைகள் ன்னு சொல்லுவாரே- அதைதான் தாங்கிக்க முடியலை. என்னதான் சொல்ல வராங்க? "குண்டு வைக்கபோறேன், சாவ்தான்!" அப்படினு மஹாபாரதா சீரியல் ஸ்டைல்லே சொல்லனுமா?
நம்ம துரதிருஷ்டம் சரித்திரத்திலேயே ரொம்ப சாதுவான ஆசாமி உள்துறைலே இருக்கிறது.

உங்க பிரச்சினைக்கு ஒரு உளவியல் நிபுணரை பாக்கறது நல்லது. உள்ளே பதிந்து இருக்கும் சில விஷயங்கள் வெளியே வந்தா சரியாயிடும். நாடு போற போக்கிலே இந்த செய்திகள் மேலும் மேலும் அதிகமாதான் ஆகும்.

மெளலி (மதுரையம்பதி) said...

காவிரிப் பிரச்சனை சமயத்தில் (93-04) காலங்களிலும், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நேரத்திலும் நானும் இந்த மாதிரி உணர்ந்தது உண்டு.... :(

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தல், நான் விளையாட்டா சொன்னதை சரித்திரத்தின் ஏடுகளில் பதிவு செஞ்சுட்டீங்க.

இந்த மாதிரி மேலும் மேலும் நடந்துக்கிட்டே இருக்கு. பெரிய நகரங்கள்தான் இலக்கு என்பதில்லாமல் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என ஆன பின் எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.

உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் படித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

(On a lighter vein, அதை எல்லாம் பார்த்த உமக்கு வைப்பாலஜி பாடங்கள் எழுதும் துணிச்சல் இருப்பதில் ஆச்சரியமென்ன!)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அருணா. வெளியே வர நீண்ட நாட்கள் ஆகலாம். டைவர்ஷன்கள் தேவை.

அனானி, அதேதான் சொல்ல வரேன்.

சீதா,

//மனிதனுக்கு "அடையாளங்கள் "இருக்கும் வரை இத்தகய துக்கமான செயல்கள் நடக்கும்.// அடையாளங்களை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல்தானே பெருமளவில் நாடாள்கிறது!

//நமது குழந்தைகளுக்குகேனும் நாம் பேதங்கள் கற்பிக்காமால் இருந்தால் அது பெரியது..// தருமி சொல்வதில் நியாயம் இருக்கிறது. நாம் கற்பிப்பதைவிட உலகம் கற்பிப்பது அதிகம்.

பினாத்தல் சுரேஷ் said...

தருமி,

//யார் மீது, எதன் மீது கோபப்படுவது என்பதுகூட பல சமயங்களில் தெரியாமல் போய் விடுகிறது.// அதுதான் இயலாமையாக வெடிக்கிறது. மரத்துப்போவது வரை தொடர்கிறது!!

//'உன் ஆயுதத்தை உன் எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்' என்று வேறு கூறுகிறார்கள்.// இருக்கட்டும்.. யார் அந்த எதிரி? காய்கறி மார்க்கெட்டில் காய்விற்ற கிழவியா? வாங்கவந்த சிறுவனா?

பினாத்தல் சுரேஷ் said...

கைப்புள்ள,
//மற்றபடி "No one has ever won a War" என்பதை வன்முறையில் ஈடுபடுபவர்களும் தீவிரவாதிகளும் உணரும் வரை //

உண்மையான வார்த்தை.. என்று உணர்வார்கள்? இவர்கள் உணர்கையில் இன்னொரு டீம் தயாராகிவிடுமே..

திவா,

//உள் துறை அமைச் சர் குண்டு வைத்தவர்கள் கோழைகள் ன்னு சொல்லுவாரே//

அதெல்லாம் சம்பிரதாயம்.. ஆராயக்கூடாது..

//உள்ளே பதிந்து இருக்கும் சில விஷயங்கள் வெளியே வந்தா சரியாயிடும்//

பதிவா போடுறதே அதுக்காகத்தானே :-)

பினாத்தல் சுரேஷ் said...

மதுரையம்பதி,

என் காலத்துல எல்லாம் இந்த அனுபவத்துக்கு நார்த் இந்தியா போகணும்.. இப்ப எல்லாம் கர்நாடகா புண்ணியத்துல லோக்கல்லேயே இந்த அனுபவம் கிடைக்குது போல :-((

இலவசக்கொத்தனார் said...

//என் காலத்துல எல்லாம் இந்த அனுபவத்துக்கு நார்த் இந்தியா போகணும்.. இப்ப எல்லாம் கர்நாடகா புண்ணியத்துல லோக்கல்லேயே இந்த அனுபவம் கிடைக்குது போல :-((//

கூட்டணி புண்ணியத்தில் நம்ம மாநிலத்துக்குள்ளயே கூட இதெல்லாம் வரும் போல இருக்கு. :(

எல்லாரும் ஆளுக்கு ஒரு அஜெண்டா வெச்சுக்கிட்டு இருக்காங்களே! :((

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

//எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என ஆன பின் எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.//

ஆமாம். நம் எதிரி யார், எங்கிருந்து வருவான், யாருக்கு நான் / என் இனத்தைச் சார்ந்த மற்றவர்கள் / என் முதலமைச்சர் / வார்டு கவுன்சிலர் / பக்கத்து வீட்டுக்காரன் வாழ்வது பிடிக்கவில்லை என்பதை எப்படிக் கணிக்க முடியும்?

என் அனுபவத்திலேயேகூட, நான் அன்றைய நிகழ்வைத் தவிர்த்திருக்கமுடியுமா என்று தெரியவில்லை.. பந்த் என்பதை வானொலியில் அறிவித்தார்களாம்.. எனக்கு ஹிந்தி வானொலி கேட்கும் பழக்கமில்லை.. தெரிவதும் தவிர்ப்பதும் முடியாதவை..

Radha Sriram said...

கேள்விப்பட்டதும் மனதுக்கு ரொம்ப வேதனையா இருந்துது......

//விதி என்ற ஒற்றைச்சொல்லில் மறக்கடிக்கப்படலாம். ஆனால் மனிதன் உருவாக்கும் விபத்துகள்? சைக்கிள்களில் அலாரம் கடிகாரங்களை டெட்டொனேட்டர்களாக ......//

மனச ப்ராண்டுது......

//எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்? //

இதேதான் நானும் உணர்ரேன்...:(

பிரேம்ஜி said...

சுரேஷ்! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நிறைய யோசிக்க வைக்குது உங்க பதிவு.

Subbiah Veerappan said...

மரணம் தொட்ட அந்தக் கணத்தில் இருந்துதான் ////இப்படிப்பட்ட செய்திகளின் வீரியம் என்னைத் தாக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனால் உருவாக்கப்படும் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் எந்தச் செய்தியும் குறைந்தபட்சம் மூன்றுநாட்களாவது மனநிம்மதியைக் குலைக்கிறது.////

உண்மைதான் நண்பரே! அனுபவித்தவர்களுக்கு மட்டுமே முழுமையாய் விளங்கக்கூடிய உண்மை!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கோவையில் அனுபவித்திருக்கிறோம்!

Sridhar V said...

ஜெய்ப்பூர் துக்ககரமான சம்பவத்தில் இறந்த அத்தனை மனிதர்களின் ஆன்மாவும் சாந்தியடையட்டும்.

உங்கள் அனுபவம் மிகவும் கொடுமையானது. படிக்கும்போதே மனம் எத்தனை பாடுபடுகிறது. அந்த நிகழ்ச்சியின் தாக்கம் உங்களிடம் இன்னமும் இருப்பதில் வியப்பில்லை.

//யார் கொடுத்தார் உனக்கு இந்த உயிரெடுக்கும் உரிமை?//

மனித இனம் தோன்றிய முதல் இந்த வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

- மண்ணிற்காக நடந்திருக்கிறது. தங்கள் ராச்சிய இல்லைகளை அதிகமாக்க மாவீர தளபதிகளின் இரத்தத்தை கொதிக்க வைக்கும் உரைகளை கேட்டு பல்லாயிர சிப்பாய்கள் கூட்டம் கூட்டமாக சண்டையிட்டு மாண்டிருக்கிறார்கள். அப்பாவி பொதுமக்களை கூட்டம் கூட்டமாக கொன்றிருக்கிறார்கள்.

- பெண்ணிற்காக - தான் விரும்பும் பெண்ணை அடைவதற்காக மன்னர்கள் போர் புரிந்து நாட்டையே எரித்திருக்கிறார்கள்.

- மதத்திற்காக - தன்னுடைய மதம் சிறந்தது என்று நிரூபிக்க எதிர் மதத்தவர்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.

- சித்தாந்ததிற்காக (ideology) - தான் நம்பும் கொள்கைக்காக பல இலட்ச அதிருப்தியாளர்களை / பொதுமக்களை கொன்று குவித்திருக்கிறார்கள் பல அதிபர்கள்.

- கூலிக்காக - ஒரு குவார்ட்டர் பிராந்தி வாங்கி கொடுத்தால் எவனுடைய உயிரையுமே எடுத்துவிடும் கூலிப்படை இன்னமும் இருக்கிறது.

புலிக்கு மான் இரை. ஓநாய்க்கு முயல் இரை. ஆனால் மனிதனுக்கு மனிதனே இரை.

எதிர்காலத்தில் என்ன பெரும் மாற்றம் வந்துவிடப் போகிறது? வில்லும், வாளும் போய் வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் வந்தது போல வேறு ஆயுதங்கள் புழக்கதில் வரலாம். அவ்வளவுதான் சொல்ல முடிகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

//கூட்டணி புண்ணியத்தில் நம்ம மாநிலத்துக்குள்ளயே கூட இதெல்லாம் வரும் போல இருக்கு. :(// இனிமேல்தானா?

ராதா ஸ்ரீராம்,

//இதேதான் நானும் உணர்ரேன்...:(//

மௌனப்பெரும்பான்மை உணருது.. ஆனா, சிறுபான்மைக் கடவுள்களுக்கு அந்த உணர்ச்சி வருவதில்லை!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பிரேம்ஜி..

SPVR சுப்பையா,

//பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கோவையில் அனுபவித்திருக்கிறோம்!// கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அந்த நகரத்தின் துள்ளலையே புரட்டிப்போட்டதாக ஊர்க்காரர்கள் சிலர் சொன்னார்கள்.. கொடுமை!

ஸ்ரீதர்,

//மனித இனம் தோன்றிய முதல் இந்த வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. // இவை வளர்ந்துகொண்டே இருந்தால் என்ன எழவு நாகரீகம் வேண்டிக்கிடக்கிறது?

ambi said...

அட, ராஜ்குமார் இயற்கையாக இறந்ததுக்கு கூட பந்த், கலவரம் நடந்தது. ரெண்டு நாள் நான் ரூமை விட்டு வெளியே வரவே முடியலை.

ரெண்டு நாளைக்கும் ஒரு பாக்கட் ரொட்டி தான் உணவு. மறு நாள் தமிழ் வருட பிறப்புக்கு எப்படியோ பஸ் பிடிச்சு சிருங்கேரி போய் சேர்ந்தேன். 2 நாளைக்கப்புறம் அரிசி சாதத்தை பார்த்த நான் அடைந்த சந்தோஷம் இருக்கே!

நீங்கள் சொல்வது போல எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?

இலவசக்கொத்தனார் said...

//பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கோவையில் அனுபவித்திருக்கிறோம்!//

வாத்தியாரய்யா, நீங்களும் அங்கதான் இருந்தீங்களா? நானும்தான். ராம் நகரில் வீடு, அவினாசி ரோடில் ஆபீஸ்.

ரசிகன் said...

ஞாயமான ஆவேசம்:)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க அம்பி.. உண்மைதான்.. இயலாமைதான்..

கொத்ஸ், கோவையிலும் இருந்திருக்கிறீர்களா? ஹே ராம் பட ஹீரோ மாதிரி நீர் இல்லாத ஊரே இல்லை போல!

ரசிகன்.. உண்மை.

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,
மன வருத்தத்தை / ஆதங்கத்தை / கோபத்தை பதிவு செய்வதில் கூட ஒரு கண்ணியமும், நேர்த்தியும் இதில் தெரிகிறது. இறந்தவர் ஆன்மா சாந்தியடைவதை விட, அவர் தம் உற்றார், உறவினர் மன அமைதியும், திடமும் பெற பிரார்த்திக்கிறேன். பதிவுக்கு நன்றி.
எ.அ.பாலா

சாய்ராம் கோபாலன் said...

சுரேஷ்

அழகான வரிகள் ஆதங்கத்தை வெளியிட - கட்டுபாட்டை மீறமால்.

திருச்சியில் உள்ள ஒரு கோயிலில் எழுதி வைத்த ஆசைகள் நிறைவேறும் என்ற சொன்ன அந்த ஊரில் இருந்து கண்டெடுத்த என் மனைவி சொன்னாள்.

அந்த கோயிலில் "இந்திய அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்று எழுதி வைத்தவன் நான்". அவர்கள் திருந்தினால் நாடு திருந்திவிடும் என்ற நாப்பாசை தான் காரணம்.

மதத்தை வைத்து நடத்தும் அரசியல் கறைவெட்டி கும்பல் நம் நாட்டை இன்னும் சேதப்படுத்தும் அது நம் சாபக்கேடு

- சாய்ராம் கோபாலன், நியூஜெர்சி

பினாத்தல் சுரேஷ் said...

எ அ பாலா,

//இறந்தவர் ஆன்மா சாந்தியடைவதை விட, அவர் தம் உற்றார், உறவினர் மன அமைதியும், திடமும் பெற பிரார்த்திக்கிறேன்//

நானும் இணைகிறேன்.

சாய்ராம் கோபாலன்,

//அந்த கோயிலில் "இந்திய அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்று எழுதி வைத்தவன் நான்". //

நீங்கள் நாஸ்திகரா :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anbezhilan said...

"சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வெளிவரும் ஒற்றைத் துளி ரத்தத்தையும் பார்க்கமுடியாமல் முகம் திருப்புகிறேனே"

நேர்த்தியான வரிகள். கட்டுரை முழுவதும் உங்கள் உள்ளக குமுறலை வெளிப்படுத்த உங்கள் சரளமான எழுத்து நடை வெகுவாக துணை புரிந்திருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அன்பெழிலன்.

குசும்பன் said...

அருமையாக சொல்லி இருக்கீங்க பினாத்தல்.

Unknown said...

எல்லாருடைய ஆதங்கம்+இயலாமையை அருமையாக பதிவில் கொட்டி விட்டீர்கள்.

இதற்கெல்லாம் ஒரே வழி, நல்லவர்கள் அரசியலுக்கு வருவதுதான். சாக்கடை என்று தள்ளிப் போனால், நாளை ஒதுங்கக் கூட இடம் இருக்காது. அரசியல்தான் இந்த மாதிரி அழிவுகளுக்கு அடிப்படை.

 

blogger templates | Make Money Online