Jan 29, 2005

ஒரு எழுத்தாளர் விடை பெறுகிறார்..

கடை விரித்தேன் ..கொள்வாரில்லை என்று கூற முடியாது.

என் வலைப்பதிவையும் சிலரேனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் என்பதற்கு சில பின்னூட்டங்கள் சாட்சி.

இருப்பினும், பதிவது அலுத்துப் போய் விட்டது.

எழுத வரவில்லை என்பது முக்கிய காரணம்.

தீவிர எழுத்து ஒரு தவம் போல. அப்படி எழுத ஒருமுகப்பட்ட சிந்தனை, இடைவிடாத படிப்பு, கொள்கை உறுதி போன்ற பல குணங்கள் தேவைப்படுகின்றன. என் நுனிப்புல் மேய்விற்கு இது சரிப்படாது.

நக்கலும் நையாண்டியுமாக எழுதலாம் - என்றால் அதற்கு பல போட்டியாளர்கள் - பலர் என்னை விடச் சிறப்பாகவே எழுதுகின்றனர். (காக்கைக்கும் தன் குஞ்சு - என்னும் அளவிலே கூட என் எழுத்து இல்லை என்பது எனக்கே தெரிகிறது)

இன்று காலை வடை சாப்பிட்டேன் என்று நாட்குறிப்பாக எழுதவும் பொறுமை இல்லை.

பொதுவான டாபிகல் விஷயங்களிலும் என் கருத்தை சுறுசுறுப்பானவர்கள் பதிந்து விடுகிறார்கள்.

கவிதை (ஆசிப் மீரானின் கவுஜ) எழுத நானும் துன்பப்பட்டு வழி தவறிப் படிக்கவரும் சிலரையும் துன்பப் படுத்தவும் தயாராக இல்லை.

எனவே, நாட்டு மக்களுக்கொரு நற்செய்தி:

இன்னும் கொஞ்ச காலத்திற்காவது வெறும் வாசகனாகவே இருப்பது என்று தீர்மானித்துள்ளேன்

எழுதும் பழக்கம் உள்ளவர்களை, எழுதத்தெரிந்தவர்களை கிண்டல் செய்து காலத்தை ஓட்டலாம் பாருங்கள். (சந்திப்பிழையிலிருந்து சந்தர்ப்பப்பிழை, இடப்பிழை, பொருட்பிழை என்று பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கலாம்)

இடையில் எனக்குள் இருக்கும் எழுத்தாள மிருகம் உயிர் பெற்றால், அதை முதலில் காகிதத்தில் "மியாவ்" எனக் கத்தவிட்டு, சில நாள் கழித்து படித்து பிறகு இங்கே இட்டு வாசகர்களை காப்பாற்றலாம் என்று ஒரு யோசனை.

இதை ஒரு பதிவாக இட முக்கியமான காரணம், என் பதிவை யாரேனும் படித்து விட்டு, இவ்வளவுதானா தமிழ்மணம் என ஓடக்கூடாது என்பதே!

9 பின்னூட்டங்கள்:

Narain said...

சுரேஷ் நம்பிக்கை இழக்காதிர்கள். எழுதுவதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளது. சற்று ஒயவெடுத்துவிட்டு மீண்டும் வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.

SATHYARAJKUMAR said...

சுரேஷ்,

உங்களுக்கு உங்கள் நண்பர்களிடம் பேசுவதற்கு விஷயம் இருக்குமானால் நீங்கள் எழுதவும் விஷயம் இருக்கவே செய்யும். ஒவ்வொரு பொருளையும், சம்பவத்தையும் ஒவ்வொருவரும் ஒரு மைக்ரோ டிகிரியாவது மாறுபட்ட கோணத்தில்தான் பார்ப்பார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. உங்கள் பார்வையை நீங்கள் மட்டுமே எழுத முடியும். பதிவது அலுத்துப் போய் விட்டது என்றால் நீங்கள் தாராளமாக நிறுத்தி விடலாம். எழுத வரவில்லை என்பதற்காக நிறுத்துகிறேன் என்பது சரியல்ல.

- சத்யராஜ்குமார்

Anonymous said...

எலே மக்கா,
என்னலே புதுக்கத சொல்லுதே?
எழுதுதவன் எல்லாம் வெவரமாத்தான் எழுதணும்னு எவம்லே சொன்னது?
அப்படில்லாம் பாத்தா நானெல்லாம் எழுதியிருப்பனாலே? பெனாத்துறதை
நிறுத்துற மாதிரி ஒரு பெனாத்தல் உலகத்துலேயே கெடயாது மக்கா.
"சாத்தான்"குளத்தான்

Jsri said...

///
(சந்திப்பிழையிலிருந்து சந்தர்ப்பப்பிழை, இடப்பிழை, பொருட்பிழை என்று பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கலாம்)
////

பரி(மேலழகர்)யைத்தானே சொல்றீங்க? :அப்பாவி:

அல்வாசிட்டி.விஜய் said...

கொஞ்ச இடைவெளிவிட்டு வாருங்கள்.நிறைய படியுங்கள் அந்த வேளைகளில். உங்களுக்கும் புத்துணர்வாகியிருக்கும். மீண்டும் எதிர்பார்ப்போம் உங்களை.

அன்பு said...

இடைவேளை-ன்னு போடல்லாம் அவசியமில்லப்பா... நமக்கு எப்போ தோணுதோ அப்போ எழுதலாம் - எழுதியது உடனே அனைவருக்கும் சென்றடைய 'தமிழ்மணம்' இருக்க கலக்கமேன்.

சோ... நீங்க தொடர்ந்து இங்க படிச்சாலே கண்டிப்பா எழுதுவீங்க, அதனால் தொடர்ந்து இங்கு இருந்தாலே போதும்.

Anonymous said...

Dear Suresh,
Nothing wrong in taking a BREAK! Do keep reading Tamil blogs and we all expect you to return to active blogging after your self-proposed hibernation :-) I still need you to comment on my "pallaviyum saraNamum" series!!!
enRenRum anbudan
BALA

துளசி கோபால் said...

அன்புள்ள சுரேஷ்,

இதுக்கெல்லாம் மனம் கலங்கிட்டா எப்படி? விக்ரமாதித்யனும் வேதாளமும் போல இருக்க வேணாமா?

எழுதறதுக்கு விஷயங்களா இல்லை? ஏன்? 'அந்த வடை' சாப்பிட்டதையே, எங்கே, எப்படின்னு
ஆரம்பிச்சு, அதன் செய்முறைன்னு வளர்த்துக்கிட்டேப் போகவேண்டியதுதானே?

நம்மைச் சுத்தி எத்தனையோ விஷயம் நடந்துக்கிட்டே இருக்குல்லே, அதை வேற ஒரு கோணத்துலே
பார்த்தாப் போச்சு!

கொஞ்சநாள் ஓய்வு எடுத்துக்கிட்டு திரும்பி வாங்க. நாங்கெல்லாம் எங்கேயும் போயிரமாட்டோம்!
அதுவரைக்கும் 'இலக்கியம்' பதிஞ்சுக்கிட்டு இருப்போம்!!!!!!!!

இது 'அன்பு'வுக்கு

//சோ... நீங்க தொடர்ந்து இங்க படிச்சாலே கண்டிப்பா எழுதுவீங்க, அதனால் தொடர்ந்து இங்கு இருந்தாலே போதும்.
# posted by அன்பு //

ஆமாம். சோ என்னத்துக்கு 'துக்ளக்'குலே எழுதறதுக்கு இங்கே தொடர்ந்து படிக்கணும்? :-)

என்றும் அன்புடன்,
துளசி.

பின்னூட்டப் பெட்டி நிறையறதுக்கு இப்படி ஒரு வழி இருக்கா?

கோபி(Gopi) said...

நாட்டாண்மை ஸ்டைலில் படிக்கவும்:

ஏனுங்க! என்னங்க இப்டி நாக்கு மேல பல்ல போட்டு சொல்லிப் போட்டீங்க!

இப்டியெல்லாந் தப்பிக்கலான்னு நெனச்சா செல்லாது! செல்லாது!

பொளிச்சு.. பொளிச்சு.. (அட.. வெத்தலைய துப்புறாருங்க)

இன்னியிலிருந்து ஒரு வர்சத்துக்கு வாரம் ஒரு முறையாவது பினாத்தனும்! இல்லைன்னா பினாத்தலுக்கு ஆரும் பதில் பதிக்க கூடாது! ஆரும் பின்னூட்டம் பதிக்க கூடாது!

இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு! ஆமா சொல்லிப் போட்டன் (போட்டன்...போட்டன்...எக்கோ...)

 

blogger templates | Make Money Online