Mar 30, 2010

அங்காடி தெரு- நான் கடவுள் - ஏழாம் உலகம்

"இதே கலர்ல டீ ஷர்ட் 42 இல்ல 44 சைஸ்லே இருக்குமாம்மா?" என்று கேட்டிருக்கிறேன் ரங்கநாதன் தெருக்கடையில்.

"இருக்காது சார்"

"பாத்துட்டு சொல்லலாமில்ல? ஒரு ஸ்மைலிங்கா சொல்லேம்மா" என்று சொல்லியிருக்கிறேன் கடையை விட்டுக் கிளம்பும் முன். அதோடு அதை மறந்தும் போயிருக்கிறேன்.

ஆனால் இப்போது தெரிகிறது, நான் பேசியது கனியுடன் என்று. செல்வராணியுடன் என்று. சோஃபியாவிடம் என்று.

ஆயிரம் முறையாவது போயிருப்பேன் ரங்கநாதன் தெருவிற்கு. ஆனால் இப்போதுதான் வசந்தபாலன் அந்தத் தெருவுக்கு முறையாக அழைத்துப் போயிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்காதே. எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் பார்.

எல்லாம் தென் தமிழ்நாட்டுத் தமிழ் பேசுகிறார்கள் என்பதை மட்டும் கவனித்தாயே, 13 வயதுப்பையன்கள் கேள்விகேட்டதும் 18 வயது (அப்படின்னா எனக்கு 90 இருக்கும்பா.. உண்மையச் சொல்லு) என்று கூசாமல் சொல்கிறார்கள் என்பதைக் கவனித்தாயே, அவர்கள் எங்கே தங்குகிறார்கள் என்று யோசித்தாயா என்று கேட்கிறார்.

பொதுக்கழிப்பிடத்துக்குக் காசு வாங்கும் அவலத்தை லெட்டர்ஸ் டு த எடிட்டருக்கு எழுதத் துடிக்கிறாயே, அது ஒரு பிச்சை எடுக்காதவனின் உழைப்பு என்பதை உணர்ந்தாயா?

"பத்து ரூபாய் ரிமோட் கவர்" விற்கும் பையன் ப்ளஸ்டூ படித்திருப்பானோ?

உதயம் தியேட்டர் ப்ளாட்பாரத்தில் 22 பேரைக் கொன்ற கொடூர விபத்தை மறுநாள் காலையில் பார்த்தேன். ஒரு மாதம் கழித்து "என்னையும் வந்து ஏற்று" என்று இன்னொரு 22 பேர் அதே இடத்தில் படுத்துக் கிடந்ததையும் பார்த்தேன். வேண்டுதலா அவர்களுக்கு லாரிகளுக்கு எலுமிச்சம்பழமாக?

திருட்டுப் பட்டம் கட்டுவதற்கும் ஸ்கிரீன் மறைவில் கசக்குவதற்கும் ஏற்ற முக்கால் அனாதைப் பிள்ளைகள், மாதம் முதல் செக்லிஸ்டின் பிள்ளையார் சுழியாய் ஏன் R-1? அண்ணாச்சிகளுக்கு ஆர் 1 துணை, ஆர்1களுக்கு அண்ணாச்சிகள் துணை - கைவிடப்பட்டவர்களுக்கு யார் துணை?

கேள்விகள்.. கேள்விகள். இப்படிக் கேள்விகள் இருப்பதையும் நான் அறிந்திராத ஆயிரம் கேள்விகள்.

ஏழாம் உலகம், என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல். நள்ளிரவில் படித்து முடித்துவிட்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்காக இரவெல்லாம் தூங்காமல் என்ன செய்வது, யாரை உதைத்து இவர்களின் இழிநிலைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருவது? உதைக்கப்படவேண்டியவர்கள் வரிசையின் நானும் நிற்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி கலங்கடிக்க நான் அனுபவித்த சுகங்கள் எல்லாம் சுமையாகத் தோன்றி மூன்று நாட்களுக்கு எதிலும் முனைப்பில்லாமல் செய்த நாவல்.

ஏழாம் உலகம் நான் கடவுளாகப் படமானது ஒரு விபத்து. அகோரிகளையும் ஏழாம் உலகமும் கொத்துக்கறியாக. திரைப்படம் என்பதற்கான இலக்கணத்துக்காக ருத்ரன் தாண்டவனைப் புரட்டி எடுத்தான் - அந்த புரட்டி எடுத்தலை மையப்படுத்தியே ஆரம்பத்தில் இருந்து கதை நகர்ந்தது - தாண்டவன் அனியாயத்துக்குக் கெட்டவன், அம்சா பாவம் அவளை குரூபிக்குக் கூட்டிக் கொடுக்கிறான், ருத்ரன் முக்கா கடவுள், இப்போது அவளை ரட்சிப்பான் - இந்தக் கூத்தில் ஒரு பேக்ட்ராப்பாக மட்டுமே வந்தது ஏழாம் உலகம். நாவல் தோற்றுவித்த எந்த உணர்வையுமே படம் தோற்றுவிக்கவில்லை. பஞ்ச் டயலாக் இல்லையே தவிர அது ஒரு மாஸ் ஹீரோ படம்தான்.

ஏழாம் உலகம் கேட்ட கேள்விகளில் முக்கியமானது - தினமும்தான் பார்க்கிறாய் இவர்களை. ஒரு நாளாவது கவனித்திருக்கிறாயா?

அதே கேள்வியை "இவர்களை" மட்டும் மாற்றிக் கேட்கிறது அங்காடி தெரு.

ஆனால் நான் கடவுள் செய்திருக்கவேண்டிய ஆனால் வழுக்கிய பல இடங்களைச் சரி செய்திருக்கிறார் வசந்தபாலன்.

நான் கடவுளில் தரைக்கு மேலே மிதந்த கதாபாத்திரங்களை தரைக்குக் கொண்டு வந்து Closer to life ஆக்கியதன் மூலம் அனாயாசமாகச் செய்திருக்கிறார். பாலாவை பாலன் ஜெயித்திருக்கிறார்.

ருத்ரன் போல யாரையும் உதைக்கும் எதற்கும் கவலைப்படாத டெர்மினேட்டர் பாடி இல்லை லிங்குவுக்கு. இயலாமையின் உச்சியில் காலைப்பிடித்து அழுபவன் தான். ஆனால் இவனும் ஹீரோ ஆகிறான் - திரைமறைவில் கசக்கிய சூப்பர்வைசரை விளைவுகளுக்கு அஞ்சாமல் புரட்டி எடுத்து - விளைவாக புரட்டி எடுக்கப்பட்டு; புத்தி சொல்லும் முடிவை உறுதியான இதயத்தால் மாற்றி.

அம்சவல்லிக்கு குரூபியுடன் திருமணம் ஆவதே முக்கியமான குறை. கனி கசக்கலைப் பற்றி வருந்தினாலும் அதை வாழ்க்கையாக நினைக்கவில்லை.

அண்ணாச்சிகளுக்கும் தாண்டவன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கைவிடப்பட்டவர்களைக் கறப்பவன் பணக்காரன் ஆனதும் புத்திசாலியும் ஆகிறான்.

இந்தப்பதிவு படத்தின் விமர்சனம் இல்லை. விமர்சனம் என்பது குறைநிறைகளைத் தொட்டுக்காட்டுவது. இப்போதைக்கு அதைச் செய்வதாக உத்தேசம் இல்லை. சிறு சிறுகுறைகளையும் மீறி என் தூக்கத்தைக் கெடுத்த கோர்வையற்ற எண்ணங்களை பதிந்தே ஆகவேண்டும் என்ற உந்துதல்தான் இந்தப்பதிவு.

அய்யனார் சொல்லிதான் தெரிந்தது துபாயில் படம் ஓடுகிறது என்று. தியேட்டரில் சொற்பக் கூட்டமே. இன்னும் இரண்டு நாளில் பையா விரட்டப் போகிறதாம்.

என்ன, எனக்குதான் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் - தரைக்கு வந்து, "அந்த ஷர்ட்டை எடுத்துப் போடுப்பா, சோம்பேறித்தனம் பாக்காம" என்று சொல்ல

14 பின்னூட்டங்கள்:

ஆயில்யன் said...

பொதுவில் மனிதர்களிடத்தில் மனதளவில் மாற்றம் கொண்டு வருகின்ற எந்த படைப்புக்களுமே ஜெயித்துவிடுகின்றன!

படம் பார்த்த பலருக்கும் ஏற்பட்ட மன மாற்றங்கள் கொஞ்ச காலத்திற்காகவாது ரங்கநாதன் தெருவிற்கு அனுதாப பார்வையோடு அழைத்துச்செல்லும் -செல்லட்டும் !

Anonymous said...

நல்ல விமர்சனம் - இந்தப் படத்தைப்பற்றிப் பேசும்போதுமட்டும் எல்லோரும் ரொம்ப உணர்ச்சிவயப்படுவது நிச்சயம் தற்செயலாக இருக்கமுடியாது ;)

- என். சொக்கன்,
பெங்களூரு.

சாத்தான் said...

நல்ல பதிவு. முழுக் கதையையும் எழுதித் திரைவிமர்சனம் ஆக்கிவிடாமல் தேவையானதை மட்டும் எழுதியிருக்கிறீர்கள். :-)

karthi said...

a different review ..good one sir

Ananya Mahadevan said...

துபாயில் ஓடுகிறதா? இந்த படத்தை பற்றி நான் படித்த முதல் விமர்சனம் உங்களுடையது தான். மதுர் பண்டார்கர் மாதிரி தமிழில் ஒரு முயற்சி என்று தெரிகிறது. எப்படியாவது பார்த்து விட வேண்டும். முயல்கிறேன். நன்றி!

Karthik said...

செம பதிவுங்ணா. ரொம்ப நல்லாருக்கு. நான் இனிமேல்தான் பார்க்கணும்.

கோபிநாத் said...

பார்த்துட்டிங்களா தல...நம்ம ஊருக்கு வருமுன்னு காத்துக்கிட்டு இருக்கோம்...வருமான்னு தெரியல..

Venkata Ramanan S said...

Different view

கபீஷ் said...

Same feeling.:-(

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆயில்யன்.

/மனதளவில் மாற்றம் கொண்டு வருகின்ற எந்த படைப்புக்களுமே ஜெயித்துவிடுகின்றன/ உண்மை, ரிப்பீட்டேய், RT.

நன்றி சொக்கன். தற்செயல் இல்லைதான் :) பாருங்க படத்தை.

நன்றி சாத்தான். விமர்சனம் இல்லை :)

நன்றி கார்த்தி.

நன்றி அனன்யா மஹாதேவன், மதூர் பற்றி நிறையக்கேள்விப்படுகிறேன். இன்னும் பார்க்க நேரம் அமையவில்லை. ஹிந்திப்படம் தியேட்டரில்தான் பார்க்கவேண்டும் என்ற மேலிடத்து விருப்பத்தால் டிவிடி எடுக்கவில்லை.

நன்றி கார்த்திக்.

நன்றி கோபிநாத். ஷார்ஜாவில் வரப்போவதில்லை என்றே அறிகிறேன் :(

நன்றி ரமணன்.

நன்றி கபிஷ்.

Ayyanar Viswanath said...

சுரேஷ்,

நல்லதொரு பகிர்வு. மனித நேயத்தைக் கூட புத்தகம் படித்தோ திரைப்படங்கள் பார்த்தோதான் அறிந்து கொள்ளுமளவிற்கு நாம் இந்த வியாபார உலகினால் மறைமுகமாகப் பழிவாங்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது சுடத்தான் செய்கிறது.

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

படம் ரங்கநாதன் தெருவிற்கு மட்டும் பொருந்தாது, பர் துபாயில் கடை வாசலில் நின்று வாடிக்கையாலரகளிடம் கெஞ்சும் மலையாள tholilaarkalukkum பொருந்தும்,

டான்ஸ் பார்களில் ஆடும் பெண்கள் வாழ்வும் இது போன்ற ஒரு வாழ்வே.

Ananya Mahadevan said...

//மதூர் பற்றி நிறையக்கேள்விப்படுகிறேன். இன்னும் பார்க்க நேரம் அமையவில்லை. ஹிந்திப்படம் தியேட்டரில்தான் பார்க்கவேண்டும் என்ற மேலிடத்து விருப்பத்தால் டிவிடி எடுக்கவில்லை//
அப்படி ஒன்றும் பெரிய விஷுவல் எஃபெக்ட்ஸோ, கிராஃபிக்ஸோ இருக்காது. மிகச்சாதாரணமான கதை மிக லாவகமாக எடுப்பது தான் மதுர் ஸ்டைல். சமீபத்தில ட்ராஃபிக் சிக்னல் என்ற படம் என்னை மிகவும் கவர்ந்தது. சிக்னல்களில் பிச்சைக்காரர்கள், பூ விற்பவர்கள், பேப்பர் விற்கும் சிறுவன், கார் துடைக்கும் சிறுவன் இவர்களெல்லாம் தான் படத்தின் ஹீரோ! முடிந்தால் பார்க்கவும்.

பத்மா அர்விந்த் said...

even if we make an attempt to stop violence toward one kid or educate on kid whenever or wherever that will make a change. Its heartbreaking to work with these kids and see the happiness that little things can bring. But it is unfortunate that a movie or story is needed to make people look around. It is not that many are not aware but they refuse to realize

 

blogger templates | Make Money Online