Jan 8, 2014

கரியும் கசடுகளும் கொஞ்சம் கண்ணீரும் - கரும்புனலின் கதை

May you live in interesting times என்று ஒரு சீனத்துச் சாபம் ஒன்று உண்டாம். சிலபல வருடங்களுக்குப் பிறகு கதையாகச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் பல விஷயங்கள் வாழும்போது கொடுமையாகத்தான் இருக்கின்றன. 

ராஜீவ் காந்தி கொலையானபொழுது பீஹாரின் ஒரு மூலையில் இருந்தேன். என் தலைவர் தமிழர்களால் கொல்லப்பட்டார், எனவே நாம் தமிழர்களைக் கொல்வோம் என்பதற்கு மேல் வேலை செய்யாத மூளைக்காரர்களால் நிரம்பிய ஊர். இத்தனை வருடம் கழித்து பூட்டிய அறைக்குள் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டு பயந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக மிச்சமிருந்தாலும்,  உண்மையா பொய்யா என்று தெரியாத வதந்திகளால் வெளியே நடந்த கலவரத்தைவிட உள்ளுக்குள் நடந்த கலவரத்தை வாழும்போது interesting ஆகத்தெரியவில்லை. 

ரயிலி ஏறி, ஜன்னலோர சீட் பார்த்து அமர்ந்தவனை எழுப்பி பளாரெனக் கன்னத்தில் அறைந்து பர்ஸைப்பிடுங்கிக்கொண்டு சென்ற கதை, இப்போது மட்டும்தான் Interesting.

டிசம்பர் ஆறாம்தேதி எதோ எங்கேயோ கலவரம் என்று அரைகுறைத் தகவல்களோடு அயோத்திக்கு மிகப்பக்கமாக ரயிலில் செல்லும்போது எரியும் குடிசைகளைப்பார்த்தது, சுரங்கச் சாலையைக் கடக்கும்போது காரணம் சொல்லாமல் போலீஸால் கைது செய்யப்பட்டது, ஆற்றில் குளிக்கும்போது சாம்பல் உள்ளே சென்று வாந்தியாக வெளியே வந்து 3 நாட்கள் சலைன் உதவியோடு மட்டுமே வாழ நேர்ந்தது,  பீஹாரைப் பிரிக்க ஜார்க்கண்ட்காரர்கள் கலவரம் செய்ய நடுத்தெருவில் ராத்திரியில் நின்றது, ஓட்டிச்சென்ற ஜீப் ஆளரவமில்லாத அதலபாதாளத்தில் உயிரைவிட்டது..

அமோகமாகவே சபிக்கப்பட்டிருக்கிறேன், Interesting காலங்களில் வாழ.

கரும்புனல் அட்டை
வீடு, குறுகிய நட்புவட்டம், கல்லூரி என்று “பழம்” வாழ்க்கை வாழ்ந்துவந்த எனக்கு, நிலக்கரிச் சுரங்க நகரியங்களில் தனியாக வாழ நேர்ந்தபோது ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி கொஞ்சநஞ்சமானது இல்லை. ஊழலை எப்படியெல்லாம் விஞ்ஞானமாக்கலாம் என்றே ஏகதேசம் சிந்திக்கும் மேலதிகாரிகள்;  நுனிநாக்கு ஆங்கிலம் நாகரிகமான தோற்றம் உள்ளே சாக்கடையான மனது கொண்ட எஞ்சினியர்கள்; கழட்டும் எஞ்சினை ஒருவேளை கீழ்ஜாதிக்காரன் தொட்டிருப்பானோ என்றெல்லாம் யோசிக்கும் சுரங்க ஊழியர்கள்; விவசாயம் செய்வதையும் கலவரத்தில் எதிர்மதக்காரனைப் போட்டுத்தள்ளுவதையும் ஒன்றேபோல நினைக்கக்கூடிய மக்கள்... எந்தக்கல்லூரியும் சொல்லித்தராத வாழும் கலையை எனக்குச் சொல்லித்தந்தது பீஹார்.

ஆனால், அந்தக்காலம் மட்டும் அல்ல.. எழுதிப்பழக்கமில்லா என்னை ஒவ்வொரு எழுத்தாக அன்பாகவும் அடித்தும் திருத்திவரும் நண்பர் குழாம் அமைந்திருக்கும் இந்தக்காலமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. நாம ஒண்ணை எழுதினா அது ஒழுங்காத்தான் இருக்கணும் - என்று குழுவாகச் செயல்பட்டு ஊக்குவிக்கும் உடன்பிறவா சகோதரர்கள் இலவசக்கொத்தனார், டைனோபாய்; நீளமாக எழுதவே சோம்பேறித்தனப்பட்ட என்னை விர்ச்சுவல் பிரம்பால் அடித்து முதல் நாவல் எழுத வைத்த பா.ராகவன்; எவ்வளவு வேலை இருந்தாலும் நான் அனுப்பியதைப்படித்து உடன் திருத்தம் சொல்லும் சொக்கன்; தன்னைத் திட்டியே எழுதினாலும் புன்சிரிப்போடு கடக்கும் என் இல்லாள்..இதுவும் சுவாரஸ்யமான காலம்தான். ஆனால் கொடுமைகள் இல்லாத, சுகமான சுவாரஸ்யம்.

இந்த நாவலை எழுத எந்தப் பிரயத்தனமும் தேவைப்படவில்லை. பெரும்பாலும் நடந்த சம்பவங்களை ஒரு கதைச் சரட்டில் கோப்பதைத் தவிர.  

--கரும்புனல் நாவலில் பதிந்திருக்கும் என்னுரை.
--சில பழங்கதைகளுக்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.
--வம்சி பதிப்பக ஸ்டாலில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் 

6 பின்னூட்டங்கள்:

திவாண்ணா said...

ஆன்லைன் வாங்க வழி இருந்தா சொல்லுங்களேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வந்தவுடன் அப்டேட் பண்றேன் வாசுதேவன்.

கார்த்திக் சரவணன் said...

வம்சி பதிப்பகம்... நோட் பண்ணியாச்சு...

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாவ்! வாழ்த்துகள் சுரேஷ்.

மாலி நடராஜன் said...

சத்தியமா ரெண்டுநாளா இதே நினப்பு. நானெல்லாம் இந்த அளவு சாதீயத்தை கேள்விப்பட்டதோடு சரி - எதோ நம்ம ஊர்ல ஓவரா சொல்ராங்கன்னு நினைச்சுருந்தேன் - ஆனா நீங்க சொல்ரத பார்தா - நான் எல்லாம் அதிருஷ்டம் பண்ணியிருக்கற ஊர்ல இருக்கோம். பழங்குடி/ஆதிவாசி மக்களை மனிதர்களாவே இந்த அதிகாரிகளும்/ஆட்சியாளர்களும் மதிப்பதில்லை. சாதாரண் மொழிநடை - கடைசிவரி குண்டு இல்லாத அத்தியாய முடிவுகள் - இருந்தும் கடைசி வரை சுவாரஸ்யம். வாழ்த்துக்கள்.

 

blogger templates | Make Money Online