ரோசா வசந்த், வாய்ஸ் ஆன் விங்க்ஸ், சத்யராஜ்குமார், டோண்டு மற்றும் சங்கரபாண்டி ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றி.
நான் நினைத்தது (பயந்தது) போலவே விவாதம் பழக்கப்பட்ட பாதையிலேயே சென்றுகொண்டுள்ளது.ஹிந்தி பேசும் காய்கரிக்காரியில் தொடங்கி ஐ.டி புரட்சி வரை எல்லாவற்றையும் தொட்டுச் செல்கின்றன பின்னூட்டங்கள்.
என் கருத்துக்கள்:
ரோசா, வட இந்தியர்கள் நங்க நல்லூரில் காய்கரிக்காரியிடம் ஹிந்தி பேசுவதில் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை. (நானும் நங்கநல்லூரில் இருந்த நான்கு ஆண்டுகளில் இப்படி கவனித்ததில்லை)
நான் குஜராத்திற்கோ, ஒரிஸ்ஸாவிற்கோ போகும்போது யாரிடமும் முதலில் ஹிந்தியில் தான் பேச ஆரம்பிப்பேன். அவர்களுக்கு மொழி புரியாத போதுதான் வேறு மொழிகளை (சைகை மொழி உள்பட) முயற்சிப்பேன்.
ஆங்கிலம் உலக மொழி என்ற கற்பிதத்தோடு ஸ்பெயினில் ஒரு ஹோட்டலைத்தேட மூன்று மணிநேரம் சுற்றியதும் உண்டு!
ஆனால், எனக்கு பழக்கப்பட்ட ஒரு மொழி, எதிராளிக்கும் பழக்கப்பட்டதாக இருக்குமோ என முயற்சிப்பதில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை.
ஒரிஸ்ஸாவில் ஹிந்தி பேசியதாலோ, ஸ்பெயினில் ஆங்கிலம் பேசியதாலோ நான் எந்த மொழித் திணிப்பும் செய்துவிட்டதாக உணரவும் இல்லை.
வாய்ஸ் ஆன் விங்க்ஸ்-இன் கருத்துக்களுடன் நான் பெரும்பாலும் உடன்பட்டாலும், நம் காய்கறிக்காரியின் மொழிப்புலமையை வைத்துத்தான் காஸ்மோபாலிடன் அந்தஸ்து நமக்குக் கிட்டும் என நிச்சயமாகக் கருதவில்லை.
எனக்கு இயல்பாக வருவது என் தாய்மொழியே. வெளியூர்க்காரர்கள் வரக்கூடும் என்பதற்காக நான் ஒரு கூடுதல் மொழியைக் கற்க வேண்டும் என்பது திணிப்புத்தான்!
மேலும், பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுக்கப்படுவதால் மட்டுமே காய்கரிக்கரியும் ஆட்டோக்காரனும் ஹிந்திப்புலமை பெற்று, வந்தாரை மொழிக்கஷ்டப்படாமல் தடுத்து விட முடியும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி என் ஊரை வளமானதாக மாற்றிவிட முடியும் என்றும் நான் நம்பவில்லை.
அதே நேரத்தில் என் தாய்மொழி தெரியாதவனிடம் நீ என் நாட்டுக்கு வந்திருக்கிறாய், எனவே என் மொழியைக் கற்றுக்கொள் என்பதும் ஒருவகைத் திணிப்புதானே?
இப்படி இந்த வாதங்களில், இரு புறமுமே சிந்தனைக்குறிய கருத்துக்கள் இருக்கின்றன.
இதனாலேதான், எனக்கு மொழித்திணிப்பு குறித்து ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்கள் இல்லை என கூறியிருந்தேன்.
சத்யராஜ் குமார் கூருவதுபோல, இயல்பாக தேவைப்படும் மாற்றங்கள் ஏற்பட்டே தீரும். சட்டங்களோ, எதிர்ப்புக்களோ இப்படிப்பட்ட மாற்றங்களை நிகழ்த்திவிடவும் முடியாது, நிறுத்திவிடவும் முடியாது.
இதுவரை இந்த பிரச்சினையை உணர்வு பூர்வமாகவே ஆராய்ந்து வந்துள்ளோம். இப்போதாவது, உணர்சிகளுக்கு விடுமுறை அளித்து, அறிவு பூர்வமாக ஆராய்வோம். வேற்று மொழி கற்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா - இந்த நன்மை தீமைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையாலும், புழங்கும் இடத்தாலும், கல்வி நிலையாலும் மாறக்கூடும் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். அவரவர்க்கு அவரவர் முடிவே சரியானதாக அமையும்.
கவலைக்குறிய விஷயம் என்னவென்றால், தமிழன் தமிழனோடு தமிழில் பேசுவது பாவம் - ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ பேசுவதுதான் கௌரவம் எனக்கருதும் சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவி வருவதுதான். இதை சட்டங்கள் போட்டோ, தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதின் மூலமோ சீர்திருத்திவிட முடியாது.
இந்த நிலைமையை சீர்திருத்துவதற்கு ஆவன செய்வதுதான் தமிழ் ஆர்வலர்கள் செய்யவேண்டிய முதல் பணி.
10 பின்னூட்டங்கள்:
///ரோசா, வட இந்தியர்கள் நங்க நல்லூரில் காய்கரிக்காரியிடம் ஹிந்தி பேசுவதில் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை. //
நான் சொன்னது " சுரேஷ் எழுதியதை கவனிக்க வேண்டும். அவர் வட இந்தியா போனபோது கடைகாரரிடம் ஒரிரு ஹிந்தி வார்த்தகளால் தொடங்குகிறார். அது அங்கே இயல்பானது. யோசித்தால் இங்கேயும் இந்த ஊரில் வாழ வருபவர் கடைக்கு போய் ஓரிரு தமிழ் வார்த்தைகளால் தொடங்குவதே இயலபாய் இருக்க வேண்டும். ஹைதாரபாத்தை, பெங்களூரை போல 'புரட்சி' வந்தால், இந்த இயல்பு தலை கீழாக்கப்படும். நங்கநல்லூரில் வாழ்ந்துகொண்டு ஹிந்தி தெரியாததை காய்கறி விற்கும் பெண் தன் தன்னுடய தவறாய் உணர வைக்கும் உளவியல் உருவாகும். ஏற்கனவே சென்னையிலேயே பல இடங்களில் இது உருவாகியிருக்கிறது. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
..........
நான் குறிப்பிடுவது ஒரு சமூக சூழல், இயல்பாய் ஒன்றை கருதக்கூடிய உளவியல் எப்படி மாறும் என்பது குறித்தது. "
இதில் தவறு சரி என்ற கேள்வி எங்கே வந்தது? இதை சொல்தன் பெயர் சகிப்புதன்மை இன்மையா?
கேள்வி தவறு/ சரி என்பதை பற்றியது அல்ல என்பதுதான் என் வாதம். அபடி கேட்பதை திசைதிருப்பலாக நினைக்கிறேன். இப்படி அனைவரும் வாசிக்க பழகவில்லையெனில் பதில் எழுதுவதில் வாழ்க்கையையே கழிக்க வேண்டி வரும்! நான் எழுதியதற்கும் உங்கள் பதிலுக்கும் என்ன சம்பந்தமோ? ஏற்கனவே கைவசம் உள்ள கருத்தை தருவதை தவிர வேறு என்ன இது? எனது வாதம் எங்கே கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது?
மேலும் வாய்ஸ் ஹிந்தி திணிப்புக்கு ஆதரவு இல்லை என்கிறார். என்ன அர்த்தமோ? கட்டாய பாடமாய் ஹிந்தி இருப்பதும், ஹிந்தி தெரியாத நபரை வற்புறுத்துவதும், ஹிந்தி தெரியாததை தன் தவறென உணர்த்தும் உளவியல்ரீதியான வற்புறுத்தலும் ஹிந்திதிணிப்பு இல்லையெனில் வேறு எது? துப்பாக்கி முனையில் ஹிந்தி பேச சொன்னால் ஒருவேளை ஹிந்தி திணிப்பு என ஒப்புகொள்ளலாம்.
இருப்பினும் திறந்த மனதுடன் இதை வேறு யாரும் வாசிக்க கூடும் என்பதால் எழுதியதை நேரவிரயமாக நான் நினைக்கவில்லை.
கொஞ்ச காலத்திற்கு முன்புவரை: "வட இந்தியாவில் வேலை வேண்டுமென்றால் தமிழர்கள் இந்தி கற்றுகொள்ளவேண்டும்".
இப்போது: "வட இந்தியர்கள் தமிழ் நாட்டுக்கு வேலைதேடி வருவதால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும்".
இந்தி விவாதத்தில் பங்கேற்பதை விட அலுப்பூட்டக்கூடியது வேறொன்றும் இருக்க முடியாதென்றாலும் தமிழ் நாட்டில் இந்தி கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதற்கான தர்க்கத்தில் உள்ள நகைச்சுவை எழுத்தூண்டியது.
முதலில் எல்லோருக்கும் ஒருமொழியை கற்றுக்கொடுக்கும் வேலையை அரசாங்கம் செய்யட்டும். இரண்டாவது, மூன்றாவது பிறகு யோசிக்கலாம். அதுவரை வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழர்களும், தமிழகம் வரும் பிற மாநிலத்தவரும் பாலாஜி பப்ளிகேஷன்ஸின் "முப்பது நாட்களில் ...." புத்தகங்களைப் படித்து காய்கறி கடைக்காரர்களிடம் பேசும் அளவுக்கு தேவையான மொழியைக் கற்றுக்கொள்ளலாம். வேலையில் சேருமுன் முப்பது நாள் அவகாசம் கூட கிடைக்காதா என்ன?
பார்செலோனா பக்கத்தில் Catalan என்று ஒரு மொழி பேசுவார்கள், மாட்ரிடில் காஸ்டிலியன் ஸ்பானிஷ் பேசுவார்கள். இரு பிரதேசங்களும் ஸ்பெயினில்தான் உள்ளன. ஸ்பெயின்-ஃபிரான்ஸ் மத்தியில் இருக்கும் Basque மொழி வேறு. காஸ்டிலியன் ஸ்பானிஷ் தான் ஸ்பெயினின் தேசிய மொழி. அதற்காக Catalan பேசுபவர்களின் வாயைப் பிளந்து ஸ்பானிஷைத் திணிக்கவா முடியும்? 'ஒரு நாடு ஒரு மதம் ஒரு மொழி' என்ற சட்டகத்துக்குள் கேள்விகேட்காமல் அடைந்துகொண்டு கிணற்றுத் தவளை போலக் கத்திக்கொண்டிராமல், இத்தனை மொழிகள் இருக்கிறது, அனைத்தையும் எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று யோசித்தால் உபயோகமாக இருக்கும். பத்துப் பிள்ளை பெற்றுக்கொண்டு, அய்யய்யோ பத்துப் பிள்ளைகளையும் வளர்ப்பது கஷ்டமாயிருக்கிறது, ஒன்பது பேரை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டு ஒரு பிள்ளையை ஒழுங்காக வளர்ப்போம் என்பதுபோல. உணர்ச்சிவசப்படுவது என்பதல்ல விஷயம். இன்னும் "இந்தி கற்றுக்கொள்ளாவிட்டால் உன் கதை கந்தல்" என்று காலட்சேபம் பண்ணிக்கொண்டிருக்கும் defeatist attitude ஞான விபத்தில் சிக்கியவர்களின் செம்மறியாட்டுத்தனத்தை நினைப்பதால் வரும் எரிச்சல். கற்றுக்கொள்ள அவசியமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளட்டும் என்று எத்தனை தடவைதான் சொல்லித்தொலைவது? அதே கதையை எந்த மொழிக்கும் சொல்லலாம். மணிப்பூரில் திபெத்தோ-பர்மியப் பழங்குடிகள் வாழும் பகுதியில் இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்ட் வேலை கிடைத்தால் ஹிந்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று குதர்க்கம் பேசலாம். யாருக்கு என்ன உபயோகம்? இது ஏதோ நம் ஊரில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ளாததால் மட்டும் வரும் பிரச்னை என்று சொன்னால், அமெரிக்காவில் இருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதாமலும், நைஜீரியாவில் இருந்துகொண்டு ஸ்வாஹிலியில் எழுதாமலும் சீனாவில் இருந்துகொண்டு சீனமொழியில் எழுதாமலும், ஜப்பானில் இருந்துகொண்டு katakanaவில் எழுதாமலும் என்னத்துக்கு தமிழில் எழுதிக் கிழித்துக்கொண்டிருக்கிறோம்? சௌகரியம் கருதி மெக்ஸிகோ எல்லையொட்டிய அமெரிக்க மாநிலங்களில் பொது இடங்களில் ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும்கூடத்தான் இருக்கின்றன அறிவிப்புக்கள். தனிமனிதனின் முடிவுகளுக்கு அவனே பொறுப்பு - பிறரைப் பாதிக்காத வரையில் யாரையும் கேள்விகேட்க அவசியமில்லை. ஆனால், "அனைவரும் இந்த மொழி பேசுங்கள்" என்று மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் சொல்வது வேறு கதை. அதே அரசாங்கம், "பத்து மணிக்குமேல் இந்தியாவில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது" சொல்வதற்கும் ஒரு மொழியைத் திணிப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை என்று சொன்னால், குதர்க்கம் என்பார்கள். அதைச் செய்யும்போது இதைச் செய்தால் என்ன? திணிப்பு என்பது திமிரால் மற்றும் "How can it be otherwise" mentalityயின் மடத்தனத்தால் விளைவது. வாயைப் பிளந்துகொண்டு அதை ஆ வென்று பார்த்துக்கொண்டிருப்பதும் எதிர்ப்பதும் அவரவர் இஷ்டம். இஷ்டமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளட்டும், தேவைப்படும்போது தேவைப்படும் அனைவரும் ஹிந்தியோ தமிழோ கன்னடமோ மலையாளமோ ஜெர்மனோ ஸ்பானிஷோ ஆங்கிலமோ சமஸ்கிருதமோ கற்றுக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு தனிப்பட்ட மனிதனொருவனின் விருப்பத்தை மீறி அவன் நாக்கில் ஏறி மிதிக்க யாருக்கும் உரிமையில்லை. ஹிந்தி எதிர்ப்பு என்பது "ஹிந்தித் திணிப்பு" என்பதற்கெதிராக விளைந்த எதிர்வினை என்ற அடிப்படையையாவது முதலில் உணர்ந்தால் நல்லது. மகா எரிச்சலூட்டும் பிற "அவதானங்களையும் ஆழ்கருத்துக்களையும்" ஏகத்துக்குக் கேட்டாலொழிய மறுபடி எழுதுவதாக உத்தேசமில்லை!!
வாய்ஸ் ஆப் விங்க்ஸ் உள்பட இங்கு அனைவருமே இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை என்ற பிறகு இந்த விவாதமே அவசியமில்லையே. தமிழக அரசியல்வாதிகள் வெறும் கோஷங்களை எழுப்பி வந்த போதிலும் தமிழ்நாட்டில் மற்ற மொழிகளைப் பேசக்கூடாது என்றோ கற்கக்கூடாது என்றோ கூறவில்லை.
பெரும்பாலான (குறிப்பாக மெத்தப்படிக்காத) தமிழர்கள் சகிப்புத்தன்மையுடையவர்கள் மட்டுமல்லாமல், தமக்குத் தேவைப்படும் பொழுது மற்ற மொழிகளைக் கற்றும் பேசியும் வந்திருக்கின்றனர். அது நங்கநல்லூரில் காய்கறி விற்பவராயிருந்தாலும் சரி, பிழைப்பைத் தேடி வேற்று மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் செல்லும் மெத்தப்படிக்காத தமிழர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் இதையெல்லாம் ஒரு பிரச்சினையென்று புலம்புவதுமில்லை.
நாம் வெட்டியாக விவாதம் செய்வதெல்லாம் மெத்தப் படித்த, அல்லது கல்வி கற்றதாலே தங்களை மேதையென்று கருதும் படித்த தமிழர்களின் சுயநலப் பிரச்சினைகளைப் பற்றிதான். தான் தம் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை விட தான் ஜெர்மனியில் வேலை தேடுவதற்கு அரசாங்கம் தனக்குப் பள்ளிகூடத்தில் ஜெர்மானிய மொழி கற்றுத்தரவில்லையே என்ற கவலையெல்லாம் இவர்களுக்குத்தான் வரும். என்ன, பள்ளிக்கூடத்தில் கட்டாய இந்தி கற்றுத்தராததால், மொத்தத்தமிழர்களையும் சகிப்புத்தன்மையில்லாதவர்கள் என்று நம்மிடையேயும், பிற இந்தியர்களிடமும் விஷமத்தனமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ பிரச்சாரம் செய்வதுதான் வருத்தத்தையளிக்கிறது.
நன்றி - சொ. சங்கரபாண்டி
//கொஞ்ச காலத்திற்கு முன்புவரை: "வட இந்தியாவில் வேலை வேண்டுமென்றால் தமிழர்கள் இந்தி கற்றுகொள்ளவேண்டும்".
இப்போது: "வட இந்தியர்கள் தமிழ் நாட்டுக்கு வேலைதேடி வருவதால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும்".//
இதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்,
தமிழ் நாட்டில் தமிழில் (தமிழர்கள்) பேசுங்கள் என்றால் மொழி வெறி, இந்தத் துணைக்கண்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்தியில் பேசுங்கள் என்றால் நாட்டுப்பற்று, நாட்டு நலன்.
இந்தி எதிர்ப்பென்பதே மொழியெதிர்ப்பென கட்சிகட்டுபவர்கள் பலர் அது ஆதிக்க எதிர்ப்பென அறியாதவர்கள் அல்ல; ஆனால் தமிழர்களின் அதிகாரம் அவர்களிடம் இருப்பதைவிட அது வேறு எவரிடமிருந்தாலும் அதை விரும்புபவர்களும், அதனால் பயன் அடைபவர்களும் தான். இவர்களின் மூதாதையர்கள் தான் ஒரு காலத்தில் திவான் பகதூர்களாக ஆங்கில மொழிக்கு சாமரம் வீசியவர்கள்!
மெய்யாலுமே இப்போதுதான் நீங்கள் சொல்ல வருவது புரிகிறது ரோஸா வசந்த்.
உத்தரப் பிரதேசத்தின் பான்வாலாவிடம் சென்று தமிழில் பேச நாம் முனைவதில்லை, ஆனால் வத்தலகுண்டு மீன் வியாபாரியிடம் (நங்கநல்லூர் காய்கறிக்காரிக்கு விடுமுறை அளித்துவிட்டேன்:-)) ஹிந்தி பேச வட இந்தியர் முனைகிறார்கள். இது உண்மையே.
ஆனால், ஹிந்திக்காரர்கள் பலர் வத்தலகுண்டுவிற்கு வந்து, மொழி தெரியாததால் தன் வியாபாரம் கெடும் என்றால், அந்த மீன் வியாபாரி ஹிந்தி கற்றுக்கொள்வான். (வேலூரின் ரிக்-ஷாக்கரனுக்கும் ஹிந்தி தெரியும்)
அதேபோல, வட இந்தியாவாக இருந்தாலும், தமிழர்கள் அதிகமாக கடைக்கு வரும் பட்சத்தில் பான்வாலாவும் தமிழ் கற்றுக்கொள்வான். (சிங்கப்பூரில் சில சீனர்கள் தமிழில் சில அடிப்படை வார்த்தைகள் தெரிந்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்)
எனவே, அவசியம் ஏற்பட்டால் எந்த மொழியையும் கற்றுக்கொண்டு விடலாம். அவசியம் ஏற்படலாம் என்று மொழிகளைக் கற்பதோ, திணிப்பதோ வீண்.
Hi pinaaththalgal,
Your essay on Mozhi Bore - is good and it is interesting and as well as informative.. try to write like this.
M. Padmapriya
//Your essay on Mozhi Bore //
Itz not 'Bore', itz 'Pore'..!!bore-என்றால் அர்த்தமே மாறிடும்!
mayavarathan,
mistake (if any) is mine, i have titled it as Mozhi BORE - because it was boring to see this Pore!
Post a Comment