Dec 25, 2007

தரைவாழ் விண்மீன்கள் - 1

"ஹலோ, என் பெயர் யோஹன். வீட்டில் என்னை தாதா என்று கூப்பிடுவார்கள். எல்லாப் பாடங்களிலும் நான் தான் முதல் மார்க் வாங்குவேன். என்ன, போன முறை ஹிந்தியில் மட்டும் 2 மார்க்கில் முதலிடத்தைத் தவறவிட்டேன். என் தம்பி (சேம்ப் என்று அழைப்போம்) என்னவோ தெரியவில்லை, அவ்வளவு நன்றாகப் படிப்பதில்லை. எந்நேரமும் யார்கூடவாவது சண்டை இழுத்துக்கொண்டே இருப்பான். டீச்சர்களுக்கு, ஏன் அப்பா அம்மாவுக்கும்கூட என்னளவு அவன் படிப்பதில்லையே என்று வருத்தம். ஆனால் பிந்தாஸ் பையன். படம் நன்றாக வரைவான். I miss him.  என்னுடைய டென்னிஸ் அரையிறுதியின்போது அவனும் கூட இருந்திருக்கலாம்.. என்ன செய்ய? அவன் தான் போர்டிங் ஸ்கூல் போய்விட்டானே?"
 
"ஹலோ, நான் மாயா. என் மூத்த மகன் யோஹன் எனக்குத் தொந்தரவே வைத்ததில்லை.  நன்றாகப் படிப்பான், டென்னிஸ் க்ரிக்கெட் என்று எல்லாருடனும் சேர்ந்து விளையாடுவான். அவன் பிறந்தும்கூட நான் வேலைக்கு தொடர்ந்து  போய்க்கொண்டுதான் இருந்தேன். ஆனால், என்னை நெளிவெடுப்பதற்கென்றே பிறந்தவன் இரண்டாமவன். காலையில் எழுப்புவதே ஒரு அவஸ்தை. நேரம் தெரியாமல் ஷவரில் வரும் தண்ணீருடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பான். எந்நேரமும் யார்கூடவாவது சண்டை.  ஹோம்வர்க் - அது ஒரு மெகா யுத்தம். Table என்று எழுதச்சொன்னால் tabl, tabel என்று ஸ்பெல்லிங்குகளை உற்பத்தி செய்துகொண்டிருப்பான். என்ன ஒரு கண்றாவி கையெழுத்து? மூன்றாம் வகுப்பில் - நம்புங்கள், மூன்றாம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டான். பிரின்ஸிபல் கூப்பிட்டுச் சொன்னபோது எனக்கும் கோபம்தான் வந்தது. ஆனால், அதற்காக குழந்தையை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புவதா? "
 
" நீ சொல்வது சரியில்லை மாயா. ஹலோ, நான் நந்தகிஷோர் - நந்தகிஷோர் அவஸ்தி. எனக்கென்ன என் மகன் மீது பாசம் இல்லையா? என் இளைய மகனுக்காக நான் என்னதான் செய்யவில்லை? அவன் உடைத்துவிட்டு வரும் செடிகளுக்கு மன்னிப்புக்கேட்கிறேன், அவன் அடித்துவிட்டு வரும் பையன்களுக்கு நான் மருந்துக்குச் செலவழிக்கிறேன். பெரியவனை வளர்த்ததுபோலவேதானே இவனையும் வளர்க்கிறேன்? இவன் புத்தி படிப்பில் செல்லவில்லை என்றால் அதற்குக் காரணம் கொழுப்புதான். ஒழுக்கம் இல்லை. சொல்பேச்சு கேட்பதில்லை. எத்தனை அடித்தாலும் பிறகு அரவணைக்கிறேனே, அதுதான் நான் செய்யும் தப்பு. இவனை போர்டிங் ஸ்கூலில் போட்டால் அங்கே அவர்கள் இவனைத் திருத்துவார்கள். செலவு அதிகம்தான் - இருந்தாலும் என் பையனுக்காக செலவழிக்காமல் என்ன பயன்? அப்படியாவது அவன் திருந்துவான் என்றால் செலவுக்கு, செண்டிமெண்டுக்கு கவலைப்படக்கூடாது"
 
"என்னைப்பற்றிதான் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் இஷான் அவஸ்தி. என் உலகம் சாக்கடையில் ஓடும் மீன்களுடனும், தெருநாய்களுடனும் நட்பானது. வெளியுலகத்தின் காணும் வண்ணங்கள் மட்டுமே என்னை ஈர்க்கின்றது. 38ஆம் பக்கத்தில் நாலாம் பத்தியின் முதல்வரியைப்படி என்று டீச்சர் சொல்லும்போது வரியைப்படிக்கிறேன், பக்கத்தை விடுகிறேன். படிக்க ஆரம்பிக்கும்போது எழுத்துக்கள் நடனமாட ஆரம்பிக்கின்றன. 3 x 9 என்பதற்கு, 3ஆம் கிரகமான பூமி, 9ஆம் கிரகமான ப்ளூட்டோவுடன் மோதுவதையும், ப்ளூட்டோ காணாமல் போவதையும் மனக்கண்ணால் பார்த்துத்தான் 3 என்று விடை எழுதினேன். அது தப்பா?
 
தப்பே இருந்தாலும்...
 
இருட்டைக்கண்டால் பயப்படும் எனக்கு..
 
கும்பலைக்கண்டால் மிரளும் எனக்கு..
 
எழுத்தைக்கண்டால் ஓடும் எனக்கு..
 
இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?
 
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?
நான் என்ன அவ்வளவு மோசமானவனா அம்மா?"
 
**********************
 
சிவாஜிக்கெல்லாமே நாலு பதிவில் விமர்சனம் போடுகிறார்கள் :-)
 
Taare Zameen Par may prove to be the best movie of 2007. It has received an overwhelming critical response. Initial box office reports are low, but popularity rapidly spreading through word-of-mouth. என்று விக்கிபீடியாவில் சொல்வதை முழுமனதுடன் நானும் ஒத்துக்கொள்ளுன் படத்துக்கு, காசுகொடுத்துப் போய் (இரு குழந்தைகளின் அப்பா என்பதால்) அடிவாங்கிய இந்தப்படத்துக்கு,  படம் முடிவடைகையில் எல்லார் கண்களிலும் நீர்த்துளி காணும் இப்படத்துக்கு..
 
ஒரு பதிவில் விமர்சனம் எழுதி முடிக்கமாட்டேன். இன்னும் ஒன்றிரண்டு வரும்.
 
பி கு: குசும்பனுக்கும் அய்யனார்க்கும் சிறப்பு நன்றி. எப்படியும் பார்த்திருப்பேன் என்றாலும் அவர்கள் விமர்சனம் அவசரப்படுத்தியது.

3 பின்னூட்டங்கள்:

அய்யனார் said...

தரைவாழ் விண்மீண்கள் அட்டகாசமான மொழிபெயர்ப்பு :)

குசும்பன் said...

வேறுமாதிரி எழுதி இருக்கலாமோ!!! இல்லை இன்னும் அந்த சுகமான அனுபவத்தில் இருந்து வெளியே வரவில்லையா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அய்யனார்.

குசும்பன், நானும் யோசிச்சேன், அதனாலதான் மொத்தமா 1 & 2 வை ப்ண்டில் பண்ணி ஒண்ணா கொடுத்துட்டேன் - இங்கே

 

blogger templates | Make Money Online