Feb 27, 2008

ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்!!

எதுவும் எழுதத் தோன்றவில்லை - மனம் வெறுமையாக இருக்கிறது.

பத்தாவது வகுப்பு படிக்கும்போது குமுதத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள் - சுஜாதாவின் தொடரின் ஒரு பகுதிக்குள் அவர் நடை அல்லாத வேறு ஒரு பத்தி இருப்பதாகவும் அதை அடையாளம் கண்டுபிடிப்போர்க்கு பரிசு என்றும்.

மெலோட்ராமாத்தனமான அந்தப்பத்தியைக் கண்டுபிடிப்பது யாருக்குமே பெரிய விஷயமில்லை - தமிழில் கொஞ்சமாவது கதைகள் படித்த யாருக்குமே! (அந்தப்போட்டியில் நான் முதல் பரிசு பெற்றது வேறு விஷயம்). அந்தத் துடிப்பான நடையில் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் வரும் இவை வராது என வரையறுத்துவிட முடியாது என்றாலும் அந்த எழுத்துக்கும், அன்று அவருடைய சக எழுத்தாளர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்த எழுத்து பேக்டரிகளுக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்.

புத்திசாலித்தனமான துப்பறியும் கதைகள் ஆகட்டும் (நிர்வாண நகரம்), ஆசிரியர் உரத்துப் பேசாமலே உணர்ச்சிகளைக் கொட்டவைக்கும் சமகாலக் கதைகளாகட்டும் (குருபிரசாத்), மாய உலகைச் சிருஷ்டித்து எதிர்காலத்தை நினைத்து பயப்படவைக்கும் அறிபுனைகளாகட்டும் (சொர்க்கத் தீவு), சரி அதையும்தான் விடுவானேன் என்ற வரலாறாகட்டும் (ரத்தம் ஒரே நிறம்) ஓ ஹென்றித்தனமாக கடைசிவரித் திருப்பங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய சிறுகதைகளாகட்டும் (விபா!) அல்லது இன்றைய வலைப்பதிவுகளின் வடிவுக்கு அன்றே கட்டியம் சொன்ன கடைசிப்பக்கங்கள் ஆகட்டும்- எந்த வகையையும் விட்டதில்லை - ஆனால் இவைகளினால் சுஜாதா எனக்கு ஆதர்சம் இல்லை.

ஒரு தேர்ந்த குருவைப் போல, இதெல்லாம் கூட இருக்குதப்பா தமிழில் என்று கைபிடித்துதான் எனக்கு கணையாழியை அறிமுகப் படுத்தினார். கவிதை என்பது செய்யுள் மட்டுமல்ல, கல்யாண்ஜியும் ஆத்மாநாமும் இப்படியெல்லாம் மரபுடைக்கிறார்கள் என்று ஹைப்பர்லிங்க் போட்டது சுஜாதாதான். பழமலய் அ கே ராமானுஜன் போன்ற பெயர்களைப் பரிச்சயப்படுத்தியது அவர் கதைகளூடாகத் தான். ஜேஜே சில குறிப்புகள், தோட்டியின் கதை என்ற பேரில் எல்லாம் கூட கதை எழுதுகிறார்கள் என்று அறிந்தது அவர் குறிப்புகள் மூலமாகத்தான்.

சிறுபத்திரிக்கைகளுக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கும் பாலமாக அவர் செயல்பட்டது யாருக்கு உபயோகமோ தெரியவில்லை, அவர் எழுத்துக்களைப் படிக்காமல் இருந்திருந்தால் எனக்கு இவை தெரிந்திருக்காது, விகடன் கல்கி குங்குமத்தைத் தாண்டியும் சில பத்திரிக்கைகள் இருப்பதையோ, ராஜேஷ்குமார் சிவசங்கரியை விடவும் சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதையோ உணர்ந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.

இன்றைக்கு இன்னும் கொஞ்சம் படித்து, சுஜாதா கதைகளில் அது தெரிகிறது இது தெரிகிறது என்று சட்டமாக விமர்சித்தாலும், வந்த வழி நிச்சயம் சுஜாதா வழிதான். இது எனக்குமட்டுமல்ல - எனக்குத் தெரிந்தே பலருக்குப் பொருந்தும்.

கற்றதும் பெற்றதும் வரை கூட எனக்குப் பிடித்த கவிதைகளையும் கதைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதற்கு அசாத்திய ஆர்வமும், தான் படித்ததை மற்றவரும் படிக்கச் செய்யும் ஆவலும், மற்றவர்களைப் போட்டியாக நினைக்காத தன்னம்பிக்கையும் வேண்டும்.

எல்லா விதங்களிலும் சுஜாதாவுக்குச் சமமான இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் இன்னும் படிக்கவில்லை.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் கூட சந்திக்கத் துடித்த ஒரே பிரபலமாக இருந்தவர் - சமீப காலங்களில் அந்த அளவு வெறி இல்லாவிட்டாலும், இனி ஆசைப்பட்டாலும் முடியாது என்பது வருத்தத்தை அதிகரிக்கிறது.

அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக!!

19 பின்னூட்டங்கள்:

Radha Sriram said...

மிகவும் வருத்தப்பட வைத்த செய்தி.இந்தியாவிற்கு போன் செய்து அம்மாவை எழுப்பி வருத்தத்தை பஹிர்ந்து கொள்ளவைத்த செய்தி.அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிரேம்ஜி said...

செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

இலவசக்கொத்தனார் said...

எழுத்தாளராய் அவரைப் பிடித்த அளவு சினிமாவில் அவரைப் பிடிக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறியது போல் தமிழில் படிக்கத் துவங்கிய காலத்தில் என்னை இன்ப்ளூயன்ஸ் செய்ததில் அவருக்குத்தான் முதலிடம். ஆனால் அந்த பிரமிப்பு கொஞ்சம் குறைந்து போகத் தொடங்கியது என்னவோ நிஜம்தான். என்னளவில் அவர் ஒரு சகாப்தம்தான்.

அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக!!

துளசி கோபால் said...

செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

திவாண்ணா said...

பிற்காலத்தில் அவர் எழுத்தைப்பற்றி அபிப்பிராயம் மாறி போனாலும் என் இளம் வயதில் தாக்கம் இருந்தது. அந்த காலத்தில் அவர் எழுதும் கதை வருகிறதென்றால் பத்திகை வாங்குவது நிச்சயம்,
கணினி தமிழ் சார் துறையில் அவர் பங்கு குறிப்பிடத் தக்கது.

cheena (சீனா) said...

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடைவதாக

வல்லிசிம்ஹன் said...

சுரேஷ்,
நீங்கள் எழுதி இருப்பது அத்தனையும் நான் உணரும் விஷயங்கள்.
பழகுவதற்கும் வெகு எளிமை.
ஒரு தரம் ஸ்விஸிலிருந்து ஒரு குட்டி வீடு ஒன்று(பொம்மை ம்யூசிகல்)
அன்பளிப்பாகத் தர அவங்க வீட்டுக்குப் போனபோது, தலையைக் கூட நிமிர்ட்தவில்லி.
தன் மனைவியைக் கைகாட்டி விட்டு, என்னவாயிருந்தாலும் அவளிடம் கொடுங்கோ. அவளுக்குத் தான் இதெல்லாம் பிடிக்கும் என்றார்.

''நான் கூட டாவோஸ் போயிருக்கேன்,. அங்க என்ன இருக்கு. மரம், ஒரு சாப்பல்,ஒரு ஏரி இவ்வளவுதானே னு'' சிரித்தார்.

தனியொரு மனிதர். மானுடத்துக்கு அப்பாற்பட்ட அறிவு.
என்ன செய்யலாம்!!

அரை பிளேடு said...

”தொடர்ச்சியாக ஒரு காலக் கட்டத்தில் நாம் சில வருஷங்கள் உயிர் வாழ்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை நம் உடலும் உள்ளமும் விருத்தியாகிறது. இறந்து அழியும் போது நாமும் அழிந்து விடுகிறோமா? முழுவதுமே அழிந்து விடுகிறோமா? அல்லது நம்மிலிருந்து ஏதாவது பிரிந்து பரம்பொருளை அல்லது ஒரு சாஸ்வத உண்மையைப் போய்ச் சேருகிறதா?”

-சுஜாதா "ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து”.

அவருக்கு கண்ணீர் அஞ்சலி.

Kuzhambi said...

I was reading today's paper in my normal way (back to front) and to read through this news at the end was an absolute shocker.

Apart from reading his short stories and novels, one book that really caught the attention was the book he had written on how to write good screen plays. Though not someone connected with the film industry, it did give the layman some thoughts about writing a good script or a screen play.

I am definetely going to miss his writings, be it about the recent developments or his urbane stories.

May his soul rest in peace.

PS: All the comments here are in Tamil, though I love to write in the language, I am still learning to write the correct way through these blogs, until then, please excuse

Anonymous said...

50 வருடங்களுக்கு மேலாக 2 தலை முறைகளுக்கு ஆர்வமூட்டும் விதமாய் எழுதுவதென்பது சாதாரண காரியமல்ல. அதைத் திறம் பட செய்த மிகப் பெரிய சாதனை எழுத்தாளர் சுஜாதா.

சுஜாதாவின் வெர்சடிலிடிக்கு நிகர் அவர் மட்டுமே.அறிவியல் மற்றும் கணினி சம்மந்தப் பட்ட விடயங்களை எளிமைப் படுத்த / தமிழ்ப் படுத்த முயற்சித்தவர்களில் சுஜாதாவும் ஒருவர்.

சராசரி தமிழ் வாசகனை சற்றே நகர்த்தி அடுத்த தளத்திற்கு செல்ல படிப்பார்வம் ஊட்டியது சுஜாதாவின் எழுத்து மற்றும் எளிய நடை என்றே நான் நினைக்கிறேன்

30 வருடங்களுக்கு முன்பு 15 முதல் 20 வயதாகியிருந்த தமிழ் இளைஞர்களை படிக்க ஆர்வமூட்டியதில் பெரும் பங்கு சுஜாதாவுக்கு உண்டு. REPEAT..அந்த தலை முறைக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியதில் பங்குண்டு என்றே சொல்கிறேன்.அவர் சொன்ன கருத்துக்களோ அவரது பார்வையோ சரி / தவறென்று வாதிட வரவில்லை.

அப்படிப் படித்து அதன் மூலம் இலக்கிய அறிமுகம் கிடைக்கப் பெற்ற ஒரு சில கழிசடைகள் அதை மறைத்தும் பூசி மெழுகியும், சுஜாதாவுக்கு " வெறும் ஜாதி" சாயம் மட்டுமே பூசி அவரது தமிழுக்கான பங்களிப்பை மறைக்க முயன்று , தோற்று சுய சொரிதல் செய்து கொள்வதுதான் அவலம்.


இன்னுமொரு விடயம்....தமிழில் மொதல்ல அம்புலிமாமா அப்புறம் இரும்புக்கை மாயாவி,அப்படியே சாண்டில்யன், சுஜாதா, கொஞ்சம் தாண்டி politics dipped இலக்கியத்தில் கருணாநிதி தீவிர இலக்கியத்தில் ஜெயகாந்தன் அப்புறம் இந்திரா பார்த்தசாரதி etc..etc(நடுவுல கொஞ்சம் சரோஜாதேவி) அப்புறம் இன்னும் தீவிர அரசியல்..இலக்கியம்( பிடித்ததற்க்கேற்ப்ப) இந்த மாதிரி ரூட்டுதான் இருக்கும் பெரும்பாலும்..எழுத்தாளர்கள் பெயர் கொஞ்சம் முன்னே பின்னே அல்லது விடு பட்டிருக்கலாம். ஆனா இதை யாரும் இல்லை என்று மறுக்க அல்லது ஒதுக்க முடியாது.

தமாஷ் என்னன்னா சில பேர் பொறக்கும் போதே காரல் மார்க்ஸ் பொத்தகத்தை கக்கத்துலெயும், எங்கல்ஸ் புத்தகத்தை எங்கியுமோ சொருகிக்கிட்டு வாயில கத்தார் பாட்டை பாடிக்கிட்டும் பொறந்து மக்கள் கலை இலக்கியத்தை படிக்காம ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிட்டாப்ல எழுதுதுங்க. கருமம்டா சாமி.பொய் சொல்லி எத்தனை நாளைக்குத்தான் பொழைப்பு ஓடுமோ .


ஒண்ணு சொல்லிக்கிரேங்க..நியூ சென்சுரி புக் ஹவுஸ் டிரான்ஸ்லேசன் பதிப்புகளைப் படித்து தமிழ் இலக்கிய மற்றும் படிப்பார்வம் வளர்ந்தது அல்லது கம்யூனிசம் கத்துக்கிட்டேன் அப்படீன்னு எவனாவது சொன்னா..ஒக்கமக்கா காரல் மார்க்ஸே நம்ப மாட்டாரு

வரட்டு பிடிவாதம் பிடிக்கம "Give the credit where it is due" அப்படீங்குறதைப் புரிஞ்சிக்கிட்டு இருந்தாதான் எப்பவோ சனம் இவனுங்களையும் சப்போர்ட் பண்ணியிருக்குமே..என்னத் தவிர எவன் எது செஞ்சாலும் தப்பு அப்படீன்னு நட்டுக்கிடு நிக்குறதாலதான் இவனுங்க இன்னும் மக்கள் கிட்ட இருந்து அன்னியப் பட்டு நிக்குறானுங்க. இது ஏன் இன்னும் இவனுங்க மண்டையில ஏறலை. திருந்தவே மாட்டானுங்களா
:((

சாய்ராம் கோபாலன் said...

சுஜாதா என்ற ஒரு நல்ல எழுத்தாளர் மறைவால்

"தமிழ் மொழி"

நல்ல ஒரு தமிழனை இழந்துவிட்டது

- சாய்ராம் கோபாலன்

Sridhar Narayanan said...

கண்ணில் பட்ட ஒரு இரங்கல் கடிதம் -

சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தே இருந்தேன். அவரும்தான்.

வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்து கொள்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்துகொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்ததுபோல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை, நெறி அது.

விஞ்ஞானமும் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலாகவே நினைத்தார். அதனால் அவருக்கு தன் எழுத்தைப் பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவுசெய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்துகொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக் காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லலாம். மற்றதெல்லாம் இலக்கியத்துக்கே உரித்தானது.

தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட, கொடுத்ததற்கு நன்றி சொல்லவேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.

பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவை படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்கு சொல்லும்.

- கமல்ஹாசன்

சேதுக்கரசி said...

sujathalogy.com தளத்தில் அஞ்சலி செலுத்தலாம்.

ரவிஷா said...

ஆங்கிலப் புத்தகங்களை படித்துக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் புத்தகம் படிக்க வைத்து தமிழில் படிப்பதோ/எழுதுவதோ இழுக்கு இல்லை என்று நிரூபித்தவர்!

வைரமுத்து சொன்னதுபோல் விஞ்ஞான விரலை இழந்துவிட்டோம் நாம்! இனிமேல் authentic information-க்கு நாம் எங்கே போவது?

கண்ணீர் அஞ்சலி என் ஆதர்ஷ எழுத்தாளருக்கு

Anonymous said...

I started reading Sujatha at my fourth standard, my first novel being 'En Iniya Iyandhira'. I don't remember whether I understood the nuances of the plot at that age, but was just hooked to his simple style of narration.
It was Sujatha and only Sujatha during my teens and later on, I started reading many of the ppl, introduced by him in his columns.

Thank you Sujatha, for providing me so many pleasant reading experiences.
May your soul rest in peace.

- Ramya.

Unknown said...

Vanakkam sir. Could you please mail me your personal id..
- m.g.sivagnanam
makasis@gmail.com

தருமி said...

அவரைப் பொறுத்தவரை என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது அவரது 'அகலமான' இலக்கிய அறிவும் அவரது time management-ம்.

மற்றபடி, மேலே கொத்ஸ் சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன்.

Anonymous said...

enna thala, indha anjalai katturaikku keezha kooda unga name-i

இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் -nnu gowravama potirukkeenga. Konjam Yosinga

- Mr. Rain

Anonymous said...

indha anjali katturai-la kooda unga pera
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் -nnu romba gowravam pinaathirukeenga. konjam yosinga

 

blogger templates | Make Money Online