Apr 1, 2008

ஒகேனக்கல்லும் கட்டாயத் தமிழ்க்கல்வியும்

பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.
 
வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறது. புதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையே.  கபினியில், கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் திறந்துவிடப்படாத வேளைகளில் ஒகேனக்கல் காய்ந்த குட்டைதானே? அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் வைத்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன? எந்த வகையில் இது கர்நாடக மக்களைப் பாதிக்கப் போகிறது? யோசிக்கவிடுவதில்லை கிருஷ்ணாக்களும் எடியூரப்பாக்களும். தமிழன் மீதான தங்கள் மேல்நிலையை உறுதிப்படுத்துவதற்கான இன்னொரு ஆயுதமாகத் தான் இதையும் பார்க்கின்றார்கள். அப்படியே ஒகேனக்கல் அவர்களின் வாழ்வாதாரத்தின் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டாலும், அதற்கும், தமிழ்சினிமா திரையிடும் அரங்குகளுக்கும் என்ன சம்மந்தம்? அவற்றை ஏன் சூறையாட வேண்டும்?
 
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், பெங்களூருவின் கோபம் தமிழர்கள் மேல் மட்டும் அல்ல என்பது புரியும்.  சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம் என்ற பதிவில் எழுதியிருந்தேன்:
 
10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான். சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான். 
 
 
இந்த மாற்றம் பெங்களூருவில் கொஞ்சம் முன்னாலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. கணினி சாராத் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து கடந்த 20 வருடங்களில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது.
 
பொருளாதார ஏற்றத்தாழ்வை, ஒரு சாதாரண பெங்களூர்வாசி எப்படிப்பார்க்கிறான்? கன்னடம் பேசி உயர்வாக வாழ்ந்துகொண்டிருந்தவன், கன்னடம் பேசாதவர்களால் தாழ்வாக்கப்படுவதாக உணர்கிறான். பொருளாதாரத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான். வேறு மொழி பேசுபவர்களை எதிரியாகக் கருதத் தொடங்குகிறான்.
 
பொருளாதாரச் சமச்சீரின்மை, கோபத்தை உருவாக்குகிறது. அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்பது மட்டும் குழப்பமாக இருக்கும் வேளையில், வருகிறார்கள் அரசியல்வாதிகள்.
 
காவிரி ஆற்று நீர் பிரச்சினை, இரு மாநில விவசாயிகளை மட்டுமே நேரடியாக பாதிக்கக்கூடிய பிரச்சினை. காவிரி தீரத்தில் இல்லாத பெங்களூரில் ஏன் கலவரம் வெடிக்கிறது?  என்கிட்டே பணம் காசு கம்மியா இருக்கலாம் - ஆனா, நான் விட்டாத்தான் உனக்குத் தண்ணி என்று பெங்களூர்காரர்களின் அடிமனத்தில் உள்ள One upmanship தூண்டிவிடப்படுகிறது. தமிழர்களுக்குப் படியளக்கும் பெருமை தங்களிடம் இருப்பதாக வடிவமைக்கப்படுகிறது. இந்தப் பெருமை, அவர்களின் மற்ற குறைபாடுகளை மறக்கடிக்கிறது.
 
இந்தப் பெருமை, வேறு மாநிலத்தவர்களிடம் செல்லுபடியாவதில்லை. தமிழனுக்குத் தண்ணீர் தருகின்ற அன்னதாதாக்களாகத் தான் இருப்பதாக நினைக்கிறான். அடிபணிந்து இருக்கவேண்டிய தமிழர்கள் தங்கள் ஊரில் தன்னை விட வசதியாக வாழ்வதாக எண்ணிப் பொறுமுகிறான்
 
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, காவிரி நீரை விடமாட்டோம் என்று சொல்வது, அவர்களின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. எந்தச் சமரசத்துக்கும் உடன்படமாட்டோம் எனச் சொல்லும் அரசியல்வாதி ஆபத்பாந்தவனாக பார்க்கப்படுகிறான். சமரசத்தை பரிசீலிக்கும் அரசியல்வாதிக்கு அது சாவுமணியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதை முயற்சிப்பதில்லை.
 
எல்லாத்தரப்புக்கும் இழப்பை மட்டுமே தரக்கூடிய இப்படிப்பட்ட நிகழ்வுகள் என்றுதான் தீரும்?
 
இன்றைய தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டுமின்றி - நாளைய வளமான சமுதாயத்தைப்  பற்றியும் கவலைப்படும்  அரசியல்வாதிகள்
இன்றைய பரபரப்பை மட்டுமே நினைக்காமல், பொறுப்புணர்வோடு உண்மைநிலையைக் காட்டும் ஊடகங்கள்
நிஜமான, எல்லாத்தரப்புக்கும் கிடைக்கும் பொருளாதார சுபிட்சம்
 
பெரிய கனவுகள்!
 
ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை. ராஜ் தாக்கரே நாலு குண்டர்களைக் கூட்டி வட இந்தியர்களை அடிப்போம் என்று கிளம்பும்போது கிடைக்கும் ஆதரவும், ஏறத்தாழ இதே போன்றதுதான். மும்பையில் கொழிக்கும் வட இந்தியர்களின் மீதான இயலாமை, மராட்டி பேசாதவர்களின் மீதான கோபமாக எதிரொலிக்கிறது.
 
நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான், பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான். பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள் - கவனிக்கவும், தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லை - தேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி  படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்கு, தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக்  கட்டமைப்பதும், ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.
 
அது சாத்தியப்படக்கூடாது, அப்படிப்பட்ட சில்லறைப் பிரிவினைவாதிகள் ஏற்படக்கூடாது என்றால், எல்லாரும் மொழிரீதியாகச் சமமாக இருத்தல் அவசியம். இந்தக்காரணத்தினாலும், நான் கட்டாயத் தமிழ்க்கல்வியை ஆதரிக்கிறேன் - சென்ற பதிவில் இந்தக் காரணங்களை விளக்க முடியவில்லை, எனவே இப்பதிவு!

29 பின்னூட்டங்கள்:

TBCD said...

நல்ல ஆய்வு..உடன்படுகிறேன்.

Anonymous said...

Arumaiyana Alasal
-Raji

Anonymous said...

From Deccan Herald

Tamil movies face KRV ire
DH News Service,Bangalore:

Activists of the Karnataka Rakshana Vedike (KRV) attacked nine theatres screening Tamil films in the City, in protest against the remarks made by Tamil Nadu Chief Minister M Karunanidhi on the Hogenakal issue.Hundreds of KRV members stormed into Nataraj, Balaji, Sharada, Vinayaka, Poornima, Lavanya, Aruna, Super and Ajantha theatres, brought down banners and posters and demanded a halt to the screening of Tamil films.
The KRV attacks began at 11 in the morning and went on till 4 pm.

KRV has warned theatre owners against screening Tamil films until the Hogenakal issue is resolved. Theatres found screening Tamil films will be doing so at their own risk, the vedike said.

The vedike withdrew its protests after the theatre owners assured them that they would not screen Tamil movies.

KRV president Narayana Gowda accused the Karunanidhi government of lobbying with the Centre to implement the Hogenakal project, though the matter is in dispute.

“Tamil Nadu is going ahead, ignoring the law. We have submitted a memorandum to the governor and the advocate-general to take steps to restrain the Karunanidhi government that is taking advantage of the political situation in Karnataka which does not have an elected government,” Gowda added. The vedike has alleged that the UPA led government at the Centre is repeatedly ignoring the interests of the State.

Vedike warns MK

The vedike has demanded that Karunanidhi take back his remarks, failing which cable operators in Karnataka will be asked to stop beaming Tamil channels and public transport buses from Tamil Nadu will not be allowed to ply or enter Karnataka.

Kannada Chaluvali leader Vatal Nagaraj also led a protest march against Karunanidhi and PMK leader
Ramadoss at Vidhana Soudha.

Nagaraj warned TN that Karnataka would be forced to launch a massive agitation to include Ooty, Erode, Krishnagiri and Hosur into Karnataka if TN continued to exploit the situation.


Additional Commissioner of Police (Law and Order) Bipin Gopal Krishna told Deccan Herald that the situation is under control.

The Karnataka State Road Transport Corporation has said its services to Tamil Nadu will not be disrupted.
Officials from the Tamil Nadu State Transport Corporation said bus services were normal on Monday.

நிஜமா நல்லவன் said...

நல்ல பதிவு.

Anonymous said...

பதிவு நல்லாருக்குங்க.

//அப்படிப்பட்ட சில்லறைப் பிரிவினைவாதிகள் ஏற்படக்கூடாது என்றால், எல்லாரும் மொழிரீதியாகச் சமமாக இருத்தல் அவசியம். இந்தக்காரணத்தினாலும், நான் கட்டாயத் தமிழ்க்கல்வியை ஆதரிக்கிறேன்//

மொழிரீதியாக மட்டுமல்ல, சமூகத்தில் சமச்சீர் கல்வியும் மிகவும் முக்கியம்.

அப்படியே, 'கட்டாய தமிழ்க்கல்வி'யிலிருந்து அனைவருக்கும் 'கட்டாய தமிழ்-வழிக்கல்வி'க்கும் நகரவேண்டும் (உடனடியாக 10 வது வரைக்கும்).

அல்லது தமிழ்நாட்டில் 'அனைவருக்கும்' கட்டாய ஆங்கிலவழிக்கல்வி என்றாவது ;)

-தமிழன்

திவா said...
This comment has been removed by the author.
திவா said...

ரொம்ப லேட்டானாலும் நல்ல பதிவு போட்டீங்க!
//பெரிய கனவுகள்!//
இது மெய்ப்படுமேன்னு எனக்கு பெரிய சந்தேகமே. நடக்கனும்னு மனசு சொல்லுது. நடக்காதுன்னு அறிவு சொல்லுது. கடவுளே காப்பாத்து.

எலும்பை உடைச்சாலும் ஹொகேனக்கல் திட்டம் நிறைவேறும்னு சவுண்ட் உடறாங்க. கொஞ்சம் வாய மூடிக்கிட்டு வேலையை பாக்கக்கூடாதா? இவங்க எலும்பா உடையப்போகுது. பாதிப்படையறது பங்களூர்ல இருக்கிற தமிழர்கள்தான்.

இலவசக்கொத்தனார் said...

பல பேரால் முடியுமான்னு கேட்ட விஷயத்தை இப்படி சிம்பிளா முடிச்சுட்டீரே. பெனாத்தலாரா கொக்கான்னு சும்மாவா சொன்னாங்க.

என்னது மேட்டர் என்னான்னு சொல்லணுமா?

அதான் ஹொகேனக்கல் என்ற மொட்டைத் தலைக்கும் கட்டாயத் தமிழ் என்ற முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதைத்தான் சொல்லறேன்.

நல்லா இருங்கடே!!

சின்னக்கவுண்டர் said...

Suresh,
U just raised the questions what are all i'm thinking. But still i can't get the answer for d question y they(Kannada vedike) opposing to that scheme, is it purely politics?

தஞ்சாவூரான் said...

//அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, காவிரி நீரை விடமாட்டோம் என்று சொல்வது, அவர்களின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதாக நினைக்கப்படுகிறது.//

எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்றமாதிரி, எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவர்கள்தான் மூல காரணம். ஏன், வெள்ளம் வரும்போது, நீரை விட மாட்டோம்ன்னு சொல்ல வேண்டியதுதானே?

தமிழ்வழிக்கல்வியோடு இதை சம்பந்தப் படுத்திப் பார்த்திருப்பது வித்தியாசமான கோணம்தான். மொழிச் சமனிலை மூலம் பொருளாதாரச் சமனிலைன்னு வந்துட்டா, கிட்டத் தட்ட பிரச்சினைகளே இருக்காது.

Anonymous said...

மொத்தத்தில் இவை எல்லாமே ஒரு சமுதாயத்தின் குறுகிய மனப்பான்மியையே வெளிப்படுத்துகிறது. வேறு பல நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் தமிழ்ர்கள் மூலமும் நடக்கின்றன. தேசங்களும் மதங்களும் போலவே மொழியும் மனிதர்களை பிரிக்க வைக்கும் அளவுக்கு ஏழ்மையும், உழைப்பும், கொள்கைகளும் சேர்த்து வைப்பதில் வெற்றி கொள்வதில்லை

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டிபிசிடி, ராஜி.

சரியா தகவல் கொடுத்தீங்க அனானி. அப்படியே கொஞ்சம்கொஞ்சமா வந்து நெய்வேலி, கடலூர் , தூத்துக்குடி எல்லாம் கர்நாடகாதான்னு சொல்லப்போறாங்க பாருங்க!

நன்ரி நிஜமா நல்லவன், தமிழன்.

தமிழன், தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பது தேவை எனும் அதே நேரத்தில், மற்ற பாடங்களை தமிழ்வழியில் படிப்பது, தொடர்ச்சிக்கு அதிக பயனாக இருக்காது என்பதால் அதை நான் ஆதரிக்கமாட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

திவா,

//கொஞ்சம் வாய மூடிக்கிட்டு வேலையை பாக்கக்கூடாதா?// அதை ஏன் கேக்கறீங்க.. நடுவர் மன்றத் தீர்ப்பு தமிழ்நாட்டை கடுமையா வஞ்சித்தபோதும், அரசியல் காரணங்களுக்காக அதை வெற்றியாகக் கொண்டாடப்போக, கர்நாடகாவுக்கு சூடு ஏறி அதையும் கிழிச்சுப் போட்டாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு,

//அதான் ஹொகேனக்கல் என்ற மொட்டைத் தலைக்கும் கட்டாயத் தமிழ் என்ற முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதைத்தான் சொல்லறேன்.//

மொட்டைத்தலை, முழங்கால் ரெண்டுமே உடம்புக்குள்ளேதானே இருக்கு.. முழங்கால்லே அடிபட்டா தலைவலிக்கக்கூட வாய்ப்பிருக்கில்ல?

சின்னக் கவுண்டர்,

அரசியல் தவிர ஒகேனக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர்னு இழுத்துகிட்டே போறதுக்கு வேற காரணம் இருக்கமுடியாது.. அதுவும் மேமாசம் தேர்தல் வேற!

பினாத்தல் சுரேஷ் said...

தஞ்சாவூரான், நன்றி.

//மொழிச் சமனிலை மூலம் பொருளாதாரச் சமனிலைன்னு வந்துட்டா, கிட்டத் தட்ட பிரச்சினைகளே இருக்காது//

பொருளாதாரச் சமநிலை வந்துட்டா வேறெந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனா அது வரவரைக்கும் தூண்டும் காரணிகளைக் குறைக்கவாவது பார்ப்போமே..

அனானி,

//வேறு பல நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் தமிழ்ர்கள் மூலமும் நடக்கின்றன.// நிச்சயம். இது மனித உளவியல். தமிழன் என்பதால் தவறே செய்யாதவனாகி விடுவானா என்ன?

Sridhar Narayanan said...

தமிழ் கட்டாயப் பாடமாக இருப்பது நல்லதுதான். பல மொழிகள் கற்க வாய்ப்பிருந்தாலும் தாய்மொழியை ஒதுக்குதல் கூடாது. பல நாடுகள் சுற்றி வந்தாலும் தாய்நாடு என்பது எப்படி ஒரு இன்றியமையாத அடையாளமோ அந்த மாதிரிதான் தாய்மொழியும். அதை வளமைப்படுத்த அதனை கசடற கற்பது அவசியம்.

வேறு மொழியை தாய்மொழியாக வைத்திருப்பவர்களௌக்கு, அவர்கள் விருப்பப்பட்டால் விலக்கு அளிக்கலாம்.

ஆனால் இந்த பதிவின் பேசுபொருளை பார்த்தால் -

//"தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக் கட்டமைப்பதும், ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்."//

கர்நாடகாவில் கன்னடம் கட்டாயப் பாடம்தான். ஆனால் இப்பொழுதும் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

புலம் பெயர்ந்தவர்களுக்கு, பிழைப்புக்காக வேறு இடம் போகிறவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

என் தந்தை பெங்களூருவில் வேலை பார்ப்பதால் நான் கன்னடம் படிக்க தயார். ஆனால் தமிழன் என்ற அடையாளத்தையும் இழக்க வேண்டுமா? நாளை காவிரியில் நீரவரத்து குறைந்தால் நான் கர்நாடகத்தின் நிலைப்பாடை ஆதரிப்பதா? தமிழகத்தின் நிலைப்பாடை ஆதரிப்பதா?

கர்நாடகத்தின் நிலையை ஆதரிப்பதற்க்கு நான் கன்னடியனாக இருக்க வேண்டிய அவசியமில்லைதான். நியாயம் எந்த பக்கம் இருக்கிறது என்று பார்ப்பதை விட தங்கள் மாநிலத்திற்க்கு என்ன ஆதாயம் என்று பார்த்துதானே நிலைப்பாடு எடுக்கிறார்கள். அடிப்படையில் எல்லா மாநிலமுமே மொழிவாரியாகத்தான் பிரிக்கபட்டிருக்கிறது.

உங்கள் பார்வையில் இந்தியா முழுவதிலும் சமச்சீரான சமுதாயம் வர எல்லாரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் போல :-))

தமிழை எடுத்து படித்தால் பொதுத்தேர்வில் டோட்டல் குறைய வாய்ப்பிருப்பதால், நிறைய மாணவர்கள் தமிழை தவர்ப்பது ஆரோக்கியமற்ற போக்கு. அதற்க்கு கட்டாய தமிழ் பாடம் ஒரு மருந்து. அதனால் மட்டும் தமிழ் மொழி சிறப்படைந்து விடாது. அல்லது சமச்சீரான சமுதாயம் உருவாகிவிடாது என்பது எனது எண்ணம்.

SanJai said...

//ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை. ராஜ் தாக்கரே நாலு குண்டர்களைக் கூட்டி வட இந்தியர்களை அடிப்போம் என்று கிளம்பும்போது கிடைக்கும் ஆதரவும், ஏறத்தாழ இதே போன்றதுதான். மும்பையில் கொழிக்கும் வட இந்தியர்களின் மீதான இயலாமை, மராட்டி பேசாதவர்களின் மீதான கோபமாக எதிரொலிக்கிறது.//

சரியாக சொன்னீர்கள். கன்னடனும் மராட்டியனும் இந்த விஷயத்தில் மட்டும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். கையாலாகாத காட்டுமிராண்டிகள்.

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி.

மொழி படிப்பதால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து பாலாறும் தேனாறும் ஓடும் எனச் சொல்ல வரவில்லை.

மொழி என்பதை வைத்து விளையாடுகிற கும்பலுக்கு கோல் கொடுக்காமல் தப்பலாம் என்பதுதான் நான் சொல்லவருவது. இன்று கர்நாடகாவில் நடப்பது போன்ற - வேறிடத்தில் படித்துமுடித்து பெங்களூரு வரும் வேற்றுமொழியாளர்கள் சார்ந்த பிரச்சினைகள் - போன்றவை கட்டாயத் தமிழாலோ கட்டாயக் கன்னடத்தாலோ தீர்க்கமுடியும் என்று எண்ணும், சொல்லும் அளவுக்கு முட்டாள் இல்லை :)

//உங்கள் பார்வையில் இந்தியா முழுவதிலும் சமச்சீரான சமுதாயம் வர எல்லாரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் போல :-))// இந்தி படித்தாலும் மாறாது. ஆனால், இந்தியை முன்னிறுத்தி ஏற்படும் பிரச்சினை குறையும் அல்லவா? One Less Burden - இதை மட்டுமே சொல்ல வருகிறேன்.

//தமிழை எடுத்து படித்தால் பொதுத்தேர்வில் டோட்டல் குறைய வாய்ப்பிருப்பதால்// இதற்கு கல்வி அமைச்சகம் ஏதேனும் செய்தே ஆகவேண்டும். வேண்டாவெறுப்பாக தமிழைப்படிப்பதை விடுத்து மகிழ்வுடன் படிக்க வழிகோலும் அளவுக்கு எளிமையான பாடத்திட்டம் - முக்கியமாக தமிழ் இரண்டாம் பாடமாக எடுப்பவர்களுக்கு - இருக்கவேண்டும்.

சஞ்சய், நன்றி.

ஓகை said...

//பல பேரால் முடியுமான்னு கேட்ட விஷயத்தை இப்படி சிம்பிளா முடிச்சுட்டீரே. பெனாத்தலாரா கொக்கான்னு சும்மாவா சொன்னாங்க.

என்னது மேட்டர் என்னான்னு சொல்லணுமா?

அதான் ஹொகேனக்கல் என்ற மொட்டைத் தலைக்கும் கட்டாயத் தமிழ் என்ற முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதைத்தான் சொல்லறேன்.

நல்லா இருங்கடே!!//

என்னை வழிமொழிய வச்சீட்டீரே கொத்தனாரே!

Sridhar Narayanan said...

சுரேஷ்,

ரிடிஃப் தளத்தில் இருக்கும் இந்த செய்தியை படித்தீர்களா?

பெங்களூருவிலே பிறந்து வளர்ந்து, கன்னடம் தெரிந்த அருள்ராஜை இன்னமும் தமிழராகத்தான் பார்க்கிறார்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

ஓகை, :-).. அவருக்குக் கொடுத்த அதே பதில்தான்.

ஸ்ரீதர், இதைப் பற்றி எழுதினால், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் எழுதி, தமிழில் யோசிக்கும் ஒரு ஆளுடன் கருத்து வேறுபாடு வந்தவுடன் நீ தமிழனே கிடையாது, நீ தமிழ்நாட்டை விட்டு வெளியேறினால் எந்தப் பாதிப்பும் கிடையாது என்று சொல்லும் தமிழ்-ப்ராண்ட்-ஓனர்ஸ் பற்றியும் பேசவேண்டி இருக்கும்.. இப்போது வேண்டாமே ;-)

தமிழன் said...

//தமிழன், தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பது தேவை எனும் அதே நேரத்தில், மற்ற பாடங்களை தமிழ்வழியில் படிப்பது, தொடர்ச்சிக்கு அதிக பயனாக இருக்காது என்பதால் அதை நான் ஆதரிக்கமாட்டேன்.//

/பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது./- என்ற உங்கள் நிலைப்பாட்டில் இருந்துதான் இதைச்சொல்கிறேன்.

இன்று ஏழைகள் தமிழ்வழிக்கல்வியிலும் பணம்படைத்தோர் ஆங்கிலவழிக்கல்வியிலும் (ஏறக்குறைய சமஎண்ணிக்கையில்) பயில்கிறார்கள். பாருங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வின் வெளிப்படையை. மொழிரீதியாகவும் இது எவ்வளவு பெரிய மனத்தடையை இடைவெளியை மாணவர்களிடையே உருவாக்குகிறது. கல்லாரி முதலாமாண்டு சென்றுபாருங்கள். மேலும், கல்லூரி செல்லாத சமூகத்தில்?

தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள்தான் இன்றும் சமூகத்தில் மிகக் குறைந்த அளவு ஆங்கிலமொழி கலப்போடு பேசுகிறார்கள். மற்றவர்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் போலத்தான். ஆங்கிலவழிக்கல்வியில் படித்தவர்கள் மற்றும் தமிழ்வழிக்கல்வியில் படித்து (குறைந்தபட்சம்) ஆங்கிலவழியில் மேற்படிப்பு படித்தவர்கள் மட்டும் தானே இன்று தொ.கா. பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது?.

சாதாரணமக்களும், தமிழ்வழிபடித்து பாதியில் விடுபவர்களும் சமூகவெளியிலிந்து மொழியளவில் வேகமாக விலகிக்கொண்டிருக்கிறார்கள். இவ்விடைவெளி குறிப்பிடும் நிலையை அடையும்போது அரசியல் பிரிவினை கட்டாயம் ஏற்பட்டுவிடும். அறிகுறிகள் இப்போதே தெரிகிறதே!.

தமிழில் பேசினால் 'நீங்க தாழ்த்தப்பட்டவரா?' எனக்கேட்கிறார்கள் என்று தங்கர்பச்சான் ஒரு பேட்டியில் சொன்னதும் ஞாபகம் வருகிறது (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற தொடர்பும் இருக்கிறதல்லவா?).

/மற்ற பாடங்களை தமிழ்வழியில் படிப்பது, தொடர்ச்சிக்கு அதிக பயனாக இருக்காது/ - என்ற உங்கள்வாதம் சரியன்று. ஆங்கிலம் ஒரு பாடமாக முறை
யாக பள்ளியில் கற்பிக்கப்பட்டாலே மேற்படிப்புக்கு போதுமானது. இன்று இருக்கும் மேதைகளும், கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் தமிழ்வழி படித்தவர்கள் தானே?.

சமூகத்தில் 'அனைவரும்' ஒன்று தமிழ்வழிக்கல்வியிலோ அல்லது ஆங்கிலவழிக்கல்வியிலோ பள்ளிப்பாடங்களைப் பயிலவேண்டும். அதுமட்டும் தான் சமூகத்தில் மொழிரீதியான பிரிவினையை தடுக்கும். இப்பதிவுக்கும் பொருளிருக்கும்.

'தமிழ்நாடு' என்பதால் தமிழ்வழிக்கல்வி வேண்டும் என்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

//தமிழில் பேசினால் 'நீங்க தாழ்த்தப்பட்டவரா?' எனக்கேட்கிறார்கள் என்று தங்கர்பச்சான் ஒரு பேட்டியில் சொன்னதும் ஞாபகம் வருகிறது (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற தொடர்பும் இருக்கிறதல்லவா?)//

இதைத்தான் நான் சொல்லவந்தேன்..

//சமூகத்தில் 'அனைவரும்' ஒன்று தமிழ்வழிக்கல்வியிலோ அல்லது ஆங்கிலவழிக்கல்வியிலோ பள்ளிப்பாடங்களைப் பயிலவேண்டும்.//

இது சாத்தியமும் இல்லை, தேவையும் இல்லை என்பது என் கருத்து.

//இன்று இருக்கும் மேதைகளும், கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் தமிழ்வழி படித்தவர்கள் தானே?. //

வாஸ்தவம். அவர்கள் தொடர்ச்சிக்கான கஷ்டப்படாமல் இருந்திருந்தால் இன்னமும் சாதித்திருக்கலாமோ என்னவோ? நான் தமிழ்வழிப்பாடங்களில் இருந்து ஆங்கிலத்துக்கு மாறியபோது ஒர் செமெஸ்டரையே காவுகொடுக்கவேண்டி இருந்தது!

திவா said...

//வாஸ்தவம். அவர்கள் தொடர்ச்சிக்கான கஷ்டப்படாமல் இருந்திருந்தால் இன்னமும் சாதித்திருக்கலாமோ என்னவோ? நான் தமிழ்வழிப்பாடங்களில் இருந்து ஆங்கிலத்துக்கு மாறியபோது ஒர் செமெஸ்டரையே காவுகொடுக்கவேண்டி இருந்தது!//

இங்கேயும் அப்படித்தான். பள்ளியிலே தமிழ் வழி கல்வில வகுப்பு முதலாக மூணு வருஷம் இருந்துவிட்டு கல்லூரில ஆங்கில கல்வி முறைக்கு மாறின வருஷம் முதல் தேர்வில் just scrapped through!

தமிழன் said...

///இன்று இருக்கும் மேதைகளும், கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் தமிழ்வழி படித்தவர்கள் தானே?. //

வாஸ்தவம். அவர்கள் தொடர்ச்சிக்கான கஷ்டப்படாமல் இருந்திருந்தால் இன்னமும் சாதித்திருக்கலாமோ என்னவோ? நான் தமிழ்வழிப்பாடங்களில் இருந்து ஆங்கிலத்துக்கு மாறியபோது ஒர் செமெஸ்டரையே காவுகொடுக்கவேண்டி இருந்தது! ///

இதைத்தானே நானும் சொல்கிறேன். இன்றும் தமிழ்வழி படிப்பவர்கள் அனைவருக்கும் இப்பிரச்சனை இருக்கிறது.

அதுவும் தமிழ்வழி படிப்பவர்கள் ஏழைகளாய் இருப்பதால் கல்லூரிக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் குறைவு. (ஆங்கிலவழியில் தேர்பவர்கள் கிட்டதட்ட அனைவருமே பொருளாதார பலத்தில் மேற்கல்வி பெற்றுவிடுகிறார்கள்). அதிலும், கல்லூரி வருபவர்களும் செமஸ்டர்களை காவு கொடுத்தும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்றும் தங்கள் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலை. ஆனால், வாழ்வில் முன்னேறவேண்டிய கட்டாயமும் தேவையும் இவர்களுக்குத்தான் அதிகமாய் இருக்கிறது. முரண்பாட்டை பாருங்கள் !

இன்று பொருளாதார ஏற்றத்தாழ்வை தீவிரப்படுத்தி, மொழிரீதியாக மொழிபெயர்க்க வாய்ப்பளிக்கும் அடிப்படைக் காரணி தமிழ்வழி Vs ஆங்கிலவழி கல்வியின் சிக்கல்கள் தான். இவை ஆராயப்பட்டு தீர்வுகள் காணப்படவேண்டும்.

சிறப்பானது, அனைவருக்கும் தமிழ்வழிக்கல்வி (அல்லது ஆங்கிலவழிக்கல்வி). இதன் மூலம் (எதன் மூலமும்?!) பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்க முடியாதெனினும், அதன் தீவிரத்தையம், மொழிரீதியாக மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பையும், கூடவே மொழிரீதியான சமூக-அரசியல் பிரிவினையியும் நிச்சயம் தடுக்கலாம்.

அல்லது, கூடுதலாக தமிழ்வழி-மேற்கல்வியை கொணர்ந்து, கல்லூரிவரை வரும் ஏழைத் தமிழ்வழி மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற ஒரு வாய்ப்பளிக்கலாம். ஆனால், இந்தமுறையில் மொழிரீதியாக மேற்சொன்ன பிரிவினைகளுக்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கவே செய்யும்.

மற்றபடி, 'கட்டாயத் தமிழ்க்கல்வி'யால், 100 பேரில் தமிழ்படிக்காத அந்த 2 பேர் (ஐயா குழந்தைசாமி அவர்களின் 1995 கணக்குத்தான். புதுக்கணக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க சாமியோவ்) பத்தாவது வரை தமிழையும் படிப்பதால் இவை ஒன்றும் நடந்துவிடாது, 'ஒகேனக்கல்லும் கட்டாயத்தமிழ்கல்வியும்' என ஒரு பினாத்தல் வருவதைத்தவிர ;-)

அறிவன் /#11802717200764379909/ said...

///////நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான், பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான். பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள் - கவனிக்கவும், தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லை - தேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்கு, தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக் கட்டமைப்பதும், ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.

அது சாத்தியப்படக்கூடாது, அப்படிப்பட்ட சில்லறைப் பிரிவினைவாதிகள் ஏற்படக்கூடாது என்றால், எல்லாரும் மொழிரீதியாகச் சமமாக இருத்தல் அவசியம். இந்தக்காரணத்தினாலும், நான் கட்டாயத் தமிழ்க்கல்வியை ஆதரிக்கிறேன்////////

கட்டாயத் தமிழ்க் கல்வியை நானும் ஆதரிக்கிறேன்,ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவையா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.


இன்று பொருளாதார வளர்ச்சி பெறாதவர்கள் தமிழ் மட்டுமே படித்தவர்களாக இருப்பார்கள்'என்ற கருத்து உருவாக என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

தகவல் பரிமாற்றம்,பண்பாடு ஆகிய விதயங்கள் மட்டுமே சார்ந்த மொழியை உணர்ச்சி பூர்வமாக ஆக்கி,சுமார் 40 ஆண்டுகளாக ஆங்கிலம்,மற்றும் இந்தி ஆகிய மொழிகளை ஏதோ விரோதி மொழிகள் போன்ற மனோபாவத்தை மக்களிடையே விதைத்து சமூகத்தை சீரழித்த அரசியல் கட்சிகள்தான் காரணம்.

தாய்மொழியில் படிக்கும் போதுதான் குழந்தைகள் தெளிவுடன்,புரிதலுடன் படிப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க,வேற்றுமொழிகளுக்கு இங்கே வேலையில்லை எனக் கிளப்பிய நெருப்பில்,பொருளாதார இணைப்பு மொழியான ஆங்கிலமும் கருகியதுதான் மிச்சம்;அதன் எச்சங்கள் தான் இன்றைய சமூக வேறுபாடுகள்.

குப்பனும்,சுப்பனும் அவரவர்களில் ஈடுபாட்டுக்கு ஏற்ப இந்தியோ ஆங்கிலமோ படித்துத் தேர்ந்திருப்பார்கள்;அவரவர்களின் வாழ்க்கையும் அவர்களின் எதிர்காலமும்,பொருளாதார நிலையும் வேறாக இருந்திருக்கும்...

உண்மையில் மும்மொழிக் கொள்கைகள் வலுப்பட்டிருந்தால்,இப்போது ஏற்பட்டிருப்பது போன்ற மொழி சார்ந்த வெறித்தனங்கள் ஏற்பட்டிருக்காதோ என்னவோ...

பினாத்தல் சுரேஷ் said...

தமிழன்,

//இன்று பொருளாதார ஏற்றத்தாழ்வை தீவிரப்படுத்தி, மொழிரீதியாக மொழிபெயர்க்க வாய்ப்பளிக்கும் அடிப்படைக் காரணி தமிழ்வழி Vs ஆங்கிலவழி கல்வியின் சிக்கல்கள் தான். இவை ஆராயப்பட்டு தீர்வுகள் காணப்படவேண்டும்.//

நிச்சயமாக, ஒப்புக்கொள்கிறேன்.

//அல்லது, கூடுதலாக தமிழ்வழி-மேற்கல்வியை கொணர்ந்து, கல்லூரிவரை வரும் ஏழைத் தமிழ்வழி மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற ஒரு வாய்ப்பளிக்கலாம். //

ஆனால், அந்தக்கல்விக்கு மதிப்பு குறைவாக்கப்படுவதும், தாழ்வாகப் பார்க்கப்படுவதும் நடக்கலாமே?

அறிவன்,

//கட்டாயத் தமிழ்க் கல்வியை நானும் ஆதரிக்கிறேன்,ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவையா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.//

நான் சொல்லும் காரணங்கள் என்பது ஒரு அதீத சிந்தனையிலும், அளவுக்கதிகமான ஆப்டிமிஸத்திலும் எழுதப்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் எனக்கே - குறிப்பாக கொத்தனார், ஸ்ரீதர், ஓகை, தமிழன் மற்றும் உங்கள் பின்னூட்டங்களைப் படித்ததும் தோன்றுகிறது. நான் எழுதிய லாஜிக்கில் ஓரளவாவது சாரம் இருப்பதாக இன்னும் கருதவும் செய்கிறேன் என்பதால் குழப்பம்தான் அதிகமாகிறது :-))

//மொழியில் படிக்கும் போதுதான் குழந்தைகள் தெளிவுடன்,புரிதலுடன் படிப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க,வேற்றுமொழிகளுக்கு இங்கே வேலையில்லை எனக் கிளப்பிய நெருப்பில்,பொருளாதார இணைப்பு மொழியான ஆங்கிலமும் கருகியதுதான் மிச்சம்;அதன் எச்சங்கள் தான் இன்றைய சமூக வேறுபாடுகள்.//

இதை முழுக்கவே ஒப்புக்கொள்கிறேன்.

ரசிகன் said...

ஆழமா சிந்திச்சிருக்கிங்க... வாழ்த்துக்கள்.:)

கருப்பன்/Karuppan said...

நல்ல சிந்தனை... எனக்கென்னவோ கன்னடர்களின் inferiority complexஐ என்ன செய்தாலும் சரி செய்ய முடியும் என தோன்றவில்லை :-(

 

blogger templates | Make Money Online