1985
"எனக்கு ரிப்போர்ட்டர் மேலேதாண்டா சந்தேகம்" கருப்பு மண்ணைக் கைநிறைய அள்ளி ட்ரேயில் கொட்டிக்கொண்டிருந்தான் ஆனந்த்.
"ரிப்போர்ட்டரா? அவன் அப்பாவிடா.. அதுவும் இல்லாம, அவன் ஃபவுண்டரிக்கு எங்கே வந்தான்? அவனுக்குதான் வெல்டிங் ஆச்சே" ஆனந்தின் ட்ரே மண்ணில் சின்ன திமிசுக்கட்டையை வைத்து சமன் செய்தேன். கவனம் இங்கே இல்லை. எங்கே போனது என் கால்குலேட்டர்? அப்பா கொன்று விடுவார்.
"என்னடா அங்கே பேச்சு? ஒரு கோர் உடைஞ்சதுன்னாலும் கொன்னுடுவேன்" ஃபவுண்டரி மாஸ்டர் குறட்டையை நிறுத்தி பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை கவனமாக இருப்பதைப் பறைசாற்றினார்.
"சரி அப்புறம் பேசலாம். கோர் சேண்ட் கொஞ்சம் கொடுடா.. ரொம்ப தண்ணி ஊத்திட்டேன் போல. கொளகொளன்னு ஆயிருச்சு" வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஃபவுண்டரியை முடித்துவிட்டு உடனே ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டீரியல்ஸ். கவுஸ் சார். கால்குலேட்டரைக் காணோம் என்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். வயிற்றுக்குள் கடமுடா சத்தம்.
"எலக்ட்ரிகல்லே யாரையாச்சும் கேக்கலாமா?"
"கேட்டுப்பாரு.. ஆனா டவுட்டுதான். அவங்களுக்கும் இன்னிக்கு தியரிதான்னு நினைக்கிறேன்"
காக்கிச் சட்டையின் மீது மழையின் துளிகள் பட்டு ஒரு மாதமாக துவைக்காத நாற்றத்தை வெளிக்கொண்டு வர, மரங்களின் ஊடே பதுங்கிப் பதுங்கி ஓடவேண்டி இருந்தது.எலக்ட்ரிகல் பக்கம் போக நேரம் இல்லை. கவுஸ் இன்னும் வகுப்புக்குள் வந்திருக்கக்கூடாதே ஆண்டவா!
"நடந்து வந்தா கூட இவ்வளவு நனைஞ்சிருக்க மாட்டோம்."
காலில் இருந்த சேற்றை மிதியடியில் வழித்துக்கொண்டிருந்த போதுதான் கவுஸ் முதுகில் ஓங்கித் தட்டினார். பெரிய கம் பூட்டுக்குள் பேண்டை ராபர்ட் க்ளைவ் மாதிரி உள்ளே விட்டிருந்தார். கண்ணில் கோபம்.
"வரானுங்க பாரு கனவுப் பாட்டு ஹீரோயின் மாதிரி. ஏண்டா லேட்டு?"
"ஃபவுண்டரியில லேட் ஆயிடுச்சு சார்"
"மத்தவன் எல்லாம் வரல? ஒழுங்கா வேலை செஞ்சா நாராயணன் ஏன் உங்களை மட்டும் பிடிச்சு வைக்கப்போறான்?"
"..."
"ட்ரஸ் எல்லாம் மாத்த வேணாம். அப்படியே உக்காருங்க கவர்ச்சி காட்டிகிட்டு."
"அசைன்மெண்டை எல்லாரும் முடிச்சிட்டீங்களா?"
நல்லவேளை. முடித்திருந்தேன்.
"கவர்ச்சிக் கன்னி சுகுமார், முதல்ல நீ கொண்டுவா. உன்னோட க்ரூப்டான்ஸர் ஆனந்த் அடுத்தது."
ஆசிரியர் அடித்த மொக்கைக்கு மொத்த வகுப்பும் சிரித்தது. நிரூபன் தவிர்த்து.
"யங்ஸ் மாடுலஸ் கால்குலேட் பண்ணனும். சுகுமார், போர்டுல இருக்கிற கணக்கை சால்வ் பண்ணு"
"சார் கால்குலேட்டர் இல்லை" எனக்கே கேட்காமல் முணுமுணுத்தேன்.
"என்னது? இதை தைரியமா வேற சொல்றியா?"
"காலையில இருந்தது சார். இப்ப காணாம போயிடுச்சு"
"காக்கா தூக்கிட்டு போச்சா? பொய் சொல்லாதே.. கெட் அவுட் ஆப் மை க்ளாஸ்"
இவரிடம் பேசிப் பிரயோஜனமில்லை. வெளியேறி துறையின் ஸ்டாப் ரூமுக்கு வந்தேன். தேசிகன் மட்டும் குடையைக் மடக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். சரியான சமயம். இவர் நிச்சயம் எனக்கு உதவுவார்.
"என்ன சுகுமார்? க்ளாஸுக்குப் போகலை?"
"கவுஸ் சார் வெளியே அனுப்பிட்டார் சார். கால்குலேட்டர் இல்லாததால"
"ஏன் கொண்டு வரல?"
"கொண்டு வந்தேன் சார். இங்கேதான் யாரோ திருடி இருக்காங்க"
"இன்னிக்கு என் சப்ஜெக்ட் இருக்குதா?"
"ஆமாம் சார். அடுத்த ஹவர்"
"என்ன மாடல்?"
"FX110 சார்"
"அடையாளம் எதாச்சும் இருக்குதா?"
"என் பேர் ப்ளாஸ்டிக் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தேன் சார்"
"சரிதான். திருடறவன் அதை பத்திரமா வச்சிருப்பான் பாரு.." ஆனந்தும் உள்ளே நுழைந்தான்.
"எனக்கு நிரூபன் மேலேதான் சந்தேகம் சார். அவன் இவன் பைகிட்ட நிந்துகிட்டிருந்தான் ப்ராக்டிகல் போறதுக்கு முன்னாடி. என்னைப்பாத்ததும் அவசர அவசரமா கிளம்பிட்டான் சார்.. திருட்டு முழி"
"நிரூபன்? "
"லாஸ்டு பெஞ்ச் சார். கன்னங்கரேல்னு.. தமிழ் பேசத் தெரியாம இருப்பானே"
"ஓ.. அந்த கோட்டா பார்ட்டியா?"
மணியடித்தது. மூன்று பேரும் ஒன்றாகக் கிளம்பினோம்.
தேசிகன் உள்ளே நுழையும்போது கவுஸ் "இந்தப்பசங்க உன் கூட வந்திட்டானுங்களா? யூஸ்லெஸ் க்ரூப்.." என்றபடி வெளியே வந்தார். தேசிகன் அருகில் வந்தவுடன் குரலைத் தாழ்த்தி "உன்னையும் சேத்துதான்" என்றது எனக்குக் கேட்டுவிட்டது.
"சுகுமாரோட கால்குலேட்டரைக் காணோம். எடுத்தவன் உடனே கொடுத்திட்டா பிரச்சினை கிடையாது."
யாரும் எதுவும் பேசவில்லை.
"எல்லாரும் அவனவன் கால்குலேட்டரை எடுத்து டெஸ்க் மேலே வைங்க." மற்ற மாடல்கள் எல்லாம் உடனடியாக நிராகரித்துவிட்டேன். வகுப்பில் 4 பேர் மட்டும் FX110 வைத்திருந்தார்கள். நிரூபனும் சேர்த்து. ஆனந்த் உண்மையைத் தான் சொல்லி இருக்கிறான்.
"எப்படா காணாமப் போச்சு?"
"காலையில 12 மணிக்கு இருந்தது சார்"
"அப்ப கொஞ்சம் நேரம்தான். எங்க ஸ்டிக்கர் ஒட்டி இருந்தே?"
"பின்னாடி பக்கம் சார்"
"இந்த நாலுத்துலயும் விரலை வச்சுப்பாரு. ஒட்டுதா பாரு. ஸ்டிக்கர் பிச்சிருந்தாலும் கொஞ்ச நேரம் ஒட்டும் இல்ல?" துப்பறியும் தேசிகன்.
மற்ற மூன்றிலும் ஒட்டவில்லை. நிரூபனிடம் வந்த போது அவனுடைய வழக்கமான சினேகம் வேண்டும் சிரிப்பு இப்போது இல்லை. கண்ணில் கலக்கமா? ஒட்டுவது போல்தான் தெரிந்தது.
"இதான் சார்"
"நிரூபன்? இந்த வேலையெல்லாம் பண்ணவா உன்னை கோட்டா கொடுத்து சேர்த்திருக்கோம்?"
"நான் இல்லை சேர், இது என்ர கல்குலேற்றர்"
"அப்புறம் எப்படிடா அதே மாடல்? ஆனந்த் உன்னை எடுக்கும்போது பாத்தானாம்" எடுக்கும்போது பார்த்ததாகவா சொன்னான்?
" இது என்ர கல்குலேற்றர் சேர்"
அருகில் இருந்த லோகுவிடம் தேசிகன் கேட்டார். "இவன் இதைதான் டெய்லி வச்சிருக்கானாடா?"
"இல்லை சார்.. நான் இன்னிக்குதான் பாக்கறேன்"
" நேற்றைக்கு என்ர சினேகிதன் ஒருத்தன் தந்தவர்.. இண்டைக்குத் தான் இதைக் கொண்டு வந்திருக்கிறன்" குரல் உடைந்துவிட்டிருந்தது. கண்ணில் பயம் மற்றும் அழுகை.
"நம்பற மாதிரி பொய் கூட சொல்லத் தெரியலை உனக்கு. பிரின்ஸி கிட்ட சொல்லி உன்னை சஸ்பெண்ட் பண்றேன்.. இப்ப வெளியே போ.. சுகுமார் கிட்ட அதைக் கொடுத்திட்டு"
"சத்தியமா நான் கள்ளனில்லை, அதுவும் சுகுமாரிடம் போய் திருடுவனா?"
"வெளியே போ"
ஒரு வாரம் சஸ்பென்ஷன் என்று முடிவானது. ஒரு வாரம் .. இருவாரம்.. ஏன் மாதங்களும் கழிந்தும் நிரூபன் கல்லூரிக்கு வரவே இல்லை.
இரண்டு மாதம் கழித்து கால்குலேட்டரில் பாட்டரி தீர்ந்து மாற்ற வேண்டி வந்தது. சிவப்புக்கலர் பேட்டரிகள் என்னைப்பார்த்து சிரித்தபோதுதான் நிரூபன் பொய் சொல்லவில்லை என்பது புரிந்தது.
2009
"அப்புறம்" என்றார் நாதன்.
சுகுமார் தன் கிளாஸில் ஐஸ்கட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டான்.
"அப்புறம் என்ன.. அவனைப்பற்றி ஒரு தகவலும் இல்லை. முகாமுக்குத் திரும்பிப்போனானா, நாட்டுக்கே திரும்பிப் போனானா ஒண்ணும் தெரியாது. ஒரு வாரம் சஸ்பென்ஷனுக்கே அவன் ஏன் ஊரைவிட்டே போகணும்.. புரியலை. இது மட்டும்தான் காரணமான்னும் தெரியலை"
"எஞ்சினியரிங் படிப்பு அவனை எப்படி எப்படியோ மாத்தி இருக்கும். இப்ப என்ன பண்ணிகிட்டிருக்கானோ.. இல்ல இல்லையோ..இந்த வருத்தம் எனக்கு இன்னும் ஆறவே இல்லை நாதன்; அநியாயமா ஒருத்தன் படிப்பைத் தடுக்க நானும் காரணமா ஆயிட்டனோன்னு குற்ற உணர்ச்சி."
"இதிலை வருத்தப்பட என்ன இருக்கு சுகுமார், உங்கட நாடு எங்களுக்குப் பண்ணினதை நீங்கள் தனியொரு ஆளுக்குச் செய்திருக்கிறியள் அவ்வளவு தான்" சிப்ஸ் பாக்கெட்டை பம்மென்று உடைத்தார்.
*********************
உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் ஆன சிறுகதை; உரையாடல் போட்டிக்கான ஆக்கம்.
34 பின்னூட்டங்கள்:
// "இதிலை வருத்தப்பட என்ன இருக்கு சுகுமார், உங்கட நாடு எங்களுக்குப் பண்ணினதை நீங்கள் தனியொரு ஆளுக்குச் செய்திருக்கிறியள் அவ்வளவு தான்" //
:-(((
வேற ஒண்ணும் சொல்லத்தோணலை..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
// "இதிலை வருத்தப்பட என்ன இருக்கு சுகுமார், உங்கட நாடு எங்களுக்குப் பண்ணினதை நீங்கள் தனியொரு ஆளுக்குச் செய்திருக்கிறியள் அவ்வளவு தான்" //
:-(((
வேற ஒண்ணும் சொல்லத்தோணலை..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
அருமையான கதைங்க,பரிசு பெற வாழ்த்துக்கள்
மன்னிக்கவும். போட்டிக்கு வேற கதை எழுதியிருக்கலாம்.
ஜம்புலிங்கம்
Vaazhthukkal!
Just don't know how to express my feelings. Perhaps Touching and slightly disturbing.
மனசைப் பிசையும் நிஜம்,
ஃப்வுண்ட்ரி,ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டீரியல்ஸ்,கால்குலேட்டர்,எலெக்ட்ரிக்கல் கிளாஸ் என்று கல்லூரி நாட்களை மீட்டெடுத்து கடைசி வரிகளில் மனதில் கனத்தினை நிரப்பி விட்டிருக்கிறது!
:(
அருமை
:)
:(
:(
வெற்றி பெற வாழ்த்துகள்!!!
இதிலை வருத்தப்பட என்ன இருக்கு சுகுமார், உங்கட நாடு எங்களுக்குப் பண்ணினதை நீங்கள் தனியொரு ஆளுக்குச் செய்திருக்கிறியள் அவ்வளவு தான்" சிப்ஸ் பாக்கெட்டை பம்மென்று உடைத்தார்.
உடைத்தார்.
நிஜம்...;(
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தல!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
உரையாடல் போட்டிக்கு உரையாடலாகவே கதை எழுதிட்டீங்கப் போல :) நல்லா வந்திருக்கு. போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.
ஆமாம் - இதுல அதிகார மறுப்பு எதுவும் இருக்குதா?
penaths ,i personally had completely opposite expreince with jaffna tamils. some of it is still haunting me.Almost all of my family still have bitterness towards them.
That doesnot make me say all of them should suffer .Each person has his /own her experinces.generalising may not be best.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கஷ்டமா இருக்கு...
வலி தரும் படைப்பு.. எங்கள் உள்ளத்தை ஜெயிச்சாச்சு.. 1500லாம் சும்மா அது முன்னாடி...
// "இதிலை வருத்தப்பட என்ன இருக்கு சுகுமார், உங்கட நாடு எங்களுக்குப் பண்ணினதை நீங்கள் தனியொரு ஆளுக்குச் செய்திருக்கிறியள் அவ்வளவு தான்" //
அநியாயமான உண்மை
அழுத்தமான நிகழ்வு.வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கடைசி வரியில் சொன்னது இணையத்தமிழர்களுக்கு மட்டுமே உள்ள உணர்வு போலும். ஊரில் இருப்பவர்களுக்கு இந்த உணர்வு வராதது / இல்லாதது மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டதே. :-(
ம்..ம்..ம்..படிக்க சுவாரசியமாக இருந்தது.
அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க
கட்டபொம்மன் kattapomman@gmail.com
நிஜம்.... வாழ்த்துக்கள்...
அருமையாக இருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரொம்ப அழகாக, கச்சிதமாக இருக்கு சுரேஷ். Seasoned writer என்பது தெரிகிறது.
Aside, குமரன் சொல்வது போல, இணையம் தாண்டி யாருக்கும் இந்த குற்ற உணர்வு இல்லாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
அனுஜன்யா
அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தல,
உங்களை இந்த தொடருக்கு அழைத்திருக்கிறேன்.
கொஞ்சம் குழப்பமான ஆரம்பம்...நல்ல நடை...கதையில் வரும் சம்பவங்களை படிக்கும்போது நாமே நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...
கடைசி பஞ்ச் வரிகளை படித்தவுடன் ஏதோ இனம்புரியாத சோகம் நெஞ்சில் வந்து அப்பிக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை...
வெற்றிபெற வாழ்த்துக்கள் கூட சொல்லத்தோன்ற இயலவில்லை...உண்மைக்கதையாமே ?
என்னுடைய மதிப்பெண் 72 / 100
வித்தியாசமான, எதிர்பாராத கிளைமாக்ஸினால் இந்தக்கதை தனித்திருக்கும் பினாத்தல். பிரமாதம் பண்ணியிருக்கீங்க..
Thanks for senthazhal ravi for providing this story link...
Fantastic story suresh...
Advance wishes...
Nice
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.
ரொம்ப செண்டிமேன்ட்டு இங்கோ!!!!
Post a Comment