Aug 18, 2011

கல்யாணச்சாவு?

சந்தோஷம் என்பதை இருக்கும்போது உணர முடியாது என்று ஒரு வசனம்..

எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்..

வெளியூரில் இருக்கையில் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஃபோன் காலில் சக்கரை அளவு எண்களை மட்டும் கேட்டுக்கொண்டு " பார்த்துக்கோம்மா" வுடன் விட்ட நாட்கள்.

ஊரில் இருக்கையில், நண்பர்களைப் பார்க்க, அரட்டை அடிக்க, ஊர்சுற்ற என்ற நேரம் ஒதுக்கி சாய்வு நாற்காலியைப்பற்றிச் சிந்திக்காமல் விட்ட நாட்கள்..

7 மணிக்கு எழுந்தாலும் தூக்கம் வராமல் நாலரைக்கே எழுந்தாலும் சூடான காபிக்காக அவளை உருட்டிய நாட்கள்..

எனக்குப் பிடித்த கறிகாய் சமைத்து சாப்பிடும்போது முகத்தையே பார்க்கும்போது, எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்தும் "சச்சின் அந்த ஷாட் ஆடியிருக்கக்கூடாது" என்று அவள் anxiety ஐ அதிகப்படுத்திய நாட்கள்..

தொடர்களின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டவளைத் தொடரின் தரத்துக்காகக் கிண்டல் அடித்த நாட்கள்..

வெளியூரின் மழை குளிரிலும் மேடு பள்ளங்களிலும் எங்கள் மகிழ்ச்சிக்காக உடன் வந்தவளின் உபாதைகளைச் சிந்திக்காமல் கும்மாளம் போட்டு வேகமாக வரச் சொன்ன நாட்கள்..

சில்லறை ஆசைகளை அலட்சியப்படுத்தி உனக்கென்ன தெரியும் என் priorities என்று எடுத்தெரிந்து பேசிய நாட்கள்..

நினைவின் அடியாழத்து வறுமை நாட்களில் உணவுப்பங்கீட்டில் தன்னைத் துறந்தும் மற்றோர் சாப்பிடாததற்கு எரிந்து விழுந்த நாட்கள்..

எல்லா நாட்களும் மறந்து..

பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..

பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்?

May 9, 2011

தேர்வா? தேர்தலா?

தேர்வு முடிவுகள் வந்துவிட்டதில் இன்னிக்கு நீ, நாளைக்கு நான் என்றிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பரபரப்பான செய்திகளை முந்தித்தரும் தினக்குழப்பம் நாளிதழில் இரண்டு செய்திகளும் மாறிமாறி வர, குழம்பிப்போயிருக்கிறார்கள் நிருபர்களும் ஆசிரியர்களும். எந்தச் செய்தியை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் செய்த வன்முறையில்.. இதோ அந்த ஸ்க்ரீன்ஷாட்.
பிகு: க்ளிக்கிப்பார்த்தால் படிக்கும் அளவுக்குத் தெரியும்.


Mar 23, 2011

எங்கே தேடுவேன்.. தலைவனை எங்கே தேடுவேன்.. (Flash - தேர்தல் ஸ்பெஷல்)

பினாத்தல்கள் வழங்கும் மற்றுமொரு ஃப்ளாஷ் குவிஸ்.

தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித்தலைவர் பாடிவிட்டுப்போய்விட்டார். ஆனால் அந்தத் தலைவன் / தலைவி எங்கே இருக்கிறார்?

இந்த ஃப்ளாஷில் ஒருவேளை இருக்கலாம் :-)

விளையாட்டு ரொம்ப சிம்பிள். பதினாறு அரசியல்வாதிகள் போட்டோக்கள் ஃப்ளாஷின் வலதுபக்கத்தில் இருக்கும். பத்து கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான அரசியல்வாதியை க்ளிக் செய்து உறுதி செய்து அடுத்த கேள்விக்குச் செல்லவேண்டியதுதான்.

வெயிட்.. வாட் இஸ் திஸ் பொருத்தமான?

அதற்குத்தான், க்ளூ தர ஃப்ளாஷின் இடதுபக்கத்தில் ஒரு சிறு அனிமேஷன் க்ளிப்; அந்த அசைபடத்தில் வரும் விஷயங்கள் எந்த அரசியல்வாதிக்குப் பொருத்தம் என்பதைத் தேர்ந்தெடுத்து, க்ளிக்க வேண்டும்.

கடைசியில் வரும் கோடை எனக்கு அனுப்பினால், அதை நான் இங்கே அப்டேட் செய்துவிடுவேன்.



Mar 1, 2011

யயாதி

சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப்போட்டி நடந்தபோது எழுதியது இந்தக் கதை. பதிவில் ஏற்றாமல், உள்சுற்றுக்கு மட்டுமே விட்டிருந்தேன் என்பதை நாராயண் நினைவுபடுத்த, இதோ பதிவில்.

யயாதி - சிறுகதை

சாமா.. என் மகனைக் கொலை செய்யணும்.. நீ உதவி செய்வியா?"

துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டிருந்த சாமாவுக்கு இந்தக்கேள்வி எந்த அதிர்ச்சியையும் உண்டாக்கவில்லை. எதோ நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று நினைத்திருப்பான்.

"அடுத்த செட்டுக்கு போகலாமா.. இல்லை இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சா?"

"சீரியஸாத்தான் சொல்றேன். அவன் இருந்தா நான் இருக்க முடியாது. நான் இருந்தா அவன் இருக்க முடியாது.. ஒரு முடிவுக்கு வந்தே ஆகணும் - நிறைய சமயமில்லை"

"அடப்போங்க சார்.. கொலை பண்ற வயசா இது?.. 400 இருக்காது உங்களுக்கு?"

"வயசைப்பத்தி அனாவசியமா இழுக்காதே. மனசோட வயசுதான் முக்கியம். அது இன்னும் 18ஐத் தாண்டல." இந்தப் புல்தரைக்கு நாந்தானே ராஜாவாக இருந்திருக்கிறேன். எத்தனை வெற்றிகள் எத்தனை கோப்பைகள், இப்போது ஒரு மணிநேரம்கூட வாடகைக்கு எடுக்க முடிவதில்லை. ஆடத்தெரியாத இந்த சாமாவுடன் விளையாட வேண்டி இருக்கிறது. ஒரு கேம்.. ஒரு பாயிண்ட் எடுத்திருப்பானா எனக்கெதிராக இவன்? இவன் என் வயசைப்பற்றிப் பேசுகிறான்.

"ஏன் கொலை பண்ணனும்?" ராக்கெட்டை எடுத்துக்கொண்டு கோர்ட்டின் மூலைக்குச் சென்றான்.

"இங்கே இருந்தா சர்வீஸ் போடப்போறே? முட்டாளே.. நடுக்கோட்டுக்கு கிட்டே வந்து போடுறா."

"அதை விடுங்க..என்ன மேட்டர் சொல்லுங்க"

'ரொம்ப நாளா நடக்கறதுதான். இன்னிக்குக் காலைலே ரொம்பவே அளவு மீறிட்டான்"

"சொல்லுங்க சார்.. வார்த்தை வெளியே வந்தாலே கோபம் வெளியே போயிடும்"

காலையிலிருந்து 10 முறை கூப்பிட்டுவிட்டேன். திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் அறைக்கே சென்றால் லட்சியமாக வாயை மென்றுகொண்டிருந்தவனைப் பார்த்து அடங்காத ஆத்திரம் வந்தது.  தகப்பனின் உணர்ச்சிகளுக்கு கொஞ்சமும் மதிப்பு கொடுடா முதலில். ஆபீஸ் வேலையை அப்புறம் பார்க்கலாம்.
 
"என்னைக் கவனிக்க மாட்டாயா மகனே?"
 
"கொஞ்ச நேரம்ப்பா.. முக்கியமான மெயில். தட்டிவிட்டுட்டு வந்துடறேன்"
 
"எனக்கு உயிர் போகிற பிரச்சினைடா"
 
"எப்படியும் ரெண்டு நிமிஷம் தாங்கும்.. இல்லையா?"
 
கோபத்தின் உச்சியில் என் சிகரெட் பாக்கட்டை எடுத்தேன்.
 
"இங்கே வேண்டாம்ப்பா.. வெளிய போயிடறீங்களா?"
 
"உங்க கம்பெனிக்கே இந்தப்பழக்கம்தாண்டா சோறு போடுது" அவன் வேலை பார்ப்பது  M&H லங்ஸ் -இல்.
 
"எனக்கு புகை எரிச்சலைதான் தருது"
 
"தினம் ஒரு சிகரெட்.. உங்கள் ஆண்மைக்கு நாங்கள் உத்தரவாதம் - விளம்பரம் நீ எழுதினதுதானே?"
 
"அட.. அது தொழிலுக்காக. சிகரெட் பழக்கம் ரொம்பக்குறைஞ்சு போய் நுரையீரலே தேவைப்படாம போனதால ஒரு அவசர கேம்பைனுக்காக எழுதினது. அதை நீங்க வேத வாக்கா எடுத்துக்கிட்டீங்கன்னா? எங்க கம்பெனியில எங்க அப்பாவுக்குன்னு சொன்னா இலவசமாவா தராங்க?"
 
"எப்பப்பாரு காசைப்பத்தியே பேசு.. 400 வருஷம் உனக்காக சம்பாதிச்சுப்போட்டேன். இப்ப ஒரு அம்பது வருஷமாத்தான் வீட்லே சும்மா இருக்கேன்.. உனக்குச் சின்ன வயசா இருக்கும்போது ஒரே செஞ்சுரிலே மூணு முறை இதயம் மாத்தினேனே.. காசை காசாவா பாத்து செலவு பண்ணேன்?"
 
 "என்னதான் வேணும் உங்களுக்கு?"
 
"கருணை! பாசம்! அன்பு.. புரிதல்.."
 
"இதுல எது இல்லைன்னு சொல்றீங்க நீங்க?" இன்னும் அவன் என்னைப்பார்க்கவில்லை. ஏதோ பொத்தான்களை அழுத்திக்கொண்டுதான் இருந்தான்.
 
"எது இருக்கு? 3 மாசமா சொல்லிக்கிட்டிருக்கேன். ரத்தம் மாத்தணும், ரெண்டு மூணு மூட்டுகளைச் சரி செய்யணும் ஓடியாட முடியலை.. ரெண்டு செட் டென்னிஸ் ஆடினா மூச்சு வாங்குதுன்னு.. காதுல போட்டுக்கறியா நீ?"
 
"காதுல போட்டுக்காமலா கொட்டேஷன் வாங்கினேன்.. 40- 50 ஆகும்ன்றாங்களே.. என்கிட்டே கொள்ளையடிச்சாலும் 20க்கு மேலே தேறாது"
 
பொய் சொல்கிறான். போன வாரம் அறுபது கணக்கில் இருந்தது.
 
"அப்ப.. அவ்வளவுதானா? என் காலம் முடியவேண்டியதுதானா?"
 
"சும்மா பேசாதீங்க.. டென்னிஸ் ஆடாட்டி, பாருக்கு போகாட்டி செத்துடுவீங்களா என்ன? கொஞ்சம் கன்சர்வ் பண்ணுங்க எனர்ஜிய. இன்னும் மூணு நாலு மாசம் தாராளமா ஓட்டலாம்"
 
"என்னடா வாழ்க்கை அது.. கூண்டுக்குள்ளேயே உக்காரச்சொல்றியா..உனக்கும் இப்படி ஒரு காலம் வரும்டா.."
 
"சீரியஸாவே கேக்கறேன்பா.. வேலையை விட்டும் நின்னு 30 வருஷமாச்சு.. காலையில எழுந்து ராத்திரி வரைக்கும் விளையாட்டு, சிகரெட்டு அப்பப்ப பாருக்கு வேற போறீங்க..இந்த வயசிலும் விடாம பொம்பளைங்க சகவாசம் - 10 வருஷம் கூடத் தாங்கறதில்ல இதயமும் நுரையீரலும். மூட்டு வேற அடிக்கடி மாத்தணும். அலுத்துப்போகலைப்பா உங்களுக்கு?"
 
"எப்படிடா அலுக்கும்? என் வாழ்க்கையை நீ வாழ்ந்து பாரு.. எப்பவும் ஆபீஸ் வேலைன்னு சாவாதே.. உனக்குன்னு டைம் ஒதுக்கி உலகத்தை அனுபவிக்கணும்டா.. எப்பவும் அலுக்காது"
 
"நிலைமையைப் புரிஞ்சுக்க மாட்டீங்களாப்பா? எனக்கும் குடும்பம் இருக்கு.. மனைவி இருக்கா.. அவங்களுக்கும் செலவுகள் இருக்கு.. உங்களை மாதிரி.."சட்டென்று நிறுத்திவிட்டான்.
 
"ஏண்டா நிறுத்திட்டே? சொல்லு. என்ன என்னை மாதிரி"
 
எச்சிலை விழுங்கிக்கொண்டான். "ரைட். சொல்லிடறேன்.. உங்களை மாதிரி மனைவி போனா புது மாப்பிள்ளையா என்னால வாழ முடியாது. எங்க அம்மா போனதுக்கு யார் காரணம்?"
 
"அப்பத்திய நிலைமை வேற.. "
 
"ஆமாம்.. அப்பவும் உங்க மூட்டும் ரத்தமும்தான் உங்களுக்கு முக்கியமாப் போச்சு - அம்மாவை விட"
 
"அவளாத்தானே முடிவெடுத்து டோனர் ஆனா?"
 
"முடிவெடுக்க வச்சது யாரு? இதயத்தைத் தவிர மத்த எல்லா உறுப்பும் நல்லா இருந்த அம்மாவை வாழ்க்கையை வெறுக்கவச்சு பார்ட் பார்ட்டா பிரிச்சு இப்ப என் அம்மா எத்தனை இடத்துல இருக்காளோ.. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னீங்களே பாசம், பந்தம் எட்செட்ரா எட்செட்ரா.. இதுல எதாச்சும் ஒரு துளி காட்டி இருந்தீங்கன்னா போயிருப்பாளா?"
 
"அவ போனதுல எனக்கு மட்டும் வருத்தம் இல்லைன்னு சொல்றியா?"
 
பதில் சொல்லவில்லை. மறுபடி பொத்தான்களை அழுத்தத் தொடங்கிவிட்டான்.
 
"சே .. இதுதான் விஷயமா? இதுக்கா கொலை அது இதுன்னு சொல்றீங்க?"

"அவனுக்கு என் மேலே பொறாமை அதிகமாயிகிட்டு வருது. போன வாரம் ஒரு பார்ட்டிக்கு கூட்டிகிட்டு போயிருந்தேன். அங்கே எல்லா பொண்ணுங்களும் என்னையே பாத்ததுல அவனுக்கு வெறுப்பு"

"என்ன சார் சொல்றீங்க? அவன் உங்க மகன் சார்"

"இதைப்பாரு சாமா. அவன்கிட்டே பணம் இருக்கு. எனக்குத் தெரியும். ஆனா கொடுக்க மாட்டான். நான் காஸனோவாவா இருக்கறதை அவனால பாத்துக்கிட்டு பொறுமையா இருக்க முடியாது. பணம் இல்லாட்டி எனக்கு புது ரத்தம் கிடைக்காது. வயசு நிஜமாவே அதிகம் ஆகும்.வீட்டு மூலையில உக்கார்றதைத் தவிர வேற வழி கிடையாது. அதைத்தான் பாக்க ஆசைப்படறான் அவன்."

மணி அடித்தது. இந்த செட்டோடு முடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

"வேண்டாம் சார்.. கிளம்பலாம்.. என்ன, 5-0 வா இருந்தா என்ன 6-0 வா இருந்தா என்ன?"

"மறுபடி அதே கேள்வி: எனக்கு உதவி செய்வாயா?"

"எதுக்கு?"

"என் மகனைக் கொலை செய்யறதுக்க நிறைய வழிமுறை யோசிச்சுப் பாத்துட்டேன். கத்தியால குத்த முடியாது, விஷம் கொடுக்க முடியாது - என்ன பண்ணாலும் பத்து நிமிஷத்துல பொழைக்க வச்சுடுவாங்க.."

"அடச்சே போய்யா! உன்மேலே போய் மரியாதை வச்சு உன்கூட பழகினேன் பாரு! ஆன வயசுக்கு டோனர் ஆகிக் கிளம்பவேண்டியதுதானே? மகன் காசுதரலையாம்.. கொலை பண்ணுவாராம்.. கிழவா.. உன் கொழுப்புக்கு அளவே இல்லையா? " ரேக்கட்டையும் பந்துகளையும் வீசி எறிந்து தன் வாகனத்தில் ஏறிக் கிளம்பி போயே விட்டான் சட்டென்று..

அய்யோ.. இன்னொரு பிரச்சினையா இப்போது.. இவன் யாரிடமாவது சொல்லி வைத்துவிட்டால்..

தினமும் கூடவே சென்றவன் தனியாக நிறுத்திவைத்துவிட்டுப் போய்விட்டான். எட்டுபாட்டைத் தெருவில் வேகமாக ஓடிய வாகனங்கள் பயமுறுத்தின. எப்படிச் செல்வது வீட்டுக்கு? வெளிக்காற்றில் குளிர் கூடத் தொடங்கிவிட்டது.

"உங்களுக்கு ஒரு தகவல் காத்திருக்கிறது" உள்ளங்கை திடீரென ஒளிர, தகவலைப்பார்த்தேன்.

"தங்கள் ரத்தமாற்று மற்றும் மூட்டு சிகிச்சைக்கான பணம் கட்டப்பட்டுவிட்டது. வரும் 12 ஆம் தேதி காலை 7:03 முதல் 7:05 வரை சிகிச்சை நடைபெறும். உணவு ஏதும் உண்ணாமல் வரவும்."

இதென்ன கூத்து.. யார் கட்டியது? இன்னும் ஒரு தகவலும் இருக்கிறதே.

"உங்கள் அளவுக்கு எனக்கு வாழ ஆசையுமில்லை - இப்படி வாழ விருப்பமுமில்லை.. கிளம்புகிறேன் என் அம்மாவிடம். வாழுங்கள்.. பிறந்தநாள் வாழ்த்து!"

Feb 13, 2011

மயிர் நீப்பின்..

முடிவெட்டுக்கும் எனக்கும் ஒத்துப்போவதே இல்லை. மாதத்துக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த சடங்கு இப்போதெல்லாம் பின்வாங்கத் தொடங்கிய கூந்தலால் இருமாதங்களுக்கு ஒருமுறை ஆனாலும் ஒத்துப்போகாதது மட்டும் தொடர்கிறது.

முடிவெட்டு நிலையங்களில் காத்திருப்பு என்பது கிளுகிளுப்பான அனுபவமாக இருந்தது ஒரு காலத்தில். வேறெங்கும் காணக்கிடைக்காத அரிய காலண்டர்களை நான் பார்ப்பதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற குறுகுறுப்போடு பார்க்கும்போது "பாருப்பா.. பார்க்கறதுக்குத்தானே மாட்டிவச்சிருக்கேன்" என்பார் முடிவெட்டுபவர். இதற்காகவே காத்திருந்தது போல சூழ்ந்திருக்கும் எல்லாரும் சிரிக்க குறுகிப்போவேன். தினத்தந்தி தினகரன் என்று பேப்பர்கள் இரைந்துகிடக்க, "இங்கே அரசியல் பேசாதீர்கள்" என்று ஒரு போர்டு "இவனுங்க மட்டும் என்னவாம்? ஆட்சி மாறத்தான் போவுது நாயக்கரே.. டேய் அந்த கத்தியை எடுடா" என்று தீவிரமாக கத்தியைத் தீட்டுபவரே வைத்த முரண் சிரிக்கவைக்கும். "வந்து உக்காரு. காடாட்டம் வளர்த்து வச்சிருக்க.. அப்பப்ப வந்தா செலவாயிடுமா? அம்பது பைசாவை வச்சு மாடிவீடு கட்டப்போறியா?" முடிவெட்டுபவர், வெட்டப்படுபவர் இரண்டுபேரும் தூங்கிக்கொண்டே வேலைநடக்கும். "என்னடா இப்படி கொந்தி வச்சிருக்கான்?" மட்டும் மாறவே மாறாது.

ஸ்டைலாக முடிவெட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் வந்த வயதிலும் கூட அதே முடிவெட்டுபவர் "ஸ்டெப் கட்டிங் எல்லாம் உனக்கு செட் ஆவாது கண்ணு. நல்லா எண்ணெய் தடவி படிய வாரிக்க, அப்பதான் அயகா இருக்கும்" என்று எனக்காக முடி எடுப்பதுடன் சேர்த்து முடிவெடுப்பார். பின்னணியில் 'ரேடியோ சோதனை மேல் சோதனை-போதுமடா சாமி' என்று பொருத்தமாக ரீரெக்கார்டிங் செய்யத் தொடங்கிவிட்ட காலத்தில்.

17 18 வயதில் டெய்லி ஷேவிங் செய்ய வேண்டியிருக்குதுடா என்று அலுத்துக்கொள்ளும் கும்பல் மத்தியில் பூனைமீசைகூட வராமல் பல்லவ சிற்பம் போல இருப்பதே அவமானம். முடிவெட்டுபவரும் தொழிலில் முன்னேறி டிவி எல்லாம் வைத்திருந்தார். சித்ரமாலாவில் அஸ்ஸாம்காரர்கள் சப்பை மூக்குடன் 'லாட்ல லோட்ல லையூ' என்று பாடிக்கொண்டிருப்பதை சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டே "அடடா.. கிருதா போயிருச்சு. பரவாயில்ல. இந்த ஸ்டைல் உனக்கு நல்லா இருக்கு" என்று விபத்தில் விஞ்ஞானம் வளர்ப்பார்.

வெளியூர் போயும் கூட என் சோகம் தொடர்ந்ததுதான் கொடுமை. பீஹாரின் முடிவெட்டுபவர்கள் அனைவரும் யார் எப்படி வந்தாலும் எல்லா முடியையும் முன் பக்கம் வாரி லாலு ப்ரஸாத் யாதவ் ஹேர்ஸ்டைலுக்குக் கொண்டுவந்துவிட்டுதான் மேலதிக அழகுபடுத்தலை ஆரம்பித்தார்கள். அதற்குள்ளாகவே என் முடியும் அழகும் காலாவதி ஆகிவிடுவதால் அவர்களின் கலைநுணுக்கங்களை ஏற்க முடியாத என் தலைநுணுக்கம்.

சரி.. தலையில் தேவையான அளவு முடி இல்லை என்பதால்தானே இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை? ஆறுமாதங்கள் வெட்டாமல் என் தலைக்கனத்தை ஏற்றினேன்.பங்க் கட்டிங் என்று போனி டெயில் போடும் அளவுக்குப் பின்னந்தலைமுடி வளர்ந்தால் ஜடாமுடி போடும் அளவுக்கு முன்னந்தலைமுடியும் சீராக வளர்ந்தது. பார்ப்பதற்கு பங்க் போலத் தெரியவில்லை. பரதேசி போலத் தெரிந்தது. இப்போதும் பல்லவ சிற்ப முக அமைப்பில் மாற்றம் இல்லாததால் அழகிய தமிழ்மகள் இவள் என்று பீஹார்வாசிகள் பாடுவார்களோ என்று பயந்து லாலு முடிவெட்டுபவரைச் சரணடைய நேர்ந்தது. ஒருமுறை ஆறுமாதங்களுக்குப் பிறகு ஜடாமுடியுடன் என்னைப்பார்த்த என் அப்பா "நீ இஷ்டம் போல இரு, நாளை மறுநாள் வீட்டில் விசேஷம், என் அண்ணன்கள் எல்லாரும் வருவார்கள், அப்போது மட்டும் வெட்டிவிடு.. எனக்குன்னு ஒரு மானம் இருக்கில்ல?" என்றதைத் தொடர்ந்து பலியானது.

சென்னை மாதிரி நகரத்திலும்கூட என் வீட்டுக்கு அருகே அமைந்த முடிவெட்டுக்கடை என் முன்வரலாறு தெரிந்ததாகவே அமைந்த கொடுமை. ஞாயிற்றுக்கிழமைகளின் நீண்ட வரிசைகள், நேரக்கட்டுப்பாடுகளுக்கு இடையில் குயிக் கட் முருகன் என் தலையில் விளையாடுவார். இங்கே அரசியல் பேச்சுக்கள் கிடையாது. க்யூவில் இருப்பவர்கள் எந்நேரமும் சிடுசிடுவென்று இருப்பார்கள். "அப்பா, அம்மா வரும்போது பச்சைமிளகாய் வாங்கிண்டு வரச் சொன்னா"வுக்கு தமிழில் பதில் பேசிவிட்டு "எக்ஸ்க்யூஸ்மீ, ஐ ஹாவ் அப்பாயின்மெண்ட்ஸ், கென் ஐ கோ நெக்ஸ்ட்" என்று ஆங்கிலத்தில் க்யூ முந்துவார்கள். கவனித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டும் புது ப்ளேடு போட்டு பாண்ட்ஸ் பவுடரை தாராளமாக வீசி வயதான ஆட்கள் முடிவெட்டுவார்கள். எனக்கு எப்போதும் கடைக்குப் புதிதாக வந்த பையன்தான். ஆஃபீஸில் மறுநாள் "என்னாச்சு?" என்று துக்கம் விசாரிக்க ஏதுவாக முடிவெட்டுவான் பையன்.

என் முகத்திலும் முடி அரும்ப ஆரம்பித்தாலும் இவர்கள் ஏதாவது செய்து பழைய பல்லவகாலத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் ஷேவிங் மட்டும் செய்துகொள்ளாமல் தப்பித்துக் கொள்வேன். வீட்டுக்கு வந்து முகவெட்டுடன் சவரம் செய்தால்தான் திருப்தி.

துபாய்க்கு வந்தும் என் துயரம் தொலையவில்லை. போஸ்டர்கள் சித்ரமாலா டிவி அரசியல் போன்ற சில்லறைச் சந்தோஷங்கள் விடுபட்டுப் போனது தவிர, முடிவெட்டுபவர்கள் என்னைப் பார்ப்பது மாறவே இல்லை. ஆயிரக்கணக்கான அழகுசாதனங்கள் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் சாதனங்கள் இரைந்துகிடக்க என் தலைக்கு அதே சீப்பும் கத்தரியும் மட்டும்தான். இந்தக்கடை முடிவெட்டுபவர்களுக்கான கல்லூரி போலிருக்கிறது. ஒவ்வொரு முறையும் பழைய ஆட்கள் 2 பேரும், புதியவர்கள் 2 பேரும் இருப்பார்கள். புதியவர்கள் ப்ழையவர்கள் ஆனவுடன் பழையவர்கள் வேறுகடைக்குப் போய் புதிய புதியவர்கள் வருவார்கள். புதிய புதியவர்கள் எப்போது வரலாம் என்பதை என் தலைமுடி அளவு தீர்மானிக்கும். முதல் போணி என்றும் நான்தான்.

புதியவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி. ஒருவர் பின்னந்தலையில் இருந்து ஆரம்பிப்பார். தலையில் குளவி கொட்டும். இன்னொருவர் புஸ்புஸ் என்று தண்ணீரை இரைத்து படிய வாரி கம்மியாதானே இருக்கு, ஏன் வந்தோம் என்று உணரவைப்பார். இன்னொருவர் மெஷினை எடுத்து வலது இடதுபக்கங்களுக்கு வெட்டுவதற்கு முன், வெட்டியதற்குப் பின் என்று வித்தியாசம் காட்டுவார்.இன்னொருவர் பொறுமையாக மில்லிமீட்டர் மில்லிமீட்டராக வெட்டி, வெட்டியதைச் சுத்தம் செய்து, மீண்டும் வெட்டி என்று ஆர்ட்ஃபிலிம் காண்பிப்பார். பாதைகள் ஆயிரம், பயணம் ஒன்றுதான். வழிமுறைகள் ஆயிரம், கொத்துக்கறி என் தலைதான்.

என் தலைக்கு ஏன் இவ்வளவு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டுகிறார்கள் என்று தீவிரமாக யோசித்தேன். ஒருவர் இருவர் என்றால் பிரச்சினை அந்தப்பக்கம் இருக்கலாம். சொல்லிவைத்ததுபோல வேலூர் சென்னை பீஹார் துபாய் என்று எல்லாரும் செய்கிறார்கள் என்றால் என்னதான் கூட்டுறவாக இருந்தாலும் சின்க் ஆகாது, பிரச்சினை என்னிடம்தான் இருக்கவேண்டும். ஒருவேளை முடிவெட்டும்போது ஒரு வார்த்தைகூடப் பேசாமல் முடிந்தவுடன் "ரொம்பச் சின்னதாப்போச்சு இல்ல?" என்று கேட்பதா? மசாஜ் செய்யவருபவர்களைத் தடுத்து எந்த மேலதிக சேவையுமே வேண்டாம் என்று பொருள்பட வைப்பதா? மருத்துவ நாவிதர் சங்கம் - 1-4-XXXXஇல் இருந்து என்று போடப்பட்டிருக்கும் விலைப்பட்டியலில் இருந்து எல்லா நேரமும் 75% டிஸ்கவுண்டிலேயே வெட்டுவதாலா? (அந்த விலைப்பட்டியல் சிவகாசி பட்டாசு விலை போல. யாரும் அந்தப்பணம் கொடுத்து நான் பார்த்ததே இல்லை)

நேற்று முடிவெட்டிக்கொண்டு வந்தேன். மனைவி பார்த்தாள், சிரித்தாள். சிரி சிரி.. புதுசா என்ன? இதெல்லாம் நாங்க எவ்ளோ நாள் பாத்துகிட்டு இருக்கோம்!

"ரொம்ப மோசமா இருக்கா?"

"எப்பவும் போலதான். முடிவெட்டிகிட்டு வந்தா ஒருவாரம் தனி அசிங்கமா இருக்கும் உங்க முகம்"

"அப்புறம்?"

"வழக்கம்போல அசிங்கமா இருக்கும்"

 

blogger templates | Make Money Online